நூல் விமர்சனம்: ஜான் ஸ்மித் எழுதிய 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம்
பேரா. ஆர். சந்திரா
கம்யூனிசம் என்பது ஒரு வறட்டு கோட்பாடு இல்லை. மாறாக, அது ஒரு இயக்கம். அது கொள்கையிலிருந்து அல்ல, மெய்மைகளில் இருந்து தொடங்குகிறது” [ஃபிரெடெரிக் ஏங்கல்ஸ்]
நூலின் அறிமுகவுரையிலேயே ஏகாதிபத்தியத்தை புரிந்து கொள்வது எப்படி என்ற கேள்விக்கு நேர்மையான விதத்தில், ‘மார்க்சியமும், மார்க்ஸின் மூலதன நூலும், லெனினின் ஏகாதிபத்திய கோட்பாடும் உலகை புரிந்து கொள்வதற்கான அடிப்படை ஆயுதங்களாக உள்ளன’ என்ற பதில் தரப்பட்டுள்ளது. முதலாளித்துவ உலகமயமாதல் காலனிகள் இல்லாத ஏகாதிபத்தியமாக உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூல் பத்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயமான “உலகளாவிய சரக்குகள்” என்பது 2013ஆம் ஆண்டு வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்பேட்டையில் ராணா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் நொறுங்கி போய் அதில் 1,333 தொழிலாளர்கள் இறந்து போன சம்பவத்தை விவரிப்பதுடன் தொடங்குகிறது. இந்த விபத்தில் 2,500 பேர் காயமடைந்தனர். விபத்திற்கு முன்பே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அதை மூட வேண்டும் என உத்தரவிட்டும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம் என மிரட்டியும் நிர்வாகம் அவர்களை பணிக்கு வரவழைத்தது.
இந்த விபத்திற்கு முன்புதான், தஸரீன் ஃபேஷன்ஸ் தொழிற்சாலை விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர். தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய அக்கறை இன்றி, தொழிற்சாலைகளை மரணப் பொறிகளாக முதலாளித்துவம் மாற்றிடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இதுபோன்ற பல சம்பவங்கள் உலகெங்கிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பணியிட செலவுகளை குறைத்து பெரும் நிறுவனங்கள் தங்களுக்குள் நடக்கும் போட்டியில் தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுக்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்கிறார் நூலாசிரியர்.
ஆயத்த ஆடைகளை எங்கு எப்படி உற்பத்தி செய்வது, எப்படி லாபத்தை அதிகரிப்பது, கூலியை எப்படி குறைப்பது என நிறுவனங்கள் பேரம் பேசுவதும், பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதும், நிறைய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. வங்கதேச விபத்திற்கு பின்னர் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டிக்கொள்ள கடும்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவந்தது. ஆயத்த ஆடை உற்பத்தி போலவே, ஐபோன்கள், மடிகணினிகள் உற்பத்தியிலும், சமூக, பொருளாதார அடிப்படையிலான சுரண்டல்களில் ஏகாதிபத்தியத் தன்மை வெளிப்படுவதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார். அந்நிய நேரடி மூலதனம் மூலம் மூன்றாம் உலக நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய தாய் நிறுவனத்திற்கு லாபத்தை கடத்தும் விதத்தை ஃபாக்ஸ்கான், ஆப்பிள், டெல் போன்ற நிறுவனங்களை உதாரணமாகக் காட்டி விளக்குகிறார். தொழிலாளர்கள் ஒரு நிமிடம் கூட வேலையை நிறுத்த முடியாது. புதிதாகத் தொழில்மயமாகும் நாடுகளை நோக்கி, லாப வேட்கை கொண்ட மேற்கத்திய நிறுவனங்கள் வெறும் அடிமட்ட கூலியாளுக்காக மட்டும் ஈர்க்கப்படுவதில்லை; உழைப்பின் தீவிரத்தை அதிகரித்தல், தொழிற்சங்கங்கள் இல்லாமல் பார்த்து கொள்ளுதல் போன்ற நோக்கிலும் ஈர்க்கப்படுகின்றன.
துணை நிறுவன உற்பத்தி – உற்பத்தி உலகமயமாதல் என்ற இரண்டாம் அத்தியாயத்தில், துணை நிறுவன பணியின் [அவுட்சோர்சிங்] வரலாற்று பின்னணி சுவாரசியமாக விளக்கப்படுகிறது. 1867ஆம் ஆண்டில், முதல் அகிலத்தில் கார்ல் மார்க்ஸ் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டுவதுடன், கடந்த 30 ஆண்டுகளில் அவுட்சோர்சிங் முறை எப்படி காட்டு தீ போல பரவியுள்ளது என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது. “19ஆம் நூற்றாண்டில் சிறு துளியாக தொடங்கி, 20ஆம் நூற்றாண்டில் சீரான நீரோட்டமாக மாறி, 20ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் வெள்ளப் பெருக்காக உருவெடுத்துள்ளது“ என்கிறார் நூலாசிரியர்.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அவுட் சோர்சிங் செய்வது மட்டுமல்ல; ஒரே நாட்டிற்குள்ளேயே தொழிற்சங்கம் உள்ள பகுதிகளிலிருந்து, அவை இல்லாத பகுதிகளுக்கு, வேலைகளை மாற்றுவதையும் நாம் காண முடியும். ஏகாதிபத்திய நாடுகளில் தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலியை விட மிகக் குறைவான கூலி கொடுத்து மூன்றாம் உலக தொழிலாளர்களை சுரண்ட முடியும். அது மட்டுமின்றி, என்ன விலைக்கு சரக்குகளை விற்க வேண்டும் என்ற அதிகாரம் உற்பத்தி ஏகபோகத்திடமிருந்து வணிக மூலத்தனத்தின் பால் மாறி விட்டது என்கிறார்.
உள்நாட்டு தொழிலாளர் படையை ‘நெகிழ்வானதாக’வும், அமர்த்து-தூரத்து [Hire and Fire] என்ற கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைத்ததும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரிதும் சாதகமாக அமைந்தன. எடுத்துக்காட்டாக, 1992-2001 வரை ஒவ்வொரு ஆண்டும், 70,000 முதல் ஒரு லட்சம் வேலைகள் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கும் சீனாவிற்கும் இடம் பெயர்ந்தன. மூலதனம் வெளியேறுவது பொருளாதார மறு சீரமைப்பு என்ற பெயரில் நடக்கிறது. முதலாளிகள் ஏகாதிபத்திய பிரிவினைகளை பயன்படுத்தி, ஏகபோகத் தொழிலுடன், குறைகூலி தொழிலை போட்டியிடும்படி செய்து, தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை சிதைப்பதை சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் ஏற்றுமதி செயல்முறை மண்டலங்கள் [EPZs] சுரண்டலை தீவிரப்படுத்துவதையும் விளக்குகிறார். பணம் – சரக்கு – அதிக பணம் என்ற கார்ல் மார்க்சின் சூத்திரம் மூலம் வணிகம், சரக்கு சுற்றோட்டமும், திறனுடைய உழைப்பு மற்றும் திறனற்ற உழைப்பு ஆகியவையும் விளக்கப்படுகிறது. வணிக மூலதனமானது, உபரி மதிப்பில் ஒரு பகுதியை தொழில்முறை மூலதனத்திலிருந்து தனக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் கையகப்படுத்திக் கொள்கிறது என்ற மார்க்சின் விளக்கத்தை சுட்டிக்காட்டுகிறார். மதிப்பு என்பதை மார்க்ஸ் பார்க்கும் விதமும், முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பார்க்கும் விதமும் எப்படி வேறுபடுகிறது என்பதையும் உதாரணங்களின் மூலம் நூலாசிரியர் விளக்குகிறார்.
அவுட்சோர்சிங் பணி உறவின் இரு வடிவங்கள் என்ற மூன்றாம் அத்தியாயத்தில், அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில், உற்பத்தி செயல்முறை வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டாலும், அது தாய் நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதை உதாரணங்களின் ஊடாக விளக்குகிறார். அந்நிய நேரடி மூலத்தனத்தின் பல வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் கிடக்கும் லாபம் வரைபடங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. “அவுட் சோர்சிங் முறையின் மர்மங்கள்” என்ற உப தலைப்பின் கீழ், பன்னாட்டு நிறுவனங்கள் இந்த முறையை விரும்ப காரணங்கள் யாவை என்பதை விரிவாக விளக்குகிறார்.
கோகோ கோலா நிறுவனம் செயல்படும் விதம் எப்படி பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதும் இந்நூலில் தரப்பட்டுள்ளது. கோகோ கோலாவின் தொழிலாளர் படையில் 80% பேர் தொழிற்சங்கங்களில் இல்லை. அவர்கள் தற்காலிக தொழிலாளர்கள். இவர்களுக்கு சங்கங்களில் திரட்டப்பட்ட தொழிலாளர்களை விட மிகக் குறைவான கூலியே தரப்படுகிறது. கூலியை மிக மிகக் குறைவாக கொடுத்து சுரண்டுவதுடன், சுற்றுசூழல் மாசுபடுத்தல் போன்ற எந்த பிரச்சனைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க, ஏகாதிபத்திய நாடுகளில் செயல்படும் பெரு நிறுவனங்களுக்கும், வளரும் நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கும் இடையே போட்டி நடக்கிறது. சிப்லா, ரான்பாக்ஸி போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனகளுடன் போட்டி போடுவதை பார்க்கிறோம். “சமசீரற்ற சந்தை கட்டமைப்புகள்” என்ற உப தலைப்பின் கீழ், சிக்கல்நிலை குறியீடு என மூலம், ஏழைநாடுகளும் அங்கு செயல்படும் நிறுவனங்களும், பணக்கார நாடுகளும் அங்கு செயல்படும்நிறுவனங்களும் போட்டி போட்டால் எத்தகைய விளைவுகள் இருக்கும் என்பது விளக்கப்படுகிறது.” உற்பத்திச் சங்கிலியின் ஒரு முனையில் கொள்ளை லாபம், ஊதி பெருக்கிய சொத்து மதிப்புகள், ஒப்பீட்டளவில் அதிக கூலி ஆகியவை உள்ளன. மறுமுனையில், வியர்வைக் கூடங்களும், அடிமாட்டுக் கூலிகளும் உள்ளன” என்கிறார் நூலாசிரியர்.
தென்புல நாடுகளின் தொழிலாளர்கள் இனிமேலும் விளிம்பில் இல்லை என்ற நான்காவது அத்தியாயத்தில், தொழிலாளி வர்க்கம் பற்றிய பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்மயம் உச்சத்தில் இருந்தபொழுது கூட, ஆலை உற்பத்தித் துறைகள் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கவில்லை. பொதுவாகவே, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் .ஒன்றிணைந்து இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பது, உழைப்பை சுரண்டுவது, எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஒடுக்குவது ஆகியவை தொடர்கதையாக நீடிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இதில் உயர் திறன் பெற்ற தொழிலாளர்கள் நிலை ஓரளவு பரவாயில்லை எனலாம். 1845ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொழிலாளர்கள் பட்ட கொடுமைகளை எங்கெல்ஸ் தன்னுடைய நூலில் சித்தரித்திருப்பார். அவற்றைவிட மோசமான நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர் என்று சொல்கிறார் நூல் ஆசிரியர்.
“மூன்றாம் உலக நாடுகளில் நகரமயமாக்கல் தலைதெறிக்கும் வேகத்தில் தொடர்கிறது. உண்மைக் கூலியின் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, நகர்ப்புற வேலையின்மை அதிகரிப்பு என்ற நிலைமைகளில் நகரமயமாக்கல் தொடர்ந்துகொண்டுள்ளது. வக்கிரமான இந்த வளர்ச்சி பல வல்லுநர்களை திகைக்க வைத்திருப்பதுடன், கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்றம் குறைந்து விடும் அல்லது எதிர்திசையில் (கிராமங்களை நோக்கி) இடம் பெயர்வது நடக்கும் என்று எதிர்பார்ப்பினை வெளியிட்ட மரபுவழி பொருளியல் மாதிரிகளை பொய்யாக்குகிறது” என மைக் டேவிசனின் கூற்றை மேற்கோள் காட்டியும், ‘சேரிகளின் பூமி” என்ற நூலில் விவரிக்கப்படும் அம்சங்களை முன்வைத்தும் தொழிலாளர்களின் நிலையை விளக்குகிறார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். நகர்ப்புற சேரிகளில் தஞ்சமடைவோர் எண்ணிக்கை அதிகம். இவை தவிர, முறைசாரா தொழிலாளர்களின் பரிதாபமான நிலையும் புள்ளிவிவரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. பல அட்டவணைகள், வரைபடங்கள் மூலம் உலக நாடுகளில் முறை சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஆண் பெண் விகிதம் தரப்பட்டுள்ளது. இதே அத்தியாயத்தில், “உழைப்பு பெண்மயமாக்கப்படுதலும், பெண்கள் பாட்டாளியாக்கப்படுவதும் என்ற உப தலைப்பில் பெண் தொழிலாளர்கள் உழைப்பு சந்தைக்குள் ஏன், எப்படி வருகிறார்கள் என்பதும், அவர்கள் எதிகொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் பல பெண்ணிய ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி, விளக்குகிறார்.
சென்னை பெருநகருக்கு உட்பட்ட தாம்பரத்தில் “மெப்ஸ்”, மற்றும் வங்கதேசம், மொரோக்கோ போன்ற நாடுகளில் பெண் தொழிலாளர்கள் நிலை விளக்கப்பட்டுள்ளது. பெண்களை வேலைக்கு அமர்த்த நிர்வாகம் விரும்ப காரணங்கள் என்ன? என்று பார்த்தால், மலிவான உழைப்பு, அடிமாட்டு கூலி, பெண்கள் தொழிற்சங்கங்களில் அதிக ஈடுபாடு காட்டாமலிருத்தல் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகளில் ஆணின் கூலியில் பாதி கூட பெண்களுக்கு தரப்படுவதில்லை. உலகிலேயே ஆண்-பெண் ஊதிய வேறுபாடு மிக அதிகமாக உள்ள நாடு தென்கொரியா என புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உழைப்புச் சந்தையில் நிலவும் பாலின பாகுபாடுகளின் பல்வேறு பரிணாமங்களை ஆசிரியர் முன்வைக்கிறார்.
“புதிய தாராளவாத சகாப்தத்தில் உலகளாவிய கூலி போக்குகள்” என்ற ஐந்தாவது அத்தியாயத்தில், கூலி வேறுபாடுகள் ஏன் எப்படி ஏற்படுகின்றன என்பதை அலசுகிறார். சரியான தரவுகள் இல்லாததால், கூலியை ஒப்பிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன என்கிறார். வாங்கும் சக்தி, அளவீடுகள் பற்றிய ஏராளமான புள்ளிவிவரங்கள் இந்த பகுதியில் தரப்பட்டுள்ளன. வரைபடங்கள் மூலம் கூலியின் போக்குகள் ஒப்பிடப்பட்டுள்ளன. இவையல்லாமல் ஐ.எல்.ஓ மற்றும் UNCTAD போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) உழைப்பாளர்களின் பங்கு என்ன என்பதை அறிய பயன்படுத்தப்படும் முறைகளில் நிறைய பலவீனங்கள் உள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கு பயன்படத்தக்க நிறைய விவரங்களை இந்த அத்தியாயம் கொண்டுள்ளது.
“வாங்கும் சக்தி குளறுபடியும் உற்பத்திதிறன் முரண் நிலையும்” என்ற ஆறாவது அத்தியாயத்தில் பன்னாட்டு பொருளியல் தொடர்பான பல்வேறு பொருளாதார சிக்கல்களை விளக்குகிறார். செலாவணி விகிதங்கள், நாணயங்களின் மதிப்பு, அவற்றை நிர்ணயிக்கும் முறைகள், அவற்றில் உள்ள முரண்பாடுகள் பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இதிலும், ஐ.எல்.ஓ அறிக்கையில் இருந்து புள்ளிவிவரங்கள் பயண்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த கூலி பெறக்கூடிய தொழிலாளர்களின் நுகர்வு எப்படி இருக்கிறது? விலைவாசி உயர்வு நுகர்வை எவ்வாறு பாதிக்கிறது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான வர்த்தகம் டாலர்களில் நடைபெறுவதும், நாணயத்தின் மதிப்பை கணிப்பது தொடர்பான விசயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
லாப விகிதம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளபோதிலும், ஒரு நாட்டில், தேசிய வருவாயில் உழைப்பாளர்களுடைய பங்கு சரிந்திருப்பதுதான் அந்த காரணிகளில் முக்கியமானது என்பதை இந்த நூல் முன்வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் வளரும் நாடுகளின் புள்ளிவிபரங்களை பார்க்கும்போது தேசிய வருவாயில் உழைப்பாளர்களுடைய பங்கு செங்குத்தாக சரிந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதனம் மற்றும் உழைப்பாளர்களுடைய பங்கினை கணக்கிடுவதில் ஏராளமான பலவீனங்களும் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகரிக்கும் கூலி ஏற்றதாழ்வுகள் தொடர்பான அட்டவணைகள் வரைபடங்கள் தரப்பட்டுள்ளன. மதிப்பு என்பதற்கு கார்ல் மார்க்ஸ் தரும் விளக்கத்தை மேற்கோள் காட்டி கூலி தொடர்பான விஷயத்தை ஆசிரியர் முன்வைக்கிறார்.
“உலகளாவிய உழைப்பு ஆதாயம் ஈட்டுதல்; உற்பத்தி உலகமயமாவதற்கான முக்கிய தூண்டுதல் என்ற ஏழாவது அத்தியாயம் தென்புல நாடுகளில் பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் எப்படி அவர்களின் வாழ்வாதாரத்திலிருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நவ தாராளமயக் கொள்கை, தொழிலாளர் பட்டாளம் விரிவடைவதை முடுக்கி விடுகிறது என்கிறார் ஆசிரியர். UNCTAD அறிக்கைகள் உண்மை நிலையை மூடி மறைக்கிறது என விமர்சிக்கிறார். கணினிமயமாக்கம் உற்பத்தியை எந்திரமயமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். அதே சமயத்தில் அவுட்சோர்சிங் முறையினை சாத்தியப்படுத்தியிருப்பதையும் கவனிக்க வேண்டும். சுரண்டல் என்ற கருத்தாக்கததை முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் ஏற்பதில்லை. அதனால் அவர்கள் யதார்த்தத்தை பார்க்க மறுக்கின்றனர். ஆனால் மார்க்சிஸ்டுகள் அப்படி இல்லை என்று கூறும் நூலாசிரியர், மார்க்சிஸ்டுகள் உலகளாவிய உழைப்பு ஈட்டும் ஆதாயத்தை ஆய்வு செய்திட தம் தத்துவ கருத்தாக்கங்களை பயன்படுத்துகின்றனர் என்கிறார்.
இப்பகுதியில் ஏகாதிபத்தியம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மார்க்ஸ் கூறியது போல, “ஏழை நாடுகளில் நிலவும் மிக அதிக உழைப்பு சுரண்டலின் காரணமாக ஒரு நாடு இன்னொரு நாட்டை ஏமாற்ற முடிகிறது. பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கும் கட்டமைப்பின் மையத்தில் உள்ள மூலதனத்திற்கும், பெருமளவிலான ஏகாதிபத்திய கப்பங்களை திரட்டவும் ஆன சாத்தியங்களுக்கு இந்த உழைப்புச் சுரண்டல் வழிவகுக்கிறது என்ற யதார்த்தத்தை மாற்றிவிடவில்லை.” சார்பு நிலைக்கோட்பாடும் சுரண்டல் வீதத்தில் சர்வதேச வேறுபாடுகளும் என்ற உப தலைப்பின் கீழ் கியூபா போன்ற நாடுகளின் அனுபவங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காஸ்ட்ரோ, சே குவாரா, ஆகியோரின் கருத்துக்கள் மேற்கோள்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. சீனா – சோவியத் பிளவு பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டதிற்கு யார் தலைமை ஏற்பது என்ற கேள்வி எழுப்பப்பட்டு, சமீர் அமீன் கொடுத்துள்ள விளக்கமும் தரப்பட்டுள்ளது. விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய பல மாற்று கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.
‘ஏகாதிபத்தியமும் மதிப்பு விதியும்” என்ற எட்டாவது அத்தியாயத்தில், லெனினின் ஏகாதிபத்தியம் பற்றிய அணுகுமுறையை பின்பற்றி, அதனை இன்றைய சூழலுக்கு எப்படி பொருத்திப் பார்க்கலாம் என நூலாசிரியர் விளக்குகிறார். லெனினின் வரையறையை இன்றைய நிலைமையுடன் பொருத்துகிறார். மூலதன ஏற்றுமதி ஏகாதிபத்தியத்திற்கு மிக அவசியமான பொருளாதார அடிப்படைகளில் ஒன்று என்ற லெனினின் வாதத்தை அடிப்படையாக வைத்து, முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சி எப்படிபட்டதென தெளிவுபடுத்துகிறார். 21ஆம் நூற்றாண்டில் மார்க்சின் மூலதனம் என்ற தலைப்பின் கீழ் உபரி மதிப்பு அதிகரிப்பு, அதன் வடிவங்களை மூலதனம் நூலின் அடிப்படையில் விளக்குகிறார். குறிப்பாக, மார்க்ஸ் குருந்தரிஸ் (குறிப்புகள்) நூலை மேற்கோள் காட்டி உபரி மதிப்பு அதிகரிப்பு உலகளாவிய கூலி ஆதாயம் பற்றி விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.
“ஜி.டி.பி. எனும் மாயை“ என்ற ஒன்பதாவது அத்தியாயத்தில், ஜி.டி.பி என்பதற்கு தரப்படும் விதவிதமான விளக்கங்கள் பற்றி விவரிப்பதுடன், ஒரு நாட்டில் உற்பத்தியை அளவிடுவதாக ஜி.டி.பி உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறார். அதற்கு தரப்படும் விளக்கங்களை விமர்சன ரீதியில் அணுகியுள்ளார். ஊதியமற்ற வீட்டு வேலைகள் ஏன் ஜி.டி.பியில் சேர்க்கப்படுவதில்லை என்பதற்கு அவை சரக்காக பார்க்கப்படுவதில்லை என்றும், பரிவர்த்தனை மதிப்புகளை உருவாக்கவில்லை என்றும் கூறுகிறார். ஜி.டி.பி கணக்கிட பின்பற்றப்படும் பல காரணிகள் பற்றியும், ஜி.டி.பி கணக்கிடுவதில் நடக்கும் முறைகேடுகளையும் விவரிக்கிறார். பல நாடுகளில் மதிப்பு கூட்டுவது எப்படி நடைபெறுகிறது என்றும், மதிப்பு சங்கிலி தொடர்பான பல கோட்பாடுகளையும் விவரிக்கிறார். ஜி.டி.பி., என்ற மாயையின் 3 பரிமாணங்கள் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. உலகமய சூழலில் ஜி.டி.பி-யின் முக்கிய அம்சங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
“எல்லா பாதைகளும் நெருக்கடிக்கு இட்டு செல்கின்றன” என்ற இறுதி அத்தியாயத்தில், நெருக்கடிக்கான காரணங்கள், தேர்வுகள் அலசப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியின் வேர்கள் என்ற உபதலைப்பின் கீழ் அதற்கான காரணங்கள், விளைவுகள் பற்றி ஏராளமான புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நெருக்கடி பற்றி யூரோ மார்க்சிய கோட்பாடுகள், இடதுசாரி சிந்தனையாளர்கள் நெருக்கடியை அணுகும் விதம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. நிதிமயமாதலும், அவுட்சோர்சிங் முறைக்கும் இடையே எப்படிப்பட்ட பிணைப்பு உள்ளதென்பது விவரமாக தரப்பட்டுள்ளது.
நூலின் இறுதி பாராவில் மாற்று பாதை என்ன என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
“எல்லா பாதைகளும் நெருக்கடிக்கு இடதில் செல்கின்றன. கியூபாவின் புரட்சிகர தலைவர் ராயல் வால்டே விவோ கூறியது போல, முதலாளித்துவத்தில் தீர்வு இல்லாத நெருக்கடி இது. மனித சமூகத்தின் முன்னே இருக்கும் ஒரே பாதை “கம்யூனிச உற்பத்தி முறைக்கு மாறிச் செல்ல தொடங்குவதுதான். ஒன்று மக்கள் ஏகாதிபத்திய அதிகாரத்தை அழித்து, தமது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டுவார்கள்; அல்லது வரலாற்றின் முடிவை எதிர்கொள்வார்கள். சோஷலிசம் அல்லது அநாகரீக நிலை என்று ரோசா லக்ஸம்பர்க் 1918ஆம் ஆண்டில் சொன்னதுபோல நிலைமை இல்லை. மாறாக, சோஷலிசம் அல்லது ஒன்றுமில்லை என்பதுதான் இன்றைய நிலைமை…”
இந்த நூல் ஜான் ஸ்மித் என்பவரால் எழுதபட்டுள்ளது. இதற்கு பால்பரான், பால் ஸ்வீஸீ ஆகியோரின் நினைவு விருதின் முதல் பரிசு வழங்கபட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் மார்க்சிய பொருளாதாரம் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இந்த நூல் சற்று கடினமானதாக இருக்கலாம். ஆனால், இடதுசாரி இயக்கங்களில், குறிப்பாக தொழிற்சங்க இயக்கங்களில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் இந்த நூலில் உள்ளன. பன்னாட்டு பொருளியல் பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்த இது உதவும். தவிர, மார்க்சிய கோட்பாடுகளை விவாதிக்கவும், புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் கூட நிறைய தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மதிப்பு, உபரி மதிப்பு, லாபம் சுரண்டல் ஆகிய சொற்களை மார்க்சியம் கற்றவர்கள் எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பற்றிய விவாதங்களை தூண்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை வாசித்தவுடன் மார்க்சின் “மூலதனம்”,0000 “க்ருந்தரிஸ்” மற்றும் லெனினின் “ஏகாதிபத்தியம்” ஆகிய நூல்களை மீண்டும் வாசிக்க வேண்டும் என தோன்றுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
