பொன்மலை தியாகிகள் தியாகத்தின் அரசியல் முக்கியத்துவம்
– ஆர். இளங்கோவன்
கலகம்
எங்கு நோக்கினும் கலகம்
அதன் ஒவ்வொரு நாளின் கதையையும்
என்
கவிதைகளில் வடிக்கிறேன்
– கவிஞர் சுகந்த பட்டாச்சார்யா.
1946
இரண்டாம் உலகயுத்தம் முடிந்தவுடன் 1945 இறுதியிலும் 1946லும் இந்தியா முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும், போர்வீரர்களும் கிளர்ந்தெழுந்ததனால் பல போராட்டங்கள் வெடித்தன. இதைப் பற்றித்தான் கவிஞர் இப்படி கவி வடித்தார். 1.12.1945 அன்று கிளான் ஆச்சின்லாக் என்ற பிரிட்டிஷ் தளபதி தனது ரகசிய குறிப்பில் கூறுகிறார் :-
“அடுத்த வசந்தத்தில் ஒரு வெகுஜன புரட்சி வெடிக்கும். அது 1942 ஆகஸ்டின் வெள்ளையனே வெளியேறு கலகத்தையும் தாண்டி நிற்கும்” அவர் எதிர்பார்த்தபடி நடந்தது.
1945 இறுதியில் வோர்லியில் 2.5 லட்சம் ஆதிவாசிகளின் எழுச்சியும் துப்பாக்கிச்சூடும் நடந்தது. மும்பை காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் “வோர்லிகளுடன் எந்த சமரசமும் கிடையாது” என்று அந்த எழுச்சியிலிருந்து விலகி முரண்பட்டார்.
1946 பிப்ரவரி 18 முதல் 22 வரை இந்துஸ்தான், தல்வார், சமக், கேசில் பாரக் என்ற கப்பல் படையின் கப்பல்களின் மாலுமிகள் ஆங்கிலேய தளபதிகளுக்கு கீழ்ப்படிய மறுத்து கலகம் நடைபெற்றது. அவர்கள் இங்கிலாந்து கொடியை இறக்கிவிட்டு காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கொடிகளையும் ஒற்றுமைக்குச் சின்னமாக ஏற்றிவிட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தெருக்களில் கிளர்ச்சி செய்தனர். மும்பையில் மட்டும் 35 லட்சம் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் ஏஐடியுசி அறைகூவலை ஏற்று தெருவில் இறங்கினர். ஆங்கிலேய அரசு டாங்கிகள் உட்பட இறக்கி, துப்பாக்கிச் சூடும் நடத்தி 500 பேருக்கு மேல் மரணம்.
“இன்று ஆங்கிலேய தளபதிகளுக்கு கீழ்ப்படிய மறுப்பவர்கள் நாளைக்கு விடுதலை அடைந்தபின் இந்திய அரசுக்கும் கீழ்ப்படிய மறுப்பார்கள். கீழ்ப்படிய மறுத்தது தவறு” என்று காங்கிரஸ் கட்சியின் காந்தி அறிவித்து அனைவரையும் வேலைக்கு திரும்பக் கூறினார்.
ராணுவத்திலும், விமானப்படையிலும் கூட ஜபல்பூர், பூனா உள்ளிட்ட பல இடங்களிலும் கிளர்ச்சி வெடித்தது. ராணுவத் தளபதி மேஜர் ஜெய்பால் சிங் ராணுவ கிளர்ச்சிக்கு சதி செய்கிறார் என்று கைது செய்யப்பட்டார். அவர் தப்பித்து தலைமறைவானார். ஆனால், பல வீரர்கள் மூன்றுபடையிலும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
கேரளத்தில் புன்னப்புரா வயலார் விவசாயிகள் கிளர்ச்சியும் அவர்களுக்கு ஆதரவாக பொது வேலைநிறுத்தமும் 1946 நடுவில் நடைபெற்றது.
கல்கத்தாவில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஜூலை 1946இல் 20 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
செப்டம்பர் 1946இல் 60 லட்சம் விவசாயிகள் மேற்கு வங்கத்தில் நடத்திய தேபாகா கிளர்ச்சி நடந்தது.
ஆந்திராவில் ஜூலை 1946இல் தொட்டி குமரய்யா துப்பாக்கிச் சூட்டில் தியாகி ஆனதுடன் தொடங்கிய தெலுங்கானா கிளர்ச்சி விரிவடைந்தது.
இப்படி நாடுமுழுவதும் தொழிலாளர், விவசாயி, மாணவர், இளைஞர், போர் வீரர்களின் ஒற்றுமையும் எழுச்சியும் வெடித்த ஆண்டுதான் 1946. இது 1942இல் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு என்ற கிளர்ச்சியை போல அல்ல. அது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், 1946 கிளர்ச்சியின் தலைமை உழைக்கும் வர்க்கத்தின் கைக்கு மாறுவதை சுட்டிக்காட்டியது.
இந்த “ஆபத்தை” உணர்ந்த பிரிட்டிஷ் பிரதமர் அட்லி, இந்திய மாலுமிகளின் கலகம் தொடங்கிய பிப்ரவரி 18க்கு மறுநாள் 19ஆம் தேதி பகிரங்கமாக அறிவித்தார்.
“விரைவில் இந்தியாவுக்கு ஒரு அமைச்சரவைக் குழு புறப்படும். அது ஆட்சி அதிகாரத்தை முழுமையாக இந்தியர்களுக்கு மாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தும்”
அதன் தொடர்ச்சியாக 1946 செப்டம்பர் 2ஆம் தேதி நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. காங்கிரஸ் தலைமைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ஒற்றுமை என்ற மக்கள் விருப்பம் நிறைவேறவில்லை.
மக்கள் போராட்டங்களை தங்கள் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களாக கருதி ஒடுக்கும் நடவடிக்கைகளும் மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளும் துவங்கப்பட்டன.
தென்னிந்தியாவில் தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் 1946 ஜூலை 23 முதல் பொன்மலையிலும் பின் ஆகஸ்ட் 24 முதல் தென்னிந்திய ரெயில்வே முழுவதும் 23.9.1946 வரை நடைபெற்ற வேலைநிறுத்தமும் செப்டம்பர் 5இல் பொன்மலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடும் ஐந்து தியாகிகள் மரணமும் இங்கிலாந்து அரசுக்கு எதிராகவும், ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியதாகவும் அமைந்த கலகங்களின் வரிசையில் வந்த ஒன்றுதான். பொன்மலை தியாகிகளின் தியாகம் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலியதுடன் காங்கிரஸ் கட்சியின் தொழிலாள விரோத முகத்தை மக்கள் உணரவும் வகை செய்தது என்றால் மிகை ஆகாது.
இரு போக்குகள்
இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஏ.ஐ.ஆர்.எஃப்.) 1924இல் தொடங்கிய காலத்தில் இந்திய ரெயில்வே முழுவதும் அந்தந்த ரெயில்வேக்களில் பல வேலைநிறுத்தங்கள் நடைபெற்று வந்தன. பல நீண்ட வேலை நிறுத்தங்களாக கூட அவை இருந்தன. பலர் வேலைநீக்கம் செய்யப் பட்டனர். பலபேர் சிறையில் தள்ளப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இறையாகினர். பல போராட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தையும் தொழிலாளர் கோரிக்கைகளையும் இணைத்ததாக இருந்தன. களத்தலைவர்கள் சுதந்திர போராட்ட தலைவர்களாகவும் இருந்தனர்.
அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் உருவானது. இந்த பாரம்பரியத்தைக் கைப்பிடித்து உள்ளூர் போராட்டங்களை தேசம் தழுவிய அளவில் ஒன்றிணைத்து, போராட்ட குவிமையமாக அரசுக்கு ஒரு சவாலாக மாற வழி வகுக்கும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர். ஏ.ஐ.ஆர்.எஃப்.தலைமை இந்த கடமையில் இருந்து தவறிவிட்டது. எனவே, ரெயில்வே தொழிற்சங்க இயக்கத்தில் இரு போக்குகள் தோன்றின.
ஒன்று, தொழிலாளர் கோரிக்கைகளையும் சுதந்திர போராட்டத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். வேலைநிறுத்தம் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும். இந்த போக்கு கம்யூனிஸ்டுகள், முற்போக்குவாதிகள் தலைமை தாங்கிய சங்கங்களில் விளங்கியது.
இரண்டாவது போக்குக்கு ஏ.ஐ.ஆர்.எஃப். தலைமை தாங்கியது. அதாவது, ரெயில்வே தொழிலாளர்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவேண்டும். வேலைநிறுத்தம் கூடாது. பேச்சுவார்த்தை, சமரசம், நடுவர் ஏற்பாடு போன்ற முறைகளையே கையாளவேண்டும். ஏ.ஐ.ஆர்.எப். தலைவர் சந்திரிகா பிரசாத் 1927இல் ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் பகிரங்கமாக இப்படி பேசினார்.
“பிரச்சனையை தீர்க்க ஏ.ஐ.ஆர்.எஃப். வேலைநிறுத்த ஆயுதத்தை பயன்படுத்தாது. எங்கள் கொள்கை பேச்சுவார்த்தை, சமரசப் பேச்சு, நடுவர் தீர்ப்பு என்பதுதான்”
ஏ.ஐ.டி.யு.சி தலைவராக இருந்த தோழர் பி.டி.ரணதிவே “இதுதான் ரெயில்வே தொழிலாளர் களின் துயரத்திற்கெல்லாம் காரணம்” என்றார்.
சந்திரிகா பிரசாத்துக்குப் பின் தலைவராக வந்தவர் ஜம்னாதாஸ் மேத்தா. இவர் பிரிட்டிஷ் அரசின் பர்மா பிரதிநிதியாக 1944இல் நியமிக்கப் பட்டபோது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர்,
“நான் சங்கத்தில் அரசியல்வாதிகளை ஓரங்கட்டி வைத்துவிட்டேன்” என்று சொன்னார். சுதந்திர போராட்டத்தில் ரெயில்வே தொழிலாளர்களை இணைக்கும் வகையில் ஏ.ஐ.ஆர்.எஃப். எதையும் செய்யவில்லை. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது கூட ஏ.ஐ.ஆர்.எஃப். ஒரு அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடவில்லை. காங்கிரசும் கோரவில்லை. வேறு சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கோரிய போதும் அவர்கள் கேட்கவில்லை.
இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது. தாராளமயம், தனியார்மயம், உலகமயத்துக்கு எதிராக நாடுதழுவிய 22 பொதுவேலைநிறுத்தங்களில் ஏ.ஐ.ஆர்.எஃப். ஒன்றில் கூட இணையாதது, அது எப்படி அரசியலிலிருந்தும் பொது நீரோட்டத்தில் இருந்தும் தொழிலாளர்களை பிரித்து வைத்திருக்கிறது என்பதை விளக்கும்.
1928இல் அனைத்து ரெயில்வேக்களிலும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிரித்து விடப்பட்டபோது ஆங்காங்கே வேலைநிறுத்தங்கள் வெடித்தன. நீண்டகாலம் நீடித்தன. ஆனால், ஏ.ஐ.ஆர்.எஃப். ஒரு அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு முடிவெடுத்தும் அறைகூவல் விட தவறிவிட்டது. 52 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போதும் வேலைநிறுத்த அறைகூவல் இல்லை.
1947இல் ஐ.என்.டி.யு.சி உருவானபின் ரெயில்வேயிலும் காங்கிரஸ் சங்கம் என்.எஃப்.ஐ.ஆர். உருவாகி தொழிலாளி ஒற்றுமை உடைந்தது. 1949இல் புரட்சிகர போராட்ட பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்த சங்கங்கள் ஏ.ஐ.ஆர்.எஃப்.லிருந்து விலகின. அதுமுதல் ஏ.ஐ.ஆர்.எஃப். சீர்திருத்தவாதிகளின் அசைக்க முடியாத கூடாரமாக மாறி விட்டது. சீர்திருத்தவாதிகள் இருவரும் மாறிமாறி அரசின் கொள்கைகளை ஆதரிப்பவராயினர்.
1960, 1968, 1974 வேலைநிறுத்தங்கள் சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் ஏற்பட்டன. இன்று வரையிலும் அகில இந்திய வேலைநிறுத்தம், அரசியல் இரண்டிலிருந்தும் தொழிலாளர்களை பிரித்து வைப்பதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
பொன்மலை போராட்டம்
1918, ஜூன் 1இல் நாகப்பட்டணத்தில் உருவான தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் மத்திய சங்கம் சுதந்திர போராட்டத்தையும் தொழிலாளர் கோரிக்கைக்கான போராட்டத்தையும் இணைத்த பாரம்பரியத்தை சேர்ந்தது. ஏ.ஐ.ஆர்.எஃப். அகில இந்திய அறைகூவல் விடாவிட்டாலும் 1928இல் 3,200 பேரை பிரித்துவிடும் திட்டத்துக்கு எதிராக 10 நாள் முழு வேலைநிறுத்தம் நடை பெற்றது. வேலைநிறுத்தம் ஒடுக்கப்பட்டு சங்கம் சிதறுண்டது.
மீண்டும் 1937இல் பொன்மலையில் ஜீவா, பி. ராமமூர்த்தியின் முயற்சியால் ஆங்காங்கே இருந்த சங்க கிளைகளை ஒருங்கிணைத்து தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஐ.ஆர்.எல்.யு.) உருவாக்கப்பட்டு 1938இல் அங்கீகாரமும் பெற்றது.
பொன்மலை மையமாக செயல்பட்டது. தியாகி பரமசிவம் சுதந்திர போராட்ட உணர்வை தட்டிக் கிளப்பினார். அத்துடன் தொழிலாளர் கோரிக்கைகளையும் இணைத்து பல வெற்றிகளை சங்கம் ஈட்டியது. தலைவர்கள் வேலைநீக்கம், சிறை, சிறையில் தியாகி பரமசிவம் மறைவு போன்ற அடக்குமுறைகளுக்கிடையில் பல கோரிக்கைகளை வென்றது. பல பிரிவுகளுக்கு 8 மணி நேர வேலை, விசாரணை இல்லாது வேலைநீக்கம் செய்யும் மார்க் சிஸ்டம் முறை ஒழிப்பு போன்றவை முக்கிய சாதனைகளாகும்.
இரண்டாவது உலக யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்பதால், அதில் இந்தியா சேரக்கூடாது என்றும், அந்த யுத்தத்திற்கு தளவாடங்கள் பொன்மலையில் செய்யக்கூடாது என்றும், போராட்டங்கள் நடைபெற்றன. பிரிட்டிஷ் அரசு சங்கத்தை தேச விரோதியாக பாவித்தது. பரமசிவம் கைதும் சிறையில் மரணமும் அப்போதுதான் நடந்தது. அவருக்குப்பின் எம். கல்யாணசுந்தரமும் கே. அனந்தநம்பியாரும் தலைமை தாங்கினர். 1946 பிப்ரவரியில் கப்பல் மாலுமிகளுக்கு ஆதரவாக பொன்மலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
1943 வங்க பஞ்சத்தின்போது மக்களுக்கு பெரும் உதவியை சங்கம் செய்தது. ஆங்கிலேய எதிர்ப்பு மக்கள் மத்தியில் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில், தொழிலாளர் கோரிக்கையிலும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை எட்டியது. இது தொழிலாளர்களை சங்கத்தின் பால் பெருவாரியாக ஈர்த்தது.
1945இல் 9வது மாநாடு இதன் வெளிப்பாடுதான். பொன்மலை சங்கத் திடலில், மாபெரும் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட சங்கத்தின் கொடி இந்த ஒற்றுமையையும் பிரம்மாண்டத்தையும் அடையாளப்படுத்தியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு எழுத்தாளர் கல்கி ரெயில் வண்டிகள் போடும் கடக் கடக் சத்தம் “அனந்தநம்பியார், கல்யாண சுந்தரம்” என்று சொல்வதுபோல இருப்பதாக எழுதினார்.
ரெயில்வே தொழிலாளர்கள் ஆங்காங்கே விவசாய சங்கத்தையும் தொழிற்சங்கத்தையும் திரட்டி தலைமை தாங்கினர். சங்கம் மக்கள் சக்தியாக விளங்கியது. அதன் மாநாடுகள் இதை பிரதிபலித்தன. 1946இல் ரெயில்வே தொழிலாளர் சட்டமன்ற தொகுதியில் கே. அனந்தநம்பியார் காங்கிரஸ் பிரதிநிதியை தோற்கடித்து வெற்றிபெற்றார். பின்னாளில் ரெயில்வே அமைச்சர் சந்தானத்தையே நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோற்கடித்ததும் நடந்தது.
இந்த சூழலில் சங்கம் ஏ.ஐ.ஆர்.எஃப். உடன் இணைந்திருந்தது. ஏ.ஐ.ஆர்.எஃப். ல் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் நிர்ப்பந்தத்தால் அஞ்சல் ஊழியர் திட்டமிட்டிருந்த ஊதிய உயர்வு கோரிய ஜூலை 1946 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ரெயில்வே ஊழியர்களும் இணைந்திட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக வேலைநிறுத்த வாக்கெடுப்பு ஜூன் மாதம் நடைபெற்றது. மத்திய அரசு முதல் ஊதியக்குழு அமைக்க ஏற்றவுடன் ஏ.ஐ.ஆர்.எஃப். வேலைநிறுத்தத்தை பின் வாங்கிக் கொண்டது.
ஆனால், நாடுமுழுவதும் இருந்த கிளர்ச்சி உணர்வுடன் இணைந்து அஞ்சலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடர முடிவு செய்தனர். ஊதியக்குழு வேண்டாம்; நேரடி பேச்சுவார்த்தையில் உயர்வு என்பது அவர்கள் கோரிக்கை. அவர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் கல்கத்தா உட்பட பல லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஏ.ஐ.ஆர்.எஃப். சம்பளக் கமிஷனை (நடுவர் மூலம் சம்பளம் தீர்மானிப்பது) ஏற்றாலும் ரெயில்வே தொழிலாளர்கள் மத்தியில் போராடும் உணர்வு கிளர்ந்து கிடந்தது.
தென்னிந்திய ரெயில்வேயில் வேலைநிறுத்தம் பின் வாங்கப்பட்டாலும் வெள்ளைக்கார நிர்வாகம் வேலைநிறுத்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களை, பொன்மலையிலும், விழுப்புரம், செங்கல்பட்டிலும் தலைவர்களை இடைநீக்கம் செய்தது.
விசாரணையின்றி நீக்கம் கூடாது என்று வெற்றிபெற்ற தொழிலாளர் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 1-4-1944 முதல் தென்னிந்திய ரயில்வே தனியாரிலிருந்து அரசுடைமை ஆகியது. ஆனால், இன்னமும் வெள்ளைக்கார நிர்வாகம் போகவில்லை. அந்த வெள்ளைக்கார நிர்வாகம் இதை செய்வதா? தொழிலாளர்கள் மத்தியில் வெள்ளைக்கார நிர்வாகம் வெளியேறுவதற்கான அறிகுறிகள் தெரிந்த நிலையில் ஆத்திரம் பொங்கியது. பேச்சுவார்த்தை பயனளிக்காதபோது, ஜூலை 23 முதல் பொன்மலை பணிமனையிலும் வேலைநிறுத்தம் தொடங்கியது. ஒரு மாதம் ஆகியும் பிரச்சனை தீராததால் ஆகஸ்ட் 24 முதல் தென்னிந்திய ரெயில்வே முழுவதும் வேலைநிறுத்தம் திட்டமிட்டு தொடங்கப்பட்டது.
வேலைக்கு எடு, போதுமான பஞ்சப்படி, மலிவு தானிய சலுகைகளை தொடருதல், ஊதிய அமைப்பை மாற்றுதல், ஆட்குறைப்பை நிறுத்துதல், அனைவருக்கும் 8 மணி நேர வேலை, காசுவல் நிரந்தரம், வேலைப்பளுவை குறைத்தல், வார ஓய்வு, முறையான விசாரணை முதலிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது தலைவர் கல்யாண சுந்தரத்துக்கு வயது 38. பொதுச்செயலாளர் அனந்தநம்பியாரின் வயது 28.
ரெயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பொன்மலையில் பெண்களும், ஆண்களும் எழுச்சியுடன் ஒடுக்குமுறைகளை சந்தித்தனர். இந்த எழுச்சியைப் பற்றி கூறினால் அது ஒரு தனி சரித்திரம்.
வெள்ளைக்கார அரசையும் நிர்வாகத்தையும் தூக்கி எறியும் இறுதிக்கட்ட தேசபக்த போராட்டம் இது என்று தொழிலாளர்கள் கருதினர். துண்டு பிரசுரங்களும் பேச்சுக்களும் அவ்வாறே இருந்தன.
மாகாணத்தில் காங்கிரஸ் அரசு. மத்தியில் நேரு தலைமையில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் காங்கிரஸ் இடைக்கால அரசு. சங்கத்தலைவர்கள் இது காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டமல்ல; ஆங்கிலேய நிர்வாகத்துக்கு எதிரான போராட்டம் என்று அமைச்சரவைக்குத் தெரிவித்தனர்.
ஆனாலும் காங்கிரஸ் அரசு, அதன் பெருமுதலாளித்துவ வர்க்க ஆதரவு குணத்தை வெளிப்படுத்தியது. தொழிலாளர் விரோத போக்கை வெளிப்படுத்தியது. மகாத்மா காந்தியும், மொரார்ஜி தேசாயும் என்ன சொன்னார்களோ அதையே இவர்களும் செய்தனர். அரசியல் நோக்கமுடையது; தங்களுக்கு எதிரானது என்று பார்த்தனர். அனைத்து ஒடுக்கு முறைகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியையும் கைக்கொண்டது.
செப்டம்பர் 5ஆம் தேதி பொன்மலை முழுவதும் மலபார் போலீஸ் அராஜகம் புரிந்தது. சங்கத்திடலில் புகுந்து கிளைச் செயலாளர் இஸ்மாயில் கானை கொடிக்கம்பத்தில் கட்டிவைத்தது. அமைதியாக கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. கொடிக்கம்பத்தை காத்து நின்ற தோழர் உட்பட 5 பேர் மரணம். பொன்மலை ரத்த பூமியானது. அனந்தநம்பியார் தலையில் அடித்து பலத்தக் காயம். தொழிலரசு பத்திரிகை மீது வழக்கு.
ஐந்து தியாகிகள்
எம். ராஜி, ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு, எம். கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன் ஆகியவர்களே அந்த ஐந்து பேர்.
இந்த தியாகிகளின் தியாகத்தின் உள்ளடக்கம் இதுதான்
தொழிலாளி வர்க்க கோரிக்கைகளை அரசியலுடன் இணைப்பது, வேலை நிறுத்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்ற பாரம்பரியத்தை அவர்கள் உயர்த்திப் பிடித்தார்கள். அந்நியரை இந்த மண்ணிலிருந்து விரட்ட கடைசிகட்ட போராட்டத்தையும் தியாகத்தையும் அவர்கள் நமக்கு ஈந்தார்கள்.
அவர்களின் தியாகம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரிசையில்வைத்து எண்ணத்தக்கது. அதன்மூலம் இந்த நாட்டின் தொழிலாளி வர்க்க சுதந்திரம் என்பது பெரு முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் பிரதிநிதுத்துவப்படுத்தும் காங்கிரஸ் மூலமோ அல்லது அவர்களின் அரசு மூலமோ அல்ல.
தொழிலாளி, விவசாயி வீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஒற்றுமை மூலம்தான் என்பதை அது சுட்டிக்காட்டியது. சுருக்கமாகச் சொன்னால் வரப்போகிற சுதந்திர அரசின் தொழிலாளி விரோத வர்க்க குணாம்சத்தை அது பட்டவர்த்தனமாக்கியது.
தியாகிகளின் நினைவுத்தூணில் எழுதப்பட்டுள்ள வாசகம் மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது.
“5 பேர் உயிர்நீத்தனர். 150 பேர் படுகாயமுற்றனர். 1500 பேர் மீது வழக்கு போடப்பட்டது. 50,000 ரூபாய் பெறுமானமுள்ள சாமான்கள் நாசப்படுத்தியும் அபகரித்தும் செல்லப்பட்டன.”
“ஆனால், தொழிலாளி வர்க்கம் அழிக்கப்படவில்லை. மேலும் ஒன்றுபட்டு முன்னேறுகிறது. தியாகிகளுக்கு புரட்சி வணக்கம்”
அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது அதன் இன்றைய சங்கம் தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்.
நம்பிக்கை…
அரசின் தாராளமய, உலகயமய, தனியார்மய கொள்கைகளுக்கு எதிராக நாட்டின் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இதுவரை 22 வேலை நிறுத்தங்களை நடத்திவிட்டனர். விவசாயிகளும் சேர்ந்து போராட்டம் வலுவடைகிறது. ஏஐஆர்எஃப் எதிலும் கலந்து கொள்ளவில்லை. புதிய பென்சன் திட்டத்துக்கு எதிராக அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் ரயில்வே சம்மேளனங்களும் இணைந்து ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு தயாரானபோது மத்திய அரசு ஒரு ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் என்ற ஒரு தொழிலாளர்களின் சேமிப்பை எல்லாம் கொள்ளை அடித்து கார்ப்பரேட்டுகளிடம் வாரிக்கொடுக்கும் பென்சன் திட்டத்தை அறிவித்தது. இதனை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. ஆனால், ரயில்வே சம்மேளனங்கள் ஏற்றுக்கொண்டு இனிப்பு வழங்கின. தொழிலாளர்கள் பழைய பென்சன்தான் வேண்டும் என்றும், இந்த சங்கங்கள் தொழிலாளர் உரிமைகளை விலைபேசி விற்றுவிட்டதாக, சமூக ஊடகங்களில் பதிவு போடுகின்றனர். வெறுப்பு அதிகமாகும். போராட்டம் வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் தீவிரமடைய எதிர்ப்பு வலுக்கும்.
புறச்சூழல் தீவிரமடையும். அப்போது ரெயில்வேயும் விலகி நிற்கமுடியாது.மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று அதை சும்மா விடாது. 1960, 1968, 1974 மீண்டும் திரும்பி வரும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
