மாநிலங்களின் உரிமைக்காக ஒன்றுபட வேண்டும் – பிரகாஷ் காரத்
நேர்காணல் – சுவாமிநாதன், சிந்தன்
- இந்தியாவின் கூட்டாட்சியின் மீதான தாக்குதல் ஆளும் வர்க்கங்களுடைய நலனில் இருந்து எழுகிறதா?
மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பதை, கூட்டாட்சி கருத்தாக்கத்தின் முதல் அம்சமாக பார்க்கிறோம். மாநில அரசுகளுக்கு தனித்த அதிகாரங்களும், செல்வாக்கும் உண்டு. இத்தகைய தன்மையை அங்கீகரிப்பதாக கூட்டாட்சி கட்டமைப்பு அமைந்துள்ளது.
இந்த ஏற்பாடு, நம் நாட்டின் பெரும் செல்வந்தர்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது. அதனால்தான் கூட்டாட்சிக் கோட்பாடு தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்திய அரசிற்கு தலைமை தாங்குகிற பெருமுதலாளி வர்க்கம், தனது நலனில் இருந்து ஒருங்கிணைந்த பெரிய சந்தையையே விரும்புகிறது. அந்த விரிந்த சந்தைக்கு தடைகள் ஏதும் இருக்கக் கூடாது என்று கருதுகிறது. எனவேதான் அவர்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பை விரும்புகிறார்கள். அதாவது, மையப்படுத்தப்பட்டதொரு ஒருங்கிணைந்த சந்தையை விரும்புகிறார்கள். எனவே கூட்டாட்சியும், அதிகாரப் பரவலும் அவர்களுடைய வர்க்க நலனுக்கு உகந்ததாக இல்லை.
நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் சில அம்சங்கள் முழுமையான கூட்டாட்சி தன்மையுடன் இல்லை. அதனால்தான் நம் அரசியல் சட்டத்தை மருவு கூட்டாட்சி (Quasi Federalism) அல்லது பகுதி கூட்டாட்சி (Semi Federalism) என்கிறார்கள். அவ்வாறு இருப்பினும், அத்தகைய கூட்டாட்சி கோட்பாடுகள் கூட முதலாளிகளுக்கு ஏற்பில்லை. ஆகவேதான் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வருபவர்கள், ஆளும் வர்க்க கட்சிகள், முதலாளிகளின் நலனுக்காக கூட்டாட்சியின் கோட்பாடுகளை பலவீனப்படுத்தவும், அரித்துப் போகச் செய்யவும், எப்போதுமே முயற்சித்து வருகிறார்கள்.
இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள கூட்டாட்சி விரோத அம்சங்களில் ஒன்று, அதன் பிரிவு 356 ஆகும். அத்துடன், அரசியல் சாசனத்தின் வேறு சில பிரிவுகளும் ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை தருகின்றன. உதாரணமாக நிதி குறித்த அதிகாரங்கள். ஆம். ஒன்றிய அரசுக்கு வருவாய் திரட்டும் கூடுதல் அதிகாரங்களை அரசியல் சாசனம் தந்துள்ளது. பிரதானமான வரி அதிகாரம் தொடக்க காலம் முதலே ஒன்றிய அரசின் கைகளிலேயே உள்ளது.
ஒன்றிய ஆட்சியாளர்கள், அநேகமாக கூட்டாட்சி விரோத அம்சங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, அரசியல் சட்டப்பிரிவு 356 அரசியல் ரீதியாக மாநில அரசுகளை பலவீனப்படுத்தவும், பதவி நீக்கம் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1950 முதலே அரசியலமைப்பின் பிரிவு 356 பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் பொருள், அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள கூட்டாட்சி கோட்பாடுகளைக் காட்டிலும், பெரு முதலாளிகளின் தலைமையிலான ஆளும் வர்க்கங்களின் நலன்களே முக்கியமானவையாக இருந்துவந்துள்ளன. இந்த சூழல் தொடக்கத்தில் இருந்தே நிலவி வந்துள்ளது என்பதாகும்.
- அரசியல் சட்டத்தின் பிரிவு 356 பயன்படுத்தப்படுவது தற்போது குறைந்துள்ளது போல தோற்றம் வருகிறதே?
அரசியல் சட்டத்தின் பிரிவு 356 மட்டுமே கூட்டாட்சி விரோத அம்சம் என்பதல்ல. மாநில ஆட்சிகளை கலைப்பது அல்லாமல், பல கூட்டாட்சி விரோத அம்சங்களும் உள்ளன. நிதிக் கொள்கைகள், பொருளாதார உறவுகள், அரசியல் அம்சங்கள் என கூட்டாட்சியின் பரப்பு விரிவானதாகும். ஆகவே ‘ மையமாக்கல் ‘ என்ற போக்கு இவை அனைத்தையும் உள்ளடக்கியது.
மாநிலங்கள், மேலும் மேலும் அதிகார இழப்புகளுக்கு ஆளாகி உள்ளன. அரசியல், பொருளாதார, நிதி அம்சங்களில் ஒன்றிய அரசை சார்ந்து நிற்க வேண்டிய நிலைமைக்கு மேலும் மேலும் தள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய ஆட்சியாளர்கள் எல்லா ஆயுதங்களையும் ஒரு சேர கையில் எடுத்து தாக்குகிறார்கள். மாநில அரசின் உரிமைகளை, அதிகாரங்களை குறைத்துள்ளனர். இப்படி தொடர்ந்து கூட்டாட்சி முறை பலியாக்கப்பட்டு வருகிறது.
- பாபர் மசூதி இடிப்பு போன்ற நேரங்களில் நாம் அரசமைப்பு பிரிவு 356 பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோமே. பிரிவு 356 பற்றிய நம்முடைய நிலைப்பாடு என்ன?
அந்த கருத்தை நாம் மிகவும் நெருக்கடியான ஒரு நேரத்தில் முன் வைத்தோம். அப்போது அங்கு இருந்த மாநில அரசு நாட்டின் ஒற்றுமையையும், மதச் சார்பின்மையையும், பாதுகாக்கத் தவறிய சூழலில், பிரிவு 356 பயன்படுத்தப்படலாம் என்றோம். அன்று வேறு வழி ஏதுமில்லை. நாம் சொல்வது இதுதான். அரசியல் சட்டப் பிரிவு 356 நீக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு தனது விருப்பங்களுக்கு ஏற்ப தவறாகப் பயன்படுத்தி வருவது போல, செய்யவிடாமல் தடுக்கக் கூடிய வகையில் புதிய பிரிவுகளை இணைக்கலாம்.
- கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் விசயத்தில் கடந்த காலத்திற்கும் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்திற்கும் வேறுபாடு உள்ளதா?
ஆமாம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மையமாக்கல்” என்பது அதிகமாக இந்திராகாந்தி ஆட்சியில் நடைபெற்றது. மாநிலங்களை மீறி அதிகாரம் குவிக்கிற போக்கும் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன. ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சி என்ற முனைப்பு “அவசர நிலைப் பிரகடனம்” வரை போனது. இருந்தாலும் அவர்களால் முழுமையான “மையமாக்கல்” அல்லது சர்வாதிகாரம் என்பது நீடித்து நிலைக்கச் செய்ய முடியவில்லை.
தற்போது பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ள சூழல் உள்ளது. இது கூட்டணி ஆட்சி அல்ல. கூட்டணி ஆட்சியாக இருந்த காலங்களில் அவர்களுக்கு தடைகள் சில இருந்தன. 2014 ஆம் ஆண்டில் பாஜக பெரும்பான்மை பெற்றவுடன் மூர்க்கத்தனமான நகர்வுகளை செய்து வருகிறது. அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி நெறிகளை சிதைக்கிறது. இன்னும் கூடுதலாக, அரசியல் சாசனத்தின் வரம்புகளை கூட மீறுகிறார்கள். எல்லா வகையிலும் தாக்குதல் தொடுக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அல்லாத மாநில ஆட்சிகளை முடக்க முயற்சிப்பது, நிதி வளங்களுக்கு ஒன்றிய அரசை சார்ந்து நிற்க வைப்பது என்பதை செய்கிறார்கள். எல்லா வளங்களையும் மையப்படுத்துகிறார்கள். ஜி.எஸ்.டி ஒரு உதாரணம். அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து மாநில அரசுகளின் கைகளில் இருந்த கொஞ்ச நஞ்ச வரி அதிகாரத்தை – விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் – பிடுங்கி உள்ளார்கள். இவ்வாறு, இக்காலகட்டத்தில் கூட்டாட்சி மீதான தாக்குதல்களில் தன்மை மாறுபட்டுள்ளது.
- ஆளுநர்களையும் அதில் பாஜக பயன்படுத்துகிறது அல்லவா!…
மாநில ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் பிரதிநிதி ஆவார். நமது அரசமைப்பு சட்டத்தில் ஆளுநர் அதிகாரம், கடமைகள் பற்றி தெளிவான வரையறை இல்லை. சில அம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரது பங்கு என்பது குடியரசுத் தலைவருடையது போலவே, சடங்குக்கு ஒப்பானது ஆகும். ஆளுநர்கள் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பவே செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு அரசின் ஆலோசனைப்படி ஒப்புதல் தருகிறார். ஆனால் ஆளுநர்கள் ஒன்றிய ஆளும் கட்சியின் விருப்பத்திற்கேற்ப மாநில அரசுகளின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதற்காக தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
இரண்டாவது, சில அரசியல் சாசன அம்சங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சட்டமன்றம் இயற்றுகிற சட்டங்களுக்கு அவர் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர் விளக்கம் தேவைப்பட்டாலோ, கருத்துக்களோடோ திருப்பி அனுப்பினால் கூட சட்டமன்றம் அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி அனுப்பி வைத்தால் ஆளுநர் ஏற்க வேண்டும். அது வழக்கம். ஆனால் அது எழுத்தில் இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி, ஆளுநர் அலுவலகம் ஒன்றிய அரசாலும், ஒன்றிய ஆளும் கட்சியாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. குடியரசுத் தலைவர் இப்படி செய்வதில்லை. மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப் போக வைக்கவும், பறிக்கவும் ஒன்றிய அரசால் ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். உதாரணமாக, மாநில அதிகாரப் பட்டியலில் வரும் அம்சங்களின் மீது சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை ஆளுநர்கள் ஒப்புதல் தர மறுப்பது அல்லது கால வரையறை இன்றி தாமதிப்பது என்று இரண்டு வழிகளில் தலையீடு செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இத்தகைய அணுகுமுறைகள் இருந்தாலும், இவ்வளவு அப்பட்டமாக அப்போது இருந்ததில்லை.
இப்போது ஆளுநர்கள் அரசியல் விசயங்களில் தலையிடுகிறார்கள். தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆளுநர்கள் பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். மாநில அரசின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி பொது வெளியில் விமர்சிப்போம்; எதிர்வினை ஆற்றுவோம் என்று பிரகடனம் செய்கிறார்கள். மாநில அரசாங்கத்தை மீறி அதன் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள். அதிகாரிகளை அவர்களே அழைத்து ஆணைகள் பிறப்பிக்கிறார்கள். வேந்தர் பதவியைப் பயன்படுத்தி பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிடுகிறார்கள். துணை வேந்தர்களுக்கு ஆணை பிறப்பிக்கிறார்கள். இவ்வாறு ஆளுநர்கள் மாநில அரசாங்கத்திற்கு மாற்றாகவே பாஜக ஒன்றிய ஆட்சி பயன்படுத்துகிறது. இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் ஒப்புதல் உடன், தூண்டுதல் பேரிலேயே நடைபெறுகிறது என்கிறேன்.
ஏதேனும் மாநிலத்தில் மதக் கலவரம் என்றால், ஒன்றிய உள்துறை அமைச்சர் மாநில முதல்வரிடம் பேசுவது வழக்கம். முதல்வர்தான் அரசு நிர்வாகத்தின் தலைவர். ஆனால் தற்போது அமித் ஷா சில பிரச்சினைகளில் ஆளுநர்களிடம் பேசுகிறார். ராம நவமி ஊர்வலங்களின் போது பீகார் மாநிலத்தில் இரண்டு இடங்களில் கலவரங்கள் நடந்தேறியது. அவை தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆளுநரை அழைத்துப் பேசினார். இது போன்று மேற்கு வங்கத்திலும் நடந்தது. அவர் ஆளுநரிடம் பேசுவதன் மூலம் தருகிற செய்தி, அவரைத்தான் அரசு நிர்வாகத்தின் தலைவராக அங்கீகரிக்கிறோம் என்பதே.
- மாநில உரிமைகளின் மீதான இந்த தாக்குதல்களுக்கு ஒருங்கிணைந்த எதிர்வினைகள் எழுகின்றனவா?
கெடு வாய்ப்பாக எதிர்க் கட்சிகள் மாநில உரிமைகள், கூட்டாட்சியின் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில்லை. நிறைய மாநில அரசுகள் எதிர்க்கட்சிகள் வசம் உள்ளன. எல்லா மாநிலங்களும் பாதிக்கப்படும்போது ஒருங்கிணைந்த எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி இழப்பீடுக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டுமென எல்லா மாநிலங்களும் விரும்பின. ஆகையால் ஜி.எஸ்.டி கவுன்சிலில் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கவுன்சிலுக்கு வெளியே விவாதித்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதில் முன்னேற்றம் இல்லை. இதைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்று சிலர் பொதுவாக பேசுகிறார்கள். கூட்டாட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினையிலாவது பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பொது நிலைபாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என முயற்சிக்கிறோம். ஆனால் இதுவரை அது ஈடேறவில்லை. அவர்கள் தனித்தனியாக மாநில உரிமைகள் பறிக்கப்படும் போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் பொது ஐக்கிய முன்னணியை அமைக்க முன் வரவில்லை.
வரி முறைமை குறித்த அணுகுமுறையில் இது மிக முக்கியமான தேவை ஆகும். ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிந்தைய வருமானம், இழப்பீடு பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறோம். அதன் நுட்பங்கள் குறித்தும் பேசுகிறோம். அப்போது நாம் மூன்று மாநில அரசுகளை நடத்திக் கொண்டு இருந்ததால், நமது எதிர்ப்பினை வலுவாக பதிவு செய்ய வாய்ப்பு இருந்தது. கால ஓட்டத்தில் நாம் அந்த இடத்தை இழந்துள்ளோம். ஆகவேதான் ஜி.எஸ்.டியின் பல்வேறு அம்சங்கள் பற்றியெல்லாம் பேசினாலும், அதன் தாக்கம் பலமாக இல்லை. எல்லா மாநிலங்களும் ஒன்றாய் திரண்டால்தான் நாம் ஜி.எஸ்.டி சட்டம், அமைப்பின் மீது மாற்றங்களை கோர முடியும். நாடாளுமன்ற திருத்தம் தேவைப்படும் என்பதால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். அந்த நிலைமை இன்று இல்லை. எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்க முடியுமென்றால், அதன் தாக்கம் கூடுதல் விளைவைத் தரும்.
இப்போது மாநில அரசு நிர்வாகத்தின் நிதி அதிகாரங்களும் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. ஒன்றிய அரசின் திட்டங்கள் அமலாக்கம் ஒரு உதாரணம். ஒன்றிய அரசின் கொள்கைகள் மாநில அரசின் மீது திணிக்கப்படுகின்றன. அவற்றை அமலாக்காவிட்டால் ஒன்றிய அரசின் பணம் வராது. அதே போல வரி பங்கீட்டினை நீர்த்துப் போகச் செய்திடவும் ஒன்றிய அரசு முனைகிறது. உதாரணமாக, பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை எடுத்துக் கொள்ளலாம். ஒன்றிய அரசு இப்போது “செஸ்” கூடுதல் வரிகளை அதிகமாக்குகிறது. இன்று 90 சதவீதமான ஒன்றிய அரசின் பெட்ரோலிய வரிகள் செஸ் வாயிலாகவே வசூல் ஆகிறது. “செஸ்” வசூலிக்கப்பட்டால் மாநிலங்களுக்கு பங்கு தரவேண்டாம் என்பதாலேயே அதை கூடுதலாக்குகிறார்கள். இவ்வாறு புதிய புதிய வழிகளில் வளங்களை மையமாக்க முயற்சிகள் நடந்தேறி வருகின்றன.
- மோடி அரசின் இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டு என்ற தன்மையும் மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களில் பங்கு வகிக்கிறதா?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தமான இந்துத்துவா, கூட்டாட்சி முறைமையை விரும்புவதில்லை. அவர்களின் இலக்கு அகண்ட பாரதம் ஆகும். அகண்ட பாரதத்தின் பொருள், பெருமளவு அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட்ட அரசு. இந்தியாவை கடந்தும் அது விரியும். ஆகவே அது எந்தவொரு வடிவிலும் பன்மைத்துவத்தை விரும்பாது.
கூட்டாட்சி முறைமையில் வெவ்வேறு மொழி, பண்பாட்டு பின்புலம் கொண்ட மாநிலங்கள் இருக்கும். அவர்கள் எல்லாமே ஒரே இந்து ராஷ்டிரா மாடலின் கீழ் இருக்கவேண்டுமென்று விரும்புபவர்கள். ஆகவே அவர்கள் மையமாக்கலை தெரிவு செய்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் மொழிவாரி மாநிலங்களை விரும்புவதில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் இந்தியாவை நிர்வாக காரணங்களை முன்னிட்டு 40 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இப்படி பிரிக்கப்பட்டால், மாநிலங்கள் சின்னச் சின்னதாக இருக்கும்; பலவீனமானவையாக இருக்கும். ஒன்றிய அரசை முழுக்க சார்ந்தவையாக இருக்கும். இந்தப் பார்வையுடனே 1980 ஆம் ஆண்டுகளில் 40 மாநிலங்கள் என்ற கருத்தை முன் வைத்தார்கள். இந்தப் பார்வையுடனே எந்த மாநிலம் பிரிக்கப்பட்டாலும், அவர்கள் ஆதரிக்கிறார்கள். எல்லாவற்றையும் உடை என்பதே அவர்களின் நிலைப்பாடு.
இந்துத்துவா – கார்ப்பரேட்டுகள் இருவருமே மையமாக்கலை விரும்புகிறார்கள். ஆகவே இருவருமே கூட்டாட்சிக்கும் எதிராக உள்ளனர். மேலும் மேலும் கூட்டாட்சியைப் பலவீனப்படுத்தி மேலும் மேலும் மையமாக்கலை நோக்கி நகர முனைகிறார்கள்.
இந்த இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டணியை எதிர்த்த போராட்டம் என்பது மோடி அரசை எதிர்க்கிற போராட்டம் ஆகும். இந்த போராட்டம் அரசியல் ரீதியாக கட்டப்பட வேண்டும்; வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கூட்டாட்சி சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள முடியும். தீர்வுகளை கொண்டு வர முடியும். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைந்த முறையில் எல்லா தளங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டணியை வெல்ல முடியும். இப்போராட்டத்தில் எல்லா நேச சக்திகளையும் இணைக்க வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
