கல்வி, இந்துத்வா மற்றும் தேசியக் கல்விக் கொள்கை
நிலோத்பல் பாசு
மனிதர்களை மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்பு எதுவெனில், மனிதர்களின் உணர்வுபூர்வமான சிந்திக்கும் ஆற்றலும், அந்தச் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் தர, இயற்கைக்கு எதிர்வினை புரிவதும், கூடுதலாக, இயற்கையை மாற்றத் தலைப்பட்டதுமே ஆகும். மார்க்ஸ் தனது மூலதனம் – முதல் பாகத்தில் இதனை விளக்கி, “. . . . . நாம் முழுக்க முழுக்க மனிதப் பண்புகளுடனான உழைப்பாக அதை எடுத்துக்கொள்கிறோம். . . . . . ஒரு மோசமான கட்டிட வடிவமைப்பாளனை, ஒரு சிறந்த தேனீயிடமிருந்து எது வேறுபடுத்திக் காட்டுகிறது என்றால், ஒரு வடிவத்தை எழுப்புவதற்குமுன் மனிதன் அதைத் தன் மனதில் எழுப்பிப் பார்க்கிறான் என்பதே. ஒவ்வொரு உழைப்பின் முடிவிலும் கிடைக்கப்போகும் பலன், அதனைத் தொடங்குவதற்கு முன்பே மனிதன் மனதில் கருக்கொண்டுவிடுகிறது; எனவே, அது ஒரு கருத்தாக முன்பே மூளையில் இருக்கிறது. மனிதன் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மீது மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்துவதில்லை; தனது நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறான்” என்கிறார்.
விழிப்புணர்வு, சிந்தனை மற்றும் கருத்து உருவாவது ஆகியவை, சமூகத்துடனும், சமூக வாழ்க்கையுடனும், சமூக உற்பத்தி வழிமுறையுடனும் பிரிக்க முடியாததாக இணைந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக உற்பத்தி மற்றும் இயற்கையுடனான மனிதனின் செயல்பாடுகள் காரணமாக, மனிதன் பல தலைமுறைகளாகப் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு, கல்வியின் மூலமாகத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. நாமே வாழ்ந்து நேரடியாகப் பெறாத அனுபவ அறிவு, ஒரு சமூகத்தின், மனித நாகரிகத்தின் கூட்டு ஞாபகத்தில் இவ்வாறு நமது அறிவின் தொகுப்பாக, சேர்க்கப்படுகிறது. இதுவே கல்வியின் சாரம்.
கல்வி என்பது வெறுமனே திரும்பச் செய்யும் வழிமுறைக்கான பயிற்சி மட்டுமே அல்ல; மனிதர்கள் தங்களை மாற்றிக்கொள்வதோடு, சமூகத்தை – இயற்கையை மாற்றுவதற்கான புதுக் கருத்துகள் சிந்தனையில் தோன்றுவதற்கான அடிப்படையும் ஆகும். கல்வி குறித்த அடிப்படையான சிந்தனை, ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. இதைத்தான் ‘மாற்றத்திற்கான கல்வி’ என்று சிலி நாட்டுச் சிந்தனையாளர் பாவ்லோ ஃப்ரேயர் குறிப்பிடுகிறார்.
கல்வி: கருத்துகளின் மோதலுக்கான முக்கிய மேடை
நாகரிக சமூகத்திற்கு முந்தைய சமூக அமைப்புகளில், கல்வி என்பது கற்பித்தல், திறன்களைப் பயிற்றுவித்தலுக்கான கருவியாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டது. வர்க்க சமூகங்கள் தோன்றியபின், கூடுதலாக, நாம் வாழும் சமூக அமைப்பின் தன்மைக்கேற்ற உணர்வையும் ஊட்டுவதற்கான வழிமுறையாக மாறியது. வர்க்க சமூகங்களில், ஆளும் வர்க்கங்களுக்குத் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைக்க, இந்த உணர்வை வளர்ப்பது தேவையானதாகிறது. எனவே, தங்கள் நலனுக்கான உணர்வை மக்களிடத்தில் உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், தேவையான கல்வி முறையைத் தேர்ந்தெடுத்து, அதனைப் பரப்பவும் செய்கின்றனர்.
மார்க்சும், ஏங்கெல்சும் கூறியுள்ளபடி “ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே, எந்த ஒரு சகாப்தத்திலும், அதிகாரமிக்க கருத்துகளாக இருந்துள்ளன – அதாவது, யார் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் தங்களது சொந்த நலனுக்கேற்றக் கருத்துகளை உருவாக்கி, பரப்புவதன் மூலம் சிந்தனையையும் ஆட்சி செய்கின்றனர்; அதாவது, உடலுழைப்பு, மூளை உழைப்பு என வேலைப்பிரிவினை ஏற்பட்ட பிறகு, சமூகத்தின் பொது விஷயங்களைச் செய்வதற்கும், பொருளுற்பத்திக்குத் திட்டமிடவும், உடலுழைப்பு செய்யாதவர்களுக்கு மட்டுமே நேரம் இருந்ததால் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்புகளில், கல்வி ஆளும் வர்க்கத்தினருக்கு மட்டுமே உரியதாக இருந்தது; கிரேக்க சமூக அமைப்புகள், இன்னும் குறிப்பாக, இந்திய ‘குருகுல’ அமைப்பு ஆகியவை, இந்த உண்மையை நமக்கு விளக்குகின்றன. மேலும், உழைக்கும் வர்க்கத்திற்கு கல்வி விலக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வந்துள்ளது என்ற உண்மையையும் ‘ஏகலைவனின்’ கதை நமக்கு விளக்குகிறது.
வர்க்க சமூகக் கல்வியின் பரிணாம வளர்ச்சியின் உள்ளார்ந்த இரட்டைத் தன்மை
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தொடர்ந்து முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிக லாபம் கிடைக்க, உழைக்கும் மக்களைத் தொழில்நுட்ப அறிவும் திறனும் படைத்தவர்களாக மாற்றுவது அவசியமாகிறது; ஆனால் கல்வி பரவலாக்கப்படுவது உறுதி செய்யப்படும்போது, அது கூடவே உழைக்கும் வர்க்கத்தின் விழிப்புணர்வை அதிகரிக்கும் சூழலையும் ஏற்படுத்துகிறது. மார்க்சும், ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் “முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தோண்டுவதற்கான கருவிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அது யார் கையில் – அதாவது நவீன உழைக்கும் வர்க்கத்தின் கையில் – இருக்கவேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது”, என்றும் “அது உழைப்பாளிகளுக்கு, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதங்களை வழங்குகிறது”, என்றும் கூறுகின்றனர்.
மன்னராட்சியையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த போராட்டத்தில், முதலாளிவர்க்கம், ஆரம்பக்கட்டத்தில் தங்களுடைய சொந்த வளர்ச்சிக்காகவும், பின் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், உழைப்பாளிகளுக்குத் தந்த அறிவையும் திறனையும், பின்னர் தொழிலாளிவர்க்கம் அமைப்பாய்த் திரண்டபின், இதே முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக உபயோகப்படுத்த முடியும். எனவே முதலாளித்துவத்தின் கீழ் கல்வி என்பது உள்ளார்ந்த முரணைக் கொண்டிருக்கிறது: உழைப்பு சமூகமயமாக்கப்பட்டுள்ளது; ஆனால், அதன் பயனாய்க் கிடைக்கும் சொத்து, தனியாரிடம் மட்டும் குவிகிறது. இது இந்த அடிப்படை முரணின் பிரதிபலிப்பே ஆகும்.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெற்றபொழுது, அறிவும் அறிவியலும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே என்ற இடத்திற்குத் தள்ளப்பட்டு, கல்வியும் அதற்கேற்றாற்போல் மாற்றப்பட்டது. மார்க்ஸ் தனது மூலதனத்தில் செய்துள்ள கூர்மையான ஆய்வு, முதலாளித்துவ சமூகத்தில், ‘அறிவியல், உழைப்பாளிகளிடமிருந்து மாறுபட்ட, தனித்துவமான ஓர் உற்பத்திச் சக்தியாக உருவெடுத்து, மூலதனத்தின் லாபத்திற்காக சேவை செய்யும் ஒன்றாக மாற்றப்படுகிறது’ என்பதை வெளிப்படுத்துகிறது. ஏகாதிபத்திய காலகட்டத்தில், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான முன்னெடுப்புகள் முன்னெப்போதையும்விட அதிகமாகச் செய்யப்பட்டாலும், மாணவர்களுக்கு, இயற்கை அறிவியலை முழுமையாக உள்வாங்கிக் கருத்தியலாகப் புரிந்து கொள்வதைக் கடினமாக்கும் நோக்கத்துடன், அறிவியல் ஆய்வுகள், தற்போது பல கூறுகளாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன; மேலும், மனித சமுதாயம் குறித்த பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதேயில்லை. (வரலாறு ஒரு பாடமாக இருந்தாலும், அது அறிவியலின் ஒரு பகுதியே இல்லை என்பதாகப் போதிக்கப்படுகிறது). இயற்கை அறிவியலைப் பொருத்தவரை, மாணவர்களைத் தன்னுடைய இருத்தலுக்கான அறிவியல் உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுத்து, அதற்கு எதிர்மாறாக, உள்நோக்கத்தோடு, உழைக்கும் வர்க்கத்திற்கும் சோஷலிசத்திற்கும் எதிரான, முதலாளித்துவ கல்வி முறை, மாணவர்களுக்கு, உலகம் பற்றிய சிதைக்கப்பட்ட பார்வையைத் தருகிறது. இதன்மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவில் கல்வியின் தோற்றம்
இந்தியாவில் நவீனக் கல்வி முறையின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்த எடுத்த முயற்சிகளோடு நேரடியாகத் தொடர்புடையது. ஆரம்பத்தில் இம்முயற்சிகள், ‘உள்ளூர்’ ஆதிக்க சாதியினரோடு சமரசம் செய்து கொள்வதாக இருந்தது. (உ-ம்) கல்கத்தா மதரஸா, காசி சமஸ்கிருத கல்லூரிகள்.
பின், பார்சிக்கு பதிலாக ஆங்கிலம் அலுவல் மற்றும் நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கப்பட்டது; மேலும் குடிமைப் பணிகளில் ஆங்கிலம் படித்த இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இவ்விரு நடவடிக்கைகளும் ஆங்கிலக் கல்வி தவிர, மற்றக் கல்வி முறைகள் வளர்ச்சி பெறுவதைத் திறம்பட முறியடித்தது. 1853இல் கிழக்கிந்திய கம்பெனிக்கு, சர் சார்லஸ் வுட் என்பவர் இந்தியாவில் ஆங்கிலக் கல்விக்கான ‘மகா சாசனம்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஒரு கடிதத்தை எழுதினார். இது ஆங்கிலேயரின் தேவைகளுக்கேற்ப உயர் வகுப்பினருக்கு உயர்கல்வி அளிப்பதில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்தது. இதுதவிர, உயர்கல்வி நிறுவனங்களில் நிர்வாக நடைமுறை குறித்தும், வுட் கடிதம், ஆலோசனை வழங்கியது. அந்த ஒட்டுமொத்த நிர்வாக நடைமுறையே இன்றும் தொடர்கிறது. இருப்பினும், காலனி ஆட்சியின் கீழ் நடந்த குறைந்தபட்சக் கல்விப் பரவல், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் வேட்கையையும், விழிப்புணர்ச்சியையும், கூடவே கொண்டுவந்தது.
சுதந்திர இந்தியாவில், உள்நாட்டு முதலாளித்துவ வளர்ச்சிக்கு, அறிவியல் தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவைப்பட்டதால், ஆளும் வர்க்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய, கல்வி வசதிகள் துரிதமாக விரிவாக்கப்பட்டன. எனினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – கட்சித்திட்டத்தின் ஆய்வின்படி, முதலாளித்துவ வளர்ச்சியின் உள்ளார்ந்த குறைபாடு காரணமாக, கல்வி முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்க முடியாமல் 60களின் மத்தியில் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்சென்றது. கோத்தாரி குழு, நாட்டின் பொருளாதாரத்தில் 6 சதவிகிதத்தை கல்வி வளர்ச்சிக்குச் செலவிடப் பரிந்துரை செய்தது. ஆனால் இன்று வரை அது நடக்கவேயில்லை. 1986இல், ராஜீவ் காந்தி அரசினால் வெளியிடப்பட்ட, ஆளும் வர்க்கத்தின் தேவைக்கான மனிதவளத்தை மட்டும் தயாரிப்பது; மற்றவர்களை முறைசாராக் கல்விக்கு ஒப்படைப்பது என்ற புதிய கல்விக் கொள்கை, ஒரு சமகால உதாரணமாகும்.
கல்வி என்பது உரிமை என்பதை விட, தொடர்ந்து ஒரு சலுகையாகவே நீடிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசு கடைப்பிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில், கல்வி உரிமை மற்றும் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக்கல்வி ஆகியவையும் அடங்கும். ஆனால் நடைமுறையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எதுவுமே மெய்ப்படவில்லை.
மாறிவரும் காலக்கட்டத்தில் கொள்கை வகுத்தலின் இயல்புகள்
சோவியத் யூனியன் தகர்ந்து, பல்துருவப் போக்கு மறைந்ததும், உலகமயமாக்கலும் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கமும், நாடுகளைப் பாதுகாப்பாக இருக்கவிடவில்லை. காலனியாதிக்க பாதிப்பிலிருந்து விடுபட, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கைவிட்டு, நிதிமூலதனத்தின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கக் கட்டாயப்படுத்தியது.
இந்திய அரசு, 80களின் மத்தியிலிருந்தே கொண்டுவந்த இந்த முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கச்சார்பு கல்விக் கொள்கைதான் தற்போது நாம் சந்தித்துவரும் சவால்களுக்குக் காரணமாகும். இந்தியாவில், முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் நெருக்கடிகள், தற்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான உரிமையின் மீது ஒரு புதிய வெளிப்படையான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. தினசரி கல்விச் சூழலின் எல்லா அம்சங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. கல்விக்கான அரசின் செலவினங்களைக் குறைத்து, பொதுக் கல்வியை நாசம் செய்கிறது.
உள்நாட்டு – வெளிநாட்டு மூலதனங்களுக்குத் தொடர்ந்து லாபத்தை ஈட்டித்தரும் ஒரு வழிமுறையாக, கல்வி பார்க்கப்படுகிறது. அதற்கு அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களைக் காலி செய்யவேண்டும். காளான்கள் போல் முளைத்திருக்கும். பல தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் பேச்சுவார்த்தைகளின்படி, இந்தியாவில், ‘கல்வி’ச் ‘சேவை’ வழங்க, பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி தர, அரசு முயற்சித்து வருகிறது.
தொழில்நுட்பக் கல்வியில் செய்யப்படும் தனியார் முதலீடு லாபம் பெற்றுத்தரும் எனக் கருதப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களிலிருந்து தேர்ச்சிபெற்று வெளிவரும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதனால், இந்தப் படிப்புகளுக்கு சமநிலையற்ற போட்டி உருவாகிறது. இது, சமூக அறிவியலையும், பண்பாட்டுக் கல்வியையும் குறைத்து மதிப்பிடச் செய்கிறது. இது கல்வியின் குறிக்கோளான ஒட்டுமொத்த சமநிலையைப் பேரழிவிற்கே இட்டுச்செல்லும்.
பன்னாட்டு நிறுவனங்கள், நம்முடைய ஆராய்ச்சிகளை, தங்களது ஆணைக்கு இணங்கச் செயல்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. உயர்கல்வியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான அனுமதி, நமது அறிவுலக வாழ்க்கை மீதான அச்சுறுத்தலாகும். இது, நம் அறிவுப்புலத்தின் சுயச்சார்பிற்காக, மிகப் பரந்த அளவில் கல்வியாளர்களைத் திரட்டுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது; ஏனெனில், இந்தப் பிரச்சனை நமது தேசபக்திக்கான ஆழ்ந்த விருப்பத்துடன் முரண்படுகிறது.
தனியார் நிறுவனங்களை ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதில் நீதித்துறையும் பங்குவகிக்கிறது. இது, குறிப்பாக, சமூகநீதியைப் பாதித்து, சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களை மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளுகின்றது.
தீவிர வலதுசாரிகளின் மீட்சி
அதிகரித்துவரும் சமத்துவமின்மை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றினால், புதிய தாராளமயக் கொள்கைகள் முட்டுச்சந்தில் நிற்கின்றன. இந்நிலையில், அதிக லாபத்திற்காக, இக்கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்துகின்றனர். குறிப்பாக, 2008 உலக நிதி நெருக்கடிக்குப்பின் இது வெளிப்படையாகவே தெரிகிறது. கார்ப்பரேட்டுகளினால் இயக்கப்படும் தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்குச் சவால் விடுவதற்கும், மக்களை மையமாகக் கொண்ட மாற்றுக்கொள்கைகளை முன்வைப்பதற்கும் இடதுசாரிகளுக்கு வலிமை குன்றியுள்ள உலகப் பகுதிகளில், தீவிர வலதுசாரிகளின் மீட்சி சாத்தியமானது.
இதன் குறிப்பான தன்மை, தேசிய மற்றும் இயற்கை வளங்களை மக்கள் அணுகிவிடாமல், அவர்களை முழுமையாக ஒதுக்கிவைப்பது; வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதங்களை மறுப்பது; கல்வி, சுகாதாரம் மற்றும் குடியிருப்பு ஆகிய அடிப்படை உரிமைகளை மறுப்பது; ஜனநாயக உரிமைகளைச் சுருக்குவது; அடையாள அரசியல் மூலம் மக்கள் ஒற்றுமையை முழுமையாகச் சிதைப்பது மற்றும் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான வாய்ப்புகளை இல்லாமல் ஆக்குவது ஆகியவையாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், தனிநபரை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகளில் மிக மூர்க்கத்தனமாக ஈடுபடுகின்றனர். தீவிர வலதுசாரிகளை ஒரு காலத்தில் வெளிப்படையாகப் பரிகசித்துச் சிரித்து, இவர்களிடமிருந்து ஒதுங்கி நின்றவர்கள், தற்போது இவர்களின் பகட்டான உரத்த பேச்சுகளுக்கு ஏன் செவிமடுக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.
இந்த உலகளாவிய தீவிர வலதுசாரி மீட்சிச் சூழலை விளக்கி, கார்டியன் கட்டுரையாளர் ஜார்ஜ் மான்பியோட், “முன்னர், முதலாளித்துவம் தொழில்நுட்ப வல்லமை கொண்ட அரசாங்கத்தைக் கோரியது. ஒரே நேரத்தில், பாதுகாப்பான அரசையும் திறம்பட நடத்திக்கொண்டு, தங்கள் லாபங்களையும் பாதுகாக்கக்கூடிய நபர்களை விரும்பியது. ஆனால், இன்றைய கார்ப்பரேட் சக்தி, தன்னலத்தை மட்டுமே கருத்தில் கொண்டது”, என்று கூறுகிறார்.
புதிய உலக மில்லியனர்கள் பேரழிவு முதலாளித்துவத்தினால் தழைக்கின்றனர். அவர்களது லாபத்தைப் பன்மடங்கு பெருக்குபவை குழப்பங்களே. நம் வாழ்வாதாரங்களைச் சிதைத்து, ஒவ்வொரு குழம்பிய குட்டையிலிருந்தும் மீன்களைப் பிடித்து, மக்களின் சொத்துகளை மென்மேலும் கைப்பற்றிக் கொள்கின்றனர். கொள்ளையர்கள் மக்களிடம் திருடிக் கொண்டிருக்கும்பொழுது, வலதுசாரி அரசியல்வாதிகள் இந்தக் கோபத்தைத் திசைதிருப்பி, ஏற்கெனவே, பெரும்பான்மையான அரசுத் திட்டங்களின் பயன்கள் எதுவும் சென்றுசேராமல், அடையாளங்களுக்குள் அடைக்கப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்ட எளிய மக்களின் மீது அந்தப் பழியைப் போட்டு, கலவரங்களைத் தூண்டுகிறார்கள். மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்படுவதுபோலத் தோன்றும் இந்தக் கலவரங்கள், உண்மையில் முதலாளிகளால் நிதியளிக்கப்படுபவை.
இக்குழுக்களின் நலன்கள் எப்போதும் நாட்டின் எல்லைக்கு அப்பால் ‘வரியற்ற சுவர்க்கங்களில்’ உள்ளன. ஆனால், உண்மைக்கு முரணாக, மிகை தேசியவாதிகளால் இது சிறப்பானதாக, பிரச்சாரம் செய்யப்படுகிறது. தாங்கள்தான் தேசபக்தர்கள் என்று இறையாண்மைக்கு வக்காலத்து வாங்கும், உரக்கச் சத்தமிட்டுத் தேசபக்தியைச் சொந்தம் கொண்டாடும் இந்த அரசியல்வாதிகள், எப்பொழுதுமே நாட்டின் சொத்துகளை விற்க, ஆர்வமாக முன்நிற்பவர்கள்.
இந்தியச் சூழல்: கார்ப்பரேட்-வகுப்புவாதக் கூட்டுக் களவாணித்தனம்
புதிய தாராளமயக் கொள்கைகள் தீவிர வலதுசாரி மீட்சிக்கு உகந்த சூழலை உருவாக்கிக் கொண்டிருந்த நிலையில், இங்கு கார்ப்பரேட்-வகுப்புவாதக் கூட்டுக் களவாணித்தனத்திற்கான களம் தயாராகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அடையாள அரசியலை முன்னெடுத்துச் செல்லத் தயாராக நிற்க, தீவிர வலதுசாரிகளுக்கு உண்மையான சவால் ஜனநாயகபூர்வமான, மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டமே. 2013இல் ஏறக்குறைய அனைத்துத் தரப்பு இந்தியப் பெருமுதலாளிகளும் மும்பையில் கூடி, பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், நரேந்திர மோடியே பிரதம மந்திரியாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அவரைப் பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கக் கோரி, அத்தீர்மானத்தை பாரதிய ஜனதா கட்சியிடம் கொடுத்தனர். இந்துத்வ நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக் கிடைத்த பெரும்வாய்ப்பை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ். உடனே களத்தில் குதித்தது. அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற தன்னுடைய முந்தைய வாக்குறுதியைப் பறக்கவிட்டு, தன் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் பா.ஜ.க. தலைமையை உடனடியாக இதற்கு ஒப்புக்கொள்ளச் சொல்லி, ஆர்.எஸ்.எஸ். பொதுவெளியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இப்படியாக, 2014 தேர்தலுக்கு முன்பே, கார்ப்பரேட்-வகுப்புவாதக் கூட்டுக் களவாணித்தனம், அமலுக்கு வந்துவிட்டது.
எனவே, இந்திய சமூகத்தில், பொது வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் கார்ப்பரேட்டுகளின் நலன்களைத் தங்குதடையின்றி முன்னெடுக்கும் முயற்சிகள் மட்டுமல்லாது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைத்து, அந்த இடத்தில் பிளவுவாத, பாசிச, இந்துத்துவ தேசத்தை நிலைநிறுத்துவதே அதன் தலையாய நோக்கமாகும் என்பதைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினமல்ல. அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இதையே நிரூபித்தன. 2019இல் மிருகபலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., கொள்கை வகுத்தலில், இந்தக் கார்ப்பரேட்-வகுப்புவாதக் கூட்டுக் களவாணித்தனத்தை மேலும் கெட்டிப்படுத்தியது. புதிய தாராளமயக் கொள்கைகள், ‘குரோனி கேப்பிட்டலிசம்’ எனப்படும் தனக்கு நெருக்கமான முதலாளிகளுக்கு இயற்கை வளங்களையும் தேசிய வளங்களையும் அள்ளித்தரும் புதிய உச்சத்தைத் தொட்டது. கூடவே, சர்வாதிகாரத் தன்மையுடன் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அழித்து, ஜனநாயகத்தின் அங்கமான நாடாளுமன்றம், நீதிமன்றம் உட்பட, ஜனநாயக மற்றும் சட்டபூர்வமான அனைத்து அமைப்புகளையும், தங்கள் கைப்பாவையாக்கி, தாக்குதல் தொடுத்தது. பெரும்பான்மைவாதம் இந்தியாவின் வழிகாட்டு நெறியாக மாறியுள்ளது. இறுதியாக, சுதந்திரப் போராட்ட மரபும், சுதந்திரமான அயலுறவுக் கொள்கையும் புறக்கணிக்கப்பட்டு, ஏகாதிபத்திய முகாமில் முழுமையாக இணைந்துவிட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் போற்றப்பட்டுள்ள கொள்கைகள் வலிமைபெற, கல்வி ஒரு முக்கிய கருவியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வியின் அடிப்படைக்கூறு ஒரு பெரிய பழுதுநீக்கத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
தே.க.கொ. 2020-இன் பொருளாதாரம் மற்றும் அரசியல்
எந்தவொரு கொள்கை உருவாக்கமும் பயனுள்ள வகையில் அமைய, அப்போது நிலவும் புறச்சூழலைக் கணக்கில்கொண்டு, தொடங்கப்படவேண்டும். சவால்களை கோடிட்டுக்காட்டி, அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதற்கான வரைபடம் தேவை. தே.க.கொ. ஆவணத்தில் இதை நிரூபிக்க எந்த ஒரு தரவோ குறிப்போ இல்லை. எனவே, அடிப்படையில் இது அவர்கள் அடைய விரும்பும் குறிக்கோள் என்ற முடிவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது பதிப்பாகும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி மத்திய – மாநிலப் பொதுப்பட்டியலில் உள்ளபோதிலும், மாநில அரசுகள், கல்வி அமைப்புகள், முக்கியமான கல்வியாளர்கள், ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்புகளின் பல தீவிரமான ஆட்சேபணைகளை, ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை என்பது அரசின் இணையதளத்தில் உள்ள தே.க.கொ. 2020, ஆவணத்தின் பக்கம், 68-லிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது.
ஜனநாயக விரோத, கூட்டாட்சி மாண்புகளுக்கெதிரான ஆதிக்க மனநிலையோடு, மோடி அரசு, செயல்படுகிறது. பெருந்தொற்றுக்கால பொது முடக்கத்தின்போது விதிக்கப்பட்ட, பொதுமக்கள் போராடுவதற்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, தங்கள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியான, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான அம்சங்களை, தே.க.கொ. 2020 மூலம், தங்குதடையின்றி செயல்படுத்துகிறது.
தே.க.கொ. ஆவணத்திலேயே அதற்கான காலக்கெடு 2030க்குப் பிறகு என குறிப்பிட்டுள்ளதால், பொது விவாதம் இல்லாமல் அதை இறுதிசெய்வதில் காட்டும் அவசரமும், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமுமின்றி அமல்படுத்தத் துடிப்பதும், ஒருதலைப்பட்சமான எதேச்சாதிகாரப் போக்கைத் தெளிவாக நிரூபிக்கிறது. அரசுப் பிரதிநிதிகள் மற்றும் தே.க.கொ. வரைவுக் குழுத் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் ஆகியோருடன், பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்.இன் துணை நிறுவனங்களின் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் கூடி தே.க.கொ. வரைவு உருவாக்கத்தில் ஈடுபட்டனர். இறுதிப்படுத்தப்பட்ட கொள்கை ஆவணத்தில், ஆர்.எஸ்.எஸ்.இன் ‘பண்டைய இந்திய அறிவு’ முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது.
அடிப்படையிலிருந்து விலகல்
கல்வி, நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் திறன்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக எப்பொழுதும் இருந்துவந்துள்ளது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில், கல்விபெறும் உரிமைக்கான போராட்டம், பொதுமக்கள் கல்வி பெறுவதைத் தடுத்த படித்த உயர்சாதியினருக்கு எதிரான போராட்டமாகும். எனவே, இந்தப் போராட்டம் இந்திய சுதந்திரத்தை அடைவதற்கான போராட்டத்துடன் எவ்விதத் தடையுமின்றி ஒன்று கலந்தது.
பரந்துபட்ட பொதுக் கல்விக்கான இந்த அடிப்படை உந்துதல், சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கல்வியை இடம்பெறச் செய்தது. சுதந்திரப் போராட்ட உலைக்களத்தில் பிறந்த அரசியல் சாசனமும் இந்திய சமூகத்தின் வளமான பன்முகத்தன்மையை அங்கீகரித்தது; பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட தன்மை, சாதியப் படிநிலைகள், பாகுபாடுகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண் குழந்தைகள் ஆகியோரின் தாழ்ந்த நிலை ஆகிய அனைத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டது. சுதந்திரத்திற்கு பிறகான கல்விக் கொள்கை, இந்தப் பாகுபாடுகளைக் களைவதை இலக்காகக் கொண்டது. குடிமக்கள் எல்லோரும் ஓர் நிறை என்னும் அடிப்படை மாண்புகளை வலுப்படுத்துவதே அதன் குறிக்கோளாகும்.
‘தே.க.கொ. 2020-இன் தொலைநோக்கு’ ஆவணம், கடந்த கால இந்தியாவின் மேன்மைகளைக் கூற எந்த விவரமும் இல்லாமல், நிகழ்காலத்தை அதனுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறையும் குறிப்பிடாமல், “மாணவரிடையே சிந்தையிலும், அதன் பொருளிலும், அறிவிலும், செய்கையிலும் இந்தியராக இருப்பதன் பெருமையை ஆழமாக வேரூன்றச் செய்ய” மேலும் “பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில் அடிப்படைக் கல்வி நிலையிலிருந்தே இந்தியப் பாரம்பரிய வழிமுறைகளுக்குத் திரும்ப” வலியுறுத்துகிறது. (பத்தி 4.29).
வெட்ககரமான முறையில் பழம்பெருமை பேசும் ஆவணம், எது ‘இந்தியத் தன்மை’ என வரையறுக்கவில்லை. அது எவ்வாறு மாறிவரும் சமூகச் சூழலுடனும், உலகளாவிய பொது அறிவுப்பரப்புடனும் அதனை இணைக்கப் போகிறது என்பதை விவரிக்கவில்லை. அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது குறித்தும் எதையும் குறிப்பிடவில்லை.
மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவிப்பு: கூட்டாட்சி தத்துவத்திற்கு சாவுமணி, தன்னாட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு
புதிய கொள்கை, முறையாகத் தன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே, பல்கலைக்கழக மானியக்குழு அடாவடித்தனமாக, நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களுக்கான இறுதிப் பருவத்தேர்வை நடத்துவதில் நெகிழ்வற்ற தன்மையைத் திணித்தது; புதிய இணையத் தொழில்நுட்பத்தினால் விளைந்த பாகுபாடுகளைத் தவிர்க்க, மாநிலங்களுக்கும், அதன் பல்கலைக்கழகங்களுக்கும், அத்தகைய தேர்வு மதிப்பீட்டிலிருந்து விலக்குக் கோரிய, நம்பகத்தன்மையுடைய மதிப்பீட்டை செய்ய, அனுமதி மறுக்கப்பட்டது. இந்தக் கொள்கை, மொத்த அதிகாரத்தையும் மத்தியில் குவித்து, பால்வாடி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை, கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் மத்திய அரசு முடிவெடுப்பதற்கான அசாதாரணமான அதிகாரங்களை வழங்குகிறது.
அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களை மாநிலப் பட்டியலிலேயே வைத்திருந்தனர். அரசமைப்பின் 42-ஆவது சட்டத் திருத்தம் மற்றும் அவசரநிலைப் பிரகடன காலம் ஆகியவற்றின்போது ‘மாநிலத்திலிருந்து’ இது ‘பொதுப்’ பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றப்பட்ட பின்னரும், பள்ளிக்கல்வி, மாநிலக் கல்வி வாரியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மாநில அரசுகளாலேயே நிர்வகிக்கப்பட்டுவந்தது; தே.க.கொ. இந்தக் கொள்கையை மொத்தமாகக் கைவிடுகிறது.
உயர் கல்வியைப் பொறுத்தவரை, அதில் ஒன்றிய அரசே ஆதிக்கம் செலுத்தும். உயர் கல்விக்கான கட்டுப்பாட்டின் உச்சத்தலைமைப் பொறுப்பு இனி இந்திய உயர்கல்வி ஆணையத்திடம் (இ.உ.க.ஆ.) அளிக்கப்படும். இது, தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக்குழு, தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் போன்ற பிற அமைப்புகள் அனைத்திற்கும் மேலான அதிகாரம் படைத்ததாகும். பிரதம மந்திரியின் தலைமையிலான இ.உ.க.ஆணையத்தில், கல்வியாளர்கள் இருவர் மட்டுமே இருக்க, அரசினால் நியமிக்கப்படும் 12 அதிகாரிகள் இருப்பர். நிதியாதாரம், அங்கீகாரம், தர நிர்ணயம், தேர்வுகள் ஆகியவற்றைக் கவனிக்க, அதன் கீழ் நான்கு இணை அமைப்புகள் செயல்படும்.
ஆராய்ச்சிகளுக்கான ஒரு தேசிய அளவிலான ஆய்வு நிறுவனத்தை, தே.க.கொ. 2020 பரிந்துரைத்துள்ளது. இந்நிறுவனம் உயர் ஆராய்ச்சிகளுக்கான எல்லாவிதமான அதிகாரத்தையும் பெற்றிருக்கும்.
1976 சட்டத் திருத்தத்தினால் பெற்ற ‘மாநிலங்களின் ஒன்றியக் கூட்டமைப்பு’ என்ற ஏற்பாடு முழுவதுமாக நீக்கப்படும் நிலை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, மாநிலங்களுக்கான சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ரத்து, திட்டக் கமிஷன் கலைப்பு ஆகியவற்றினால், முன்னரே ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்ற கூட்டமைப்புத் தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தே.க.கொ. 2020, மத்தியில் அதிகாரக் குவிப்பை, மேலும் அதிகப்படுத்த பரிந்துரை செய்கிறது. சமஸ்கிருதத்திற்கு அதீதமான முன்னுரிமை, இந்தி அல்லாத மற்ற மொழிகளுக்கு எதிராக மேலும் சுமையைக் கூட்டுகிறது. தே.க.கொ. 2020ஐ பொறுத்தவரை ‘தேசிய ஒருமைப்பாடு’ என்பது, மற்ற மாநிலங்களை அழித்தொழிப்பது மற்றும் நம் வளமையான பன்மைத்தன்மையை திட்டவட்டமாக மறுப்பதே.
மத்திய மாநில பிரச்சனைகளைத் தாண்டி, கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுச் சமூகத்தினரின் ஜனநாயக பூர்வமான பங்கேற்பையும் தே.க.கொ. மறுதலிக்கிறது. பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுக்கள், நிர்வாகக் குழு மற்றும் அதன் தலைமை அமைப்புகளுக்கு முறையாக தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை இனி, நியமன முறைக்கு மாற்றப்படும். இது கல்வியில் தனியார்மயத்தை விரைவுபடுத்துவதற்கே வழிவகுக்கும்.
கல்வியை மறுகட்டமைப்பு செய்தல்
இவர்களது ஆட்சியின் கடந்த கால அவலங்களை நோக்க, தே.க.கொ. 2020 மீதான பிரதமரின் அசாதாரண ஆர்வம், நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. தே.க.கொ. 2020, ‘வேலை தேடுபவர்களை’ உருவாக்குவதற்கு மாறாக, ‘வேலை தருபவர்களை’ உத்திரவாதப்படுத்தும் என அவர் கூவியதன் பின்னால், பள்ளி மற்றும் உயர்கல்வி இரண்டையும் பல துண்டுகளாக உடைத்து, மாணவர்களைக் கல்வியை விட்டு வெளியேற்றும் பல வழிகளைத் திறந்துவிடும் முன்மொழிவைப் பார்க்கமுடிகிறது. இவை ‘நெகிழ்வுத் தன்மை’ மற்றும் ‘விருப்பத் தேர்வு’ என்று பறைசாற்றப்படுகின்றன. இதன் அபத்தத்தை, 12 வயதில் ஒரு குழந்தை ‘வேடிக்கையாக வேலை’ என்ற முறையில், ஊதியம் இல்லாமல், ஒரு பயிற்சியாளராகக் கற்றுக் கொள்ளும் என்று கூறி, ஆறாம் வகுப்பு முடித்தவுடனே பள்ளியிலிருந்து வெளியேற முதல் கதவு திறக்கப்படுகிறது என்ற உண்மையிலிருந்து புரிந்து கொள்ள முடியும். இது குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை மீறி 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக்குகிறது.
முதல் வகுப்பில் பள்ளியில் சேரும் மாணவர்களில், பழங்குடியினரில் 6%, பட்டியலினத்தவரில் 8%, முஸ்லிம்களில் 9%, பிற பிற்படுத்தப்பட்டோர் 10% மட்டுமே பனிரெண்டாம் வகுப்புவரை முடித்து, பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளனர். தே.க.கொ. 2020 ஆவணம் முழுவதிலும், ஒரு இடத்தில் கூட ‘இட ஒதுக்கீடு’ என்ற வார்த்தை காணப்படவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை.
அரசு உதவி பெறும் உள்ளடக்கிய கல்வி மீதான நேரடித் தாக்குதல்
ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மற்றும் முதுகலைப் பட்டதாரிகள், அரசுத்துறையில் கடைநிலை ஊழியர் பணியிடங்களுக்கு அலைமோதுகிறார்கள் என்ற வேலையின்மையின் பயங்கரமான நிலைமைகளை வசதியாகப் புறக்கணிக்கும் பிரதமரின் வார்த்தை ஜாலங்கள் ஒருபுறமிருக்க, கல்வியிலிருந்து வெளியேற பல வழிகளை ஏற்படுத்துவதன் மூலம், வேலை கிடைப்பதாகக் கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். எவ்வாறு ‘வேலை தேடுதல்’ மற்றும் ‘வேலை உருவாக்கம்’ இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்டவையோ, அதேபோல், ‘வேலைக்கான தகுதி’ மற்றும் ‘வேலைவாய்ப்பு’ இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கருத்துகள். இதிலுள்ள உண்மை என்னவென்றால், தே.க.கொ. 2020, அரசு நிதியுதவி பெறும் கல்வியின் மீது ஒரு நேரடித் தாக்குதலை நிகழ்த்துகிறது. கல்விக்கான பொதுச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக உயர்த்துவதாக பாசாங்கு செய்தபோதிலும், மத்திய அரசின் பங்கு இந்தச் செலவின சுமையில் எவ்வளவு என்பதை தே.க.கொ. 2020 தெளிவுபடுத்தவில்லை. இதில் முக்கியமான விஷயம், மத்திய அரசு கல்விக்காக வருமானத்தின் மீது 4 சதவீத செஸ் வசூலிக்கிறது. இதுதவிர, 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கான, பள்ளிக்கல்விக்கு முந்தைய அங்கன்வாடிகள் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையினால் அல்லலுறும் அங்கன்வாடிகள், இதனை எவ்வாறு சமாளிக்கும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
தற்போதைய புள்ளி விவரப்படி, மத்திய அரசின் நிதிச் செலவு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்பொழுது, பள்ளிக்கல்விக்கு அரசு நிதி கிடைக்காது. இவர்களது நோக்கம், ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகியவற்றைத் தனியார் கைகளுக்குத் திறந்துவிடுவதே. எடுத்துக்காட்டாக, அரசு தன்னாட்சிக் கல்லூரிகள் திறம்பட இயங்க சாத்தியமற்றதாகக் காரணம் கற்பித்து ஒன்றோடொன்று ‘இணைக்கப்பட’ ஊக்குவிக்கப்படுகிறது.
‘மிதமான ஆனால் கண்டிப்பான’ சீர்திருத்தங்கள் என்ற வாக்குறுதியுடன் தே.க.கொ. 2020, தன்னாட்சிக் கல்லூரிகள் குறைந்தபட்சம் 3,000 மாணவர்களையாவது கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை திணிப்பதிலிருந்தே, எந்த ஒரு உருப்படியான ஆய்வையும் மேற்கொண்டு, அதன் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட உயர்கல்வி குறித்த ஆய்வு, நாடு முழுவதுமுள்ள மொத்தம் 39,000 கல்லூரிகளில் 4.3% கல்லூரிகளில் மட்டுமே தற்பொழுது இந்த அளவு மாணவர்கள் உள்ளனர். நமக்கு இணையான, மற்ற வளரும் பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கல்விக்கான செலவு எல்லா மட்டங்களிலும் மிகவும் குறைவானதாகும்.
தொலைதூர கிராமப்புறங்களில் பரவலாகக் காணப்படும் பள்ளிகளை, நிர்வாகச் சிக்கல் எனக் காரணம்காட்டி, ‘ஒருங்கிணைந்த பள்ளி வளாகங்கள்’ என ஒரே வளாகத்திற்குள் கொண்டுவர, தே.க.கொ. 2020 பரிந்துரைக்கிறது. இந்த முன்மொழிவு, கல்வியைவிட்டு மாணவர்களை வெளியேற்றும் அணுகுமுறைக்கு மற்றொரு உதாரணமாகும். கல்வி உரிமைச் சட்டம், ஒவ்வொரு குடியிருப்பிற்கும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ‘அருகமைப் பள்ளி’ இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு மாறாக, பன்னாட்டு ஆலோசனைக் குழுமங்களின் கருத்துகளை அப்படியே ஒப்பிக்கிறது. இந்தக் குழுமங்கள் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், ஆயிரக்கணக்கான பள்ளிகளை இழுத்துமூட வைத்தன. இந்தப் புதிய கொள்கை, கட்டமைப்புச் செலவுகளை அதிரடியாகக் குறைக்க, கல்வி நிலையங்களை மூடுதல் மற்றும் இணையவழிக் கல்வியை ஊக்குவித்தல் என இடைநிற்றலை நியாயப்படுத்துகிறது. இதற்கு நேர் மாறாகக் கேரளாவில், தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் சேர விரும்புகின்றனர்.
நடைமுறைப்படுத்தலின் அனுபவம்
தே.க.கொ. 2020 நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கடந்த இரண்டு வருடங்களாக, கொள்கையின் முன்னுரிமைகள் எவை என நாம் காணமுடிகிறது. கல்வியை தனியார்மய/வணிகமயமாக்குவதற்கான மூர்க்கமான முயற்சிகளால், அரசின் நிதி உதவி பெறும் கல்வி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது வெட்கக்கேடானது. இணையவழிக்கல்வி அறிமுகமானது, தனியார்மயத்தை நோக்கிய மிகப்பெரிய நகர்வாகும். ஏனெனில், இணையப் பரவல் கார்ப்பரேட்டுகள் வசம் மட்டுமே உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக, கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்து வருவதையும், கல்வி உதவித்தொகைகள் நிறுத்தப்படுவதையும், குறிப்பாக சமூகத்தில் பின் தங்கியுள்ள, பழங்குடி, பட்டியலின, சிறுபான்மையின மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதையும் கண்கூடாகக் காண்கிறோம். இந்த நெருக்கடியின் சுமை, கூடுதலாக, பெண் குழந்தைகள் கல்வி பெறுவதைத் தடுக்கிறது. எல்லா மட்டங்களிலும் கல்வி இடைநிற்றல் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில ஆளுநர்களின் தலையீட்டில், அதிகார வர்க்கத்தின் துணையுடன், தே.க.கொ. மாநிலக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் நேரடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் அப்பட்டமான தலையீடு ஒரு உதாரணமாகும்.
அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள் மற்றும் மரபணுவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்திய வரலாற்றியல், ஒரு முக்கியமான துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், நமது அடையாளங்களை வேண்டுமென்றே இந்துத்துவத்தோடு இணைத்து மறு-வரையறை செய்யும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் தன் சுற்றறிக்கை மூலம், இந்துத்துவக் கருத்துகளை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ கல்விப் புலத்தில் நிலைநிறுத்த முயல்கிறார். ஆனால், இச்செய்கை உயர்கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ்.சும் இந்துத்துவ சக்திகளும் என்னென்ன விஷயங்களைக் கட்டவிழ்த்துவிடத் திட்டமிட்டுள்ளனர் என்று, அவர்களைக் காட்டிக்கொடுக்கிறது.
நமது கடந்தகால வரலாற்றை அறிவுபூர்வமாக ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப்போமானால், கடந்த காலம் குறித்த நேர்மையான ஆய்வை சிதைக்கும் தவறானப் போக்கு, நமது உயர்கல்வித் துறை முழுவதையும் பாதிக்கிறது என்பது கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் தயாரித்துள்ள உள்ளடக்கக் குறிப்பிற்கு, ‘பாரத்: லோக்தந்த்ர கீ ஜனனீ’ (பாரதம்: ஜனநாயகத்தின் தாய்) என ஆடம்பரமாகப் பெயரிடப்பட்டுள்ளது. நமது வரலாற்றையும் நமது அரசியலமைப்பின் அடித்தளங்களையும் புறவயமாக, (நம் உணர்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தரவுகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில்) வாசிப்பதற்கான வாய்ப்புகளைப் பாதுகாக்க, ஒரு வலுவான எதிர்ப்பை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த உள்ளடக்கக் குறிப்பின் முன்னுரை, ‘பழங்காலத்திலிருந்தே’ இந்தியர்கள் உலகெங்கிலும் வாழ்ந்துவந்துள்ளனர், எனவே, ‘பாரத்’ என்ற கருத்து கொண்டாடப்படவேண்டும் என்ற வரலாற்றுக்கு எதிரான கூற்றை முன்வைக்கிறது. இந்தக் கூற்று உண்மைக்கு வெகுதொலைவில் உள்ளது என்பது தற்போது மரபணு ஆய்வுகள், டி.என்.ஏ. தடயங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது; எப்போதும் வெளியிலிருந்து உள்நோக்கி இடம்பெயர்வதற்கான ஒரு நிலமாகவே இந்தியா இருந்துவந்துள்ளதேயன்றி, இங்கிருந்து யாரும் வெளியே இடம்பெயர்ந்ததில்லை என்பது மறுக்கமுடியாமல் நிறுவப்பட்டுள்ளது.
பண்டைய இந்திய கிராம அமைப்புகள் குறித்த ஆங்கிலேய, ஐரோப்பிய காலனித்துவ எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு குழப்பமான சிதைந்த வரலாற்றை இக்குறிப்பு வரைந்து காட்டுகிறது. அவை, இந்தியாவைக் காலனித்துவ அடிமை நாடாக வைத்திருப்பதை நியாயப்படுத்த ஐரோப்பியர்களால் எழுதப்பட்டவை. குறிப்பின் முக்கிய அடிப்படையான கோட்பாடு, “இந்தியாவில், வேத காலத்திலிருந்தே, ஜனப்தா மற்றும் ராஜ்யம் ஆகிய இரண்டு வகையான மாநிலங்கள் இருந்தன. இந்த இந்திய அனுபவங்களின் அடிப்படையில் கிராமப்புற மற்றும் மத்திய அரசியல் என்ற படிநிலைகளில் அதன் சொந்த ஆட்சி வடிவம் உருப்பெற்றது:
(i)மத்திய/கூட்டாட்சி அரசியல் கட்டமைப்புகள், சமூக (கிராம சமூகங்கள்) வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்பட்டன; அதன் விளைவாக,
(ii) கிராம சமூகங்கள் சுயாட்சி மற்றும் தன்னாட்சி பெற்றன மற்றும்
(iii) பஞ்சாயத்துகள் மற்றும் காப்கள் போன்ற படிநிலையுடைய அடுக்கடுக்கான சுயாட்சி அமைப்புகள் உருவாகின.
இது, மத்தியில் மாறிவரும் அரசுகள் / பேரரசுகளால், குறிப்பாக ‘இந்திய இந்து கலாச்சாரத்திற்கு’ விரோதமான படையெடுப்பாளர்களால், பெரிய அளவில் பாதிக்கப்படாமலிருக்க உதவியது.”
இந்திய சுதந்திரத்தின் வைர விழாவின் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயகத்தைக் கொண்டாடுவதற்கு, நம் கடந்தகால இந்திய கிராமம் பற்றிய காலனித்துவக் கட்டுக்கதை, முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது. இந்தக் கட்டுக்கதை, நமது பெருமைமிகு காலனித்துவ எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட மரபை ஒட்டுமொத்தமாக மறுப்பதாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதை கவனமாகத் தவிர்த்த ஆர்.எஸ்.எஸ். ‘அமிர்தகாலம்’ பற்றியும் நமது ஜனநாயக மரபை பண்டைய கடந்த காலத்தில் கண்டறிவதைப் பற்றியும் பேசுவது கேலிக்குரியது.
பார்ப்பனீயத்திற்கும் வர்ணாஸ்ரமத்திற்கும் நற்சான்றிதழ் வழங்குதல்
பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவரின் குறிப்பு, “இந்தியப் பழங்கால ஆட்சி முறையானது முடியாட்சி என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, ஜனநாயக முறையிலானது. தொல்லியல், இலக்கியம், நாணயவியல், கல்வெட்டு, பக்தி, இன்னும் பல வடிவங்களிலும் பாரதத்தின் லோக்தந்திரிக் (ஜனநாயக) பாரம்பரியத்தை வலியுறுத்த, பல சான்றுகள் உள்ளன. என ஆர்.எஸ்.எஸ். பார்வையைத் தூக்கிப் பிடிக்கிறது. இது குறித்து, குறிப்பு விரிவாகப் பேசுகிறது. ஆனால், இதற்கான எந்த உறுதியான சாட்சியங்களும் இல்லை.
எதேச்சதிகாரம் அல்லது பிரபுத்துவம் இல்லாததாலும், உயர்குடிப் பிறப்பு, பணம், பதவி போன்றவற்றின் செல்வாக்கு இல்லாததாலும், பண்டைய இந்தியா தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது; இறையாண்மை என்ற கருத்துதான் “தர்மம்” என்றும், தர்மம் தான் “சட்டம்” என்றும் குறிப்பு விளக்கமளிக்கிறது. இக்குறிப்பு, இறுதியாக, நமது கடந்த காலத்தை விளக்குவதற்கான வரலாற்றியல் ஆதாரமாக, காலனித்துவகால எழுத்துகளைத் தவிர, இந்து மத மற்றும் கலாச்சார அடையாளம் பார்ப்பனீய பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது என நற்சான்று வழங்குகிறது.
வேத மற்றும் ஹரப்பா கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை, மேலும் இவ்விரண்டும் தனித்தனியானப் பிரிவுகள் என்பதை அடையாளம் காண இக்குறிப்புத் தவறிவிட்டது. ஆனால், இவர்களது சாவர்க்கர் பாணி இந்துத்துவ கண்ணோட்டத்திலான வரலாற்றின் கருத்தாக்கமானது, இவ்விரண்டையும் ஒரே கலாச்சாரத்தின் இரு பிரிவுகளாக முன்னிறுத்த முயற்சி செய்கிறது. வரலாறு மற்றும் புராணக்கதைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை மறந்து, – அதற்கு ஒரு புவியியல் ரீதியான கலாச்சார வரையறையும் கொடுக்கப்பட்டுள்ளது. இமயமலையின் தெற்கில், கடலுக்கு வடக்கில் அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு பாரத் என்றும், இந்த நாட்டினர் பாரதீயர்கள் என்றும், மிகத்தொன்மையான காலத்திலிருந்தே இந்த உணர்வு இருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது. இது, சாவர்க்கர், கோல்வால்கர் ஆகியோரது கருத்துகளை வலியுறுத்துவதாகும். ‘ஆரம்பகால ஆதாரங்களின்படி, பாரதவர்ஷ என்பதன் உட்பொருள், ‘எல்லை’, ‘எல்லைக்குட்பட்ட’ அல்லது ‘வெளிநாட்டவர்’ போன்றவற்றைக் குறிக்கவில்லை.
இக்குறிப்பு, சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, திறமையாகப் பேசுகிறது. “லோக்தந்திர பரம்பரையில் வந்த இந்திய மக்கள், வேத காலத்திலிருந்தே சமத்துவ உணர்வு ஊட்டப்பட்டவர்கள்” என்று கூறுகிறது. தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சாதிய அடிப்படையிலான நம் வரலாற்றை ‘ஜனநாயகம் மற்றும் ஆளுமைக்கான மாற்று அடித்தளம்’ என விளம்பரப்படுத்தி உண்மை வரலாற்றைக் கேலி செய்கிறது. தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்கள், இந்த பார்ப்பனிய சமூக அமைப்பு முறையால்தான் நடக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவரின் ஆலோசனையானது, அதிகாரபூர்வ கல்விப்புலத்தில் இந்துத்துவப் புராணக் கட்டுக்கதையைச் சட்டப்பூர்வ வரலாறாக்குகிறது. அரசாங்கம் இந்திய வரலாற்றை வகுப்புவாதமாக மாற்றி, எழுதுவதையும் கற்பிப்பதையும் மேலும் தீவிரமாக தொடர முடிவு செய்துள்ளது என்பதை, என்.சி.இ.ஆர்.டி. வரலாற்றுப் பாடப்புத்தகங்களில், பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் காட்டுகின்றன. இது வரலாற்றை வகுப்புவாத அடிப்படையில் திருத்தி எழுதும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
வகுப்புவாத பாரபட்சத்தின் அடிப்படையில், முகலாயப் பேரரசு பற்றிய முழுப்பகுதிகளையும் நீக்கி, வரலாற்றையே திரித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மைவாத மனநிலையை இது சுட்டிக்காட்டுகிறது. பாடப் புத்தகங்களைத் திருத்துவதான நடப்பு விவகாரங்கள், உண்மையில் பிரிவினை மற்றும் வன்முறையில் ஆர்.எஸ்.எஸ். வகித்த பங்கை மறைக்கும் நோக்கத்தில் உள்ளன. அமைப்பின் தடைக்கு வழிவகுத்த, மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான முக்கியமான வரிகளை அழிக்கும் முயற்சியில் இது தெளிவாகத் தெரிகிறது.
கூட்டாட்சி அரசமைப்பின் மீதான தாக்குதல்
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் குறிப்பு வரலாற்றில் கொண்டுவரச்சொல்லும் மாறுதல், வெட்கக்கேடானது; இதற்கு எந்தவொரு கல்வி/அறிவியல் அடிப்படையும் இல்லை என்பது, இந்த முயற்சியின் அரசியல்/சித்தாந்தச் சார்புத் தன்மையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
உயர்கல்வி நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், அதன் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் மீது கருத்தரங்கங்களை நடத்த, நேரடியாக ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டதானது, ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரங்கள் மீதான ஒரு அப்பட்டமான தாக்குதலும், வரம்பு மீறிய செயலும் ஆகும்.
எதிர்ப்பிற்கான திட்டமிடல்
தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் அதைத் தொடர்ந்த இணையவழிக் கல்வித் திணிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பை உருப்பெறச் செய்வதில் ஆரம்பத் தடைகள் இருந்தபோதிலும், தீங்கு விளைவிக்கும் இந்தக் கேடுகெட்டக் கொள்கையின் உண்மைத் தன்மையை கல்விப்புலத்தில் செயல்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பினால் இப்போது அம்பலப்படுத்த முடிந்தது.
இதை நடைமுறைப்படுத்த, இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொடுந்தாக்குதலே இந்நிலைக்கு முக்கிய காரணம். அரசு நிதியுதவி பெறும் கல்வியை இது அனைத்து மட்டங்களிலும் பெருமளவில் பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிக அளவில் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தீவிரம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கல்லூரி இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகளிலும் கல்வி மறுக்கப்படும் இதேநிலையே காணப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், ஆராய்ச்சி படிப்புகளுக்கான வாய்ப்புகளும் குறைக்கப்பட்டுள்ளன. சட்ட விதிமுறைகளை மீறியும், மாநில அரசுகளோடு கலந்தாலோசிக்காமலும், இளநிலைப் பட்டப் படிப்பிற்கு நான்கு வருடங்கள் என்ற புதிய அறிமுகம் கல்வி இடைநிற்றலை இன்னும் அதிகரிக்கும்.
ஒரு புதிய இந்துத்துவ அடையாளத்தை உருவாக்கும் வெட்கக்கேடான செயல், எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக மதச்சார்பற்ற அடிப்படையை மீட்டெடுப்பதற்கும், ஒரு மாற்றை உருவாக்குவதற்கும், கார்ப்பரேட் – வகுப்புவாத கூட்டுக் களவாணித்தனத்திற்கு எதிராக, கருத்தியல் அடிப்படையில் ஒரு எதிரணியை உருவாக்குவது இன்றியமையாததாகும்.
தமிழில்: மோகனா, சேலம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
