தொடங்கட்டும் கூலிக்கான வர்க்கப் போர் முழக்கம்!
கருமலையான்
கூலி என்பது, உழைப்பு சக்தியின் விலைக்கு தரப்பட்டுள்ள சிறப்பு பெயராகும். மனிதர்களின் ரத்தத்திலும், சதைகளிலும் மட்டுமே அதனை சேகரித்து வைக்க முடிந்ததொரு தனித்துவமான ஒரு சரக்கிற்கு தரப்பட்டிருக்கும் சிறப்புப் பெயர் அது.
உழைப்பு அதன் செயல் வடிவத்தில், இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் சுமார் 52 கோடி தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்தனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்தது. மொத்த உழைப்பு சக்தியில் வேளாண்துறையில் 41.19 சதவிகிதமும், தொழிற்துறையில் 26.18 சதவிகிதமும், சேவைத்துறையில் 32.33 சதவிகிதமும் இருந்தது. நமது நாட்டில் பகலவனுக்கு கீழ் அமைந்த அர்த்தமற்ற அனைத்து விசயங்கள் குறித்தும் விவாதிப்பதில் எந்த ஒரு குறைவும் இல்லை. ஆனால், இந்திய பொருளாதாரத்தின் முக்கிய குறியீடாகவும், இந்திய உழைப்பாளர்களின் வாழ்வா சாவா என்ற பிரச்னையின் அடிநாதமாகவும் விளங்கும் கூலி குறித்து மட்டும் எவ்வித விவாதமும் நடப்பதில்லை.
நாட்டின் நிதியமைச்சர், ‘கூலி’ பற்றி தீவிரமான முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே ஒரு வார்த்தையைக் கூட பேசவில்லை. அபாயகரமான சரிவை சந்திக்கும் கூலி விகிதத்தை மட்டுமல்ல; சரிந்துவரும் உண்மை ஊதிய விகிதம் பற்றியும் கூட ஒருவார்த்தையும் பேசவில்லை. கார்ப்பரேட்களுக்கு அடிமை சேவகம் புரிந்துவரும் இன்றைய மோடி அரசாங்கமோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை ஊரக உழைப்பாளர்களின் உண்மையான கூலி, கடந்த இரண்டாண்டுகளைக் காட்டிலும் சிறிது சரிந்தோ அல்லது தேக்க நிலையிலோ உள்ளது என்பதை தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறது. 36.5 கோடி தொழிலாளர்கள் இந்திய ஊரகங்களில் உள்ளனர் என முந்தைய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 3 மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும். அடிமட்ட கூலி பெறக்கூடிய ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள்தொகையினர் கூலியில் சரிவைச் சந்திக்கிறார்களென்றால், வாங்கும் சக்தியை இழந்து கொடுமையான வறுமையில் அவர்களை தள்ளி விட்டு இந்திய பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது என்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.
இந்த நேரத்தில் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியது, நாடு முழுவதும் 2019 – 2021 காலகட்டத்தில், தற்கொலைக்கு தள்ளப்படுவோரில் மிகப்பெரும் எண்ணிக்கையிலானவர்களாக தினக்கூலி தொழிலாளர்களே இருந்து வருகிறார்கள். இந்த விபரத்தை நாடாளுமன்றத்தில் தொழிலாளர்துறை அமைச்சர்கள் முன்வைக்கும்போது அவர்களிடம் எந்தப் பதட்டமும் இல்லை. கேட்பதற்கே கொடூரமான செய்தி இது.
நம்முடைய உழைக்கும் மக்களின் வாழ்க்கையும், பிழைப்பும் இப்படி கால்நடைகளைப் போன்று விதிக்கப்பட்டிருப்பது ஏன்? அவர்கள் உழைக்கவில்லையா? இரவு பகல் பாராமல் உழைத்துழைத்து ஓடாகத் தேயவில்லையா? அவர்கள் உழைத்து சேர்த்த செல்வமெல்லாம் எங்கே போனது? 1980லிருந்து உலக அளவில் நாடுகளின் மொத்த வருமானத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியமாகவும் மற்ற பிற சலுகைகளாகவும் கொடுக்கப்பட்ட தொகையின் சதவீதம் சரிந்து வருகிறது.
வளர்ந்த நாடுகளின் தேச வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு 1980களில் 61.5 சதவிகிதமாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில் அது 54 சதவிகிதமாக சரிந்தது. வளரும் நாடுகளில் இது 1990களில் 52.55 சதவிகிதமாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில் 50 சதவிகிதமாக சரிந்தது. தேச வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு சரிவது என்பது தொழிலாளர்களின் உண்மை ஊதியம், அவர்கள் மேற்கொள்ளும் சராசரி உற்பத்தியைக் காட்டிலும் மெதுவாகவே உயர்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
1980 களுக்கு பின், வளர்ச்சியடைந்த நாடுகளில் நிகழ்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்திற்கும் கூடுதலான பங்கு தொழிலாளர்களிடம் இருந்து முதலாளிகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதை 2019ஆம் ஆண்டின் வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் (Trade and Development Report,2019) குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியத் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் கொடுமையானதாக உள்ளது. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக தொழிலாளர்களின் வருமானம் தொடர்ச்சியாக சரிந்து வருவதை காணமுடிகிறது. 1981ஆம் ஆண்டில் தேச வருமானத்தில் 38.5 சதவிகிதமாக இருந்த தொழிலாளர்களின் பங்கு 2013ஆம் ஆண்டில் 35.4 சதவிகிதமாக சரிந்தது எனவும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு என்பது தொழிலாளர்களின் உற்பத்தி உயர்வுக்கு ஏற்றவாறு இல்லை எனவும் 2018இல் வெளியிடப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஊதிய அறிக்கை(Wage Report by the International Labour Organisation) குறிப்பிடுகிறது.
மறுபுறத்தில், இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களுக்கு செல்லமான அரசாங்கங்களும் இந்தியாவின் உள்நாட்டு மதிப்பு இதுவரை காணாத வேகத்தில் வளர்ந்து வருகிறது என மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆம். இந்திய தொழிலாளர்கள் கூடுதலான செல்வங்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களின் பங்கு வெகுவாக குறைந்துவிட்டது. மிகப்பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளர்களைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில், இத்தகைய நிலைமைகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத, மிகவும் ஆபத்தான விளைவுகளை தொழிலாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் உண்டாக்கும். இது போன்ற நிலைமைகள் தேவையான அளவு உணவு உட்கொள்ளாமை, ஊட்டசத்து குறைபாடு, உயிரிழப்புகள் மற்றும் சமுதாய சீரழிவை நோக்கி இட்டுச்செல்லும்.
உற்பத்தி தொடர்ந்து உயர்கிறபோதும், தொழிலாளர்களின் பாதுகாப்பு சரிகிறது. செல்வக் குவியல் அதிகரிக்கிறது என்ற முரண்பாட்டினை புரிந்துகொள்ள, சற்று ஆழமாக ஆராய்வோம். இந்த நவீன காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நமக்கு தினசரி தேவையானவைகளை நாமே உற்பத்தி செய்வதில்லை. வேலைப் பிரிவு முறைகள் அதிகம் நிலவுகின்ற காலத்திற்குள் வாழ்கிறோம். எனவே, இந்த நவீன பொருளாதார நடவடிக்கைகளில் சமூக உற்பத்திதான் பெரும்பங்கை வகிக்கின்றது. சமுதாய உற்பத்தியின் நோக்கம் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படுவதுதான் என்பது முதலாளித்துவ சமுதாயம். எனவே, முதலாளித்துவ சமுதாயத்தில், சரக்குகளின் உற்பத்திதான் மற்ற பிற பொருளாதார நடவடிக்கைகளை விடவும் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. ஒரு சரக்கினை பரிவர்த்தனை செய்யும்போது, அதனுள் பொதிந்துள்ள, சமுதாய வகையில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவிற்கு ஈடாகவே அந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சரக்கினை உற்பத்தி செய்யும்போது, சமுதாய வழியில் செலுத்தப்படும் உழைப்பின் திறன் பற்றியும் (உழைப்பு சக்தி), அதன் மதிப்பு பற்றியும் – அதாவது தன்னை உருவாக்க தேவைப்படும் மதிப்பை காட்டிலும் அதிகமான உற்பத்தி செய்யக் கூடிய உழைப்பு சக்தியின் மதிப்பை உருவாக்குவது பற்றியும் மார்க்ஸ் ஆய்வு மேற்கொண்டார். சரக்கின் மதிப்பு அதன் மேல் உற்பத்தியின்போது செலுத்தப்பட்டிருக்கும் சமுதாய வழியில் அவசியமான உழைப்பை பிரதிபலிக்கிறது.
உழைப்புச் சக்தி என்பது, உயிருள்ள தொழிலாளரின் வடிவத்தில் நிலவுகிறது. அவர் உயிர் பிழைத்திருக்க குறிப்பிட்ட வாழ்வாதாரங்கள் அவசியம். அவருடைய மறைவுக்கு பிறகும் தொடர்ந்து உழைப்பாளரை உறுதி செய்திட தேவையான குடும்பத்தை பராமரிக்கும் அவசியமும் உள்ளது. எனவே, அவருடைய வாழ்க்கைக்கு தேவையான ஆதாரங்களை உற்பத்தி செய்திட தேவைப்படும் உழைப்பு நேரம்தான் உழைப்பு சக்தியின் மதிப்பாக ஆகிறது.
பொதுவான பார்வையில், ஒரு தொழிலாளியின் உழைப்பை முதலாளி பணத்தால் வாங்குகிறார் என தோன்றுகிறது. இது வெறும் தோற்றம்தான். உண்மையில், ஒரு தொழிலாளர் தனது வேலை செய்யும் திறனை, உழைப்பு சக்தியை முதலாளிக்கு விற்கிறார். உழைப்பு சக்தி என்ற சரக்கு தொழிலாளர்களால் முதலாளிகளுக்கு விற்கப்படுவதில் சந்தேகத்திற்கு இடமில்லை. பணத்தினால் அளவிடப்படும் பரிவர்த்தனை மதிப்பினை விலை என அழைக்கிறோம். கூலி என்பது, உழைப்பு சக்தியின் விலைக்கு தரப்பட்டுள்ள சிறப்பு பெயராகும். மனிதர்களின் ரத்தத்திலும், சதைகளிலும் மட்டுமே அதனை சேகரித்து வைக்க முடிந்ததொரு தனித்துவமான ஒரு சரக்கிற்கு தரப்பட்டிருக்கும் சிறப்புப் பெயர் அது.
முதலாளித்துவ சமூக பொருளாதார நிலைமைகளினால் தொழிலாளர் தம் உழைப்பை விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரச் செயல்பாட்டினை விற்க முதலாளித்துவ சமூக பொருளாதார சூழ்நிலைகள் நிர்ப்பந்திக்கின்றன. ஒரு கூலித் தொழிலாளர் தலைவன் வழி அல்லது சுய தொழில் உற்பத்தி வடிவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தன்னை சுரண்டுவோரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துடன்! இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு கூலித் தொழிலாளர் தன்னுடைய வாழ்வாதார நடவடிக்கையை சரக்காக மாற்றுவதற்கு தேவையான காரணி ஆகும். சட்டப்படி அவர் விரும்பும்போது தன்னுடைய முதலாளியிடம் இருந்து அவர் அகன்று வேறு ஒரு முதலாளியிடம் தன்னுடைய வாழ்க்கைச் செயல்பாட்டை விற்க முடியும். இந்த சுதந்திரம் மூலதனத்தின் மனித வடிவத்தில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கானதே தவிர, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து விடுதலை பெறுவதற்கானது அல்ல.
அவரது சுதந்திரம் இந்த வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொழிலாளி தனது உழைப்பை வார கூலிக்கோ அல்லது மாத ஊதியத்திற்கோ விற்கிறார். தொழிலாளியின் வார உழைப்பை வாங்குகிறார் முதலாளி. தொழிலாளியும் வாரம் முழுவதும் வேலை பார்க்கிறார். தனது கூலிக்கான நேரம் போக கூடுதலாக அவர் செலுத்தும் உழைப்பு உபரி உழைப்பாக மாறுகிறது. இதுவே உபரி மதிப்பு ஆகும். இந்த உபரி மதிப்புதான் இலாபத்தின் அடிப்படையாகும். தொடர்ந்து வளர்ந்துவரும் மூலதனக் குவியலுக்கு ஆதாரமாகும். மூலதனம் முதலாளித்துவ வர்க்க இச்சையின் மையமாக உள்ளது.
அந்த வகையில் உழைப்பு சக்தியும் மற்ற வகை சரக்குகள் போன்றதே. இருப்பினும் அது முற்றிலும் தனித்துவமானது. தனித்துவமான விதத்தில் மதிப்பை உருவாக்கும் தன்மையுடன் உள்ளது. தகுந்த முறையில் பயன்படுத்தினால், சரக்கின் சொந்த மதிப்பைவிட கூடுதலான மதிப்பை உருவாக்குகிறது. இன்றுள்ள உற்பத்தி நிலைமைகளில், மனிதர்களின் உழைப்புச் சக்தியால் ஒரு நாளில் தன்னுடைய சொந்த மதிப்பை அல்லது மதிப்பின் விலையை விடவும் கூடுதலான மதிப்பை உற்பத்தி செய்வதாக மட்டும் இல்லை; ஒவ்வொரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பும், புதிய தொழில்நுட்ப உருவாக்கமும், ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் உபரியை மென்மேலும் அதிகரிக்கிறது. தன்னுடய கூலிக்காக ஒரு தொழிலாளி ஒரு நாளில் செலுத்த வேண்டிய உழைப்பின் பங்கு குறைகிறது (அவசியமான உழைப்பு நேரம்); அதன் விளைவாக, மறுமுனையில் ஒரு நாளில் செலுத்தப்படும் உழைப்பில் எந்த கூலியும் பெறாமல் முதலாளிகளுக்காக செலுத்தக்கூடிய உழைப்பின் நேரம் அதிகரிக்கிறது (உபரி உழைப்பு நேரம்).
இதுதான் தற்போதைய சமுதாயம் முழுமைக்கும் நிலவுகின்ற பொருளாதார விதியாகும். அனைத்து மதிப்புகளையும் உற்பத்தி செய்வது தொழிலாளர் வர்க்கம் மட்டுமே. தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகள் அவர்களுக்கானதல்ல. மூலப்பொருள் உற்பத்தியாளர்கள், உபகரண உற்பத்தியாளர்கள், நிதி உடமையாளர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பு சக்தியை வாங்குகிறார்கள். தங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பொருட்களில் ஒரு பகுதியையே தொழிலாளர்கள் பெறுகிறார்கள். மீதமுள்ள பெரும் பகுதியை உடமையாளர் வர்க்கத்தினர் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். உழைப்பு சக்தியின் விலையை அதன் உண்மையான மதிப்புக்கும் கீழே தள்ளிவிடுகிறார்கள். சமுதாயத்தின் சராசரி வளர்ச்சி விகிதத்தில், உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் பங்கு தொழிலாளி வர்க்கத்திற்கு ஒப்பீட்டளவில் மெதுவாகவே உயர்கிறது; அல்லது உயர்வதே இல்லை. சில சந்தர்ப்பங்களில் வீழ்ந்தும் விடுகிறது.
முதலாளித்துவ வர்க்கம் திட்டமிட்ட முறையில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது நடத்தும் தாக்குதலே இப்படிப்பட்ட ஊதிய வீழ்ச்சியின் சாராம்சம் ஆகும். ஐ.நா. வின் அறிக்கை இதனை ஊதிய அடக்குமுறை என்கிறது. இது உற்பத்தி செலவுகளின் உயர்வுக்கும், உயர்ந்துவரும் விலைவாசிக்கும் ஈடான வேகத்தில் தொழிலாளர்களின் ஊதியங்களை உயரவிடாமல் தடுத்துள்ளது. சமூக பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள அரிப்பு, தொழிற்சங்க மயமாக்கல் விகிதத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, உலகம் முழுவதும் பரவியுள்ள அவுட் சோர்சிங் முறை, வளர்ந்துவரும் சந்தைப் பெருக்கம் போன்றவைகளும் ஊதிய வீழ்ச்சிக்கு பிற காரணங்கள் ஆகும்.
இது தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. நமது ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் வலிமை மற்றும் அதனை தக்கவைத்தல் குறித்த பிரச்சனையும் ஆகும். தொழிலாளர்களின் குறைந்த வருமானம், சமுதாய வளர்ச்சியின் குறியீடுகளான குடும்ப நுகர்வு, சேமிப்பு, முதலீடு, உற்பத்தி மற்றும் தேவை போன்றவைகளில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்குகின்றன. இது மட்டுமல்லாது, தொழிலாளர்களின் பங்கு குறைவதன் விளைவாக தொழிலாளர்களால் சேமிக்க இயலவில்லை. கல்வியில், திறன் வளர்ப்பில், வீட்டு வசதியில், ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய முடிவதில்லை.
ஊதிய அடக்குமுறையின் விளைவாக, சமுதாய மேலடுக்கின் உச்சத்தில் (மக்கள் தொகையில் 10 சதவீதமும், அதில் முதல் ஒரு சதவீதமுமாக) அமைந்தவர்களுடைய வருமானம் மற்றும் செல்வம் குவிவதை பார்க்கிறோம். (லாபம், வாடகை மற்றும் மூலதனம் வழியாக பெறும் மற்ற வருமானங்கள் குவிகின்றன). 1980 -2015 கால கட்டத்தில் மேல் தட்டில் உள்ள 0.1 சதவிகிதம் பேர் வளர்ச்சியின் 12 சதவிகிதம் அடைந்தார்கள். அடிமட்டத்தில் உள்ள 50 சதவிகிதம் பேர் வெறும் 11 சதவீதம் மட்டுமே பெற்றனர். அதே காலத்தில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் மேல்தட்டில் உள்ள 1 சதவிகிதம் பேர் 29 சதவிகித வளர்ச்சியையும், மத்தியில் உள்ள 40 சதவிகிதத்தினர் 23 சதவிகித வளர்ச்சியையும் பெற்றனர்.
1990 இல் போர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு தேச வருமானத்தில் 2 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 2020இல் வெளிவந்த ஆக்ஸ்பார்ம் அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 63 பில்லியனர்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு, இந்திய நாட்டின் 2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொகையான ரூ.24 லட்சம்கோடியை விட கூடுதலாக இருந்தது. பொருளாதார சீர்திருத்தங்கள் ஆரம்பித்ததிலிருந்து மேல் அடுக்குகளிலுள்ள ஒரு சதவிகிதத்தினர் 30 சதவிகித தேசவருமானத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.
உண்மையில், இந்தியாவில் செல்வ உற்பத்தி அனைவருக்கும் சென்றடையவில்லை. 1947 லிருந்து 1985 வரை நடைமுறையில் இருந்த மையப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரத்தில், மக்கட் தொகையில் கீழ்மட்டத்திலிருந்த 50 சதவிகிதத்தினர் நாட்டின் சாராசரியைவிட வேகமான விகிதத்தில் வளர்ந்தனர். அதற்கு மாறாக, 1985லிருந்து மேல் தட்டின் 0.1 சதவிகிதத்தினர், கீழ் தட்டில் உள்ள 50 சதவிகிதத்தினரின் ஒட்டு மொத்த வளர்ச்சியைவிட அதிக வளர்ச்சியை கைப்பற்றினர். மத்தியிலுள்ள 40 சதவிகிதத்தினர் சிறிதளவே வளர்ச்சி அடைந்தனர்.
வேகமாக வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரம் ஏற்படுத்திய வளர்ச்சி 2010ஆம் ஆண்டுடன் முடிவுற்றது. இங்கிருந்து தொடர்ந்து வளர வேண்டுமானால், இந்தியா தனது மக்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது முதலீடு செய்யவேண்டும். மூலதனம் தேச வருமானத்தின் மிகப்பெரிய பங்கை அள்ளிச்செல்கிற வரை, இந்தியா ஏழைநாடாகத்தான் இருக்கும்.
வளரும் பொருளாதாரம், ஜி 20 நாடுகளின் உறுப்பு நாடு என்பதற்கும், இந்திய நாட்டிலுள்ள தினக்கூலிகளின் அவலமான நிலைமைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. 2014-15 – 2021-22 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில், பணவீக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. மிக துல்லியமாக சொல்வதென்றால், விவசாய தொழிலாளர்களுக்கு 0.9 சதவீதம், கட்டுமான தொழிலாளர்களுக்கு 0.2 சதவீதம், விவசாயமல்லாத தொழிலாளர்களுக்கு 0.3 சதவீதம் மட்டுமே ஆகும். நுகர்வோர் விலைக்குறியீட்டை பயன்படுத்தி கணக்கிட்டால், ஊதிய வளர்ச்சி விகிதம் இதைவிட குறைவாகவே இருக்கும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊதிய வீழ்ச்சிதான் நடந்திருக்கும். கடந்த 8 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் உண்மையான ஊதியத்தின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு உயரவில்லை என்பதுதான் தெளிவான முடிவு.
தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையிலான புறக்கணிக்க முடியாத முரண்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. முதலாளிகளின் செல்வ வளமை, முதலாளித்துவத்தின் முன்னேற்றம் ஆகியன (தொழிலாளிகளிடமிருந்து உறிஞ்சப்படும் உபரிமதிப்பு அதிகரிப்பதை சார்ந்தது) தொழிலாளிகள் மீது நடத்தப்படும் தீவிர சுரண்டலைப் பொருத்தது.
உபரி மதிப்பு வேட்டையில், மூலதனத்தை விரைவாக குவிப்பதற்காக முதலாளிகள் நெறியற்ற பல வழிகளை மேற்கொள்வர். சில சமயங்களில், தங்களது நோக்கத்தை அடைவதற்காக தொழிலாளர்களின் வேலை நேரத்தை கொடூரமாக அதிகரிப்பார்கள். அந்த முயற்சி தோல்வியடைந்தால் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கு தேவையான தொழிற்சாலை மற்றும் தொழில்துறை சட்டங்களையும் இயற்ற முயல்வார்கள். முதலாளித்துவ கட்டமைப்பின் நெருக்கடியில் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் மூலதனம், மிகவும் மோசமான காட்டுமிராண்டித்தனமான நிலையில் உள்ளது.
உயிர் வாழும் தேவைக்கும் குறைவான அளவில் ஊதியங்களை நசுக்க, எதேச்சாதிகார பாசிச முகம் கொண்ட மூலதனம் தொழிலாளர்கள் மீது போர் தொடுக்கிறது. நமது ஊதியங்களை, உரிமைகளை, ஊதிய நிலைமைகளை பாதுகாப்பதற்காக நாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஊதிய வீழச்சியை தடுத்து நிறுத்துவதற்காவும், பொருளாதாரத்தில் நமது ஊதியத்தின் பங்கை அதிகரிப்பதற்காகவும் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். இறுதியில் ஊதிய முறைக்கே முடிவுகட்டுவோம் என்ற நமது முழக்கத்தை வென்றெடுப்போம். அதுவே அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்து சமூகத்தை விடுவிப்பதற்கான பாதை ஆகும்.
தமிழில்: எம்.வி. எஸ். மணியன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
