
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ். அச்சுதானந்தன்
ஆசாத்
கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட்.
கேரள மண்ணின் வீரம் செறிந்த புன்னப்புர – வயலார் போராட்டத்தின் களப்போராளி தோழர் வி.எஸ். அச்சுதானந்தன். இந்தப் போராட்ட நெருப்பு அவரது வாழ்வின் இறுதிவரை கனன்று கொண்டேயிருந்தது.
புன்னப்புர – வயலார் போராட்டம்
தற்போதுள்ள கேரளாவின், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள்தான் புன்னப்புராவும் வயலாரும். அதன் கரைப்புறத்திலும் தென்னந்தோப்புகளுக்குள்ளும் 1930கள் முதல் புரட்சியாளர்கள் களம் அமைத்தனர். விவசாயிகளையும், குத்தகைதாரர்களையும், கயிறு ஆலை தொழிலாளர்களையும் கம்யூனிஸ்ட் இயக்கம் அணிதிரட்டியது. அங்கு நிலவும் கொடுமைகளை அணிதிரளாமல் எதிர்கொள்ள முடியாது என்கிற நிலையில் அம்மக்கள் இருந்தனர்.
கூலி விவசாயிகள் நிலப்பிரபுக்களின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். தஞ்சையில் பண்ணையடிமைகளுக்கு நடந்ததுபோன்ற கொடூரங்கள் இங்கும் அரங்கேறின. பெண்கள் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு இணங்க வேண்டும் என்று துன்புறுத்தப்பட்டனர். அதை மறுத்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு கழுத்துவரை மண்ணில் புதைத்து கொடூரமாகத் தாக்கப்படுவதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. கயிறு தொழிலாளர்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஈழவ மக்களுக்கு எதிரான சாதிய சமூக ஒடுக்குமுறைகளும் நிறைந்திருந்தன. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலத்தில் அங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இப்பகுதிகள் உள்ளடங்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவான் சி.பி. ராமசாமி ஐயங்காரின் கொடூரமான ஆட்சி நடந்துவந்தது. இந்திய நாடு விடுதலையடைய இருந்த நிலையில், 1946 இல் தனது சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்காமல் தனி நாடாக அறிவிக்கும் முயற்சிகளில் அவர் இறங்கினார்.
இந்த பின்னணியில், விவசாய கூலி தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட ஒன்றிணைந்தனர். கயிறு திரிக்கும் தொழிலாளர்கள், அவர்களது முதலாளிகளுக்கு எதிராகவும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சி.பி.ராமசாமி ஐயரின் கொடுங்கோன்மையான ஆட்சிக்கு எதிராகவும், புன்னப்புர – வயலார் போராட்டம் அமைந்தது.
இளம் கம்யூனிஸ்ட்
இந்த காலப்பகுதியில் களத்தில் நின்ற இளம் கம்யூனிஸ்ட்தான் தோழர் வி.எஸ். தனது 17வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தோழர் வி.எஸ் ஸுக்கு புன்னப்புரா – வயலார் போராட்டம் நடக்கும்போது வயது 23. இளம் வயதிலேயே தனது தாயை இழந்த வி.எஸ், ஏழாம் வகுப்பிற்குமேல் படிப்பை தொடர முடியவில்லை. உறவினர் ஒருவரிடம் தையல் வேலை செய்தார். அங்கு கம்யூனிஸ்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டு, தொடக்கத்தில் கயிறு தொழிலாளர்களை அணிதிரட்டும் வேலையிலும், பின்னர் விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளையும் அவர் செய்தார்.
1938 இல் அங்கு வெற்றிகரமான ஒரு பொது வேலை நிறுத்தத்திலிருந்து துவங்கிய புன்னப்புர – வயலார் போராட்டம் 1946 இல் நடந்த எழுச்சிவரை நீடித்தது. இப்போராட்டத்தில் தோழர்கள் சிந்திய இரத்தம் நம் உணர்வுகளை இன்றும் சூடேற்றும். துப்பாக்கிகளோடும், நவீன ஆயுதங்களோடும் வந்த திவானின் படைகளை தங்களிடம் இருந்த மரக் கிளைகளால் செய்யப்பட்ட ஈட்டிகளை கொண்டு உழைக்கும் மக்கள் எதிர்கொண்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வியட்நாம் எதிர்கொண்டதுபோல் எளிய மக்களின் உறுதி அனைத்து கொடூரங்களையும் எதிர்த்து நின்றது. ஒரு இளம் கம்யூனிஸ்ட் அந்த மர ஈட்டியுடன் நிற்கும் சிலையே புன்னப்புர – வயலார் போராட்டத்தின் சின்னமாக நிற்கிறது.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும், அத்தியாவசிய பொருட்களையும் கொடுக்கவேண்டும் என்று தொடங்கிய போராட்டத்தை திருவிதாங்கூர் அரசு வன்மத்துடன் எதிர்கொண்டது. மேலும், விடுதலைக்கு பிறகு இந்தியாவுடன் இணைவதில்லை என்கிற திவானின் முடிவையும் மக்கள் எதிர்த்தனர். அமெரிக்க மாதிரியை போல் திருவிதாங்கூரை மாற்றப்போவதாக திவான் கூறியதற்கு எதிராக ‘அமெரிக்க மாதிரியை அரபிக்கடலில் வீசு’ என்கிற முழக்கம் வீரியத்துடன் எழுந்தது. அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலைநிறுத்தங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. போலீஸின் மிருகத்தனமான தாக்குதல்களும் நிலப்பிரபுக்களுடைய குண்டர்களின் தாக்குதல்களும் அதிகரித்தன. தொழிற்சங்க அலுவலகங்கள் தாக்கப்பட்டு, தீயிடப்பட்டு, அழிக்கப்பட்டதோடு, இயக்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த சூழலில் தோழர் வி.எஸ். தலைமறைவாக இருந்து போராட்டத்தை வழிநடத்த பணிக்கப்பட்டார்.
ரத்த சாட்சிகள்
1946 அக்டோபர் 22 அன்று அகில இந்திய தொழிற்சங்க மையம் புன்னபுராவில் ஒரு பொதுவேலை நிறுத்தத்தை அறிவித்தது. பொதுமக்களும் தொழிலாளர்களும் விடுதலைக்கான கோரிக்கைகளோடு, புன்னப்புரா ரிசவ் காவலர் முகாமை நோக்கி பேரணியாக முன்னேறினர். இவர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிர் இழந்தனர். இதன் விளைவாக கோபமுற்ற மக்கள் தாக்குதலை எதிர்கொண்டபோது, அந்த முகாமின் அதிகாரி உள்ளிட்டு ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அம்பலப்புழை மற்றும் செர்த்தலா வட்டங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமங்களில் மனித வேட்டை தொடங்கியது. பிடிக்கப்பட்ட அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; அல்லது அடித்தே கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அணிதிரண்டவர்கள் மீது, இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை. ஜாலியன் வாலாபாக்கில் நடந்ததுபோல் துப்பாக்கிகளில் இருந்த தோட்டாக்கள் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதன்பிறகும், உயிருடன் இருந்தவர்களை கொல்ல துப்பாக்கியின் முனையில் உள்ள பயனெட் (ஈட்டி) பயன்படுத்தப்பட்டது. வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, முழுப் பகுதியும் பாலைவனமாக மாற்றப்பட்டது.
இந்தப்போராட்ட களத்தில் தோழர் வி.எஸ் கைது செய்யப்பட்டு மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். சிறைக் கம்பிகளுக்கு இடையே இங்கும் அங்குமாக பாதி உடலை இழுத்து பிடித்துக்கொண்டு அவர் மீது லத்திகளை ஏவினர் காவலர்கள். செத்துவிட்டார் என்று நினைத்து எடுத்து வெளியே வீசும் நிலைவரை வி.எஸ் அங்கு தாக்கப்பட்டார். “என் எலும்புகளை உடைக்கலாம், ஆனால் என் உறுதியை உடைக்கமுடியாது” என்றார். அவரது முழங்காலில் துப்பாக்கியின் பயனெட் கொண்டு குத்தப்பட்டார். செத்துவிட்டதாக நினைத்து ஜீப்பில் எடுத்துச்சென்று புதருக்குள் வீச நினைத்தபோது, அவரிடமிருந்து வெளிவந்த ஒரு மூச்சைப் பார்த்து வாகனத்தில் வந்த எல்லோரும் அதிர்ந்தனர். ஜீப்பிலிருந்த மற்றொரு கைதியின் வற்புறுத்தலால் வி.எஸ். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 23 வயதில் காவல்துறையின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி செத்துப்போனதாக நினைத்த வி.எஸ் தான், அதை அடுத்த 78 ஆண்டுகள் கேரள மக்களின் உணர்வுப் பூர்வமான குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தார்.
புன்னபுர – வயலார் போன்ற ரத்தசாட்சிகளின் வரலாறும், அவர்கள் சிந்திய ரத்தமும், செய்த தியாகங்களும், தோழர்களின் தியாக வரலாறுமே கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வேராகும். அக்காலத்தில் வங்கம், தெலுங்கானா என நாடு முழுவதும் கட்சி முன்னெடுத்த போராட்டங்களை அரசதிகாரம் எதிர்கொண்ட விதமும் அதன் அனுபவங்களும் கட்சியை மேலும் செழுமைப்படுத்தியது. அதுவே கேரளம் முன்னோக்கிப் பயணிப்பதற்கு வழிவகுத்தது.
‘புன்னப்புரா – வயலார் போராட்டத்தில் தோழர் வி.எஸ். காலில் காவல் துறை பயனெட்டை சொருகியதாக அறிந்தேன். அந்த பயனெட்டின் ஆளமான காயம் அவரோடு இறுதிவரை பயணித்தது. அந்த காயம்பட்ட கால்களோடுதான் அவர் கேரள மக்களின் மனங்களில் உள்நுழைந்தார்’. அந்த உள்நுழைதல்தான் 150 கிலோமீட்டர் தூரமான திருவனந்தபுரம் முதல் ஆழப்புழாவிற்கு அவரது உடலை எடுத்துச்செல்ல 24 மணி நேரத்திற்கும் மேலாகியது. புன்னப்பர – வயலாரில் ரத்தசாட்சிகளுக்காக கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் தனது தோழர்களோடு 78 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துகொண்டார் தோழர் வி.எஸ்.
தொழிலாளி வர்க்கத்திற்கு உரமூட்டும்
ஒன்றுபட்ட கட்சியின் ஆலப்புழா மாவட்டத்தில் மண்டல செயலாளர். மாநில செயற்குழு உறுப்பினர், தேசிய குழு உறுப்பினர் என பல பொறுப்புகள் வகித்தார். 1964 இல் நடந்த சித்தாந்தப் போராட்டத்தில் ”உண்மைக்குப் பிரிவுகள் இல்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக எழுந்த 32 தோழர்களில் தற்போதுவரை நம்மோடு இருந்த கடைசி தோழர் வி.எஸ் தான்.
1985 முதல் 2009 வரை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர்; மூன்று முறை எதிர் கட்சி தலைவர்; ஒரு முறை முதல்வர்; கேரள அரசு நிர்வாக சீர்திருத்தக்குழு தலைவர்என்ற பொறுப்புகளோடு கூடவே, எல்லா காலத்திலும் மக்கள் போராளியாகவும் அவர் திகழ்ந்தார்.
மார்க்ஸ் காலம் முதல் இருப்பதுபோல், புரட்சியாளர்களை அவர்கள் வாழும் காலத்தில் தூற்றுவதும், இறந்தபிறகு அவர் குறித்து புகழ்பாடிவிட்டு, அதோடு கம்யூனிசத்தின் வரலாறு முடிந்துவிட்டது என்று எழுதும் போக்கு ஆளும் வர்க்கத்திற்கு உண்டு. அப்படியான வேலைகள்தான் தோழர் வி.எஸ் மறைவின்போது முதலாளித்துவ பத்திரிகைகள் செய்தன. வி.எஸ். தான் இறுதி; எல்லாம் முடிந்துவிட்டது என்று பேசுவது அவர்களுக்குத் தேவையாக உள்ளது. ஆனால், வரலாறு அப்படி முடிந்து போவதில்லை.
வி.எஸ் – இன் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கேரளாவை ஸ்தம்பிக்க வைத்தது மாணவர்களின் போராட்டம். கேரள ஆளுநரின் அடாவடித்தனத்தையும் ஆர் எஸ் எஸ் திட்டங்களையும் எதிர்த்த மாணவர்களின் போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஜூலை 9 அன்று நடந்த தொழிலாளர்களின் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின் போது சென்னையில் நடைபெற்ற ரயில் மறியலில் தன்னை நோக்கி ரயில் வரும்போதும் கையில் கொடியுடன் ரயிலை நோக்கி முன்னேறிய மாணவர் சங்க பெண் தோழரின் உறுதியும் போர்குணமும் வி.எஸ் – இன் வழியில் பெற்றது. உழைக்கும் மக்களுக்கான முழுமையான விடுதலையை அடையும்வரை, தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் போன்ற தோழர்களின் தியாகமும் வீரமும் தொழிலாளி வர்க்கத்திற்கு உரமூட்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
