புதிய நாடாளுமன்றம்: குடியாட்சிக்கு விடப்பட்ட சவால்!
- ஜி. ராமகிருஷ்ணன்
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை ஒட்டி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் இந்த திறப்புவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்தும் கூட, மோடி ஆட்சி அதைப் பற்றி கவலைப்படவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு குடியரசுத் தலைவர்தான் பொருத்தமானவர். அவர்தான் அரசியல் அமைப்பின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தலைவர். நாடாளுமன்றம் கூடுவதே அவருடைய அழைப்பின் பேரில்தான். அதனால்தான், புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தின. ஆனால் குடியரசுத் தலைவரும், குடியரசு துணைத் தலைவரும் இந்த நிகழ்ச்சிக்கே அழைக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் புறக்கணித்தால் பரவாயில்லை என்ற விதத்தில் மோடி ஆட்சி நடந்துகொண்டது.
குடியரசுத் தலைவரும், எதிர்க்கட்சிகளும் இல்லாத, ஆடம்பர விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி “இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல; ஜனநாயகத்தின் தாயும் கூட” என்று குறிப்பிட்டார். எத்தனை பெரிய முரண் இது. உண்மையில் அவர் ஜனநாயகத்தின் அடித்தளங்களை சிதைக்கிற வேலையை இந்த திறப்புவிழா நாளிலும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பாஜகவினால் முன்னிறுத்தப்பட்டவர். பழங்குடி இனத்தை சேர்ந்த பெண். வாக்குவங்கி அடையாள அரசியலுக்கு அது அவர்களுக்கு தேவைப்பட்டது. அதே சமயத்தில் அரசு அதிகாரம் என்று வருகிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தப் பார்வைதான் கோலோச்சும் என்பது இந்த நிகழ்வில் வெளிப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி என்ற ஒற்றை நபரைச் சுற்றித்தான் இந்த விழா அமைய வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை வேகமாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபர். மேலும் இந்த நிகழ்ச்சி ஒரு முடிசூட்டும் விழாவைப் போலவே அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு ‘செங்கோல்’ அமைக்கப்பட்டது. அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் வழங்க, ஒட்டுமொத்த விவாதங்களும் செங்கோலைப் பற்றியதாக திரும்பின.
பாஜக இந்த வாதங்களை தெரியாமல் உருவாக்கிடவில்லை. அரசின் சார்பிலேயே உருவாக்கி பரப்பப்பட்ட காணொளி ஒன்று செங்கோல் பற்றி கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டது. அந்த கட்டுக்கதை இதுதான். காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெறும்போது, அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன், அதிகார மாற்றத்தை எப்படி வடிவமைக்கலாம் என்று நேருவிடம் கேட்டாராம். உடனே நேரு அது தொடர்பாக ராஜகோபாலாச்சாரியிடம் ஆலோசனை மேற்கொண்டாராம். அந்த ஆலோசனைக்கு பின்னர், தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்கள் தனி விமானத்தின் மூலம் செங்கோல் ஒன்றை தில்லிக்கு எடுத்துச் சென்றதாகவும், அந்த செங்கோலினை மவுண்ட் பேட்டன் வாங்கி, பின் அவரிடமிருந்து நேரு பெற்றுக்கொண்டு, அதிகார மாற்றம் நடந்ததாகவும் சொல்லியுள்ளனர். அதற்கு சோழர் காலத்தை உதாரணமாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இது வெறும் கட்டுக்கதை என்பது சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டுவிட்டது. செங்கோல் எடுத்துக் கொண்டு தனி விமானத்தில் தில்லிக்கு ஆதீனங்களை அழைத்துச் செல்லவில்லை. அவர்களாகவே ஒரு செங்கோலை நேருவிற்குப் பரிசாக கொடுப்பதற்காக ரயிலில் சென்றுள்ளார்கள். அதுபற்றிய ஒரு விளம்பரத்தை தி இந்து ஆங்கில நாளேட்டிற்கு கொடுத்துள்ளார்கள். மேலும் அந்தப் பரிசினை பெற்றுக்கொண்ட நேரு, அரசின் கட்டுப்பாட்டில் அதனை ஒப்படைத்துவிடுகிறார். பரிசுப் பொருளாக வந்த தங்கத்தடி அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
ஆதீனங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு செங்கோலை பண்டித நேருவிடம் அவரது வீட்டில் சென்று அளித்துள்ளனர். அன்றைய வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று பாகிஸ்தான் விடுதலை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 14ஆம் தேதி இரவில்தான் தில்லிக்கு திரும்பியுள்ளார். அவருக்கும் செங்கோலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ராஜாஜியும் இதுபற்றி பேசியதாக எந்த ஆதாரமும் இல்லை. அதனால்தான் நேருவிடம் செங்கோல் வழங்கப்படும் படத்தை வெளியிட்டவர்கள், மவுண்ட் பேட்டன் செங்கோலை வழங்கியதற்கோ, ராஜாஜி ஆலோசனை சொன்னதற்கோ, எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
ஆதீனங்களிடம் இருந்து செங்கோலை பரிசாகப் பெற்றதை விமர்சித்து, அத்தருணத்தில் அண்ணா எழுதிய கட்டுரையும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். “முடி அரசன் அவனைச் சுற்றி, குடிமக்களை உழைக்க வைத்து அதன் பயனை உண்டு கொழுக்கும் சீமான்கள் பரிவாரம் இந்த தங்கக் கோட்டையின் உள்ளே தாராளமாக உலவவும் அனுமதியும் வசதியும் பெற்ற, மதத்தை முதலாகக் கொண்டோர் உள்ளனர் என்பதை அறிவீர். மக்களாட்சி மலருவதற்கு இத்தகையவர்கள் நீக்கப்பட வேண்டும் என்னும் வரலாற்று உண்மையையும் அறிவீர்” மேலும் “இந்தத் தங்கம் அனைத்தும் உலக விவகாரங்களைத் துறந்த ஒரு துறவியின் செல்வத்தின் ஒரு பகுதி மட்டுமே. மடத்தில், நவரத்தினப் பெட்டிகளில் உள்ள நவரத்தினங்களை விட தொழிலாளி வர்க்கம் பாடுபட்டு வளமான நெல் வயல்களில் விளைவிக்கக்கூடிய பயிர்கள் மதிப்புமிக்கது” என்கிறார் அவர். உழைப்பின் பயனை உண்டு கொழுக்கும் சீமான்களின் கூட்டமும், அவர்களுக்கு ஆதரவான மதத் தலைவர்களும் கோலோச்சிய முடியாட்சியின் தொடர்ச்சியை நிறுவத்தான் மோடி ஆட்சி இந்த ‘செங்கோல்’ நாடகத்தை அரங்கேற்றியது.
ஆனால், ஜனநாயக இந்தியா முடிமன்னர்களால் உருவானது அல்ல. மவுண்ட் பேட்டனுக்கு அதிகாரத்தை கைமாற்றுவதைத் தவிர வேறு வாய்ப்பில்லாமல் ஆக்கியது அன்றைக்கு உச்சத்தில் நடந்துவந்த விடுதலைப் போராட்டம்தான். இந்தியாவின் மீது இனியும் அடிமைச் சுரண்டலை நடத்த முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை நிறைவேற்றியது.
1968ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில், கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட டிரினிட்டி கல்லூரியில், நேருவின் நினைவாக இரண்டாவது சொற்பொழிவை மவுண்ட் பேட்டன் நிகழ்த்தினார். அதில், தான் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நோக்கமே, அதிகார மாற்றம்தான் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.
எதற்காக இந்தக் கதையாடல்?
2023 ஜனவரி மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்கனைசர் இதழுக்கு அளித்த பேட்டியில், “1,000 ஆண்டுகளாக இந்து சமூகம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது” என குறிப்பிடுகிறார். இப்போது அந்த யுத்தத்தின் எதிரிகள் வெளிநாட்டில் இல்லை; உள்நாட்டிலேயே இருக்கிறார்கள் என்றும் அதில் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியும் தன்னுடைய உரையில், ‘நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அடிமைத்தனம்” என்று சுட்டிக்காட்டி பேசுகிறார். இருவருமே சொல்லாமல் விட்டதில்தான் அவர்களின் நோக்கம் வெளிப்படுகிறது. ஜனநாயக இந்தியாவிற்காக இந்திய மக்கள் முன்னெடுத்த போராட்டங்களையோ, அதன் தலைவர்களையோ குறித்து அவர்கள் பேசவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டடத்திலும் விடுதலைப் போராட்ட வரலாற்றிற்கு மையமான இடம் தரப்படவில்லை.
பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையில் இயங்கக்கூடிய ஆட்சி அமைந்துவிட்டது என்பதைக் கொண்டாடுவதுதான் அவர்களுடைய உண்மையான நோக்கம் ஆகும். செங்கோல் மற்றும் நாடாளுமன்ற கட்டடத்தின் உள் அமைக்கப்பட்ட பல்வேறு சின்னங்களும் அவர்களுடைய நோக்கத்தை உறுதி செய்கின்றன.
செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வை, சோழர் காலம், தமிழர் பெருமை என்பதோடு இணைத்து பேசுகிறார்கள். சோழர் ஆட்சிக் காலத்தில் தஞ்சை பெரிய கோயில், கல்லணை போன்றவை கட்டப்பட்டது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு உண்மை பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணர்களுக்கு நிலம் தானமாக தரப்பட்டு, கொடுமையான நிலவுடைமை சுரண்டல் முறை நிறுவப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் நுழையும்போதே அங்கே சாணக்கியரின் படம் வரவேற்கிறது. ‘அர்த்த சாஸ்திரம்’ எனப்படும் பிற்போக்கான, ஆணாதிக்க, சாதி ஆதிக்க சட்ட நூலை வடித்தவருக்கு நாடாளுமன்றத்தில் மையமான இடம் தரப்பட்டிருப்பது ஏன்? நவீன இந்தியாவின் அரசமைப்பினால் நிராகரிக்கப்பட்ட கருத்துக்களை ஏன் மண்டபத்தில் ஏற்றி கொண்டாட வேண்டும். இந்தியும் சமஸ்கிருதமும் இடம்பெற்றிருக்கும் நாடாளுமன்றத்தில், மற்ற தேசிய மொழிகளுக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன? நாடாளுமன்ற வடிவமைப்பு மட்டுமல்ல; நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பும் கூட, மாநிலங்களிடம் எந்த கலந்தாலோசனையும் செய்யாமலேயே அந்த அவையில் அறிவிக்கப்பட்டன.
மனுநீதியை உயர்த்திப் பிடித்து, பன்முக கலாச்சாரத்தை மறுக்கும், ஜனநாயக விரோத ஒற்றை ஆட்சி என்பதைத்தான் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா பறைசாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியவை. அவர்களின் பிரதிநிதிகளை அதிகாரமற்றவர்களாக்கி, பொருளாதார, சமூக சுரண்டலை தீவிரமாக்கக் கூடியவை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களிடமே ஆதரவைத் திரட்டுவதற்காக, ‘மத உணர்வின்’ அடிப்படையிலான வாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
மத நம்பிக்கை என்பது ஒரு மனிருடைய தனிப்பட்ட தேர்வு. அதனை அவர் தன்னுடைய வீட்டுக்குள் பின்பற்றலாம்; பொது வெளியில் மத நிறுவனங்களில் பின்பற்றலாம்; கொண்டாட்டங்களை முன்னெடுக்கலாம். ஆனால் நாடாளுமன்றம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைப்பு. அது மக்களின் உரிமைகளை உறுதி செய்வதாகவும், சுதந்திரத்தை மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். மோடி ஆட்சி, மதத்தை பயன்படுத்திக் கொண்டு, ஜனநாயகத்தை காவு கேட்கிறது.
ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் ‘ஜனநாயகம் எப்படி மரணிக்கிறது’ என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களும், ஜனாதிபதிகளும் தங்களை பதவிக்கு கொண்டுவந்த ஜனநாயகம் என்ற கருவியைக் கொண்டே அதனைக் கொலை செய்கிறார்கள் என்கிறார்கள். அதைத்தான் ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்ட விதத்தில் செய்து வருகிறது.
விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத்தள்ளி, மத நம்பிக்கையை முன்னிலைப்படுத்துவது இந்திய அரசின் தன்மையையே மாற்றி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தின் வெளிப்பாடாகும்.
“பாரதிய ஜனதா கட்சி சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல; பாசிசத் தன்மை கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தினால் வழிகாட்டப்படுகிற, ஆதிக்கம் செலுத்துகிற ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு எந்திரத்தையும் ஆர்.எஸ்.எஸ்.-சினால் கருவிகளாக பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது.” என்று சி.பி.ஐ(எம்) கட்சி திட்டம் விளக்குகிறது. அதைத்தான் நாம் பல்வேறு நிகழ்ச்சிப்போக்குகளிலும் பார்த்து வருகிறோம்.
நாடாளுமன்ற திறப்பு விழாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள், சாவர்க்கரின் பிறந்தநாள் ஆகும். விழா முடிந்த அடுத்த நாளில், பத்திரிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி காந்திக்கு மரியாதை செய்தார் என்பதும், சாவர்க்கருக்கு மரியாதை செய்தார் என்பதும் அடுத்தடுத்து இடம்பெற்றன. சாவர்க்கரின் பெயரை இந்த விழாவோடு இணைக்க வேண்டும் என்ற திட்டத்துடனே இதனை மேற்கொண்டுள்ளார்கள்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு தொடர்ந்து மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். இறுதியாக அவர் எழுதிய மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுத்தான் அவரை விடுதலை செய்தனர். 1923ஆம் ஆண்டு அந்தமான் சிறையில் அவர் எழுதிய இந்துத்துவாவின் அடிப்படை அம்சங்கள் என்ற நூல்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வழிகாட்டும் கருத்தியலாக உள்ளது. இந்த கருத்தியல், பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பிரித்தாளும் கொள்கையின் ஒரு பகுதியாக ஊக்கப்படுத்தப்பட்டது. அதே கருத்தியல்தான் அண்ணல் காந்தியின் படுகொலைக்கு பின்னணியாகவும் இருந்தது.
காந்தியின் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக நாதுராம் கோட்சே இருந்தார். 7 வது நபராக வி.டி.சாவர்க்கர் இருந்தார். வழக்கு விசாரணையில் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. கோபால் கோட்சே உள்ளிட்ட மற்ற ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது. காந்தியை படுகொலை செய்வதற்காக சதித் திட்டத்திற்கும், படுகொலை நிகழ்விற்கும் உள்ள இணைப்பு நிரூபிக்கப்படவில்லை என்று சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். எனவே, சதியில் அனைவருமே ஈடுபட்டது உண்மை. அந்த எழுவரும் நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிக் கூண்டில் நின்ற படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால், காந்தியையும், சாவர்க்கரையும் ஒரே தளத்தில் வைத்து பிரச்சாரம் செய்கிற அளவுக்கு சென்றுள்ளது மோடி அரசு.
அதற்கு வசதியாக காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டது பற்றியும், அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டதைப் பற்றியுமான விபரங்கள் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்து அகற்றப்பட்டன.
தொடக்கத்தில் இருந்து தன்னுடைய நிகழ்ச்சிநிரலை தேசத்தின் நிகழ்ச்சிநிரலாக மாற்றுவதற்கு, ஆர்.எஸ்.எஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சிதைக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்கு அடிப்படைகளாக அமைந்த மதச்சார்பின்மை, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகிய அனைத்தையும் தாக்கி அழிக்கிறது.
இங்கிலாந்திலும், பிரான்சிலும் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. சமுதாயத்தில் அறிவியல் சிந்தனை முன்னெடுக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் சோசலிச புரட்சிக்கு பின் முழுமையான மதச்சார்பின்மை கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. மக்களின் மத உரிமைக்கு மதிப்பளித்த அரசு, மத பீடங்களை பயன்படுத்தி அதிகாரம் செலுத்தி வந்த கடந்த கால சுரண்டல் கட்டமைப்புக்கு மாற்றாக அமைந்தது.
காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள், சுதந்திர இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதை தீவிரமாக விவாதித்தார்கள். நவீன இந்தியாவிற்கு பாதை வகுக்கும் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். அப்போதே அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்., மநுநீதியைத்தான் இந்தியாவின் அரசமைப்புக்கு முன்மாதிரியாக முன்வைத்தது. அதனை ஏற்க மறுத்த அரசியலமைப்பு அவையையும், அம்பேத்கரையும் கடுமையாகச் சாடவும் செய்தது. இப்போது நாடாளுமன்றத்தை சிதைத்திருக்கும் மோடி ஆட்சி, அடுத்ததாக அரசமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தை முற்றாக சிதைத்து அழிக்க முயற்சிக்கும்.
இந்துத்துவா தேசியவாதம் என்பது காலனி ஆதிக்க எதிர்ப்பில் உருவான இந்திய தேசியவாதத்திலிருந்து மாறுபட்டதாகும். இந்திய தேசியவாதம் காலனி ஆதிக்க சுரண்டலை உணர்ந்தது. அதற்கு எதிராக எழுந்தது. ஆனால் இந்துத்துவா தேசியவாதம் குடிமக்களின் ஒரு பகுதிக்கு எதிராக, மற்றொரு பகுதி சிறுபான்மையினரை நிறுத்துகிறது. சாதி, பாலின அடிப்படையிலான சுரண்டலை நியாயப்படுத்தும் மனுநீதியை அரசமைப்பில் புகுத்தத் துடிக்கிறது. நாடாளுமன்றத்தின் இடங்களை அதிகப்படுத்துவோம் என்ற அறிவிப்பில் கூட அது கூட்டாட்சிக் கோட்பாட்டை உதாசீனப்படுத்துகிறது.
கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு இந்துத்துவ சித்தாந்தத்துடன் கைகோர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களின் பொருளாதார நலன்களுக்கு இந்தப் போக்குகளால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அன்னிய மூலதனத்தோடு கைகோர்த்துக் கொண்டு இந்திய மக்களை சுரண்டிக் கொழுப்பதற்கு இந்துத்துவ தேசியவாதம் தடையாக இல்லை என்பதோடு, சுரண்டலுக்கு ஊக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது. எனவேதான், ஜனநாயக இந்தியாவின் அடிப்படைகள் மிகக் கடுமையான தாக்கப்படுகின்றபோதிலும் பெருமுதலாளிகள் அதனை மிகச் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். ஊடகத் தளத்தில் பெரும் மூலதனத்தின் ஆதிக்கம் வியாபித்திருக்கும் நிலையில், இந்துத்துவ புனைவுகளும், ஊடகத் திட்டங்களும் கேள்வியற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டத் திருத்தங்களும், சலுகைகளும் புதிய நாடாளுமன்றத்தில் இன்னும் அதிவேகமாக நிறைவேற்றப்படக் கூடும். எதிர்க்கட்சிகளே இல்லாவிட்டால் என்ன; நானே அனைத்துமாக இருப்பேன் என்ற எதேச்சாதிகார போக்கினை அவர்கள் தமக்கு வசதியாகவே பார்ப்பார்கள்.
நாடாளுமன்றம் திறக்கப்பட்ட அதே நாளில் மல்யுத்த வீராங்கனைகள் தாக்கி அப்புறப்படுத்தப்பட்டார்கள். நீதிக்கான அவர்களுடைய போராட்டம் நசுக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் அவர்களின் போராட்ட உறுதியை தாழ விடவில்லை. பதக்கங்களை கையில் ஏந்திக் கொண்டு, தம் மகள்களுக்காக போராட்டக் களத்தில் குதிப்போம் என்று அறிவித்துள்ளார்கள்.
மணிமகுடங்களை மண்ணில் வீழச் செய்த விவசாயிகளும், தொழிலாளர்களும்தான் இந்த எதேச்சாதிகாரப் புதிருக்கு விடை காணச் சாத்தியமுள்ளவர்கள்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
