தொழிலாளி விவசாயி ஒற்றுமையின்அவசியம்
உ. வாசுகி
தொழிலாளி விவசாயி கூட்டணி குறித்து கட்சி திட்டம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. மக்கள் ஜனநாயக புரட்சி, அதற்கான மக்கள் ஜனநாயக முன்னணி என்று கட்சித் திட்டம் பேசும் இடத்தில், மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம்பெறும் வர்க்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. தொழிலாளி வர்க்கம் தலைமை ஏற்கும் என்று சொல்வதோடு, திட்டத்தின் 7.6 பத்தி,
“தொழிலாளி விவசாயி வர்க்கங்களின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானது, அடித்தளமானது. ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில், இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் என்பது, தொழிலாளி விவசாயி கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை முக்கியமாகச் சார்ந்தது”
எனக் குறிப்பிடுகிறது.
மேலும், முன்னணியில் இடம் பெறுகின்ற ஒவ்வொரு வர்க்கத்தையும் ஒரு குறிப்பிட்ட முறையில் கட்சித் திட்டம் விவரிக்கிறது. உதாரணமாக, விவசாய தொழிலாளிகள் மற்றும் ஏழை விவசாயிகள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகள். நடுத்தர விவசாயிகள் நம்பகத்தன்மை உள்ள கூட்டாளிகள். ஊசலாட்ட குணம் உள்ளபோதும் பணக்கார விவசாயிகளை சில தருணங்களில் மக்கள் ஜனநாயக முன்னணியில் கொண்டு வர முடியும். இதேபோல் நடுத்தர வர்க்கம், ஏகபோகம் அல்லாத முதலாளிகள் மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம் பெறுவது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. (திட்டத்தின் பத்திகள் 7.3, 7.6, 7.7, 7.8)
விவசாயி என்பதற்குள் ஏழை விவசாயி மற்றும் விவசாய தொழிலாளிகள் என்பதில் அழுத்தம் உள்ளது. எனவேதான், நமது அடிப்படை வர்க்கம் என வரும்போது, தொழிலாளி – விவசாய தொழிலாளி – ஏழை விவசாயி வர்க்கங்களைக் குறிப்பிடுகிறோம். இப்பகுதியினரைத் திரட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.
ஜனநாயக புரட்சியின் அஸ்திவாரம்:
நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சி துவக்க நிலையில் இருந்த சூழலில், நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்ளும் தேவை ஏற்பட்டது. சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்க கூட்டணியில் நிலப்பிரபுத்துவமும் இடம் பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செய்யத் தவறிய ஜனநாயக புரட்சியை (முதலாளித்துவ ஜனநாயக புரட்சி) தற்போதைய நிலைமையில் தொழிலாளி வர்க்கம்தான் செய்ய முடியும் என்பதால்தான், இந்தியாவில் சோஷலிச புரட்சிக்கு முன்னால் மக்கள் ஜனநாயக புரட்சி என்கிற கட்டம் மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் இலக்காக வரையறுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக புரட்சியின் மைய அம்சம் விவசாய புரட்சி. எனவேதான் புரட்சிக்கான அணியின் அஸ்திவாரம் தொழிலாளி – விவசாயி கூட்டணி என சொல்கிறோம்.
ரஷ்ய புரட்சியில் தொழிலாளிகள் விவசாயிகள் அணி சேர வேண்டும் என லெனின் கருதினார். அப்போதுதான் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயக புரட்சியை நிறைவேற்ற முடியும் என சுட்டிக்காட்டினார். அங்கும் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு கூட்டணி வைத்தது. நிலக்குவியலை உடைத்து, விவசாயிகளுக்கு நில விநியோகம் செய்து, நிலப்பிரபுத்துவ நுகத்தடியிலிருந்து அவர்களை விடுவிப்பது புரட்சியின் முக்கிய கடமையாக இருந்தது. எனவே, தொழிலாளி விவசாயி ஒற்றுமை தேவைப்பட்டது. இந்த மதிப்பீடு பல மூன்றாம் உலக நாடுகளுக்கு புரட்சிக்கான திட்டத்தை வகுப்பதற்கு உதவியாக இருந்தது.
“பிரான்சில் 1848 -1850 காலகட்டத்தில் நடந்த வர்க்க போராட்டங்கள்” குறித்து மார்க்ஸ் எழுதும் போது 1848 ஜுனில் நடந்த பாட்டாளி வர்க்க புரட்சி தோல்வியுற்றதற்கு ஒரு முக்கியமான காரணம், தொழிலாளி வர்க்கம், விவசாயிகளுக்கு அறைகூவல் விடுத்து, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை இணைத்துக் கொள்ள தவறியதுதான். பிரான்ஸ் மக்கள் தொகையில் பெரும்பகுதியான விவசாயிகளை தொழிலாளி வர்க்கம் அணுகி, முதலாளித்துவத்தின் தோல்வியிலேயே விவசாயிகளின் விடுதலை இருப்பதைப் புரிய வைத்திருக்க வேண்டும், பிரதானமாக விவசாயம் சார்ந்த நாட்டில், விவசாயிகள் ஆதரவு இல்லாமல் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற இயலாது எனக் குறிப்பிடுகிறார். பாரிஸ் கம்யூன் புரட்சி குறித்தும் அத்தகைய விமர்சனம் உண்டு.
ரஷ்ய புரட்சியில் தொழிலாளி விவசாயி கூட்டணி வெற்றிகரமான பங்கை வகித்தது. 20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்றாம் உலக நாடுகளின் ஜனநாயக மற்றும் சோஷலிச புரட்சிகளிலும் இதுதான் அஸ்திவாரம். 21ஆம் நூற்றாண்டில் நிகழும் புரட்சிகளிலும் தொழிலாளி விவசாயி கூட்டணியின் முக்கியத்துவம் தொடரும்.
துவக்கப் புள்ளி:
நடைமுறையில், தொழிலாளி விவசாயி கூட்டணி கருத்தாக்கத்தை வெற்றிகரமாக பயன்படுத்திய பெருமை ரஷ்ய புரட்சிக்கு, தோழர் லெனினுக்கு உண்டு. மார்க்சிய தத்துவத்துக்கு இது பெரும் பங்களிப்பு. ஆனாலும், இதன் துவக்க புள்ளியை வைத்தவர் எங்கல்ஸ் ஆவார். ஜெர்மனியில் 16ஆம் நூற்றாண்டு விவசாயிகளின் போர் குறித்து 1850இல் எழுதும் போது, அதன் தோல்விக்கு முக்கிய காரணம், விவசாயிகள் பிளெபியர்களுடன் (ஏழை மக்கள், தொழிலாளி வர்க்கத்துக்கு முந்தைய வடிவம்) கூட்டு வைக்காததுதான் எனக் குறிப்பிடுகிறார். 1870 பதிப்புக்கான முன்னுரையில், ஜெர்மனியில் முதலாளித்துவம் தாமதமாக வந்தது; பிரான்சிலும் இங்கிலாந்திலும் ஏற்கனவே இருந்த முதலாளித்துவம்; அங்கிருந்த தொழிலாளி வர்க்கத்தின் சவால்களை கண்டு அஞ்சும் சூழல் நிலவியது. எனவே, ஜெர்மானிய முதலாளிகள், நகர்ப்புற, கிராமப்புற தனி உடமையை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து பாதுகாக்க, நிலப்பிரபுகளுடன் சமரசம் செய்து கொண்டனர் என்று எழுதுகிறார். அடுத்தடுத்த கட்டுரைகளில் தொழிலாளி வர்க்கத்தின் கூட்டாளிகளாக ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை முன்வைக்கிறார். விவசாயிகளின் இதர பகுதியினரை அப்பட்டியலில் சேர்க்கவில்லை.
லெனின் அதையெல்லாம் உள்வாங்கி, ரஷ்ய நிலைமையை பரிசீலித்து, பணக்கார விவசாயிகள் உட்பட ஜனநாயக புரட்சிக்கான கூட்டணியில் வைக்கிறார். விவசாயிகளையும் அணி திரட்டி மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்; முதலாளித்துவத்தை பலவீனம் ஆக்க வேண்டும். அடுத்து சோஷலிச புரட்சியில் முதலாளித்துவத்துக்கு முடிவு கட்ட வேண்டும்; விவசாய வர்க்கத்தின் பிடிமானத்தை பலவீனமாக்க வேண்டும் என்கிறார். மென்ஷெவிக்குகளுக்கும் போல்ஷெவிக்குகளுக்கும் இந்த பிரச்சனையில் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. மென்ஷெவிக்குகள், தொழிலாளி வர்க்கம் ரஷ்ய முதலாளித்துவத்தோடு கூட்டணி வைத்து நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். போல்ஷெவிக்குகளோ, தனி உடமையை பாதுகாக்க, ஒரு கட்டத்தில் ரஷ்ய முதலாளித்துவம் நிலப்பிரபுக்களோடு கூட்டணி வைத்து தொழிலாளி வர்க்கத்தை பின்னுக்கு தள்ள முயற்சிக்கும்; தொழிலாளி விவசாயி கூட்டணியே பலன் தரும் என மதிப்பீடு செய்தனர்.
1919இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில், 1920இல் ஆசிய நாடுகள் மாநாட்டில் சுரண்டலுக்கு எதிராக தீர்மானகரமாக வெல்ல வேண்டும் என்றால், தொழிலாளி – விவசாயி கூட்டணி தேவை என்று விவாதிக்கப் பட்டது. 1922இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 4வது மாநாட்டில் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில், புரட்சிகர இயக்கம் விவசாயிகளின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது; அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் விவசாய புரட்சிக்கான பிரத்தியேக திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டப்பட்டது.
சீன விவசாய பிரிவினரில் 60-70% பேர் ஏழை விவசாயிகளும், கீழ் நடுத்தர விவசாயிகளும் ஆவர். நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ ஆட்சியாளர்களின் சுரண்டலை எதிர்த்து விவசாயிகளையும் தொழிலாளிகளையும் ஒருங்கிணைத்து சீனப் புரட்சி நடைபெற்றது. வியட்நாமின் நிலைமையும் அவ்வாறாகத்தான் இருந்தது.
1922இல் இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது சவுரி சவுரா என்கிற இடத்தில் செயல்பட்ட காவல் நிலையம் கிளர்ந்தெழுந்த விவசாயிகளால் கொளுத்தப்பட்டது. காங்கிரஸின் முதலாளித்துவ தலைமை இதனால் பதட்டமானது. தொழிலாளி – விவசாயி ஒற்றுமை வலுவடைந்தால் ஜமீன்தார்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி, உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜமீன்தார்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி வாக்குறுதி அளித்தது.
தற்போதைய இந்திய சூழல்:
நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படும் சூழலில் விவசாய வர்க்கங்களில் பல பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர். வேளாண் துறையை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொடுப்பதற்கான முயற்சி நடக்கிறது. விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு விவசாயம் பின்னுக்கு போகிறது. கிராமப்புற கட்டமைப்பு, பாசன வசதிகள், விவசாயம் சார்ந்த திட்டங்கள் போன்றவற்றுக்கான அரசு முதலீடு குறைந்து வருகிறது. இறக்குமதிக்கான, குறிப்பாக வேளாண் விளைபொருட்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதிக்கான, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. இறக்குமதி மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இடுபொருட்கள் விலை உயர்கிறது; அதேசமயம் விளைபொருட்களுக்கு நியாய விலை கிடைப்பதில்லை. விவசாய கடன் பெறுவது பிரச்சினையாக உள்ளது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் தேவையற்ற பல திட்டங்களுக்கு விளைநிலம் பலி கொடுக்கப்படுகிறது. அரசு துறைகள் நடத்தி வந்த வேளாண் ஆராய்ச்சிகள், விதை மற்றும் விவசாய நடைமுறை குறித்த பல தகவல்கள் கடந்த காலத்தில் விவசாயிகளுக்கு வந்து சேர்ந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்படுகிறது. கிடங்குகள் கட்டி பராமரிப்பதிலிருந்து, விதை உரம் குறித்த ஆராய்ச்சிகள் வரை கார்ப்பரேட்டுகள் கைவசம் ஆகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு விவசாயத்தை கட்டுப்படி ஆகாத ஒரு தொழிலாக மாற்றி கார்ப்பரேட்டுகள் உள்ளே நுழைய வழிவகை செய்கிறது. இந்த பின்னணியில்தான் மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டுவர முயற்சித்ததை பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் விவசாய பணி மிகக் குறுகிய காலமே கிடைக்கிறது. எனவே விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. இருக்கும் நிலத்தையும் இழந்து கணிசமானவர்கள் விவசாயக் கூலிகளாக மாறியுள்ளனர். விவசாயமல்லாத இதர பணிகளுக்கும் இவர்கள் தள்ளப்படுகிறார்கள் இது தவிர, விவசாயத்தில் ஈடுபடாமல் இதர பணிகளில் உழைத்துக் கொண்டிருப்பவர்களும் உள்ளனர். இது தவிர, புலம்பெயர் தொழிலாளிகளும் ஊரகப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவரையும்தான் ஊரக பாட்டாளி வர்க்கம் என சொல்ல முடியும். நவீன தாராளமயக் கொள்கைகள் நமது வர்க்கங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆய்வு செய்து, மாறியுள்ள நிலைமைகளைக் கணக்கில் எடுத்தே, ஊரக பாட்டாளிகளுக்கு ஒரு அமைப்பை உருவாக்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என 2015 டிசம்பர் கொல்கத்தா பிளீனம் வலியுறுத்தியது. அடுத்தடுத்து மத்திய குழுவும் வலியுறுத்திக் கொண்டுள்ளது.
தோழர் சுந்தரய்யா நினைவு சொற்பொழிவில், பிரகாஷ் காரத், இந்திய வேளாண் பிரச்சனைகள் குறித்து உரையாற்றுகையில், நிலப்பிரபுத்துவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவரிக்கிறார். பணக்கார முதலாளித்துவ விவசாயிகளும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களும் இரண்டற கலந்துவிட்டனர். இந்த வர்க்கத்தின் வலிமையும் பொருளாதார ஆதிக்கமும் நில உடமையை அடிப்படையாக கொண்டவை. எனினும், விவசாய உற்பத்தியைத் தாண்டியும் இவர்கள் உபரிகள் பெறுகின்றனர். இதில் கொள்முதல், வர்த்தகம், சந்தை விற்பனை, விவசாயம் அல்லா உற்பத்தி, நிலம் வாங்கல்-விற்றல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளும் அடக்கம். இவர்களிடம் குவியும் உபரிகள் கிராமத்தை தாண்டி அருகாமை நகரங்களிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் வருகின்றன. இத்தகைய மாற்றங்களை கணக்கில் எடுத்தே நமது எதிர்வினை அமைய வேண்டும்.
நவீன தாராளமயக் கொள்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகளை நாம் அறிவோம். எனவே, நவீன தாராளமய பொருளியல் பாதையின் குறிப்பான இலக்குகளாக தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும்தான் உள்ளன. கூடுதல் எண்ணிக்கையில் இந்த இரு பகுதியினரும் வறுமைக்குள் தள்ளப்படுவதை பார்க்கிறோம். பல புள்ளி விவரங்களும் உள்ளன. கிராமப்புறத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் வேலை தேடி நகர்ப்புறத்திற்கு வருகின்றனர். Reserve army of labour என சொல்லக்கூடிய வேலை இல்லா பட்டாளம் அதிகரிக்கும்போது பொதுவாக கூலி விகிதம் குறையும். வேலை நாட்களும் குறையும்.
கடந்த காலத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கும்போது சந்தையில் பொருளின் விலை அதிகரிக்கும்; நுகர்வோர்கள் என்கிற முறையில் தொழிலாளிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தியது. உணவுப் பொருள் மானியங்கள் கொடுக்கப்பட்டாலும் கூட, இந்த சிக்கல் நீடித்தது. உணவுப்பொருள் விலையை குறைத்தால் அது விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்காத சூழலை ஏற்படுத்தி அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கியது. எனவே இரு பகுதியினரின் பொருளாதார நலன்கள் ஒருவிதத்தில் முரண்பட்டு நின்றன. ஆனால் தற்போது விவசாயிகளுக்கான ஆதரவு நடவடிக்கைகள் பெரும்பாலும் கைவிடப்பட்டு, அவர்கள் விளைபொருளுக்கு நியாய விலை கிடைப்பதில்லை. அதே சமயம் அதன் பலன் தொழிலாளர் உள்ளிட்ட நுகர்வோருக்கு போய் சேர்வதில்லை. அது இடைத்தரகர்களுக்கும் வணிகர்களுக்கும் வேளாண் சார் நிறுவன தொழிலதிபர்களுக்கும் போய் சேருகிறது.
எனவே, இரு பகுதியினரின் பொருளாதார நலன்களுக்கு இடையே பெரிய முரண்பாடு எதுவும் இல்லை. இச்சூழலில் தொழிலாளி – விவசாயி ஒற்றுமையை கட்டி, நவீன தாராளமய கொள்கைகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
நிலப்பிரபுத்துவ நிலக்குவியலை உடைத்து விவசாயிகளுக்கு விடுதலை கொடுக்கும் நோக்கத்தில்தான் தோழர் லெனின் அவர்கள் தொழிலாளி – விவசாயி ஐக்கியத்தை முன் வைத்தார். இன்றைய சூழலுக்கும் அது பொருந்தும். அதே சமயம், கூடுதலாக, நவீன தாராளமய கொள்கைக்கு எதிரான புள்ளியிலும் இரு பகுதியினரும் இணைந்துள்ளனர்.
இது பரந்த வாய்ப்புகளை நம் கட்சிக்கு முன்னால், தொழிலாளர் விவசாயி அரங்கத்திற்கு முன்னால் வைத்துள்ளது. இதை பயன்படுத்தி முறையாக செயல்பட்டால், தொழிலாளி – விவசாயி ஒற்றுமையை வலிமையாக கட்ட முடியும். இது வலிமையான கூட்டணியானால் நவீன தாராளமயத்தை எதிர்க்கும் இதர வர்க்கங்களையும் திரட்டுவதற்கும் உதவும்.
சவால்கள்:
அதே சமயம் இந்த நிகழ்முறையில் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த காலத்திலும் தொழிலாளி – விவசாயி கூட்டணியை ஏகாதிபத்தியம் விரும்பவில்லை. ஆனால் அது சோஷலிசம் மேலெழுந்து விடக்கூடாது போன்ற அரசியல் காரணங்களுக்காக. தற்போது தொழிலாளி – விவசாயி கூட்டணி நவீன தாராளமயக் கொள்கைகளை, அதன் மூலம் ஏகாதிபத்தியத்தை, நேரடியாக அச்சுறுத்துகிறது. வேளாண் சார் வணிகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதி மூலதனம், உணவுப் பொருள் பெரு வணிகத்துக்கு இது பெரும் சவால். எனவே, கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நவீன தாராளமயத்தை, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை தீவிரப்படுத்தும் ஆர்எஸ்எஸ் பாஜக அரசு, மதவெறி சித்தாந்தத்தோடு பாசிச பாணி நடவடிக்கைகளிலும் இறங்கி வருகிறது. கார்ப்பரேட் இந்துத்துவ கூட்டணியாக இந்திய சமூகத்தின் அனைத்து தளங்களில், அரசியலில் ஆதிக்கம் செலுத்த செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் கார்ப்பரேட் மதவெறி பாசிசபாணி ஆபத்திலிருந்து தேசத்தை காக்கவும் தொழிலாளி – விவசாயி கூட்டணி தேவைப்படுகிறது.
தமிழக வேளாண் குடும்பங்களின் நிலை பற்றி பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ள கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:
தமிழ் நாட்டில் கிராமப்புற குடும்பங்களின் மொத்த வருமானத்தில் வேளாண்சாரா மூலங்களின் பங்கு கடந்த பல பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற உண்மையை சிலாகித்து மட்டுமே பார்ப்பது முழுமையான பார்வை அல்ல. உற்பத்தி உறவுகளில், நில உடமை உறவுகளில் மாற்றம் காணாமல் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வில் நிலைத்தகு முன்னேற்றம் காண இயலாது. பொது விநியோக அமைப்பும் சேமநல திட்டங்களும் தமிழகத்தின் சிறப்பு அம்சங்கள் என்றாலும், இவை மட்டுமே நீண்ட கால வாழ்வாதார உத்தரவாதமாக இருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. நடப்பில் உள்ள இந்த அம்சங்களும் யாருடைய கொடையும் அல்ல; வர்க்கப்பார்வையுடன் நடத்தப்பட்ட வர்க்க வெகுஜன அமைப்புகளின் தொடர்ந்த போராட்டங்கள் இத்தகைய ஏற்பாடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். கிராமப்புற பொருளாதாரமும் ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரமும் மக்கள் நலன் சார்ந்து மேம்பட, விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்வது அவசியம் என்பதையும், அதன் பயன் அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டுமென்றால், உற்பத்தி உறவுகளும் மாற வேண்டும் என்பதையும், நாம் உணர முடிகிறது. இதோடு, வேளாண் ஆதரவு பொதுகட்டமைப்புகள் – மின்சாரம், பாசனம், விரிவாக்கப்பணி அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விளைபொருள் சேமிப்பு கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் – போன்றவை வலுப்படுத்தப்பட்டு சிறு, குறு விவசாயிகளை எளிதில் சென்றடைவதும் அவசியம். ஒன்றிய அரசின் வேளாண் கொள்கைகளை எதிர்த்த தொடர்ந்த போராட்டமும் மாநில அரசின் முனைவுகளும் முக்கியம்.
செய்ய வேண்டியவை:
தற்போது தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் விவசாய சங்க கூட்டமைப்புகளின் நெருக்கமும் கூட்டு செயல்பாடுகளும் முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். இது மேலும் வலிமை பெற வேண்டும். மேலும்,
- இடதுசாரி கண்ணோட்டம் உள்ள தொழிற்சங்க – விவசாய – விவசாய தொழிலாளி அமைப்புகள் அகலப்பட வேண்டும்; ஆழப்பட வேண்டும்.
- ஊரக பாட்டாளிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். தொழிற்சங்கம், விச, விதொச இதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் ஊரக பணக்கார வர்க்க கூட்டணியை (Rural Rich Nexus) எதிர்கொள்ள முடியும்.
- மேற்கூறிய பகுதியினரை உள்ளடக்கிய இதர அமைப்புகளுடன் கூட்டு செயல்பாடுகள் பலப்பட வேண்டும்.
- இரண்டு கூட்டமைப்புகளும் தொழிலாளிகளின் முன்னேற்றம், மக்களின் வாழ்வுரிமை, விவசாயிகளின் நில உரிமை, நில சீர்திருத்தங்கள் – விநியோகம், நியாய விலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நீடித்த போராட்டங்களை நடத்திட வேண்டும்.
- சங்க உறுப்பினர்களுக்கு வர்க்க உணர்வை போதிக்க வேண்டும்; அதனை அரசியல் உணர்வாக்குவதில் கட்சி கமிட்டிகள் பங்களிக்க வேண்டும். (உதாரணமாக, மோடி ஆட்சியின் மீதான கோபம் தாமாக முதலாளித்துவத்துக்கு எதிரானதாக திரும்பாது.)
1982 தொழிற்சங்க அரங்கில் நமது கடமைகள் என்கிற கட்சியின் ஆவணம் இது குறித்து ஏராளமான விவரங்களை முன்வைக்கிறது. குறிப்பாக “விவசாயிகளுடன், விவசாய தொழிலாளிகளுடன் முன்னெப்போதையும் விட மிக அதிகமாகவும், நேரடியாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆதரவும் உதவியும் தேவைப்படும் நேரத்தில் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தலையிடவில்லை என்றால், அது துரோகம் ஆகும். விவசாயி, விவசாய தொழிலாளிகளின் கோரிக்கைக்கு தொடர்ந்து நீடித்த ஆதரவை தரவில்லை என்றால், தொழிலாளி – விவசாயி கூட்டணிக்கான வாய்ப்பு ஒருபோதும் ஏற்படாது” என திட்டவட்டமாக கூறுகிறது.
மேலும் “தொழிலாளி வர்க்கத்தின் தலைமை பாத்திரம் விவசாயிகளை விவசாய புரட்சியை நோக்கி அழைத்துச் செல்வதிலேயே பிரதானமாக அடங்கியுள்ளது” என சுட்டிக்காட்டுகிறது.
இதனைக் கையாளும்போது சாதிய பாகுபாடு, பாலின பாகுபாடு போன்ற பிரச்சனைகள் வந்து மோதும். பிரிவினைவாதம், சாதிவெறி, மதவெறி, மண்ணின் மைந்தர்கள் முழக்கம், இந்து தேசியம், தமிழ் தேசியம் போன்றவை தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கு, அதே போல் தொழிலாளி – விவசாயி கூட்டணிக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். இவற்றை எதிர்கொள்ளும் அரசியல் பக்குவத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு ஊட்ட வேண்டும்.
ஆதாரம்:
- தொழிற்சங்க அரங்கில் நமது கடமைகள் 1982
- கட்சி திட்டம்
- எங்கல்சும் தொழிலாளி விவசாயி கூட்டணியும் – பிரபாத் பட்நாயக்
- தொழிலாளி விவசாயி கூட்டணி – லெனின்
- நவீன தாராளமயக் கொள்கைகளும் தொழிலாளி விவசாயி கூட்டணியும் – பிரபாத் பட்நாயக்
கூட்டு இயக்கங்களில் அகில இந்திய விவசாய சங்கத்தின் பங்கு – AIKS கமிஷன் பேப்பர் – அஷோக் தாவ்லே
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
