
மகத்தான தோழர் சீனிவாச ராவ் (BSR) : நினைவு தினம் செப்டம்பர் 30
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
நமது நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, அன்றைய மதராஸ் மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளில் பொதுஉடைமை இயக்கம் மலர்ந்தது. அவ்வியக்கம் 1930களின் இறுதி ஆண்டுகளில் தொடங்கி, தொடர்ந்து பல பத்தாண்டுகள், அன்றைய தஞ்சை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த, நிலப்பிரபுத்துவ கொடுமைகளை எதிர்த்து மிகவும் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியது. ஒரே நேரத்தில், கிராமப் பகுதிகளில் நிலவிய சமூக ஒடுக்குமுறையையும், நிலப்பிரபுக்களின் வர்க்கச் சுரண்டலையும் எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் நடத்திய நெடிய போராட்டங்களின் விளைவாக, இப்பகுதியில், குறிப்பாக இன்றைய திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், பண்டைய நிலப்பிரபுத்துவ பொருளாதார-சமூக ஆதிக்கம் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்ட வரலாற்றின் முக்கிய நாயகர்களில் என்றென்றும் நினைவில் நிற்பவர் அன்புத் தோழர் பி. ஸ்ரீனிவாச ராவ். 1907ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த அவர், ஐம்பத்தி நான்கு ஆண்டுகள்தான் வாழ்ந்தார். 1961ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் மறைந்தார். அடிமைகளாக நடத்தப்பட்ட, கொடிய சமூக ஒடுக்குமுறைகளை சந்தித்த பண்ணையாட்களுக்கும் (இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலின மக்கள்) நிலப்பிரபுக்களால் கடுமையாக சுரண்டப்பட்டுவந்த குத்தகை விவசாயிகளுக்கும் அரணாக நின்று, அவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உடன் களத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டியது. இதில் இருபது ஆண்டுகள் மிக முக்கிய பங்கு ஆற்றியவர் தோழர் BSR. தோழர் BSR மறைவு குறித்து அன்புத் தோழர் கோ. வீரையன், அவர் எழுதியுள்ள விவசாய இயக்க வீர வரலாறு என்ற சிறந்த நூலில் மிக உருக்கமாக விவரிக்கிறார்:
“முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக உழைப்பாளி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, இரவும் பகலும் பாராமல் ஓய்வின்றி உழைத்து, பாதிநாள் சிறையிலும், பல ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தலைவர், போராட்டப் பொறுப்பை ஏற்று 15 நாட்கள் ஓய்வின்றி தமிழகம் முழுவதும் அலைந்த போராட்ட தளபதி பிஎஸ்ஆர் 30-9-1961 அன்று அமரரானார்.
“16 ஆயிரம் பேர் சிறையிலும், பல லட்சம் பேர்கள் வெளியிலும் தங்கள் தளபதியின் மறைவுச்செய்தி கேட்டுக் கதறினார்கள்….அவர் ஏற்றிய லட்சியம் நிறைவேறும்வரை எதுவரினும் ஏற்போம். அதுவே உங்களுக்கு நாங்கள் எழுப்பும் நினைவுச்சின்னம் என்று உறுதி பூண்டார்கள்.”
தோழர் BSR அவர்களுக்கு வீர வணக்கம்!
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
