
அக்டோபர் புரட்சி துவக்கிய மானுட விடுதலை பயணம் வென்றே தீரும்
வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
நடப்பு ஆண்டில் நாம் தொடர்ச்சியாக சோசலிச புரட்சிகளின் பயணங்கள் குறித்து பரிசீலித்து வந்துள்ளோம். பல முந்தைய ஆண்டுகளிலும் அவ்வப்பொழுது சோசலிச புரட்சிகளின் சாதனைகளையும் அவை சந்தித்து வந்துள்ள சவால்களையும் குறித்து பல கட்டுரைகள் தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வந்துள்ளன. இனியும் வந்து கொண்டே இருக்கும். இப்பணி மிக முக்கியமானதாகும். முதலாளித்துவ ஊடகங்களும் பிரச்சாரகர்களும் சோசலிச புரட்சிகள் குறித்து இடைவிடாமல் எதிர்ப்பையும் அவதூறு விஷங்களையும் கக்கி வரும் சூழலில் நாம் சோசலிச புரட்சி பயணங்களின் சாதனைகளையும் சவால்களையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நமது புரட்சி பயணத்திற்கும் சோசலிச அனுபவங்கள் மிக முக்கியமான படிப்பினைகள் அளிக்கின்றன. எனவே மார்க்சிஸ்ட் இதழ் தொடர்ந்து சோசலிச பயணங்கள் குறித்த ஆழமான கட்டுரைகளை பிரசுரிக்கும்.
ரஷ்ய புரட்சி
மார்க்சும் எங்கெல்சும் இணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற மகத்தான படைப்பு 1848 இல் பிரசுரமானது. இந்த அற்புதமான சிறு நூல் உலகெங்கும் முற்போக்கு, மனித நேய சக்திகளுக்கு மானுட வரலாற்றை புரிந்து கொள்ளவும் அதன் அடிப்படையில் மானுட விடுதலை என்ற உன்னத இலக்கை அடையவும் வழிகாட்டியாக இன்று வரை திகழ்கிறது. மானுட வரலாற்று வளர்ச்சி பற்றிய அறிவியல்பூர்வமான இப்படைப்பு பொது உடமை சமூகமே மானுட சமூக வளர்ச்சியின் உச்ச கட்டமாக இருக்க முடியும் என்று முழங்கியது. இன்றும் அந்நூலை வாசிக்கும் பொழுது அது சமகால முதலாளித்துவ உலகமயத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது என்பதை நாம் உணர்கிறோம். இது மட்டுமல்ல, மானுடம் தழைக்கவும் விடுதலை பெறவும் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்தே ஆகவேண்டும் என்றும் அதனை செய்ய வல்ல சக்தி நவீன தொழிலாளி வர்க்கமாகத்தான் இருக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நம்மை உணர வைக்கிறது.
எனினும் மார்க்ஸ் காலத்திலும் அதற்குப் பிறகும் உலகெங்கும் முதலாளித்துவ சக்திகள் வலுவடைந்தன. ஐரோப்பாவில் பல நாடுகளில் நிலப்ரபுக்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்டு முதலாளி வர்க்க ஆட்சி அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இவ்வாறு அமைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே உலகின் வளங்களையும் பன்னாட்டு வர்த்தகத்தையும் சந்தைகளையும் கைப்பற்ற கடும் போட்டிகள் நடந்தன. 1914 இல் முதல் உலகப்போர் வெடித்தது. ஏகாதிபத்திய நாடுகளிடையே முரண்பாடுகள் முற்றின. இப்போரில் ரஷ்யா பலவீனம் அடைந்தது. ரஷ்யாவின் பெரும் நிலப்ரபுக்களையும் பெரு முதலாளிகளின் நலனையும் பாதுகாத்து வந்த ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ரஷ்ய தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் ஒன்று திரட்டி போராடிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி 1917 இல் பெரும் மக்கள் எழுச்சி மூலம் ஜார் மன்னன் ஆட்சியையும் அதன்பின் வந்த முதலாளித்துவ ஆட்சியையும் வீழ்த்தி, சோசலிச அரசை அமைத்தது. முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும், தங்கள் உழைப்பால் அனைத்து செல்வங்களையும் உருவாக்கும் உழைப்பாளி மக்களால் ஆட்சியையும் நடத்த முடியும் என்று உலகிற்கே பிரகடனம் செய்தது ரஷ்ய சோசலிச புரட்சி. நவீன உலகில் உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்திய ஆகப்பெரிய புரட்சியாக 1917 ரஷ்ய புரட்சி அமைந்தது. மகாகவி பாரதி “ஆகாவென்று எழுந்தது பார் யுக புரட்சி” என்று இதனை கொண்டாடினார். உலகம் தழுவிய அமைப்பாக வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவத்திற்கு இப்புரட்சி சாவு மணி போல் அமைந்தது.
உலகின் ஜனநாயக காவலன்
முதலாளி வர்க்கம் இல்லாமல் பொருளாதாரமே சாத்தியமில்லை என்று கூவிய மூலதன கூச்சலை புறந்தள்ளி சோசலிச ரஷ்யா அடுத்த 74 ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தால் சிறப்பாக ஆட்சி நடத்த முடியும் என்று காட்டியுள்ளது. அது மட்டுமல்ல, உற்பத்தி கருவிகளின் சமூக உடமை அடிப்படையில் அரசும் மக்களும் இணைந்து பல்வேறு மட்டங்களில் திட்டமிட்டு மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை சாதிக்க முடியும் என்று ரஷ்யாவில் துவங்கி பின்னர் சோவியத் ஒன்றியமாக மலர்ந்த அக்டோபர் புரட்சி மானுடத்திற்கு நிரூபித்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் அனைத்து தடைக் கற்களையும் சூழ்ச்சிகளையும் அது கட்டவிழ்த்து விட்ட ஆயுதப்போட்டிகளையும் யுத்தங்களையும் எதிர்கொண்டு தகர்த்து சோவியத் சோசலிசம் தனது பிரம்மாண்டமான பொருளாதார-அறிவியல்-தொழில்நுட்ப சாதனைகளை செய்துள்ளது. மிக முக்கியமாக, இரண்டாம் உலகப்போரில் தனது தற்காப்பிற்காக பங்கேற்க நேர்ந்த பொழுது, இரண்டு கோடி சோவியத் மக்களின் உயிர் தியாகத்தின் வலியையும் தாங்கிக்கொண்டு பாசிசத்தை வீழ்த்தி உலகெங்கும் ஜனநாயக உரிமைகள் தழைக்க பெரும் பங்கு ஆற்றியுள்ளது சோவியத் சோசலிசம்.
சோசலிச அமைப்பாக தொடர்ந்தவரை ஏகாதிபத்தியங்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் வளரும் நாடுகளுக்கும் தேச விடுதலை இயக்கங்களுக்கும் உலகெங்குமுள்ள முற்போக்கு சக்திகளுக்கும் உற்ற நண்பனாகவும் பாதுகாக்கும் அரணாகவும் திகழ்ந்தது சோசலிச சோவியத் ஒன்றியம்.
இங்கு இயல்பாக எழும் ஒரு கேள்வி என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு அரசை, நாட்டை ஏகாதிபத்திய உலகால் எப்படி தகர்க்க முடிந்தது, அதன் உறுப்பு நாடுகளை எப்படி ஏகாதிபத்தியம் சிதறடித்தது என்பதாகும். இதுபற்றி இக்கட்டுரையில் விரிவாக பரிசீலிக்க இயலாது. 1992 இல் சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 14ஆவது அகில இந்திய மாநாட்டில் விவாதித்து இறுதிப்படுத்தப்பட்ட “சில தத்துவார்த்தப் பிரச்சினைகள் குறித்து” என்ற ஆவணம் இதுபற்றி விரிவாக பரிசீலிக்கிறது. பின்னர் 2௦12 இல் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 2௦ ஆவது அகில இந்திய மாநாட்டில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சினைகள் பற்றிய ஆவணமும் சில முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறது.
இக்கட்டுரையில் இதனை முழுமையாக விவாதிக்க இயலாவிட்டலும், ஒரு அம்சத்தை குறிப்பிடலாம். ஏகாதிபத்தியத்தின் உண்மை தன்மையை புரிந்துகொள்வதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலவீனம் இருந்தது. பொதுவாக கூறுவதாக இருந்தால், சமாதான சக வாழ்வு, சமாதான தன்மையிலான பொருளாதாரப்போட்டி, அமைதியான முறையில் முதலாளித்துவ அமைப்பில் இருந்து சோசலிச அமைப்புக்கு சென்றிட முடியும் என்ற தத்துவம் ஆகிய கோட்பாடுகள் பற்றி ஆழமான விமர்சன கண்ணோட்டத்தை முன்பின் முரண் இன்றி கடைப்பிடிப்பதில் பலவீனம் இருந்தது என்றும் மதிப்பிட வாய்ப்பு உண்டு. ஏகாதிபத்தியம் எவ்வளவு கொடியது என்பதை அனுபவம் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறதல்லவா? உலகம் தழுவிய அளவில் ஏகாதிபத்தியத்தின் வலுவை குறைத்து மதிப்பிடுவது ஆபத்தானது என்ற படிப்பினை அனைத்து முற்போக்கு இயக்கங்களாலும் உள்வாங்கப்படவேண்டிய ஒன்றாகும். சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் இப்பாடத்தை மிக ஆழமாக உலகெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு தந்துள்ளது. குறிப்பாக, சமகால சோசலிச நாடுகளான மக்கள் சீனம், வியத்நாம், வட கொரியா, லாவோஸ், க்யூபா உள்ளிட்ட நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்படிப்பினைகளை உள்வாங்கியுள்ளன.
சோசலிச புரட்சிகளின் உலகளாவிய தாக்கம்
சோசலிச புரட்சிகளின் உலகளாவிய தாக்கம் இன்றும் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரும் சாதனைகள் யாராலும் மறுக்க இயலாதவை. சோவியத் சோசலிசத்தின் பொருளாதார சாதனைகள் பற்றி அறிய தமிழ் மார்சிஸ்ட் நவம்பர் 2௦16 இதழில் வெளியான மகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள் என்ற கட்டுரை உதவும். சோவியத் ஒன்றியத்தின் மேனாள் உறுப்பு நாடுகளில் முற்போக்கு இயக்கங்கள் மீண்டும் கிளர்ந்து எழும் வாய்ப்புகள் எதிர்காலத்தில் நிச்சயம் வலுப்பெறும்.
1917இல் நிகழ்ந்த அக்டோபர் (நவம்பர்) புரட்சி முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது மட்டுமல்ல. அச்சமயம் நிலவிய உலகளாவிய காலனி ஆதிக்க அமைப்பையும் பெரிதும் பலவீனப்படுத்தியது. முதலாளிகள் அற்ற, உழைக்கும் மக்களே ஆட்சி நடத்துகின்ற ஒரு உலகம் சாத்தியம் என்று அப்புரட்சி உலக மக்களுக்கு உணர்த்தியது. அக்டோபர் புரட்சியை அழித்தொழிக்க உடனடியாக ஏகாதிபத்திய நாடுகள் கூட்டாக மேற்கொண்ட படையெடுப்புகளையும், அவர்கள் ஆதரவுடன் சோசலிச அரசை அகற்ற உள்நாட்டு எதிரிவர்க்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட உள்நாட்டு யுத்தத்தையும் சோசலிச செம்படை முறியடித்தது. இதனுடன் புரட்சிக்குப்பின் பத்து ஆண்டுகள் சோசலிச புரட்சியை நிலைநாட்டிக்கொள்ள எடுத்தது. இக்காலத்தில் தான் சோசலிச ரஷ்யாவுடன் பல அண்டை நாடுகள் இணைந்து 192௦களில் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவானது. 1928இல் சோசலிச திட்டமிடுதல் என்ற வரலாறு காணாத முயற்சியை சோவியத் ஒன்றியம் துவக்கி, அதில் அடுத்த பத்தாண்டுகளில் பெரும் வெற்றி அடைந்து உலகின் இரண்டாம் பெரும் தொழில்மய நாடு என்ற சாதனையை நிகழ்த்தியது.
இவையெல்லாம் உலகெங்கும் ஏகாதிபத்திய அமைப்பால் கடுமையாக சுரண்டப்பட்டு வந்த காலனி நாடுகளின் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியா உள்ளிட்ட பல்வேறு காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுப்பெற்று தேச விடுதலை இயக்கங்கள் மலர்ந்தன.[1] சோவியத் புரட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் பொருளாதார சாதனைகளும் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்கொண்டு வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை தேச விடுதலை இயக்கங்களில் வலுப்படுத்தியது. 1930களில் ஏகாதிபத்திய நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருந்தன. அதே காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் முன்வைத்த தடைகளையும் தகர்த்து சோசலிச சோவியத் ஒன்றியம் பாய்ச்சல் வேகத்தில் பொருளாதார முன்னேற்றம் கண்டது தேச விடுதலை இயக்கங்களில் சோசலிச அமைப்பின் செல்வாக்கை உயர்த்தியது. பல காலனி நாடுகளில் சோசலிச இயக்கங்கள் உருவாகி வலுப்பெற்றன.
1941 ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்தின் மீது பாசிச ஜெர்மனி படை எடுத்ததும் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்களில் 1939 இல் வெடித்த இரண்டாம் உலகப்போரின் தன்மை மாறியது. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல் பாசிச எதிர்ப்பு போரில் இரண்டு கோடி மக்களை சோவியத் ஒன்றியம் பறி கொடுத்து பாசிசத்தை வீழ்த்தியது தேச விடுதலை இயக்கங்களின் மத்தியில் சோசலிசத்தின் செல்வாக்கை உயர்த்தியது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் உருவான உலகில் இது பிரதிபலித்தது. சோவியத் ஒன்றியமும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசப்பாதையில் பயணித்ததும் 1949இல் சோசலிச மக்கள் சீனம் மலர்ந்ததும் உலகில் சோசலிசத்தின் செல்வாக்கை உயர்த்தின. அடுத்த 3௦ ஆண்டுகளுக்கு உலகில் வலுவான சோசலிச முகாம் இருந்தது ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய தென் அமெரிக்க பகுதிகளில் தேச விடுதலை இயக்கங்களின் வெற்றிகளுக்கு உதவியது. ஏகாதிபத்தியத்தின் உலகம் தழுவிய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பரவலான எதிர்ப்பை உருவாக்க உதவியது. இத்தகைய வரலாற்று பின்புலத்தில் தான் 1980களின் இறுதியிலும் 1990களின் துவக்கத்திலும் ஏற்பட்ட சோசலிச முகாம் வீழ்ச்சியின் விளைவுகளையும் கடந்த 35 ஆண்டுகளாக முதலாளித்துவ உலகமயத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
சமகால முதலாளித்துவ நெருக்கடி
1990களின் துவக்கத்தில் சோசலிச உலகம் பின்னடைவை சந்தித்தது. அமெரிக்க வல்லரசின் தலைமையில் ஒரு துருவ உலகம் அமைந்தது. சோசலிச நாடுகளும் வளரும் நாடுகளும் மேலைநாட்டு தொழிலாளி வர்க்கமும் இதன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். 1980களிலேயே முதலாளித்துவ உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் நிலவிய பிரத்யேக சூழலில் மேலை முதலாளித்துவ நாடுகள் முன்பிருந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு முப்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி கண்டன. இவ்வளர்ச்சி மேலை நாட்டு பெரும் கம்பனிகளின் கைகளில் லாபங்களை குவித்தது. மறுபக்கம் வளரும் நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி மேலைநாடுகளின் மீதான சார்புநிலையை வளர்த்தது. உலகவங்கி, பன்னாட்டு நிதியம், காட் போன்ற அமைப்புகள் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் வளரும் நாடுகள் மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்ள முனைந்தது. 1995 ஆம் ஆண்டு காட் அமைப்பு உலகவர்த்தக அமைப்பாக மாற்றப்பட்டு, ஏகாதிபத்தியத்தின் பிடி இறுகியது. 1991இல் சோவியத் ஒன்றியம் சிதறியதை கொண்டாடிய முதலாளித்துவ அறிவுஜீவிகள் அடுத்த பத்து ஆண்டுகளில் உலக நாடுகளின் மீதான ஏகாதிபத்திய ஆதிக்கம் வலுப்பெற்றதையும் கொண்டாடினர். ஆனால் உலக முதலாளித்துவம் நிதிமூலதன ஆதிக்கத்தில் அமலாக்கிவந்த நவீன தாராளமய கொள்கைகள் நிதிமூலதன ஊக வணிகத்தை மையமாக கொண்டிருந்ததால் சிக்கன பொருளாதார கொள்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. இக்கொள்கைகள் கிராக்கியை கட்டுப்படுத்தி மந்தநிலைக்கு முதலாளித்துவ உலகை உலகை இட்டுச்சென்றன. ஊக வணிக நிதி மூலதன செயல்பாடு 2௦௦7-08 இல் உலகம் தழுவிய நிதி மற்றும் தொழில் நெருக்கடிக்கு இட்டு சென்றது. 17 ஆண்டுகள் கழிந்தும் இன்று வரை உலக முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்து மீளவில்லை. இந்த 17 ஆண்டுகளில் முதலாளித்துவ உலகம் முழுவதும் வலதுசாரி அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது. வேலையின்மை பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே முரண்கள் அதிகரித்துள்ளன. மிக முக்கியமாக, அமெரிக்க வல்லரசின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. போர் மேகங்கள் உலகை சூழ்ந்துள்ளன. ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளை இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருகிறது. ஒருதுருவ அமெரிக்க வல்லரசின் ஆட்சிக்கெதிராக பலதுருவ உலகை நோக்கி ஆங்காங்கு முனைவுகள் நிகழ்ந்து வருகின்றன. சோசலிச நாடுகளுக்கும் ஏகாதிபத்திய முகாமிற்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
சோசலிச மீட்சி
மறுபுறம் கடந்த 3௦ஆண்டுகளில் சோசலிச நாடுகள் ஏகாதிபத்தியத்தின் தொடர் தாக்குதல்களை வலுவாக எதிர்கொண்டு வருகின்றன. சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்தை அழித்தொழிப்பதில் ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றது. நேடோ விரிவாக்கம் ரஷ்யாவின் எல்லை அருகில் வந்துவிட்டது. இனி அமெரிக்காவின் தலைமையில் காலனி ஆதிக்க காலத்தில் இருந்ததுபோல் மேலை ஏகாதிபத்தியம் உலகை ஆளும் என்ற கனவுகள் முன்னுக்கு வந்தன. ஆனால் சோசலிச நாடுகளை ஏகாதிபத்தியம் பணிய வைக்க முடியவில்லை. அமெரிக்க வல்லரசின் அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான தாக்குதல்களை கியூபா இன்றும் வெற்றிகரமாக எதிர்த்து நிற்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வியத்நாம் வியத்தகு வளர்ச்சியை சாதித்துள்ளது. மக்கள் சீனம் அமெரிக்க அரசுக்கு மாபெரும் சவாலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியிலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மக்கள் சீனம் முதலாளித்துவ உலகை விஞ்சி வருகிறது. சோசலிசத்தை அழித்துவிடலாம் என்ற ஏகாதிபத்திய கனவு கனவாகவே தொடர்கிறது. எனினும் நாம் இக்கட்டுரையில் முன்பே சுட்டிக்காட்டியதை நினைவு படுத்திக் கொள்வோம். ஏகாதிபத்தியத்தை குறைத்து மதிப்பிடுவது சோசலிசத்திற்கு பெரும் ஆபத்து. இன்றைய சோசலிச நாடுகள் தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து இதனை நன்றாகவே கற்றுள்ளன.
ஏகாதிபத்தியம் கனவு காணலாம். ஆனால் காலம் நம் கையில் தான் என்ற நம்பிக்கையுடன் மானுட விடுதலைக்கான பயணத்தை உற்சாகமாக தொடர்வோம்.
[1] தோழர் லெனின் ஏகாதிபத்திய நாடுகளின் தோற்றத்தையும் எழுச்சியையும் விரிவாக்கத்தையும் ஆழமாக ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்ற 1916 ஆம் ஆண்டு வெளியான தனது நூலில் விளக்கியுள்ளார்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply