வியத்நாம்: வெற்றிகரமாகத் தொடரும் சோசலிச பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1975 மே தினத்தை உலகெங்கும் ஜனநாயக சக்திகள் இரட்டிப்பு உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் வீர வியத்நாம் ஆகப் பெரிய ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசை தோற்கடித்தது. அதன் துருப்புக்களை தனது மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டியது. 1954 இல் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது அனைத்து பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தியும், அமெரிக்காவால் வியத்நாம் மக்களின் தேச விடுதலைக்கான போராட்டத்தை தோற்கடிக்க இயலவில்லை என்பது ஒரு மிகப்பெரிய வரலாற்று பாடம்.
வரலாற்று பின்னணி
1975 இல் வியத்நாம் பெற்ற மகத்தான வெற்றியைப் போலவே, நீண்ட காலமாக வியத்நாம் நாட்டை காலனியாக வைத்திருந்த பிரெஞ்ச் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1954இல் வியத்நாம் பெற்ற வெற்றியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 1930ஆம் ஆண்டில்தான் வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான இந்தோசீனா கம்யூனிஸ்ட் கட்சி ஹோ சி மின் தலைமையில் துவக்கப்பட்டது. பதினைந்தே ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி பெற்று வியத்நாம் தேச விடுதலை இயக்கத்தின் முன்னணிப்படையாக அது வளர்ந்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் சரணடைந்த சூழலில் வியத்நாமிலிருந்து ஜப்பானிய துருப்புக்கள் வெளியேறின. இத்தருணத்தில் ஹோ சி மின் தலைமையில் விடுதலை போராட்டத்தின் முக்கிய சக்தியாக செயல்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் செப்டம்பர் 2 அன்று வியத்நாம் நாட்டின் விடுதலையை பிரகடனம் செய்தது. ஆனால் ஜப்பானிய ஏகாதிபத்தியம் ஓடி விட்டாலும் பிரெஞ்ச் ஏகாதிபத்தியம் வியத்நாமை தனது காலனி நாடாகவே வைத்துக்கொள்ள முனைந்தது. தொடர்ந்து வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்பது ஆண்டுகள் போராடி, டியன் பியன் பூ (Dien Bien Phu) என்ற இடத்தில் நடந்த பெரும் போரில் வியத்நாம் புரட்சி படை பிரெஞ்ச் ராணுவத்தை முழுமையாக தோற்கடித்தது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள ஜெனீவா நகரில் சர்வதேச பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. வியத்நாம் “தற்காலிகமாக” வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டு, வடக்கு பகுதியில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான “வியத்நாம் ஜனநாயக குடியரசு” ஆட்சிக்கு வந்தது. தெற்கு பகுதியில் இரண்டு ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படும் என்று முடிவாகியது. ஆனால் அமெரிக்காவும் கலந்துகொண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் காலில் போட்டு மிதித்தது. தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாறாக, தெற்கு பகுதியில் அமெரிக்கா ஆதரவுடன் மிகவும் பிற்போக்கான மக்கள் விரோத ஆட்சி திணிக்கப்பட்டது.
ஹோ சி மின் தலைமையிலான வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபுறம் அமெரிக்க வல்லரசின் தொடர் தாக்குதல்களை எதிர்கொண்டு வட வியத்நாமில் அமைதிகாத்து மக்களின் பேராதரவுடன் சோசலிச நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வேகமாக முன்னேறியது. மறுபுறம், நாட்டின் தெற்கு பகுதியில் மிகச் சரியான உத்திகளை பின்பற்றி அங்கு திணிக்கப்பட்டிருந்த பிற்போக்கு அரசிற்கு எதிராக மக்களை அவர்களது வர்க்க நலனை முன்வைத்து திரட்டியது. அமெரிக்க பொம்மை அரசு தனிமைப்பட்டது. அமெரிக்க அரசு ஜினீவா ஒப்பந்தத்தை குப்பையில் போட்டு பல லட்சக்கணக்கில் அமெரிக்க ராணுவ துருப்புகளை தெற்கு வியட்னாமில் இறக்கியது. எனினும் போரில் அதற்கு பின்னடைவுகள் தொடர்ந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்னாமின் வடக்கு, தெற்கு ஆகிய இருபகுதிகளிலும் குண்டுமழை பொழிந்தது. 1965 முதல் 1968 முடிய சராசரியாக தினம் 800 டன் அமெரிக்க குண்டுகள் வட வியத்நாம் பகுதியில் மட்டும் போடப்பட்டன. பல நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வடவியத்நாம் சோசலிச அரசு கணிசமான நகர மக்களையும் தொழிற்சாலைகளையும் கிராமப்பகுதிகளுக்கு கொண்டு சென்றது. வீரமிக்க எதிர்வினை ஆற்றி சோசலிச அரசு ஐந்நூறுக்கும் அதிகமான அமெரிக்க விமானங்களை வீழ்த்தி விமானிகளை கைப்பற்றியது.
1973 கணக்கின்படி, அமெரிக்க ஏகாதிபத்தியம் தெற்கு வியட்நாமின் கிராமப்புற பகுதிகள் மீது 40 லட்சம் டன் குண்டுகள், நான்கு லட்சம் டன் கொடிய நேபாம் குண்டுகள் மற்றும் கிட்டத்தட்ட 2 கோடி உயிரி கிருமிகள் (herbicides) பொழிந்திருந்தது. மேலும், ஜனவரி 1969 கணக்குப்படி, தெற்கு பகுதியில் கிட்டத்தட்ட 5 லட்சம் அமெரிக்க துருப்புகள் களம் இறக்கப்பட்டிருந்தனர். இது தவிர, 1969 ஜனவரி கணக்குப்படி 80,000 தெற்கு வியத்நாம் அரசின் துருப்புக்களும் 50,000 தென் கொரிய துருப்புக்களும், 7,500 ஆஸ்திரேலிய, 11,000 தாய்லாந்து, மற்றும் 2,000 பிலிப்பினோ துருப்புக்களும் இருந்தன. இத்தகைய சூழலிலும் மொத்தம் 12,000 குக்கிராமங்கள் கொண்ட தெற்கு வியட்நாமின் 2,500 கிராமங்களிலும் நான்கில் மூன்று பகுதி மக்கள் ஆதரவு கம்யூனிஸ்டுகள் தலைமையில் செயல்பட்ட தேசீய விடுதலை முன்னணிக்குத்தான் இருந்தது,
அமெரிக்கா நடத்திய மக்கள் விரோத போரில் 1967-68 ஆண்டுகளில் மட்டும் பல லட்சம் தெற்கு வியத்நாம் மக்கள் அகதிகளாக்கபட்டனர். தெற்கு வியத்நாம் பகுதியில் அமெரிக்க படையெடுப்பால் 1965-72 காலத்தில் மட்டும் கொல்லப்பட்ட தெற்கு பகுதி மக்களின் எண்ணிக்கை சுமார் 4,75,000 என்று அமெரிக்க அறிஞர்களின் ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. 2,600 விமானங்கள், 3,000 ஹெலிகாப்டர்கள், 3,500 ஆயுதம் தாங்கிய மோட்டார் வாகனங்கள், 3,42,000 தெற்கு வியத்நாம் அரசின் துருப்புக்கள், 4,92,000 அமெரிக்க துருப்புக்கள் கொண்ட எதிரியை எதிர் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வீர வியத்நாம் 1975 இல் மகத்தான வெற்றி பெற்றது. உலகெங்கும் தேச விடுதலை மற்றும் சோசலிச இயக்கங்களுக்கு வியட்நாமின் வெற்றி பெரும் வலுவை அளித்தது.
சோசலிச வியத்நாம் 1975-85
மக்களை திரட்டியும் சோசலிச நாடுகள் மற்றும் உலக ஜனநாயக இயக்கங்களின் ஆதரவு பெற்றும் உலகின் ஆகப் பெரிய ஏகாதிபத்தியத்தை தோற்கடித்த வியத்நாம், அடுத்த பத்து ஆண்டுகளில் மிகக் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் இப்பணிகளில் மும்முரமாக செயல்பட்டன. 1977 இல் கூடிய கட்சியின் நான்காம் மாநாடு “… வியத்நாம் புரட்சி ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. விடுதலை பெற்று, ஒரு நாடாக மலர்ந்து, சோசலிச புரட்சியை முன்னெடுப்பது, சோசலிசத்தை நோக்கி வேகமாக பயணிப்பது என்ற ஒரே இலக்கு நம் முன் உள்ளது… ஒரே சமயத்தில் நாம் புதிய உற்பத்தி சக்திகளையும் புதிய உற்பத்தி உறவுகளையும் படைக்க வேண்டும்…புதிய பொருளாதார கட்டமைப்பையும் புதிய மேல் கட்டுமானத்தையும் உருவாக்க வேண்டும்…” என்று கூறியது. இதை செய்திட உற்பத்தி உறவுகளிலும், அறிவியல் தொழில்நுட்ப தளத்திலும், தத்துவார்த்த-பண்பாட்டு தளத்திலும் புரட்சிகர மாற்றங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் கூறியது. இதில் அறிவியல் – தொழில் நுட்ப புரட்சி மிகவும் முக்கியம் என்று கட்சி வலியுறுத்தியது. நான்காம் காங்கிரஸ் காலகட்டம் 1977-82. இக்காலத்தில் துரதிருஷ்டவசமாக, சீனா – வியத்நாம் உறவுகள் மோசமடைந்தன. இதுவும் புரட்சியை முன்னெடுத்து செல்வதில் சிரமங்களை ஏற்படுத்தியது. எனினும் தேச ஒற்றுமை வலுப்பெற்று, சோசலிச நிர்மாணப் பணிகளும் நிகழ்ந்தன. 1982 இல் கூடிய கட்சியின் ஐந்தாம் மாநாடு கட்சி மற்றும் நாடு சந்திக்கும் சவால்கள் குறித்து பின்வருமாறு கூறியது:
“நமது பொருளாதார பிரச்சினைகளுக்கு சிறு அளவிலான உற்பத்தி அமைப்புக்குள் நாம் இருப்பது முக்கிய காரணம். மேலும், நீண்ட காலமாக நிகழ்ந்த யுத்தங்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள், காலனீய ஆதிக்க காலத்தின் சொச்ச மிச்சங்கள், அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றால் நாம் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறோம். அதே நேரத்தில், தேச பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரங்களை உறுதிசெய்தல், படிப்படியாக சோசலிச பொருளாதாரத்தையும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் வலுப்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். இத்தகைய சூழலில் கஷ்டங்களும் ஏற்ற இறக்கங்களும் தவிர்க்க இயலாது.”
சவால்கள் நிறைந்திருந்த 1975 – 85 காலத்திலும் சோசலிச பாதையில் வியத்நாம் முன்னேறியது. ஆனால் பொருளாதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கை தரமும் வேகமாக உயரவில்லை. கள அனுபவங்களின் அடிப்படையிலும் தத்துவார்த்த அடிப்படையிலும் பல விவாதங்கள் நடந்தன. அந்தப் பத்தாண்டு அனுபவத்தின் அடிப்படையிலும், உலகெங்கும் பின்தங்கிய நாடுகளில் சோசலிச நிர்மாணத்தின் வளமான அனுபவங்களையும், அச்சமயம் வேகமாக மாறிக்கொண்டிருந்த பன்னாட்டு சூழலையும், சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச படிப்பினைகளையும் கட்சியின் ஆறாம் மாநாடு 1986 இல் கூடிய பொழுது விரிவாக பரிசீலித்து, சோசலிச நிர்மாணப் பாதையை புதுப்பிக்க வேண்டும் என்ற முக்கியமான முடிவை எடுத்தது. வியத்நாம் மொழியில் “doi moi” (“தோய் மோய்”) என்று இந்த புதுப்பித்தல் அழைக்கப்படுகிறது. பல சோசலிச நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட பல புதிய முனைவுகளையும் கொள்கைகளையும் வியத்நாமிலும் பரீட்சார்த்தமாக அமலாக்க முடிவு செய்யப்பட்டது. உணவு உற்பத்திக்கு, குறிப்பாக தானிய உற்பத்திக்கு கூடுதல் கவனம் தரப்பட்டது, கூட்டுறவு அமைப்புகள் வாயிலாகவும், விவசாயிகளுடன் நேரடியாகவும், அரசின் அமைப்புகள் காண்ட்ராக்ட் அடிப்படையில் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. பொருள் சார் ஊக்க முனைவுகளும் (material incentives) பயன்பாட்டுக்கு வந்தன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டது. நெறிமுறைகளின் அடிப்படையில் அயல்நாட்டு முதலீடுகள் வரவேற்கப்பட்டன. மொத்தத்தில் சோசலிச தன்மையை உறுதியாக பற்றி நின்று சந்தை என்ற பொருளாதார உத்தியை தக்க முறையில் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. நாட்டின் உணவு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் விவசாயிகளின் நிலவுடமை மற்றும் சாகுபடி உரிமைகள் உறுதிப் படுத்தப்பட்டு பொருத்தமான ஊக்க முனைவுகள் அமலாக்கப்பட்டன. உற்பத்தியை பெருக்குவதற்கும், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி சக்திகளை வேகமாக மேம்படுத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலச்சீர்திருத்தங்கள் அனைத்து சிறு,குறு விவசாயிகளுக்கும், நிலமற்றோருக்கும் பயன் தரும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டன.
டொய் மோய் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தின. துவக்கத்தில், அரசின் முதலீடுகள் இதற்கு பிரதான காரணமாக இருந்தன. பின்னர், அரசு நடவடிக்கைகள், உதவிகள் மூலம் தனியார் துறையிலும் முதலீடுகள் பெருகின. மக்களின் உணவுபாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. ஒருசில ஆண்டுகளில் வியத்நாம் அரிசி மற்றும் வேறு பல வேளாண் பொருட்களை கணிசமான அளவில் ஏற்றுமதி செய்யும் நிலையை அடைந்தது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக வியத்நாம் சாதனை படைத்துள்ளது. வேலை வாய்ப்பும் பெருகி உள்ளது. உழைப்பாளி மக்களின் வாழ்க்கை தரமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. வேளாண் துறை, தொழில்துறை மற்றும் நவீன சேவை துறைகள் என அனைத்து துறைகளிலும் சோசலிச வியத்நாம் வேகமான வளர்ச்சியை சாதித்துள்ளது. வரலாற்று அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு சந்தை உள்ளிட்ட பல உத்திகள் பயன்படுத்தப்படும் அதேநேரத்தில் அரசின் பங்கும் திட்டமிட்ட நடவடிக்கைகளும் இத்தகைய பன்முக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. சிறு உற்பத்தியாளர்களே விவசாயத்திலும் தொழில் மற்றும் சேவை துறைகளிலும் அதிக அளவில் செயல்படும் வியத்நாம் பொருளாதாரத்தில் சோசலிச இலக்கை நோக்கி செல்கையில் வியத்நாம் அரசின் முக்கியமான பங்கையும் கட்சி வலியுறுத்துகிறது. அரசின் ஒருங்கிணைப்பும் கட்டுப்பாடுகளும் பொருளாதார வளர்ச்சியை சாதிக்கவும் நெறிப்படுத்தவும் மையமான அம்சங்களாக வியட்நாமில் உள்ளன. இலக்குகளும் தொலைநோக்கு வியூகங்களும் ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக முன்வைக்கப்படுகின்றன. இவை வளர்ச்சிக்கான வளங்களின் ஒதுக்கீடுகளை நிர்ணயிக்கின்றன. இத்தகைய சோசலிச அணுகுமுறைதான் 1997 இல் வெடித்த கிழக்கு ஆசிய நிதி நெருக்கடியிலும் 2007-2008 உலகளாவிய நிதி நெருக்கடியிலும் வியத்நாம் பெருமளவில் பாதிப்பின்றி சமாளித்ததற்கு முக்கிய காரணங்கள்.
சவால்கள் நிறைந்த பன்னாட்டு சூழல்
தேச விடுதலை பெற்ற பின்பும் கடுமையான சவால்கள் நிறைந்த பன்னாட்டு சூழலை வியத்நாம் எதிர்கொள்ள நேரிட்டது. 1970களின் நடுப்பகுதியில் மக்கள் சீனத்திற்கும் சோசலிச வியத்நாமுக்கும் இடையில் கூர்மையான முரண்பாடுகள் எழுந்தன. இரு சோசலிச நாடுகளுக்கிடையில் மோதலை உருவாக்குவதில் பல காரணிகள் இருந்தன. அதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கும் இருந்தது. இந்த முரண்கள் 1980களின் நடுப்பகுதிக்குள் தீவிரம் இழந்தன. ஆனால் 1980 களின் இறுதியிலும் 1990 களின் துவக்கத்திலும் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச ஆட்சிகள் வீழ்த்தப்பட்டதும், சோவியத் ஒன்றியம் சிதைந்துபோனதும், வியத்நாம் உள்ளிட்ட அனைத்து சோசலிச நாடுகளுக்கும் சக்திகளுக்கும் பெரும் சவாலாக அமைந்தன. ஏகாதிபத்திய முகாம் பெரிதும் வலுப்பெற்றது. அமெரிக்க வல்லரசு உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேகமாக செயல்பட்டது. “சோசலிசம் அழிந்தது” என்று கொக்கரித்தது, இப்புதிய சூழலை எதிர்கொள்ள வியத்நாம் புதிய உத்திகளை மேற்கொண்டது. முதலாளித்துவ உலகமயமாக்கலின் அசுர தாக்குதல்களை எதிர்கொண்டது மட்டுமின்றி, சோசலிச நிர்மாணத்திற்கு சாதகமான வகையில் உலகமயமாக்கலை பயன்படுத்த உதவும் கொள்கைகளை கண்டறிந்து வியத்நாம் அமலாக்கியது. உலகின் அநேக நாடுகளுடன் வியத்நாம் தனது பொருளாதார உறவுகளை மேம்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நிகழ்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பெறவும், அவற்றை மேலும் செழுமைப்படுத்தவும், நாட்டு வளர்ச்சிக்கு அவற்றை சோசலிச உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் பயன்படுத்தவும், தீவிர முனைப்புடன் சோசலிச வியத்நாம் செயல்பட்டு வருகிறது. இதில் பல வெற்றிகளையும் ஈட்டியுள்ளது.
இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 ஆவது மாநாடு சில இலக்குகளை முன்வைத்தது:
- ஒன்றிணைந்த சோசலிச வியத்நாமின் ஐம்பதாம் ஆண்டான 2025 இல் நவீன தொழில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், தேசீய வருமான அடிப்படையில் கீழ்-நடுத்தர நிலையிலான நாடு என்ற நிலையில் இருந்து நடுத்தர வளர்ச்சி பெற்ற நாடு என்ற நிலையை அடைதல்
- வியத்நாம் கட்சியின் 100 ஆம் ஆண்டில் (2030) உயர்-நடுத்தர வருமான நாடு என்ற நிலையை அடைதல்
- வியத்நாம் ஜனநாயக குடியரசின் நூறாம் ஆண்டான 2045 இல் உயர் வருமானம் கொண்ட வளர்ந்த நாடாக வியத்நாம் திகழ்வது
இந்த இலக்குகளை நோக்கி வியத்நாம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்சமயம் பத்து கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமின் ஒரு ஆண்டிற்கான தலா தேச உற்பத்தி மதிப்பு அமெரிக்க டாலர் கணக்கில் 4800 ஐ தாண்டியுள்ளது. மேலும் வாங்கும் சக்தி அடிப்படையில் கணக்கிட்டால் ( PPP-purchasing power parity) இத்தொகை 17,484 அமெரிக்க டாலர் ஆகும்.
அண்மை ஆண்டுகளில் வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 6.5 -7 % ஆக உள்ளது. வியத்நாம் மக்கள் தொகையில் 45% நகரப்புற வாசிகள். சமூக உழைப்பின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.5%. ஆலை உற்பத்தியின் பங்கு தேச உற்பத்தி மதிப்பில் 25%க்கும் அதிகம். டிஜிட்டல் பொருளாதார பங்கு 20%. மொத்த உழைப்பு படையில் 25% வேளாண் துறையில் உள்ளனர். வறுமை பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டு விட்டது. 10,000 மக்களுக்கு 10 மருத்துவர்கள், 30 மருத்துவமனை படுக்கைகள், சராசரி ஆயுட்காலம் 74.5 ஆண்டுகள். ஊரக பகுதிகளில் பெரும் முன்னேற்றம். கல்வியிலும் அறிவியல் தொழில்நுட்பத்திலும் பாய்ச்சல் வளர்ச்சி. இவ்வாறு வியட்நாமின் சாதனை பட்டியல் நீளுகிறது.
தத்துவார்த்த புரிதலின் அவசியம்
முதலாளித்துவ அறிவுஜீவிகள் பொதுவாக வியட்நாமின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை மறுப்பதில்லை. இந்த வளர்ச்சி தேச உற்பத்தி மதிப்பின் வேகமான முன்னேற்றத்தில் மட்டுமல்ல; மனித மேம்பாட்டுக் குறியீடுகளிலும் பிரதிபலிக்கிறது என்பதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. ஆனால் ஒரு சின்னஞ்சிறு நாடு அமெரிக்க வல்லரசின் தாக்குதலையும் முதலாளித்துவ உலகின் தடைகளையும் நெறிமுறைகளையும் எதிர்கொண்டு இவ்வாறு வளர்ந்துள்ளதை சோசலிச பாதையின் வெற்றி என்று ஏற்றுக் கொள்ள அவர்களால் இயலவில்லை. ஆகவே அவர்களில் பலரும் வியத்நாம் பின்பற்றிவரும் பாதை சந்தை பொருளாதாரத்தை மையமாக கொண்டது என்றும், அதன் முன்னேற்றம் முதலாளித்துவ பாதையின் சிறப்பை காட்டுகிறது என்றும் எழுதுகின்றனர். உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் வேறு சிலர் வியத்நாம் தனது பொருளாதார மேலாண்மையில் அரசின் பங்கை குறைத்துக்கொண்டே வரவேண்டும் என்றும் தாராளமய கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்குகின்றனர். இவையெல்லாம் மிகவும் தவறான அனுமானங்கள் என்பதை புரிந்துகொள்ள வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சினையில் முன்வைக்கும் தத்துவார்த்த நிலை என்ன என்பதை பார்ப்போம்.
2021 இல் வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக இருந்த என்குயென் பூ டிராங் (Nguyen Phu Trong) எழுதிய முக்கியமான கட்டுரையில் சோசலிச பாதை மற்றும் பயணம் பற்றி கட்சியின் புரிதலை விளக்குகிறார். முதலாளித்துவம் தனது வரலாற்று இருப்பில் உற்பத்தி சக்திகளை வளர்ப்பதிலும் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் சாதனைகள் படைத்துள்ளதை சுட்டிக் காட்டியபின், இதன் ஒரு முக்கிய காரணி உழைக்கும் வர்க்கம் நடத்தியுள்ள மாபெரும் போராட்டங்கள் என்பதையும் அவர் நினைவூட்டுகிறார். இப்போராட்டங்கள்தான் மனித மேம்பாட்டுக் குறியீடுகளை முன்னெடுப்பதிலும் முற்போக்கு விழுமியங்களை நிலைநிறுத்துவதிலும் பெரும்பங்கு வகித்துள்ளன. எனினும், முதலாளித்துவம் அதன் அடிப்படை முரண்பாடுகளை தீர்க்க இயலவில்லை. அதிகரிக்கும் வேலையின்மை, விரிவடையும் ஏழை-செல்வந்தர் இடைவெளி, சுற்றுச்சூழல் நெருக்கடி, நான்காம் தொழில் புரட்சியின் தீவிர விளைவுகள், ஆரோக்கியம், கல்வி, அரசியல் என்று பல தளங்களில் ஆழமடையும் நெருக்கடி ஆகியவற்றை சுட்டிக்காட்டி, சமகால முதலாளித்துவம் மானுடத்தின் இருப்பிற்கே அபாயம் என்கிறார் என்குயென் பூ டிராங்.
தேசத்தின் சுதந்திரமும் சோசலிசமும்தான் வியத்நாமின் பாதை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன. “வியத்நாம் கடும் உழைப்பு செலுத்தி உருவாக்கிவரும் சோசலிச சமூகத்தில் அனைத்து மக்களின் வாழ்க்கை தரமும் நன்றாக இருக்கும். நாடு வலிமை பெற்று இருக்கும். மக்கள்தான் நாட்டின் உடமையாளர்களாக இருப்பார்கள். ஜனநாயகமும் சமத்துவமும் நாகரீக பண்புகளும் கோலோச்சும்.” என்று டிராங் கூறுகிறார்.
“சோசலிசத்திற்கான பயணம் நீண்டது, நுட்பமான சவால்கள் கொண்டது என்பதை கட்சி அனுபவத்தில் உணர்ந்துள்ளது. சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் ஆழமான, தன்மைரீதியான மாற்றங்கள் கொண்டதாக இப்பயணம் இருக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.
இன்று வியத்நாம் நிர்மாணித்துவருவது சோசலிச திசைவழியிலான (socialist oriented) சந்தை பொருளாதாரம் என்று கட்சி வரையறுக்கிறது. இது உலக பொருளாதாரத்தின் அங்கமாகவும் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கும் சோசலிச அரசு இதனை வழி நடத்தும். இதன் இலக்குகள் அனைத்து மக்களுக்கும் செழிப்பான வாழ்க்கை, வளமான நாடு, ஜனநாயகம் மற்றும் சமத்துவம் தன்னகத்தே கொண்டுள்ள முன்னேறிய சமூகம் ஆகியவை. இது ஏற்கெனவே மானுட வரலாற்றில் உருவாகிய சந்தை பொருளாதார அமைப்பின் சோசலிச தன்மை கொண்ட புதிய வடிவம். சந்தைப் பொருளாதார நெறிமுறைகள் மட்டுமின்றி, சோசலிச கோட்பாடுகள் அடிப்படையில் இது இயங்கும். உடமை உறவுகள், அமைப்பு மற்றும் ஆளுமை, விநியோகம் என்ற மூன்று அம்சங்களிலும் இது பிரதிபலிக்கும்.
குறிப்பாக, இது முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் அல்ல. ஆனால் முழுமையான சோசலிச சந்தை பொருளாதாரமும் அல்ல என்பது வியத்நாம் கட்சியின் புரிதல். மேலும் சமூகத்தையும் அதன் பொருளாதாரத்தையும் இணைத்தே இது பயணிக்கும். ஒவ்வொரு படியிலும் பொருளாதார வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் இணைந்தே நிகழும். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சமத்துவத்தையும் சமூக முன்னேற்றத்தையும் புறம் தள்ளாத வளர்ச்சி பாதைதான் சோசலிச தன்மையிலான சந்தைப் பொருளாதார மாடல் என்று டிராங்க் விளக்குகிறார்.
இத்தகைய பாதையில் பயணிக்கும் பொழுது, சில அபாயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கட்சி எச்சரிக்கிறது. முக்கியமாக, கட்சிக்குள்ளும், ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்குள்ளும் சந்தர்ப்பவாதம், தனிநபர் போக்கு, ஊழல், அதிகாரவர்க்க போக்கு, விழுமிய சீரழிவுகள் போன்ற அபாயங்களை எதிர்த்து நிற்பது அவசியம். சோசலிசத்தை நோக்கிய வியத்நாமின் பயணத்தில் முதலாளித்துவ போக்குகள் உள்ளிட்ட சோசலிசத்திற்கு எதிரான சக்திகளுடன் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கவேண்டும் என்றும் கட்சி எச்சரிக்கிறது.
நிகரற்ற வியத்நாம் புரட்சிப் பயணம்
வீர வியத்நாம் சோசலிச புரட்சிப் பயணம் பிரும்மாண்டமான சவால்களை முறியடித்து முன்னேறி வந்துள்ளது. ஒரு சில ஆயிரம் உறுப்பினர்களைக்கொண்டு 1930 ஆம் ஆண்டில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி, 1945 இல் தேச விடுதலையை பிரகடனம் செய்தது. அடுத்தடுத்து ஜப்பானிய, பிரெஞ்ச் ஏகாதிபத்தியங்களை தோற்கடித்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடிய தாக்குதல்களையும் எதிர்கொண்டு விரட்டி அடித்து, நாட்டையும் மக்களையும் ஒன்றுபடுத்தி, 1975 இல் தேச விடுதலையையும் ஒருமைப்பாட்டையும் வென்றது. அடுத்த, சிரமங்கள் நிறைந்த பத்து ஆண்டுகளில் நீண்ட காலனி ஆதிக்கத்தாலும், இருபது ஆண்டு போரின் தீய விளைவுகளாலும் சிதிலம் அடைந்திருந்த நாட்டின் நிலைமைகளை சீர்செய்து , வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையிலான மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, வியத்நாம் தனது சோசலிச பயணத்தின் அடுத்தகட்டத்திற்கு தயாரானது. இதனை தொடர்ந்து கடந்த ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக சோசலிச திசைவழியிலான சந்தை பொருளாதாரத்தை தொழிலாளிவர்க்க அரசின் மையப்பங்குடன் கட்டி அமைத்து வருகிறது. சிக்கலான பன்னாட்டு சூழலில், பொருளாதார வளர்ச்சியையும் சமூக முன்னேற்றத்தையும் சமத்துவ பாதையில் பயணித்து முன்னெடுப்பதில், வியத்நாம் பெரும் வெற்றிகளை ஈட்டி வருகிறது. மக்கள் சீனத்தின் சோசலிச பயணத்தைப் போலவே, அனைத்து வளரும் நாடுகளுக்கும் கலங்கரை விளக்கமாக வியத்நாமின் சோசலிச புரட்சி பயணம் அமைந்துள்ளது.
சோசலிச வியத்நாம் வென்றே தீரும்!
மேலே உள்ள கட்டுரையை எழுதிய உதவிய சில கருத்து வளங்கள்
1. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு தேசீய மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அறிக்கைகள், ஸ்தாபன அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்.
2. ஹோ சி மின்: தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள் 1920-1969 (அயல்நாட்டு மொழி வெளியீடுகள், ஹனாய், 1977)
3. Asian Transformations: An Inquiry into the Development of Nations Editor: Deepak Nayyar; Print publication date: 2019; DOI: 10.1093/oso/9780198844938.001.0001
4. “ Some theoretical and practical issues on socialism and the path towards socialism in Vietnam.” By Dr Nguyen Phu Trong, General Secretary of the Communist Party of Vietnam (CPV) Central Committee: May 27, 2021
5. Ben Kiernan (2017), Việt Nam: A History from Earliest Times to the Present. Oxford University Press
6. Arve Hansen·JoInge Bekkevold· Kristen Nordhaug (Editors) The Socialist Market Economy in Asia
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
