லெனின்: வர்க்கப் போராட்ட நடைமுறை உத்திகளின் வித்தகன்
எம். பசவபுன்னையா
1970ஆம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக ஆழமாக எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள்…
மார்க்சிய அறிவுக் கருவூலத்திற்கும், உலகப் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக்கும் அவர் அளித்திருக்கும் பங்கினை நினைவு கூறும் வகையில், அவரது நூற்றாண்டு விழா அமையும். லெனினுடைய பங்களிப்பின் பல்வேறு அம்சங்களை ஒரு சில பக்கங்களே கொண்ட இந்தக் கட்டுரையில் அடக்கி விட முடியாது. எனவே, ஒரே ஒரு அம்சம் குறித்து மட்டும் இங்கு பார்க்கலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அதை மேலும் திடப்படுத்துவது ஆகியவற்றிற்கான உழைக்கும் வர்க்கப் போராட்டத்தில், நடைமுறை உத்திகளின் வித்தகனாக அவர் வெளிப்படுத்திய மகத்தான ஆற்றலையும் வல்லமையினையும் இங்கு விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
மகத்தான ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்கு இட்டுச்சென்ற நீண்ட நெடிய போராட்டத்தில், பல திருப்பங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு திருப்பத்திலும் அந்தந்தக் காலச் சூழ்நிலையினை ஆய்வு செய்து, அதற்குரிய உத்திகளை அவர் வகுத்துக் கொடுத்தார். அவை கம்யூனிஸ்டுகளுக்கு பிழையற்ற வழிகாட்டல்களாகவும், முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகின்றன. உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்டுகள், இவற்றையெல்லாம் கற்றறிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மார்க்சியத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் விசுவாசமான ஆதரவாளர்களாகவும், லெனினை வியந்து பாராட்டுகிறவர்களாகவும், மார்க்சிய லெனினியச் சித்தாந்த அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கும் பலர் கூட, இந்தக் குறிப்பிட்ட அம்சத்தில் லெனினுடைய மேதமை குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. அடுத்தடுத்து மாறி வரும் புதிய புதிய சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல், உரிய உத்திகளை வகுப்பதில் நம்மில் பலர் தட்டுத்தடுமாறுகிறோம்,; சில வேளைகளில் பெரும் தவறுகளைக் கூடச் செய்து விடுகிறோம். இது குறித்து திறந்த மனதுடன் விவாதிப்பதில் நமது சுய கௌரவம் (ஈகோ) குறுக்கே நிற்கத் தேவையில்லை. லெனினுடைய உத்திகள் குறித்து லெனின் கற்றுத் தந்ததையெல்லாம் நினைவில் வைத்திருப்பது மட்டுமே நமது பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு அளித்துவிடும் என்று கம்யூனிஸ்டுகள் நம்புவார்கள் எனில், அது அப்பாவித்தனம். ஆனால், அவருடைய வெற்றிகரமான உத்திகளையும், அவற்றின் பின்னணியில் இருந்த சித்தாந்தங்களையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது நமக்கு பெருமளவு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.
நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியே நடைமுறை உத்தி!
இராணுவப் படைகளுக்கெதிரான உத்திகள்தான் நடைமுறை உத்தி என்பதன் மரபார்ந்த பொருள். இதுவே, பின்னர் மார்க்சிய-லெனினியச் சொல்லாடலாகவும் மாறியது. வர்க்க எதிரிகள், முதலாளிகள் ஆகியோரிடமிருந்து அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றுவது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தின் நீண்ட கால இலக்கு. அந்த நீண்டகால இலக்கினை அடைவதற்கான அன்றாடப் போராட்டத்தில், நடைமுறை உத்திகள், பாட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞானமாகவும், கலையாகவும் மாறின. ஆனால், முதலாளிகளும், அவர்களது சித்தாந்தவாதிகளும் இந்தச் சொல்லைக் கொச்சைப்படுத்தினர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கான தற்காலிகமான தந்திரங்கள் என்பது போன்று, அவர்கள் அதன் மீது அவதூறு செய்தனர். மார்க்சிய லெனினியவாதிகள் எவரும், நடைமுறை உத்தி என்ற சொல்லாடலுக்கு, பொருள் திரிக்கப்பட்ட, முற்றிலும் சந்தர்ப்பவாதத் தன்மை கொண்ட அத்தகைய அர்த்தத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகால (கேந்திர) உத்தியின் பிரிக்க இயலாத ஒரு பகுதியாகவே நடைமுறை உத்தியினைப் பார்க்கிறார்கள். திட்டவட்டமான சூழ்நிலை – அதாவது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வெளிப்படும் வர்க்க எதார்த்தம் – குறித்த திட்டவட்டமான, பாரபட்சமற்ற ஆய்வின் அடிப்படையில் உருவாகும் உத்தியாகவே அதைப் பார்க்கிறார்கள்.
ஒரு உத்தி, அந்தச் சொல்லாடலுக்குரிய தகுதியுடன் இருக்க வேண்டும் எனில், அதன் உள்ளடக்கத்தில் வலுவான கோட்பாடுகள் கொண்ட செயல் திட்டம் ஒன்று இருக்க வேண்டும். கோட்பாடுடன் கூடிய உத்திகளை எதிர்த்தவர்களை எதிர்த்து லெனின் கடுமையாகப் போராடினார்.
அவர் காலத்திய பொருளாதாரவாதிகள் சிலர், தானாகவே உருவாகும் நிகழ்வுகளுக்கு இசைவாக நிலையெடுத்தது மட்டுமின்றி, அதை கோட்பாடு என்ற நிலைக்கும் உயர்த்தினர். அவர்களைப் பொறுத்த மட்டில், இயக்கத்துடன் சேர்ந்து உருவாகும் கட்சிக் கடமைகளின் வளர்ச்சிப் போக்குதான் நடைமுறை உத்தி எனப் புரிந்திருந்தனர். எந்தப் போராட்டம் சாத்தியமோ, அந்தப் போராட்டமே விரும்பத்தக்கது; எது சாத்தியமானதோ அந்தப் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது என்பதே அந்த பொருளாதாரவாதிகளின் நிலைப்பாடாக இருந்தது. இந்தப் போக்கினை எல்லையில்லா சந்தர்ப்பவாதம் என லெனின் கடுமையாகச் சாடினார். லெனின் இது குறித்து பின்வருமாறு எழுதுகிறார்:
“சூழ்நிலைக்கு ஒத்திசைவாக பல போராட்ட வடிவங்கள், திட்டங்கள், வழிமுறைகள் இருக்கக் கூடும். ஆனால், அவைகளை எல்லாம் கோட்பாடு என்ற பெயரில் குழப்பிவிட்டு, ஒரு குறிப்பிட்ட அரசியல் தருணத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில்தான் போராட வேண்டும் என்பது சிலரின் வாதம். இது எப்படி இருக்கிறதெனில், நோய்களுக்கு பலவகை மருத்துவமுறைகள் மருத்துவ விஞ்ஞானத்தில் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட முறையில்தான் மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கூறுவது போல் உள்ளது”. (தொகுதி 5. பக். 397)
நடைமுறை உத்தியை திட்டம் எனக் கூறுவது மார்க்சியத்தின் சாரத்தினையே மறுப்பதாகும் என சில பொருளாதாரவாதிகள் கூறினர். அது குறித்து லெனின் எழுதுகிறார்: இது மார்க்சியத்தின் மீதான அவதூறு ஆகும். நமக்கு எதிரான போராட்டத்தில், நரோத்னிக்குகள் நம்மைக் குறித்து வரையும் கேலிச்சித்திரம் போன்றது இது. வர்க்க உணர்வு கொண்ட போராளிகளின் தன்முனைப்பினையும், வல்லமையினையும் சிறுமைப்படுத்துவது என்பதே இதன் பொருள். மாறாக, மார்க்சியம் சமூக ஜனநாயகவாதியின் தன்முனைப்பிற்கும், ஆற்றலுக்கும் பெரும் ஊக்கத்தினை அளிக்கிறது; செயல் பரப்பில் விரிவான காட்சிகளை அவன் கண் முன் நிறுத்துகிறது. (இன்னும் கூட அதை வர்ணிப்பதெனில்), தன்னெழுச்சியாக போராட்டத்தில் இணையும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பலத்தினையும் அது அவன் முன் வைக்கிறது அரசியல் பிரச்சாரம், போராட்டம், புரட்சிகரமான செயல்பாடுகளுக்கான ஸ்தாபன பலம் ஆகியவை போதிய அளவு இல்லாத காரணத்தால், ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் பலர் தன்முனைப்பும், ஆற்றலும் அற்ற நிலையில் இருக்கும் போது, அவர்கள் முன் திட்டத்தினை நடைமுறை உத்தி என்று அறிவிப்பது மார்க்சியத்தின் சாராம்சத்தினையே மறுப்பதாகும். அது மார்க்சியத்தினை சித்தாந்த ரீதியாகக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாமல், கட்சியின் நடைமுறைச் செயல்பாடுகளை பிற்போக்காக திசை திருப்புவதுமாகும். (அதே தொகுதி. பக்.392-393)
ஒரு உருவமற்ற குழப்பத்தின் மீது ஆவி சுற்றிச் சுற்றி வருவது போல, இயக்கத்திற்கு எதிராக லெனின் தனது திட்டத்தினை உருவாக்கி வருகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டியவர்களைப் பார்த்து லெனின் கேட்கிறார் : “தன்னெழுச்சியான இயக்கத்தின் மீது ஆவி போன்று சுற்றி வருவதை விட, சமூக ஜனநாயகத்திற்கு வேறு வேலை என்ன இருக்க முடியும்? அது மட்டுமல்ல; அந்த இயக்கத்தினை ஒரு திட்டம் என்ற அளவிற்கு உயர்த்துவதும் அதன் வேலையே. கண்டிப்பாக, இயக்கத்தின் வால் பகுதியிலிருந்து அதை பின்னுக்குப் பிடித்து இழுப்பது அதன் வேலையாக இருக்க முடியாது. இங்கு பொருளாதாரவாதிகள் என்ன செய்து விடுகிறார்கள் என்றால், இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கினையே நடைமுறை உத்திகள் என்று பின்பற்றுவது மட்டுமல்லாமல், அதை ஒரு கோட்பாடாகவும் உயர்த்தி விடுகிறார்கள். இந்தப் போக்கினை சரியாக விளக்குவதெனில், இது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல; இது வால் பிடிக்கும் வாதம் (டெய்லிசம்) எனக் கூற வேண்டும்.” (அதே தொகுதி, பக்.396)
நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வு!
லெனின் கூறுகிறார்: “ஒரு குறிப்பிட்ட நாட்டில், அதைச் சுற்றியிருக்கும் நாடுகளில், மொத்தத்தில் உலகம் முழுவதிலும் நிலவும் வர்க்க சக்திகள் குறித்த விருப்பு வெறுப்பற்ற நிதானமான ஆய்வு, புரட்சிகர இயக்கத்தின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நடைமுறை உத்திகள் உருவாக்கப்பட வேண்டும். திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வே, மார்க்சியத்தின் முக்கிய சாராம்சமும், மார்க்சியத்தின் உயிர்த்துடிப்புள்ள ஆன்மாவும் ஆகும் என்று அந்த உண்மையினை மேலும் விளக்குகிறார். மார்க்சிய-லெனினியவாதிகள் என்று அழைக்கப்படுவதில் நாம் பெருமை கொள்கிறோம். ஆனால், நடைமுறை உத்திகள் குறித்த லெனினுடைய சித்தாந்தக் கட்டளையினை ஏற்றுக் கொண்டு நம்மில் எத்தனை பேர் செயல்படுகிறோம்? சூழ்நிலையில் உள்ள சில முக்கிய அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம். சம முக்கியத்துவம் கொண்ட வேறு சில அம்சங்களை கவனிக்கத் தவறுகிறோம். சூழ்நிலையின் சாதக பாதகங்களைப் பார்க்காமல் பளிச்சென்று ஒரு முடிவுக்குப் போய் விடுகிறோம். சூழ்நிலை வேக வேகமாக மாறிக் கொண்டு வரும் வேளையில் புதிய நிலைமைகளைக் கண்டுகொள்வதில் சற்று மெத்தனமாக இருந்து விடுகிறோம். நேற்று சரி என்பது இன்று மாறிவிட்ட நிலையில், நேற்று செய்த நிர்ணயிப்போடு நிலைகுத்தி நின்று விடுகிறோம். வேளைக்கு வேளை மாறிவரும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடைமுறைக் கோஷங்களை வைக்காமல், நீண்ட கால இலக்கு குறித்த உண்மைகள் குறித்துப் பேசுவதைத் தொடர்கிறோம்”.
“லெனினியத்தின் அடிப்படைகள்” என்று ஸ்டாலின் எழுதிய அந்த அற்புதமான நூலில், லெனினுடைய நீண்ட கால உத்திகள், நடைமுறை உத்திகள் குறித்து விளக்குகிறார். மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் உருவாக்கிய நீண்ட கால உத்திகள் மற்றும் நடைமுறை உத்திகளை இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகள் இருட்டடிப்புச் செய்திருந்த நிலையில், அதை லெனின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்; அது மட்டுமல்லாமல், அதை மேலும் மேம்படுத்தி புதிய சில கருத்துகளையும் ஆலோசனைகளையும் சேர்த்து, அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, விதிகளாக உருவாக்கி, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தலைமைக்கு வழிகாட்டுகின்ற சித்தாந்தமாகவும் லெனின் மாற்றி விட்டார் என ஸ்டாலின் கூறுகிறார். நடைமுறை உத்திகள் என்ற கருத்தாக்கத்திலிருந்து தெளிவாகப் பிரித்து, புரட்சியின் கட்டம், நீண்ட கால உத்திகள் ஆகிய கருத்தாக்கங்களை ஸ்டாலின் விளக்குகிறார். அவர் கூறுகிறார்: “புரட்சியின் ஒரு கட்டத்தில் பாட்டாளிகள் தொடுக்கவிருக்கும் பிரதானமான தாக்குதல் குறித்தும், பிரதானமான புரட்சிச் சக்திகள், அவர்களின் துணை சக்திகள் ஆகியவை குறித்தும் தீர்மானிக்கும் அம்சமே நீண்ட கால உத்தி என்பது. புரட்சியின் கட்டம் மாறும்போது, அந்த உத்திகள் மாறும். ஆனால், அந்தக் கட்டம் மாறாத வரை, அந்த உத்திகள் அடிப்படையில் மாறாமல் தொடரும். புரட்சியின் கட்டங்கள் பல ஆண்டுகள், ஏன் பல பத்தாண்டுகள் என்று கூட நீடிக்கக் கூடும்”.
ஆனால், நடைமுறை உத்திகளின் நிலைமை வேறு. ஸ்டாலினுடைய வார்த்தைகளில் கூறுவது எனில், புரட்சியின் ஏற்ற இறக்கங்கள், அதேபோன்று இயக்கத்தின் ஏற்ற இறக்கங்களுக்குத் தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலச் சூழலுக்குள் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நடைமுறை உத்திகள்தான் தீர்மானிக்கும். பழைய போராட்ட வடிவங்கள், பழைய கோஷங்கள், ஸ்தாபன வடிவங்களுக்குப் பதிலாக புதிய வடிவங்கள், கோஷங்கள், அல்லது இரண்டினையும் இணைத்து இதனைச் செயல்படுத்த வேண்டியிருக்கும். இலக்கில் உள்ள எதிரியினை வீழ்த்துகின்ற போரில் வெற்றி பெறுவது என்பதே நீண்ட கால உத்திகளின் நோக்கம். முழுப்போரிலும் வெற்றி பெறுவது என்பது நடைமுறை உத்தியின் நோக்கம் அல்ல. திட்டவட்டமான சூழ்நிலைக்கு உட்பட்டு, சில குறிப்பிட்ட போர்க்களங்களில் வெற்றி பெறுவது அல்லது சில குறிப்பிட்ட முன்னேற்றங்களை அடைவது என்பதே அதன் நோக்கம். நடைமுறை உத்தி என்பது நீண்ட கால உத்திகளுக்கு உட்பட்டு, அதற்கு உதவுவது என்பதே. புரட்சியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், சூழ்நிலையின் ஏற்ற இறக்கங்களுக்குத் தகுந்தாற்போல், நடைமுறை உத்திகள் பல முறை மாறக் கூடும்.
லெனினுடைய நடைமுறை உத்திக் கோட்பாடுகள்!
லெனினுடைய நடைமுறை உத்திகளை ஸ்டாலின் பின்வரும் மூன்று கோட்பாடுகளாக சுருக்கமாகத் தொகுத்து அளித்திருக்கிறார்:
1.நாடுகளில் நிலவும் பிரத்தியேகச் சூழ்நிலைகள், ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இயல்பான குணாம்சங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டியது தேவை.
2.ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக பெருமளவில் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய கூட்டு எவ்வளவு தற்காலிகமானது எனினும், ஊசலாட்டம் நிறைந்தது எனினும், நிலைதடுமாறுவது எனினும், நம்பகத்தன்மை கொண்டது இல்லை எனினும் அத்தகைய கூட்டாளிகளை உருவாக்குவதற்கான சிறு சிறு சாத்தியங்களைக் கூடப் பயன்படுத்த வேண்டும்.
3.கோடிக்கணக்கான மக்களுக்கு அரசியல் கல்வி அளிப்பதற்கு, பிரச்சாரமும் கிளர்ச்சியும் மட்டும் போதியதல்ல. ஏனெனில், அவர்களுக்கென்று அரசியல் அனுபவமும் தேவை. இந்த உண்மையினைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்தச் சித்தாந்தத்தினை மேலும் விளக்கும் வகையில், லெனின் என்ன கூறியிருக்கிறார் என்பதையும் இங்கு பார்க்கலாம். “ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கப் புரட்சியினையும், சர்வதேச அளவில் அதனுடைய வெற்றிகரமான தாக்கங்களையும், பூர்ஷ்வாக்களும் எதிர்பார்க்கவில்லை, பாமரர்களும் எதிர்பார்க்கவில்லை. இது பழைய உலகம் அல்ல, மாறியிருக்கிறது. பூர்ஷ்வாக்களும் மாறியிருக்கிறார்கள். போல்ஷ்விசம் அவர்களை அச்சுறுத்தியிருக்கிறது. வெறிபிடிக்கும் அளவிற்கு அச்சுறுத்தியிருக்கிறது. இது இருவகையான போக்குகளை உருவாக்குகிறது. ஒருபுறம், பல புதிய நிகழ்வுப் போக்குகளை அது உந்தித் தள்ளுகிறது. மறுபுறத்தில், போல்ஷ்விசத்தினை அடக்கி ஒடுக்குவதற்கான பலப்பிரயோகமும் அழுத்தமாகி வருகிறது. பல தளங்களில் பூர்ஷ்வாக்கள் தங்களையே பலவீனப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், இந்த இரண்டு வகைப் போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்”. (தொகுதி 31. பக். 100.)
அடுத்த கட்டத்தில் வரலாறு இந்த அம்சத்தினைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளில் பாசிசம் தலைதூக்கிய நிலையில் பல கொடூரங்கள் நடந்தேறின. சீனாவில் ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டான சியாங்கேய் ஷேக் நிகழ்த்திய கொலைகள் நிறைந்த சிவில் யுத்தத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளி மற்றும் விவசாயப் போராளிகள் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், கிரீஸ், மலேயா, பர்மா, வியட்னாம், கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கக் கண்டங்களிலுள்ள வேறு பல நாடுகள் என தொழிலாளி வர்க்கம் தாக்குதல்களுக்கு ஆளானது. இது, ஒரு உண்மையினை உணர்த்துகிறது. பூர்ஷ்வாக்கள் உலக அளவில் தரமிழந்து வெறுக்கத்தக்க மிருகங்களாக மாறி விட்டனர் என்பதும், தங்களது சுரண்டல் ஆட்சியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உழைக்கும் மக்கள் மீது எத்தகைய தாக்குதல்களையும் தொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பதுமே அந்த உண்மை. இது குறித்து உலகப் பாட்டாளி வர்க்கத்தை லெனின் மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டே வந்திருக்கிறார். தங்களது நடைமுறை உத்திகளைத் தீர்மானிக்கும்போது, இந்த அம்சத்தினைக் கணக்கில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
1922ஆம் ஆண்டு, மே மாதம், பிராவ்தா ஏட்டின் 10வது ஆண்டு நிறைவு வேளையில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்: “போல்ஷ்விசம் ஒரு சர்வதேச சக்தியாக மாறிவிட்டது. நாகரீகத்திலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் புதிய சார்ட்டிஸ்டுகள், புதிய வார்லின்கள், புதிய லீஃப்னெட்கள் பிறந்து வளர்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டபூர்வமாக, (அதாவது, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜார் மன்னன் ஆட்சியில் பிராவ்தா எந்த அளவு சட்டபூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்டதோ, அந்த அளவு சட்டபூர்வமாக) இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால், இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் பூர்ஷ்வாக்கள் தங்கள் வர்க்க எதிரிகளை விட, ஒப்பிட இயலாத அளவு பலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அதிகாரத்தினைத் தோன்ற விடாமல் தடுத்தவர்கள் அவர்கள். அதன் தோற்றத்தினை பத்து மடங்கு அபாயகரமானதாகவும், துயர்மிக்கதாகவும் மாற்றியவர்கள் அவர்கள். (செஞ்சேனைக்கு எதிரான) தங்களது வெண் சேனை (ஒயிட் கார்ட்ஸ்), ஏகாதிபத்தியப் போர்கள் முதலியவற்றின் மூலம் லட்சக்கணக்கானவர்களை சித்திரவதை செய்யவும், கொல்லவும் வல்லமை கொண்டவர்களாக இன்னும் இருக்கிறார்கள். இது நாம் மறக்கக் கூடாத ஒன்று. இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பொருத்திப் பார்த்து, நமது நடைமுறை உத்திகளை திறமையாக உருவாக்க வேண் டும்”. (தொகுதி 33. பக்.352)
இரண்டாவது உலகப் போரில் பாசிஸ்ட் கூட்டணி முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்த வெற்றியின் மூலம் சோவியத் செஞ்சேனை உலக அளவில், உலக வர்க்க பலாபலங்களை, தொழிலாளி வர்க்கத்திற்குச் சாதகமாக மாற்றிருப்பது உண்மை. இதனை வைத்துக் கொண்டு, உலக பூர்ஷ்வாக்களின் சக்தியினை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. பல லட்சம் மனிதர்களைச் சித்திரவதை செய்வதற்கும், கொல்வதற்கும் இன்றைக்கும் அவர்களால் முடியும். தொழிலாளி வர்க்கத்திற்கான நடைமுறை உத்திகளை வகுக்கும் போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பதை அனுமதிக்கவே முடியாது.
இவ்வாறெல்லாம் லெனின் நம்மை எச்சரித்திருப்பினும், லெனினுடைய நடைமுறை உத்திக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் என்று உரிமை கொண்டாடி வரும் சில சித்தாந்தவாதிகள். இந்தப் புதிய சகாப்தத்தில், பூர்ஷ்வாக்கள் சமாதானப்பூர்வமான சில பண்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று கூறி தங்களது வாதத்தினை நியாயப்படுத்துகின்றனர். நம் நாட்டில் உள்ள பூர்ஷ்வாக்களைப் பற்றி கம்யூனிஸ்டுகளுக்கு நன்கு தெரியும். அகிம்சை வன்முறை எதிர்ப்பு, சமாதானம், மகாத்மா காந்தியின் மனிதாபிமான வேதம் என்று பலவற்றை இவர்கள் பேசினாலும், உலகம் முழுவதுமுள்ள இவர்களின் பூர்ஷ்வா சகோதரர்களுக்கு இவர்கள் எவ்வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. 1947- 1951 தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களின் ஆயிரக்கணக்கில் அவர்களைச் சிறையில் அடைத்தது, சித்திரவதை செய்தது, கொன்றது, காவல் துறையின் திட்டமிட்ட அடக்குமுறை, வன்முறை இவை எல்லாவற்றையும் நம்மால் எப்படி மறக்க முடியும்? அண்மையில், ஆந்திர மாநிலத்தில் 1969ம் ஆண்டில், எத்தனை நக்சலைட்டுக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்? பூர்ஷ்வாக்கள் எவ்வளவு அகிம்சாவாதிகள் என்பதை அம்பலப்படுத்துகின்ற, லெனினுடைய எச்சரிக்கை எவ்வளவு சரியானது என்பதை அழுத்தமாக வெளிப்படுத்துகின்ற எடுத்துக்காட்டுக்களே இவையெல்லாம்.
உலகம் முழுவதுமுள்ள பூர்ஷ்வா வர்க்கம் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதில், போர், வன்முறை, கொடூரம் என எதையும் விட்டு வைப்பதில்லை. இவ்வகையில் அது தனது எதிர்ப்புரட்சிக் கலையினை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறது. தொழிலாளி வர்க்கம் இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த அபாயங்களை எல்லாம் எவ்வாறு சந்திப்பது என்று திட்டமிட்டு, அவற்றிற்கெதிரான நடைமுறை உத்திகளை உருவாக்க வேண்டும். எல்லாம் நடந்து முடிந்த பின்னர், வர்க்க எதிரி தனது சூழ்ச்சியால் நம்மை வீழ்த்திவிட்டார்கள் என்று குமுறுவதற்கு, தொழிலாளி வர்க்கத்திற்கு உரிமை எதும் இல்லை.
நமக்கு ஏராளமான பாடங்களை வழங்குவதாக லெனினுடைய மேதமை அமைந்துள்ளது. 1905 -1907, அது தவிர 1917 இவை அனைத்தும் சிக்கல் நிறைந்த காலங்கள். அடுத்தடுத்து வெகு வேகமாக சூழ்நிலைகள் மாறி வந்த இந்த இரண்டு குறுகிய காலங்களில், அதற்கு இணையாக, எவ்வாறு கோஷங்கள், போராட்ட வடிவங்கள், ஸ்தாபனம் ஆகியவற்றில் விரைவான பல மாற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
லெனின், தனிநபர் பயங்கரவாதத்தினை சமரசமின்றி எதிர்த்தார். அத்தகைய தனிநபர் பயங்கரவாதத்தினை அறிவுஜீவிகளின் பயங்கரவாதம் (இன்டெலிஜென்சியா டெரரிசம்) என அழைத்த லெனின், அது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறினார்.
“புரட்சிகரப் போராட்ட வடிவங்களிலேயே, பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் மிகவும் அபாயகரமானது. அதில் ஈடுபடுபவர்கள் உறுதியாகவும், தங்கள் உயிரை பலி கொடுப்பதற்கும் தயாரான தியாகிகளாகவும் இருப்பார்கள். ஆனால், அரசுக்கு எதிரான பகிரங்கமான எதிர்ப்பு மேலோங்கி வரும் வேளையில், பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் தேவையற்ற ஒன்று” (தொகுதி 8. பக். 160)
(தமிழில்: இ.எம். ஜோசப்)
துணை உரை
என்.குணசேகரன்
லெனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிற எவரும் அவருடைய குணநலன்களில் முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்வார்கள். எந்த சூழலிலும் செயல்படுவதற்குத் தயார் நிலையில் இருப்பது லெனினது தனிச்சிறப்பு.
-1905-புரட்சி வெற்றி பெறவில்லை .
-இதனால் ,தொழிலாளர் இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்டிருந்த சோர்வு;
-கட்சிக்குள் புரட்சிகரப் பாதையை துல்லியமாக தீர்மானிப்பதில் நீடித்த கருத்து வேறுபாடுகள்;
-சமரசத்திற்கு இணங்காத நிலையில்,லெனின் தனிமைப்பட்ட நிலை–
இவ்வளவு பாதகமான அம்சங்கள் இருந்தாலும் கூட, ரஷியாவில் சோசலிச இலக்கினை அடைவதற்கான உத்திகளையும், செயல் வியூகங்களையும் லெனின் உருவாக்கினார்.
எந்த சூழலிலும், அது, சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், செயல்படுவதற்கும் முன்னேறுவதற்கும் அவரிடம் ஒரு அரசியல் உத்தி, ஒரு அரசியல் திட்டம், ஒரு அரசியல் வியூகம் தயாராக இருக்கும். ஆனால் அவை அவரது கற்பனையில் ஞானோதயமாக உருவாவதில்லை; எதார்த்த உலக நடப்புக்களை விழிப்புடன் உள்வாங்கி வெளிவரும் சிந்தனைகள் அவை.
ரஷ்யாவிலும், உலகத்திலும் நிலவுகிற சூழல், மக்களின் வாழ்வாதார நிலைமைகளின் போக்குகளை முழுமையாக உள்வாங்கி அவரது செயல்திட்டம் அமைந்திடும்.
1905 – தோல்வியிலிருந்து,அடுத்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்திகள், செயல் திட்டங்களை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” என்கிற நூலை எழுதினார். ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கான செங்கற்களை முறையாக அடுக்குவது போன்று, அவர் தனது வாதங்களை நூலில் செதுக்கி அளித்துள்ளார்.
*சோசலிசத்தை நோக்கி செல்ல வேண்டுமென்றால், தற்போதைக்கு முழுமையான அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஜனநாயக குடியரசை அமைத்திட வேண்டும்.
*ரஷியாவில் ஜாராட்சி வீழ்ந்திட, முதலாளிகளும் விரும்புவார்கள்; அவர்களது நலன்களை காத்திட முதலாளிகள் புரட்சிக்காக நிற்பார்கள். முதலாளிகள் பங்காற்றும் புரட்சிதான், அப்போதைய ரஷ்யாவில் சாத்தியம்.
*முதலாளி வர்க்கத்தால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; சமரசம் ஊசலாட்டம், துரோகங்கள் அந்த வர்க்கத்திற்கு இயல்பானது. முதலாளிகள் மீதான எச்சரிக்கையுடன், உழைக்கும் வர்க்கங்களும் சேர்ந்து ஜனநாயக குடியரசை உருவாக்க வேண்டும்
- ஜாராட்சியை வீழ்த்த விரும்பும் அனைத்து சக்திகனையும் திரட்டி ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்தினால், அடுத்த கட்டமான சோசலிசத்தை நோக்கிச் செல்ல முடியும்.
*எதிர்வரும் புரட்சி முதலாளித்துவ, மேல்தட்டு புரட்சியாக இருப்பதால், ‘பாட்டாளி வர்க்கம் பெரிய பங்கினை ஆற்ற வேண்டியதில்லை; புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கம் தள்ளியே நிற்க வேண்டும்’ என்றெல்லாம் மென்ஷ்விக்குகள் வாதிட்டனர். புரட்சியின் தலைமை முதலாளிகளிடம் செல்ல பாட்டாளி வர்க்கம் அனுமதிக்கக்கூடாது; அந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் முழுச் சக்தியுடன் பங்கேற்க வேண்டும்.
- பாட்டாளி வர்க்கமும், விவசாயிகளும் முதலாளித்துவப் புரட்சியில் பங்கேற்று, அதன் தலைமையை தானே மேற்கொண்டு, புரட்சியை வெற்றிக்குக் கொண்டுவர வேண்டும்.
*அந்த வெற்றிதான் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசம் வருவதற்கான வழியைத் திறந்துவிடும்.
அவர் தீட்டிய இந்த புரட்சி வரைபடம், உழைக்கும் மக்கள் இயக்கத்திற்கு தெளிவை ஏற்படுத்தியது.
வெறும் செயல்திட்டங்களை வகுத்து உத்திகளை உருவாக்கினால் மட்டும் போதும் என்று லெனின் தனது பணியை நிறுத்திக்கொள்வதில்லை. அதனை உழைக்கும் மக்களின் உணர்வாக மாற்றிட முனைப்புடன் செயல்படுவார். கட்சியை ஒருமித்து செயல்பட வைத்திட 1906,1907 ஆண்டுகளில்,ஏராளமான கட்சிக் கூட்டங்கள், மாநாடுகளில் இடையறாது கலந்து கொண்டார்.
இந்தப் பணிகளை காவல்துறையின் கடுமையான கெடுபிடிகள், கண்காணிப்புக்களுக்கு இடையில் மேற்கொண்டார். ஒரு முறை அவரது எழுத்துக்கள் அடங்கிய நூல் தொகுப்புக்களை அவரிடமிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இப்படிப்பட்ட கெடுபிடிகள் காரணமாக, அவர் முழுமையாக தலைமறைவாக செயல்பட முயற்சித்தார்.
பேராசிரியர் முல்லர் என்ற பெயருடன் மாறுவேடத்தில் நாட்டிலிருந்து தப்பிக்க முயன்றார். வழக்கமான பாதையில் செல்ல காவல்துறை அனுமதிக்காத நிலையில், கடுமையான பனி மூட்டம் கொண்ட ஒரு தீவுக்குச் சென்று அங்கிருந்து ஒரு படகு எடுத்து சென்றார். ஒரு அபாயகரமான பயணத்தை லெனின் மேற்கொண்டதாக குரூப்ஸ்கயா எழுதுகிறார்….
(“லெனின் -150” நூலிலிருந்து)
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
