
பொய்யான வரலாற்றுக் கட்டமைப்பு: திப்புவும் காலனிய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டமும்
அமர் ஃபரூக்கி
1782 முதல் 1799 வரை மைசூரின் ஆட்சியாளராக இருந்த திப்புவை குரூரமான மதவெறி பிடித்தவராகச் சித்தரிக்க, தொடர்ச்சியாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதன்வழி, 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டுப் பகுதியில், இந்தியாவில் (பிரிட்டனின்) காலனியாதிக்கம் விரிவடைந்துகொண்டே போவதை எதிர்த்துப் போராடுவதில், அவரது முக்கியமான பங்கினை காணாமலடிப்பதே அதன் முக்கிய நோக்கமாகும். பிளவுவாத அரசியலை மேலும் முன்னெடுத்துச் செல்ல, இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, திப்புவைப் பற்றிய இந்தச் சித்திரம் அமைகிறது. முஸ்லீம் ஆட்சியாளர்களை வில்லன்களாகச் சித்தரிப்பது, இந்தியாவின் கடந்த காலம் குறித்த இந்துத்துவ வகுப்புவாதக் கூற்றுகளின் இணைபிரியாத ஒரு பகுதியே ஆகும். பாபர் மசூதி இடிக்கப்படுவதில் சென்று முடிந்த அயோத்தி பிரச்சனையின்போது வெளிப்பட்ட ஆக்ரோஷமான வகுப்புவாதத் தாக்குதலுக்கு முந்தைய ஆண்டுகளில், திப்புவை இழிவுபடுத்தும் முயற்சிகள் வேகம்பெற்றது தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல. 1989-90ஆம் ஆண்டுகளில் பகவான் எஸ். கித்வானி எழுதிய ‘த ஸ்வார்ட் ஆஃப் திப்பு சுல்தான்’ (திப்புசுல்தானின் போர்வாள்) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு சஞ்சய் கான் அதேபெயரில் தயாரித்த தொலைக்காட்சித் தொடருக்கு எதிராக மிகப்பெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டைப் படிப்படியாகக் கபளீகரம் செய்து வரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிவுடன் போராடிய தீரமிக்க ஓர் ஆட்சியாளராக நூலாசிரியர் கித்வானி திப்புவை சித்தரித்திருந்தார். இந்தத் தொடருக்க்கு எதிரான போராட்டங்கள், திப்புவை ஓர் அரக்கனாக சித்தரிக்கும் நோக்கம் கொண்டவை என்பதோடு, வகுப்புவாத அரசியல் அணிதிரட்டலுக்கும் அவை பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
திப்புவை அரக்கத்தனம் மிக்கவராகச் சித்தரிக்கும் இந்த முயற்சி, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி மைசூர் ராஜ்யத்துடன் கடுமையான மோதலில் ஈடுபட்டு வந்தது. காலனித்துவ வரலாற்று நூல்கள் பலவும் திப்புவை ஒரு மதவெறியர் என்பதாகவே தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளன. அவர், மைசூர் ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறிய மலபார் பகுதியிலும், இதர பிற பகுதிகளிலும் வலுக்கட்டாயமாக மக்களை இஸ்லாத்த்திற்கு மதமாற்றம் செய்தார். இத்தகைய சித்தரிப்பு சமகால காலனித்துவ நிர்வாகிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் எழுத்துக்களிலிருந்து உருவானதாகும். அவர்களில் பலரும் திப்புவுக்கு எதிரான நீண்ட கால போரில் பங்கேற்றவர்களாவர். இத்தகைய ஆரம்ப கால எழுத்துக்களில் முக்கியமானது மார்ச் வில்க்ஸின் எழுத்துக்கள் ஆகும். வில்க்ஸ் (1759-1831) கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவத்தில் ஓர் அதிகாரியாக இருந்தவர். (திப்புவிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற) மூன்றாவது மைசூர் போரில் அவர் நெருக்கமாகப் பங்கெடுத்தவர் மட்டுமின்றி, அந்த ராஜ்யம் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட பிறகு உருவான ஆட்சி நிர்வாகத்திலும் பங்கேற்றவர். 1810க்கும் 1817க்கும் இடைப்பட்ட காலத்தில் தென்னிந்திய வரலாற்றுச் சித்திரங்கள் என்ற பெயரில் மூன்று பெரும் தொகுதிகளில் அவர் மைசூரின் வரலாற்றை வெளியிட்டார். இந்த நூல், அதற்குப் பின்னால் வந்த பலரின் மீதும் மிகப்பெரும் செல்வாக்கு செலுத்துவதாக விளங்கியது. மைசூரின் வரலாறு குறித்த எழுத்திலும், திப்புவுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான மோதல் குறித்த எழுத்திலும் இந்த வரலாற்றுச் சித்திரங்கள் என்ற நூல் மிக ஆழமான தாக்கத்தை செலுத்தியது. 1887ஆம் ஆண்டில் வெளியான வில்லியம் லோகனின் மலபார் கையேடு என்ற நூல், வில்க்ஸின் எழுத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது. இந்த நூலை வெளியிடும்போது, லோகன் மதராஸ் ராஜதானியின் ஒரு பகுதியாக இருந்த மலபார் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். இந்த மலபார் கையேடு பிரிட்டிஷ் இந்திய அரசின் உத்தரவின்படி எழுதப்பட்ட ஒன்றாகும். மைசூர் அரசுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போர்கள் குறித்த சித்திரத்தில் அவர் வில்க்ஸையே பெரிதும் நம்பியிருந்தார் என்பதை இந்நூலை உற்று நோக்கினாலே தெரியவரும். கேரளாவில் திப்புவின் கொள்கைகள் குறித்த தனது விவரிப்பில், லோகன் குறிப்பாக மிகவும் மோசமானவராக இருக்கிறார். எனவே இந்த மலபார் கையேடு நூல் வகுப்புவாதப் பிரச்சாரகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதில் வியப்பேதுமில்லை.
வங்காளம், பீகார் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிய உடனேயே, பிளாசிப் போரை (1757) தொடர்ந்து, கிழக்கிந்தியக் கம்பெனி மைசூர் அரசுடன் தொடர்ச்சியான போர்களில் இறங்கியது. 1760க்கும் 1799க்கும் இடைப்பட்ட காலத்தில், பிரிட்டிஷாரின் விரிவாக்கத்தை, ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் தலைமையில் மைசூர் அரசு கடுமையாக எதிர்த்தது. 1760களின் முற்பகுதியிலேயே மைசூரின் உண்மையான ஆட்சியாளராக ஹைதர் அலி உருவெடுத்தார். அடுத்த இருபது ஆண்டுகளுக்குள்ளேயே மைசூர் தென்னிந்தியாவின் முன்னோடி அரசாக மாறியது. மேலும் இந்த அரசு கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுக்குத் திறமையான வகையில் சவால் விடக்கூடிய ஒரு ராணுவத்தைக் கொண்டதாகவும் இருந்தது.
முதலாம், இரண்டாம் மைசூர்ப் போர்கள் என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான இரண்டு போர்களில் ஹைதர் அலி பிரிட்டிஷாரைத் தோற்கடித்தார். முதலாம் மைசூர்ப்போர் 1767ஆம் ஆண்டு தொடங்கி 1769ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அந்நேரத்தில் ஹைதர் அலியின் படைகள் மதராஸ் நகரத்தின் புறநகர்ப்பகுதியை வந்தடைந்ததோடு போர் முடிவுற்றது. ஹைதர் அலியின் நிபந்தனைகளை கம்பெனி ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது பிரிட்டிஷாரின் பெருமைக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அடியாகும்.
1780 முதல் 1784வரை நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலோ-மைசூர் போர், மேற்குக் கடற்கரையின் மங்களூரில் இருந்து கிழக்கே ஆற்காடு வரை விரிந்து பரந்ததொரு நிலப்பரப்பில் நடைபெற்ற கடுமையான ராணுவப் போட்டியாகும். இந்த மோதலில் ஒரு பகுதியாக 1780 செப்டெம்பரில் பொள்ளிலூர் (காஞ்சிபுரம் அருகேயுள்ள புள்ளலூர்) பகுதியில் நடைபெற்ற போரில், திப்புவின் தலைமையிலான மைசூர் ராணுவம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அக்காலத்திய வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, இந்தத் தோல்வி ‘இந்தியாவில் ஆங்கிலேயர்கள் அதுவரையில் சந்தித்த தோல்விகளிலேயே மிகக் கடுமையானதொரு அடி’ ஆகும். போர் நடந்து கொண்டிருந்த தருணத்திலேயே 1782ஆம் ஆண்டில் ஹைதர் அலி மறைந்தார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திப்பு, பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தை அசாதாரணமான வீரியத்துடன் தொடர்ந்து நடத்தி, தென்னிந்தியாவில் பிரிட்டிஷாரின் விரிவாக்கத் திட்டங்களை தடுப்பதில் மேலும் பத்தாண்டுகளுக்கு வெற்றி அடைந்தார்.
தென்னிந்தியாவில் பிரிட்டிஷாரின் விரிவாக்க முயற்சிகளுக்கு மைசூர் அரசு முக்கிய தடையாக இருந்த நிலையில், இந்த அரசை அழித்தொழிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அவசர அவசியமான ஒரு விஷயமாக மாறியது. பிரிட்டிஷாரின் இந்த நோக்கம், 1789 க்கும் 1799க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மூன்றாவது, நான்காவது ஆங்கிலோ- மைசூர் போர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது. கேரளாவில் திப்பு தனது ஆட்சிப்பகுதியை மேலும் விரிவுபடுத்துவதைத் தடுக்கும் வகையில், பின்னாளில் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த கார்ன்வாலிஸ் பிரபு, மூன்றாவது ஆங்கிலோ- மைசூர் போரை (1789-1792) தொடங்கினார். இந்தப் பகுதியில் கம்பெனியே மேலாதிக்கமிக்க சக்தியாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த கார்ன்வாலிஸ் விரும்பினார். இந்த முயற்சியில், திப்புவிற்கு எதிராக ஹைதராபாத் நிஜாம், மராட்டிய பேஷ்வாக்களின் ஆதரவைப்பெற ஆங்கிலேயர்களால் முடிந்தது. தென்கேரளத்தில் இருந்த திருவிதாங்கூர்-கொச்சியின் ஆட்சியாளர்கள் ஏற்கனவே மைசூர் அரசின் மீது விரோதம் கொண்டவர்களாக இருந்தனர். திப்பு தனது ராணுவ வளங்களை நீட்டித்து, பல முனைகளிலும் ஒரே நேரத்தில் போராட வேண்டிய கட்டாயம் உருவானது. இந்தப் போரின் விளைவாக, அவர் தனது அரசில் கிட்டத்தட்ட பாதியை இழந்தார். அதற்கும்மேலாக, அவர் அதிகமான இழப்பீட்டையும் தரவேண்டியதாயிற்று. தனது இரண்டு மகன்களை பிரிட்டிஷாரிடம் பிணைக்கைதிகளாக ஒப்படைக்க வேண்டியதாயிற்று. திப்புவால் ஒப்படைக்கப்பட்ட பகுதிகளை, பிரிட்டிஷார், மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம் ஆகியோர் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். இவ்வகையில், கிழக்கிந்திய கம்பெனி வடக்கு கேரளா( மலபார்) பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மைசூர் ஆட்சி, கடலை அணுகுவதற்கான வழியை இழந்து நின்றது. போக, தமிழ்நாட்டில் பழைய சேலம் மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளும் கம்பெனிக்குக் கிடைத்தன. அவை சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. இதுவே இப்பகுதிகளில் காலனிய ஆட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
மைசூரை அடிபணியவைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய வெல்லெஸ்லி பிரபு 1798ஆம் ஆண்டில் கவர்னர் ஜெனரலாக ஆனார். இந்திய துணைக்கண்டத்தில் பிரிட்டிஷாரின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆணையுடன்தான் வெல்லெஸ்லி இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அப்போது பிரான்ஸில் அதிகாரத்தில் இருந்த நெப்போலியன் போனபார்ட்டே அப்போதுதான் எகிப்து மீது படையெடுப்பதற்கான தயாரிப்புகளைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பிரெஞ்சு காலனிய சாம்ராஜ்யத்தை கணிசமான அளவிற்கு விரிவுபடுத்தும் தனது நோக்கத்தையும் அவர் அறிவித்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்ற, திப்பு பிரெஞ்சுக்காரர்களிடம் ராணுவ உதவியைக் கோரியதாகவும் செய்திகள் பரவியிருந்தன. 1798ஆம் ஆண்டில் மைசூர் மீது படையெடுக்க துருப்புகளை அனுப்புவதன் மூலம், திப்புவுக்கும் நெப்போலியனுக்கும் இடையில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்த கவலையின் விளைவாகவே இந்த முன்தடுப்பு வேலை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா மீது பிரான்ஸ் படையெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆங்கிலேயர்கள் பெருமளவிற்கு மிகைப்படுத்தினர். உண்மையில், வெல்லெஸ்லி இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே மைசூர் மீது புதிதாக படையெடுப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இது கடைசி ஆங்கிலோ-மைசூர் போரின் தொடக்கத்தைக் குறித்தது. இந்தப் படையெடுப்புக்கு முன்பாக, மைசூர் ஆட்சியாளரால் ஏற்றுக்கொள்ள முடியாத அவமானகரமான ஓர் ஒப்பந்தத்திற்கு திப்பு ஒப்புக்கொள்ள வேண்டுமென்று வெல்லெஸ்லி வற்புறுத்தினார். பின்னர் வெல்லெஸ்லியால் மிகப்பெரியதொரு தாக்குதல் தொடங்கப்பட்டது. கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் ஒரே நேரத்தில் மைசூர் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கடுமையான சண்டையில், போரின் இறுதிக் கட்டத்தில் (1799 மே 4 அன்று) திப்பு தனது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தை வீரத்துடன் பாதுகாக்கும்போது கொல்லப்பட்டார். ஸ்ரீரங்கப்பட்டின கோட்டையின் மதில்களில் நடைபெற்ற போரின்போது ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்தார்.
திப்புவின் தோல்வியையும் மரணத்தையும் அடுத்து, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆர்தர் வெல்லெஸ்லியின் ஆளுகையின்கீழ் கொண்டுவரப்பட்டது. ட்யூக் ஆஃப் வெலிங்டன் என்று பொதுவாக வரலாற்றில் அறியப்படும் இந்த ஆர்தர் வெல்லெஸ்லிதான், பிரெஞ்சு மன்னரான நெப்போலியன், வாட்டர்லூ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர். ஸ்ரீரங்கப்பட்டின கோட்டை பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட உடனேயே, திப்புவின் அந்தத் தலைநகரம் அனைவருக்குமான ‘பரிசுப் பொருள்’ என்று அறிவிக்கப்பட்டது. வெற்றிபெற்ற படைகள் அந்த நகரம் முழுவதையும் கொள்ளையடிக்கலாம் என்று ராணுவ அதிகாரிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிகார வரிசையில் அவரவர்களின் பதவிக்கு ஏற்ப இந்தக் கொள்ளையில் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்கை அனைத்துப் படைவீரர்களும் அதிகாரிகளும் பெற்றனர். இதன்படி, இந்தப் பரிசில் எட்டில் ஒரு பங்கு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் படைகளின் தளபதிக்கு உரியதாகும். அந்த நகரத்தை சின்னாபின்னமாக்கவும், அங்குள்ள மக்களின் உடைமைகளை கொள்ளையடிக்கவும் படைவீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு கொள்ளையில் இறங்கிய படையினர் மிகக் கொடூரமான வன்முறையை, மிகப் பிரம்மாண்டமான வகையில் கட்டவிழ்த்து விட்டனர். ராணுவ அதிகாரிகளோ அபரிமிதமான செல்வத்தைக் குவித்தனர். ‘அந்த நகரத்தில் கொள்ளையடிக்கப்படாமல் விடுபட்ட ஒரே ஒரு வீடு கூட இல்லை. விலைமதிப்பற்ற நகைகள், தங்கக்கட்டிகள் போன்றவை ராணுவத்தினர் நடத்தி வந்த கடைவீதிகளில் நமது படைவீரர்கள், சிப்பாய்கள் மற்றும் நமது ஆதரவாளர்களால் விற்பனை செய்யப்பட்டன. ஸ்ரீரங்கப்பட்டினம் நகரில் வசித்து வந்த ஒவ்வொருவரின் சொத்தும் காணாமல் போனது’ என கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பிய அறிக்கையில் ஆர்தர் வெல்லெஸ்லி குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் போரின் முடிவில் மைசூர் அரசின் பெரும்பகுதியை (கிழக்கிந்திய) கம்பெனி தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஒரு சில பகுதிகள், இந்தப் போரின்போது வழங்கிய உதவிக்கான பரிசாக ஹைதராபாத் நிஜாமுக்கு வழங்கப்பட்டன. நலிந்து போன, குறுகிப்போன மைசூர் அரசுக்கு, உடையார் வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ உடையார் அரசராக நீடிக்க அனுமதிக்கப்பட்டது. அந்தத் தருணத்தில், கிருஷ்ணராஜா சிறுவனாக இருந்தார். 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் பெயரளவிற்கான அரசர்களாகவே உடையார் வம்சத்தினர் இருந்தனர்.
மைசூர் அரசு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமிழ்நாடு பகுதியில் இருந்த (நீண்டநாட்களாகவே பிரிட்டிஷாரை ஆதரித்து வந்த, மராத்தியர்களின் ஆளுகையின்கீழ் இருந்த தஞ்சாவூர் பகுதி உள்ளிட்டு) ஆற்காடு மற்றும் இதர பல குறுநிலப் பகுதிகளும் மதராஸ் மாகாணத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. எனினும் 1799க்கும் 1805க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் மத்திய-தென் பகுதிகளில் இருந்த வலிமைமிக்க பாளையக்காரர்களின் எதிர்ப்பை நசுக்கியழிக்க பிரிட்டிஷார் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. காலனியாட்சிக்கு அடிபணிய பாளையக்காரர்கள் மறுத்தனர். இதன் விளைவாக, திப்பு தோற்கடிக்கப்பட்டபிறகு, இவர்களுக்கு எதிராக கடுமையான போரினை பிரிட்டிஷார் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. பாளையக்காரர்களுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போர்களை ‘இந்தியாவின் முதல் விடுதலைப் போர்’ என்று இந்தப் போர்கள் குறித்த முக்கிய வரலாற்றாசிரியரான கே. ராஜய்யன் ‘தென்னிந்தியக் கலகம்: முதல் விடுதலைப் போர், மைசூர், 1971’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். காலனியாட்சிக்கு எதிராக நின்ற பாளையக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர் கட்டபொம்மன் ஆவார். கம்பெனிக்கு எதிராகச் செயல்பட்டவர்களில் மிகவும் உறுதியானவராக அவர் இருந்தார். முதல் பாளையக்காரர் போர் (1799) திருநெல்வேலி பகுதியில் கட்டபொம்மனுக்கு எதிராகவே நடைபெற்றது. 1805ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இரண்டாவது பாளையக்காரர் போரில் பிரிட்டிஷாருக்கு எதிரான பாளையக்காரர்கள் அனைவரும் நசுக்கப்பட்டனர். 19ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலேயே தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக நிறுவப்பட்டுவிட்டது. எனினும் பல்வேறு வடிவங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிர்ப்பு தொடர்ந்தது. 1806ஆம் ஆண்டில் வேலூர் கோட்டையில் இருந்த கம்பெனி ராணுவத்தின் காலாட்படையினரிடையே ஒரு கலகம் எழுந்தது. திப்புசுல்தான் போரில் கொல்லப்பட்ட பிறகு, மைசூர் அரச பரம்பரையில் உயிரோடு இருந்த அவரது வாரிசுகள் இந்த வேலூர்க் கோட்டையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்காம் ஆங்கிலேய -மைசூர் போருக்குப் பிறகு, ‘உள்ளூர்’ அரசு என்ற நிலைக்கு மைசூர் அரசு தள்ளப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் அரசின் மிகப்பெரும் நிலப்பகுதி அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. ‘உள்ளூர்’ அல்லது சமஸ்தான அரசு என்ற வகையில், உள்ளூர் அளவில் சுயாட்சியைக் கொண்டதாக இருந்தபோதிலும், கம்பெனியின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட ஒன்றாகவே அது நீடித்தது. 19ஆம் நூற்றாண்டின் பாதிக்காலம் வரையிலும் இந்த அரசு பிரிட்டிஷாரின் நேரடி நிர்வாகத்தில் நீடித்து வந்தது. 1881ஆம் ஆண்டில்தான் மைசூர் அரசு நிர்வாகம் ஆட்சியாளர்களான உடையார்களிடம் ‘ஒப்படைக்கப்பட்டது.’
பிரிட்டிஷ் கம்பெனிக்கு கப்பத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்தை அந்த அரசு செலுத்த வேண்டியிருந்தது. ‘உள்ளூர் ‘அரசு என்ற வகையில் அது நீடித்திருப்பதற்கான விலைதான் அது. (1881ஆம் ஆண்டில் இந்தக் கப்பத் தொகை ரூ. 35 லட்சமாக உயர்த்தப்பட்டது.) மேலும் அதன் மீது திணிக்கப்பட்ட ராணுவப் படைகளுக்கான செலவுக்கும் அது பங்களிக்க வேண்டியிருந்தது. ஐரோப்பியர்களின் தலைமையிலான இந்தப் படைகளின் தலைமையகமாக பெங்களூர் இருந்தது. 19ஆம் நூற்றண்டில் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரும் பிரிட்டிஷ் ராணுவ முகாமாக பெங்களூர் மாறியது. பெங்களூர் நகரம் மைசூர் அரசின் கீழ் இருந்தபோதிலும், அங்கிருந்த ராணுவ முகாம் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1831ஆம் ஆண்டிலிருந்து அரசின் தலைமையகமாகவும் பெங்களூர் மாறியது. அரசர் குடியிருந்த மைசூர் நகரம் வெறும் பெருநகரப் பகுதியாக தரமிறக்கப்பட்டது. மகாராஜாவும் பெயரளவிற்கே ராஜாவாக நீடித்தார்.
அரசாட்சியின்மீது இவ்வாறு சுமத்தப்பட்ட மிகப்பெரும் நிதிச்சுமையின் விளைவாக, விவசாயிகள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாயினர். மைசூர் அரசின்மீது திணிக்கப்பட்ட கப்பம் என்பது நாட்டின் மொத்த வருவாயில் பாதிக்கு மேலானதாக இருந்தது. ஆட்சியின் வருவாய் அதிகாரிகள் மேற்கொண்ட கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகள் 1820களிலேயே விவசாய நெருக்கடிக்கு வழிவகுத்தது. கிளர்ச்சியுணர்வையும் தூண்டிவிட்டது. 1830ஆம் ஆண்டில் மைசூர் அரசுக்கு எதிராக நாட்டின் வடபகுதியில் கிளர்ந்து எழுந்த கிராமப்புற மக்களின் எழுச்சி மிக விரைவாக நாட்டின் இதர பகுதிகளிலும் பரவியது. இந்த எழுச்சியை நசுக்க பிரிட்டிஷார் ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் மைசூர் அரசு நிர்வாகத்தை கையிலெடுப்பதென 1831இல் பிரிட்டிஷார் முடிவு செய்தனர். அடுத்த 50 ஆண்டுகளுக்கு காலனிய அதிகாரிகளே மைசூர் அரசை ஆட்சி செய்தனர்.
ஹைதர் அலி, திப்பு ஆகியோரின் ஆட்சியின் கீழ் மைசூர் எந்த அளவிற்கு ‘நவீனமானதாக’ இருந்ததாகக் கருதப்படலாம் என்பது குறித்து கடந்த சில தசாப்தங்களாகவே கணிசமான விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஹைதர் அலி ராணுவத்தை, குறிப்பாக குதிரைப்படை, பீரங்கிப் படை ஆகியவற்றை மறுசீரமைக்கத் தொடங்கினார் என்பதை நாம் அறிவோம். அவர் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார். இதற்கு பேரழிவை ஏற்படுத்திய மைசூர் ராக்கெட்டுகள் ஒரு முக்கிய உதாரணமாகும். மூங்கில் குழாயில் இறுக்கமாகக் கட்டப்பட்ட இரும்புக்குழாய் அடங்கிய ஏவுகணைகளே இவை. இரும்புக் குழாயில் வெடிமருந்து நிரப்பப்பட்டு, இந்த ராக்கெட்டுகளை ஏவும்போது, அவை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்தை கடந்து எதிரிகளிடையே பேரழிவை ஏற்படுத்தின. இந்த ராக்கெட்டுகளின் செயல்திறனைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிரிட்டிஷார், 19ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இதன் மேம்பட்ட பதிப்புகளை உருவாக்கவும், இத்துறையில் புதுமைகளை உருவாக்கவும் உந்துதல் பெற்றனர்.
ராணுவத்தில் ஹைதர் அலி மேற்கொண்ட மறுசீரமைப்பு, வருவாய் வசூல் இயந்திரத்தை ஒழுங்குபடுத்துவதுடன் கைகோர்த்துச் சென்றது. இதன் மூலம் இடைத்தரகர்களின் பங்கு கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் மீதான சுமை ஓரளவு குறைந்தது. மறுபுறம் விளைச்சலில் பெரும்பகுதியை அரசு கையகப்படுத்தவும் முடிந்தது. ஹைதர் அலியால் தொடங்கப்பட்டு திப்புவால் தொடரப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாக இருந்த மையப்படுத்தலை நோக்கிய உந்துதலை அது சாத்தியமாக்கியது. உற்பத்தியில் அரசின் பங்கின்மீது அதிகமாக மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கான முக்கிய நோக்கமென்பது பயிற்சி மற்றும் களமிறக்குவதில் நவீன கொள்கைகளை கையாளும் திறன் மிக்க ராணுவத்தைப் பராமரிப்பதற்கு விரிவான வளங்களை பெறுவதே ஆகும். இத்தகைய நவீனப்படுத்தல் முயற்சிகள் திப்புவின் ஆட்சியில் மேலும் தீவிரமடைந்தன. அரசரே தொடர்ச்சியான அரசு ஆதரவிலான திட்டங்கள் மூலம் அவற்றுக்குப் பங்களித்தார். வணிக செயல்பாடுகளில் அரசே நேரடியாகப் பங்கேற்கும் வகையில் பரந்த அளவிலான பொருட்கள் வர்த்தகத்திற்கு ஊக்கமளிக்கப்பட்டது. உணர்வுபூர்வமானதொரு கொள்கையாக உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. மேலும் ஆசியாவில் இருந்த அவரது சமகாலத்தவர்களை விட திப்பு உலக அரசியலின் போக்குகள் குறித்து நன்கு அறிந்தவராக இருந்தார் என்றும் தெரிகிறது. இதன் காரணமாகவே, துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு தூதர்களை அனுப்புவதன் மூலம் சர்வதேச கூட்டணிகளை உருவாக்கிக் கொள்ள அவர் முயன்றார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டுடனான அவரது உறவு மேலும் இயல்பான ஒன்றாக மாறியது. இதில் அவரது சார்பு என்பது தீவிரப் போக்குகளை பிரதிநிதித்துவப் படுத்திய ஜாகோபின்களுடன் இருந்தது. ஜாகோபின்களின் தீவிர லட்சியங்களை திப்பு ஆதரித்தார் என்று இதற்குப் பொருளல்ல. (மைசூரில் அமைக்கப்பட்ட ‘ஜாகோபின் கிளப்பில் அவர் ஓர் உறுப்பினராகவும் ஆனார்) எனினும் ஜாகோபின்களுக்கு ஆதரவாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள், பிரிட்டிஷாருக்கு எதிரான அவரது போராட்டத்தில் பிரான்சின் ஆதரவைப் பெறுவதற்கான ஓர் அரசியல் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும். இறுதியில், 1799இல் ஏற்பட்ட திப்புவின் தோல்வியின் விளைவாக, இப்பகுதி மக்கள் ‘மறைமுகமான’ காலனியாட்சியை சகித்துக் கொள்ள நேர்ந்தது. மேலும் நாட்டிற்கு விடுதலை கிட்டும் வரையில், மைசூர் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படும் வரையில், சுமார் 150 ஆண்டுகளுக்கு அவர்கள் காலனிய சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply