அபார்ட்மண்ட் குடிசைககளால் கட்டப்படும் சர்வதேச நகரம்
எஸ். கிஷோர்குமார்
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் சென்னை பெருநகரின் பங்களிப்பு இன்றிமையாதது. தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் 25% மேலாக சென்னை பெருநகரின் பங்குள்ளது. இந்தியாவின் ஷென்ஷன் (India’s Shenzhen), தெற்காசியாவின் டெட்ராய்ட் (Detroit) என்றெல்லாம் புகழப்படும் அளவிற்கு தொழிற்துறை மற்றும் சேவை உற்பத்தியில் முன்னனியில் சென்னை பெருநகரம் உள்ளது. இப்படி பொருளாதரத்தில் முன்னேற்றமும் அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வியிலும், சுகாதரத்திலும் தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறதென்ற கருத்து நிலவும் வேலையில் – இடது சாரி இயக்கங்களும் முற்போக்கு வெகுஜன இயக்கங்களும் தற்போது உள்ள இந்த பொருளாதார கட்டமைப்பை, பெருநகர வளர்ச்சி திட்டங்களை ஏன் விமர்சிக்க வேண்டும்? சமூக நலத்திட்டங்களும் பொருளாதார வளர்ச்சியும் சென்னை பெருநகர ஏழை மக்களுக்கு சென்றடையவில்லையா? இந்த இரண்டு கேள்விகளையும் இடஞ்சார்ந்த அரசியல் பொருளாதார (spatial political economy) பார்வையில் விவாதிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
2030ல் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு பன்னாட்டு மற்றும் இந்திய பெரு நிறுவனங்களின் முதலீடுகளே பிரதமானது என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இந்த முதலீடுகளை கவருவதற்காக சென்னை, திருவள்ளுர், மற்றும் காஞ்சிபுரம் அடங்கிய ’சென்னை பெருநகர்’ பகுதியை ஒரு சர்வதேச நகரமாக அடையாளப்படுதவற்காக கடந்த நாற்பது ஆண்டுகளாய் இடஞ்சார்ந்த மறுசீரமைப்பு திட்டங்களை (spatial restructuring policies) முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இடஞ்சார்ந்த மறுசீரமைப்பு திட்டங்களின் பிரதான அம்சங்களாக இருப்பது உட்கட்டமைப்பு உருவாக்கம் – மேம்பாடு, குடிசைப்பகுதிகள் அகற்றம் -மறுகுடியெற்றம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், புதிய பூங்காக்கள் மற்றும் கேளிக்கை கட்டமைப்புகள். இதற்காக நில மண்டலம் மற்றும் உரிமம் தொடர்ந்து மாற்றப்பட்டும் தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் திமுக, அதிமுக அரசுகள் மாறி மாறி வந்தாலும் முதலீடுகளை கவர்வதில் அதற்கான பெரு நகர சீரமைப்பு திட்டங்களிள், பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை தளர்த்தல்கள் போன்ற அரசு கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே பாதையில் பயணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட மாடல், எம் ஜீ ஆர் -ஜெயலலிதா ஆட்சி என்று எப்படி சொன்னாலும் தமிழ்நாட்டின் பொருளாதார கொள்கைகள் இடஞ்சார்ந்த மறுசீரமைப்பு சீரமைப்பு திட்டங்கள் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளாலும் பெரு முதலாளிகளாலும் தீர்மானிக்கப்பட்டு தமிழ்நாடு நகர வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), சிப்காட் (SIPCOT), டிட்கோ (TIDCO) மற்றும் சிம்டிஏ (CMDA) போன்ற அரசு நிறுவனங்களாலும் அதன் அதிகாரிகளாலும் செயல்படுத்தப்படுவதே இந்த மாற்றம் இல்லாத போக்குக்கான காரணம்.
குடிசைப்பகுதிகளில் புதிய குடியிருப்புகள்
குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றக்கூடாது, அவர்கள் வாழும் இடத்திலேயே கான்க்ரீட் வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும், போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், நிரந்தர வீடுகள் கட்ட முடியாத சூழலில் தீப்பிடிக்காத தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும், ஏழு ஆண்டுகளுக்குள் குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 1971ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது (தற்போது தமிழ்நாடு நகர் வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது). பல்வேறு குறைபாடுகள் இருந்தபோதிலும், குடிசைப்பகுதிகளில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும், குடிசை பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தந்து மேம்படுத்தியதாலும், எம்எம்டிஏ போன்ற புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்கியதாலும் ஒரு கணிசமான சென்னை நகர் ஏழை மக்கள் பயனடைந்தனர். 1990 வரையிலும் குடிசை மாற்று வாரிய செயல்பாடானது ஏழை மக்களின் நலனை மையப்படுத்தி இருந்தது என்று சொன்னால் அது தவறாகாது. ஆனால் 1991ல் இந்தியா உலகமயமாக்கல் நவதாராளமய கொள்கைகளை அமல்படுத்தியத்தின் விளைவாகவும், சர்வதேச மூலதன நெருக்கடி மற்றும் முரண்பாடுகள் நகரங்களுக்கு மத்தியிலான போட்டியை வலுப்படுத்தியதன் காரணமாகவும் தமிழ்நாடு அரசின் நகரம் சார்ந்த கொள்கைகளிலும் குறிப்பாக குடியிருப்பு சார்ந்த கொள்கைகளிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இந்த மாற்றத்திற்கு உலக வங்கியின் நேரடி தலையீடு பிரதானமானது, 1980களின் இறுதியிலேயே ஒரு பெரும் தொகையை சென்னையில் குடியிருப்புகளை கட்டுவதற்கு நிதியாக வழங்கி குடிசை மாற்று வாரியத்தின் திட்டங்களை தீர்மானிக்கும் சக்தியாக உலக வங்கி மாறியது. குறிப்பாக குடிசை மாற்று வாரியத்தின் தலைவராக அரசியல் கட்சி நியமிக்கப்பட்ட நபர் இருந்த வேளையில் அதை மாற்றி ஒரு அரசு அதிகாரியே குடிசை மாற்று வாரியத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது இது குடியிருப்பு சார்ந்த கொள்கைகள் ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாடு என்பதை மாற்றி அரசு நிறுவனங்களின் நிலைப்பாடு என்ற அரசியலற்ற தன்மைக்கு மாற செய்ததின் முதல்படி. இதனைத் தொடர்ந்து அதுவரை குடிசைவாழ் மக்களுக்கு இலவசமாக குடியிருப்புகளை கட்டித் தந்த அரசை குடியிருப்பு கட்டியதற்கான செலவை மக்களிடமிருந்தே பெற வேண்டும் என்ற திட்டத்தையும் உலக வங்கி திணித்தது.
1990 களிலிருந்து குடிசை மக்களை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து அகற்றப்படக்கூடாது என்ற கொள்கையில் இருந்து மாறுபட்டு, பறக்கும் ரயில் திட்டம், சாலை விரிவாக்கம், உட்கட்டமைப்பு உருவாக்கம் என்ற காரணங்களை சுட்டிக்காட்டி குடிசை பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற தொடங்கியது தமிழ்நாடு அரசு. 1990 களிலேயே குடிசை மக்களை அகற்றுவது தொடங்கப்பட்டாலும் 2000 களில் இருந்தே இது தீவிரமடைந்தது. 1990 கள் வரையிலும் குடிசை மாற்று வாரியத்தால் 40,000 வீடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 1,50,000 வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது இதில் பெரும்பாலான குடியிருப்புகள் சென்னையில் இருந்து 30-40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கொடுங்கையூர், ரேடியோ நகர் போன்ற புற நகர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு பயன் தரும் உட்கட்டமைப்பு உருவாக்கம் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த தவிர்க்க முடியாமல் குடிசை மக்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என்ற 2000களில் போக்கு மாறிப்போனது.
சென்னையின் மையப்பகுதியிலிருந்து குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதே அரசின் கொள்கையாக மாறியது. உலக வங்கி ஆசிய வளர்ச்சி வங்கி ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டம் என்று சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகளிடம் இருந்து நகர வளர்ச்சிக்கான நிதியினை பெறுவதற்காகவும், சென்னையின் மையப்பகுதியை ஒரு சர்வதேச நகரில் உள்ளவதைப் போல நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் மட்டும் பயன்படுத்தும் நுகர்வு மையமாக (consumption zone) சீரமைப்பதே பிரதானமான காரணம். இதற்காக குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு நூதன காரணங்களை அரசு சுட்டிக்காட்டியது – சுனாமியால் பாதிக்கப்படுகிறார்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் வாழும் பகுதி வாழ்வதற்கே தகுதியற்றது உயிருக்கு ஆபத்தானது என்று ஏழை மக்கள் 50-60 ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் உழைப்பை செலுத்தி உருவாக்கிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டனர். மக்களின் நலனுக்காகவே அப்புறப்படுத்தல் – மறுகுடியேற்றம் என்றால், அது எப்படி செயல்படுத்தப்பட்டது? எந்தவித மனித நேயமுமின்றி பெரும் காவல் படை கொண்டு சமூக விரோதிகளை கைது செய்வது போன்று மக்கள் மீது வன்முறை செலுத்தி பள்ளிகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற நேரத்தில் மக்களுடைய உடமைகள் அவர்கள் வீட்டில் இருக்கும்பொழுதே வீடுகள் இடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக பேருந்துகளிலும் பேருந்துகள் இல்லாத சமயத்தில் குப்பை வண்டிகளிலும் அடைக்கப்பட்டு கண்ணகி நகர் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி போன்ற மறு குடியிருப்பு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த மறு குடியேற்றத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்தது, சில இடங்களில் கட்டாய அப்புறப்படுத்தலை தடுத்து நிறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மறு குடியேற்றம்
குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை புறநகர் பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவது மறு குடியேற்றம் செய்வது அவர்களின் நலனுக்காகவே என்பது திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் நிலைப்பாடு. மறு குடியேற்றப்பகுதிகளில் ஏழை மக்களுக்கு சட்டபூர்வமான நிரந்தர வீடு, கழிவறை, மின்சாரம், குடிநீர் வசதிகள் மற்றும் புற நகர் பகுதிகளில் வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் புதியவேலை என்று அவர்களுடைய வாழ்க்கை புணரமைக்கப்படும் என்பதே அர சின் வாதம். இதில் உண்மை இருந்தால் பாதுகாப்பின்மை, வேலையின்மை, பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் இருந்து தொலை தூரம் என்ற காரணங்களுக்காக கணிசமான மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விற்றுவிட்டு மீண்டும் நகரத்தின் மையப் பகுதியை நோக்கி செல்வதற்கான காரணம் என்ன?
கண்ணகி நகர் செம்மஞ்சேரி பெரும்பாக்கம் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சாலையில் பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களும், அதேபோல் ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் மின்னணுவியல், வாகன உற்பத்தி இன்னும் பல தொழிற்சாலைகளும் சிறப்பு பொருளாதார மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த பொருளாதார வளர்ச்சியினால் மறு குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் பலன் தரக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லையா? சிப்காட் (SIPCOT), டிட்கோ (TIDCO) போன்ற தமிழ்நாட்டின் துணை அரசு நிறுவனங்கள் நிலங்களை கையகப்படுத்தி அதை மலிவு விலைக்கு வழங்குவதும், பல்வேறு வரி சலுகைகள் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை தளர்த்துவதும் பன்னாட்டு மூலதனத்தை கவர்வதற்கு. இதற்காகவே புற நகர் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச நிறுவனங்களுக்கு மூலதன குவிப்பை இலகுவாக்குவதற்கும் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் உயர்வகுப்பு பிரிவினருக்கு பயன்படும் வகையில் மட்டுமே உருவாக்கப்படுகிறது. இந்த புறநகர் அரசு கல்வியிலிருந்தும் சுகாதாரத்திலிருந்தும் தங்கள் பங்களிப்பை குறைத்துக்கொண்டு அல்லது விலகிக்கொண்ட காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்த பகுதிகள். எனவே அரசு மருத்துவமனைகளோ கல்லூரிகளோ பள்ளிகளோ தேவையை விட மிகவும் குறைவாக உள்ளது. சென்னையின் மையப்பகுதியில் கல்வி நிலையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அருகாமையிலும் ரயில் மற்றும் பேருந்து வசதிகள் நிறைந்த இடத்தில் வசித்து வந்த ஏழை மக்களை இப்படி எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத புறநகர் பகுதியில் மறுகுடியேற்றம் செய்தது ஏழை மக்களின் வாழ்நிலையை மிகவும் தாழ்த்தியுள்ளது.
சரி! அடிப்படை வசதிகள் இல்லை ஆனால் இந்த புதிய பொருளாதார மையத்தில் ஏழை மக்களுக்கான வாய்ப்புள்ளத? அவர்களின் வருமானத்தை பெருக்கி உள்ளதா? இந்த புதிய பொருளாதார வளர்ச்சியினால் ஒரு குறிப்பிட்ட மக்கள் அதாவது மென்பொருள் நிறுவனங்களிலும், மின்னணுவியல் வாகன உற்பத்தி நிறுவனங்களிலும் அதிக சம்பளம் பெரும் ஊழியர்களால் ஏழை மக்கள் பயன் பெறுவர் (trickle down effect), அதேபோல் இந்த புதிய பொருளாதார மையங்களில் ஏழை மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது வளர்ச்சி பொருளாதார வாதம். ஆனால் உண்மை நிலையில் இங்க பொருளாதாரமே இரண்டு பிரிவுகளாக உள்ளது ஒன்று இந்த பெரும் நிறுவனங்களால் வேலையில் அமர்த்தப்பட்டு பயன்பெற்று இருக்க கூடிய உயர் வகுப்பினர் – அவர்களுடைய நுகர்வு அதற்கான ஷாப்பிங் மால் சர்வதேச பள்ளிகள் சர்வதேச மருத்துவமனைகள் கேளிக்கை அம்சங்கள் என்று ஒரு பொருளாதாரமும். இந்த பெரிய நிறுவனங்களிலேயே முறைசாரா தொழிலாளர்களாகவும் அதேபோல் உயர் வகுப்பினருக்கு வீட்டு வேலைகள் செய்பவர்களாகவும் ஜோமேட்டோ ஸ்விகி ஊபர் ஓலா என்று சேவைகள் தருபவர்களாகவும் ஒரு பிரிவினர் – இவர்களுடைய நுகர்வுக்காக ஷேர் ஆட்டோ தெருவோர கடைகள் இன்னும் சில முறைசாரா சேவைகள் தரும் முறைசாரா தொழிலாளர்கள் என்பது மற்றொரு பொருளாதாரம். எனவே இந்த பொருளாதார வளர்ச்சி அதனுடைய பயன் 10 சதவீத மக்களை மட்டுமே சென்றடைகிறது, அந்த 10 சதவீத மக்களிடம் இருந்து ஏழை மக்களுக்கு பயன் தரும் வகையில் வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை, மாறாக அது ஒரு எல்லைக்குள் அடங்கிய பொருளாதாரமாக உள்ளது (enclave economy).
இடம்சார்ந்த பிரிவனை
ஏழை தொழிலாளர்களுடைய சேவைக்கான தேவைகள் அதிகரிக்கிறப்பொழுதும் அவர்களுக்கான ஊதியம் பெருகவில்லை காரணம் வெறும் 20 ஆண்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டால் அது இவர்களுடைய ஊதியத்தை குறைக்கத்தானே செய்யும்.
2002 இல் தமிழ்நாடு அரசு புதிதாய் இயற்றிய மென்பொருள் தொழில்துறை கொள்கைக்கு பின்பே புறநகர் பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டாயமாக மறுக்குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி இந்த புறநகர் பகுதி பெருநிறுவனங்களும், அதில் பணிபுரியும் உயர் வகுப்பினர் வாழும் அடுக்கு மாடி கட்டிடங்களும், சர்வதேச பள்ளிகளும் சர்வதேச மருத்துவமனைகளும் கேளிக்கை அம்சங்களும் ஒருபுறமும் அடிப்படை வசதிகளற்ற அப்பார்ட்மென்ட் குடிசைகள் மறுபுறமும் என்று அரசாங்கத்தாலேயே இடம்சார்ந்த பிரிவனையும் (spatial segregation) ஏற்றத்தாழ்வும் மிக்க பகுதியாக உருவாக்க்ப்பட்டுள்ளது.
சில பொருளாதார அறிஞர்கள் இந்த ஏற்றத்தாழ்வுமிக்க பொருளாதார வளர்ச்சி தவிர்க்கமுடியாதது மறுகுடியேற்றம் செய்யப்படவில்லை சிறப்பு பொருளாதார மையங்கள் அமைக்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு தொழில் துறையில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும், எனவே. தமிழ்நாடு அரசின் கொள்கைகளை விமர்சிக்க கூடாது மாறாக தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களின் மூலம் இந்த ஏற்றத்தாழ்வுகளை சரி செய்கிறது என்று வாதிடுகின்றனர். அப்போது மக்கள் நல திட்டங்கள் கண்ணகி நகர் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி போன்ற மறுகுடியமர்த்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுடைய வாழ்நிலையை ஏற்றம் செய்துள்ளதா?
தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்கள் இடம்சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை உள்வாங்கி ஏற்படுத்தப்படுவதில்லை. நவதாராளமய கொள்கைகளை ஏற்றபின் ஏழை மக்களுக்கு பயன்படும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதில்லை. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மக்களுடைய தேவைக்கு ஏற்ப அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்படவில்லை. பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் இது மிக முக்கியமான திட்டம் இது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவுவது மட்டுமில்லாமல் புதியதாக பெண்களை வேலைக்கு செல்லவும் தூண்டும். ஆனால் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் இருக்கிறதா? பேருந்து நிலையம் அருகாமையில் இருக்கிறதா? இதற்கான பதிலை அந்த பகுதிகளில் பெரும்பான்மையாக செயல்பட்டு வரும் ஷேர் ஆட்டோக்களை பார்த்தாலே நமக்கு புரியும். அப்போது இங்கு சாதாரண மக்கள் பயன் பெறும் வகையில் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்வதற்கு முன்பாகவே வசதி படைத்தவர்களுக்கு பயன்பெறும் வகையில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துகிறது அரசு. மற்றொரு உதாரணம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்லூரிகளுக்கு செல்கின்றப்பொழுது மாதம் ₹1000 வழங்கப்படும் என்கின்ற திட்டம் ஓரளவு வரவேற்கத்தக்கது. ஆனால் கண்ணகி நகர் செம்மஞ்சேரி பெரும்பாக்கம் ரேடியோ நகர் கொடுங்கையூர் போன்ற மறு குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் வாழ்கின்றபோது இந்தப் பகுதிகளில் அரசு பள்ளிகள் இருக்கின்றதா? ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அங்கன்வாடி இருக்கின்றதா? கட்டாயமாக மறுகுடியமர்த்தல் செய்யப்பட்ட பிறகு பல குழந்தைகள் பள்ளிகளில் இருந்து இடைநிறுத்துமாகியிருக்கின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பின்மை கருதி பள்ளிக்கு செல்வதில்லை. அதே வேளையில் சர்வதேச தரத்தில் உயர் வகுப்பினர் படிப்பதற்கு பல சர்வதேச பள்ளிகள் கடந்த 20 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக மக்களின் கைகளில் பணம் தருவது என்பது கவர்ச்சிகரமான திட்டமாக இருக்கலாம் ஆனால் அது நிரந்தரமான மக்களின் வாழ்நிலையை உயர்த்தக்கூடிய திட்டங்கள் கிடையாது. மாணவர்களுக்கு பணம் கொடுப்பதைவிட தரமான அரசு பள்ளிகளையும் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் உருவாக்குவதே ஏழை மக்களுக்கு பயன் தரும். இதை அரசு செய்ய தவறவில்லை செய்ய மறுக்கிறது காரணம் இது போன்ற நிரந்தர பயன்களை தரும் உட்கட்டமைப்பை உருவாக்குவது தனியார் மூலதன சேர்க்கைக்கு பயன் தராது என்பது மட்டுமல்ல தடையாகவும் அமையக்கூடும்.
மக்கள் போராட்டங்கள்
இப்படி பெரும் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியிலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் வாழும் மக்கள் ஏன் தங்கள் தேவைகளை அணிதிரண்டு கேட்பதில்லை. இதற்கு முன்னர் மக்கள் அணிதிரண்டதில்லையா? எழுபதுகளில் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகள் எப்படி வந்தது? அந்த தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டியது அரசாங்கம் என்பதை உணர்ந்து மக்கள் அணிதிரண்டு போராடியதே காரணம். அதற்குப்பின்னர் இரண்டாயிரங்களில் தாங்கள் வாழக்கூடிய பகுதிகளில் இருந்து உயிரற்ற பொருட்களை போல் அகற்றப்பட்டப்பொழுது தங்கள் உயிரையும் விடுவதற்கு தயாராக இடது சாரிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தினர். தற்போது மறுகுடியமர்த்தப்பட்ட பகுதிகளில் அது போன்ற போராட்டங்கள் நடைபெறவில்லையே ஏன்?
மறு குடியமர்த்தப்பட்ட பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புகள் போல் இருப்பது காரணமா? மறு குடியமர்த்தப்பட்ட பகுதிகள் குடிசைகள் அல்லவா? குடிசை பகுதிகள் என்றால் என்ன கூரை வீடுகளா? இல்லை! இன்றைக்கு சென்னையில் குடிசை பகுதியில் கீற்று கூரைகள் வீடுகள் உண்டா? இல்லை! அப்போது குடிசை பகுதிகள் என்றால் என்ன? சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத நிலம், போதிய வசதிகளின்றி கட்டப்பட்ட குடியிருப்புகள் அடிப்படை வசதிகளற்ற பகுதி இதுதான் குடிசைப்பகுதிகளின் வரை என்றால் கண்ணகி நகர் செம்மஞ்சேரி பெரும்பாக்கம் அரசால் கட்டப்பட்டுள்ள அப்பார்ட்மென்ட் குடிசைகள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அகற்றப்பட்டனர் கழிவறை வசதி கூட இல்லை என்று அகற்றப்பட்டனர் ஆனால் பெருமழை வேண்டாம் சிறுமழை போதும் சென்னை முழுவதும் மழைநீர் வடிந்தாலும் மறுகுடியமர்த்தப்பட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து மின்சாரம் இருக்காது கழிவறைக்கு செல்ல முடியாது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை இப்படிப்பட்ட சூழலிலும் போராட்டங்கள் நடக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன?
1. சென்னையில் குடிசை பகுதிகளில் சராசரியாக 300 வீடுகள் 400 வீடுகள் மட்டுமே இருக்கும் அதிகபட்சமாக 1000 வீடுகள் இருக்கலாம் அவர்களிடையே ஒற்றுமை இருந்தது ஒரே சமூகமாய் வாழ்ந்தனர், ஆனால், மறு குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் 15,000 25,000 என்று வீடுகள் கட்டப்படுகின்றது இது மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதை விட வேற்றுமையையும் சில நேரங்களில் பகை உணர்வையும் உருவாக்குகிறது.
2. மக்களை அரசியல் அற்ற தன்மையோடு இருக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே மறுகுடியமர்த்தப்பட்ட பகுதிகளில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் கொண்டு சில தேவைகளை அரசு பூர்த்தி செய்கிறது.
3. மக்கள் நல திட்டங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகளாகவும், மக்களை பாதிக்கும் திட்டங்கள் அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளாகவும் பின்பத்தை உருவாக்கி மக்கள் விரோத திட்டங்களில் இருந்து திமுக அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் தங்களை அந்நியப்படுத்திக்கொள்கிறது.
எனவே வாழ்விடம் சார்ந்த அரசியலை மறு குடியமர்த்தப்பட்ட மக்களிடம் கொண்டு செல்லாமல் இடம்சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை நன்கு அறிந்தே உருவாக்கும் தமிழ்நாடு அரசின, ஆளும்கட்சிகளின் பெரு நிறுவன சார்புநிலையை மக்களிடம் உணர்த்தாமல் மக்களை அணிதிரட்டுவது இய லாது. அதேபோல் சென்னை நகரிலுள்ள குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை ஒன்றினைத்து அவர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் அதைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்களை அகற்றுகிறப்பொழுது அங்கு போராட்டம் நடத்துவது பயனளிக்காது. 400-500 குடும்பங்கள் ஒன்றிணைந்து அரசு எந்திரத்திற்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் நடத்துகின்ற போராட்டம் பெரும் பயனளிக்காது மாறாக வரும் முன் காப்போம் என்பது போல் குடிசை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் இயக்கமாக தொடர்ந்து செயல்பட வேண்டும். மறுகுடியமர்த்தப்பட்ட மக்களுக்காக தனி இயக்கம் வேண்டும்.
சென்னையின் மையப்பகுதியிலிருந்து குடிசை மக்கள் வெளியேற்றப்படுவதால் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான கண்ணோட்டம். குடிசை மக்களை வெளியேற்றி சென்னையின் மையப்பகுதியை பணம் படைத்தவர்களுக்கு மட்டும் பயன்படும் நுகர்வு மையமாக மாற்று வதன் மூலம் இதற்கு முன்பாக உருவாக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நடுத்தர மக்களுக்கு பயன்படும் உட்கட்டமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படும். எனவே நகரத்தில் வாழக்கூடிய மக்களுடைய நலன்களை உறுதி செய்யவேண்டும் என்றால் வாழ்விடம் சார்ந்த அணிதிரட்டல்கள் அவசியமாகிறது. ஹென்ரி லெஃபர் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொன்னது போல இனிவரும் புரட்சி என்பது நகரத்தின் புரட்சி. வாழ்விடம் சார்ந்த இயக்கங்களும் வர்க்க இயக்கங்களே என்பதை உணர்ந்து இடம்சார்ந்த அரசியல் பொருளாதார விவாதங்களை மேற்கொள்வது காலத்தின் அவசியமாகும்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
