ட்ரம்ப் வர்த்தக வரிகள் – ஏகாதிபத்திய சுரண்டலின் புதிய வடிவம்
அபிநவ் சூர்யா
அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை “மீண்டும் பெருமைமிக்கதாக” ஆக்கப்போகிறேன் என்று முழங்கி, ட்ரம்ப் இந்த வரிகளை விதித்து வருகிறார். அவரின் முக்கியமான வாதமானது, இந்த இறக்குமதி வரிகள் காரணமாக அமெரிக்கர்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் பண்டங்களை வாங்குவார்கள்; அதனால் மீண்டும் அமெரிக்காவின் உற்பத்திதுறை ஜாம்பவான் ஆகும் என்பதுதான். மேலும் இந்த இறக்குமதி வரிகளை இதர நாடுகள் செலுத்துவார்கள் என்றும், அது அமெரிக்காவிற்கு வருமானமாக அமையும் என்றும், இதனால் அமெரிக்கர்களின் பண்டங்களுக்கான நுகர்வு விலை கூடாது என்றும் குறிப்பிடுகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில், ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, இறக்குமதி செய்யும் நாட்டின் சந்தை மீது பெருமளவு சார்ந்து இருந்தால், அவர் சொல்வது போல வரியின் பளுவை ஏற்றுமதி செய்யும் நாடு ஏற்கும். இது சில சிறிய நாடுகளுக்கும், அமெரிக்காவின் அருகில் உள்ள மெக்சிகோ போன்ற நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் சீனா போன்ற நாடுகளுக்கு? அமெரிக்கா தான் சீன உற்பத்தி மீது சார்ந்துள்ளது. அமெரிக்கா தன் மொத்த இறக்குமதியில், ஜவுளி பண்டங்களில் 24% ($4500 கோடி), மேசை நாற்காலி போன்றவற்றில் 28% ($1900 கோடி), எலக்ட்ரானிக் பண்டங்களில் 21% ($21,600 கோடி) சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
மேலும் அமெரிக்கா இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல பண்டங்கள் நேரடியாக சீனாவில் உற்பத்தி ஆகாவிட்டாலும், ஒரு பகுதி உற்பத்தி சீனாவில் நிகழ்கிறது. ஆப்பிள் போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு உற்பத்தியை சீனாவில் நிகழ்த்துகின்றனர். ஆனால் சீனாவின் ஏற்றுமதியில் அமெரிக்கா சிறு பங்கு தான் வகிக்கிறது (சீனாவின் மொத்த GDP-யில் 3%). ஆக அமெரிக்கா தான் சீன உற்பத்திகளை சார்ந்துள்ளது. எனவே இந்த வரிகளின் பளு அமெரிக்க மக்கள் மீது விழும் – விலைவாசி கடுமையாக உயரும். மேலும் உயர் தொழிற்நுட்ப பண்டங்களின் உற்பத்தி சிலவும் அமெரிக்காவிற்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது (ரோபோக்கள் வைத்து செய்யும் உற்பத்தி). ஆனால் மனித உழைப்பு சார்ந்த நுகர்வு பண்டங்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மீண்டும் கொண்டு வர நிறுவனங்கள் விரும்ப மாட்டார்கள் (ஏனெனில் அவர்கள் உற்பத்தி செலவு உயரும்).
இது ட்ரம்ப்-பிற்கும் தெரியும். பின் ஏன் வரி விதிப்பு தொடர்கிறது? ஏனெனில் இது முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஏகாதிபத்திய சுரண்டல் உத்தியைச் சார்ந்தது. இதை புரிந்து கொள்ள நாம் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலில் அடிப்படையான “டாலர் ஆதிக்க” முறை பற்றி புரிந்து கொள்வது அவசியம். மேலும் இன்றைய முதலாளித்துவ நெருக்கடி பற்றியும், சீன சோசலிசம் விடுக்கும் சவால் பற்றியும், இதன் விளைவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிர சுரண்டலை நோக்கிய புதிய தேடல் தான் இந்த வர்த்தகப் போர் என்பதையும் இந்த கட்டுரையில் விவாதிக்கலாம்.
டாலர் ஆதிக்கமும், சுரண்டல் முறையும்
சர்வதேச நிதி & நாணய அமைப்பானது அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒரு பொதுவான வர்த்தக முறைக்கு வழிவகுப்பதாக தாராளவதிகள் வாதிடுவார்கள். ஆனால் இது தான் ஏகாதிபத்திய சுரண்டலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சர்வதேச வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் தான் நிகழ்கிறது. இதன் விளைவு என்ன? அமெரிக்கா தான் இந்த டாலரை வழங்க முடியும். அது அதற்கு இசைந்து போகும் நாடுகளுக்கு டாலர் வழங்கலாம். அதை எதிர்க்கும் நாடுகளுக்கு மேற்கத்திய வங்கிகளில் உள்ள “டாலர்” சொத்துக்களை முடக்கி, பொருளாதார தடைகளை விதிக்க முடியும். இம்மாதிரியான தடைகளைத் தான் ஈரான், கியூபா, வெனிசுவேலா, வட கொரியா போன்ற நாடுகள் சந்திக்கின்றன. ரஷ்யாவும் சந்தித்தது. இவ்வாறு டாலர் ஆதிக்கத்தின் மூலம் தான் விதிக்கும் கட்டளைகளை மற்ற நாடுகளை பின்பற்ற வைக்க முடியும் – அடிப்படையில் தன் சுரண்டலுக்கு ஏதுவான விதிமுறைகளை பறைசாற்ற இயலும். இதனால்தான் அண்மையில் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் டாலர் வர்த்தகத்தில் இருந்து நீங்கிச் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டினார்.
இப்படி சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்கா டாலரை வழங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? – அமெரிக்காவிற்கு வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதாவது, தன் சொந்த நாட்டில் உற்பத்தி ஆனவற்றின் வர்த்தகத்திற்கு டாலர்கள் வழங்கியது போக, சர்வதேச வர்த்தகத்திற்கும் டாலர்கள் வழங்க வேண்டும் என்றால், அந்த கூடுதல் டாலர்களை அது வெறுமனே அச்சிட்டு கொடுக்க முடியாது (அப்படி கொடுத்தால் அது பண வீக்கத்தை மட்டுமே உருவாக்கும்). ஆக, அந்த கூடுதல் டாலர்களை வழங்க, அது உற்பத்தி செய்த மதிப்பைத் தாண்டி, கூடுதல் மதிப்பிலான பண்டங்களை இறக்குமதி செய்ய வேண்டும். அமெரிக்காவின் இன்றைய வர்த்தக பற்றாக்குறை சுமார் $1 லட்சம் கோடி (ஒப்பீடாக இந்தியாவின் பற்றாக்குறை வெறும் $7800 கோடி)
சரி, அப்படி அது உற்பத்தி செய்த மதிப்பை விட கூடுதல் மதிப்பை எப்படி அமெரிக்காவால் நுகர முடிகிறது? இங்கு தான் அமெரிக்காவின் கஜானா “பாண்டு” பத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த “பாண்டு” பத்திரம் என்பது அமெரிக்கா பெறும் கடன் போலத்தான். டாலர் கையிருப்பு உள்ள மற்ற பல்வேறு நாடுகளும், அந்த டாலர் கையிருப்பு மூலம் வருமானம் ஈட்ட, இந்த அமெரிக்க “பாண்டு” பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இந்த அமெரிக்க கஜானா “பாண்டு”கள் தான் உலகிலேயே மிக பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. ஏனெனில் அமெரிக்கா தான் உலகின் ஏகதிபத்திய தலைவன் – உலகில் எந்த அரசாங்க, வங்கி, நிறுவனம் திவால் ஆனாலும், அமெரிக்கா திவால் ஆகாது; சர்வதேச முதலாளித்துவம் அதை திவால் ஆக விடாது. இதனால் தான் அமெரிக்கா தொடர்ந்து இந்த “பாண்டு”களை விற்று, உற்பத்தி செய்த மதிப்பை விட கூடுதல் மதிப்பை நுகர முடிகிறது. இந்த “பாண்டு”கள் மூலம் ஈட்டப்படும் நிதியை வைத்துதான் அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மற்ற நாடுகளை விட பன்மடங்கு அதிகமாக ராணுவத்தில் செலவிடுகிறது. இந்த ராணுவ செலவினம் மூலம் இதர நாடுகளை மிரட்டி, தன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது. இதனால் தான் “டாலர்” ஆதிக்கம் அமெரிக்காவிற்கு மிக முக்கியமானதாக உள்ளது.
ஆனால் இந்த “டாலர்” ஆதிக்கம் இலவசமாக வருவது இல்லை. சர்வதேச நிதி மூலதனம் தொடர்ந்து மற்ற வளரும் நாடுகளை தீவிரமாக சுரண்டுவதற்கு அமெரிக்கா வழிவகை செய்தால் மட்டுமே இந்த டாலர் ஆதிக்கம் நீடிக்கும். உதாரணமாக, அமெரிக்கா மற்ற நாடுகளை சுரண்டிக் கொழுத்து, போதுமான அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டினால் மட்டும் தான், இந்த “பாண்டு”கள் மூலம் பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்த முடியும். அப்படி கட்டாவிட்டால், அமெரிக்காவால் கூடுதல் “பாண்டு”களை விற்க முடியாது (அல்லது “பாண்டு”களின் விலை சரியும் – அதாவது “வட்டி” உயரும்). அப்படி விற்க முடியாமல் போனால் சர்வதேச வர்த்தகத்திற்கு டாலர் வழங்க முடியாது. பின் டாலர் ஆதிக்கம் வீழ்ந்து போகும். ஆக, டாலர் ஆதிக்கம் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு வழி வகுக்கிறது – ஆனால் ஏகாதிபத்திய சுரண்டல் தீவிரமாக தொடரவில்லை என்றால் டாலர் ஆதிக்கம் தொடர முடியாது.
இவ்வாறு வர்த்தக பற்றாக்குறை மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு நாணயம் வழங்கும் பணியை இதற்கு முன் பிரிட்டன் செய்து வந்தது. ஆனால் அது “பாண்டு”கள் மூலமான கடன்களை சார்ந்து இருக்க அப்போது அவசியம் இல்லை – ஏனென்றால் அது எளிதாக இந்தியா போன்ற தன் காலனி நாடுகளிடம் இருந்த வளங்களையும் உழைப்பையும் சுரண்டி, நாணய ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ளும். ஆனால் இன்று காலனிகள் இல்லாததால், அமெரிக்கா இதர வழிகளில் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, தொடர்ந்து சுரண்டலை உறுதிப்படுத்தி, டாலர் ஆதிக்கத்தை தக்க வைக்க வேண்டும்.
ஆனால் இந்த “டாலர்” ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையே தேவை இல்லை என்ற காரணம் சொல்லித்தான் ட்ரம்ப் வர்த்தக வரி விதித்தார் (ஆனால் இந்த வர்த்தக வரிகளின் நோக்கம் ஏகாதிபத்திய சுரண்டலை தீவிரப்படுத்துவது, பற்றாக்குறையை நீக்குவது இல்லை. இது பற்றி அடுத்த பத்தியில் பார்க்கலாம்). இவ்வாறு வர்த்தக வரி விதித்து, மாற்று வழியில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிக்க எண்ணும் ஒரு பகுதி ஆளும் வர்க்கத்தினரின் பிரதிநிதியாக ட்ரம்ப் செயல்படுகிறார். ஆனால் இந்த வழிமுறை வெற்றி பெறுமா என்பதை சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு சக்திகளுக்கு இடையேயான முரண்பாடுகளின் விளைவுதான் நிர்ணயிக்கும்.
இந்த வரிகள் இருமுனை கொண்ட கத்தி – காலப்போக்கில் அமெரிக்க ஆதிக்கத்தை பாதிக்கவும் வாய்ப்புண்டு. இதன் விளைவுகளை அண்மையில் கண்டோம். இந்த வரிகள் விதித்த உடன், சர்வதேச அளவில் வர்த்தகம் நலிவடையும் என்று எண்ணி, பல்வேறு வங்கிகளும் (குறிப்பாக ஜப்பானிய வங்கிகள்) தங்களின் “பாண்டு”களை விற்கத் துவங்கினார்கள். இதனால் “பாண்டு”களின் விலை சரியத் துவங்கியது (அதாவது “வட்டி” உயரத் துவங்கியது). இதனால் நிதி மூலதனத்திற்கு நெருக்கடி வரக் கூடும் என்று எண்ணித்தான் ட்ரம்ப் உடனடியாக வர்த்தக வரிகளை 10% அளவிற்கு குறைத்தார்.
வர்த்தக வரி ஏன்?
இந்த டாலர் ஆதிக்க சுரண்டல் முறை ஏகாதிபத்தியம் சுரண்டி கொழுக்க வழி வகுத்துள்ளது. உதாரணமாக, இன்று ஆலை உற்பத்தி பெருமளவு வளரும் நாடுகளில் நிகழ்கின்றன (பின்னர் “சுதந்திர வர்த்தகம்” மூலம் பண்டங்கள் மேலை நாடுகளுக்கு செல்கின்றன) – ஆலை உற்பத்தியில் பணி புரியும் 80% தொழிலாளர்கள் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆனால் 60% உற்பத்தி மதிப்பு மேற்கத்திய நாட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் சென்று சேர்க்கிறது. ஆப்பிள் தான் இதற்கு சிறந்த உதாரணம் – ஐஃபோன் விலையில் வெறும் 2% மட்டுமே அதை உற்பத்தி செய்யும் சீன தொழிலாளர்களுக்கு ஊதியமாக செல்கிறது; 60% ஆப்பிள் நிறுவனத்திற்கு லாபமாக செல்கிறது. 1960 முதல் இன்று வரை, வளரும் நாடுகளின் மொத்த GDP-யில் 9%-த்தை ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டி பிடுங்கிக் கொண்டதாக கணக்குகள் கூறுகின்றன. ஐ.எம்.எஃப், உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படும் நிதி அமைப்புகள் வளரும் நாடுகளுக்கு கடன் உதவி தரும் போர்வையில், தனியார்மய தாராளமய கொள்கைகளை திணித்து சுரண்டலை தீவிரப்படுத்துகின்றன.
ஆனால் ஏகாதிபத்திய அமைப்பு தங்கு தடையின்றி செயல்படுவதில்லை. முதலாளித்துவ இயக்க விதிகளுக்கு இணங்க, அதுவும் இன்று கடும் நெருக்கடிகளை சந்திக்கிறது. குறிப்பாக அண்மைக்கால தரவுகளை பார்க்கலாம் – உலகின் மொத்த உற்பத்தியில் அமெரிக்கா, ஐரோப்பா & ஜப்பானின் பங்கு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது (முன்னர் கூறியது போல, மற்ற நாடுகளை தொடர்ந்து சுரண்டி நல்ல வளர்ச்சி இருந்தால் மட்டுமே டாலர் ஆதிக்கம் தொடர முடியும்). இந்த வர்த்தக வரிகள் விதிப்பதற்கு முன்பே, இந்த ஆண்டு அமெரிக்காவின் நுகர்வு வெறும் 2% தான் வளரும் என கணிக்கப்பட்டது. 2019-2023 இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மொத்த சரசாரி தனிநபர் வருமான வளர்ச்சி அமெரிக்காவில் வெறும் 5%, மேற்கு ஐரோப்பாவில் வளராமல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் 20% உயர்ந்துள்ளது. தொழிற்நுட்பம் சார்ந்த உற்பத்தி திறன் வளர்ச்சி சீனாவில் ஆண்டுக்கு 6% வேகத்தில் வளர்கிறது, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் வளராமல் உற்பத்தி திறன் குறைகிறது. அமெரிக்க கட்டளைகளுக்கு அடிபணிந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தியதால், இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆற்றலுக்கான விலைவாசி உயர்ந்து, தீவிர நெருக்கடியில் சிக்குண்டு கிடக்கின்றன. இந்த ஏகாதிபத்திய நெருக்கடியை கையாள, டாலர் ஆதிக்கத்தை தக்க வைக்க, சுரண்டலுக்கான புதிய வழிமுறையை கண்டறிவது அவசியமாகிறது.
இங்கு தான் ட்ரம்ப்-பின் வர்த்தக வரிகள் வேலை செய்கின்றன. இது மூன்று முக்கிய பணிகளை செய்கின்றன :
1) ஏகாதிபத்திய சுரண்டலை அதிகரிப்பது – ஏற்றுமதிக்கு அமெரிக்க சந்தையையே பிரதானமாக நம்பி உள்ள நாடுகள், தங்கள் பண்டங்களை விற்க வேறு வழி இன்றி வர்த்தக வரிகளின் பளுவை ஏற்பார்கள். தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பை குறைத்து, அமெரிக்காவிற்கு மலிவு விலையில் பண்டங்கள் வழங்குவார்கள். இதனால் அந்நாட்டு உழைக்கும் மக்களின் சுரண்டல் அதிகரிக்கும்.
2) ஏகாதிபத்திய போரில் அணி சேர்க்கை – இந்த வர்த்தக வரிகளை ஆயுதமாக பயன்படுத்தி, அமெரிக்கா தன் நண்பன்/எதிரி நாடு என நாடுகளை அணி சேர்க்கை செய்கிறது. வர்த்தக வரி கூடுதல் விதிப்பதாக சொல்லி மிரட்டி, அடிபணியும் நாடுகளை தன் நண்பர் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறது; பணியாத நாடுகளை எதிரிகளாக நிறுத்துகிறது. மேலும் தன் சுரண்டலுக்கு வழி வகுக்கும் கொள்கைகளை அமலாக்க இந்த நாடுகளை கட்டாயப்படுத்துகிறது.
3) சீனாவிற்கு எதிரான பனிப்போர் துவக்கம் – ஏகாதிபத்திய சுரண்டலுக்கு மாபெரும் நெருக்கடியாக உள்ளது சோசலிச சீனா. இன்று சீனாவின் அசுர வளர்ச்சியின் காரணமாக, அமெரிக்காவை சார்ந்து இல்லாமல் இருக்கும் வாய்ப்பு உலக நாடுகளுக்கு வந்துள்ளது. உதாரணமாக, அமெரிக்கா வர்த்தக தடை விதித்தாலும், அதை சமாளித்து, சீனாவுடன் வர்த்தகம் செய்து வளர்ந்து வருகிறது ரஷ்யா, ஈரான், வெனிசுவேலா, வட கொரியா போன்ற நாடுகள். இது அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டளைகளை மீறுவதாக அமைகிறது. இன்றும், வர்த்தக வரி விதித்த பின், அமெரிக்காவை விட்டு விட்டு, பல்வேறு வேளாண் பண்டங்களையும் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறது சீனா. அடுத்த கட்ட சுரண்டல் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் பொழுது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியை சீனா வழங்குகிறது. இதனால்தான் மற்ற நாடுகள் மீது வர்த்தக வரியை குறைத்த பின்பும், சீனா மீதான வரியை அமெரிக்கா குறைக்கவில்லை. இது சீனாவை பிரதானமாக தாக்கும் வர்த்தகப் போர் – சோசலிசத்திற்கு எதிரான பனிப்போரின் முன்னோட்டம்.
ஆக, இன்று நடப்பதை நாம் “சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை” என புரிந்து கொள்ளக் கூடாது. ஏகாதிபத்தியம் நெருக்கடியில் உள்ள நேரத்தில், அதன் சுரண்டலை புதுப்பிக்க புதிய வழிகளை தேடும் சக்திகள் வளர்ந்துள்ளன.
சீனாவின் வளர்ச்சி
ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரும் நெருடலே, சீனாவின் வளர்ச்சியானது இந்த நவதாராளமய கட்டளைகளை பின்பற்றாமல், இந்த சுரண்டல் வலைக்குள் சிக்காமல் நிகழ்ந்ததுதான். சீனாவில் 1978-இல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்கு முன்பு, மாவோ காலத்தில் நடந்த புரட்சிகர மாற்றங்கள் இதற்கு வித்திட்டன. நிலச்சீர்திருத்தம் மற்றும் கூட்டுறவு உற்பத்தி போன்றவை பின் நாளில் உள்நாட்டு சந்தை வேகமாக விரிவடைய வழிவகை செய்தன. 1978 சீர்திருத்தங்களுக்குப் பின் சர்வதேச நிறுவனங்களை அழைத்த சீனா, அவை நாட்டை கட்டுப்படுத்த அனுமதிக்கவில்லை – லாபம் ஈட்ட வேண்டும் என்றால், தொழிற்நுட்பத்தை சீனாவுடன் பகிர வேண்டும் என கட்டளை விதித்தது. இதனால் சீனாவில் உற்பத்தி சக்திகளும், அதன் ஆய்வு கட்டமைப்பும் வளர்ந்தது. இன்று சீனா இதர நாடுகளை சார்ந்து மட்டுமே வளரவில்லை – உள்ளூர் சந்தையும், சொந்த நாட்டு ஆய்வுகளும்தான் அதன் வளர்ச்சியின் ஆதாரம். இவை அனைத்தும் சாத்தியமாக்கப்பட்டது பொதுத்துறை நிறுவனங்களின் முன்னணி பங்கு, மற்றும் அரசு சந்தை பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தியது மூலம் தான் – அதாவது நவதாராளமயத்திற்கு நேர் எதிரான கொள்கைகள்.
இன்று அனைத்தையும் தாண்டி, சீனாவின் “தொழிற்நுட்ப வளர்ச்சி” தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அச்சமுறச் செய்கிறது. நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை கல்வி அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் வழிநடத்தலின் ஊடாக இன்று சீனா தொழிற்நுட்ப ஜாம்பவானாக வளர்ந்து நிற்கிறது. (விலைவாசி கணக்கில் கொண்டால்) சீனாவின் ஆய்வு செலவினங்கள் அமெரிக்காவை கூடிய விரைவில் மிஞ்சி விடும். உலகின் 64 முக்கிய தொழிற்நுட்பங்களில், 57-இல் சீனா முன்னணியில் உள்ளது; அமெரிக்க வெறும் ஏழில் தான் முன்னணி.
இப்படிப்பட்ட தொழிற்நுட்ப வளர்ச்சியால் சீனா தன் சுயசார்பையும் தேசிய பாதுகாப்பையும் தக்க வைத்துக் கொண்டது – ஏகாதிபத்திய சுரண்டலுக்கு முட்டுக்கட்டை போடுவது இதுதான். டாலர் ஆதிக்கம் ஏகாதிபத்திய சுரண்டலுக்கான கட்டளைகள் விதிக்க வழிவகை செய்கிறது – ஆனால் மேற்கத்திய நாடுகளின் நவீன தொழிற்நுட்பங்களின் கட்டுப்பாடும், அதன் ஊடாக உண்டாகும் ஏற்றத்தாழ்வான வர்த்தக அமைப்பும்தான் இந்த சுரண்டலுக்கான ஆதாரம். இதை சீனா உடைக்க முனைகிறது – நவதாராளமயத்தின் 20 ஆண்டு காலத்தில் அமெரிக்காவுடனான சீனாவின் ஏற்றத்தாழ்வான வர்த்தகம் 60% வரை குறைந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
மேலும் அமெரிக்காவிற்கு அதிக அளவில் சீனா பண்டங்களை ஏற்றுமதி செய்வதால், அதன் வசம் தான் அதிக டாலர் கையிருப்பு உள்ளது. இந்த டாலர்களை அது அமெரிக்க கஜானா “பாண்டு”களில் முதலீடு செய்துள்ளது. சீனாவை ஏகாதிபத்திய சுரண்டல் வலைக்குள் கொண்டு வரவில்லையெனில், இந்த “பாண்டு”களை சீனா விற்க துவங்கினால், அது டாலர் ஆதிக்கத்தை பாதிக்கும். இதனால்தான் இன்று ட்ரம்ப்-பின் வர்த்தகப் போரின் முக்கிய தாக்குதல் புள்ளியாக சீனா உள்ளது.
இந்த வர்த்தக வரிகளின் தாக்கம் சீனா மீது நிச்சயம் இருக்கும். சீனாவின் மொத்த ஏற்றுமதியில் 15% அமெரிக்காவிற்கு செல்வதால், ஒரு பகுதி பொருளாதாரம் பாதிப்பை சந்திக்க நேரிடும். ஆனால் சீனாவின் வலுவான சோசலிச கட்டமைப்பானது, இதனால் எழும் முரண்பாடுகளை கையாண்டு, அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களுடனான துடிப்புமிக்க பிணைப்பைப் பயன்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று முன்னேறும் என்ற நம்பிக்கை எழுகிறது.
இந்தியா மீதான தாக்குதல்
மற்ற வளரும் நாடுகளைப் போல, இந்த வர்த்தக வரிகள் இந்தியாவையும் குறி வைக்கின்றன. ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வர்த்தக வரிகளால் இந்தியாவின் பல உற்பத்தி துறைகளும் பாதிப்புக்கு உள்ளாகும். குறிப்பாக வாகன உதிரி பாக துறை கடுமையாக தாக்கப்படும் – இது தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். மருந்து மற்றும் ரசாயன உற்பத்தி துறையும் நெருக்கடியை சந்திக்கும். இதை நீக்க வேண்டும் என்றால், இந்தியா அமெரிக்காவின் பண்டங்களை இறக்குமதி செய்யும்போது விதிக்கும் வரிகளை நீக்க வேண்டும் என ட்ரம்ப் மிரட்டுகிறார்.
இதை செய்தால் இந்தியாவின் விவசாயத் துறை அழிந்து போகும். இப்போது அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்காவில் 5% வரி; இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியாவில் 37% வரி – இது இந்திய விவசாயிகளை பாதுகாக்கத்தான். ட்ரம்ப் கட்டளைக்கு பணிந்து இந்த வரியை குறைத்தால் அமெரிக்க பெரு நிறுவனங்கள் பஞ்சு, கோதுமை, மக்காச்சோளம், சோயா, ஆப்பிள் போன்ற பொருட்களை மலிவு விலையில் இந்திய சந்தையில் குவித்து, இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பார்கள். பால்வளத் துறையும் தாக்கப்படும். ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய விவசாயிகள் மேலும் சுரண்டப்படுவார்கள்.
ட்ரம்ப்-பின் வர்த்தக வரிகளுக்கு பதில் இந்தியாவின் வரிகளை குறைத்து தாஜா செய்வது அல்ல. மாறாக சீனாவைப் போல இந்தியா தான் அமெரிக்காவிற்கு விதிக்கும் வரிகளை உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தாவிட்டால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, இந்திய பொருட்களை அமெரிக்கா மலிவாக வாங்கிக் கொள்ளும் – அதாவது இந்திய உழைக்கும் மக்கள் மேலும் சுரண்டப்படுவார்கள். ட்ரம்ப்-பின் வரிகள், இந்தியா நவதாராளமய கொள்கைகளை புறந்தள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது – அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை சார்ந்திருக்காமல், நில சீர்திருத்தம், செல்வ வரி, கல்வி-மருத்துவம் போன்ற பொதுச் சேவை விரிவாக்கம், இறக்குமதி கட்டுப்பாடுகள், பங்குச் சந்தை கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு சந்தையை விரிவாக்கி, சுயச்சார்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஆனால் மோடி அரசாங்கம் இதற்கு நேர் எதிரான கொள்கைகளை கடைபிடிக்கிறது – நவதாராளமய தாக்குதலை அதிகரித்து, இந்திய உழைக்கும் மக்களை மேலும் சுரண்ட வழிவகை செய்கிறது. ஒரு பக்கம் சோசலிச கட்டமைப்பு கொண்ட சீனா அமெரிக்காவை வலுவாக எதிர்க்க, மறுபுறம் இந்தியா இதை எதிர்க்கும் ஆற்றலையும் இறையாண்மையையும் அடகு வைத்துவிட்டு, நவ தாராளமய தாக்குதலுக்கு பணிந்து செல்கிறது. ட்ரம்ப்-பின் கட்டளைகளுக்கு இணங்கி, அமெரிக்காவிற்கு வளைந்து கொடுக்கிறது. முதலில் அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுக்காமல் மௌனம் காத்தது – பின்னர் ட்ரம்ப், இந்தியா அமெரிக்காவிற்கு விதிக்கும் வரிகளை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டதாக கூறினார். இது பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிப்பட்டது – அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் மதுபானம், இரு சக்கர வாகனம், எலக்ட்ரிக் வாகனம் ஆகியவற்றிற்கு இறக்குமதி வரிகளை இந்திய நிதி அமைச்சர் குறைத்தார்.
மேலும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் ட்ரம்ப்-பின் வர்த்தக வரி பிரச்சனையை தீர்க்கலாம் என நினைக்கிறது மோடி அரசு – இதற்காகத்தான் அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் இந்தியா வந்தார். ஆனால் வான்ஸ்-ஸின் ஒவ்வொரு பேச்சும், இந்தியாவை அடிபணிய வைக்கவே இந்த பேச்சுவார்த்தை என்பதைக் காட்டுகிறது – வேளாண் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கச் செய்வது, இந்தியா விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியங்களை வெட்டச் சொல்வது, இந்தியாவின் காப்புரிமை சட்டத்தை மேலும் தளர்த்துவது போன்றவை மூலம் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சுரண்டல் ராஜ்ஜியம் நடத்த அடித்தளம் இடப்படுகிறது. ட்ரம்ப்-பின் வர்த்தக வரிகள் “சுதந்திர வர்த்தகத்திற்கு” எதிரானவை இல்லை; மாறாக சுதந்திர வர்த்தகத்தை பயன்படுத்தி மேலும் இந்தியாவை சுரண்டும் உத்தி என்பது இதிலிருந்தே விளங்குகின்றது.
இந்தியாவின் எதிர்காலமும், இறையாண்மையும் பறிபோகும் பேராபத்து உள்ளது. இதற்கு எதிராக உடனடியாக மக்களை ஒன்று திரட்டி, மோடி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலுக்கு முன் அடிபணிவதை எதிர்த்து போராட வேண்டும். மற்றொரு கட்டுரையில் இதுகுறித்து விவாதிக்கலாம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
