
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிர வைத்த கப்பல் படை எழுச்சி : 1946 பிப். 18-25
உ. வாசுகி
1946 பிப்ரவரி 18ல் மும்பையில் நங்கூரம் இட்டிருந்த தல்வார் போர் கப்பலில் துவங்கி கொல்கத்தா, கராச்சி, சென்னை வரை பரவியது கப்பல் படை எழுச்சி. பல மதம்/மொழி சார்ந்த 10,000-20,000 வீரர்களுக்கு மேல் பங்கேற்றனர்.
படுமோசமான உணவு, பிரிட்டிஷ் வீரர்களை விடக் குறைவான ஊதியம், அதிகாரிகளின் இழிவான பேச்சுகள், பாகுபாடுகள், கடினமான பணிச் சூழல் உருவாக்கிய கோபம், எழுச்சிக்கு உடனடி உந்துசக்தி என்பதை மறுக்க முடியாது. ஆனால் அத்துடன் குறுக்கி விடவும் முடியாது.
இரண்டாம் உலகப் போர் நடந்த ஆறு ஆண்டுகளிலும் கப்பல் படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் மீதான மோசமான பாகுபாடுகள் தொடர்ந்தன. ஆங்காங்கே அவ்வப்போது வேலை நிறுத்தமாக அது வெடித்துக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் மோசமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகள், கப்பல் படையினர் மத்தியிலும் விடுதலை வேட்கையை உருவாக்கிக் கொண்டிருந்தன. விடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களின் கைது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒட்டிக் கட்டவிழ்த்து விடப்பட்ட கடும் அடக்குமுறை, வங்கப் பஞ்சத்தின் கோரத் தாண்டவம் போன்றவை பிரிட்டிஷ் எதிர்ப்பை வளர்த்து விட்டன. இந்திய தேசிய ராணுவ வீரர்களின் கைதுகளும் வழக்கு விசாரணையும் இதனை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றது. இதன் பிரதிபலிப்பை, கப்பல் படை வீரர்கள் எழுப்பிய வெள்ளையனே வெளியேறு, இன்குலாப் ஜிந்தாபாத், ஜெய் ஹிந்த், INA வீரர்களை விடுதலை செய் என்பதிலும், யூனியன் ஜாக் இறக்கப்பட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கொடிகள் பறக்க விடப்பட்டன என்பதிலும் காணமுடிந்தது. ஆட்சியாளர்கள் இதனை மிகப்பெரும் கம்யூனிஸ்ட் சதி என வர்ணித்தனர்.
காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் எழுச்சியை ஆதரிக்கவில்லை. காந்தி, அகிம்சை மற்றும் ஒழுங்கை (discipline) மீறிய போராட்டம் என்ற அடிப்படையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். அரசியல் கட்சி என்னும் முறையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே முழுமையான ஆதரவை அளித்தது. போராடும் வீரர்களுக்கு உணவு ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டது. துப்பாக்கி சூட்டை எதிர்கொண்டது. 300 பேர் கொல்லப்பட்டதில் கமல் டோண்டே உள்ளிட்ட தோழர்களை இழந்தது. கட்சியின் முன்முயற்சியில் பிப்ரவரி 22 அன்று வலுவான பொது வேலைநிறுத்தம், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாலைகள், தொழிற்சாலைகள், ரயில்வே ஒர்க் ஷாப்புகளில் வேலைநிறுத்தம் முழு வெற்றி அடைந்தது. போராட்டக்காரர்களுக்கு பம்பாய் தொழிலாளி வர்க்கம், மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டு அனைத்துப் பகுதியினரும் காட்டிய ஒருமைப்பாடு அளவற்றது.
போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற அழுத்தம் கப்பல் படை வீரர்களுக்கு அதிகரித்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர் மட்டுமல்ல; காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சியினரும் வற்புறுத்தினர். சர்தார் வல்லபாய் பட்டேல் பேச்சுவார்த்தை நடத்தி, பழிவாங்கல் இருக்காது என்று உறுதியளித்தார். இறுதியில் இந்தியாவிடம் சரணடைகிறோம்; பிரிட்டிஷாரிடம் அல்ல என்று அறிவித்து வீரர்கள் போராட்டத்தை முடித்தனர். ஆனால் வாக்குறுதி மீறப்பட்டு, 476 பேர் டிஸ்மிஸ் உட்பட அனைவரும் பழி வாங்கப்பட்டனர். இருப்பினும் இது விடுதலையை விரைவுபடுத்தியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் அக்கால ஆவணங்கள் சம்பவங்களையும், அரசியலையும், அன்றைய உணர்ச்சிமயமான சூழலின் வெப்பத்தையும் மிகச் சரியாக பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளன.
அரிசி – பருப்பு பிரச்னை என பிரிட்டிஷ் அடிவருடிகள் அலட்சியப் படுத்தினாலும், அதையெல்லாம் கடந்து, வரலாற்றில் இன்றளவும் நிலைத்து நிற்கும் எழுச்சியை நினைவில் வைப்போம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply