இந்தியாவில் வறுமையின் உண்மை நிலவரம்
அபிநவ் சூர்யா
வறுமை மற்றும் வறுமை ஒழிப்பு என்பது இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் சூழலில் அதிக அளவில் விவாதிக்கப்படும் ஒரு பேசு பொருளாகத் தொடர்ந்து நிலவுகிறது. எந்த ஒரு நாடு அல்லது அரசு முறையின் வெற்றி – தோல்வியை கணக்கிடும் உரைகல்லாக வறுமை ஒழிப்பு நிலவுகிறது. இன்றைய சூழலில் வறுமை விகிதத்தை கணக்கிட்டு, அதன் அடிப்படையில்தான் வறுமையை ஒழிப்பது நோக்கிய வளங்களும், பொதுச் செலவினங்களும் ஒதுக்கப்படுகின்றன.
ஆனால் இந்த வறுமை, வறுமை விகிதம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய சொற்களுக்கு பின்னால் இருக்கும் புரிதலானது, முதலாளித்துவ அறிஞர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே மிகவும் வேறுபட்டதாக உள்ளது. முதலாளித்துவ அறிஞர்களைப் பொறுத்த வரையில், “வறுமை” என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு, ஒரு குறிப்பிட்ட சில அம்சங்கள் இல்லாமல் இருப்பது – அதாவது இந்த முதலாளித்துவ அறிஞர்கள் ஒன்று கூடி, ஒரு சில பண்டங்களை அவசியமானதாக நிர்ணயித்து, அது கிடைக்காமல் இருப்பவர்கள் வறுமையில் இருப்பவர்கள் என நிர்ணயிக்கப்படுகிறது. இதன் விளைவு என்ன? – வறுமையில் இருப்பவர்கள் போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பவர்கள் என புரிந்து கொள்வது. ஆக, முதலாளித்துவ அறிஞர்களை பொறுத்த வரையில், போதிய பொருளாதார வளர்ச்சி இல்லாததே வறுமைக்கு காரணம்.
ஆனால் இடதுசாரிகளின் வறுமை குறித்த புரிதல் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் புரிதலுடன் பின்னிப் பிணைந்தது. இன்றைய நவ தாராளமய காலத்தில், ஏகாதிபத்திய சுரண்டலின் இன்றியமையாத அம்சமாக வறுமையை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இதனால்தான் “முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி”-யையும் “வறுமை ஒழிப்பை”-யும் எப்போதும் தொடர்பு படுத்தி பேசும் முதலாளித்துவ சொல்லாடலை இடதுசாரி அறிஞர்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். இந்த புரிதலின் அடிப்படையில், இந்தியாவில் வறுமையின் அளவு, அதை கணக்கிடுவது மற்றும் அதை ஒழிப்பதன் பின்னணியில் உள்ள அரசியலை ஆராய்வது முக்கிய தேவையாக உள்ளது.
முதலாளித்துவமும் வறுமையும்
வறுமையின் அளவு மற்றும் ஒழிப்பு பற்றி புரிந்து கொள்வதற்கு முன்பாக, வறுமை என்பதை வெறும் முதலாளித்துவ அறிஞர்களைப் போல, சில பண்டங்களின் “இல்லாமை” என்ற அர்த்தத்தில் பார்ப்பதில் இருந்து, அந்தந்த உற்பத்தி முறையில் பொறுத்திப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
பண்டைய நிலப்பிரபுத்துவ முறையில் உழைப்புச் சுரண்டலின் வடிவமானது நிலத்தை சார்ந்து இருந்தது. ஒரு பண்ணை அடிமை/குத்தகை விவசாயி என்பவர் நிலத்தோடு பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர் நிலத்தில் கடுமையாக உழைத்து உருவாக்கும் உபரியை அபகரித்துக் கொள்வதன் மூலம், மிராசுதார்களும், நிலப்பிரபுக்களும், மடங்களும் செழித்துக் கொழுத்தன. இந்த சமூகத்தில், உழைக்கும் மக்களை நிலத்தோடு தொடர்ந்து பிணைத்து வைத்திருப்பது சுரண்டல் முறையை தக்க வைக்க அவசியமாகிறது. அதாவது, விளைச்சல்தாரர்கள் நிலத்தில் உழைத்துக் கொட்டுவதைத் தவிர வேறு வழியே அவர்களுக்கு இல்லை என்ற நிலையை நீடிக்கச் செய்வது அவசியம். இந்நிலை எவ்வளவு தீவிரமாக நிலைநாட்டப்படுகிறதோ, அந்த அளவிற்கு வறுமை கூடுதலாக உள்ளது எனக் கணிக்கலாம். இந்த நிலப்பிரபுத்துவ சமூகத்தின் பிற்போக்கான அமைப்பின் காரணத்தாலேயே, இந்த அமைப்பானது கல்வியை ஊக்குவிக்கவில்லை. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவில்லை. பரம்பரை பரம்பரையாக உழைக்கும் மக்கள் நிலத்தில் உழன்று கிடப்பதை மட்டுமே உறுதி செய்தது. இப்படிப்பட்ட சமூக அமைப்பில், மக்களுக்கு கல்வி இல்லாததும், அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாததும், ஸ்திரமான இருப்பிடம் இல்லாததும், தீவிர வறுமை நிலை என புரிந்து கொள்ளலாம்.
ஆனால் முதலாளித்துவ சமூகம் அப்படியா? முதலாளித்துவ சமூகத்தில் உழைப்புச் சுரண்டலின் வடிவமானது கூலி உழைப்பு சுரண்டல் மூலம் நிகழ்கிறது. இந்த சமூகத்தில் ஒரு தொழிலாளி எந்த விதமான சொத்து வடிவத்துடனும் பிணைப்பு இல்லாமல் இருப்பதே அவசியம். அப்படி இருந்தால் மட்டும்தான் தொழிலாளி தன் உழைப்பு சக்தியை விற்று மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை நீடிக்கும். அப்படி இருந்தால் மட்டும் தான், “கூலி” என்பது தொழிலாளியின் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்வதற்கான மதிப்பாக மட்டும் இருக்கும். அப்படி இருந்தால் மட்டும்தான், “கூலி உழைப்பு” மூலமான சுரண்டல் சாத்தியமாகும். இப்படிப்பட்ட சமூகத்தில் வெறும் “இல்லாமை”யை வைத்து வறுமையைப் புரிந்து கொள்வது போதாது. ஒரு தொழிலாளி தன் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்து கொள்ள, எவ்வளவு தீவிரமான உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார் என்று புரிந்து கொள்வது அவசியம்.
இதுதான் முதலாளித்துவ அறிஞர்களின் புரிதலில் உள்ள தவறு. வெறும் “இல்லாமை”யை வைத்து வறுமையை புரிந்து கொண்டால், ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து எவ்வளவு தூரம் முதலாளித்துவ சமூகத்தை நோக்கி பயணித்துள்ளோம் என்று புரிந்து கொள்ள முடியுமே ஒழிய, முதலாளித்துவ சமூகத்தில், வறுமையின் உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியாது. மேலும், இவ்வாறு கூலி உழைப்பு சுரண்டல் அடிப்படையில் புரிந்து கொண்டால், ஏன் முதலாளித்துவ சமூகத்தில் “வறுமை” என்பது இன்றி அமையாதது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ சமூகத்தில் ஒரு கணிசமான பகுதி மக்கள் “அன்றாட தேவைகளுக்கே தங்கள் உழைப்பு சக்தியை கடுமையாக விற்றால் மட்டுமே உயிர் வாழ முடியும்”, என்ற நிலை இருந்தால்தானே இந்த தீவிர சுரண்டல் முறை நீடிக்கும்? அப்படி இருக்கையில், முதலாளித்துவ சமூகத்தில் முழு “வறுமை ஒழிப்பு” எப்படி சாத்தியமாகும்?
மேலும், முதலாளித்துவத்தின் மூலதன திரட்சி முறையும் இதைப் பிரதிபலிக்கிறது. மூலதனத் திரட்சி முன்னேறும் பொழுது, சமூகத்தின் மூலதன அளவில் பெரும் பகுதி கையளவு முதலாளிகளிடம் குவிந்து, சிறு-குறு உற்பத்தியாளர்கள் அழித்து ஒழிக்கப்பட்டு, அவர்கள் வறுமை மற்றும் கூலி உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி நிகழ்வதையே வறுமை ஒழிப்பின் ஆதாரமாக முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன? முதலாளித்துவ முறையில், முதலாளிகளுக்கு இடையேயான போட்டி காரணமாகவும், முதலாளி-தொழிலாளி இடையேயான முரண்பாடு காரணமாகவும், தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி உள்ளது? தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, பகுதி தொழிலாளர்கள் வேலை இழந்து, மீதமுள்ள தொழிலாளர்கள் கடுமையாக வேலை செய்ய உந்தப்படுகிறார்கள். அதாவது, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளர்களை மேலும் “கூலி உழைப்பு” சுரண்டலின் ஆதிக்கத்தில் ஆழ்த்துகிறது.
இந்தப் போக்கை அண்மையில் பொருளாதார “நோபல்” பரிசு வென்ற அறிஞர் “அச்சிமோக்லு” தன் ஆய்வில் குறிப்பிடுகிறார் – அதாவது தொழிற் புரட்சி போன்ற அதி தீவிர தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில், தொழிலாளர்களின் வாழ் நிலை மோசம் அடைந்தது; பின் தொழிலாளர் இயக்கம் வலுவுற்ற பொழுதுதான் அவர்கள் வாழ் நிலை மேம்பட்டது என கண்டறிந்தார். இதை மார்க்ஸ் மூலதனம் முதலாம் பாகத்தில், “செல்வம் ஒரு முனையில் குவிய, மறு முனையில் துன்பமும் துயரமும் குவிகிறது” என முதலாளித்துவ மூலதன திரட்சியின் மாண்பைக் கண்டறிந்தார். இந்த போக்கானது, ஏகாதிபத்திய காலத்தில் கூர்மை அடைகிறது. காலனிய ஆதிக்கமானது பெரும்பாலான நாடுகளின் உழைக்கும் மக்களை வறுமையில் ஆழ்த்தியது. இன்று ஏகாதிபத்தியத்தின் வடிவம் மாறினாலும், உலகம் முழுவதும் பயணிக்கும் நிதி மூலதனம், குறைந்த ஊதிய நாடுகளை நோக்கி நகர்ந்து, தொழிலாளர் இயக்கத்தை அழித்து, அனைத்து நாட்டு தொழிலாளர்களையும் மேலும் வறுமையில் ஆழ்த்த முயற்சிக்கிறது.
ஆக, ஏகாதிபத்திய சுரண்டல் நிலவ, “வறுமை” இன்றியமையாதது ஆகிறது. இந்த உண்மையை மறைக்க, உலக வங்கி போன்ற அமைப்புகள், தவறான “வறுமை விகிதம்” கணக்குகள் மூலம் திசை திருப்ப முயற்சிக்கின்றன. நாள் ஒன்றிற்கு சராசரி $1.90 நிகர வருமானம் என்ற கணக்கை பயன்படுத்தி, 1990இல் 190 கோடி பேர் வறுமையின் கீழ் இருந்ததாகவும், இது 2015இல் 74 கோடியாக குறைந்ததாகவும் கூறுகிறது. ஆனால் உலக வங்கியின் கணக்குப்படியே, இந்த குறைப்பின் பெரும்பகுதிக்கு காரணம், சோசலிச நாடான மக்கள் சீனம் தான் – 74 கோடி குறைப்பு. மேலும் ஆப்பிரிக்க நாடுகளை மட்டும் பார்த்தால், அவர்கள் கணக்குப்படியே வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை கூடி உள்ளது. இதுவே ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் வறுமைக்கும் இடையே உள்ள பிணைப்பை நிறுவுகிறது.
இந்தியாவில் வறுமை குறித்த ஆய்வுகள்
முதலாளித்துவத்தில் வறுமை என்பது நாம் முன்னரே கண்டது போல, “உழைப்பு சக்தி மறு உற்பத்தி” சார்ந்தது. இதற்கு மிக முக்கியமான தேவை, போதிய ஊட்டச்சத்து. இதனால் தான் உலக வங்கி போல இல்லாமல், இந்தியாவில் வறுமையை கணக்கிடும் முறையானது “கலோரி போதாமை”-யை (Calorie Deficiency) கணக்கிடுவதன் மூலம் தொடங்கியது. 1974இல் திட்டக் கமிஷன் மேற்கொண்ட ஆய்வில், “அத்தியாவசிய கலோரி அளவு” என்பது ஊரக பகுதியில் 2200 கலோரிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 2100 கலோரிகள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த அத்தியாவசிய அளவில், ஊட்டச்சத்து நுகர்வு இல்லாத மக்கள் என்ற அடிப்படையில், ஊரக பகுதியில் 56.4 சதவீத மக்களும், நகர்ப்புறத்தில் 49.2 சதவீத மக்களும் வறுமையில் உள்ளதாக கணக்கிடப்பட்டது. ஆக, இந்தியாவில், “இல்லாமை” என்ற அடிப்படையில் அல்லாமல், “கலோரி நுகர்வு” அடிப்படையில்தான் வறுமையை கணக்கிடும் பாரம்பரியம் உள்ளது.
1990-களுக்கு முன்பு இந்த வறுமையை கணக்கிடுவது ஆய்வுக்காக மட்டுமே செய்யப்பட்டது. அதாவது, ஐந்தாண்டு திட்டத்தின் பயன் அனைவரையும் சென்று சேருகிறதா என்பதை அறியவே இருந்தது. ஆனால் நவ தாராளமய காலத்தில், உலக வங்கியின் கட்டளைகளை பின்பற்ற துவங்கிய இந்திய அரசு, அனைவருக்குமான உணவு, கல்வி, சுகாதாரம் என்பதை நிறுத்தி, “ஏழைகளுக்கு” மட்டும் மலிவு விலையில் தானியங்கள், கல்வி, சுகாதாரம் என முடிவு செய்தது. இதனால் பல கோடி மக்கள் அவசியமான அரசு சேவைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்த திட்டத்தை அமலாக்க, “யார் ஏழை?” என்ற கேள்விக்கு பதில் அளிப்பது அவசியமானது. இதனால் “வறுமையை கணக்கிடுவது” மிக முக்கிய தேவை ஆனது.
2005இல் திட்டக் கமிஷன் அமைத்த “டெண்டுல்கர் கமிட்டி”, வறுமையை கணக்கிடும் முறையை முன் மொழிந்தது. இந்த கமிட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேசிய “நுகர்வு” கணக்கெடுப்பு தரவுகளை பயன்படுத்தியது (இந்த கணக்கெடுப்பில் மக்களின் உணவு மற்றும் உணவு அல்லாத பண்டங்களின் நுகர்வு அளவு மற்றும் ரூபாய் மதிப்பு சேகரிக்கப்படும்). டெண்டுல்கர் கமிட்டி முன்பிருந்த “கலோரி போதாமை” முறையை விமரசித்தாலும், அதை பின்பற்றுவதாக கூறி, 1974இல் அந்த கலோரி அளவுக்கு (கிராமம் – 2200, நகரம் – 2100) நிகரான ரூபாய் மதிப்பை கணக்கிட்டு, அதை விலைவாசி உயர்வுக்கு உட்படுத்தி, அதன் மூலம் “வறுமை கோடு” என்பதை நிர்ணயித்தது. இது மக்களின் நுகர்வு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொள்ளாததால், இது தவறான முறையே. ஆனால் இதைத் தான் இந்திய அரசு அதிகாரப்பூர்வ “வறுமை கோடு” என ஏற்றுக்கொண்டது. இதன்படி, 2011இல் கிராமத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 27 ரூபாய் செலவிடுபவர்களும், நகரத்தில் 33 ரூபாய் செலவிடுபவர்களும் வறுமையில் இருந்து மீண்டவர்களாக கருதப்பட்டனர். வறுமை விகிதம் 22% என கூறியது. இந்த குறைந்த செலவில், போதிய கலோரிகளை பெற வாய்ப்பே இல்லை. இதனால் இந்த முறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
விமர்சனங்களுக்கு பதிலளிக்க, மீண்டும் ஒரு ஆணையத்தை அமைத்தது திட்டக் கமிஷன் – “ரங்கராஜன் கமிட்டி”. இந்த கமிட்டியின் வறுமையை கணக்கிடும் முறையும் விமர்சிக்கப்பட்டாலும், பிழைகளை ஓரளவு சரி செய்தது. முதலாவதாக வறுமையை கணக்கிட “கலோரி போதாமை”-யை ஒரு அங்கமாக மீண்டும் சேர்த்துக்கொண்டது. மேலும் உணவு அல்லாத பண்டங்களையும் தன் கணக்கிடும் முறையில் சேர்த்துக் கொண்டது. இந்த கமிட்டியின் அறிக்கையின்படி, 2011இல் இந்தியாவின் வறுமை விகிதம் சுமார் 30% ஆகும்.
ஆனால் 2015இல் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை மோடி அரசாங்கம் கிடப்பில் போட்டது. இன்று வரை “டெண்டுல்கர் கமிட்டி” கூறிய அர்ப்பமான வரையறையைத்தான் பின்பற்றி வருகிறது. இதனால் கல்வி உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் பலனை பல கோடி மக்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
மோடி அரசும், வறுமையும்
2014இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, தன் தீவிர நவ தாராளமய கொள்கைகளின் தாக்கத்தை மறைக்க, “வறுமை”யை கணக்கிடுவதில் பல ஏமாற்று வேலைகளை செய்தது.
முதலாவதாக, திட்ட கமிஷனை அழித்து உருவாக்கப்பட்ட “நிதி ஆயோக்”, “நுகர்வு” அடிப்படையிலான வறுமை என்பதை முற்றிலுமாக புறந்தள்ளி, உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய அமைப்புகள் முன் மொழிந்த “பன்முகத்தன்மை கொண்ட வறுமை” (MPI) கணக்கிடும் முறையை பின்பற்ற துவங்கியது. இது “வருமான குறியீடு”, “கல்வி குறியீடு”, “சுகாதார குறியீடு” என்ற தொடர்பே இல்லாத பல்வேறு குறியீடு எண்களை ஒன்றாக்கி வறுமையை கணக்கிடும் ஒரு அபத்தமான முறையாகும். மேலும், இது மீண்டும் “இல்லாமை” என்ற அடிப்படையில் வறுமையை கணக்கிட முயல்கிறது. உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்றால் இந்த கணக்குபடி வறுமை விகிதம் குறையும். ஆனால் இது தவறல்லவா? கல்வி என்பது மக்களின் உரிமை என்றாலும், பள்ளி/கல்லூரி கல்வி பெறுவதாலேயே வறுமை ஒழிந்து விட்டதாக அர்த்தமா? கல்வி பெற்று வேலைவாய்ப்பு இல்லாமல் இன்று பல கோடி இளைஞர்கள் தவிக்கின்றனர். இப்படி இருக்க, வறுமை எப்படி குறைந்ததாக ஆகும்? இப்படிப்பட்ட மோசமான “குறியீடு” எண்ணை பயன்படுத்தி வறுமை குறைந்து விட்டதாக வாதிட முயன்றது நிதி ஆயோக்.
இரண்டாவதாக, வறுமையை கணக்கிடுவதை தடுக்க, தரவுகளை மறைக்க முயன்றது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் “நுகர்வு” கணக்கெடுப்பு 2017இல் நடைபெற்றாலும், அந்த தரவுகளை வெளியிடாமல் தடுத்தது. ஊடகத்தில் இந்த தரவுகள் கசிந்து, அதில் மக்களின் சராசரி நுகர்வு சரிந்து, வறுமை கூடியதாக தெரிய வந்தது. இது பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மற்றும் மோடி அரசின் இதர நவ தாராளமய கொள்கைகளின் தாக்கத்தை அப்பட்டமாக்கியது. இந்த பின்னணியில், 2011-க்கு பிறகு அதிகாரப்பூர்வ தரவுகளே இல்லாததால், சந்தேகத்திற்குரிய “ஜி.டி.பி” தரவுகளை பயன்படுத்தி, அரசு-ஆதரவு ஆய்வாளர்கள் 2021இல் இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்ய துவங்கினர். இறுதியாக, பல போராட்டங்கள் கழித்து 2022இல் “நுகர்வு” கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் வறுமையின் உண்மை நிலையை மறைக்க, கணக்கெடுப்பு முறையை மாற்றியது. எனினும், இந்த கணக்கெடுப்பின் தரவுகளையும் 2024 தேர்தல் வரை வெளியிடவில்லை. தேர்தலுக்கு முன் இதில் பகுதி தரவுகளை மட்டும் வெளியிட்டு, “நுகர்வு” அடிப்படையிலான வறுமை 5%-ற்கு குறைந்து விட்டதாக வாதிட்டது.
இப்படி மக்களின் வாழ்க்கை நிலை மோசம் அடைவதை மறைக்க, மோடி அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.இந்தியாவில் இன்றைய வறுமையின் நிலை
“ரங்கராஜன் கமிட்டி” முன் மொழிந்த வறுமையை கணக்கிடும் முறையில் பிழைகள் இருந்தாலும், அது ஓரளவு உதவிகரமான முறையே. அண்மையில் வெளியான ஒரு ஆய்வு, இந்த முறையை 2022 “நுகர்வு” கணக்கெடுப்பு தரவுகளுக்கு பொருத்திப் பார்த்தது (இந்த ஆய்வில், இக்கட்டுரையின் ஆசிரியரும் அங்கம்). ஆனால் “கலோரி போதாமை”-யை கணக்கிட 1974இல் பயன்படுத்திய அதே வரையறைகளை பயன்படுத்த முடியுமா? நாட்டில் பொது போக்குவரத்து, சுகாதாரம், கட்டுமானம் ஆகியவை முன்னேறி உள்ளன. எந்திரமயமாக்கல் முன்னேறி உள்ளது. அதனால் மக்களின் ஊட்டச்சத்து தேவை மாறியுள்ளது. இதனால் தான் இந்த ஆய்வில் “அத்தியாவசிய கலோரி”-களின் அளவு கிராமங்களில் 1900 கலோரிகள் எனவும், நகரங்களின் 1750 கலோரிகள் எனவும் குறைத்து வைத்து கணக்கிடப்பட்டது. இந்த குறைந்த அளவை வைத்து கணக்கிட்டால் கூட, வறுமை விகிதம் 26%-மாக உள்ளது (2011இல் 30%). இந்த முறைப்படி 2011இல் வறுமையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 36 கோடி; 2022இல் 37 கோடி.
ஆக, அரசின் தரவுகள்படியே (சந்தேகத்திற்குரிய தரவுகள்) கணக்கிட்டாலும், பிழைகள் நிறைந்த முறையை பயன்படுத்தினாலும் கூட, இன்றும் மிக அதிக அளவிலான மக்கள், மோசமான வறுமை நிலையில் வாடுவது தெரிய வருகிறது. இது எப்படி சாத்தியம்? 2011இல் இருந்து இன்று வரை பொருளாதாரம் வளர்ந்துள்ளதே? இதற்கு முக்கிய காரணம், மக்களின் ஊட்டச்சத்து அளவு போதுமான அளவு உயரவில்லை.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதலாளித்துவ அறிஞர்கள், “மக்கள் இன்று உணவு போன்ற அடிப்படை தேவை குறித்து கவலைப்படாமல், உணவு அல்லாத பண்டங்கள் நுகர்வில் முனைப்பு காட்டுகின்றனர். ஸ்மார்ட்போன் வைத்துள்ளார்கள். வாகனம் வைத்துள்ளார்கள்” என வாதிடுகின்றனர். ஆனால் இது பிழையான வாதம். இன்றைய முதலாளித்துவ சூழலில் இப்படிப்பட்ட “உணவு அல்லாத” நுகர்வு இன்றியமையாததாக ஆனது. எடுத்துக்காட்டாக, இன்று “கிக்” பொருளாதாரத்தில் (Swiggy, Rapido போன்ற தளங்களில்) பணி புரியும் பல கோடி இளைஞர்கள், அவர்கள் வேலைக்காகவே ஸ்மார்ட்போன் மற்றும் வாகனம் வாங்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால் இந்த பணிகளில் இவர்கள் நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் உழன்று வாடுகின்றனர். இது இவர்களை முதலாளித்துவ சுரண்டல் முறைக்குள் ஆழ்த்துகிறது. இப்படி இருக்கையில், மக்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதால் வறுமை இல்லை என வாதிடுவது சரியா? மேலும், நவ தாராளமய காலத்தில், கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் தனியார்மயம் ஆவதால், மக்கள் “உணவு அல்லாத” செலவினங்களை உயர்த்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் தான் உணவு ஊட்டச்சத்து உயர்வதில்லை; வறுமை விகிதம் குறைவதில்லை.
முன்னர் கூறியது போல, மூலதனத் திரட்சி முன்னேறும் பொழுது, பொதுக் கட்டுமானம், பொதுப் போக்குவரத்து, பொது மருத்துவம், பொதுக் கல்வி ஆகியவை இயல்பாகவே வளரும். இந்த இயல்பான வளர்ச்சியின் காரணமாக, வறுமை ஒழிந்து விட்டது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், முதலாளித்துவ சுரண்டல் முறையின் கீழ் மக்கள் எவ்வளவு தீவிரமாக மூழ்கடிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்த்தால் தான் வறுமையின் உண்மை நிலை புரியும்.
நிறைவாக
இந்தியாவில் நவ தாராளமய காலத்தில், பெரும்பாலான மக்கள் மீதான பொருளாதார பளு கூடி உள்ளது. குறிப்பாக ஊரக நெருக்கடி மக்களை வாட்டி வதைக்கிறது. விவசாயம் இன்று லாபகரமற்ற தொழிலாக மாறி உள்ளது. இதற்கு முக்கிய உதாரணம், பல ஆயிரம் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்வது தான். இதுவல்லாது, முதலாளித்துவ சுரண்டல் வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரிட்டிஷ் காலத்தில் கூட இல்லாத அளவை எட்டியுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. 1990-களுக்கு பின் ஓரளவு வறுமை குறைந்ததற்கும் கூட காரணம், மக்கள் போராடி வென்ற அரசாங்க திட்டங்களான ஊரக வேலைவாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்றவை தான் – நவ தாராளமய முதலாளித்துவ வளர்ச்சி அதற்குக் காரணம் இல்லை.
குறிப்பாக, மோடி அரசு காலத்தில் மக்கள் சந்திக்கும் நெருக்கடி பன்மடங்கு உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக வேளாண்மையில் இருந்து மக்கள் இதர தொழில்களை நோக்கி நகர்ந்து வந்தனர். ஆனால் மோடி ஆட்சி காலத்தில், இதர துறைகளிலும் நெருக்கடி சூழ்ந்ததால், லாபகரமற்ற வேளாண் தொழில் நோக்கி மக்கள் படையெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் ஊதிய அளவு (விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட பின்) உயரவே இல்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா பெருந்தொற்றை மோசமாக கையாண்டது ஆகிய காரணங்களால் பெரும்பகுதி மக்கள் பணி புரியும் “முறைசாரா” தொழில் துறை அழிந்து கிடக்கிறது. தேசிய குடும்ப நல ஆய்வில், பெண்கள் மத்தியில் இரத்த சோகை (அனீமியா) அதிகரித்திருப்பது தெரிகிறது. பட்டினி குறியீட்டில் இந்தியா தொடர்ந்து கடைக்கோடியில் உள்ளது. பல்வேறு ஆய்வுகளும், இன்றும் இந்தியாவில் மூன்றில் இரண்டு பேர் உணவு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக காட்டுகின்றன.
இந்தச் சூழலில், மோடி அரசு மற்றும் அரசு சார்பு ஆய்வாளர்களின் வறுமை விகிதம் சரமாரியாக குறைந்தது என்ற வாதங்கள், உண்மை நிலையை மறைக்கும் பொய் புனைவுகளே ஆகும். நவ தாராளமயத்தையும், ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தையும் எதிர்க்காத வரை, இந்தியாவில் வறுமை ஒழிப்பிற்கு வாய்ப்பே இல்லை.
References
- Poverty in India – C. A. Sethu, L. T. Abhinav Surya, and C. A. Ruthu: https://ras.org.in/poverty_in_india
- Tendulkar Committee Report: http://www.indiaenvironmentportal.org.in/files/rep_pov.pdf
- Rangarajan Committee Report: https://www.mospi.gov.in/report-dr-rangarajan-commission
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
