குறைந்தபட்ச ஆதார விலையும் உணவுப்பாதுகாப்பும்
(பேரா. பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையை தழுவி எழுதியவர்: ஆர். எஸ். செண்பகம்)
மத்தியில் ஆட்சியில் உள்ள தற்போதைய அரசாங்கம், அதன் வர்க்க குணாதிசயத்திற்கு உண்மையாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் விவசாயத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை விரும்புவதோடு, இந்த நோக்கத்திற்காக இரப்பர் பயிரிடுபவர்களுக்கு ஆதரவளிக்கவும் மறுக்கிறது. கேரள அரசாங்கம் இந்த விவசாயிகளை தன்னால் முடிந்த வரையில் தனது வரம்பிற்குள் மீட்டெடுத்து, பாதுகாக்க முனைகிறது. கேரள அரசாங்கம் 2014இல் இரப்பர் விலையை நிலைப்படுத்த, அதற்கான நிதியை உருவாக்கியது. அந்தத் தொகை சமீபத்திய பட்ஜெட்டில் ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 170 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலைக்கும், அறிவித்துள்ள இந்த குறைந்தபட்ச விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஈடுசெய்வதாக கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது. சமீபத்திய பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் இரப்பர் விவசாயிகளின் துயரங்கள் குறித்து பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில், ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிடுகிறார். இரப்பர் விவசாயிகளுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து உதவ முடியாது என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதோடு, இதனால் பொருளாதார ரீதியாக நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்திற்கு ஊறு விளையும் என்பது குறித்தும் அவர் ஆழமாக விவாதிக்கிறார்.
குறைந்தபட்ச ஆதார விலை அவசியமா?
குறைந்தபட்ச ஆதார விலை என்பது சந்தையில் விலை ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும்போது அரசு தலையீடு செய்வதற்கான ஏற்பாடாகும். இந்தத் தலையீடு எதற்கு தேவைப்படுகிறது என்று சொன்னால், ஒரு விளை பொருள் அபரிமிதமாக உற்பத்தியாகும் போது, சந்தை நிலவரப்படி அரசு தலையிட்டு ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை அந்த விளை பொருளுக்கு நிர்ணயிப்பதன் மூலமாக, அந்த பொருளின் விலை பெருமளவில் வீழ்ந்து விடாமல் தடுக்கும். அதன் மூலமாக விவசாயிகள் விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். Commission for Agricultural Costs and Prices (CACP) விவசாய விளைபொருட்களுக்கான செலவு மற்றும் விலை மதிப்பீட்டு குழு CACPன் பரிந்துரை இதற்கு தேவைப்படும். ”உற்பத்தி செலவு, உள்ளீட்டு விலையில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளீடு-வெளியீடு விலையில் சமநிலை உள்ளதா இல்லையா என்ற பரிசீலனை, சந்தை விலைகளின் போக்குகள், கிராக்கியும் விநியோகமும் – அதாவது தேவையும் அளிப்பும், அதனால் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் பாதிப்பு, சர்வதேச விலை நிலவரம்” இது போன்ற பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த குழுவானது குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்கிறது.
ஏழு வகையான தானியங்கள் – நெல், கோதுமை, பார்லி, ஜோவர், பஜ்ரா, சோளம் மற்றும் ராகி மற்றும் ஐந்து வகையான பருப்பு வகைகள், எட்டு வகையான எண்ணெய் வித்துக்கள், கச்சா பருத்தி, கச்சா சணல், கொப்பரை, நார் எடுத்த தேங்காய், (VFC) புகையிலை ஆகிய 32 பயிர் வகைகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையும், கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையும் இந்த குழுவினால் தீர்மானிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இது மாதிரியான விலை ஆதரவு நடவடிக்கை விவசாயிகளுக்கு ஒரு காப்பீடு போல் உதவும். இந்த குறைந்தபட்ச ஆதார விலைகள், அதாவது குறைந்தபட்ச உத்தரவாத விலைகள், சந்தையில் அந்த விளைபொருளின் விலை அதற்குக் கீழ் குறைய முடியாத ஒரு வரம்பெல்லையை உருவாக்க உதவும்.
பணப்பயிர் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அவசியமா?
கொரோனா காலத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த இரப்பர் விலை, சிறிது மீண்டு வந்தது. தற்போது மீண்டும் சரிந்துள்ளது. நாட்டின் மொத்த இரப்பர் உற்பத்தியில் 80 சதவீத இரப்பரை பயிரிடுவது கேரளாவில். அவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்குத்தான் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திக்க சென்றபோது, அவர் அவர்களது கோரிக்கையை, ”பணப்பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க முடியாது. அது மத்திய அரசின் கொள்கை அல்ல” என்று கூறி முற்றாக நிராகரித்துள்ளார். மேலும் அவர், “வெகுஜன நுகர்விற்காக, பரவலாக, அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிற, முக்கிய விவசாயப் பொருட்கள்தான் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பின் கீழ் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பணப்பயிர்கள், இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது வினோதமான வாதம்
இருப்பினும், இது வினோதமான வாதம் என்று பேராசிரியர் பிரபாத் பட்நாயக் வாதிடுகிறார். உண்மையில் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? அதன் அவசியம் என்ன? என்று அமைச்சருக்குத் தெரியவில்லை. ஒரு பொருளின் விலை ஒரு காலம் வரையில் நிலையானதாக இருந்தால், MSP பெற வேண்டிய அவசியமில்லை. பயிரின் விலையில் பெரிய அளவிற்கு ஏற்ற இறக்கம் ஏற்படும்போதுதான் அதன் அவசியம் எழுகிறது. இதனால் பயிரீட்டாளர்கள் – விவசாயிகள் சந்திக்கும் விலை வீழ்ச்சியின் பாதிப்பில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எனவே, MSP இன் தேவைக்கும் பயிர் பரவலாகப் பயிரிடப்படுகிறதா இல்லையா என்பதற்கும் சம்பந்தமில்லை. மேலும் பணப்பயிர்கள்தான் பொதுவாக உணவு தானியங்களை விட சந்தையில் அதிக அளவிற்கு விலையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றன. பேராசிரியர் பிரபாத் பட்நாயக் முன் வைக்கும் முதலாவது வாதம் இதுதான்.
பணப்பயிர்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சந்தைக்கு வரும்போது, அதற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படாத காரணத்தினால், தொடர்ந்து விலை வீழ்ந்து கொண்டே இருக்கும். இதனால் அதன் உற்பத்தியாளர்கள் தங்களுடைய இடுபொருட்களின் விலையை கூட ஈடுகட்ட முடியாமல் பெரும் துயரினை சந்திக்கக்கூடிய சூழல் ஏற்படும். சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்தையும் கொள்முதல் செய்து, ஸ்டாக் வைத்து, எதிர்காலத்தில் தாம் நினைக்கும் விலையில் அந்த பணப்பயிரை விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று எந்த கட்டத்தில் ஸ்டாக் ஹோல்டர்கள் – கொள்முதல் செய்பவர்கள் முடிவு செய்கிறார்களோ அது வரை அந்தப் பொருளின் விலை சந்தையில் வீழ்ச்சியை சந்திக்கும். எனவே எதிர்பார்க்கப்படும் விலை – எதிர்காலத்தில் stickyயாக (மாறா விலையாக அல்லது பெரிய அளவில் மாற்றமில்லாததாக – stickyயாக) இருக்கும் எனும்போது, தற்போதைய விலை பெரிய அளவில் வீழாது.
அதேபோல அமைச்சர் பியூஷ் கோயல் வெகுஜன நுகர்வுக்குள்ளாகும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே MSP இன் தேவை உள்ளது என்று கூறுகிறார். அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக நினைக்கும் பயிர்களின் விலை ஸ்டாக் வைத்து எதிர்காலத்தில் விற்கப்படும்போது, எதிர்பார்க்கப்படும் விலை இன்னும் stickyயாக இருக்கும். ஒரு மிருகத்தனமான காலனித்துவ சமூகத்தைத் தவிர, வேறு எந்தச் சமூகத்திலும், அத்தகைய அத்தியாவசியப் பொருளுக்கு வெளிப்படையான MSP இல்லாவிட்டாலும், விலையில் பெரிய அளவிற்கு ஏற்ற இறக்கங்கள் இருக்க முடியாது. ஆனால், ஏற்றுமதிக்கான பணப் பயிர்களில் அல்லது உள்நாட்டில் உற்பத்தியாகும் பிற அத்தியாவசியப் பொருட்களின் உள்ளீடாக, உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் பணப்பயிர்களின் விஷயத்தில், கிராக்கியே ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது, stickyயான விலையினை எதிர்பார்க்க முடியாது. எனவே, உணவு தானியங்களின் விலையை விட பணப்பயிர்களின் விலைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
இதை உறுதி செய்ய இரப்பர் விலையின் ஏற்றத் தாழ்வுகள் தொடர்பான தரவுகளை எடுத்துக் கொள்வோம். 2014ஆம் ஆண்டில், ஒரு கிலோகிராம் இயற்கை ரப்பரின் விலை 245 ரூபாயில் இருந்து 77 ரூபாயாக, கிட்டத்தட்ட 70 சதவீதம் சரிந்தது. இது நிச்சயம் உற்பத்தியாளருக்கு பேரழிவினை தரக்கூடிய பெரும் சரிவு. சமீபத்தில் 2021 நவம்பரில் கிலோ ஒன்றுக்கு ரூ.200 ஆக இருந்த விலை தற்போது ரூ.120 ஆக அல்லது 40 சதவீதம் குறைந்துள்ளது. இது போன்ற கடுமையான ஏற்ற இறக்கங்களின்போதுதான் MSP வடிவில் ஒன்றிய அரசாங்கத்தின் தலையீடு தேவைப்படுகிறது. ஏனெனில், இது விலை வீழ்ச்சிக்கு ஒரு வரம்பெல்லையை மட்டும் நிர்ணயிக்கவில்லை; விலை ஏற்ற இறக்கங்களின் வீச்சையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்திய அரசு டிரிஜிஸ்ட் கொள்கை – நேரடி பொருளாதார தலையீட்டு கொள்கையுடையதா?
நமது நாடு சுதந்திரமடைந்தபோது, இந்திய அரசு டிரிஜிஸ்ட் கொள்கை உடையதாக இருந்தது. இந்த கொள்கையின் காரணமாக, விவசாயத் துறையும், தொழில் துறையும் ஒரு சேர வளர்ச்சி அடைந்து, நாடு பொருளாதார சுயசார்பை நோக்கி நகர்ந்தது. (Dirigiste policies – அரசின் நேரடி பொருளாதார தலையீட்டு கொள்கை) டிரிஜிஸ்ட் கொள்கை என்பதற்கு என்ன பொருள் என்றால், பொருளாதார திட்டமிடலில், முதலீட்டு வழிமுறைகளில், தொழிலாளர் சந்தையில் ஊதியங்கள் உள்ளிட்டவற்றை மேற்பார்வை செய்வதில், விலைக் கட்டுப்பாட்டில் என்று ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் – சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் என்பதற்கு மாறாக, அரசு நேரடியாக தலையிடும் என்பதாகும். மேலும் வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்க, அரசு நேர்மறையாக தலையீடு செய்து, பாதுகாத்து, உள்நாட்டில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும்.
அப்படிப்பட்ட டிரிஜிஸ்ட் ஆட்சியின் கீழ் பல்வேறு விவசாய விளைபொருட்களுக்கான வாரியங்களின் பங்கு என்பது, பணப்பயிர்களை உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச விலையில் கொள்முதல் செய்து, விலை சரிவு ஏற்பட வாய்ப்புள்ள போதெல்லாம் தீவிரமாகத் தலையிட்டு, உள்நாட்டு விலை ஏற்ற இறக்கங்களின் வீச்சைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகும். ஆனால் நவீன தாராளவாத ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்த வாரியங்கள் தொடர்ந்து இருந்தாலும், அவற்றின் கொள்முதல் மற்றும் சந்தை தலையீட்டு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டன. அதாவது பணப்பயிர்களின் சந்தை விலையை நிலைப்படுத்துவதற்கு, சந்தையில் அவை தலையிடு செய்ய வேண்டிய அவசியக் கடமை அந்த வாரியங்களுக்கு இனி இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவேதான், அமைச்சர் பியூஷ் கோயல், பணப்பயிர்களுக்கு குறைந்தபட்ச MSPயை நிர்ணயிக்க முடியாது; அது மத்திய அரசின் கொள்கை அல்ல என்று கூறி முற்றாக நிராகரித்துள்ளார்.
”உணவுப் பாதுகாப்பிற்கு உணவு தானியப் பொருட்களின் விலையை சந்தையில் நிலைப்படுத்துவதுதான் அவசியமே தவிர பணப்பயிர்களின் விலையை நிலைப்படுத்துவது அவசியமல்ல” என்ற அவரது இரண்டாவது வாதத்தினை நாம் இப்போது எடுத்துக் கொள்வோம். இதுவும் மிகவும் முட்டாள்தனமான வாதமாகும். உணவு தானியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது என்பது உணவுப் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில், சந்தையில் கிராக்கியை பலப்படுத்துவதற்கு பணப்பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது அவசியம் என்பதிலும் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது என்று பேராசிரியர் பிரபாத் பட்நாயக் வாதிடுகிறார். இரப்பரின் விலை வீழ்ச்சி என்பது இரப்பர் விவசாயிகளின் வாங்கும் சக்தியை குறைத்துவிடும். அதாவது அவர்களின் வாங்கும் சக்தி குறையும் போது, அவர்களுக்குத் தேவையான அளவிற்கு உணவு தானியங்களை வாங்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், ஒரு வேளை உணவு தானியங்களின் விலை ஸ்திரமாக இருந்தால் கூட, அவர்களின் வாங்கும் சக்தி குறையும் போது அவர்களின் உணவு நுகர்வும் கட்டாயமாகக் குறையும். உணவு நுகர்வு குறையும்போது உணவுப் பாதுகாப்பு எப்படி உத்தரவாதப்படுத்த முடியும் என்பதுதான் பிரபாத் பட்நாயக் அவர்களின் கேள்வி.
உணவுப் பாதுகாப்பும் பொருளாதார சுயசார்பும்
உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு தனிநபரின் ஊட்டச்சத்து மற்றும் போதுமான அளவு உணவை அணுகுவதற்கான திறனின் அளவீடு ஆகும். 1996 உலக உணவுப் பாதுகாப்பிற்கான உச்சி மாநாட்டின் வரையறையின் அடிப்படையில் சொல்வதென்றால், ஒரு நாட்டில், எல்லா நேரங்களிலும், மக்களின் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவுத் தேவைகள், உணவு விருப்பங்களை நிறைவேற்றப் போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு கிடைக்கக் கூடியதாகவும், அவர்களால் பொருளாதார ரீதியாக வாங்கக் கூடியதாகவும் இருந்தால், அந்த நாட்டில் உணவுப் பாதுகாப்பு உள்ளது என்று கூற முடியும்.
எனவே, உணவு நுகர்வு குறையும்போது உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியாது என்பதை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் வலியுறுத்திக் கூறுகிறார். அது மட்டுமல்ல. அவருடைய இன்னொரு வாதம் என்னவென்றால், ஒருவேளை பணப் பயிர்களின் விலை வீழ்ந்தாலும், அந்த விவசாயிகள் எப்போதும்போல உணவு தானியங்களை வாங்குகிறார்கள் என்றே நாம் வைத்துக் கொள்வோம். ஆனால், அப்படி அவர்கள் உணவு தானியங்களை வாங்கினால், அவர்கள் உணவு தானியங்கள் அல்லாத பிற நுகர்வுப் பொருட்களை வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளார்கள் என்றுதானே பொருளாகும்? அவ்வாறு பிற பொருட்களை அவர்கள் வாங்குவது குறையும்போது, அந்த பிற பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருட்கள் விற்காமல் தேக்கமடைவதால், அவர்களது வாங்கும் சக்தி குறையும் தானே? இதன் தொடர் விளைவு என்ன? தானாகவே அவர்களின் உணவு நுகர்வு குறையும். அல்லது அவர்கள் நுகரும் பிற பொருட்களின் உற்பத்தியாளர்களின் உணவு நுகர்வு குறையும். விளைவு, நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது என்பதுதான் என்பதை பேராசிரியர் விளக்குவதோடு, பணப் பயிர்களின் விலையின் ஸ்திரத் தன்மை அரசின் தலையீட்டினால் பாதுகாக்கப்பட்டிருந்தால், இவர்களது வாங்கும் சக்தி குறைந்திருக்காது அல்லவா? என்ற கேள்வியையும் எழுப்புகிறார். எனவே அவர் கூறுவது, ”உணவுப் பாதுகாப்பு என்பது போதுமான உணவு தானியங்களை விளைவிப்பது மட்டுமல்ல; பொருளாதாரத்தில் போதுமான அளவிற்கு உணவுப் பொருட்களுக்கான கிராக்கியை – தேவையை உருவாக்குவது என்பதும்தான். அந்தத் தேவையை உருவாக்க வேண்டுமென்றால், உணவு தானியப் பயிர்களுக்கு மட்டுமல்ல; பணப்பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்பதுதான்.
அனுபவத்திற்கு விவேகம் இல்லையா?
ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் அனுபவம் வாய்ந்த அமைச்சர், ”இரப்பர் விலை ஸ்திரத்தன்மைக்கு அரசு சந்தையில் ஏன் தலையீடு செய்யவில்லை” என்ற கோரிக்கைக்கு, இத்தகைய முட்டாள்தனமான வாதங்களை எதற்காக முன் வைக்க வேண்டும் என்று நம்மிடையே இந்த இடத்தில் ஒரு கேள்வி தானாகவே எழும். அது இயல்பு தான். பேராசிரியர் இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கான விடையையும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறார். ஒரு வருட காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வாபஸ் பெறச் செய்த – மிக மோசமான வேளாண் சட்டங்களை வடிவமைத்து, அந்தச் சட்டங்களின் வாயிலாக உணவு தானியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தேவையில்லை என்பதை கொண்டு வர முயன்ற அரசாங்கம்தானே இவர்களது அரசாங்கம்?
மேலும், கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட இந்த அரசாங்கம், விவசாயத்தில் கார்ப்பரேட் நுழைவை ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளது. அது மட்டுமில்லாமல், விவசாயத் துறை கார்ப்பரேட்டுகளின் அவசியங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதிலும், கார்ப்பரேட்கள் விவசாயிகளுடன் நேரடி உறவை ஏற்படுத்திக் கொள்ள வழி வகை செய்வதிலும் அது ஆர்வமாக உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவசாய வணிக நிறுவனங்களுக்கு விவசாயிகள் அடிபணிவதையே, நவீன தாராளவாதம் விரும்புகிறது. அதையே நவீன தாராளவாதத்தை கடைபிடிக்கும் ஒன்றிய அரசாங்கமும் விரும்புகிறது. “தேசத்தின்” நலன்களை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம் என்று ஒருபுறம் உறுதி மொழிகளை அளித்தாலும், அது பின்பற்றுவதும், முன்னெடுத்துச் செல்வதும், உலக வர்த்தக நிறுவனம் வெளிப்படையாக உயர்த்திப் பிடிக்கும் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலைத்தான். அப்படிப்பட்ட இந்த அரசாங்கத்தின் அமைச்சர் வேறு எப்படி பேச முடியும் என்பதை மிகத் தெளிவாக பேராசிரியர் பிரபாத் பட்நாயக் விளக்குகிறார்.
சந்தை குறுக்கீட்டு செயலா? மக்களைப் பாதுகாக்கும் செயலா?
கட்டுப்பாடுகள், மானியங்கள், வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் தலையீடு செய்வதை சந்தையை சீர்குலைக்கும் சந்தை குறுக்கீட்டு செயலாக சந்தை தூய்மைவாத கார்ப்பரேட்டுகள் பார்க்கின்றன. ஆனால், பல அரசாங்க ஒழுங்குமுறைகள் பொது நலனுக்காக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களாகும். பெரும்பாலான முக்கிய பொருளாதார வல்லுநர்கள் அரசாங்கத்தின் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கைகள் அவசியமானவை என்றே கூறுகின்றனர். சந்தையின், மனிதத் தன்மையற்ற, மன்னிக்க முடியாத சில நடவடிக்கைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க, இந்த அரசாங்க சந்தை குறுக்கீடுகள் தேவை என்கின்றனர். ஒரு தலையீடு சந்தையில் சில தோல்விகளை உருவாக்கினாலும், அது ஒரு சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. எடுத்துக்காட்டாக, பல அரசாங்கங்கள் விவசாயத் துறைக்கு மானியம் வழங்குகின்றன. இது சில நேரங்களில் விவசாயத்தை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக ஆக்குகிறது. மானியங்கள் என்பது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு செயற்கையாக அதிக விலையைப் பெறுவதை உறுதி செய்யும். அவர்கள் உற்பத்தி செய்யக்கூடியதை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கும். இந்த வகையான தலையீடு பொருளாதார ரீதியாக திறமையானதாக இல்லாவிட்டாலும், ஒரு தேசத்திற்கு போதுமான உணவு இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.
பாதகம் செய்வது WTO
மேலும் அவர், WTO – உலக வர்த்தக நிறுவனத்தின் குணாதிசயத்தையும் விளக்குகிறார். WTO விவசாயத்திற்கான அரசாங்க ஆதரவினை “சந்தையை சிதைக்கும் அல்லது சந்தையை சீர்குலைக்கும் செயல்பாடுகள்” மற்றும் “சீர்குலைக்காத ஆதரவு செயல்பாடுகள்” என்று இரண்டு வகையாக வகைப்படுத்துகிறது. அதாவது அரசாங்கத்தின் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து ஒரு அபத்தமான வேறுபாட்டைக் காட்டி தனது தேவைக்கேற்ப தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திப் பேசுகிறது. WTO-வானது, வளரும் நாடுகளின் MSP மற்றும் அரசாங்க கொள்முதல் ஆகியவை குறித்து முகத்தை சுளிக்கிறது. அதேநேரத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் தங்கள் விவசாயிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை அளிப்பதை விவசாயிகளுக்கான நேரடி வருமான ஆதரவு என்று பெயர் சூட்டி, “சந்தையை சீர்குலைக்காத குறுக்கீட்டு நடவடிக்கைகள்” என்ற பெயரில் அனுமதிக்கிறது. அரசாங்கத்தின் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கைகள் போட்டி நிறைந்த சந்தையில்,”உலக ஏகபோக விவசாய வணிக நிறுவனங்களால்” சந்தை செயல்பாடுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளாக வகைப்படுத்தப்பட்டு தவிர்க்கப்படுகின்றன. இப்படி வேறுபடுத்துவது என்பது எவ்வளவு அபத்தமானது என்பதை, விவசாயிகளின் “செயல்திறனை” ஊக்குவிப்பதனை குறைமதிப்பிற்கு அது உட்படுத்துவதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம் என்று பேராசிரியர் பிரபாத் பட்நாயக் விளக்குகிறார்.
தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை
மத்தியில் ஆளும் ஒன்றிய அரசின் நவீன தாராளவாத பொருளாதார கொள்கையின் தீவிர விளைவுதான் இதுமாதிரியான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள். அதன் ஒருபகுதிதான் தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்கள், தேசிய பணமாக்கல் திட்டங்கள் போன்றவை. விவசாயிகள் ஒரு வருட காலம் போராடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைத்த போதும், ஒன்றிய அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு குணாம்சம் எப்போதுமே வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு மக்களின் உணவுப் பாதுகாப்பு குறித்தோ, தேசத்தின் பொருளாதார சுயசார்பு குறித்தோ அல்லது தொழிலாளர் – விவசாயி நலன் குறித்தோ அக்கறையில்லை. மாறாக, தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை தடையின்றி அமலாக்க, இந்து தேசத்தை உருவாக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் பற்றி நிற்பதையே, இந்த அரசாங்கம் விரும்புகிறது. எனவே, இன்றைய அவசரத் தேவை, இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் போராடுவதோடு, நவீன தாராளவாத நடவடிக்கைகளை எதிர்த்த போராட்டத்தையும் ஒரு சேர நடத்துவது ஆகும். இத்தகைய வலுவான வர்க்கப் போராட்டத்தை நடத்திட வேண்டியதன் தேவையை இந்திய தேசத்தின் தொழிலாளர்களும் விவசாயிகளும் உணர்ந்துள்ளனர். இதன் சமீபத்திய உதாரணமாகவே ஏப்ரல் 5 டெல்லி பேரணி அமைந்துள்ளது. இதுவொரு துவக்க நிலைதான். இன்னும் வலுவான வர்க்க ஒற்றுமையுடன் வர்க்க எழுச்சியை முன்னெடுக்க – புதிய வரலாறு படைக்க, வர்க்கப் படை அணி திரண்டு வருகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
