சீனாவில் மார்க்சிய சூழலியல்: மார்க்சின் சூழலியலிலிருந்து சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாடு
ஆர். எஸ். செண்பகம்
சென் யி வென் சீன மக்கள் குடியரசின் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் மார்க்சியப் பள்ளியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். அவரது கட்டுரை, சீன மார்க்சிய சூழலில் பல்வேறு ஆராய்ச்சி முன்னுதாரணங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் போக்கைப் பற்றி விவாதிக்கிறது. அதேநேரத்தில், சீனாவில் மார்க்சிய சூழலியல் எதிர்கொள்ளும் சாதனைகள் மற்றும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. உலகை அழுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினையை இடதுசாரிகள் மார்ச்சிய சூழலியல் பகுப்பாய்வினை அடித்தளமாகக் கொண்டு அணுகுகிறார்கள். சீன கல்விச் சமூகம் 1980களில் இருந்து மார்க்சிய சூழலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனப் பாதை மேற்குலக மார்க்சிய சூழலியலின் பாதையிலிருந்து வேறுபடுகிறது. சீனப் பாதை மார்க்சின் சூழலியலை சில இடங்களில் மறுக்கிறது. சில இடங்களில் அதனுடன் ஒட்டிப் பயணித்துத் துணையாகச் செல்கிறது.
அதை மீட்டெடுப்பது மற்றும் அதை வளர்ப்பது என பல்வேறு நிலைகளைக் கடந்து வந்துள்ளது. தனித்துவமான சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிச சூழலியல், சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையின் சாராம்சத்திற்குள் போவதற்குள், நாம் புரிந்து கொள்ள ஏதுவாக இயங்கியலின் மிக முக்கிய விதிகளை நினைவூட்டிக் கொள்வது அவசியமாகும் .
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் பிரதான விதிகள்
எதிர் நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும், அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் பரிணமித்தல், நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆகியவை இயக்கவியலின் பிரதான விதிகள் ஆகும்.
எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் – இயற்கை, சமூகம் மற்றும் அறிதலின் எல்லா நிகழ்வுகளிலும் அவற்றின் உள் எதிர்நிலைகள், முரண்படுகின்ற அம்சங்கள் மற்றும் போக்குகள் குணாம்சமாக இருக்கின்றன. உயிருள்ள இயற்கையில் இந்த எதிர்நிலைகளை தன்மயமாக்கல் மற்றும் சிதைதலில் விளக்க முடியும்; சமூகத்தில் இவை வர்க்க முரணியல்புகள் எனப்படுகின்றன. சிந்தனையில் இவை பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு எனப்படுகின்றன. இந்த இயக்கவியல் முரண்பாட்டில் ஓர் எதிர் நிலையானது மறு எதிர்நிலை இல்லாமல் இருக்க முடியாது.
அளவு ரீதியான மாற்றங்கள் இடையீடில்லாமலும் படிப்படியாகவும் நடைபெறுகின்றன. பண்பு ரீதியான மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாய்ச்சலைப் போல் நடைபெறுகின்றன. இயற்கையிலும், சமூகத்திலும், வளர்ச்சி மெதுவான பரிணாமம், வேகமான பாய்ச்சல்கள் எனும் இரண்டு வடிவங்களில் நடைபெறுகின்றது.
நிலைமறுப்பின் நிலைமறுப்பு – முந்தைய நிலையை நிலைமறுப்புச் செய்கின்றபொழுது மட்டுமே பண்புநிலை மாற்றம் சாத்தியம். நிலைமறுப்பு எந்த வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத, முறைப்படியான கட்டமாகும். இருத்தலின் பழைய வடிவங்களை நிலைமறுப்புச் செய்யாமல் எத்தகைய வளர்ச்சியும் சாத்தியமல்ல.
இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின்படி நிலைமறுப்பு என்பது பழையனவற்றை முற்றிலும் ஒழித்தல் என்று அர்த்தமல்ல. உதாரணமாக, உயிருள்ள இயற்கையில் பழங்காலத்து உயிரிகள் பிற்காலத்துப் பிராணிகளுடன் சேர்ந்து வாழ்கின்றன. இரண்டாவதாக, உயிருள்ள இயற்கையில் ஒவ்வொரு புதிய உயிரினமும் பரிணாம வளர்ச்சியின்போது முந்தைய தலைமுறைகள் திரட்டிய ஆக்கபூர்வமான, மதிப்புடைய குணாம்சங்களைப் புனருற்பத்தி செய்து கொள்கிறது. மனித சமூக வரலாற்றிலும் கூட, ஒவ்வொரு புதிய சமூக அமைப்பும் முந்தைய சகாப்தங்களில் தோற்றுவிக்கப்பட்ட பொருளாயத, கலாச்சார மதிப்புகளை சுவீகரித்துக் கொள்கிறது.
எனவே, இயற்கையின் தோற்றம் எதையும், அதைச் சூழ்ந்துள்ள பிற தோற்றங்களிலிருந்து பிரித்து தனியாக ஆராய்ந்தால், அதைப் புரிந்துகொள்ளவே முடியாது என இயக்கவியல் தெளிவாகக் கூறுகிறது. அதாவது, ஒரு தோற்றத்தைச் சுற்றியுள்ள மற்ற இயற்கைத் தோற்றங்களிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்த்தால் அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தின் தன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது; மேலும், அப்படிப் பார்த்தால் அந்தத் தோற்றமே அர்த்தமற்றதாகக் காணப்படும்.
இயற்கை என்பது இடையறாது இயங்கிக் கொண்டிருப்பது – இடையறாது மாறிக்கொண்டிருப்பது – இடையறாது தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருப்பது – இயற்கையினுள்ளே இயங்கும் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதன் விளைவாகவும், இயற்கையினுள்ளே இயங்கும் எதிரெதிரான சக்திகள் மோதிக்கொண்டு இயங்குவதன் விளைவாகவும் வளர்ந்துகொண்டிருப்பது என்று இயக்கவியல் கருதுகிறது. மேலும் இயற்கையில் எப்பொழுதும் ஏதாவதொன்று நொறுங்கிச் சிதைந்துகொண்டும், அழிந்து கொண்டும் உள்ளது என்றும், எப்பொழுதும் ஏதாவதொன்று தோன்றி வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்றும் இயக்கவியல் கருதுகிறது. எனவே, பல்வேறு தோற்றங்களைப் பற்றி ஆராயும்போது, அவற்றிற்கிடையே நிலவும் பரஸ்பரத் தொடர்புகளையும், பரஸ்பரச் சார்புநிலைகளையும் வைத்துப் பரிசீலித்தால் மட்டும் போதாது; அத்தோற்றங்களின் இயங்கும் தன்மை, மாறும் தன்மை, வளரும் தன்மை, தோன்றும் தன்மை, மறையும் தன்மை ஆகியவற்றையும் சேர்த்து அவற்றை ஆராயவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இயற்கைத் தோற்றம் உள்ளது. அதைச் சுற்றி வேறு பல தோற்றங்கள் உள்ளன. இந்த சுற்றுப்புறத் தோற்றங்களால் பாதிக்கப்பட்டு, அது குறிப்பிட்ட தோற்றமாகக் காட்சியளிக்கிறது. எனவே, அந்தக் குறிப்பிட்ட தோற்றத்திற்கும் சுற்றுபுறத் தோற்றங்களுக்கும் இடையே உள்ள இணைப்பு – உறவு பிரிக்க முடியாததாகும். எனவே, இயற்கையின் தோற்றம் எதையும், அதைச் சுற்றியுள்ள மற்ற இயற்கைத் தோற்றங்களிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்த்தால், அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தின் தன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது; மேலும், அப்படிப் பார்த்தால், அந்தத் தோற்றமே அர்த்தமற்றதாகக் காணப்படும். அதேபோல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருள் அல்லது ஒரு தோற்றம் நீண்ட நாள் நீடித்து நிலைபெற்றிருக்கக் கூடியதாகத் தோன்றலாம்; இருந்தபோதிலும், அது ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்திருக்கின்றது. இத்தகைய பொருள் அல்லது தோற்றத்தை இயக்கவியல் முதன்மைப்படுத்தி முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக எந்தவொரு பொருள் – எந்தவொரு தோற்றம் – தோன்றி வளர்ந்து வருகிறதோ அது நிலைத்து நிற்காது என அந்த நேரத்தில் தோன்றிய போதிலும், அதைத்தான் இயக்கவியல் முதன்மைப்படுத்தி முக்கியமானதாகக் கருதுகிறது. ஏனெனில், எது தோன்றி வளர்ந்து வருகிறதோ, அது வெல்லற்கரியது என்று இயக்கவியல் கருதுகிறது.
“சிறிய நுட்பமான பொருள் முதலாக மிகப் பெரிய பொருள் வரை, சிறு மணல் துகள் முதலாக சூரியன் வரை, உயிரணு முதல் மனிதன் வரை, இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் இடையறாது தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டேயிருக்கிறது. எந்நேரமும் இயங்கிக் கொண்டுள்ள நிலையிலும் உள்ளது” (இயற்கையின் இயக்கவியல்). மேலும், “இயற்கையை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் உணர்வது என்பது, அந்நிய அம்சங்கள் எதுவும் அதனுடன் கலந்து விடாமல் இயற்கையை உள்ளது உள்ளபடியே உணர்ந்து கொள்வது என்றுதான் அர்த்தம். வேறொன்றுமில்லை” அதேபோல், “வளர்ச்சி என்பது எதிர்மறைகளிடையே நடக்கும் “போராட்டத்தையே குறிக்கிறது” என்கிறார் லெனின்.
“முரண்பாடுகள் பற்றி”
“இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம் இயற்கையில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே என பொருள் முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்தில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே. அதாவது, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கிடையே உள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையே உள்ள முரண்பாடு ஆகிய முரண்பாடுகளின் வளர்ச்சியே, சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளி, பழைய சமுதாயத்தை அகற்றி, புதிய சமுதாயத்தை நிறுவுவதற்கான உந்து சக்தியை வழங்குகிறது. பொருள்முதல்வாத இயங்கியல், புறக் காரணிகளை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. புறக்காரணிகள், மாறுதல்களுக்கான சூழ்நிலை; அகக்காரணிகளே மாறுதல்களுக்கான அடிப்படை; புறக்காரணிகள் அகக்காரணிகள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது”என்று முரண்பாடுகள் பற்றி எனும் கட்டுரையில் மாவோ கூறுகிறார்.
சோசலிசச் சீனாவின் சூழலியல் முன்னோக்குகள்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக தனது நாட்டை உலகிற்கு திறந்துவிட்டச் சூழலில், மேற்கத்திய சுற்றுச்சூழல் மார்க்சியம் பற்றிய ஆய்வு சீனாவில் மார்க்சிய சூழலியல் ஆராய்ச்சியின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. சுற்றுச்சூழல் மார்க்சியம் என்பதன் பொருள் என்னவென்றால், மார்க்சியக் கோட்பாட்டை – மார்க்சியக் கொள்கைகளை சூழலியல் முன்னோக்குகளுடன் இணைக்கும் அரசியல் மற்றும் தத்துவார்த்த கட்டமைப்பாகும். சீன அறிஞர்கள் மேற்கத்திய சமூகங்களில் இருந்து சூழல்-மார்க்சியம் முதன்மையாக உருவானது என்பதையும், அதே நேரத்தில் அது வலுவான மேற்கத்திய அகநிலை முன்னோக்குடன் கூடியது என்பதையும் அங்கீகரித்து, இந்த விழிப்புணர்வுடன் சீன அறிஞர்கள் சுற்றுச்சூழல் மார்க்சியத்தின் கோட்பாடுகளை ஆராயும்போது சீனாவின் குறிப்பிட்ட சூழலை கணக்கில் எடுத்துக் கொண்டனர்.
20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியின்போது மார்க்சிய சூழலியல் ஆய்வு சீனாவில் ஆரம்ப நிலையில் இருந்தது. 2015க்குப் பிறகு, சீனாவில் மார்க்சிய சுற்றுச்சூழலியல் ஆராய்ச்சியானது பிறவற்றிலிருந்து தேவையான அறிவை திரட்டுவது என்பதோடு மட்டுமல்லாமல், சீனாவின் சுற்றுச்சூழல் சவால்களை பகுப்பாய்வு செய்வதற்குத் தேவையான கருத்தியல் ஆதாரங்களை தருவதற்கான ஆராய்ச்சியாக மாறியது.
சீன ஆராய்ச்சியின் மூன்று முக்கிய பகுதிகள்
முதலாவதாக, உற்பத்தி நடவடிக்கைகள் மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் இருக்க வேண்டும் என மார்க்சிய சுற்றுச்சூழலியல் வலியுறுத்துகிறது; இதன் விளைவாக, சீனாவில் சுற்றுச்சூழல் நாகரிகத்தின் முன்னேற்றம் மனிதனை மையப்படுத்திய மதிப்புக் கண்ணோட்டத்தினை நிபந்தனையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. மனிதகுலம் மற்றும் இயற்கையின் இணக்கமான சகவாழ்வையும், சோசலிச வளர்ச்சி பாதையையும் ஒருங்கே கொண்டிருக்கக்கூடிய வகையிலான நவீனமயமாக்கலின் ஒரு வடிவம் முதலாவதாக வலியுறுத்தப்படுகிறது.
இரண்டாவதாக, முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிச இலக்குகளுடன் இணைந்த நவீனமயமாக்கல் கோட்பாடாக சூழலியல் நாகரிகம் உருமாற வேண்டுமென அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
மூன்றாவதாக, சோசலிச அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உகந்த மதிப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர வலுவூட்டலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனவே, சுற்றுச்சூழல் மார்க்சியம் பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சியின் மூலம், சீன அறிவுசார் சமூகம் அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் மார்க்சியத்தின் வளர்ச்சியில் இறங்கியுள்ளது.
சீனாவில் மார்க்சிய சூழலியல் ஆய்வுகளின் பாதை
1980களில் இருந்து சீனாவில் மார்க்சிய சூழலியல் ஆய்வுகளின் பாதையை ஆய்வு செய்தால், சமகால சீன கல்வித்துறையில் மார்க்சிய சூழலியல் ஒரு துடிப்பான, செழிப்பான ஆய்வுப் பகுதியாக மாறியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆராய்ச்சி மூன்று முக்கிய முனைகளில் குறிப்பிடத்தக்க பலனைத் தந்துள்ளது: 1) மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் சூழலியல் முன்னோக்குகளின் விளக்கங்கள், 2) சுற்றுச்சூழல் மார்க்சியத்தின் தத்துவார்த்த அடித்தளங்களின் விளக்கங்கள், மற்றும் 3) சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாட்டின் ஆய்வுகள். குறிப்பிடத்தக்க வகையில், சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாட்டின் ஆய்வு சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று களங்களும் சுயாதீனமானவை அல்ல என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது. மாறாக, அவை ஒன்றோடொன்று தொடர்புடைய மற்றும் முற்போக்கான பாதைகளைக் காட்டுகின்றன.
“மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தின் நவீனமயமாக்கல்” என்பது நவீனமயமாக்கலின் கட்டமைப்பிற்குள் வாழ்க்கையின் சமூகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடைமுறை அணுகுமுறையாகும். கார்பன் உமிழ்வு வர்த்தகம் போன்ற சுற்றுச்சூழல் நவீனமயமாக்கலுக்கு பிற நாடுகளால் பயன்படுத்தப்படும் சில உத்திகளை வரையும்போது, மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தின் நவீனமயமாக்கல், அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் சோசலிச கொள்கைகளுடன் இணைந்திருப்பதை உறுதி செய்கிறது. சுற்றுச்சூழல் நவீனமயமாக்கலுக்கான அணுகுமுறைகள் அந்தந்த வளர்ச்சி மாதிரிகள் மற்றும் அவை செயல்படும் சமூகச் சூழல்களின் அடிப்படையில் பார்க்கப்படுகின்றன.
சீனா இந்த அணுகுமுறையின் மூலம் சமகால முதலாளித்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு தத்துவார்த்த ஆதாரமாக சுற்றுச்சூழல்-மார்க்சியத்தைப் பயன்படுத்துகிறது. அதேநேரம், உலகளாவிய சூழலில் சுற்றுச்சூழல் நாகரிகத்தின் மீதான சீனாவின் முன்னேற்றத்தின் சோசலிச நோக்கத்தை விளக்குவதற்கு முன்முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கிறது. தனது சொந்தத் தத்துவங்கள் மற்றும் சொந்த மொழிகளைப் பயன்படுத்தி, சீனாவின் சொந்த கதைகளைச் சொல்லக் கூடிய வகையில், சீன மார்க்சிய சூழலியலுக்குள் சமகால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த அணுகுமுறை அமைந்துள்ளது.
மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சூழலியியல் சிந்தனையின் விளக்கம்
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் சூழ்நிலையியல் சிந்தனையை விளக்குவதென்பது, அவர்களின் சூழலியல் முன்னோக்குப் பார்வைகளை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல், சமகால வரலாற்றுச் சூழலை பகுப்பாய்வு செய்வதற்கு அவர்களின் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது. சீனாவில் தத்துவம் மற்றும் பொருளாதார தளத்தில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் சூழ்நிலையியல் சிந்தனையை பொருத்திப் பார்த்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. பொருளாதாரத்தில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் சூழலியல் சிந்தனையைப் பொருத்திப் பார்க்கும் சீன அறிஞர்கள், அதன் அடிப்படையில், சோசலிசச் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தை தனித்துவமான சீன குணாதிசயங்களுடன் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
முதலாளித்துவக் கட்டமைப்பின் கீழ் இலாபத்தை அதிகப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படும் உற்பத்தி சக்திகள் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த குணாம்சத்தின் காரணமாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மிக முக்கியமான கட்டாய அம்சங்களுடன் இயல்பாகவே முரண்படுகின்றன என்பதை சீன தத்துவ ஞானிகளும் அறிஞர்களும் பரவலாக ஒப்புக் கொள்கின்றனர். எனினும், சோசலிசம் அளித்துள்ள சுற்றுச்சூழலியல் பாதுகாப்பு என்பதில் உள்ள நன்மைகளை, சமூக உற்பத்தியின் மூலமும் விஞ்ஞானப்பூர்வமாக இயற்கை ஆதார வளங்களை பயன்படுத்துவதன் மூலமாகவும் பரிசோதித்தறிய வேண்டும் என மார்க்சியப் பார்வையில் சீன தத்துவஞானிகளும், அறிஞர்களும் முயல்கின்றனர்.
உதாரணமாக, 2000ஆம் ஆண்டுவாக்கில், ஹுவான் சிங்சி மற்றும் ஷிய பவுஜான் (Huan Qingzhi and Xie Baojun) ஆகியோர் இந்த வகையில் தங்களுடைய ஆய்வினை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக விடுதலையை ஒருங்கிணைக்கும் “சிவப்பு-பச்சை” சிந்தனையோட்டத்தை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல், மனிதநேயமிக்க நோக்கத்துடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கு வாதிடுகிறது. சிவப்பு சிந்தனை மறைந்திருக்கும் ஆபத்துகள் மற்றும் தோல்வியின் விதைகளை வெளிக்கொணர விமர்சன, பகுப்பாய்வு சிந்தனையில் ஈடுபடுகிறது. “திங்க் கிரீன்” என்பது அறிவைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கக்கூடிய நடைமுறைகள், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்கான பொறுப்பான முடிவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான வளங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அதன் இயற்கையைத் தக்கவைக்கவும் உதவும்.
சீன ஆராய்ச்சியின் மற்றொரு குறிப்பிடத்தக்க குணாம்சம், மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் சூழலியல் கருத்தின் கோட்பாட்டின் அடிப்படை கூற்றுகளையும், தத்துவார்த்த அமைப்பையும் சீன சூழலியலுக்குப் பொருத்திப் பார்ப்பதை நோக்கமாகக் கொண்டது. ”லாபத்தை அதிகப்படுத்தும் நோக்கினை கொண்ட மூலதனத்தின் உள்ளார்ந்த குணாம்சமே சுற்றுச் சூழலியல் நெருக்கடிக்கான அடிப்படை காரணம்” என்ற துணிபுரையின் அடிப்படையில் சீன அறிஞர்கள் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் சூழலியல் கருத்தின் கோட்பாட்டின் அடிப்படை கூற்றுகளை பிரதானமாக ஆராய்ச்சிக்குட்படுத்தினர். எனவே அவர்களுடைய விவாதங்கள் இதனைப் பொறுத்தவரையில் இரண்டு அம்சங்களை சுற்றிச் சுற்றியே அமைந்திருந்தது.
முதலாவது அம்சம் மூலதனம் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டிற்கும் இடையேயான முரண் குறித்தது. மூலதனத்தின் இந்த உள்ளார்ந்த குணாம்சத்தினை ஆராயும்போது புள்ளியியல் அணுகுமுறையின் கீழ் ஒரு மாதிரி புள்ளிவிவரத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க, ”பயன்பாட்டின் கொள்கை” மற்றும் ”மதிப்பீட்டின் கொள்கை” என்னும் இரண்டு பிரிவுகளை பயன்படுத்தியுள்ளனர். 1. ”பயன்பாட்டின் கொள்கை” என்பது, இருக்கின்ற ஆதார வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி, குறைந்த செலவில் சிறந்த உற்பத்திப் பொருளை பெறுவதற்கான நடைமுறை. 2. ”மதிப்பீட்டின் கொள்கை” என்பது, மூலதனம் தனது லாபத்தைப் பெருக்குவதற்காக, திறன் பெற்ற உழைப்பு சக்தியை பயன்படுத்தி, உற்பத்தியின்போதே மதிப்பினை கூட்டி, ஒரு மதிப்பு கூட்டுப் பொருளை உற்பத்தி செய்ய முயலும் என்பது.
இதில் ”பயன்பாட்டின் கொள்கை”என்பது மூலதனத்தின் லாபம் பெருக்கும் உற்பத்தி முறை இயற்கையின் பயன்பாட்டைத் தொடர்ந்து சுரண்ட முற்படுகிறது என்பதை வலியுறுத்துகிறது. மூலதனம், இயற்கையை உற்பத்திக்கான ஒரு கருவியாக மட்டுமே கருதுகிறது. மேலும், பண பரிவர்த்தனைகளின் முலம் அதன் பயன்பாட்டு மதிப்பை பரிவர்த்தனை மதிப்பாகக் குறைக்க முயல்கிறது என்பதை வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, இயற்கையை பண்டமயமாக்கி மூலதனமயமாக்குதலுக்கு உட்படுத்துதலை அதிகப்படுத்துகிறது. உற்பத்தியின் விரிவாக்கத்தின் மூலம் மூலதனம் திரட்டப்படுகிறது. அதே நேரத்தில், “மதிப்பீட்டுக் கொள்கை” என்பது லாபத்தை அதிகப்படுத்துவதற்கான மூலதனத்தின் நிரந்தர நாட்டத்தை வலியுறுத்துகிறது. இதன் காரணமாக, முதலாளித்துவ உற்பத்தி முறையானது, ஒரு வரம்பற்ற விரிவாக்கத்தை நோக்கிய போக்கையும், அந்தப் போக்கின் காரணமாக, இயற்கையின் சுற்றுச்சூழலின் புதுப்பிக்க முடியாத வளங்களின் இறுதித்தன்மையுடன் இயல்பாகவே மோதுகிறது.
இரண்டாவது அம்சம் இலாபத்திற்கான இந்த குறுகிய நாட்டம் பூமியின் இயற்கையான வளர்சிதை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் ஒழுங்கை புறக்கணிக்கிறது. மூலதனக் குவிப்பு என்ற ஒட்டுமொத்த செயல்முறைக்குள் இயற்கையை வெறும் பயன்பாடாகக் குறைக்கிறது. தேவைகள், பொருட்களின் நுகர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி, சுற்றுச்சூழல் அழிவு அதிகப்படுத்தப்படுவதுடன், நியாயப்படுத்தப்படுகிறது. மூலதனம், முதலீடு மற்றும் வர்த்தகத்தின் உலகமயமாக்கலை ஊக்குவித்து, அதன் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை, வளங்களை சுரண்டுவதற்கும், உலகளாவிய நெருக்கடிகளாக மாற்றுவதை நியாயப்படுத்துவதற்கும் முயல்கிறது,
இந்த இரண்டு அம்சங்களின் அடிப்படையில், மூலதனத்தின் லாபம் பெருக்கும் உள்ளார்ந்த குணாம்சத்தினை சீன அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அதற்காக, அவர்கள் மூலதனத்தை அப்படியே முற்றிலுமாக மறுத்து ஒதுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, இயங்கியல் அணுகுமுறையுடன் மூலதனத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்து, விஞ்ஞானப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதன் மூலம், மனிதகுல மேம்பாட்டிற்கும் சூழலியலின் நிலைத்தன்மையை பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். மார்க்சிய சூழலியல் கொள்கையில், மதிப்பின் கோட்பாடானது, மனிதத் தேவைகளுக்கான இயற்கையின் அளிப்புகள் (புறவய மதிப்பு) மற்றும் இயற்கையின் மீது மனிதனின் சார்புத்தன்மை (உள்ளீட்டு மதிப்பு) ஆகியவற்றின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
ஒட்டுமொத்தமாக, விமர்சனப்பூர்வமாக கட்டமைக்கப்படும் இந்தக் கட்டமைப்பில், (1) இயற்கை சூழலியல் கூறுகள் மற்றும் சமூகப் பொருளாதார கூறுகளின் இருமை ஒற்றுமை கோட்பாடு, (2) இயற்கைச் சூழலியல் உறவு மற்றும் சமூகப் பொருளாதார இயக்கவியலின் வரலாற்று விதிகளுக்கு இடையேயான தொடர்பை மையமாகக் கொண்ட வளர்சிதை மாற்றக் கோட்பாடு, (3) சமூகப் பொருளாதார உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இணக்கத்தன்மையை வலியுறுத்தும் விரிவான உற்பத்திக் கோட்பாடு, (4) பொருளாதார உற்பத்தி சக்திகள் மற்றும் இயற்கை உற்பத்தி சக்திகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் பொதுவான உற்பத்தி சக்திகளின் கோட்பாடு, (5) சமூகப் பொருளாதார சுழற்சிகளுக்கும் இயற்கையான சூழலியல் சுழற்சிகளுக்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்தும் பொருளியல் சுழற்சிகளின் கோட்பாடு, (6) சமூகப் பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் ரீதியான நிலையான வளர்ச்சியுடன் ஒருங்கிணைப்பதனை வலியுறுத்தும் நிலை வளர்ச்சிக் கோட்பாடு; மற்றும் (7) பொருளியல், அரசியல், கலாச்சார-நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழலியல் நாகரிகங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பரிந்துரைக்கும் ஒரு விரிவான நாகரிகக் கோட்பாடு என அனைத்தும் அடங்கும்.
”நிலை மறுப்பின் நிலை மறுப்பினை”அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது அணுகுமுறை
இரண்டாவது அணுகுமுறை ஒற்றுமை, அந்நியமாதல், மற்றும் மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையேயான நல்லிணக்கம் ஆகியவை குறித்து ”நிலை மறுப்பின் நிலை மறுப்பினை” அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. இந்த முன்னோக்குப் பார்வை மார்க்சிய சூழலியலை மூன்று தனித்தனி கூறுகளாக வரையறுக்கிறது: (1) மனிதத்தன்மையாக்கப்பட்ட இயற்கை குறித்த பார்வை, மனிதத்தன்மைக்கும் இயற்கைக்குமான ஒற்றுமையை வலியுறுத்துகிறது; (2) முதலாளித்துவம் குறித்த திறனாய்வு மனித நேயத்திற்கும் இயற்கைக்கும் இடையே உள்ள அந்நியமயமாதலை மையப்படுத்துகிறது; (3) கம்யூனிஸ்ட் புரட்சி குறித்த அறிவார்ந்த அணுகுமுறை, மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தை பிரதானப்படுத்துகிறது.
முதற்கூறைப் பொறுத்தவரை, மனிதத்தன்மையுடன் கூடிய இயற்கையின் மார்க்சியக் கண்ணோட்டம், மனித நடைமுறையால் வடிவமைக்கப்பட்ட ஒரு பொருளாக இயற்கையை கருதுகிறது. இதன் மூலம் மனிதநேயம், இயற்கை மற்றும் சமூகம் ஆகிய மூன்றையும் ஒன்றோடொன்றிணைந்த ஒற்றுமையுடையதாகக் கருதுகிறது. இருந்தபோதிலும், சமூக உற்பத்தி முறையானது மனிதத்தன்மையுடன் கூடிய இயற்கையின் பிரத்தியேகக் கட்டமைப்பு மற்றும் வரலாற்றுப் பாதையைத் தீர்மானிக்கிறது. இரண்டாவது கூறைப் பொறுத்த வரையில், நவீன சமூகத்தில், மூலதனத்தின் லாப நோக்குக் கோட்பாடு சமூக உற்பத்தியை உழைப்பு மற்றும் இயற்கை வளங்களை அபகரிப்பதாக மாற்றுவதால், மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையே ஒரு முரண் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இறுதிக்கூறு, மார்க்சிய கம்யூனிசப் புரட்சியின் கண்ணோட்டத்தில், மனிதநேயம் மற்றும் இயற்கையின் மீதான மூலதனத்தின் மேலாதிக்கத்தை அகற்றுவதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது, அவற்றுக்கிடையே உள்ள முரண்பாடுகள் மற்றும் மோதல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
தத்துவத்துடன் கூடிய நடைமுறையை (praxis) மையப் பொருளாகக் கொண்ட மூன்றாவது அணுகுமுறை
மூன்றாவது அணுகுமுறை, தத்துவத்துடன் கூடிய நடைமுறையை (praxis) அதன் மையப் பொருளாக வைக்கிறது. எனவே, மனிதனின் நடைமுறை நடவடிக்கைகள் மட்டுமல்லாது, அவற்றின் கூடவே உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள், பொருளாதார அடிப்படை மற்றும் மேற்கட்டுமானம் ஆகியவற்றை இணைக்கக்கூடிய ஒரு கட்டமைப்பு, மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான இணைப்புகள்-தொடர்புகள், மனிதகுலத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான இணைப்புகள்-தொடர்புகள் மற்றும் மனிதர்களிடையேயான இணைப்புகள்-தொடர்புகளை உள்ளடக்கிய ஓர் அடிப்படை கட்டமைப்பினை உருவாக்குகிறது.
சோசலிச சுற்றுச்சூழல் நாகரிக தத்துவார்த்தக் கோட்பாட்டின் கட்டுமானம்
சோசலிசச் சூழலியல் நாகரிகத் தத்துவக் கோட்பாடு சீன மார்க்சிய சூழலியலின் ஒரு பிரத்தியேகமான விளைபொருளாக தனித்து நிற்கிறது. இதன் பிரதான கவனம் சீனாவின் சோசலிசச் சுற்றுச்சூழல் நாகரிகத்தின் முன்னேற்றத்திலும், சோசலிசச் சுற்றுச்சூழல் நாகரிகத்தின் தத்துவார்த்த தாக்கங்கள் மற்றும் அதன் மார்க்சிய அடித்தளங்களை விளக்குவதிலும் உள்ளது. இந்த அணுகுமுறை, சுற்றுச்சூழல் சவால்களை திறம்பட எதிர்கொள்வதில் சோசலிசக் கொள்கைகள், அமைப்புகள் மற்றும் சித்தாந்தங்களின் அவசியத்தையும் மேன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சுற்றுச்சூழல் நாகரிகம் என்ற கருத்துருவை மக்களுக்கான வளர்ச்சியின் விரிவான தேவைகளைப் பூர்த்தி செய்யும் குறிக்கோளுடன் உருவாக்க வேண்டும். அவர்கள் சீனாவின் சோசலிச நவீனமயமாக்கலின் பின்னணியில், சோசலிச கட்டமைப்பிற்குள் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை வடிவமைப்பது; பொருளியல் நாகரிகத்திற்கும் ஆன்மீக நாகரிகத்திற்கும் இடையிலான தொடர்புகளின் பின்னணியில் சுற்றுச்சூழல் நாகரிகத்தை உருவாக்குவது என சீன அறிஞர்கள் கூறுகின்றனர்.
சோசலிசச் சுற்றுச்சூழல் நாகரிகத்தின் தத்துவார்த்தப் புரிதலுக்கான அடிப்படை முன்மொழிவு
அடிப்படை முன்மொழிவு கூற்றுகளில் மிக முக்கியமான ஒன்று “தெளிவான நீர் மற்றும் பசுமையான மலைகள் ஆகியவை விலைமதிப்பற்ற சொத்துக்கள்” என்ற கருத்தில் உறைந்துள்ளது. இந்த முன்மொழிவின் முழு அறிக்கை 2013இல் சீனாவால் வெளியிடப்பட்டது “நாங்கள் தங்க மலைகள் மட்டுமல்ல, பச்சை மலைகளையும் கொண்டிருக்க விரும்புகிறோம். இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், நாம் தங்கத்தை விட பச்சை நிறத்தையே விரும்புவோம். எப்படி ஆயினும், பச்சை மலைகள் தங்க மலைகள் தான். ” சீன கல்விச் சமூகம் இந்த பத்தியில் சொல்லப்பட்டுள்ளது குறித்து தத்துவார்த்த ஆராய்ச்சியை நடத்தியது. மேலும் இந்த அறிக்கை, சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் மிக முக்கியமான அறிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அடிப்படையான யோசனை தெளிவானது மற்றும் அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் எளிதில் பரப்பப்படக்கூடியது என்பதால், இது பெரிய அளவில் நடைமுறை விளைவுகளை உருவாக்குகிறது. சோசலிசச் சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாட்டில், “தெளிவான நீர் மற்றும் பசுமையான மலைகள் ஆகியவை விலைமதிப்பற்ற சொத்துக்கள்” என்ற கருத்து மூன்று அடிப்படைக் கண்ணோட்டங்களை உள்ளடக்கியது.
முதலாவதாக, மனிதநேயம் மற்றும் இயற்கையின் இணக்கமான சகவாழ்வில் சுற்றுச்சூழல் முதன்மையின் கொள்கையை இந்த முன்மொழிவு உயர்த்திப் பிடிக்கிறது. மனித நடவடிக்கைகள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் வரம்புகளை மீறக்கூடாது என்று இந்த கொள்கை கட்டளையிடுகிறது. அதற்கு பதிலாக, இயற்கையை மீட்டெடுக்க மனிதர்கள் போதுமான இடம், இடைவெளி, கால அவகாசத்தையும் கொடுக்க வேண்டும். ஏனெனில் இயற்கையின் மீது ஏற்படும் எந்தத் தீங்கும் இறுதியில் மனிதர்களிடமே திரும்பும்.
இரண்டாவதாக, பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான உறவில் இயக்கவியல் முன்னோக்கு அம்சத்தை பின்பற்றுகிறது. பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஒன்றையொன்று வலுப்படுத்தும் வகையிலான ஆரோக்கியமான உறவுக்கு இது பரிந்துரைக்கிறது. இந்த உறவுக்கு புதுமையான வளர்ச்சி மாதிரிகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் தேவை. நவீனமயமாக்கல் செயல்முறையின் நடுத்தர மற்றும் பிற்பகுதியில் உள்ள சமகால சீனாவிற்கு இது மிகவும் முக்கியமானது.
மூன்றாவதாக, இயற்கை செல்வத்தை பொருளாதார மற்றும் சமூகத்தின் வளமையாக அறிவியல் மற்றும் பகுத்தறிவுடன் மாற்று வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. ஒரு நல்ல சூழலியல் சூழல் என்பது மனிதகுலத்தின் கூட்டுச் சொத்து என்பதை அது ஒப்புக்கொள்கிறது. மேலும் இயற்கை செல்வம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பொருத்தமான நிலைமைகளின் கீழ் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அது பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த வகையில், இயற்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் மாற்றத்திற்கான அறிவியல் பாதையை அடையாளம் காண்பது முக்கியமானது. எனவே, “தெளிவான நீர் மற்றும் செழிப்பான மலைகள் விலைமதிப்பற்ற சொத்துக்கள்” என்ற தத்துவத்தை செயல்படுத்துவதன் சாராம்சம், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பசுமை மேம்பாடு மற்றும் மக்களின் நலன்கள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் நவீனமயமாக்கல் பாதையை வளர்ப்பதற்கான உற்பத்தி மாதிரி மற்றும் வாழ்க்கை முறையின் சுற்றுச்சூழல் மாற்றத்தில் உள்ளது. அதன் மூலம் சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகத்தால் வகைப்படுத்தப்படும் எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்துவதை வலியுறுத்துகிறது.
சீனப் பாதையின் சவால்கள்
சவால்களில் முதன்மையானது, ஒழுங்குமுறை எல்லைகளால் முன்வைக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆகும். சீனாவில் மார்க்சியக் கோட்பாட்டின் கீழ் நிறுவப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டமைப்பிற்குள், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் சூழலியல் கோட்பாடுகள், சூழலியல் மார்க்சியம் மற்றும் சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாடு ஆகியவை தனித்துவமான துணைப்பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன;
அதாவது, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், சீனா அல்லாத பிற வெளிநாடுகளின் மார்க்சியம் பற்றிய ஆய்வுகள் மற்றும் சீனச் சூழலில் மார்க்சியம் என முறையே வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது மார்க்சிய சூழலியல் பற்றிய முழுமையான புரிதல் மற்றும் விரிவான ஆராய்ச்சியை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்துவதோடு, கிளாசிக்கல் மார்க்சிய நூல்கள், உலகளாவிய கல்வி எல்லைகள் மற்றும் பூர்வீக சீன தத்துவார்த்த ஆய்வுகள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைந்த தொடர்புகளில் முன்னேற்றமடைவதைத் தடுக்கிறது.
இரண்டாவது சவால், உரை விளக்க முறைகளை அதிகமாக சார்ந்திருப்பதில் உள்ளது. பரந்த சுற்றுச்சூழல் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பற்றிய அறிவு மற்றும் வழிமுறைகளின் புரிதல், மற்றும் அவற்றின் பயன்பாட்டு முறை இல்லாததால், தற்போதைய சீன மார்க்சிய சூழலியல் ஆராய்ச்சி பெரும்பாலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் சுற்றுச்சூழல் மார்க்சிய அறிஞர்களின் கருத்துக்களை பொதுமைப்படுத்துதல், அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் பற்றிய அரசாங்க ஆவணங்கள் குறித்துத் திரும்பத் திரும்பக் கூறுவதாக உள்ளது.
இதன் விளைவாக, தற்போதுள்ள கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளின் தர்க்கரீதியான நியாயத்தன்மை மற்றும் நடைமுறைக்குப் பொருந்தக்கூடிய தன்மை பற்றிய முழுமையானதொரு பகுப்பாய்வை அடைவது கடினமாகிறது. மேலும் தனித்துவமான நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் முறைகளை உருவாக்குவது இன்னும் சவாலாகிறது.
மூன்றாவது சவால், நிஜ உலக சுற்றுச்சூழல் மாற்றங்களிலிருந்து உருவாகிறது. சீனா மோசமடைந்து வரும் சர்வதேச சுற்றுச்சூழல் நிலைமைகளை எதிர்கொள்வதால், கருத்தியல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் அறிவு அமைப்புகளின் சுதந்திரத்தை வலுப்படுத்துதல் ஆகியவை சீனக் கல்வி ஆராய்ச்சியில் முக்கியமான கவலைகளாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், பொதுக் கோட்பாட்டு ஆராய்ச்சிக்கும் விமர்சனங்களின் பிரதிபலிப்பால் எழும் மதிப்புகளுக்கும் இடையேயான உறவினை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது குறித்தும், அரசியல் சொற்பொழிவின் விளக்கத்தை, கல்விச் சொற்பொழிவின் உருவாக்கமாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும், சீன அறிஞர்கள் கவனமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
சோசலிசச் சுற்றுச்சூழல் நாகரிகத்தின் வளர்ச்சியில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் அசல் யோசனைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்க விரும்பும் சமகால சீன மார்க்சிய சூழலியல் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான, சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கான தைரியமும் ஞானமும் தேவைப்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
