மாற்றப்படும் குடியரசின் குணாம்சம்
உ. வாசுகி
ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நாடும், நாட்டு மக்களும் சந்திக்க உள்ளனர். பத்தாண்டு காலமும் கார்ப்பரேட் மதவெறி கூட்டணி அரசாகத்தான் இது செயல்பட்டு வந்துள்ளது.
பாஜகவை ஒரு சராசரி முதலாளித்துவ கட்சி எனப் பார்க்க இயலாது. அது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ்சின் ஓர் அரசியல் அங்கம். ஆர் எஸ் எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அரசியல் தளத்தில் அமலாக்கம் செய்வதுதான் பாஜகவின் ஆகப் பெரிய கடமை. மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் எனப் பல முகங்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். எனவேதான், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு கொள்கை முடிவையும், நடவடிக்கையையும் தனித்தனியாக பார்த்து பயனில்லை. ஒட்டுமொத்தமானதோர் இலக்கை நோக்கி நகர்த்தப்படும் காய்களாகத்தான் அவற்றை பார்க்க வேண்டும். எதிர்வினை ஆற்ற வேண்டும்.
RSSஇன் புதிய இந்தியா
RSS/BJP இந்திய குடியரசின் அடிப்படை குணாம்சத்தை மாற்றுவதற்கான கதையாடலை மற்றும் நடவடிக்கைகளை, புதிய இந்தியா என்கிற பெயரில் தொடர்ந்து முன் வைக்கிறார்கள். ஏனெனில், அது அவர்களது சித்தாந்தத்தின் அடிப்படை. குறிப்பாக, தற்போது ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருப்பது, இந்த நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்த உதவுகிறது.
1925இல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ், விடுதலை போராட்டத்தில் இருந்து விலகியே நின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியம் என்பதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. இந்து தேசியம் என்பதே அவர்களது தத்துவம். இந்து ராஷ்டிரம் நிறுவப்பட வேண்டும் என்பதே நோக்கம். எனவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தோடு பல்வேறு வகையில் சமரசம் செய்து கொண்டது. ஆர் எஸ் எஸ் வரலாற்றை எழுதிய சி.பி. பிஷிகர், பிரிட்டிஷ் அரசாங்கம் குறித்த நேரடியான விமர்சனத்தை, RSS ஸ்தாபகர் கே.பி.ஹெட்கேவார் கவனமாக தவிர்த்தார் எனக் குறிப்பிடுகிறார். 1940இல் தலைமை பொறுப்புக்கு வந்த எம்.எஸ்.கோல்வால்கரும் அதே பாதையில் பயணித்தார். மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதன் மூலமே விடுதலை பெற முடியும், பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி அல்ல; பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியம் என்பது ஒரு பிற்போக்கான கண்ணோட்டம் என்ற கருத்தை முன் வைத்தார். பிரிட்டிஷ் அரசின் உள்துறை, ஆர்எஸ்எஸ்.காரர்கள் காங்கிரஸ் நடத்தும் பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பு இயக்கங்களில் பங்கு பெறுவதில்லை, எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் அவர்கள் ஏற்படுத்துவதில்லை என்று கருதியது. இதுகுறித்து ஏராளமான தரவுகள் உள்ளன.
காவி கொடி முன்னெடுப்பு
இதன் தொடர்ச்சியாகத்தான் சுதந்திர இந்தியா குறித்த ஆர்எஸ்எஸ் கண்ணோட்டம்- இந்து ராஷ்டிரம் – அமைந்தது. மூவர்ணக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி என்பதை முன் வைத்தனர். மூவர்ணக் கொடியை 1947இல் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்ட பிறகு, ஆர்கனைசர் பத்திரிகை அதைக் கடுமையாக விமர்சித்தது. மூன்று என்ற எண் தீயதை குறிக்கும், இந்துக்கள் எவரும் இதனை ஏற்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டது. சாவர்க்கர், இந்துக்களின் பெருமைக்குரிய புராதன தேசத்தை மூவர்ண கொடி ஒரு போதும் பிரதிநிதித்துவப்படுத்தாது என்றார். கோல்வால்கர், பாரதீய கலாச்சாரத்தை முழுமையாக உணர்த்துவது காவிக்கொடிதான். ஒட்டுமொத்த தேசமும் இதற்கு தலைவணங்கும் நாள் வரும் என்றார். அண்மையில் தலைமை நீதிபதி சந்திர சூட், குடும்பத்துடன் குஜராத் கோவில்களை பார்வையிட்டு விட்டு, கோவில்களின் உச்சியில் பறக்கும் கொடி, நீதியின் கொடி, சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தி என்று கூறியிருப்பது மேற்கூறிய சூழலில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதேபோல் அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தில், உலகம் போற்றும் மனுவின் சட்டங்கள் இடம்பெறவில்லை, இதில் நமது என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை என ஆர்கனைசர் எழுதியதுடன், இந்துக்களின் இதயத்தில் மனுவின் விதிகள்தான் எழுதப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டது.
இந்துத்வ ராஷ்டிரம்
இந்துத்வ ராஷ்டிரம் நிறுவுவது என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் இலக்கு. இந்துத்வமும் இந்து மதமும் ஒன்றல்ல; இந்துத்வம் என்கிற கருத்தியலுக்குள் இந்து மதம் ஒரு சிறு பகுதி என்றே சாவர்க்கர் விவரித்தார். எனவே இந்துத்வம் என்பது அரசியல் திட்டமே. இந்த அடிப்படையில்தான் அகண்ட பாரதம் முன்வைக்கப்பட்டது. உள்நாட்டு எதிரிகளாக கிறித்துவர்களும், இசுலாமியர்களும் மட்டுமே குறிக்கப்படும் போது, முதலாளித்துவம், சாதியம், ஆணாதிக்கம் போன்ற சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை நிறுவனங்களுடன் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வேறுபாடு இருக்க முடியாது. இந்து தேசியத்தை முன்வைக்கும் போது ஏகாதிபத்தியத்துடன் முரண்பாடு ஏற்படாது. இந்து தேசியம் என்ற ஒற்றை அம்சத்துக்கு அழுத்தம் வரும்போது, வேறுபட்ட தேசிய இனங்களின் உரிமைகள் நிராகரிக்கப்படும். எனவே கூட்டாட்சி சிதைப்பு, அதிகார குவிப்பு இவர்களின் இயல்பான நடவடிக்கையாக இருக்கும்.
இத்தகைய இந்துத்வ ராஷ்டிரம் நிறுவப்படுவதற்கு தடையாக உள்ள அரசியல் சாசனம் துவங்கி, பன்முக கலாச்சாரம், மொழி, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை போன்றவற்றை சிதைத்து ஒற்றை தன்மையைக் திணிக்க பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகள், அவர்களின் இலக்கோடு இயைந்து வருவதைக் காண முடியும்..இலக்குக்கு முட்டுக்கட்டை போடுவது எதுவாக இருந்தாலும் அதைத் தகர்ப்பது, தாண்டி செல்வது, எதிர்ப்புகளை ஒடுக்குவது என்பதே அவர்களின் திட்டம். அதனைத் தடையின்றி முன்னெடுக்க ஜனநாயக உரிமைகள் பறிப்பு, கருப்பு சட்டங்கள், கருத்து சுதந்திரம் முடக்குதல் என்கிற பாதை அதிகம் தேவைப்படுகிறது.
அரசியல் சாசனத்துக்கு முரணாக
மொழி பன்மைத்துவம் நிலவும் நாட்டில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பதும், பல்வேறு மதங்களின் இருப்பை மதச்சார்பின்மை மூலமாகவே கையாள முடியும் என்பதும், மத்திய – மாநில உறவுகளின் அடிப்படை, கூட்டாட்சி கோட்பாடே என்பதும், சாதிய, பாலின, பொருளாதார பாகுபாடுகள் நிலவும் சமூக சூழலில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிர்ணயிப்பும், குடியுரிமை மதம் சார்ந்து அல்ல என்ற வரையறுப்பும் பொதுவாக அரசியல் சாசனம் முன்வைக்கும் அம்சங்களாகும். கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களில் அரசு கை வைக்க முடியாது, அதற்கு முரணான சட்டங்களோ சட்ட திருத்தங்களோ வந்தால், நீதிமன்றம் அவற்றை ரத்து செய்ய முடியும் என தெளிவுபடுத்தியது. இருப்பினும், நேரடியாக அல்லது மறைமுகமாக மீறல்கள் நடந்து கொண்டே உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் இதற்கு முக்கிய உதாரணமாகும்.
அதே போல் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொது பட்டியல் என்று அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வரி பகிர்வு பற்றிய விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஏற்கனவே அதிக உரிமைகள் ஒன்றிய அரசுக்கு கொடுக்கப்பட்டது போக, மீதியும் தளர்த்தப்படுவதும், பறிக்கப்படுவதும் தொடர்ந்தன. பாஜக ஆட்சியில் இத்தகைய அத்துமீறல்களைக் கூடுதலாகக் காண முடிகிறது. திட்டக் கமிஷன் கலைப்பு இதன் முதல் படி. ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை சிதைத்தது, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ஆளுநரையும், மத்திய முகமைகளையும் அரசியல் கருவியாக பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்குவது, வரி பகிர்வைக் குறைப்பது, பகிர்வைக் குறைக்க செஸ் வரிகளைக் கூடுதலாக்குவது போன்றவை இதன் உதாரணங்கள். 14வது நிதி குழு மத்திய வரிகளில் மாநில பகிர்வை 32%இலிருந்து 42% ஆக உயர்த்தியது. அதன் தலைவர் Y.V.ரெட்டியை பிரதமர், மாநில பகிர்வைக் குறைக்குமாறு வற்புறுத்தினார் என நிதி ஆயோக் தலைவர் கூறியது முக்கியமானது.
பொதுப் பட்டியலில் உள்ள அம்சங்கள் என்று பார்த்தால், கல்வியை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகள், கூட்டுறவு துறையில் தலையிடும் முயற்சிகள், வேளாண் சட்டத் திருத்தம், நகர்ப்புற சீர்திருத்தங்கள், அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்தி குவிப்பது போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நடவடிக்கைகள், இதன் அண்மைக்கால உதாரணம்.
அரசும் மதமும் கலப்பது
மதச்சார்பின்மைக்கு முரணான பேச்சுக்களை அமைச்சர்களும், ஆளுநர் அவை தலைவர் போன்ற அரசியல் சாசன நியமனங்களில் இருப்பவர்களும் மிகச் சாதாரணமாக தொடர்ந்து பேசுகின்றனர். இதன் சிகரமாக அயோத்தி விஷயத்தைப் பார்க்க முடியும். ஓர் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ராமர் கோயிலின் திறப்பு நிகழ்ச்சியை, பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்று, மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பு அளித்து, அரசு நடத்தும் விழாவாக மாற்றியுள்ளனர். அரசும், மதமும், தேசியமும் ஒன்றோடொன்று இரண்டற கலந்தன. வெகுமக்களின் உணர்வாக இதை மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். இந்த நிகழ்வின் மூலம், இந்தியா மதச்சார்பற்ற குடியரசு அல்ல; அது இந்துத்துவ ராஷ்டிரம் என அறிவிக்கப்பட்டதாக பார்க்கலாம். மேலும் இந்து மதத்தில் ஒற்றை தன்மையைத் திணிக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளது.
எவ்வளவோ கோவில்கள் கட்டப்படுவதும், திறக்கப்படுவதும் நடந்து கொண்டே உள்ளது. இந்த கோயிலுக்கு மட்டும் தனித்த முக்கியத்துவம் என்ன? இது தேசத்தின் பெருமையாகவும் இந்து தேசியத்தின் அடையாளமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. ஜனவரி 22ஆம் தேதியுடன் இது முடிந்து விடாது. தேர்தல் வரை அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்தும் அயோத்திக்கு தல யாத்திரை நடந்து கொண்டே இருக்கும். பாபர் மசூதி சட்ட விரோதமாக இடிக்கப்பட்டதும், அதை ஒட்டி நாடு தழுவிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதும் கடந்த கால நினைவாக மாறி, பாஜகவின் சாதனையாகவே இது பார்க்கப்படுகிறது. காசி, மதுரா அடுத்து முன்னெடுக்கப்படும் காட்சிகள் வர ஆரம்பித்து விட்டன. வாரணாசி நீதிமன்றம் ஞானவாப்பி மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்து, சங் பரிவார முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுத்தது. ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி போலவே ‘கண்டுபிடிப்பு’கள் வரக்கூடும்.
5 மாநில தேர்தல் முடிவுகளை எடுத்து கொண்டால், பாஜகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், இந்துத்வ கருத்தியலை மக்கள் உள்வாங்கி கொண்டதுதான்.
புராணங்களும் இதிகாசங்களும் பல்கலைக்கழகம் வரை பாடங்களாக மாறிக் கொண்டுள்ளன. 7,000 ஆண்டுகளுக்கு முன் விஷ்ணு புராணத்தில் பாரத் என்கிற வார்த்தை இடம் பெற்றதால், இனி பாட நூல்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்பது பயன்படுத்தப்படும் என NCERT கூறுகிறது.
வரலாற்றைத் திருத்தும் வேலையில் சங் பரிவாரம் அதிக கவனம் செலுத்துகிறது. முகலாயர் ஆட்சி அந்நியர் ஆட்சி எனவும், அதன் தொடர்ச்சியாக இசுலாமியர்கள் அந்நியர்கள் எனவும் கட்டமைக்கப்படுகிறது. ஜனதா அரசு காலத்திலேயே வலதுசாரி சக்திகள் சில முக்கிய வரலாற்று நூல்களை, முகலாயர் ஆட்சி குறித்த சில அத்தியாயங்களை NCERT பட்டியலிலிருந்து அகற்றின. அடுத்து வாஜ்பாய் பிரதமரான போதும், பிரபல வரலாற்றிஞர்கள் எழுதிய பாட நூல்கள் அகற்றப்பட்டன. தற்போது மீண்டும் அம்முயற்சி தொடர்கிறது. இந்து மன்னர்களின் பேரரசுகள் கொண்டாடப்படுவதும், முகலாய பேரரசுகள் இந்து விவசாயிகளை கசக்கி பிழிந்தனர், விவசாயிகளை வரி கொடுக்க வற்புறுத்தினர் என்பதும் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அனைத்து பேரரசுகளும் சுரண்டல் செய்தன. மேலும் அக்பர் உள்ளிட்ட முகலாயர் ஆட்சியில் அரசவையில் முக்கிய பிரமுகர்களாக, வரி வசூலிக்கும் முகவர்களாக, முகலாய ஆட்சியாளர்கள் உடன் சமரசம் செய்து கொண்டு, மக்களிடம் வரிகளை பறிப்பவர்களாக, முகலாய ராணுவத்தின் பகுதியாக முகலாயர் அல்லாதோர் கணிசமாக இருந்தனர். எனவே சுரண்டல் முறைமையில் மத வேறுபாடு இல்லை என்பதுதான் உண்மை..
தாக்கப்படும் ஜனநாயகம்
பொதுவாக ஜனநாயகமும் தனிநபர் ஜனநாயக உரிமைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஏராளமான கருப்பு சட்டங்கள் அமலில் உள்ளன. நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக இல்லை என்றால், சட்ட திருத்தங்களை கொண்டு வந்து தீர்ப்புகளை முறியடிக்கும் போக்கினையும் இக்காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. உதாரணமாக, தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழு அமைப்பு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறம்தள்ளி அரசாங்க பிரதிநிதிகள் அதிகம் இருக்கக்கூடியது போல சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவுக்கு அதீதமான அதிகாரங்கள் கொடுக்கக்கூடிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாதகமாக தீர்ப்பு கூறும் நீதிபதிகளுக்கு, ஓய்வு பெற்றபின் பதவி/விருது கொடுக்கும் போக்கு அதிகரிப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. அயோத்தி பிரச்னையில் தீர்ப்பளித்த நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அசாமின் மிக உயர்ந்த குடிமை விருது வழங்கப்பட்டது இதன் தொடர்ச்சியே..
ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது, விமர்சனம் செய்யும் ஊடகங்களை அமைப்புகளை தனி நபர்களை அச்சுறுத்துவது, இதன் பகுதியாக, இணைய ஊடகம் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று மசோதாவை தாக்கல் செய்திருப்பது, இணையதள சேவைகளை அவ்வப்போது ரத்து செய்வது எனப் பட்டியல் நீள்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதாவில் ஏற்கனவே உள்ள தேசத்துரோக குற்றப்பிரிவுக்கு பதிலாக புதிய வடிவத்தில் ஆயுள் தண்டனை பெறக்கூடிய விதத்தில் குற்றப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இதைத் தாக்கல் செய்யும்போது, காலனிய எச்சத்தை நீக்குவதே நோக்கம் என்றதோடு, இந்தியா போன்ற ஜனநாயகத்தில் தேச துரோக பிரிவுக்கு இடமில்லை, அவரவர் கருத்துக்களை சொல்வதற்கு உரிமையும் சுதந்திரமும் வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் புதிய பிரிவுக்கு கொடுக்கப்பட்டுள்ள வியாக்கியானம் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை போன்றவை பாதிக்கப்படும் விதத்தில் சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொள்வது, இவற்றை தூண்டுவது அல்லது தூண்டுவதற்கு முயற்சிப்பது உள்பட குற்றம் என வரையறுத்துள்ளது. இப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதற்கான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன. நாட்டை சீர்குலைப்பவர்களை விட மாட்டோம் என உள்துறை அமைச்சர் பேசியது யாரையெல்லாம் குறி வைத்து என்பது நன்றாகவே புரியும்.
பெரும்பான்மையின் கொடுங்கோன்மை
சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை திட்டமிட்டு தூண்டப்படுகிறது. இத்தகைய குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். பெண்கள் குழந்தைகள் பட்டியலின பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பதற்கும் ஆர்எஸ்எஸ் பாஜக கடைபிடிக்கும் மனுவாத சித்தாந்தத்திற்கும் தொடர்பு உள்ளது. இவற்றையெல்லாம் நியாயப்படுத்தக் கூடிய விதத்தில் போலியான புகைப்படங்களும் செய்திகளும் உலவ விடப்படுகின்றன. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அவர்களுக்கு ஆபத்து என்று மட்டும் சொன்னால் அது எடுபடாது, எதிரிகளை ‘உருவாக்க’ வேண்டும். அப்படி உருவாக்கப்பட்ட எதிரிகள் தான் இஸ்லாமியர்கள்.
காரண காரியங்களுக்கு இடம் அளிக்காமல், தர்க்கத்துக்கு வாய்ப்பு கொடுக்காமல், அறிவியல் கண்ணோட்டம் அப்புறப்படுத்தப்பட்டு, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, பொய்களை உண்மையாக்கும் வித்தைகள் நடந்தேறி வருகின்றன. இவை அனைத்தும் பெரும்பான்மைவாத அடிப்படையில் நடக்கின்றன. பெரும்பான்மை வேறு, பெரும்பான்மை வாதம் வேறு. சிறுபான்மை கருத்துக்களை உள்வாங்கி கருத்தொற்றுமையைக் கணக்கில் எடுத்து முடிவுக்கு செல்வது பெரும்பான்மை ஜனநாயகம். சிறுபான்மை கருத்துக்களுக்கு இடம் அளிக்க மறுப்பது, நிராகரிப்பது, பெரும்பான்மை இருப்பதைப் பயன்படுத்தி புல்டோஸ் செய்து போவது பெரும்பான்மைவாதம். இது பெரும்பான்மையின் கொடுங்கோன்மையே (Tyranny of majority).
மோடி அரசின் பொருளாதார கொள்கை கார்ப்பரேட்டுகளுக்கு மிக அதிக பலன் தருகிறது. 1% மேல்மட்ட பணக்காரர்கள் கட்டுப்பாட்டில் நாட்டின் வளம் 40% உள்ளது. அதற்கு கைம்மாறாக RSS, பாஜகவின் இந்துத்வ பாதை கார்ப்பரேட்டுகளால் பொதுவாக ஆதரிக்கப்படுகிறது. ராமர் கோயில் வடிவமைப்பு, கட்டுமானம், பிரதானமாக லாசன் அன்ட் டூப்ரோ, மற்றும் டாட்டா குழுமத்தால் செய்யப்பட்டது. ஏராளமான கார்ப்பரேட்டுகள் 22ஆம் தேதி அங்கு குழுமியிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இந்திய குடியரசின் தன்மையை அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்கள்தான் பிரதிபலிக்கின்றன. அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களில் கை வைப்பது, சீர்குலைப்பது, மாற்றுவது என்பது இந்திய குடியரசின் அடிப்படை குணாம்சத்தை மாற்றுவதற்கு ஒப்பாகும். அரசியல் சாசனத்தைப் பெயருக்கு வைத்துக் கொண்டு, அதன் சாரத்தை சிதைக்கும் பாதையே இது.
விடுதலைக்குப் பின்னர் நவீன இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தேசிய இயக்கம், கம்யூனிச இயக்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் வெவ்வேறு விதமான கண்ணோட்டங்களை முன் வைத்தன. அதில் ஆர்எஸ்எஸ் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டது. தேசிய இயக்கம் முன் வைத்ததும், கம்யூனிச இயக்கம் முன்வைத்ததில் ஒரு பகுதியும் நவீன இந்தியாவின் கட்டமைப்புக்கு அடித்தளமாக அமைந்தன. அந்த அடித்தளத்துக்கு முற்றிலும் முரணாக, தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்வ அமைப்புகள் தங்களது நிகழ்ச்சி நிரலை அமலாக்கும் பயணத்தில் முன்னேறி கொண்டுள்ளன. பாசிச பாணி செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருந்து அவர்களை நீக்குவதே இந்திய குடியரசின் அடிப்படையைப் பாதுகாக்க உதவும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
