இந்தியாவில் முதலாளித்துவ நெருக்கடியும், மாறியுள்ள சுரண்டல் முறைகளும்
அபிநவ் சூர்யா
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வின் அறுதி பெரும்பான்மை கனவுகள் பாழானதற்கு முக்கிய காரணம், ஊரக பகுதி மக்கள் மத்தியிலான கடும் கோபம் தான். கொரோனா நெருக்கடிக்குப் பின் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிட்டோம் என மார் தட்டிக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு மக்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை உணர்த்தினர். எனினும், கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்பும், இன்றும் இந்த மக்கள் விரோத கொள்கைகளை தொடர்கிறது மோடி அரசு – அதற்கு அண்மையில் வந்த பட்ஜெட் தான் சாட்சி. மறு முனையில் பா.ஜ.க-வின் உற்ற நண்பர்களான பெரு முதலாளிகள் செழித்து கொழுத்தனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட இல்லாத அளவிற்கு, நாட்டின் மொத்த வருமானத்தில் 22.6%-மானது வெறும் 1% செல்வந்தர்களுக்கு சென்று சேர்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப விகிதம் 2003-இல் 2.1%-மாக இருந்தது, 2024-இல் 4.8%-மாக உயர்ந்து, 15 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியது. மறுமுனையில் மக்களின் வாங்கும் சக்தி தீவிரமாக கரைந்து வருவதும், அது வெறும் ஊரக பகுதி மக்களின் பிரச்சனை இல்லை என்பதும் தெளிவானது.
இந்த அநியாய வளர்ச்சிப் போக்கை மறைக்கும் வகையில், தேர்தலுக்கு முன்னால், கடந்த எட்டு ஆண்டுகளில் சராசரியாக ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக மோடி அரசாங்கம் அறிவித்தது. இது ஒரு கயமைத்தனமான கோஷம் என்றாலும், முற்றிலும் பொய் என நிராகரிக்க முடியாது. 2017இல் உழைப்புச் சந்தையில் 46 கோடி பேர் இருந்தது, 2023ல் அது 56 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் இதில் மறைந்திருக்கும் உண்மை என்ன? வேளாண்மை, உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும், அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப மக்களின் வருமானம் உயரவே இல்லை (ஆனால் பொருளாதாரம் வளர்கிறது). இப்படி மக்களை கடும் சுரண்டலில் மூழ்கடிக்கும் வேலையைத் தான் மோடி அரசாங்கம் செய்து வருகிறது.
இந்த நெருக்கடி கொரோனா காலத்தில் துவங்கியது இல்லை. 2016-17இல் மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு-ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளே பெருவாரியான மக்களை வறுமையில் ஆழ்த்தி விட்டது. அன்றிலிருந்து இன்று வரை, பெரு முதலாளிகள் மக்களை தீவிரமாக சுரண்டவே வழிவகை செய்து வருகிறது மோடி அரசு. ஆனால் நவதாராளமய சுரண்டலை தீவிரப்படுத்தியது மட்டும்தான் மோடி அரசின் வேலையா? இந்த சுரண்டலின் வடிவம் எப்படி மாறி வருகிறது. இதற்கும், மோடி அரசின் “வேலைவாய்ப்பு உருவாக்கம்” கோஷத்திற்கு என்ன தொடர்பு? இதை புரிந்து கொள்ள, பொருளாதார அமைப்பில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை ஆராய்வது அவசியம்.
பொருளாதார அமைப்புசார் உருமாற்றம்
பொருளாதாரத்தில் எந்த ஒரு காலத்திலும் எந்த துறை ஆதிக்கம் செலுத்துகிறது, எங்கே பெரும்பாலான மக்கள் பணி புரிகிறார்கள், காலப்போக்கில் இது எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை குறிக்க “அமைப்புசார் உருமாற்றம்” (Structural Transformation) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும். பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு பின் தங்கிய பொருளாதாரத்தில் பெரும்பாலும் மக்கள் வேளாண் துறையை சார்ந்து இருப்பர். பொருளாதாரம் முன்னேற, மக்கள் ஆலை உற்பத்தி-தொழில் துறைகள் (Manufacturing-Industry) நோக்கியும், பின்னர் சேவை துறையை நோக்கியும் நகர்வார்கள் என்கின்றனர் – இதுவே முன்னோக்கிய “அமைப்புசார் உருமாற்றம்” என்கின்றனர். இந்த “அமைப்புசார் உருமாற்றம்” குறித்து முதலாளித்துவ அறிஞர்களுக்கு ஒரு மோகப் பார்வை உண்டு – குறிப்பாக ஏகாதிபத்திய சுரண்டலை மறைத்து, வளர்ச்சியின்மைக்கான பழியை வளரும் நாடுகள் மீது போட இது உதவுகிறது.
ஆனால் இந்த சொல்லாடலை நாம் முற்றிலுமாக புறந்தள்ளிவிட முடியாது. மார்க்சிய பார்வையிலேயே புரிந்து கொண்டால் கூட, ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பது அவசியம். வேளாண் துறையில் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுக்க நவீன எந்திரங்கள், விதைகள், உரங்கள் போன்றவை அவசியம் – இவை அனைத்தும் ஆலை உற்பத்தி துறையிலிருந்து வருகிறது. மேலும் இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முன்னெடுக்க ஆராய்ச்சிகள் அவசியம். இதற்கு ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் தேவை. ஆக கல்வி, மருத்துவம் என இதர சேவை துறைகளும் விரிவடைவது அவசியம். மேலும், ஒரு நாட்டின் மக்கள் செழிப்படைவதற்கான குறியீடு என்ன? அந்த மக்கள் தங்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே பெரும்பாலான நேரத்தை செலவிடாமல், இதர பண்டங்கள் மற்றும் சேவைகளின் நுகர்வும் அதிகரிக்க வேண்டும் அல்லவா? இது உணர்த்துவது என்னவென்றால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், மக்கள் வாழ்வின் மேம்பாட்டிற்கும், பொருளாதாரத்தில் வேளாண் துறையின் உற்பத்தி திறன் அதிகரித்து, வேளாண் துறையை சார்ந்திருக்கும் மக்களின் பங்கு காலப்போக்கில் குறைந்து, தொழிலாளர்கள் ஆலை உற்பத்தி துறை மற்றும் சேவை துறையை நோக்கி நகர்வது அவசியம். இதுவே “தொழில் வளர்ச்சி”யை சாத்தியமாக்கி, நவீன பொருளாதாரமாக வளர உதவும்.
ஆனால் “தொழில் வளர்ச்சி” மட்டுமே போதுமானது அல்ல. உதாரணமாக, இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு; ஆனால் மேம்பட்ட மக்கள் நலன் திகழ்வது கேரளாவில் தான். ஆக, இந்த “அமைப்புசார் உருமாற்ற”த்துடன் சேர்த்து, உற்பத்தி உறவுகளின் நிலையை புரிந்து கொள்வதும் அவசியம் (இதை முதலாளித்துவ அறிஞர்கள் மறைத்து விடுவார்கள்). ஆனால் ஒரு மக்கள் நலன் சார்ந்த அரசு கூட, நீண்ட கால போக்கில் மக்கள் வாழ்வை தொடர்ந்து முன்னேற்ற, அந்நாட்டிற்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய “அமைப்புசார் உருமாற்ற”மும் அவசியம்.
இது சோவியத் ஒன்றியம், மக்கள் சீனம் போன்ற சோசலிச நாடுகளிலும் ஏற்பட்ட முன்னேற்றம் தான். சோவியத் ஒன்றியத்தில் தோழர் ஜோசப் ஸ்டாலின் வழி நடத்திய தொழில் வளர்ச்சி சார்ந்த ஐந்தாண்டு திட்டங்களின் விளைவாக, வேளாண் துறையில் வேலை செய்தவர்களின் பங்கு 1913-இல் 75%-லிருந்து, 1940-இல் 54%-மாகவும், 1989-இல் 20%-மாகவும் குறைந்தது. சீனாவில், வேளாண்மை தொழிலாளர்களின் பங்கு 1991-இல் 60%-லிருந்து, 2022-இல் 22%-மாக குறைந்தது; ஆலை தொழிலாளர்களின் பங்கு 20%-மாகவும், தொழில்துறை தொழிலாளர்கள் பங்கு 35%-மாகவும் உயர்ந்தது. இவை அனைத்தும், “திட்டமிட்ட” வளர்ச்சி மூலம் சாத்தியமானது – பொதுக் கட்டுமான மேம்பாடு மற்றும் பொதுத்துறை ஆய்வுகள், உற்பத்திகள் மூலம் வேளாண் துறையின் உற்பத்தி திறனை மேம்படுத்துவது, பொதுத்துறை நிறுவனங்கள் கொண்டு வேளாண்மை-அல்லாத துறைகளில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிப்பது போன்ற கொள்கைகளால் மக்கள் வேளாண்மையில் இருந்து வெளியேற ஈர்க்கப்பட்டனர்.
இந்தியாவில் ஏற்பட்ட மாற்றம்
ஆனால் இந்தியாவில் நிலை என்ன? நவதாராளமய காலத்தில், மக்கள் வேளாண்மையில் இருந்து வெளியேறினாலும், அது அதீத இன்னலின் காரணமாகவே பெரும்பாலும் இருந்துள்ளது – விவசாயிகளை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளி, வேறு வழியின்றி அவர்கள் இதர வேலைகளை தேடி செல்ல வைப்பது. இதனால்தான், இந்த நவதாராளமயம் அடிப்படையிலான “அமைப்புசார் உருமாற்ற”-த்தின் பலனை பெரும்பாலான இந்தியா மக்கள் பெறவே இல்லை. 2004-க்கு பின் சில ஆண்டுகள், இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில், மக்கள் நல திட்டங்களை கையிலெடுக்க உந்தப்பட்டதால் (ஊரக வேலைவாய்ப்பு, பொதுத்துறை காப்பு போன்றவை) இந்த காலத்தில் மட்டும், ஓரளவு சாதகமான காரணத்தால், வேளாண்மையிலிருந்து வெளியேறிய மக்கள், கல்விக்காகவும், ஆலை உற்பத்தி நோக்கியும் நகரத் துவங்கினர் (ஆலை உற்பத்தி துறையில் பணி புரிவோரின் எண்ணிக்கை 70 லட்சம் கூடியது). ஆனால் 2011-க்கு பின் மந்த நிலை துவங்கியது. இதற்கு பின் வேளாண்மையில் இருந்து வெளியேறியவர்களும் கூட நெருக்கடி காரணமாகவே வெளியேறினர்; தினக்கூலி வேலைகள் நோக்கிச் சென்றனர்; ஆலை உற்பத்தி துறையில் 2011-2017 காலத்தில் 50 லட்சம் பணியிடங்கள் மறைந்து போயின.
2017-க்கு பின் மோடி அரசின் தீவிர மக்கள் விரோத கொள்கைகளின் விளைவாக, இந்த மொத்த போக்குமே தலை கீழாக மாறியது. மந்த நிலை நெருக்கடியாக உரு மாறியது. 2017-க்கு பின்னான காலத்தில், “அமைப்புசார் உருமாற்றம்” என்பதே பின்னோக்கி செல்ல துவங்கியது. 2004-2017 காலத்தில், 6.6 கோடி பேர் வேளாண் துறையிலிருந்து வெளியேறி, இதர பணிகளுக்கு சென்றனர். ஆனால் 2017-2023 காலத்தில், 6.8 கோடி பேர் மீண்டும் வேளாண்மை நோக்கி திரும்பி வந்துள்ளனர். வேளாண் துறையில் பணி புரிவோரின் பங்கு அதிகரித்தது. ஆலை உற்பத்தி துறையில் பணி புரிவோரின் பங்கு குறைந்துள்ளது.
இப்படி வேளாண்மையை நோக்கி மக்கள் திரும்புவதை சில அடிப்படைவாத அமைப்புகள் “நல்ல” முன்னேற்றம் என வாதிடுவர் (“மூதாதையர் செய்த பணி நோக்கி செல்கிறார்கள்” என மோகப் பார்வையில் அணுகுவார்கள்). ஆனால் உண்மை என்ன? தீவிர இன்னல் நிலை மொத்த பொருளாதாரத்தையும் சூழ்ந்து விட்டது. வேளாண்மை அல்லாத துறைகளில் மக்களால் தொடரவே இயலவில்லை. உதாரணமாக, “வேலையின்மை விகிதம் குறைந்து விட்டது” என கூச்சலிடும் மோடி அரசாங்கத்தின் கீழ், பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 42%-மாக உள்ளது.
இந்த பிரச்சனை குறித்து சிபிஐ(எம்) 24-வது அகில இந்தியா மாநாட்டிற்கான வரைவு அரசியல் தீர்மானத்தில், “அரசாங்க கொள்கைகளானது, மக்களுக்கு மேலும் நிலையான, பாதுகாப்பான, கூடுதல் வருமானம் தரும் வேலைகளை உருவாக்குவதற்கு பதிலாக, முந்தைய போக்குகளை மாற்றி, ஏற்கனவே விளிம்பு நிலையில் உள்ள, குறைந்த வருமானம் மற்றும் நிலையற்ற வேலைவாய்ப்பு உள்ள வேளாண் துறையை நோக்கி தள்ளுகிறது” என்று குறிப்பிடப்படுகிறது. வேறு வழியே இன்றி, எப்படியாவது உயிர் பிழைக்க முடியுமா என்ற தேடலில் தான் மக்கள் வேளாண் துறையை நோக்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
மக்களின் வாழ்நிலை
இந்த நெருக்கடியில், மக்களின் வாழ்நிலையும், வருமானமும் எப்படி உள்ளது? இருப்பதிலேயே நிலையான பணியாக கருதப்படும் மாதாந்திர சம்பளம் பெறும் வேலைகளில் உள்ளவர்களின் நிகர சம்பளம், விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட பின், 2017-2024 இடையே ஆண்களுக்கு 6.4%-மும், பெண்களுக்கு 12.5%-மும் குறைந்துள்ளது. இந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சமூக பாதுகாப்பு உரிமைகள் இன்றி வேலை செய்கின்றனர். தினக்கூலி பெறுவோரின் நிகர ஊதியம் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. மொத்தமாக அனைத்து விதமான ஊதியம் வாங்குபவர்களையும் எடுத்துக் கொண்டால், சராசரி நிகர ஊதிய அளவு 2017-2023 இடையே ஆண்டிற்கு வெறும் 0.7% மட்டுமே உயர்ந்துள்ளது.
சரி, ஊரக பகுதி நோக்கி மக்கள் படை எடுக்கிறார்களே. அங்கே என்ன நிலை? கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசாரி நிகர விவசாய கூலி ஆண்டிற்கு வெறும் 0.1% மட்டுமே உயர்ந்துள்ளது. விவசாயம் அல்லாத துறைகளில் நிகர ஊதியம் ஆண்டிற்கு 1% என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. 2024 அரசாங்க சுற்றறிக்கையில் குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ₹449 என அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய அளவில் அனைத்து வித ஊரக வேலைகளுக்கும் கிடைக்கும் சராசரி ஊதியம் இந்த அளவை விட குறைவாகவே உள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MNREGA – நரேகா) சராசரி ஊதியம் கூட வெறும் ₹289-ஆக, குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 கோடி பேர் (விவசாயத்தில் ஈடுபடுவோரில் சுமார் பாதி) நரேகா வேலை கோருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இவர்களுக்கு போதிய நாட்களுக்கு பணியும் கொடுப்பதில்லை; ஊதியமும் கொடுப்பதில்லை. விளைச்சல் தொழிலிலும் 2017 தொடங்கியே சராசரி நிகர வருமானம் சரியத் துவங்கியது. இது ஊரக தொழிலாளர்களையும், ஏழை விவசயிகளையும் நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ விவசாயிகளும், நிதி நிறுவனங்களும் சுரண்டிக் கொழுப்பதை காட்டுகிறது. இந்த நிலை குறித்து வரைவு அரசியல் தீர்மானத்தில், ” விவசாய தொழிலாளர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது. தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தரவுகள் படி, 2021-இல் தற்கொலைகள் 5,563-ஆக இருந்தது, 2022-இல் 6,087-ஆக உயர்ந்துள்ளது” என்று குறிப்பிடப்படுகிறது.
ஆக, வேளாண்மை, விவசாயம்-அல்லாத வேலைகள் என எங்கு திரும்பினாலும் மக்கள் ஆழ்ந்து இன்னலில் வாடுகின்றனர். கிடைக்கும் சொற்ப வருமான உயர்வையும் விலைவாசி உயர்வு சாப்பிட்டு விடுகிறது. 2024-இல் கூட, உழைப்புச் சந்தையில் உள்ளவர்களில் நான்கில் ஒருவரின் தினசரி வருமானம் ₹100-ஐ விட குறைவாக உள்ளது. ஆக, இன்று நிகழும் பின்னோக்கிய “அமைப்புசார் உருமாற்றம்” என்பது, மிகவும் கவலைக்கிடமான சூழலையே உணர்த்துகிறது.
பெண்களின் உழைப்புச் சுரண்டல்.
மோடி அரசின் மற்றொரு கோஷம், “பெண்களின் உழைப்புச் சந்தை பங்கேற்பு உயர்ந்துள்ளது”. அதாவது, வரலாறு காணாத அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பெண்கள் உழைப்புச் சந்தையில் பங்கேற்கிறார்கள்; 2017-இல் வெறும் 23.3% பெண்கள் மட்டுமே பங்கேற்க 2024-இல் சுமார் 41.7% பெண்கள் பங்கேற்கிறார்கள் என்றும், அரசாங்கம் பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் வெற்றி என்றும் அறிவித்தது. பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக கோஷமிட்டது போலவே, இதுவும் கயமைத்தனமான அறிவிப்பு தான்.
இப்படி வேலைக்கு வரும் பெண்களுக்கு நல்ல, நிலையான வேலை கிடைக்கிறதா? இல்லை. நிலையான மாத சம்பளம் பெரும் பணிகளில், பெண்களின் பங்கு 2017-2024 காலத்தில் 21%-லிருந்து 16%-மாக குறைந்துள்ளது. முன்னரே பார்த்தது போல, இப்படி “உருவான” பெரும்பாலான வேலை வாய்ப்புகள் வேளாண் துறைக்கு மக்கள் திரும்பி சென்றது தான். இப்படி வந்தவர்களில் நான்கில் மூன்று பேர் பெண்கள் தான். அதுவும், பெண்கள் சொந்த குடும்பத்தின் தொழில்களில், வயல்களில் வேலை செய்வதுதான். இதற்கு முன் “வீட்டு வேலை” செய்வதாகக் கூறிய பெருமளவிலான பெண்கள், இன்று “சுயவேலை”-யில் ஈடுபடுவதாக கூறுகின்றனர் (“சுயவேலை”/”சுய தொழில்” என்பதில் சொந்த விவசாயம், வீட்டிலிருந்து சிறிய கடை நடத்துவது, சிறு தொழில் போன்றவை அடங்கும். ஆனால் ஆகப் பெரும்பான்மையான பெண்களின் வேலைகள் உயர்ந்து இருப்பது விவசாயத்தில் தான்).
வருமானம் இன்றி குடும்ப நிலங்களில் வேலை செய்யும் பெண்களின் அளவு 2017-2023 காலத்தில் 30 கோடி உயர்ந்து, இரண்டு மடங்கு ஆகியுள்ளது. குடும்ப நிலத்தில் சொற்ப வருமானத்துடன் வேலை செய்யும் பெண்களின் அளவு 20 கோடி உயர்ந்து, மூன்று மடங்கு ஆகியுள்ளது. ஆக, நெருக்கடி தீவிரமடைய, பெண்கள் எப்படியாவது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக, குடும்ப நிலத்திலும், குத்தகை நிலத்திலும், வருமானமின்றியும், மிகக் குறைந்த வருமானத்திற்கும் பணி செய்யத் துவங்கியுள்ளனர். இப்படி தீவிர உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்களைக் காட்டி தான், “பல கோடி வேலைகள் உருவாக்கிவிட்டோம்” என்று சொல்கிறது மோடி அரசு.
சரி, இப்படி வருமானமின்றி குடும்ப நிலத்தில் பெண்கள் வேலை செய்கிறார்களே, இதனால் அந்த குடும்பங்களின் ஆண்களின் வருமானம் உயர்ந்ததா? இல்லை! 2017-2024 காலத்தில், “சுய தொழில்” வேலைகளில் ஈடுபடும் ஆண்களின் சராசரி நிகர வருமானம், விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட பின், 9% குறைந்துள்ளது; இதே துறையில் பெண்களின் சராசரி நிகர வருமானம் 32% குறைந்துள்ளது. இப்படி “வீட்டை விட்டு வெளியே வந்து” பணி புரியும் ஊரக பகுதி பெண்களில் 91% பேரின் தினசரி வருமானம் ₹300-ஐ விடவும் குறைவு – அதாவது நரேகா ஊதிய அளவை விட குறைவு.
இப்படி “சுய தொழிலில்” ஈடுபடுவது தவிர பெண்கள் பணி புரியும் முக்கிய இடங்கள், “நரேகா” மற்றும் “ஆஷா” தொழிலாளர்கள். இந்த இரண்டையுமே குழி தோண்டி புதைக்க நினைக்கிறது மத்திய அரசு. “ஆஷா” தொழிலாளர்களின் வேலை பளு கொரோனா காலத்திலும், அதன் பின்னும் கடுமையாக உயர்ந்துள்ள வேளையில், அவர்களின் ஊதியம் அடிமட்ட அளவிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் “தேசிய சுகாதார திட்ட”த்திற்கு ஒதுக்கப்படும் நிதி 2024-2025 ஆண்டில் (விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட பின்) வெட்டப்பட்டுள்ளது. நரேகா திட்டத்திற்கான நிதி பாக்கியை மாநில அரசாங்கங்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பதில்லை.
முன்பு பெரும்பாலான பெண்கள் “வீட்டு வேலை”யில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முதலாளித்துவம் பெண்களின் உழைப்பை மறைமுகமாக சுரண்டியது. இப்போது அவர்களின் வீட்டு வேலை பளு குறைந்ததா? இல்லை! அதோடு சேர்ந்து, உழைப்புச் சந்தை சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் – அதாவது பல கோடி பெண்கள் நேரடி மற்றும் மறைமுக சுரண்டல் என இரண்டிற்கும் ஆளாகின்றனர்.
உழைப்புச் சுரண்டலின் வடிவ மாற்றம்
இவ்வாறு தீவிர நெருக்கடி காலத்தில், மக்களை கடுமையாக சுரண்ட நூதன வழிமுறைகளை கையாள்கிறது முதலாளித்துவம். நகர்ப்புற வேளைகளில் தொழிலாளர்களின் நிகர ஊதியம் உயராமல் பாதுகாத்து, புதிய போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், இருக்கும் தொழிலாளர்கள் கசக்கி பிழியப்படுகின்றனர். இதனால் பெருமளவிலான மக்கள் ஊரக பகுதிகளுக்கு, நெருக்கடியில் வாடும் வேளாண் துறைக்கு தள்ளப்படுகின்றனர். முக்கியமாக, கூலி இன்றியும், மிகக் குறைந்த வருமானம் பெறும் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. கொரோனா காலத்திலும், அதற்கு பின்னும் பொருளாதார வளர்ச்சியை உயர்த்திப் பிடித்தது வேளாண் மற்றும் கால்நடை துறை தான் என தரவுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த துறையில் பெரும்பாலானோரின் நிகர வருமானம் குறைந்துள்ளது. இப்படி அனைத்து தரப்பு மக்களின், குறிப்பாக பெண்களின், உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தி தான் இந்தியாவில் நெருக்கடி காலத்தில் தொடர்ந்த முதலாளித்துவ வளர்ச்சியும், இலாப வேட்டையும் சாத்தியமாகின்றது.
ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் துவக்க காலத்தில், நிலப்பிரபுத்துவ வேளாண் துறையில் இருந்து மக்களை வெளியேற்றி, ஆலைகளில் பணி அமர்த்தியதன் மூலமே முதலாளித்துவ வளர்ச்சி சாத்தியமானது. ஆனால் இன்றோ, சீரழிவுமிக்க ஏகாதிபத்திய நிலையில் நிற்கும் முதலாளித்துவ முறை, முற்போக்கு அம்சங்கள் அனைத்தும் நீங்கி, சுரண்டலை நோக்கி மட்டுமே இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட “பின்னோக்கிய அமைப்புசார் உருமாற்றம்” என்ற போக்கு தொடர்ந்து நீடிக்கும் நிலையான அம்சம் என்று கிடையாது. புதிய சூழல்கள் உருவாகும் பொழுது, மீண்டும் மக்கள் வேளாண்மையில் இருந்து வெளியேறலாம். ஆனால் தன் சுரண்டல் முறையை தக்க வைத்துக் கொள்ள முதலாளித்துவம் சமூகத்தை பின் நோக்கியும் நகர்த்தும் என்பதை இது காட்டுகிறது.
அரசின் பங்கு
இப்படிப்பட்ட நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களின் வருமானம் மற்றும் வாங்கும் சக்தியை உயர்த்தி, தொழில் துறை வளர்ச்சிக்கு வித்திட, அரசாங்க செலவினங்களை அதிகப்படுத்தி, நரேகா போன்ற திட்டங்களை விரிவாக்கி, ஊரக பகுதிகளுக்கு புத்துயிர் அளித்து, பொதுத்துறை முன்னெடுப்புகள் மற்றும் விலைவாசி கட்டுப்பாடுகள் மூலம் வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்து, கட்டுமான வசதிகளை உருவாக்கி, கிராக்கியை கூட்டுவது மூலம் சிறு குறு நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பது அவசியம்.
ஆனால் இதை ஏதும் செய்யாமல், செல்வந்தர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரி விலக்கு அளித்து, மூலதன சுரண்டலை ஏதுவாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டுக் களவாணி அரசை தான் இந்தியா பெற்றுள்ளது. இந்த சுரண்டலை தீவிரமாக்க தான் பொதுத்துறை மற்றும் பொது சேவைகளின் தனியார்மயத்தை அதிகரிக்கிறது. இதை எதிர்த்த உழைக்கும் மக்கள் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க அனைத்து இன, மத, சாதி அடிப்படையிலான பிரிவினைகளை தூண்டுகிறது.
இக்காலத்தில் தான் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் அளிக்கும் நேரடி பண உதவி திட்டங்கள் கூடியுள்ளன (எ.கா.: பி.எம் கிசான் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர வருமானம் போன்றவை). இந்த திட்டங்கள் மக்களுக்கு நவதாராளமய சுரண்டலில் இருந்து சற்றே நிவாரணம் அளித்தாலும், கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இழிவான சலுகைகளை ஒப்பிடுகையில் இது சிறிதளவே என்றாலும், மக்களுக்கு தரமாக, நிலையான வருமானம் அளிக்கும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கு இவை மாற்று ஆகாது. ஆனால் இந்த திட்டங்கள் மூலம் முதலாளித்துவம் மீதான மக்கள் கோபத்தை திசை திருப்பும் முயற்சிகள் நிகழ்கின்றன. மேலும் “சமையல் எரிவாயு மானியம்” வெட்டப்பட்டது போல, இந்த திட்டங்கள் எப்போது வேண்டுமானாலும் வெட்டப்படலாம்.
பிரிக்கப்பட்ட, எதிர்ப்பை வெளியிடாத குடிமக்களை உருவாக்கி, ஜனநாயகத்தை அழிக்க அரசும், அரசு சார்ந்த அமைப்புகளும் தீவிரமாக முயற்சிக்கின்றன. இதுவே நவதாராளமய, ஏகாதிபத்திய சுரண்டல் முறையின் தேவையாகவும் இருக்கிறது.
நிறைவாக
இப்படிப்பட்ட மாறுபட்ட சூழலில், நெருக்கடி நிலை மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால் இது இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பையும் உருவாக்குகிறது. அனைத்து தரப்பு மக்களின் வருமானமும் தேங்கி வரும் நிலையில், பல்வேறு வகையான உழைக்கும் மக்களிடையிலான ஆழமான ஒற்றுமையை வளர்க்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அண்மை காலங்களில் இடதுசாரி அமைப்புகளின் சக்தியை கூட்டிய ஊரகப் பகுதி மக்களின் போராட்டங்களை தீவிரப்படுத்துவது அவசியம் ஆகிறது. இது நாள் வரை வீட்டு வேலை மூலம் மறைமுகமாக சுரண்டப்பட்டு வந்த பெண்கள் இப்போது நேரடியாக சுரண்டப்படுகின்றனர் – இது பெண்களை அணி திரட்ட ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்குகிறது. அதி தீவிர முதலாளித்துவ சுரண்டலில் இருந்து மக்கள் வெளியேற இடதுசாரி இயக்கங்கள் வலுப் பெறுவது அவசியம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
