
கம்யூனிசக் கோட்பாடுகள் : பகுதி 4
கே 8: பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
பண்ணையடிமை உற்பத்திக் கருவியான ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, அதைப் பயன்படுத்துகிறான். அதற்கு ஈடாக அவன் தன் உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். அல்லது தன் உழைப்பின் சேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறான்.
பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாக, தன் உற்பத்தியில் ஒரு பகுதியைப் பெறுகிறான்.
பண்ணையடிமை கொடுக்கிறான்; பாட்டாளி பெறுகிறான். பண்ணையடிமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளது; பாட்டாளிக்கு அத்தகைய வாழ்க்கை இல்லை. பண்ணையடிமை போட்டிக்கு வெளியே இருக்கிறான்; பாட்டாளியோ போட்டியின் உள்ளேயே இருக்கிறான்.
பண்ணையடிமை மூன்று வழிகளில் தன்னை விடுவித்துக் கொள்கிறான்: நகரத்துக்குத் தப்பி ஓடி அங்கே ஒரு கைவினைப் பணியாளன் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவுக்கு உற்பத்திப் பொருள்களையும் உழைப்பையும் கொடுப்பதற்குப் பதில் பணத்தைக் கொடுத்து, அதன்மூலம் சுதந்திரமான குத்தகைதாரர் ஆகிறான்; அல்லது தன்னுடைய நிலப்பிரபுவை விரட்டிவிட்டு, தானே நிலத்துக்கு உடைமையாளன் ஆகிவிடுகிறான். சுருங்கக்கூறின், ஏதேனும் ஒரு வழியில் உடைமை வர்க்கத்தின் அங்கமாகிப் போட்டியில் நுழைந்துவிடுவதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். பாட்டாளியோ, தொழில்போட்டி, தனியார் சொத்துடைமை, அனைத்து வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை ஒழிப்பதன் மூலமே தன்னை விடுவித்துக் கொள்கிறான்.
கே 9: பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
பாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் என்று சொல்லப்படுபவன், கடந்த நூற்றாண்டு (18-ஆம் நூற்றாண்டு) வரையில் ஏறத்தாழ எங்கெங்கும் நிலவி வந்தவன். இப்போதுங்கூட அங்கும் இங்கும் நிலவுகின்றவன். அவன், அதிகபட்சம் தற்காலிகமாக, ஒரு பாட்டாளியாக இருக்கிறான். பிற தொழிலாளர்களைச் சுரண்டி, தனக்கென மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். கைவினைக் குழுமங்கள் (guilds) இன்னும் நிலவிவரும் சூழலிலும், கைவினைக் குழுமக் கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், கைவினைத் தொழிலில் பட்டறைத் தொழில் பாணியிலான வழிமுறைகளைப் புகுத்தும் அளவுக்கோ அல்லது கடுமையான தொழில்போட்டிக்கோ இன்னும் இட்டுச் செல்லாத நிலையிலும், அவன் பெரும்பாலும் இந்தக் குறிக்கோளை எட்டவே செய்கிறான்.
ஆனால், கைவினைத் தொழிலில் பட்டறை அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில்போட்டி முழுமையாய்ச் செழித்தோங்கிய உடனே இந்தக் கண்ணோட்டம் மங்கத் தொடங்கியது; கைவினைப் பணியாளன் மேலும் மேலும் பாட்டாளியாகப் பரிணமித்தான். எனவே, கைவினைப் பணியாளன் முதலாளியாக மாறுவதன் மூலமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தில் பொதுவாக நுழைவதன் மூலமோ, போட்டியின் காரணமாய் ஒரு பாட்டாளியாகப் பரிணமிப்பதன் மூலமோ (இதுவே தற்போது பெருமளவு நடைமுறையாய் உள்ளது) தன்னை விடுவித்துக் கொள்கிறான். மூன்றாவது வகைப்பட்டவன், ஏறத்தாழ கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும்.[1]
கே 10: பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
16-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் முழுவதும் பட்டறைத் தொழிலாளி, சில விதிவிலக்குகள் தவிர, அவனுடைய தறி, குடும்ப நூற்பு ராட்டினம், தன் ஓய்வு நேரத்தில் பயிர்செய்யும் சிறிய துண்டு நிலம் போன்ற ஏதேனும் ஓர் உற்பத்திக் கருவியை தன் சொந்த உடைமையாக வைத்திருந்தான். பாட்டாளியோ இவற்றில் எதையுமே வைத்திருக்கவில்லை.
பட்டறைத் தொழிலாளி கிட்டத்தட்ட எப்போதுமே நாட்டுப்புறத்தில், தன்னுடைய நிலப்பிரபு அல்லது முதலாளியுடன் ஏறத்தாழ தந்தைமுறை உறவுநிலையில் வாழ்ந்து வருகிறான். பாட்டாளியோ பெரும்பாலும் பெருநகரங்களில் வாழ்கிறான். தன் முதலாளியுடனான அவனுடைய உறவு முற்றிலும் பண உறவே.
பட்டறைத் தொழிலாளி, பெருவீதத் தொழில்துறையால் அவனுடைய தந்தைமுறை உறவுநிலையிலிருந்து பிரித்தெறியப்பட்டு, மிச்சம் மீதியிருந்த தன் சொத்துடைமைகளை இழக்கிறான். இவ்வாறாக, அவன் ஒரு பாட்டாளியாக மாறுகிறான்.
[1] எங்கெல்ஸ் தன் கையெழுத்துப் பிரதியில் இங்கே அரைப் பக்கத்தை வெற்றிடமாய் விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஜூன் வரைவுரை (Draft of Communist Confession of Faith) இதே கேள்விக்கான பதிலைக் கொண்டுள்ளது. அதில் கேள்வி எண்-12.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply