இந்தியாவின் வேளாண் பிரச்சினை குறித்து
(தோழர் சுந்தரய்யா நினைவாக பிரகாஷ் காரத் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்)
தோழர் சுந்தரய்யா வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கருதினார். இந்த ஆய்வுகள் மார்க்சீய அணுகுமுறையில் செய்யப்படுவது அவசியம். 1974ஆம் ஆண்டு ஆந்திராவின் தென் கடலோர பகுதியை சார்ந்த இரு கிராமங்களை ஆய்வு செய்து நில உடமையின் தன்மை, நிலப்பிரபுக்களிடம் நிலம் குவிந்திருந்ததன் விவரம், ஏழை – நடுத்தர – பணக்கார விவசாயிகள் என்று விவசாயிகள் வர்க்க ரீதியாக வேறுபட்டிருந்தது ஆகியவற்றை அவர் பகுத்தாய்ந்தார். வேளாண் தொழிலாளிகள் பற்றியும் அவர்கள் எந்த அளவிற்கு சுரண்டப்படுகிறார்கள் என்பது பற்றியும் அவர் சில முடிவுகளுக்கு வந்தார். சுந்தரய்யாவின் ஆய்வை அகில இந்திய விவசாய சங்கம் 1976ஆம் ஆண்டு ‘நிலப் பிரச்சினை’ என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகமாக வெளிக்கொணர்ந்தது.
கிராமங்களில் வர்க்கங்கள்
சுந்தரய்யாவின் ஆய்வின்படி கிராமங்களில் மூன்று பிரதான வர்க்கங்கள் உள்ளன: நிலப்பிரபுக்கள், விவசாய தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள்.
நிலப்பிரபுக்களிடம் ஊரின் பெரும் பகுதி நிலம், அதுவும் செழிப்பான நிலம் உள்ளது. நிலப்பிரபுக்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி உடல் உழைப்பு செலுத்துவதில்லை.அவர்களது நிலங்களை குத்தகை விவசாயிகள் மூலமோ அல்லது கூலி தொழிலாளிகளை வைத்தோ அவர்கள் சாகுபடி செய்கின்றனர். பொதுவாக, நிலப்பிரபுக்கள் கிராமத்தில் நீண்ட காலமாக ஏகபோக நில உடமையை அனுபவித்து வருபவர்கள். கிராம சமூகத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிலம் தவிர, பிறவழிகளில் வருமானம் பெறும் வாய்ப்புகளும் இவர்களிடம்தான் அதிகமாக உள்ளது.
விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் பெரும்பகுதி நேரத்தை கூலி உழைப்பில் செலுத்தி அதன் மூலமே தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை பெறுகின்றனர். பொதுவாக அவர்களிடம் உற்பத்தி கருவிகள் இருக்காது. அவர்களில் ஒரு சிலர் சிறு நிலத்துண்டுகளை சாகுபடி செய்ய வாய்ப்பு உண்டு.
விவசாயிகளை பொருத்தவரையில் அவர்கள் ஒரே நிலையில் உள்ள ஒற்றை வர்க்கமல்ல. பணக்கார, நடுத்தர மற்றும் ஏழை விவசாயிகள் என்ற படிநிலைகளில் உள்ளனர். விவசாய குடும்பங்கள் அனைத்திலும் உடல் உழைப்பு செலுத்தும் நபர்கள் இருப்பார்கள். இவ்வாறு விவசாயிகளை வகைப்படுத்திட, அவர்களது உடமையாக உள்ள உற்பத்தி கருவிகளின் அளவு, உழைப்பு சுரண்டலில் அவர்கள் பாத்திரம் (அதாவது, அவர்களது நிலத்தில் குடும்ப உழைப்பின் பங்கிற்கும் கூலி உழைப்பின் பங்கிற்குமான உறவு), செலவுகள் போக விவசாயத்தில் கிடைக்கும் உபரி ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாக கொள்ளலாம்.
இம்மூன்று பகுதியினரைத் தவிர, பயிர் சாகுபடியில் நேரடியாக ஈடுபடாத வர்க்கங்களும் உண்டு. அவர்களையும் வர்க்க அடிப்படையில் வகைப்படுத்தவேண்டும்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள வகைமுறை தொடர்பாக இரண்டு விஷயங்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, வகைபடுத்துதலுக்கான நெறிமுறைகள் பகுதிக்குப் பகுதி வேறுபடும். ஒரு கிராமத்தில் அல்லது பகுதியில் நிலவும் வேளாண் மற்றும் இயற்கைசார் சுற்று சூழல், சமூக பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவை வேறுபடும். இவற்றை கணக்கில் கொண்டு துல்லியமான நெறிமுறைகளை பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, இந்த நெறிமுறைகள் ஒரு வரலாற்று பின்புலத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டும். முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்தின் அம்சங்களையும் முதலாளித்துவ அம்சங்களையும் வெவ்வேறு அளவுகளிலும் வகைகளிலும் நிலப்பிரபுக்கள் வரலாற்றில் கொண்டிருந்தனர்.
இதேபோல், ‘பணக்கார விவசாயி்’ என்ற வகையின் உள்ளடக்கமும் பல்வேறு சமூக பொருளாதார அம்சங்களை கொண்டதாகும். முந்தைய காலத்தில் பணக்கார விவசாயிகளில் பலர், பெரும் பண்ணைகளால் நிலவாடகை மூலம் சுரண்டப்பட்டதால் நிலப்பிரபுத்துவத்துடன் ஆழமான பகைமை கொண்டிருந்தனர். இன்றைய பணக்கார விவசாயிகளில் பலர் நவீன முதலாளித்துவ விவசாயி/நிலப்பிரபுவாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இதேபோல் விவசாயத் தொழிலாளியும் பலவகை உறவுகளை பிரதிபலிக்கலாம். வரலாறு-புவியியல் சார்ந்த வேறுபாடுகளை கணக்கில் கொள்ளாமல் முன்வைக்கப்படும் விவசாய வர்க்க பகுப்பாய்வை தோழர் சுந்தரையா ஏற்கவில்லை.
விவசாய உறவுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்
தோழர் சுந்தரய்யா ஆய்வு மேற்கொண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற வேளாண் உறவுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாளித்துவம் கிராமப்புறங்களிலும் விவசாயத்திலும் கணிசமாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்திற்கு முந்தையகால அம்சங்கள் ஆங்காங்கு நீடிக்கின்றன என்றபோதிலும், பழைய நிலப்பிரபுத்துவ உறவுகளும் அவற்றின் அடிப்படையிலான பொருளாதார சார்புகளும் அனேகமாக இப்பொழுது இல்லை. நிகழ்ந்துள்ள மாற்றங்களை காண்போம்.
- நிலப்பிரபுத்துவத்தில் மாற்றங்கள்:
இதில் முக்கிய அம்சம் பணக்கார முதலாளித்துவ விவசாயிகளும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களும் இரண்டற கலந்துவிட்டனர் என்பதாகும். இந்த வர்க்கத்தின் வலிமையும் பொருளாதார ஆதிக்கமும் நில உடமையை அடிப்படையாக கொண்டவை. எனினும், விவசாய உற்பத்தியைத் தாண்டியும் இவர்கள் உபரிகள் பெறுகின்றனர். இதில் கொள்முதல், வர்த்தகம், சந்தை விற்பனை, விவசாயம் அல்லா உற்பத்தி, நிலம் வாங்கல்-விற்றல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளும் அடக்கம். இவர்களிடம் குவியும் உபரிகள் கிராமத்தை தாண்டி அருகாமை நகரங்களிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் வருகின்றன.
இந்த வர்க்கத்தின் பொருளாதாரம், அரசியல், நிலவும் வர்க்க அமைப்பை பாதுகாப்பதிலும் கிராமப்புற பகுதிகளை முழுமையாக பின்தங்கியதாக வைத்திருப்பதிலும் இதன் பங்கு ஆகியவை பற்றி ஆழமான ஆய்வும் புரிதலும் தேவைப்படுகிறது. சமகால நிலைமையை மதிப்பிடுகையில் மூன்று முக்கிய அம்சங்கள் உணரப்படவேண்டும். சமகாலத்தில் கிராமப்புற ஆதிக்க வர்க்கங்கள் பெரும் உபரியில், முதலீடுகள் செய்யப்பட்டு பெறப்படும் உபரி மதிப்பு முந்தைய காலத்தைவிட அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. கிராமப்புறங்களில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் பெருகிவருவதால் இது தவிர்க்க முடியாதது. எனினும், 1967ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி நிறைவேற்றிய வேளாண் அரங்கில் நமது கடமைகள் என்ற ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் இன்றும் பொருந்தும். கிராமங்களில் நிலக்குவியல் இன்றும், ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பும், வலுவாக உள்ளது. 1967 ஆவணம் மேல்மட்ட 5% குடும்பங்களிடம் மொத்த விவசாய நிலபரப்பில் 37% உள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. பெங்களூரில் உள்ள வேளாண் ஆய்வுகளுக்கான நிறுவனம் அண்மை ஆண்டுகளில் நடத்தியுள்ள கிராமப்புற ஆய்வுகள் பல கிராமங்களில் இதைவிடவும் தீவிரமான நிலக்குவியல் உள்ளதை தெரிவிக்கின்றன. கிராமப்புற நிலைமையின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், கிராமத்தில் பழைய ஆளும் குடும்பங்கள் வீழ்ச்சி அடைந்து, புதிய குடும்பங்கள் ஆதிக்கம் பெற்றாலும், நிலக்குவியல் தொடர்கிறது என்பதாகும். மூன்றாவது அம்சம் என்னவெனில், நிலப்பிரபுக்களும் பெரிய முதலாளித்துவ விவசாயிகளும் நில வளங்களை மட்டும் கையில் வைத்திருக்கவில்லை. அவர்களது செல்வத்தின் ஆதாரம் நிலம் மட்டுமல்ல. அவர்களில் பலரும் பணம் கொழிக்கும் தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். கடன் கொடுத்தல், தானிய அரவை ஆலைகள் நடத்துதல், பால் வள தொழில், தானியம், காய்கனிகள், வனப் பொருட்கள் உள்ளிட்ட வேளாண் சரக்குகளின் வணிகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சினிமா அரங்குகள், ரியல் எஸ்டேட், பெட்ரோல் பங்குகள், லாட்ஜுகள், போக்குவரத்து தொழில், விவசாய இயந்திரங்களை விற்பதும் வாடகைக்கு கொடுப்பதும், பங்கு சந்தை உள்ளிட்ட நிதிச்சந்தை நடவடிக்கைகள் என்று எண்ணற்ற வகைகளில் ஊரக ஆளும் வர்க்கத்தினர் உபரிகளை குவிக்கின்றனர். நிலப்பிரபுக்களும் பெரிய முதலாளித்துவ விவசாயிகளும் ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் ஆகிய மட்டங்களில் கிராமப்புற பஞ்சாயத்து அரசு அமைப்புகளில் நேரடியாக பங்கு கொள்ள விழைகின்றனர். அதேபோல் சட்டபேரவை, பாராளுமன்றம், அதிகாரவர்க்க அமைப்பு, போலீஸ், வழக்கறிஞர் துறை உள்ளிட்ட அமைப்புகளில் இடம்பெற முயற்சிக்கின்றனர். பொதுவாக, இவர்கள்தான் உயர்கல்வியில், நவீன முறைசார் பணிகளில் முதலிலும் அதிக அளவிலும் இடம் பெறுகின்றனர். எனினும், அவர்களது பிரதான வருமானம் வேளாண்மை மூலம் இல்லை என்றாலும், அவர்கள் கடன்பட்டு நஷ்டக் கணக்கு காட்டினாலும், நிலப்பிரபுக்கள் மற்றும் விவசாயப் பெருமுதலாளிகளின் கிராமப்புற ஆதிக்கத்திற்கு அடித்தளமாக இருப்பது நில உடமைதான். சமகாலப்படுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி திட்டம் இந்த உண்மையை பின்வருமாறு சுட்டுகிறது:
“பெரும்பாலான கிராமப் பகுதிகளில் நிலப்பிரபுக்கள் – பணக்கார விவசாயிகள் – ஒப்பந்ததாரர்கள் -பெருவணிகர்கள் ஆகிய வர்க்கங்களின் வலிமைமிக்க இணைப்பு உருவாகியுள்ளது. இவர்கள்தான் கிராமப்புற செல்வந்தர்கள். இடதுசாரிகள் வலுவாக உள்ள இடங்கள் நீங்கலாக பிற இடங்களில் பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சொசைட்டிகள், ஊரக வங்கிகள், கடன்வழங்கும் அமைப்புகள் அனைத்திலும் இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கிராமப்புற தலைவர்களாக இருப்பதும் இவர்கள்தான். இவர்கள் இவ்வாறு பெறும் உபரிகளை கடன் வழங்கல், ஊக வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் வேளாண்சார் தொழில்களில் முதலீடு செய்கின்றனர். ஊரக ஆதிக்கவர்க்கம் சாதி தொடர்புகளை பயன்படுத்தி ஆதரவு திரட்டி, வன்முறையில் இறங்கி, ஏழைகளை மிரட்டி பணிய வைக்கின்றனர்.”
- வேளாண் தொழிலாளிகள்
இன்றைய காலத்தில் விவசாயத்தில் மட்டும் உழைப்பவர்கள் என்று தனித்து, ஊரக விவசாய மற்றும் இதர தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து பார்ப்பது கடினம். சொல்லப்போனால், தங்கள் கிராமத்து விவசாயத்துடனான இணைப்பு அறுந்துபோகாமல், அதே நேரத்தில் நகர, சிறுநகர, கிராம பகுதிகளில் சென்று வேலை செய்யும் மிக அதிகமான எண்ணிக்கை கொண்ட ஊரக புலம்பெயர் தொழிலாளிகளிடம் இருந்தும் விவசாயத் தொழிலாளர்களை பிரித்துப்பார்க்க இயலாது. ( குறிப்பு: கிராமப்புற தொழிலாளிகளில் கிட்டத்தட்ட அனைவரும் விவசாய பணிகளில் பகுதி நேரம் செலவிடுவார்கள். எனினும் இவர்கள் அனைவரும் தங்களது ஜீவனத்திற்கு பிற வேலைகளிலும் ஈடுபட்டாக வேண்டும்.)
- விவசாயிகள்
சமகால விவசாயி முந்தையகால விவசாயி போல அல்ல. விவசாயிகள் முற்றிலும் முதலாளித்துவத்தால் சூழப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் எந்த பண்ணையிலும் குடும்ப உழைப்பு பிரதானமாக இல்லை. இது பணக்கார விவசாயி மட்டுமின்றி, நடுத்தர மற்றும் ஏழை விவசாயிக ளுக்கும் பொருந்தும். பொதுவாக, பணக்கார விவசாயி தன்மை மாறியுள்ளது. நிலப்பிரபுவின் கடனாளியாக, குத்தகையை சுமக்கும் பணக்கார விவசாயி, ஏழை விவசாயி-விவசாய தொழிலாளி தலைமையிலான இயக்கத்தில் இணைந்து செயல்படும் வாய்ப்பே இப்பொழுது இல்லை. அதாவது, 1970களில் பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்கள் / பெரிய முதலாளித்துவ விவசாயிகள் பகுதியினருக்கும் இடையில் இருந்த முரண்பாடு கூர்மை இழந்துள்ளது.
விவசாயிகள் பகுதியில் மிக வேகமானதும் முக்கியமானதுமான மாற்றம் என்பது கிராமங்களில் கூலி உழைப்பாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதுதான். இத்தகைய கூலி உழைப்புக்கான சந்தை விரிவாக்கத்தின் இரண்டு அம்சங்கள் நடைமுறைக்கு முக்கியமானவை. ஒன்று, ஏழை விவசாயிகள் உள்ளிட்டு, அனைத்து சாகுபடியாளர்களும் (குறிப்பாக பாசன பயிர் சாகுபடியாளர்கள்) கூலி உழைப்பாளிகளை பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, நடுத்தர, ஏழை விவசாயிகள் அனைவருமே தங்கள் நிலத்தில் வேலை இல்லாத பொழுது ஊருக்குள்ளும் வெளியிடங்களிலும் உழைப்பு சந்தையில் கூலி தொழிலாளிகளாக பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் தாராளமய, உலகமய கொள்கைகள் அமலாக்கப்பட்டுவரும் காலத்திற்கும் அதற்கு முந்தைய காலத்திற்கும் சில தொடர்ச்சிகள் இருந்த போதிலும் கிராமப்பகுதியில் அரசின் தலையீடு மற்றும் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம், அதாவது கிராமப்பகுதியில் அரசின் வர்க்க கொள்கைகள், புதிய வடிவங்களும் தன்மையும் பெற்றுள்ளன. கிராமப்புற ஏழைகள், குறிப்பாக உடல் உழைப்பு தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் இந்திய முதலாளித்துவத்தின் ஆகப்பெரிய வேலை தேடும் படையாக உள்ளனர். இந்தியாவின் வேளாண் பிரச்சினைக்கான தீர்வு முற்போக்காக, ஜனநாயக தன்மையில் அமைய வேண்டுமென்றால், கிராமப்புற சமூக மாற்றத்திற்கான முன்னணி படையாக இந்த கிராமப்புற ஏழைகள் செயல்படவேண்டும். கிராமப்புற நெருக்கடி தீவிரம் குறையாமல் தொடர்கிறது. நாம் பல்வேறு அம்சங்கள் கொண்ட நெருக்கடி மக்களுக்கு ஏற்படுத்தும் துயரங்களை நீக்கிட போராட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டும், பல்வேறு நட்பு கூட்டுகளை அமைக்க வேண்டும். இன்றைய நெருக்கடியில்:
- கிராமங்களில் 90% மக்களுக்கு வருமானம் மிகக் குறைவாக உள்ளது
- உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தேக்கத்தில் உள்ளது
- இருப்பிடம், கல்வி மற்றும் ஆரோக்கிய வசதிகள் பெரும் போதாமையில் உள்ளன
- சாதி, பாலின பாகுபாடுகள் மற்றும் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூக பிரிவுகளின் பன்முக ஏழ்மை அம்சங்கள் தொடர்கின்றன
- அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதில் தோல்வி, முற்போக்கு கலாச்சார வளர்ச்சிக்கான சாதனங்கள் இல்லாமை நிலவுகின்றன
கிராமப்புறத்தில் முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ பெருவிவசாயிகள் ஆதிக்கம் தொடரும்வரை இப்பிரச்சினைகள் தீராது; வேளாண் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது; கிராமப்புற துன்பங்கள் நீடிக்கும்.
வேளாண் துறையில் கார்ப்பரேட் கம்பனிகள்
இந்தியாவில் வேளாண் துறையில் கார்ப்பரேட்டுகள் தலையீடு என்பது பிரதானமாக இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் என்ற வகையில் உரம், விதை, பயிர் பாதுகாப்பு, வேளாண் இயந்திரங்கள், ஆகியவற்றிலும், வேளாண் பொருட்களின் விற்பனை, மதிப்புக்கூட்டு நடவடிக்கைகள், வேளாண்சார் தொழில்கள் நிறுவுதல் என்றும் உள்ளது. பல சமூகம்சார் மற்றும் இதர காரணங்களால் கார்ப்பரேட் கம்பெனிகள் பெரும் அளவில் வேளாண் நிலங்களை கையகப்படுத்தவில்லை. இடுபொருட்கள் மற்றும் அறுவடைக்குப் பின்பு நிகழும் பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றில்தான் அவர்கள் புகுந்துள்ளனர்.
நிலப்பிரபு-முதலாளித்துவ பெருவிவசாயிகள் வர்க்கத்தின் வருமானம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் ஒற்றை அல்லது பிரதான மூலமாக நிலம் மட்டுமே இல்லை என்பது நமது இயக்கத்திற்கு – குறிப்பாக நிலப்பிரபுக்களின் நிலங்களை கைப்பற்றி விநியோகம் செய்வது என்ற போராட்டத்திற்கு – முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இப்போதுள்ள கிராமப்புற வர்க்க எதிரியை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற பிரச்சினையில் நமக்கு புதிய சிந்தனை தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி அமைத்த வேளாண் ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு கிராம அளவில் சுரண்டல் என்பதன் மூலமாக மட்டுமின்றி, கிராமத்திலும் சுற்றுவட்டாரங்களிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் விரிவான பல்வகை பொருளாதார நடவடிக்கைகள் மீது தங்களது ஒட்டுமொத்தப் பிடியின் மூலமாக தனது மேலாதிக்கத்தை நிலப்பிரபு-முதலாளித்துவ பெருவிவசாயி வர்க்கம் பெற்றுள்ள நிலையில், நிலம் என்ற ஒரு பிரச்சினையை மட்டும் முன்வைத்து, இந்த வர்க்கத்துடன் நாம் போராட முடியாது. நிலப் பிரச்சினையின் மையமான பாத்திரம், முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற கோரிக்கையின் முக்கியத்துவம் என்பவற்றை நாம் அங்கீகரிக்கிறோம். எனினும், அதேவேளையில், உச்சவரம்பிற்கு அதிகமான நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமித்து மறுவிநியோகம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையைக் கூட இன்று நாட்டின் பல பகுதிகளில் வென்றெடுப்பது உடனடியாக சாத்தியப்பாடு இல்லாமல் உள்ளது. இந்த நிலைமைக்கு பல அக, புற காரணங்கள் உள்ளன.
சாதி, பழங்குடி மற்றும் பாலினம் தொடர்பாக
இந்தியாவில் சாதி, பழங்குடி மற்றும் பாலினம் உள்ளிட்ட சமூக படிநிலைகள் அடிப்படையில் நிலவும் ஏற்ற தாழ்வுகளும் ஒதுக்கல்களும் விவசாய பிரச்சினையின் உள்ளார்ந்த அம்சங்கள். மேலும், பல தலைமுறைகளாக இவற்றின் பாதிப்புகளுக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கல்வி, ஆரோக்கியம், இருப்பிடவசதி, சமூக அந்தஸ்து மற்றும் பணி நிலைமை எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலை உள்ளது. கட்சியும் வெகுஜன அமைப்புகளும் சமூக பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தவேண்டும். எப்பொழுதும் எங்கும் சமூக பாகுபாடு நிகழ்ந்தாலும் உடனடியாக அணுக வேண்டிய அமைப்புகளாக மக்களால் இவை பார்க்கப்படவேண்டும். சமூக பாகுபாடு, வாய்ப்பு வசதி மறுப்புக்கெதிரான சமரசமற்ற போராட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும். அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் கட்டுவதற்கான அவசியத்தை நாம் காணத் தவறக்கூடாது. உழைக்கும் மக்களின் பகுதியாக உள்ள இடைநிலை மற்றும் இதர சாதியினரே சமூக ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்துபவர்களாக இருக்கும் யதார்த்தத்தையும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இது நமது பணியை பெரும் சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. வரலாற்றின் மத்தியகால சமூக பாகுபாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒருநாட்டில் சமூக ஒடுக்குமுறையையும் எதிர்த்துக்கொண்டே மக்கள் ஒற்றுமையை தகர்க்க முயலும் அடையாள அரசியலுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே தெளிவான மாற்றை தர இயலும்.
புதிய போராட்ட வடிவங்களை நோக்கி
நிலம் மற்றும் வர்க்கப்பிரச்சினைகளின் சமகால முக்கியத்துவம் தொடர்கிறது. எனினும் இவற்றை எதிர்கொள்ள புதிய போராட்ட வடிவங்களையும் அதற்கான கருவிகளையும் உருவாக்க வேண்டியுள்ளது. (இன்றைய சூழலில்) மக்களை திரட்டி, நிலைத்த நீண்ட கால போராட்டம் நடத்தி நிலங்களை கைப்பற்றி ஆக்கிரமிப்பது கடினம். நிலப்பிரபுக்கள்-முதலாளித்துவ பெரு விவசாயிகள் வர்க்கத்திற்கு எதிராக நீண்ட வேளாண் கூலி உயர்வுக்கான போராட்டங்களை நடத்துவதும் எளிதல்ல. கட்டுமானம், செங்கல் சூளைகள் போன்ற விவசாயம் சாராத கிராமப்புற தொழில்களில் கூலி போராட்டம் நடத்துவது கூடுதல் சாத்தியமாக தெரிகிறது. மாறியுள்ள நிலமையில் கிராமப்பகுதியில் வர்க்கப்போராட்டத்தை எப்படி வளர்த்தெடுப்பது? கிராமப்புற செல்வந்தர்களை எதிர்த்து போராட ஏழை விவசாயிகள், (வேளாண் மற்றும் வேளாண் அல்லாத) ஊரக பகுதி தொழிலாளிகள், நடுத்தர விவசாயிகள் கொண்ட வர்க்க கூட்டணி ஒன்றை கட்டவேண்டும். பெருமுதலாளிகள் தலைமையிலான அரசையும் அதன் பிரதிநிதிகளான ஊரக செல்வந்தர்களையும் எதிர்த்து போராட என்னென்ன முழக்கங்கள், போராட்ட வடிவங்கள் தேவை என்பதை அவர்களது நேரடி கள அனுபவத்தில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்கள் அமைப்புகளின் தலைவர்கள் கூட்டு முயற்சியில் கண்டறிய வேண்டும்.
ஒரு ஆலோசனையை நான் முன்வைக்கிறேன். அனைத்து கிராமப்புற தொழிலாளிகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய போராடும் அமைப்பு உருவாக்கப்படவேண்டும். கிராமப்புற தொழிலாளிகளின் சங்கம் அல்லது கூட்டமைப்பு உருவாக்குவது அவசியம். இத்தகைய சங்கம் கிராமப்பகுதிகளில் உள்ள அனைத்துவகை தொழிலாளர்களையும் ஈர்த்து பல பிரச்சினைகளை கையில் எடுக்கும். இதில் கூலி, வேலை நாட்கள் உள்ளிட்ட வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கை தரம் பற்றிய பிரச்சினைகள், சாதி, பாலின பாகுபாடுகள் மற்றும் சமூக விலக்கல் மற்றும் ஒடுக்குமுறை பிரச்சினைகள் இடம் பெறும். இப்போராட்டங்கள் அரசுடனும் அதன் கிராமப்புற பிரதிநிதிகளான கிராமப்புற செல்வந்தர்களுடனும் மோதலுக்கு இட்டுச் செல்லும்.
தொழிலாளி-விவசாயி கூட்டணி
வேளாண் பிரச்சினை குறித்த தனது அனைத்து கட்டுரைகளிலும் தோழர் சுந்தரய்யா தொழிலாளி-விவசாயி கூட்டணியை உருவாக்குவதன் அவசியம் பற்றி வலியுறுத்தியுள்ளார். மக்கள் ஜனநாயக முன்னணியின் அடித்தளம் இக்கூட்டணிதான். விவசாயிகள் மற்றும் ஊரக தொழிலாளிகள் முன்வைக்கும் வர்க்க கோரிக்கைகளுக்கு தொழிலாளி வர்க்கம் நேரடியாக ஆதரவு தரும் என்ற புரிதல் இருந்தது. கடந்த பல பத்தாண்டுகளாக தொழிலாளி-விவசாயி கூட்டணி என்பது பெயரளவிற்குத்தான் இருந்தது. ஒரு சில தொழிலாளி-விவசாயி கூட்டு போராட்டங்கள்தான் நடந்தன. கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை மாறியுள்ளது. ஊரக பகுதியில் முதலாளித்துவம் பரவியுள்ளதும், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிய இரு பகுதியினரையும் நவதாராளமய கொள்கைகள் பாதித்துள்ளதும், தொழிலாளிகளும் விவசாயிகளும் ஒன்றுபட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கூடுதலாக சாத்தியமாக்கியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் ஆதரவும் நேரடி பங்கேற்பும் நிகழ்ந்தது. விவசாய சங்கம், விதொச, தொழிற்சங்க அரங்கம் ஆகியவற்றிற்கு இடையில் பொது கோரிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு வளர்ந்துள்ளது. மோடி அரசின் தனியார்மய தாக்குதல் திரட்டப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இயக்கங்களின் நலன்கள் ஒன்றிணைய உதவியுள்ளது. மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்ததிற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இத்தகைய கூட்டு போராட்டங்கள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்.
ஜனநாயக புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவது
1964இல் அங்கீகரிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் திட்டம் மற்றும் 1967இல் நிறைவேற்றப்பட்ட விவசாய அரங்கில் கடமைகள் என்ற ஆவணம் இரண்டுமே கிராமப்புற நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ உறவுகளை அழித்தொழிப்பது என்ற கோணத்தில்தான் ஜனநாயக புரட்சியின் நிறைவேற்றத்தை கண்டன. ஒருசில அம்சங்களில் முதலாளித்துவ சுரண்டல் வடிவங்களையும் அவை எதிர்த்தன. அன்றைய அழுத்தம் உற்பத்தி சக்திகளின் மீதான தடைகளை தகர்ப்பது என்பதன் மீது இருந்தது. இப்பொழுது நம் கவனத்தின் குவிமையம் மாறவேண்டும். இன்றைய இந்திய அரசு நிலப்பிரபுத்துவத்தை ஓழிக்க இயலாதது. கிராமப்புற செல்வந்தர்கள் ஆதிக்கத்தையும் அழிக்காது. கிராமப்புறங்களில் நிலவும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு தராது. நிலப்பிரபுத்துவத்தை ஓழிக்காமல், நிலமறுவிநியோகம் செய்யாமல் இந்தியாவின் கிராமங்களில் பெண்சமத்துவம் சாத்தியம் இல்லை. இப்பொழுதுள்ள அரசு அதிகாரம் நீடிக்கும்வரை சாதி அமைப்பும் சாதி ஒடுக்குமுறையும் தொடரும். இன்றைய அமைப்பு நீடித்தால் கிராமப்பகுதிகளில் நிலவும் கூலி விகிதங்களுக்கும் உற்பத்தி திறனுக்கும் சம்பந்தமே இருக்காது. ஊரக கூலி அளவிற்கும் நகர்ப்புற அமைப்புசார் துறைகளில் நிலவும் கூலிக்கும் சம்பந்தம் இருக்காது. குழந்தை உழைப்பு நீடிக்கும். கந்துவட்டியும் கடனும் தொழிலாளிகளை பிணையில் தள்ளும். பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட ஒடுக்குமுறைகள் பலவடிவங்களில் நீடிக்கும். கிராம வாழ்க்கையில் பொதுவான ஜனநாயக தன்மை இருக்காது. அறிவியல் சிந்தனை இருக்காது.
நிறைவாக
தோழர் சுந்தரய்யா நமக்கு விட்டு சென்றிருப்பது:
- வேளாண் உறவுகளை திட்டவட்டமான ஆய்வின் மூலம் அறிவது,
- தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கியது,
- விவசாய தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி அமைப்பாக்கியது
- புரட்சிகர இயக்கத்திற்கான வேளாண் திட்டம் பற்றிய அவரது முன்மொழிவு
இவை அனைத்தையும் பொக்கிஷமென கருதி உள்வாங்குவோம். அவரது ஆய்வு முறைகள் மற்றும் நடைமுறைகளில் இருந்து கற்றுக்கொள்வோம்.
தமிழில்: பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
