இந்துத்துவ சக்திகள் இந்திய வரலாற்றில் செய்யும் திரிபுகள்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு
கடந்த பல வருடங்களாகவே, இந்துத்துவா-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வரலாற்றை தங்களின் பிரச்சாரத்திற்கான முக்கியக் கருவியாக மாற்றியுள்ளன. தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள், நாணயவியல், ஆவணகாப்பக ஆதாரங்கள் மற்றும் இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்து, வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றை சிதைக்க, அவர்கள் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய முயற்சிகள் எப்போதும் வரலாற்றை சிதைத்து புதிர்மயமாக்குகின்றன, அதனால் சிறந்த மாணவர்களால் கூட புராண புனைவுகளை வரலாற்றிலிருந்து பிரிக்க முடியவில்லை. சமீபகாலமாக, நமது பாடப்புத்தகங்களிலும் இத்தகைய சிதைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் இடம் பெற்றுள்ளன. சில முக்கிய சிதைவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ஹரப்பா கலாச்சாரம்
இந்துத்துவ கூற்று: ஹரப்பா கலாச்சாரம் இந்திய துணைக்கண்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பழமையான நகர்ப்புற கலாச்சாரமாகும். உலகின் மற்ற நாகரிகங்களைவிட இந்திய நாகரிகத்திற்கு அதிக தொன்மை இருப்பதாகக் கூறும் இந்துத்துவ சக்திகள், ஹரப்பா கலாச்சாரம் வேதகாலம் என்று வாதிட்டு, அதை சரஸ்வதி நாகரிகம் என்று அழைக்கின்றனர். இந்த கூற்றுகள், காளிபங்கன் போன்ற சில இடங்களில் கிடைத்த ‘அக்கினி பீடங்கள்’, சுர்கோதடாவில் கிடைத்த ‘குதிரை’, சில முத்திரைகளில் காணப்பட்ட ‘பசுபதி சிவன்’ மற்றும் ‘சப்தர்(ரி)ஷி’ போன்ற செதுக்கப்பட்ட சில வேலைப்பாடுகள் பற்றிய சங் பரிவாரத்தின் விளக்கம் மற்றும் தார் பாலைவனத்தில் காளிபங்கன் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் ககர் ஹக்ரா நதி காணாமல் போனதற்கான புவியியல் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. (வலதுசாரி ஆதரவு) வரலாற்றாசிரியர் எஸ்.பி. குப்தா, ககர் ஹக்ரா உண்மையில் குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் பகுதியில் (பாலையாகத் திரிந்த பகுதி) பாய்ந்தது. எனவே இது ஒரு ‘இந்திய’ நதி என்று வாதிட்டார். முன்னதாக இது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் திரிவேணியின் ஒரு பகுதியாக இருந்தது; இது பிரக்யாராஜ் என தற்போது பெயர்மாற்றம் பெற்றுள்ள அலகாபாத் பகுதியில் பாய்ந்தது. (வலதுசாரி ஆதரவு) தொல்லியல் ஆய்வாளர் எஸ். ஆர். ராவ் ஹரப்பா எழுத்துகளை சமஸ்கிருதம் என்று நிலைநாட்ட முனைந்தார். ஹரப்பா நாகரீகம் காணாமல் போனது சரஸ்வதி நதியின் மறைவு மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவற்றின் விளைவாக என வாதிடப்படுகிறது. பழங்குடி மக்களுடனான மோதல்களும் காரணம் என்று கூறப்படுகிறது.
அறிவியல் கூற்று: ககர் ஹக்ராதான் பழம்பெருமை வாய்ந்த சரஸ்வதி நதி என ஒருவர் ஏற்றுக்கொண்டாலும் இந்த நதியை சுற்றிதான் கலாச்சாரம் வலுவாக நிலைத்திருந்தது என்பதைக் காட்ட ஆதாரம் எதுவும் இல்லை. பெரும்பாலான அகழாய்வு தளங்கள் சிந்து ஆற்றின் கரையில் உள்ளன; மேலும், ஹிமாச்சல பிரதேசம், மேற்கு உ.பி. மற்றும் ஆப்கானிஸ்தான் வரை நீண்டுள்ள சிந்து நதியின் கிளை நதிகளை சுற்றி அமைந்துள்ளன.
சுர்கோடாவில் காணப்பட்ட வேதகால ஆரியரின் இருப்பைக் குறிக்கும் குதிரை உருவம் போலியானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது அகழ்வாய்வுத் தளங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படும் கற்பனையான ஒற்றைக் கொம்புடைய குதிரை முத்திரையின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அதேபோல், அக்னி பீடங்கள் உள்ளூர் அடுப்புகளை ஒத்திருந்தனவேயல்லாது, வேத கால ஹோம குண்டங்களை ஒத்திருக்கவில்லை. ககர் ஹக்ராவை சரஸ்வதியுடன் ஒப்புமைப்படுத்திக் காண்பது நிராகரிக்கப்பட்டது. ஏனெனில் இது மத்திய ஆசிய மக்களால் (அநேகமாக ஹெல்மண்ட்), அவர்கள் இடம்பெயர்ந்த பொழுது கண்டுபிடிக்கப்பட்ட நதியாக இருக்கலாம் எனவும், பிரயாகாவுடன் இணைந்த நதி, தற்போது ஹரியானாவில் உள்ள சிர்சுதி நதியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஹரப்பா எழுத்துக்களை சமஸ்கிருதத்துடன் அடையாளப்படுத்துவது நிராகரிக்கப்பட்டது. எழுத்துருவின் கணினி உருவக ஆய்வுகள் அதை திராவிட மாதிரிவகை என்று அடையாளம் கண்டுள்ளது. சமீபத்தில் ராக்கி கர்ஹி (ஹரியானா) மரபணு மாதிரியின் பகுப்பாய்வு, பண்டைய தென்னிந்திய தொல் பழங்குடியினரின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக அடையாளம் கண்டுள்ளது. இறுதியாக, புலம்பெயர்ந்தோருடன் தெளிவாக அடையாளம் காணக்கூடிய பேராக், கந்தர்வ கல்லறை கலாச்சாரம் மற்றும் கல்லறை-H உள்ளிட்ட கலாச்சாரங்களின் தரவுகள், ஹரப்பா நாகரிகத்திற்குப் பிந்தையவை; இவை ஹரப்பா நாகரிகம் (சுமார் கிமு 2250 – 1750) மறைந்த பின்னரான காலத்தைச் சேர்ந்தவையாகும். (எனவே ஹரப்பா கலாச்சாரம் வேதகால கலாச்சாரம் என்பதற்கு அறிவியல் அடிப்படை இல்லை)
2.ஆர்யவர்தா மற்றும் பாரதவர்ஷா
இந்துத்துவ கூற்று: இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் சிந்து-கங்கை சமவெளிகளை உள்ளடக்கிய இந்தியாவை ஆர்யவர்தா என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சிலர் இப்பகுதியை ஆரியர்களின் தாயகம் என்று அழைக்கும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அயோத்தியில் ராமர் கோவிலுக்கான ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தின்போது, அயோத்தியை ஆரிய வர்த்தத்தின் மையப்பகுதியாகக் காட்டும் வரைபடங்கள் தோன்றியபொழுது இந்தக் கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது. வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இதிகாச புராண பாரம்பரியத்தின் வளர்ச்சி அனைத்தும் ஆரியவர்த்தத்திற்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளது. ஆரியவர்தாவின் பூகோள பகுதி பாரதவர்ஷ பூகோள பகுதியுடன் இணைத்து “பாரத நிலப்பகுதி” என உருவாக்கப்பட்டது. புவியில் தோன்றிய பழம்பெரும் தீவுகளில் ஒன்றான மேரு மலைக்கு தெற்கே உள்ள ஜம்புத்விபாவின் ஒரு பகுதியாக இந்த நிலம் கருதப்படுகிறது. வேதக் கதையின்படி யயாதியின் வழித்தோன்றலான புகழ்பெற்ற மன்னர் பரதன், இந்த நிலத்தின் மீது ஆரிய மேலாதிக்கத்தை நிறுவியவராகக் கருதப்படுகிறார். இவர்களின் இதிகாச, புராண கதாநாயகர்களும் பொதுவாக பாரத வர்ஷத்துடன் தொடர்புடையவர்கள்; குறிப்பாக மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவை பாரத வர்ஷத்துடன் தொடர்புடையவை. இந்துத்துவ நோக்கில் பார்க்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் ஏறக்குறைய, அனைத்து இதிகாச புராணங்களின் வீரர்கள் மற்றும் அறிவாற்றல் மிக்கவர்களுக்கும் இம்மரபுகளில் ஒப்புமைகளை பாரம்பரிய அடிப்படையில் கண்டறியும் முயற்சியில் மும்முரமாக உள்ளனர்.
அறிவியல் கூற்று: ஆர்யா – பிராகிருத மொழியில் அம்மா, தெற்கு பகுதி மொழியில் அய்யா என்ற சொல் ‘மேன்மைதங்கிய’ என்று பொருள்படுமேயன்றி ஓர் இனம் அல்லது மொழியைக் குறிக்கவில்லை. எந்தவொரு குழுவிலிருந்தும் உன்னதமானவர்கள் ஆரியராக சித்தரிக்கப்படலாம். மற்றும் பௌத்தர்கள் தங்கள் மேன்மையான உண்மைகளைக் (ஆர்ய சத்யா) கொண்டிருந்தனர்.
ஐரோப்பிய அறிஞர்கள் இந்தோ-ஆரிய மக்கள் மற்றும் மொழிகளின் குழுவைப் பற்றி விவாதித்தபோதுதான் இந்த வார்த்தை ஒரு இன மற்றும் மொழியியல் பொருளைப் பெற்றது. அவர்கள் தெற்கில் உள்ள திராவிடக்குழுவை முற்றிலும் வேறுபடுத்தி காட்டினர்; எனவே இரு குழுக்களும் மொழி மற்றும் இன அடையளம் பெற இது காரணமாயிற்று.
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் வின்சென்ட் ஸ்மித், ஆரியப் படையெடுப்பை இந்திய வரலாற்றின் தொடக்கமாகக் கருதினார். அதைத் தொடர்ந்து வேத காலம் மற்றும் இதிகாச காலம் என்ற பதங்கள் தேசியவாத மற்றும் இந்துத்துவ வரலாற்றாசிரியர்களால் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரிய வர்த்தம் என்பது ஆரியர்களின் பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.
இந்தப் பார்வையில் கணிசமான மாற்றங்கள் தேவை என்று பின்னர் வந்த ஆராய்ச்சிகள் காட்டின. ஹரப்பா நாகரிகம் வழக்கமான ஆரிய உருவகத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருந்தது. ஆரியப் படையெடுப்பு பற்றிய கருத்தாக்கம் மத்திய ஆசியா மற்றும் தற்போதைய பாகிஸ்தானில் செய்யப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியமைக்க வேண்டிய தேவையை உருவாக்கியது. இது குறைந்தது இரண்டு மத்திய ஆசிய புலம் பெயர்வுகள் இருந்ததைக் காட்டியது. மேலும் புலம் பெயர்வுகள் படையெடுப்பு மூலம் நிகழ்ந்த வெற்றி என கருத முடியாது. வட இந்தியாவில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், சாம்பல் வர்ணம் பூசப்பட்ட பொருட்களை பயன்படுத்திய மக்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இடம்பெயர்ந்ததையும் அவர்கள் உள்ளூர் மக்களுடன் கலந்திருப்பதையும் காட்டுகின்றன. நகர வீழ்ச்சிக்குப் பின்னர் ஹரப்பர்களும் மற்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர். இதுவும் இனக்கலப்பிற்கு வழிவகுத்தது. ஆரம்பகால இந்தியாவின் மக்கள்தொகை இந்த உள்ளூர் மக்களின் கலவையின் விளைவாக இருந்தது. இது ஆரியம் என்று அழைக்கப்பட முடியாது. மரபணு ஆய்வுகள் மக்கள் தொகையானது பண்டைய தொன்மையான தென்னிந்திய (AASI) (ஏஏஎஸ்ஐ), பண்டைய தொன்மையான வட இந்திய AANI (ஏஏஎன்ஐ) மரபணுக்கள் மற்றும் அவற்றின் கலப்பாகவும், வட இந்திய அவற்றின் தூய வடிவத்தில் வடமேற்கு இந்தியாவில் மட்டுமே உள்ளதாகவும் வரையறுத்துள்ளன. எனவே, ஆரிய வர்த்தத்தின் பெரும்பகுதி கலப்பின மக்களின் நிலமாகவே இருந்தது. மேலும் மைட்டோகாண்ட்ரியல் மரபணுவின் படி, பெண்களின் கொடிவழியான ரத்தக்கலப்பு உறவுகள் இந்திய எல்லைக்குள் மட்டுமே உள்ளன; ஆண்களின் ஒய்-குரோமோசோம்கள் மட்டுமே நம்மை மத்திய ஆசியாவிற்குக் கொண்டு செல்கின்றன. இது, புலம்பெயர்ந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பதையும், அவர்கள் இங்கு வாழ்ந்துவந்த பெண்களுடன் கலந்திருப்பதையும் காட்டுகிறது.
பரத வர்ஷம் என்பது ஒரு புராணக் கருத்து மற்றும் பிராமணர்களின் புவியியலின் ஒரு பகுதியாகும். இருப்பினும், ஜம்புத்வீபா புவியியலைப் பகிர்ந்து கொள்ளும் புத்த மற்றும் சமண நூல்கள் உட்பட ஆரம்பகால நூல்கள் எவையும், பாரதவர்ஷா என்று அழைக்கப்படும் எந்த இடத்தையும் குறிப்பிடவில்லை. இந்தச் சொல் கிபி ஐந்தாம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் இருந்து மட்டுமே காணக் கிடைக்கிறது. எனவே, இது இந்தியாவிற்கு ஒரு பிற்காலச் சொல்லாகும். ஆர்ய பரதனுடன் ஒப்புமைப்படுத்தி அடையாளம் காணப்பட்ட பரதவர்ஷத்தின் ரிஷிகள், அனைவருமே புராண அடிப்படையிலான தோற்றங்களே. புராணங்களை காலவரிசைப்படுத்தும் ஆய்வுகள், பெரும்பாலான புராணங்கள் கிபி 1000த்தில் இயற்றப்பட்டதாகவும், மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் இறுதிப்படுத்தப்பட்ட பதிப்புகளும் அப்போதுதான் இயற்றப்பட்டதாகவும் காட்டுகின்றன. மத்திய ஆசியக் குடியேற்றங்கள் மற்றும் புராணங்களைப் பிரிக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பெரும்பாலான புராண இதிகாசக் கதைகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட கற்பனைகள் எனவும், அதன் கதாநாயகர்கள் உண்மையாக வாழ்ந்த மனிதர்களுடன் ஒப்புநோக்கி அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதையும் உணர்த்துகின்றன.
3. இந்து என்ற சொல்
இந்துத்துவ கூற்று: இந்து என்பது ஒரு தனித்துவமான மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; மேலும் ஒரு வித்தியாசமான உலகக் கண்ணோட்டத்தையும் இது பிரதிபலிக்கிறது. இது 4-5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் அதை 8-10 ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்றும் குறிப்பிடுகின்றனர். குஜராத் கடற்கரையில் கடல் தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள் 8,000 ஆண்டுகள் பழமையானவை என்றும், இது கடல்கோளால் அழிந்ததாகக் கூறப்படும் துவாரகையின் நினைவுச்சின்னங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. ஹஸ்தினாபூர், அஹிச்சத்ரா, இந்திரப்பிரஸ்தம், அயோத்தி மற்றும் காசி போன்ற நகரங்கள் இதிகாச, புராண பாரம்பரியம் கொண்ட கடந்த கால நகரங்கள் எனப்பட்டன. கோயில்களுக்கும் இதே போன்ற தொன்மை வழங்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியா, துருக்கி, கிழக்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா உட்பட உலகின் பிற பகுதிகளுக்கு இந்து மதம் மற்றும் கலாச்சாரம் பரவியது தொடர்பான கருத்தாக்கங்களும் உள்ளன. கடந்த காலத்தில் புகழ் பெற்றிருந்த இந்து சாம்ராஜ்யம் தொடர்பான இத்தகைய கதைகள் உருவாயின. உள்நாட்டு முரண்பாடுகள் மற்றும் ‘வெளிநாட்டு’ படையெடுப்புகள் புகழ்பெற்ற இந்து இந்தியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
அறிவியல் கூற்று: இந்த விவரிப்பு முற்றிலும் கட்டுக்கதை மற்றும் கிடைக்கக்கூடிய தகவல்களுடன் இவற்றிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்து என்ற சொல் பூர்வீகமானது அல்ல. ஆரம்பத்தில் பெர்சியர்களால் சிந்து நதிப் படுகையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கிரேக்கர்களால் அதே பாணியில் பயன்படுத்தப்பட்டது. ஏராளமான மத வழிபாட்டு முறைகள் மற்றும் இந்தியாவில் உள்ள தத்துவங்களுக்கும் பொதுவான பெயர் இல்லை. அவற்றின் தனித்தன்மைகளால்தான் நாம் அறியப்படுகிறோம். இவற்றில் நாத்திகர்கள், அஞ்ஞானிகள், உலகாயதவாதிகள், குறுங்குழுவாதிகள், ஹெடோனிஸ்டுகள் (உலக வாழ்வு மகிழ்ச்சிக்காக மட்டுமே என்ற கொள்கை கொண்டோர்) எளிய தர்க்கவாதிகள் என பல பிரிவினர் மட்டுமல்லாது ஆன்மீகத்தின் பல்வேறு பிரிவினரும் உள்ளனர். இதிகாச-புராண பாரம்பரியத்தில் குறிப்பிடப்படும் நகரங்களில் பெரும்பாலானவை தொல்பொருள் ரீதியாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர்களது. காவிய நாயகர்கள் இந்தக் காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது நிலைநாட்டப்படவில்லை. சமகாலத்திய உபநிடதங்கள் அல்லது பௌத்த நூல்கள் கூட சில ராஜ்யங்கள் மற்றும் வம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன; ஆனால் அவை காவிய நாயகர்களை முற்றிலும் வேறுவிதமாகச் சித்தரிக்கின்றன. இந்த காவிய நாயகர்கள் தொடர்ந்து கற்பனை ரீதியான பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளனர்.
எனவே, நமக்குக் கிடைக்கும் இதிகாசங்களில் உள்ள கதைகளை வரலாற்றினை நிலைநாட்டுவதற்கு அடிப்படையாகக் கருத முடியாது. கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு முன் கோயில்கள் சார்ந்த மதம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிராமணர்களின் பலிச் சடங்குகளுக்கு கோயில்கள் தேவையாக இருக்கவில்லை. மற்றும் மதச் சின்னங்களுடன் கூடிய ஆரம்பகால நினைவுச்சின்னங்களில் பெரும்பாலானவை தூண்கள் மற்றும் ஸ்தூபிகளாகவே இருந்தன. அவையும் எந்த இந்துக் கடவுளையும் சித்தரிக்கவில்லை. விஷ்ணு, சிவா அல்லது சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளின் இந்துக் கோவில்கள் வழிபாட்டு மையங்களாக முறைகளாக உருவெடுத்து ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டன. மத்திய கால இந்தியாவில் மடங்களும் மடாதிபதிகளும் ஆச்சார்யாக்களும் உருவான பின்னர்தான் விஷ்ணு, சிவன் அல்லது சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு குழுவினரின் இந்துக் கோவில்கள் வழிபாட்டு மையங்களாகவும் வழிபடும் முறைகளாகவும் உருவெடுத்தன. பெருங்கோவில் முறைகள் உருவாயின. கோவில்களுக்கு செல்வங்களும் ஏனைய வளங்களும் தந்து மன்னர்களால் ஆதரிக்கப்பட்டன. அப்போதும், அவர்கள் இந்துக்கள் என்று அழைக்கப்படாமல், வைணவர்கள், சைவர்கள், சாக்தேயர்கள், மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். இந்தப் பிரிவுகளின் வளர்ச்சி, பௌத்தம் மற்றும் சமணம் உள்ளிட்ட முந்தைய தத்துவ மற்றும் அறநெறி இயக்கங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் இந்தியாவின் மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. பல மக்கள் பிரிவினரிடையே ஏற்பட்ட இனக்கலப்புகள், பல மொழிகள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு இட்டுச்சென்றது; இது ஒத்திசைவான தன்மையுடன் இருந்த பிராமணர் குழுவையும் கூட பாதித்தது. மத்திய கால இந்தியாவில் வளர்ந்து வந்த பிராந்திய கலாச்சார சமூகங்கள் இந்த பன்முகத்தன்மையின் விளைவேயாகும். இந்துத்துவ கருத்தாக்கங்கள், ஒற்றை தன்மையுடைய கண்ணோட்டத்தை வலியுறுத்துவதன் மூலம் இந்தப் பன்முகத்தன்மையை மறுக்கின்றன.
4. முஸ்லீம் படையெடுப்புகளும் இந்து கலாச்சார வீழ்ச்சியும்
முஸ்லீம்களால் இந்து நாகரிகம் வீழ்ச்சியடைந்தது என்பது இந்துத்துவ வரலாற்றில் மேலாதிக்கம் செலுத்தும் கதையாகும். அவை பல வடிவங்களில் உலவுகின்றன. மிக முக்கியமான சிலவற்றைப் பட்டியலிடலாம்.
அ) கோவில்கள் அழிப்பு:
இந்துத்துவ கூற்று: கஜினி முகம்மதுவால் அழித்ததாகக் கூறப்படும் குஜராத்தில் உள்ள சோமநாத் கோவிலில் தொடங்கி, முஸ்லிம் படையெடுப்பாளர்களின் முக்கிய இலக்கு கோவில்கள் என்பதை நிரூபிக்க இந்துத்துவ வரலாறு முயல்கிறது. இந்தியா முழுவதும் படையெடுப்பாளர்களால் புனிதத்தன்மை இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல கோயில்களைத் தவிர, முஸ்லிம் ஆட்சியாளர்கள், இளவரசர்கள் மற்றும் தளபதிகளால் அழிக்கப்பட்ட சுமார் 3,000 கோயில்களின் பட்டியலை விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கியுள்ளது. பாதுகாப்பின்மை மற்றும் அச்சம் காரணமாக ஏராளமான இந்துக்கள் புதிய வாழ்விடம் தேடி தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர். ஏராளமான கோயில்கள் சூறையாடப்பட்டன மற்றும் அவற்றின் கொள்ளை படையெடுப்பாளர்களின் கருவூலங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டது. கோயில்களின் கட்டிடக்கலை மற்றும் கலைநுணுக்கங்களும் கூட மசூதிகள் கட்டப் பயன்படுத்தப்பட்டன.
அறிவியல் கூற்று: சில படையெடுப்புகளால் கோவில்கள் அழிந்தன என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், முஸ்லிம் அரசர்கள், அடக்குமுறை மற்றும் பயங்கரவாதத்தின் திட்டமிட்ட உத்தியாக கோவில் அழிப்பைப் பயன்படுத்தினர் என நிரூபிக்கப்படவில்லை.
முஸ்லீம் ஆட்சியாளர்கள் கோயில்களுக்கு வழங்கிய மானியங்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. அதில் ஆட்சியாளர்கள் இந்து கடவுள்களைக் காப்பவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். சோமநாத ஆலயம் உட்பட அழிக்கப்பட்ட பல கோயில்கள் பிற்காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட அல்லது புனரமைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
விஎச்பி-யின் சொந்த வரலாற்றாசிரியர்களால் கூறப்படும், நம்பகத்தன்மையற்ற வரலாற்றாசிரியர்களான எலியட் மற்றும் டாட்சன் ஆகியோர் செவிவழி ஆதாரம் மற்றும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் தயாரித்த பட்டியல் மிகைப்படுத்தப்பட்டதாகும். இதனை அடிப்படையாக கொண்டே அழிக்கப்பட்டதாக கூறப்படும் கோவில்களின் பட்டியலை வி.எச்.பி. தயாரித்துள்ளது.
மற்றொரு காரணமும் விஎச்பியின் கோவில் அழிப்பு மதிப்பீடுக்கு எதிரானது. முஸ்லிம்களில் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே அரசியல் படையெடுப்பாளர்களாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். ஏராளமான முஸ்லீம்கள் வர்த்தகர்களாக இந்தியாவிற்குள் நுழைந்து, நிலம் மற்றும் கடல் வழியாக வளமான குடியேற்றங்களை நிறுவினர். அத்தகைய குடியேற்றங்களில் கோவில்களை அழித்ததற்கு அல்லது இழிவுபடுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரமாக பரப்பி, அதே சமயத்தில் இந்து மதத்தையும் அரவணைத்து வந்த சூஃபி இஸ்லாமிய பிரிவினரின் இடம்பெயர்வுகளும் இருந்தன. சூஃபி பிரிவினரின் வருகையின் பொழுது கோவில்கள் தாக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. உண்மையில் சூஃபி வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளூர் இந்துக்கள் உட்பட பல பக்தர்கள் சென்றுவந்தனர். அழிப்பு மற்றும் கொள்ளை என்பது இந்துக்கள் உட்பட அனைத்து மத்திய கால ஆட்சியாளர்களாலும் பயன்படுத்தப்பட்ட அரசியல் உத்திகளாகும். காஷ்மீர் ஆட்சியாளர்களிடம் கோவில்களை அழிப்பதற்காகவே தேவோத்பதன நயாகா என்ற தனி அதிகாரி இருந்தார். சில முஸ்லீம் ஆட்சியாளர்களின் அரசியல் ஆயுதத்தை ஒட்டுமொத்த முஸ்லிகளின் வியூகம் என்று அழைக்க முடியாது.
ஆ) நினைவுச்சின்னங்கள் மற்றும் கோவில்களை மாற்றுதல்
இந்துத்துவ கூற்று: இந்துக்கள் தங்கள் கட்டிடக்கலை, உலோகவியல் மற்றும் கலாச்சார திறமைக்காக நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். முஸ்லீம்கள் இந்தக் கலைகளையும் கைவினைகளையும் அழித்ததோடு மட்டுமல்லாமல், தங்களின் முக்கிய நினைவுச்சின்னங்களை அமைப்பதற்கும் இந்துக்களின் திறமைகளைப் பயன்படுத்தினர். டெல்லியில் உள்ள மெஹ்ராலியின் இரும்புத் தூணிலிருந்து தாஜ்மஹால் வரையிலான நினைவுச்சின்னங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அறிவியல் கூற்று: பல்வேறு சுல்தான்கள் மற்றும் பிற வெற்றியாளர்களின் ஆட்சியின் கீழ், எந்த நேரத்திலும் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் வீழ்ச்சியடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் மட்டுமல்ல; பிற பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களும் முக்கிய நகரங்களில் குவிந்துள்ளனர். இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கும் ஒரு சாதனத்தை இந்திய உலோகவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கலாம்; ஆனால் இரும்புத் தூண் கட்டப்பட்டபோது அதைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. பாரசீக கட்டிடக் கலைஞர்கள் மற்றும் இந்தியர்களின் திறமைகள் இணைந்ததற்கு சான்றுகள் உள்ளன.
இந்தியர்கள் கலப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கிய சிறந்த ஷர்கி கட்டிடக்கலை போன்றவை மத்திமக்காலம் முழுவதும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது. இதே போன்ற கலப்பு வடிவங்கள் ஓவியம், சிற்பம், பூத்தையல், இசை, நடனம் மற்றும் இந்தி மற்றும் உருதுவின் மொழி வடிவங்களில் கூட உருவாக்கப்பட்டன. சவாய் ஜெய் சிங் போன்ற இந்திய ஆட்சியாளர்களால் அவர்களின் வானியல் அறிவு தங்கள் ஆய்வுக்கூடங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஜெகநாத் பண்டிதர் மற்றும் கணேச சர்வஜ்னா போன்ற அறிஞர்கள் தங்கள் கையேடுகளை எழுதவும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். இந்தியாவில் கணிசமான அளவில் பரவிய யுனானி கலப்பு மருத்துவ வடிவமும் இருந்தது. தாஜ்மஹாலைப் பொறுத்தவரையில் இத்தாலிய வடிவமான பியட்ரா துராவும் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
இ) இந்துப் பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்
இந்துத்துவ கூற்று:
முஸ்லீம்கள் பெண்களை அடிமைத்தனத்தின் கீழ் வைத்திருக்க அவர்கள் மீது திட்டமிட்டமுறையில் துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தினர்.
அறிவியல் கூற்று: டெல்லி சுல்தானகத்தின் சில நிகழ்வுகள் மற்றும் முகலாய ஹரேமின் காதல் சித்தரிப்புகளின் அடிப்படையிலான இந்த வாதம் மீண்டும் உண்மைக்குப் புறம்பானது. முஸ்லீம் ஆட்சியாளரின் பெண்கள் மீதான பாலியல் மற்றும் ஆணாதிக்க மனப்பான்மை, இந்தியாவிலோ அல்லது பிற இடங்களிலோ உள்ள மற்ற மத்திய கால ஆட்சியாளர்களின் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டதாக இல்லை. இந்திய ஆட்சியாளர்களின் வரலாறுகள், கோயில் நடனக் கலைஞர்களின் கதைகளால் நிரம்பியுள்ளன, தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பணிப்பெண்கள் மற்றும் அரச குடும்பப்பெண்களை அவர்களின் மனைவிகளாக்கிக் கொண்ட டெல்லி சுல்தான்கள், பாதுஷாக்களின் அணுகுமுறைகள் இவர்களுடையதிலிருந்து வேறுபட்டவை அல்ல. இந்த அம்சம் தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஜோஹர் அல்லது கூட்டு தற்கொலை செய்து கொள்ளும் கதைகளால் சோடிக்கப்பட்டுள்ளது. மிகவும் கொண்டாடப்பட்ட சம்பவத்தை, கவிஞர் மாலிக் முகமது ஜெய்சி தனது பத்மாவத் கவிதையில் விவரிக்கிறார்; இதில் அலாவுதீன் கில்ஜி சித்தோரின் ரத்தன் சிங்கின் மனைவி பத்மாவத்தை விரும்புகிறார்; அவர் மறுக்க, அலாவுதீன் கோட்டையைக் கைப்பற்றுவதன் மூலம் பழிவாங்குகிறார். ஆக்கிரமிப்புக்கு முன், பத்மாவத் உட்பட கோட்டையின் பெண்கள் ஜோஹர் கூட்டு தற்கொலை செய்கிறார்கள் என கவிஞர் குறிப்பிடுகிறார். இருப்பினும், அலாவுதீனின் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஜெய்சியால் விவரிக்கப்பட்ட இந்தக் கதை வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஈ) இந்துக்களின் எதிர்ப்பு போர்
இந்துத்துவ கூற்று: இந்துக்களைப் பொறுத்த வரையில் மத்திமக்காலம் இந்து-முஸ்லிம் போரின் காலமாகும். முஸ்லீம்கள் தங்கள் மூர்க்கத்தனமான தந்திரோபாயங்கள், வேகமான நகர்வுகள், குதிரைப்படை, முற்றுகைப் போர் உள்ளிட்ட உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் போரில் சிறந்தவர்கள். ஆனால் இந்துக்கள் தங்கள் வீரம், தியாகம், புவியியல் அறிவு, பதுங்குகுழியில் மறைந்து தாக்கும் முறை ஆகியவற்றால் பதிலடி கொடுத்தனர். இந்த வீரம் மற்றும் தேசபக்தி சந்த் பர்தாய் பாடிய பிருத்விராஜ், ராணா கும்பா மற்றும் ராணா சங்கா, பிரதாப் சிங், ராணி துர்காவதி மற்றும் சிவாஜி ஆகியவர்கள் தொடர்பான கதைகளில் போற்றப்படுகிறது. தக்காணத்தில் விஜயநகரத்திற்கும் பாமனி சாம்ராஜ்யத்திற்கும் இடையே நடந்த போர்களுக்கு இந்து எதிர்ப்புக் கதைகள் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலேய நிர்வாகிகளால் மதவெறியன் என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தானின் போர்களுக்கும் இதே கதை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அறிவியல் கூற்று: பல்வேறு மாகாணங்களின் சுல்தான்களுக்கும் முகலாய ஆட்சியாளர்களுக்கும் உள்ளூர் இளவரசர்களுடன் பல போர்கள் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தப் போர்கள் எந்த வகையிலும் இந்து தேசம் என்ற கருத்தாக்கத்துடன் நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால், பெர்சியா அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த படையெடுப்புகளின் போது இந்து தேசத்தின் முந்தைய வடிவம் இல்லை. பிருத்விராஜ் ஜெய் சந்த் கத்வாலுடன் போரிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கோரி முகமது படையெடுத்ததால் இங்கு எந்த இந்து எதிர்ப்பும் இல்லை. பின்னர் கூட ராஜபுத்திர தலைவர்கள் சுல்தான்களுக்கு எதிராகப் போரிட்டதைப் போலவே, தங்களுக்குள்ளும் சண்டையிட்டுக் கொண்டனர். முஸ்லீம் தலைவர்களுடன் அவர்கள் நட்பு பாராட்டிய தருணங்களும் இருந்தன. ஒருங்கிணைந்த இந்து முஸ்லீம் இராணுவம் முகலாய பாபருக்கு எதிராக இந்தியாவில் அவர் நடத்திய இரண்டாவது போரான கானுவா போரில் போரிட்டனர். முகலாய ஆட்சியின் இறுதி வரை இதே முறை தொடர்ந்தது. மதவெறியன் என கருதப்படுகிற அவுரங்கசீப்பின் கீழிருந்த இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையில், இந்துக்கள் நாற்பது சதவீதமாகும். இதில் சிவாஜியின் பரம எதிரியான ஜெய்சிங்கும் அடங்குவார். இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் தேசியவாதியாக சித்தரிக்கும் சிவாஜியின் ஸ்வராஜ்யம், ஒரு மராட்டிய தலைவர் சுதந்திரமாக சௌதாய் மற்றும் சர்தேஷ்முகி என்ற வரிகளை வசூல் செய்யும் பகுதியே தவிர, வேறொன்றுமில்லை. ஆங்கிலேயர்களுடனான போரின்போதும் கூட மராட்டியர்களுக்கு வர்த்தகத்தில் இருந்து வரும் சுங்கவரிகளுடன் இந்த வரி வசூல் உரிமைகளின் எல்லைகள் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. இதுபோன்ற பிராந்திய உரிமைகளுக்கான போராட்டங்களை எந்த நவீன அர்த்தத்திலும் தேசியம் என்று அழைக்க முடியாது. எந்த ஒரு வீரனும் தங்கள் எல்லைக்கு அப்பால் சென்று இந்து என்ற பொருளில் கூட தேசிய எதிர்ப்பைக் கட்ட முயற்சிக்கவில்லை. சுல்தான்களும் தங்கள் பிராந்தியக் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடினர்; அதற்காக அவர்கள் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் யாரையும் பயன்படுத்தத் தயாராக இருந்தனர். இந்துத்துவவாதிகள் வாதிடும் வகையான மதத் தேசியவாதம் இல்லை.
5. இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம்
இந்துத்துவ கூற்று: ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற அர்த்தத்தில் முகலாயர்களுக்கு எதிரான முந்தைய போராட்டத்தின் தொடர்ச்சியாகும்.
இது இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக மராட்டியர்களால் தங்கள் பிராந்திய உரிமைகளை சுயராஜ்யம் என்ற பெயரில் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டது. கிட்டூர் ராணி பத்மினி, கேரளாவில் பழசி ராஜா மற்றும் வேலுத்தம்பி, தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மன் ஆகியோரால் இதேபோன்ற போர் நடத்தப்பட்டது. இத்தகைய எதிர்ப்பை நானா சாஹிப், தாந்தியா தோப்பே மற்றும் ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய் ஆகியோர் 1857-இல் தொடங்கினர்.
எனினும், இந்தக் கட்டடத்தில் இந்துத்துவ கதைகளில் விடுதலைப்போர் எனும் கருத்தாக்கத்தில் ஒரு நுட்பமான மாற்றம் ஏற்படுகிறது. அந்நியர்களுக்கு எதிர்ப்பை உருவாக்குவதிலிருந்து மாறி இந்து தேசத்தை அமைப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தேசம் இப்போது அனைத்தும் இந்து என, ஒரே புவியியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் என கட்டமைக்கப்பட்ட முழுமையான நிறுவனமாக வரையறுக்கப்படுகிறது. தேசவிரோத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி, ‘வெளிநாட்டு’ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளும் அடங்குவர்.
அறிவியல் கூற்று: தேசம்-தேசியம் எனும் பிரச்சனை தனித்தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதால், இங்கே விவரங்களுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. நவீன அர்த்தத்தில் தேசியவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது உருவாக்கப்பட்டு வளர்ந்தது. சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் பிராந்திய வடிவங்களின் அனைத்து வடிவங்களும் சுதந்திரப் போராட்டத்தை சாத்தியமாக்குவதற்கு ஒன்றிணைந்தன. ஆனால் இந்த விடுதலைக்கான போராட்டம் நிச்சயமாக மக்களின் முக்கிய கோரிக்கைகளையும் முழக்கங்களையும் முன்வைத்தது. இந்த கோரிக்கைகள் இந்துத்துவாவுக்கு மாற்றாக வேறு விதமான செழுமையான ஒற்றுமையை உருவாக்கியது. இந்த ஒற்றுமை என்பது மதச்சார்பின்மை/ சமத்துவம்/ ஜனநாயகம்/சமூக நீதி/மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றுக்காக. குரல் கொடுத்தது.
6. மக்கள் போராட்டங்கள்
இந்துத்துவ கூற்று: கடந்த பல வருடங்களில் எழுந்த அனைத்து மக்கள் போராட்டங்களும் பங்கேற்பாளர்களின் இந்து தேசிய மற்றும் இந்து தேச விரோதக் கருத்துகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். இந்துக்களுக்கு எதிரான அல்லது இந்துக்களின் நலன்களுக்கு எதிரான அந்தப் போராட்டங்கள் கண்டிக்கப்பட்டன.
விவசாயப் போராட்டங்கள் விஷயத்தில் இந்த நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. 1921 ஆம் ஆண்டு மலபார் மாவட்டத்தில் உள்ள ஏர்நாடு தாலுக்காவில் விவசாயப் போராட்டமானது குத்தகை விவசாயிகள், சிறு விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களாக இருந்த பெரும்பான்மையான முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டது. இந்துத்துவ கூற்று, அவர்களின் முக்கிய எதிரி இந்துக்கள்; இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது ஏர்நாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் முயற்சியானது ஒரு இஸ்லாமிய அரசை கட்டியெழுப்புவதாகும்; அதன் அடித்தளங்கள் பல்வேறு கிளர்ச்சித் தலைவர்களால் அமைக்கப்பட்ட எமிரேட்ஸில் (“அமீரகம்”) வடிவமைக்கப்பட்டது. கிளர்ச்சியானது இப்பகுதியின் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தியது; மேலும் சனாதான இந்துக்களை அமைப்பாக அணிதிரட்ட வழிவகுத்தது.
விவசாயப் போராட்டத்தின் மற்றொரு உதாரணம் தெலுங்கானா மக்கள் போராட்டம். இது அப்பகுதியின் நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயிகளால் நடத்தப்பட்ட ஒரு நிலப் போராட்டமாகும். இதில் நிலப்பிரபுக்கள் ஹைதராபாத் நிசாமின் கொலைகார வன்முறை படையான ரசாக்கர்களை களத்தில் இறக்கினர். நிஜாமின் துருப்புக்களுடன் சேர்ந்து போராட்டத்தை கொடூரமாக அடக்குவதில் நிலப்பிரபுக்கள் வெற்றி பெற்றனர், இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தியாகிகளானார்கள். நிஜாமுக்கு எதிராகப் போராடிய இந்து அமைப்புகளுக்கு எதிராக ராசாக்கர்களின் நடவடிக்கை இருந்ததாக ஒரு புதிய கதை உருவாக்கப்பட்டு விவசாயிகளின் தியாகத்தை ஓரங்கட்டும் வேலையை இந்துத்துவா சக்திகள் உருவாக்கி வருகின்றன.
அறிவியல் கூற்று: அனைத்து மக்களின் போராட்டங்களும் வர்க்க உறவுகளின் குறிப்பிட்ட சூழல்களில் எழுகின்றன. போராடும் மக்கள் இதனை உணர்ந்து, உடனடியாக எதிரிகளுக்கு எதிராக அவர்களின் கோபத்தை செலுத்துகிறார்கள். போராடும் மக்களின் வர்க்க உணர்வு வளரும்போது, உற்பத்தி சக்திகளின் தொடர்பை இன்னும் அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ளவும், நேரடியாக உணர்ந்தோ அல்லது வேறுவிதமாகவோ உண்மையான ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகத் தங்கள் போராட்டத்தை முன்வைக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களின் உடனடி நிலைமைகளில் இருந்து போராட்டத்திற்கான ஆதாரங்களை சேகரிக்கின்றனர். ஏர்நாட்டின் மாப்பிலாக்களைப் பொறுத்தவரை, அவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு மற்றும் நிலப்பிரபுக்களிடமிருந்து அவர்களின் துயரத்தின் ஆணிவேர்களை சரியாக இனம்கண்டு, கிலாபத் மற்றும் தேசிய இயக்கத்தின் போதனைகளிலிருந்து தங்கள் உணர்தலைப் பெற்றனர். காலனித்துவ அரசு அவர்களை முற்றிலுமாகத் தனிமைப்படுத்தி, அவர்கள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளைக் கூட மறுத்து அவர்களைப் கசக்கிப்பிழிவதில் வெற்றி பெற்றதால், அவர்கள் தங்கள் மதத்தின் கீழ் அணிதிரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், வகுப்புவாதக் கூறுகள்(சக்திகள்) முன்னுக்கு வந்து, அந்த பகுதி இந்துக்களின் துயரத்துக்கு காரணம் முஸ்லீம்கள் என கருத்தை கட்டமைத்தனர்.
தெலுங்கானா போராட்டத்தைப் பொறுத்தவரை, போராடும் விவசாயிகள் வர்க்க உணர்வுடன் இருந்தனர். மேலும் நிலப்பிரபுக்கள் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாக அவர்கள் உணர்ந்த நிஜாம் ஆட்சிக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்தனர். நிஜாம் ஆட்சியின் முடிவு நிலப்பிரபுத்துவத்தின் முடிவையும் குறிக்கிறது. இருப்பினும், ஆபத்தை உணர்ந்த நிலப்பிரபுக்கள் இந்து அமைப்புகளின் பதாகையின் கீழ் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றனர். எனவே, நிஜாமின் முடிவையும் அதே நேரத்தில் விவசாயிகள் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்படுவதையும் ஒருங்கே உறுதிசெய்யும் உத்திகள் உருவாக்கப்பட்டன. இந்து முஸ்லிம் விரோதம் என்ற போர்வையில் விவசாயிகள் போராட்டம் தகர்க்கப்பட்டது.
மக்கள் போராட்டங்கள் குறித்து இந்துத்துவாவின் நிலைபாடு என்ன என்பது மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது. இந்து சமூகத்தின் நலன்கள் என்ற போர்வையில் மக்களின் கோரிக்கைகள் திசை திருப்பப்படுகின்றன. இந்த போராட்டங்கள் மூலம் இந்து மற்றும் ஏனைய சமூகங்களிடையே விரோதங்கள் நிறைந்த முரண்பாடுகளை முன்னெடுப்பதை அவர்கள் புத்திசாலித்தனமாக செய்கின்றனர்.
இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட போராட்டம் வெளிப்படுவதற்கும் தன்னைத் தக்கவைப்பதற்கும் காரணமான வர்க்க நலன்கள் திறம்பட புறக்கணிக்கப்படுகின்றன. இது போராட்டத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இந்திய வரலாற்றில் இந்துத்துவ சக்திகள் அறிமுகப்படுத்தும் திரிபுகள், மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் சமூக நீதியுள்ள தேசம் என்ற நமது தேசிய இலக்குகளை சீர்குலைக்கும் தன்மை கொண்டது. இந்திய மக்களின் ஒற்றுமையை விலையாக கொடுத்து “இந்து தேசத்தின் அடிப்படை ஒற்றுமையை” ஒட்டு மொத்தமாக நிலைநாட்ட முனைகிறது.
தமிழில்: சோபனா, சேலம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
