18வது நாடாளுமன்றத் தேர்தல்: முதல் கட்டப் பார்வை
உ. வாசுகி
18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. நான் கடவுளின் குழந்தை என்ற திட்டமிட்ட பிதற்றல் துவங்கி, மோடியும் பாஜக ஆட்சியும் வெல்லவே முடியாதவை என்கிற தோற்றம் வரை அனைத்தும் நொறுக்கப்பட்டது தான் இந்திய வாக்காளர்களின் மகத்தான பங்களிப்பாக அமைந்திருக்கிறது. வாழ்வாதார பிரச்னைகள் குறிப்பாக வரலாறு காணாத வேலையின்மை மற்றும் கடும் விலை உயர்வு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு போன்றவை களத்தில் முன்வந்துள்ளன.
2014, 2019 தேர்தல்களில் பாஜக மட்டுமே தனித்த பெரும்பான்மை பெற்ற சூழல் சரிந்து, 2024 தேர்தலில் பெரும்பான்மைக்கு 32 குறைவாக 240 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கூட்டணி என்று பார்த்தால் NDAவுக்கு 293ல் வெற்றி கிடைத்துள்ளது. அதே போல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் கடந்த தேர்தலில் வாக்குகள் பெற்று இருந்த நிலைமை மாறி, 156ல் மட்டுமே இம்முறை 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. நகர்ப்புற வாக்குகள் கணிசமாக அதிகரித்து, ஊரக, அரை நகர்ப்புற தொகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. செல்லா நோட்டு பிரச்னை, கொரோனா காலத்தில் ஊரகப் பகுதிகள் அலட்சியம் செய்யப்பட்டது, திட்டமிடப்படாத முழு முடக்கம், புலம் பெயர் தொழிலாளர்களின் துயரம், விவசாய பாதிப்பு என பாஜகவின் பின்னடைவுக்குப் பல காரணங்கள் உள்ளன. மாநில காரணிகளும் உள்ளன.
தேர்தல் முடிவுகள், பாஜகவை உயர்த்திப் பிடிக்கும் வகையில் அமைந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கியுள்ளன. கேரளா, தமிழ்நாட்டுடன் சேர்ந்து, பஞ்சாப், ஹரியானா (5 இழப்பு), உபி (29 தொகுதி இழப்பு) ராஜஸ்தான் (10 இழப்பு), மஹாராஷ்டிரா (16 இழப்பு) போன்ற மாநிலங்களில் பெரும் பாதிப்பை பாஜக அடைந்திருக்கிறது. கர்நாடகம் 9, மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகளை இழந்துள்ளது. பிரதானமான மாநிலங்களில் தமிழ்நாடு, பஞ்சாப் இரண்டிலும் ஒரு தொகுதியைக் கூட பாஜகவால் கைப்பற்ற இயலவில்லை. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜக இழந்த 92 தொகுதிகளில் 29 ரிசர்வ் தொகுதிகளாகும்.
பாஜக தோல்வியடைந்த மேற்கூறிய வடமாநிலங்களில் விவசாயிகளின் வாக்குகள் முக்கிய பங்கை வகித்துள்ளன. தொடர்ந்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க அரசாங்கம் மறுப்பு, போராடும் விவசாயிகள் மீது அடக்கு முறையை ஏவி விடுதல், விவசாயம் சம்பந்தமான மோடி ஆட்சியின் கொள்கைகள் போன்றவற்றின் காரணமாக பாஜகவுக்கு எதிர்ப்பு வலுத்ததை தேர்தல் முடிவுகளுடன் இணைத்து பார்க்க வேண்டும்.
கோட்டை சுவர்கள் தகர்ந்தன:
குறிப்பாக பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 2014 – 71, 2019 – 62 பெற்ற இந்தக் கட்சி 2024ல் 33 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்திருக்கிறது. கடந்த தேர்தலில் 49.97 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், இந்தத் தேர்தலில் 41.37 சதவீதம் என்பதாக சரிந்துள்ளது. இதில் விவசாயிகளின் எதிர்ப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. பொதுவாக பிற்பட்ட பகுதி, பட்டியலின மக்கள், இசுலாமிய சமுதாயம் போன்ற பல பகுதியினரும் சமாஜ்வாதி கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இந்தப் பின்னடைவு பாஜகவுக்கு மட்டுமல்ல, யோகி ஆதித்யநாத்துக்கும் சேர்த்து தான்..
இம்மாநிலத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி குறிப்பிடத் தகுந்த வெற்றியை சமாஜ்வாதி கட்சி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 6 கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் வாரணாசியில் சுமார் 480000 வாக்கு வித்தியாசத்தோடு வெற்றி பெற்ற மோடி, இந்தத் தேர்தலில் முதல் சில சுற்றுகளில் பின்னடைவை சந்தித்து பிறகு இறுதியாக ஏறத்தாழ 150000 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.
மேலும் அயோத்தி அமைந்திருக்கக் கூடிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக அடைந்த தோல்வி குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவதில் துவங்கி ராமர் சிலைக்கு ‘உயிரூட்டும்’ பிராண் பிரதிஷ்டா வரை முழுக்க அரசியல் மயமாக்கியும், தேர்தல் காலத்தில் இதனைப் பிரதான கதையாடலாக மாற்றி, இமாலய சாதனையாக பறைசாற்றியும், எதிர்க்கட்சிகள் ராமரை அவமானப்படுத்துகிறார்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் சிலை மீண்டும் கொட்டகைக்குள் போய்விடும் என்றெல்லாம் பரப்புரை செய்தும் கூட தோல்விதான். “500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை ராமர் தன் சொந்த வீட்டுக்கு திரும்பினார்”, “ராமரை கோயிலுக்கு கொண்டு வந்தவர்களை நாம் ஆட்சிக்கு கொண்டு வருவோம்” என்கிற முழக்கங்கள் தேர்தல் பரப்புரையின் போது பாஜகவினரால் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டன. ஆனாலும் எடுபடவில்லை. இந்தப் பொதுத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி ஒரு பட்டியலின வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொகுதியில் மதம் சாதி இரண்டுமே சற்று பின்னுக்குப் போய் பொருளாதார நெருக்கடி முன்னுக்கு வந்ததாகத் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சில கட்டுரைகளில், இப்பகுதியில் வறுமை, மிகக் கடுமையான வேலையின்மை போன்றவை அதிகம் முன்னுக்கு வருவதான தகவல்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக ராமர் கோயில் கட்டுவதற்காக அப்பகுதியில் இருந்த பல்வேறு சிறுகடைகள் அகற்றப்பட்டன. இழப்பீடு முறையாக அளிக்கப்படவில்லை. கோவில் கட்டுவதற்காக பலரது விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டன. தட்டிக் கேட்டவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இது கடும் அதிருப்தியைப் பரவலாக உருவாக்கியிருந்தது. அயோத்தி சுற்றுலா தளமாக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தது, ரியல் எஸ்டேட் ஆதிக்கம் போன்றவை ஏழை மக்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியது.
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் அரசமைப்புச் சட்டம் சிதைக்கப்படும், இட ஒதுக்கீடும், பட்டியலின மக்களுக்கு உள்ள சட்ட ரீதியான பாதுகாப்பும் ஒழிக்கப்படும் என்கிற உணர்வு அப்பகுதி மக்கள் மத்தியில் ஆழமாக நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவை எதிர்க்கும் வலிமையற்றது என்ற சூழலும் சேர்ந்து சமாஜ்வாதி கட்சிக்கு வாக்குகள் விழுந்திருப்பதாகக் கருத முடியும். கடந்த முறை 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதை இதற்கு ஆதாரமாகப் பார்க்கலாம். இம்மாநில மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 20 சதவீதம். மோடியின் பரப்புரையில் இவர்களை ஊடுருவல் காரர்கள் என்று இழித்துப் பேசியதும், தொடர்ந்து சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலும் இஸ்லாமிய சமுதாய வாக்குகளை எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக உறுதிப்படுத்தியது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் கொண்டு வர ஏற்பாடு போன்றவையும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மஹாராஷ்டிரா:
இம்மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சரிவு முக்கியமானது. சிவசேனை மற்றும் என்சிபி கட்சிகளில் பிளவை ஏற்படுத்தி இரண்டாக்கி எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியை பாஜக உருவாக்கி வைத்திருந்த பின்னணியில் இந்த தோல்வி கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 48ல் கடந்த தேர்தலில் 23 தொகுதிகளைப் பெற்ற பாஜகவுக்கு, இம்முறை 9 தான். 55 சதவீதம் ஊரகப் பரப்பு உள்ள இம்மாநிலத்தில் கரும்பு, சோயா பீன்ஸ், பருத்தி, வெங்காய சாகுபடி மையமான பொருளாதார நடவடிக்கையாகும். பாஜகவின் விவசாய கொள்கை, பருவநிலை மாற்றம், வெங்காயத்தின் மீது அதீத வரி உள்ளிட்ட நடவடிக்கைகள் விவசாயிகளின் அதிருப்தியை அதிகரித்தன.
மரத்வாடா பிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் பாஜக தோல்வி. மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சனையை முறையாகக் கையாளாதது இதற்கு ஒரு முக்கிய காரணம். அரசமைப்பு சட்டம் சிதைக்கப்பட்டால் பட்டியலின மக்களுக்கு பாதிப்பு என்ற ஆழமான உணர்வும் ஒரு முக்கிய காரணியாகும்..
வடகிழக்கு மாநிலங்கள்:
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள 8 மாநிலங்களில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ளன. கடந்த முறை பாஜக கூட்டணி 19ல் வெற்றி பெற்றது. இம்முறை வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை 23 ஆக உயர்த்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. 23 கிடைக்காதது மட்டுமல்ல, கடந்த முறை பெற்ற 19லும் 3 குறைந்து 16 மட்டுமே பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக மணிப்பூரில் இரண்டு தொகுதிகளையும் பாஜக கூட்டணி இழந்திருக்கிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்ற அடிப்படையில் இரட்டை எஞ்சின் மாநிலம் என பாஜக தம்பட்டம் அடிக்கும் இடங்களில் மணிப்பூரும் ஒன்று. வழக்கமாக இங்கு இனக்குழு பிரச்னைகள் நிலவும். இந்த முறை பாஜகவின் திருவிளையாடலால் மதச்சாயம் பூசப்பட்டு சொல்ல முடியாத வன்முறைகளை மணிப்பூர் சந்தித்தது.
குக்கிகளுக்கு எதிராக அதிகம் வன்முறை நடந்தது. இதனை பகிரங்கமாகத் தூண்டி விட்டதில் பாஜக முதலமைச்சர் பிரேன் சிங் முன்னணி பங்கு வகித்தார். 2023 மே முதல் பற்றி எரிந்த, 200க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 60000க்கு மேல் வீடிழந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒரு முறை கூட போகவில்லை. இதே காலகட்டத்தில் இதர மாநிலங்களுக்கு 162 முறையும், வெளிநாடுகளுக்கு 14 முறையும் மோடி சென்று வந்ததாக த ஒயர் பத்திரிகை பதிவு செய்துள்ளது. பொறுப்பின்மையின் உச்சகட்டம் அல்லவா இது? ஒரு பெண் ஆடை களையப்பட்டு கும்பல் பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, வீடியோவும் எடுக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து நாடும் நாமும் இன்று வரை மீளவே இல்லையே…
இந்த அநீதிகளுக்கு எதிராகத் தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுத்து விட்டனர். வீடிழந்த மக்கள் முகாம்களில் தங்கியிருந்ததால் அங்கேயே வாக்கு சாவடி அமைக்கப் பட்டது . மெய்ட்டி மக்கள் அதிகம் உள்ள தொகுதி, குக்கி-சோ இன மக்கள் அதிகம் உள்ள தொகுதி இரண்டிலும் கணிசமான வாக்கு வித்தியாசத்துடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு விதத்தில் மதச்சார்பின்மை பெற்ற வெற்றியாகவும் இதைக் கருதலாம். இரட்டை என்ஜின் உதாரணம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மதக்கலவரங்களை, தாக்குதல்களை நடத்தி குளிர் காயும் அரசியலுக்கு விழுந்த அடி இது.
அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், எதிர்க்கட்சிகளை வேட்டையாடுதல், முழுக்க வெறுப்பு அரசியல், வகுப்புவாதம், மதவெறியை அடிப்படையாகக் கொண்ட பரப்புரை, சமூக ஊடகங்கள் மூலம் பொய்களைப் பரப்புதல், மதத்தின் பேரால் கடவுள் பேரால் வாக்கு சேகரிப்பு, இது குறித்த புகார்களை உதாசீனப் படுத்திய தேர்தல் ஆணையம் போன்றவற்றைத் தாண்டி மக்கள் வாக்களித்துள்ளனர். சமநிலை ஆடுகளத்தை அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உறுதி செய்திருந்தால் பாஜக மேலும் தோல்வியை சந்தித்திருக்கும்.
இந்தியா அணி:
234 தொகுதிகளில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் 99. இந்த அணியில் உள்ள கட்சிகள் இயன்ற வரை பாஜகவின் வகுப்புவாத பரப்புரைக்கு பதிலடி கொடுத்தன. மக்களின் வாழ்வாதார பிரச்னைகள், அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு முக்கியத்துவம் அளித்தன. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தின. இடதுசாரி கட்சிகள் மேலே குறிப்பிட்டவற்றோடு பொருளாதார பிரச்சனைகள், பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள், தேர்தல் பத்திர ஊழல் போன்றவற்றை முன்னெடுத்தன. சிபிஎம் மாற்று கொள்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதன் அடிப்படையில் பரப்புரை செய்தது. இந்தத் தேர்தல் அறிக்கை மக்கள் பிரச்சனைகளையும் அதன் மூலமாக எதிர்காலத்துக்கான நிகழ்ச்சி நிரலையும் சரியாக முன்வைத்த சிறப்பான ஆவணமாகும்.
தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை கெஜ்ரிவால் கைது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளால் ஆம் ஆத்மி கட்சி முன்னுக்கு வர வாய்ப்புகள் தெரிந்தன. ஆனால் பாஜகவின் சூழ்ச்சிகள், அதிகார, பண பலம் ஆகியவற்றோடு சேர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் பலவீனம் போன்ற காரணிகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தன.
ஒரிசாவின் 21 நாடாளுமன்ற தொகுதிகளில், கடந்த தேர்தலில் 8ல் வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த முறை 20 தொகுதிகளைக் கைப்பற்றியது. சட்டமன்றத்திலும், 24 ஆண்டு கால பிஜு ஜனதா தள (பிஜேடி) ஆட்சிக்கு முடிவு கட்டி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. பிஜேடியின் நீண்ட கால ஆட்சி மற்றும் செயல்பாடுகளில் அதிருப்தி காரணமாகக் கட்டமைக்கப்பட்ட எதிர்ப்பு மனநிலை அடிப்படையான காரணமாகவும், தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் ஒரிசா அரசியலில் செல்வாக்கு படைத்த நபராக முன்னேறியதை பாஜக இனவாத அடிப்படையில் பரப்புரை செய்ததைக் கூடுதல் காரணமாகவும் பார்க்கலாம். மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பிஜேடி, NDA அணியில் இல்லையே தவிர, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகள், நடவடிக்கைகளைக் கடந்த காலத்தில் விமர்சிக்காமல் மௌனம் காத்தது. இது பாஜகவிற்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கியது.
தமிழகம்:
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் 46.94% வாக்குகள் பெற்று திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியது. அதிமுக அணி 23.05%, பாஜக அணி 18.19% வாக்குகளைப் பெற்றுள்ளன.
பொதுவாக சாதி, மத காரணிகள் மைய பாத்திரம் வகித்ததாகக் கூறமுடியாது. சில தொகுதிகளில் சாதி வாக்குகள் ஓரளவு குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழுந்திருக்கலாம். பாஜக அதிமுக அணி உடைந்து தனித்தனியாக போட்டியிட்டது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்து, 12ல் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது. பாஜக 9 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதும், வாக்குகள் 11 சதவீதத்தைக் கடந்திருப்பதும், தபால் வாக்குகளில் திமுக அணிக்கு அடுத்தபடி பாஜக அணி 24% பெற்றிருப்பதும் கவலைக்குரிய அம்சம். பாஜக பேரபாயம் குறித்து அதிகம் பேசாமல் மிக எளிதாகக் கடந்து சென்று விடும் தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்து (8.16%) வருவதும் ஆழமான பரிசீலனைக்குரியது. கருத்தியல் போராட்டம் அதிகரிக்க வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது.
இடதுசாரி கட்சிகள்:
சிபிஎம் 4, சிபிஐ 2, எம்.எல். 2 என 8 பேர் இடதுசாரி கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த முறையை விட சிறு முன்னேற்றம். கேரளா, மேற்கு வங்கம், திரிபுராவைப் பொறுத்தவரை கேரளாவில் மட்டும் ஒரு எம்.பி. தேர்வாகியுள்ளது மிகுந்த கவலையுடன் பரிசீலிக்கப் பட வேண்டியதாகும். இடதுசாரிகளுக்கான தேர்தல் வெளி சுருங்கி வருவது முற்போக்கு அரசியலுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகும். குறிப்பாகக் கேரளாவில் திருச்சூர் தொகுதியை பாஜக கைப்பற்றி இருப்பதும், பொதுவாக வாக்கு சதவீதத்தைக் கடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி இருப்பதும் வர்க்க அரசியலுக்கும் மதச்சார்பற்ற அரசியலுக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். தமிழகத்தில் ஒரு தொகுதி கூட பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்றாலும் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது முக்கியமான எச்சரிக்கையாகும். ஜூன் இறுதியில் நடக்கும் மத்திய குழு கூட்டம் விரிவாகப் பரிசீலிக்கும்.
நாடாளுமன்றத்தில் இந்தியா அணியினர் 234 பேர் இருப்பது என்பது, பாஜக தனது இந்துத்வ நிகழ்ச்சி நிரலை, பாசிச பாணி போக்குகளை, முழு வீச்சிலான எதேச்சதிகார நடவடிக்கைகளை தங்கு தடை இல்லாமல் எடுத்துச் செல்வதற்கு வலுவான தடுப்பாக மாறும். தனிப் பெரும்பான்மை இல்லை என்பதும், தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்து தான் செயல்பட வேண்டும் என்ற நிலைமையும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் மூர்க்கத்தனமான முன்னெடுப்புகளை சற்று பலவீனப்படுத்தும்.
மக்களின் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இடதுசாரி ஜனநாயக சக்திகளின் பொறுப்பும் கடமையும் கூடுதலாகி இருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை வலுவாக எதிரொலிக்க வேண்டியுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
