
சஃப்தர் ஹாஷ்மி : ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை
சுதன்வா தேஷ்பாண்டே
1989ஆம் ஆண்டு ஜனவரி முதல்நாளன்று டெல்லிமாநகருக்கு வெளியே இருந்த காஜியாபாத் என்ற தொழிற்பேட்டைப் பகுதியில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, டெல்லியிலிருந்து செயல்படும் வீதி நாடகக் குழுவான ஜனநாட்டிய மஞ்ச் (சுருக்கமாக ‘ஜனம்’) ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானது. இந்தத் தாக்குதலின்போது ராம் பகதூர் என்ற தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், ஜனம் நாடகக்குழுவின் தலைவரான சஃப்தர் ஹாஷ்மி படுமோசமாகக் காயமுற்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மறுநாள் உயிரிழந்தார். ஜனவரி 3ஆம்தேதியன்று நடைபெற்ற சஃப்தரின் இறுதி ஊர்வலத்தில் 15,000க்கும் மேற்பட்ட கலைஞர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும், தொழிலாளர்களும், மற்றவர்களும் பங்கேற்றனர். ஜனவரி 4ஆம் தேதியன்று, அதாவது சஃப்தார் உயிர்நீத்த 48 மணிநேரத்திற்கு உள்ளாக, இத்தாக்குதல் நடைபெற்ற அதே இடத்தில், தாக்குதலால் நின்றுபோன அதே நாடகத்தை, அவரது மனைவி மலாய்ஸ்ரீ ஹாஷ்மி தலைமையில் ஜனம் குழு மீண்டும் நிகழ்த்தி நிறைவு செய்தது.
எவரையும் உலுக்கிவிடும்படியான இந்தச் செயல்பாடு நாடுமுழுவதிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கற்பனையைத் தட்டியெழுப்பியது. சஃப்தரின் மரணம், கலைச்செயல்பாடு, கருத்துவெளிப்பாடு ஆகியவற்றுக்கான சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்கான பிரம்மாண்டமான ஓர் இயக்கத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது.
சஃப்தரும் பங்கேற்றிருந்த நாடகக்குழுவான ஜனநாட்டிய மஞ்ச் (ஜனம்) 1973இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், ஜனம் குழு நகரங்களிலும், கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், பொதுவெளிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடைகளில் தங்கள் நாடகங்களை நடத்தி வந்தது. 1975ஆம் ஆண்டில் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது, ஜனம் செயலற்றுப் போனது. சஃப்தர் இதற்காகப் பெரிதும் வருத்தப்பட்டார். இத்தகைய ஒரு சூழல் மீண்டும் ஏற்படுமானால், சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை ஜனம் கண்டறியும்; முடிந்தவரை வெளிப்படையாகவோ அல்லது தேவைப்படுமானல் ரகசியமாகவோ அது செயல்படும் என்று அவர் அடிக்கடிக் கூறுவார்.
நெருக்கடிநிலை முடிவுக்கு வந்தபிறகு, கடந்த காலங்களில் ஜனம் குழுவின் நாடகங்களை முன்வந்து போட்ட அமைப்புகளான தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்றவற்றுக்கு ஜனம் குழுவின் நாடகம் தேவைப்பட்ட போதிலும், அவற்றால் அதற்கான செலவை மேற்கொள்ள முடியவில்லை என்பதை ஜனம் நாடகக்குழு உணர்ந்தது. இதுகுறித்து சஃப்தர் மிகத் தெளிவாகவே கூறினார்: ‘சங்கங்களால் பெரிய நாடகங்களைப் போட முடியவில்லை என்றால், சிறிய நாடகங்களை அவர்களிடம் எடுத்துச் செல்வோம்.’ இவ்வாறாகத்தான் ஜனம் குழு வீதி நாடகத்தை நோக்கித் திரும்பியது.
சஃப்தரும் ஜனம் குழுவின் மற்றொரு உறுப்பினரான ராகேஷ் சக்சேனாவும் இணைந்து மெஷின் (இயந்திரம்) என்ற ஒரு சிறு நாடகத்தை எழுதினர். அந்த நாடகம் மிகவும் பிரபலமானது. இதுபற்றி சஃப்தர் பின்னாளில் நினைவுகூர்ந்தார்:
“நாடகத்தின் இறுதிப் பாடலை நாங்கள் பாடி முடித்தவுடன், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எங்களை தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டனர். நாங்கள் அன்று நாயகர்கள் ஆனோம்… அடுத்தநாள் போட் கிளப் பகுதியில் சுமார் 1,60,000 தொழிலாளர்களின் முன்னிலையில் நாடகத்தை நிகழ்த்தினோம்… அங்கிருந்த பலரும் அந்த நாடகத்தை ஒலிப்பதிவு செய்து கொண்டனர்… அந்தப் பேரணி நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, நாடு முழுவதிலும் இருந்து எங்களுக்குத் தகவல் வந்து கொண்டே இருந்தது… எங்களின் ‘மெஷின்’ நாடகம், இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும், அந்தந்தப் பகுதிக்கே உரிய வகையில் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.”
அந்த ‘மெஷின்’ நாடகம் செய்தது என்னவெனில், ஜனம் குழுவின் வீதிநாடக அடிப்படைக் கட்டமைப்பினை இன்றுவரை தொடர்ந்து கடந்து வந்துள்ளது. அது பிறந்த தருணத்தில், வீதி நாடகம் என்பது மக்களுடன், குறிப்பாக புரட்சிகர வர்க்கங்களுடன், தன்னை இணைத்துக் கொண்டதாக இருந்தது. அது, படைப்புச் செயல்முறையில் தன் பார்வையாளர்களின் ஈடுபாட்டை முன்னறிவிப்பதாக இருந்தது. (உண்மையில், ‘மெஷின்’ நாடகத்திற்கான யோசனை ஒரு தொழிற்சங்கவாதியிடமிருந்துதான் பெறப்பட்டது). அது கவிதையை முன்களத்தில் வைத்தது; மேலும் நாடகரீதியான புத்தாக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்தது; வீதி நாடகத்தை முன்னெடுக்குமாறு பலரையும் ஊக்குவித்தது.
வீதி நாடகமும் மேடை நாடகமும் ஒன்றுக்கொன்று எதிராக நிற்கின்றன; முந்தையது ‘புரட்சிகரமானது’; பிந்தையது ‘முதலாளித்துவ வகைப்பட்டது’ என்று அடிக்கடி கருதப்படுகிறது. இது உண்மைக்கு வெகுதூரம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சஃப்தர் கூறியது போல, “நாடகமானது அதைச் சுற்றியுள்ள அலங்காரங்கள், கருவிகள் ஆகியவற்றை நம்பியிருக்க முடியாது. நாடகமானது எந்தவொரு வெற்றிடத்திலும் சக்தியோடும் அழகோடும் பிறக்கிறது. அது சதுரம், செவ்வகம், வட்டம் என எந்தவொரு வடிவமாக இருந்தாலும் சரி, பார்வையாளர்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் சரி, அல்லது எல்லா பக்கங்களிலும் இருந்தாலும் சரி, இருளில் இருந்தாலும் சரி, அல்லது வெளிச்சத்தில் இருந்தாலும் சரி, நாடகம் உயிர்ப்போடு வெளிவரும்.” உண்மையில், 1988இல் சஃப்தர் ஹபீப் தன்வீருடன் இணைந்து ஒரு மேடை நாடகத்தை எழுதுவதில் பங்கேற்றார். முன்ஷி ப்ரேம்சந்த் எழுதிய ஒரு கதையை அடிப்படையாகக் கொண்ட ‘மோட்டோராம் கா சத்யாகிரகம்’ (மோட்டோராமின் சத்யாகிரகம்) என்ற இந்த நாடகத்தை தன்வீர் இயக்கினார்.
அப்போது சஃப்தர் கலை தொடர்பான விஷயங்களில் குறுங்குழுவாதியாக இருக்கவில்லை. அவர் எப்போதுமே தன் மீதான தாக்கங்களில் ஊறியிருந்தார். மேலும் புதிய வடிவங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தன் பங்கிற்கு முயற்சி செய்து வந்தார். அப்போது அவர் ஆவணப்படங்களை எழுதி இயக்கி வந்தார். மேலும் முதியோர் கல்வி, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றை முன்வைக்கும் ‘கீட்டி கலியான்’ என்ற முழுநீள தொலைக்காட்சித் தொடருக்காக எழுதி வந்தார். அவர் குழந்தைகளுக்கான பாடல்கள், கவிதைகள், நாடகங்களை எழுதினார். வெகுஜன அமைப்புகள் பலவற்றுக்கும் சுவரொட்டிகளை வடிவமைத்தார். புகைப்படங்களை எடுத்தார். மேலும் நாடகப் பட்டறைகளையும் நடத்தி வந்தார். 1984இல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போதும், பின்னர் மதசார்பின்மையைப் பாதுகாப்பதிலும், 1988ஆம் ஆண்டில் நடைபெற்ற 7 நாள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கலைஞர்கள்- அறிவுஜீவிகளை அணிதிரட்டுவதிலும், இந்தி எழுத்தாளர் ப்ரேம்சந்த்-இன் மரபை புதுப்பிப்பதிலும் அவர் முக்கியமானதொரு சக்தியாக இருந்தார்.
ஹபீப் தன்வீர் பின்னர் இவ்வாறு நினைவுகூர்ந்தார்: “அரசியல் அர்த்தத்தில் பார்க்கும்போது சஃப்தர் மிகவும் பரந்த மனப்பான்மை கொண்ட மனிதர்; பரந்த கலாச்சார முன்னணியை உருவாக்க விரும்பினார்… ஒரு கலாச்சார முன்னணி குறித்த அவரது யோசனை நாடகத்தோடு நின்றுவிடவில்லை. ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் என அனைவரும் பொதுவான ஒரு நலனுக்காக ஓர் இயக்கத்திற்குள் கவர்ந்திழுக்கப்படுவார்கள் என்ற சித்திரம் அவருக்குள் இருந்தது. அவர் ஒரு படைப்புத்திறன் கொண்ட மேதை. தொலைநோக்கு கொண்ட ஓர் அமைப்பாளர். வைராக்கியமும் ஆற்றலும் உறுதியும் கொண்டவர். நாடகம் குறித்த தொலைநோக்கு கொண்டவர்.”
புரட்சிகர கருத்துக்களால் தூண்டப்பட்டவராக இருந்த நிலையில், சஃப்தர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ஆனார். அந்த உணர்வு கொடூரமாக அழித்தொழிக்கப்பட்ட முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட், வரலாற்றுக்கு அளிக்கும் வாக்குறுதியை நமக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. மனித குலத்தின் உன்னதமான லட்சியங்களுக்காகப் போராடுவோம்; ஒருபோதும் மனமிடிந்து போக மாட்டோம் என்பதே அந்த வாக்குறுதி.
(சுதன்வா தேஷ்பாண்டே ஜனம் நாடகக்குழுவில் ஒரு நடிகர்; இயக்குநர். லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தில் பதிப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். )
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply