
கொள்கையே நிலைப்பாடு : என்.சங்கரய்யா
நர்மதா தேவி
சி.பி.ஐ(எம்) கருவூலம்
நவம்பர் 15: என்.சங்கரய்யா நினைவு தினம்
மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழித்திட, சோஷலிச சமூகமாக இந்தியா பரிணமிக்க வேண்டும் என்ற பார்வையோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் என்.சங்கரய்யா. சர்வதேச, இந்திய, தமிழ்நாட்டுச் சூழல் குறித்த தோழர் என். சங்கரய்யாவின் பதிவுகள் அவருடைய மார்க்சிய சிந்தனையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகின்றன.
“காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும்” என்ற 1956 ஆம் ஆண்டு பிரசுரத்தில் இரண்டாவது பொதுத்தேர்தலில் மக்கள் எதன் அடிப்படையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதை அன்றைக்கு நாடு எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னென்ன? காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளால் மக்கள் எத்தகைய துயரத்தை அனுபவித்தார்கள் என்பதை பட்டியலிட்டு அலசி இருக்கிறார்.
“இந்தியாவின் முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அயல்நாட்டு முதலாளிகளின் ஆதிக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் இன்னும் நீடிக்கிறது. பிரிட்டிஷ் முதலாளிகளின் சுரண்டலைப் பாதுகாக்கும் கொள்கையை காங்கிரஸ் சர்க்கார் பிடிவாதமாகக் கடைபிடிக்கிறது. பிரிட்டிஷ் முதலாளிகளின் சுரண்டல் ஒரு முக்கிய விஷயமல்ல என்றும், இது மிகவும் அற்ப விஷயம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். பிரிட்டிஷ் மூலதனத்தின் சுரண்டலைப் பற்றிய விபரங்களை மக்கள் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம், வரப்போகும் பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் ‘காங்கிரஸ் சர்க்காரின் இக்குறிப்பிட்ட கொள்கைக்கு பலத்த தோல்வியை உண்டாக்கும் நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எந்தக் குறிப்பிட்ட கொள்கை, ஆளும் வர்க்க நலனுக்கு ஆதரவானது, உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை அடிக்கோடிட்டே அவர் காலம்தோறும் பதிவுசெய்து வந்துள்ளார் என்பதை என்.எஸ் -இன் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உரை நமக்கு மேலும் விளக்குவதாக இருக்கிறது. எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசாங்கத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத்தலைவர் தோழர் ஆர்.உமாநாத் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து, தோழர் என்.எஸ் ஆற்றிய உரையில், “இந்திரா காந்திக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. அரசியல் ரீதியாக அந்தக் கட்சியை எதிர்க்கிறோம். அதே சமயம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம். இதில் ஒளிவு இல்லை. பாகிஸ்தானில் ஜனநாயக இயக்கத்துக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவித்ததை, பாரதீய ஜனதாவும், லோக்தளமும் எதிர்த்ததை, நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்திய அரசின் ஆதரவு சரியானது என்றோம். எனவே சந்தர்ப்பவாதத்துக்காக, தேர்தல் வெற்றிக்காக, நாட்டின் அடிப்படையைப் பாதிக்கும் பிரச்சனைகளில் இந்திராகாந்தியை கண்மூடித்தனமாக எங்கள் கட்சி எதிர்க்கவில்லை” என்று விளக்கிப் பேசினார்.
தரவுகளுடன் பிரச்சனையின் முழுபரிமாணத்தையும் முன்வைத்து பிரச்சனைக்கான தீர்வையும் முன்வைத்து நிறுவுவது அவரது வழக்கம். நிலப்பிரச்சனை குறித்து காங்கிரஸும் கட்சியும் பிரசுரத்தில் அவர் முன்வைத்த அம்சங்கள்: “சென்னை ராஜ்யத்தில் 1954-55-இல் கணக்கெடுத்தார்கள். ஒரு ஏக்கர் நஞ்சை அல்லது ஒரு ஏக்கர் தோட்ட நிலம் 3 ஏக்கர் சாதாரண புஞ்சைக்கு சமம் என்றும் கணக்கிட்டு, சென்னை மாகாணத்தில் உள்ள நில உடைமைகளைப் பற்றிய கணக்கை சர்க்கார் பிரசுரித்துள்ளார்கள். இதில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, தஞ்சை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஜில்லாக்களில் இருக்கும் புஞ்சை நிலைமை என்ன? சாதாரண புஞ்சை என்ற முறையில் 75 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் நபர்கள் 19,846 பேர். இவர்களிடம் உள்ள மொத்த நிலம் 34,00,452 ஏக்கர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 75 ஏக்கர் சொந்த உடமையாகவோ அல்லது சொந்தச் சாகுபடிக்கோ ஒதுக்குவது என்று வைத்துக்கொண்டாலும்கூட, இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலம் 14,88,450 ஏக்கர்களாகும். அப்படியானால் இவர்களிடமிருந்து நில விநியோகத்திற்காக கிடைக்கக்கூடிய உபரி நிலம் 34,00,452-14,88,450=19,12,002 ஏக்கர்களாகும். இந்த உபரி நிலத்தை தலா 2 ஏக்கர் விகிதம் வினியோகித்தால் 9 ½ லட்சம் விவசாயத்தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு நாம் புதுவாழ்வு அளிக்க முடியும் என்பது தெளிவு. மேலே குறிப்பிட்ட 11 ஜில்லாக்களில், 300 முதல் 500 எக்கர் வரை வைத்திருக்கும் 946 நிலப்பிரபுக்களிடம் 3,55,992 ஏக்கர் நிலம் குவிந்துகிடக்கிறது. 500 முதல் 1000 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் 478 நிலப்பிரபுக்களிடம் 3,15,667 ஏக்கர் நிலம் குவிந்துகிடக்கிறது. 1000 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் 192 நிலப்பிரபுக்களிடம் 4,76,201 ஏக்கர் நிலம் குவிந்துகிடக்கிறது. ஆகவே நிலவினியோகம் செய்வதற்கு நிலம் இல்லை என்ற பேச்சு உண்மையல்ல.
அதுமட்டுமல்ல. இன்று இந்தியாவில் 17 கோடியே 69 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இவற்றைக்கூட இன்றுவரை காங்கிரஸ் சர்க்கார் ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும் வினியோகிக்காமல் இருப்பது ஏன்?
நிலப்பிரபுக்களை ஆதரிக்கும் காங்கிரஸ் சர்க்காரின் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கிராமப்புறங்களில் தனது ஆட்சியை தக்கவைக்க நிலப்பிரபுக்களை தயார் செய்கிறது.” இவ்விதம், கடந்த 1950-களில் இருந்து என்.எஸ் எழுதிய எழுத்துக்களில் இருந்து அவர் மரணிப்பதற்கு சில காலம் முன்பு 23வது தமிழ்மாநிலக்குழு மாநாட்டுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி வரையிலான பதிவுகளில் அவருடைய மார்க்சிய சிந்தனை ஓட்டத்தை உணரலாம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply