
சோழர் காலம், யாருடைய பொற்காலம்?
வரலாற்று ஆய்வாளர் க.அ. மணிக்குமார்
சோழர் காலம் பற்றிய வரலாற்று தரவுகள் பல்வேறு விதமாக விளக்கப்பட்டு வரும் சூழலில், வரலாற்று ஆய்வாளர் கா.அ.மணிக்குமார், தரவுகளின் அடிப்படையிலான கட்டுரையை பிபிசி தமிழ் இணையத்தில் எழுதியிருந்தார். அந்த அம்சங்களை மேலும் மார்க்சிய வரலாற்றுப் பார்வையில் விளக்கும்படி சில கேள்விகளை மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு முன்வைத்தது. அதற்கான பதில்கள் பின்வருமாறு.
1. சோழப் பேரரசு நிறுவப்பட்டது எவ்வாறு?
பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த சிற்றரசர்களில், சோழர்களும் அடங்குவர். பல்லவ மன்னர்கள் தொடர்ந்து போர்களில் ஈடுபட வேண்டியிருந்தது. சாளுக்கிய, ராஷ்டிரகூட, பாண்டிய நாடுகளோடு மோதினர். தொடர் போர்களாலும், பிற்காலப் பல்லவ மன்னர்கள், அதற்கான வல்லமை பெற்றிராததாலும், பலவீனமடைந்தனர். அதைப் பயன்படுத்தி பல சிற்றரசுகள் கூட அடிபணிய மறுத்து, கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியதால், பல்லவர் வீழ்ச்சியுறுதல் தவிர்க்க முடியாததாயிற்று.
சிற்றரசர்களாக இருந்தவர்களுள் சோழர்கள், செழிப்புமிக்க காவேரிப் பள்ளத்தாக்குப் பகுதிகளை, குறிப்பாக பஞ்சு வியாபார மையமாக விளங்கிய உறையூரை, தங்கள் வசம் வைத்திருந்ததால், அவர்களின் அரசு பன்னாட்டு வணிகத்தின் மூலம் செல்வ வளம் மிக்கதாக விளங்கியது. இதனால், அது இராணுவத்திற்கு அதிகம் செலவழித்து, வலிமைமிக்க அரசாக விளங்க முடிந்தது. சோழ வம்சத்தைச் சேர்ந்த முதலாம் ஆதித்தன், பல்லவ மன்னர் முதலாம் அபராஜித வர்மனைத் தோற்கடித்துச் சோழப் பேரரசை நிறுவினார்.
2. அன்றைய ஆளும் வர்க்கங்கள் யாவை? சோழர்களின் அரசுக்கும் பெருநிலவுடைமையாளர்களுக்கும் இடையே ஒத்திசைவு மற்றும் முரண்பாடு எவ்வாறு இருந்தது?
சோழ மன்னர்கள் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவரை சூத்திரர்களாகக் கருதப்பட்ட வேளாளர்கள், சத்திரியர்களாக அங்கீகாரம் பெற, நீர்ப்பாசன வசதிகள் கொண்ட இடங்களில் இருந்த நிலங்களை, பிராமணர்களுக்கு தானமாக வழங்கினர். வரலாற்றறிஞர் M.G.S. நாராயணன் கூறுவது போல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ‘கலாச்சார தூதுவர்களாக’ அவர்களை அனுப்பி, இறுக்கமானதொரு வர்ணாஸ்ரம தர்ம சமூக அமைப்பைச் சோழ மன்னர்கள் உருவாக்கினர். பன்னாட்டு வர்த்தகத்திற்கு மன்னர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், வணிகர்களும் மன்னருக்குத் தாராளமாக நிதி உதவியளித்து, இக்கூட்டில் இணைந்தனர். இந்தப் பிராமண-வேளாள-பெருநிலவுடைமையாளர்-பெரும் வணிகர் ஒருங்கிணைந்து ஆதிக்கம் செலுத்திய, ஒரு சமூகக் கட்டமைப்பு, ஒரு நிலையான ஆட்சிக்கு வழிவகுத்தது. உள்ளாட்சி நிர்வாகமும் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இவர்களுக்கிடையே எத்தகைய முரண்பாடும் இல்லாத சமுதாயத்தில், சமூக-பொருளாதார கீழ்நிலையில் அவல நிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது போயிற்று.
3. சோழர்களின் நிர்வாக அமைப்பு எப்படியிருந்தது?
ஊர், நாடு, நகரம் மற்றும் பிரம்மதேயம் ஆகியவற்றுடன் மன்னர் நில உடைமை உறவுகளைக் கொண்டிருந்தார். ஊர் என்பது பிரம்மதேயம் அல்லாத கிராமங்களின் நிர்வாக அமைப்பாகும். கிராமத்தின் சார்பாக இறை (வரி) செலுத்துவதற்குப் பொறுப்பாகும். சில கல்வெட்டுகளில் காணப்படும் ‘ஊர் உழுதுகொண்டு‘ என்ற சொற்றொடர், உள்ளூர் மக்களால் ஊர் நிலம் பயிரிடப்பட்டதைக் குறிக்கிறது. சிலரின் சேவைகளுக்கான ஊதியத்திற்காக வழங்கப்பட்ட நிலம், வெளியூர் விவசாயத் தொழிலாளர்களால் பயிரிடப்பட்டது. நோபுரு கரஷிமா ஆய்வு செய்த சோழமண்டலத்தில் உள்ள அல்லூரில், ஊர் மக்கள் பொதுவாக வைத்திருந்த நிலம் அவர்களால் பயிரிடப்பட்டது; அதே நேரத்தில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், ஜோதிடர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் ஊதியத்திற்காக வழங்கப்பட்ட நிலங்கள், வெளியூர் மக்களால் குத்தகைக்குப் பயிரிடப்பட்டன. இந்த விவசாயக் குத்தகைதாரர்கள் புறக்குடி என அழைக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிரந்தரக் குத்தகைதாரர்கள் அல்ல; அவர்களை எந்த நேரத்திலும் நிலத்திலிருந்து நீக்க முடியும்.
நாடு என்பது ஒப்பீட்டளவில் பெரிய மக்கள் தொகை, கணிசமான செல்வம், பன்முகத்தன்மை கொண்ட குடியிருப்புகளில் வாழும் பல்வேறு சமூகக் குழுக்களைக் கொண்ட ஒரு இடமாகும். ஆனால், Y. சுப்பராயுலுவின் கருத்துப்படி, நாடு என்பது விவசாயக் குடியிருப்பு ஆகும். சமூகத்தினரால் உருவாக்கப்பட்டதொரு விவசாயப் பகுதி, ஒவ்வொன்றும் திருமணம் மற்றும் இரத்த உறவால் இணைக்கப்பட்ட வேளாண்குழுவைக் கொண்டிருந்தது. ஒரு நாடு என்பது ஒரு விவசாயப் பகுதியைக் குறிக்கிறது என்பது மட்டும் உறுதியாகிறது. ஏராளமான கல்வெட்டுகளில் நாட்டார் எனக் குறிப்பிடப்படுவோர், அப்பகுதியின் ஆதிக்க வேளாண் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மன்னரால் நிலக்கொடை வழங்கப்பட்டபோது, அரசாணையைப் பெற்றவர்கள் அவர்கள். நாட்டார், அந்த வட்டாரத்தில் நிலங்களை வகைப்படுத்திப் பதிவு செய்தனர். அவர்கள் நிலங்களைக் கட்டுப்படுத்தினர். நீர்ப்பாசனக் குளங்களைச் சார்ந்திருந்த நிலங்களின் முழு உற்பத்தித் திறனைப் பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் இருந்தது.
சோழ மன்னன் பராந்தகனின் கல்வெட்டுகள் ஒன்றில், ஆறு வகை நிலங்கள் குறிப்பிடப்பட்டன. அனைத்து நெல் வயல்களும் நீர்-நிலம்/ நன்செய் என வகைப்படுத்தப்பட்டன. வறண்ட நிலம் புன்செய் என்று குறிப்பிடப்பட்டது. இவை நெல் அல்லாமல் இதர தானியங்கள் விளைந்த நிலங்களாகும். மூன்றாவது வகை தோட்ட நிலமாகும். நான்காவது வகை களர்-நிலம் (உப்பு நிலம்) ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று, கால்நடைகளைப் பராமரிப்பதற்கான நிலங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. பின்னால் மேய்ச்சல் நிலம் என இது அழைக்கப்பட்டது. தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது வகை நிலம் தரிசு.
4. ஊர்/நாடு அளவில் தன்னாட்சி எவ்வாறு நிலவியது? ஜனநாயக அம்சங்கள் இருந்தனவா?
பெரும்பாலும் மெய்க்கீர்த்தி சாசனங்களிலிருந்தும், மகாசபை கல்வெட்டுகளிலிருந்தும் நாம் அறிவது, அனைத்தும் மன்னர்களைப் பற்றியும் மேல்தட்டு மக்களைப் பற்றியுமே ஆகும். இருப்பினும், சிலவற்றில் குறிப்பிடப்படும் விவரங்கள், அக்கால அடக்குமுறையிலான சுரண்டல் சமூகத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு இதற்கு ஒரு உதாரணம். குடவோலை முறையில் மகாசபைக்கும், அதன் பல்வேறு வாரியங்களுக்கும், ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதாக அது தெரிவிக்கிறது. ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட, வாக்களிக்க, நிர்ணயிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நாம் படிக்கும்போது, உண்மை நிலை நமக்குப் புரிகிறது. சொத்துரிமை கொண்ட, வேதங்களைக் கற்றறிந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியும். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது; தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆக, பெரும்பான்மையான மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவோ அல்லது தங்கள் கருத்துகளைக் கூறவோ உரிமை இல்லை.
சோழர் ஆட்சிக் காலத்தில் சுயசார்புகொண்ட கிராமங்கள் இருந்தன என்று சொல்லலாமே தவிர, உண்மையான தன்னாட்சி அல்லது ஜனநாயக உள்ளாட்சி நிர்வாகம் அங்கு செயல்பட்டது என்று சொல்ல முடியாது.
5. ஒட்டுமொத்த நிலஉடைமை முறை, அதில் உற்பத்தி மற்றும் விநியோகம் எவ்வாறு அமைந்திருந்தது? சோழர் ஆட்சிக் காலத்தில் நிலக்கொடைகள் எவ்வாறு வழங்கப்பட்டன? அதனால் பலனடைந்தவர்கள் யார்?
சோழர் கால நிலவுடைமை முறையை விளக்குவதன் மூலம், அக்கால நில நிர்வாக, நில வினியோக முறையினால் யார் பயனடைந்தார்கள் என்பது புரியும். கல்வெட்டுகளில் காணப்படும் சபா-மஞ்சிகம், ஊர்மஞ்சிகம் மற்றும் ஊர்ப்பொது ஆகிய சொற்கள் சோழர் காலத்தில் கூட்டு நில உடைமையைக் குறிக்கின்றன. ஜீவிதா, போகா, காம் போன்ற சொற்கள் குத்தகை வகை நிலங்களைக் குறிக்கின்றன. பிரம்மதேயம், தேவதானம் ஆகியவை பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானமாக வழங்கப்பட்ட நிலங்களைக் குறிக்கின்றன. அவசர காலங்களில் அரசர் வேண்டும்போது சேவைக்குத் தயாராக இருந்த, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களைப் பராமரிப்பதற்காக, நிலப்பிரபுக்கள், இராணுவத் தலைவர்களுக்கான ஊதியத்திற்கு மாற்றாக (படைபற்று) நிலங்கள் ஒதுக்கப்பட்டன. பிரம்மதேயமும் தேவதானமும் அரசுக்கும் உழுபவருக்கும் இடையில் ஒரு இடைநிலை அமைப்பு உருவாக வழிவகுத்தது.
குடிநீக்கி வகை பிரம்மதேயத்தில், விவசாயி அல்லாத நில உரிமையாளர்களான பிராமணர்கள், தங்கள் குத்தகைதாரர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் கொண்டு வர வேண்டியிருந்தது. வழக்கமாக, ஒரு பிரம்மதேய நிலம் பல பங்குதாரர்களைக் கொண்டிருந்தது. ஆனால் ஏகபோக பிரம்மதேயம், ஒரு தனிநபருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருந்தது. தேவதானம் என்றழைக்கப்பட்ட கோயில் நிலங்கள், கிராம சபை மற்றும் அரசால் நிர்வகிக்கப்பட்டன. தரிசு நிலங்களும், வன நிலங்களும் பெயரளவு வருடாந்திர வாடகையில் கோயில்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலங்களைச் சுத்தம் செய்தல், சமன் செய்தல், நீர்ப்பாசனம் வழங்குதல் ஆகியவை குத்தகை நிபந்தனைகளாக இருந்தன. குத்தகைதாரர் செய்ய வேண்டிய சேவைகளின் தன்மையைக் கோயில்கள் நிர்ணயித்தன. கோயில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்குதல், வழிபாடு நடத்துதல், கோயிலைக் கண்காணித்தல் போன்ற வடிவங்களில் இந்த நிபந்தனைகள் இருந்தன. கோயில் நிலக் குத்தகைதாரர்கள் இதர குத்தகைதாரர்களை விட சாதகமான விதிமுறைகளை அனுபவித்தனர். மன்னரின் முன் அனுமதியின்றி அவர்களை நீக்க முடியாது.
வேளாண் வகை கிராமங்கள் மாநில அரசாங்கத்துடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தன. இந்த வகை நிலத்திற்கு விதிக்கப்படும் வரி அவ்வப்போது திருத்தி அமைக்கப்பட்டது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிராமம் முழுவதிலும் தீர்வை ஒன்றாக இருந்தாலும், தனிப்பட்ட விவசாயிகளுடனான தீர்வையும் நடைமுறையில் இருந்தது. சோழர் காலத்தில் நிலப்பிரபுத்துவத்தின் தோற்றத்தைக் குறிக்கும் உடையான், அரையன், வேலன் மற்றும் ஆழ்வான் போன்ற பட்டங்களைத் தாங்கிய தனிப்பட்ட பெரிய நில உரிமையாளர்களும் இருந்தனர்.
சோழர் காலத்தில் தனிப்பட்ட நில உடைமையும் இருந்தது என்பதற்குப் பல மறைமுகச் சான்றுகள் உள்ளன. கரஷிமா ஆய்வு செய்த ஏழு கிராமங்களில் மூன்றில் பயன்படுத்தப்பட்ட ‘என்னுடைய‘ என்ற சொல், நிலத்தின் உரிமையாளர் அதை விற்பதற்கும் அடமானம் வைப்பதற்கும் உரிமை பெற்றவர் என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது. தந்தையிடமிருந்து அத்தகைய சொத்தை வாரிசுகள் பெறும் உரிமை பெற்றிருந்தனர் என்பதையும் அறிகிறோம். சங்க காலத்தில் கூட, மன்னர்கள் அல்லது தலைவர்கள் சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைப் பறையர்கள் மற்றும் போர்வீரர்களுக்கு நன்கொடையாக வழங்கியதால், நிலத்தில் தனியார் சொத்துடைமை நிலைத்திருந்தது.
சோழர்கள் அறிமுகப்படுத்திய பாசன விவசாயத்தினால் கிடைத்த உபரி, இடைத்தரகர்களான நிலக்கிழார்களுக்கும் அரசுக்கும் சென்றதே தவிர, உழுபவருக்குச் சென்றடையவில்லை. அத்தகைய ஏற்பாட்டால் அன்று ஆரம்பித்த சுரண்டல் இன்றுவரை தொடர்கிறது.
6. விவசாய உற்பத்தி பெருக்கத்திற்காக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? இன்றும் தொடரும் பாசன அமைப்புகள் உள்ளிட்ட கட்டுமானங்களின் மூலம் சோழர்கள் எடுத்த முன்னெடுப்புகள் என்ன?
வேளாண் சமூகத்திலிருந்து வந்தவர்கள் சோழ வம்சத்தினர் என்பதால், விவசாயத்திற்கு அடிப்படைத் தேவையான நீர் ஆதாரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரனால் கட்டப்பட்ட பதினாறு மைல் நீளம், நான்கு மைல் அகலம் கொண்ட “சோழ கங்கம்” ஏரியைக் கண்டு, மனித நாகரிகத்தில் மிகவும் முன்னேறியிருந்த அரபு நாட்டிலிருந்து, 11ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த அறிஞர் அல்பெருனி வியந்தார்.
விவசாய சாகுபடியின் பல்வேறு அம்சங்களை மேற்பார்வையிடும் கிராம சபையின் குழுக்கள் பற்றிப் பல மகாசபைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர் (செங்கல்பட்டில் உள்ள ஒரு பிரம்மதேய கிராமம்) கல்வெட்டு குறிப்பிடும் முக்கியமான குழு ஏரி-வாரியம் ஆகும். காவிரிப்பாக்கம் என்ற மற்றொரு பிராமண கிராமத்தின் கல்வெட்டில், பின்வரும் குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: பயிரிடப்பட்ட நிலங்களை மேற்பார்வையிட கழனி-வாரியம், ஏரி-குளங்களை மேற்பார்வையிட ஏரி-வாரியம், மதகுகளைப் பராமரிப்பதற்குக் கலிங்கு-வாரியம் மற்றும் வயல்களைச் சுற்றியுள்ள பாதைகள், சாலைகளைப் பராமரிக்க தடவழி வாரியம் போன்றவை அவை.
கோவில்கள் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகளாகச் செயல்பட்டன. கோயில்களால் பெறப்பட்ட நன்கொடைகள், உள்ளூர் நில உரிமையாளர்களுக்குக் கடன் வழங்கப் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட அளவு பொருட்களைக் கோயில்களுக்கு வழங்க வேண்டியிருந்தது. கோயில்கள் அடமானங்கள் அடிப்படையிலும் கடன் வழங்கின. கோயிலிலிருந்து பெறப்பட்ட கடனைக் கிராம சபை திருப்பிச் செலுத்தாதபோது, கோயில் அதிகாரிகள் நிலத்தை அபகரிக்கவோ அல்லது கிராமசபைக்குச் சொந்தமான அண்டைக் கிராமத்தின் நிலவருமானத்தில் ஒரு பங்கை இணைக்கவோ உரிமை பெற்றிருந்தனர்.
7. சோழர் ஆட்சிக் காலத்தில் வரிகளின் தன்மை, வசூல் முறை எவ்வாறு இருந்தது?
கிடைக்கக்கூடிய அனைத்துப் புள்ளிவிவரங்களும், வருவாயில் மிக அதிகமான விகிதம் அரசு வருவாயாகக் கோரப்பட்டதைக் குறிக்கின்றன. சோழர்கள் கைப்பற்றிய பிரதேசங்களில் ஒன்றான ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில், வறண்ட நிலங்களுக்கு மேல்வாரம் 1/5 ஆகவும், குளப் பாசன நிலங்களுக்கு மேல்வாரம் 1/3 ஆகவும் வசூலிக்கப்பட்டது. வரி விகிதம் அனைத்து இடங்களிலும் சீராக இருக்கவில்லை.
கராஷிமா நடத்திய ஒரு கணக்கெடுப்பில், நெல்லுக்கான வரி மதிப்பீடு செய்யப்பட்ட பகுதிகளில், ஒரு வேலிக்கு (6 ஏக்கர்) எழுபத்தேழு கலம் முதல் நூறு கலம் வரை (ஒரு கலம் = 1.35 கிலோ) என விகிதம் வேறுபடுகிறது. மிகக் குறைந்த அளவைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், அரசுக்குச் செலுத்த வேண்டிய நில வரி விகிதம் 2/5 ஆகக் கணக்கிடப்படுகிறது. இது ஆங்கிலேயர்கள் விதித்ததை விட அதிகம். இருப்பினும், சோழ ஆட்சியாளர்களால் நிரந்தர நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்பட்டதால், நில உடைமையாளர்களால் வரிவிதிப்புக் கடுமையாக உணரப்படவில்லை என வாதிடப்படுகிறது. ஆனால் அவர்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் மிகக் குறைவு என்பதையும் நாம் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
8. விவசாயக் கருவிகள், போர்க்கருவிகள் உற்பத்தி முறை எப்படியிருந்தது? அதில் ஈடுபட்ட கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை எவ்வாறு இருந்தது?
விவசாயத்திற்கான கருவிகள், வாள், ஈட்டி, வில், அம்பு போன்ற போர்க்கருவிகள் தயார் செய்த கருமான், தச்சர் தவிர, பொற்கொல்லர், செம்பு வேலைப்பாட்டுக் கைவினைஞர்கள் இருந்தனர். கம்மாளர், விஸ்வகர்மா சமூகம் என இவர்கள் பொதுவாக அறியப்பட்டனர். இது தவிர நெசவாளர்கள் இருந்தனர். இவர்களில் தலைசிறந்த கைவினைஞர்கள் அரசரின் ஆதரவைப் பெற்றுச் சிறப்பு அந்தஸ்துடன் விளங்கினர். ஆனால் கிராமப்புறங்களில் வாழ்ந்த கைவினைஞர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே இருந்தது.
9. சோழர் ஆட்சிக் காலத்தில் வர்ண/சாதி அமைப்பு எவ்வாறு செயல்பட்டது? அது வலுவடைந்ததா? அடிமை முறை எவ்வாறு செயல்பட்டது?
வர்ணாஸ்ரம தர்மம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமூகத்தை ஏற்கனவே பல்லவ மன்னர்கள் உருவாக்கத் தொடங்கியிருந்தனர். சோழர் ஆட்சியில் அது மேலும் வலுவானது. சோழ மன்னர்கள் பிராமணர்களுக்குச் செழிப்பான நிலங்களை வழங்கினர்; கலாச்சார தூதுவர்களாகப் பயன்படுத்தினர். சோழர்கள் மாபெரும் கோயில்களைக் கட்டினார்கள் எனப் பெருமைப்படுகிறோம். ஆனால் அக்கோவில்களுக்குள் சூத்திரர்களாக முத்திரை குத்தப்பட்ட உழைப்பாளர்களில் பெரும்பகுதியினர் நுழைய முடியாது.
சோழர் ஆட்சிக் காலத்தில் வெறுக்கத்தக்க அடிமை முறை இருந்தது. அன்பளிப்பு, விலைக்கு விற்றல், தேவரடியார் என்ற பெயர்களில் அம்முறை பின்பற்றப்பட்டது. வீட்டு வேலைக்காரர்களாகவும், வயலில் வேலை செய்யவும், அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். தேவேந்திர வேளாளர்களும் (பள்ளர்) ஆதித் திராவிடர்களும் (பறையர்) பத்தாம் நூற்றாண்டிலேயே அடிமைகளாக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர் எம்மா மேயர் கூறுகிறார்.
புதுச்சேரி திருமூலநாதர் கோவில் கல்வெட்டு ஒன்றில் “தீண்டாதாரொழிய நீக்கி நின்றாரில் பத்து வயசுக்கு மேல் எண்பது வயசுக்குக் கீழ்ப்பட்டாரை முதலெடுத்து” என்ற வாசகம் காணப்படுவதாக, கல்வெட்டு ஆய்வாளர் G. விஜய வேணுகோபால் தனது நூலில் குறிப்பிடுவதை, நாங்குநேரி சாதி வன்கொடுமை பற்றி விசாரிப்பதற்காக ஒரு நபர் ஆணையராக நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு தனது அறிக்கையில் மேற்கோள் காட்டுகிறார். ராஜேந்திர சோழர் காலத்து இக்கல்வெட்டு, அப்போதே தீண்டாமை நடைமுறையில் இருந்ததை உறுதி செய்கிறது.
10. சோழர் ஆட்சிக் காலத்தில் மதங்களின் நிலை என்னவாக இருந்தது?
அரசு உருவாகும்போது சமயக் கொள்கையின் தேவையைச் சோழர்கள் அறிந்திருந்தனர். பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் நன்கொடை வழங்குவதன் மூலம், அரசர் தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்டுவார் என மக்கள் நம்புவார்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஆட்சி செய்தார்கள்.
சோழ மன்னர்கள் சைவர்களாக இருந்தாலும், விஷ்ணு கோயில்கள் கட்டுவதற்கும் உதவினார்கள். சமய சகிப்புத் தன்மையைக் கடைபிடித்தனர். சமணர்களும் பௌத்தர்களும் எவ்வித தொல்லைகளுக்கும் ஆளாகாமல் வாழ முடிந்தது. ஆனால் இடைக்கால மன்னர்களைப் போன்றே, எங்கெல்லாம் தங்கள் பேரரசின் ஆட்சிக்கு எதிர்ப்பு இருந்ததோ, அங்கு அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்து, தங்களது சமய வழிபாட்டுத் தலங்களைக் கட்டினர். நாகப்பட்டினத்தில், ஸ்ரீவிஜய அரசன் விஜயத்துங்க வர்மன் வியாபாரத்திற்காக அத்துறைமுகத்திற்குச் செல்லும் தனது நாட்டு மக்கள் வழிபடக் கட்டியதுதான் சூடாமணி விகாரம். இந்தப் பௌத்த விகாரத்தைப் பேணிப் பாதுகாக்க, 97 வேலி நிலங்கள் அடங்கிய 26 கிராமங்கள், தானமாக இராஜராஜ சோழனால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதே ராஜராஜன், இலங்கைமீது படையெடுத்த போது, பௌத்த விகாரங்களை இடித்து, அவ்விடங்களில் சிவன் கோவில்கள் கட்டினார்.
11. சோழர் காலத்தில் அரச குடும்பம் முதல் சாமானியர் வரை பெண்களின் சமூக அந்தஸ்து எவ்வாறு இருந்தது?
அக்காலத்தில் லோக மகாதேவி (சாளுக்கிய இளவரசி), செம்பியன் மகாதேவி (உத்தம சோழனின் அன்னை) போன்ற அரசகுலப் பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது, சமயம், கோவில் சம்பந்தப்பட்டவைகளில் மட்டுமே. மற்றபடி, உத்திரமேரூர் கல்வெட்டுக்களில் காணப்படும் சான்றுகள் மூலம், சோழர் காலத்தில் ஆணாதிக்கச் சமுதாயமே நிலவியது என்பதை அறியலாம். பெண்கள் நிலை தாழ்ந்திருந்தது என்பதற்கு மற்றொரு உதாரணம் கோவில்களில் இருந்த தேவதாசி முறை ஆகும்.
12. மொழி வளர்ச்சியில் சோழர் ஆட்சிக் காலத்தின் பங்களிப்புகள் என்ன?
பக்தி இயக்கத்தின் காரணமாகத் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைந்தது. இரண்டாம் குலோத்துங்கன் அரசவையில் அமைச்சராக இருந்த சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணம், நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் அடங்கிய தேவாரம், விஷ்ணு பக்தர்களான ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தம், திருத்தக்கதேவரின் சமண இலக்கியமான சீவக சிந்தாமணி, கவிஞர் கம்பன் எழுதிய கம்ப ராமாயணம் போன்றவை குறிப்பிடத்தக்க புகழ் பெற்ற சோழர் கால இலக்கியங்களாகும். போரின் மூலமும், பன்னாட்டு வணிகத்தின் மூலமும், கடல் கடந்த நாடுகளில் தமிழர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டதால், தமிழ் மொழி வெளிநாடுகளிலும் பரவியது.
13. சோழப் பேரரசு வீழ்ச்சிக்கான காரணிகள் என்ன? (பொருளாதார, சமூக, அரசியல் கோணங்களில்)
700 ஆண்டுகள் நீடித்த சோழர் ஆட்சி, முதலாம் ராஜேந்திரனுக்குப் பின் வந்த திறமையற்ற மன்னர்களால் நிர்வாக, இராணுவ ரீதியாகப் பலவீனம் அடைந்தது. சோழர் இராணுவம், கூலிப்படையை (வேளைக்கார வீரர்கள்) நம்பியே இருந்தது. எனவே வாரிசுச் சண்டைகள், அண்டை நாட்டு மன்னர்களின் (பாண்டியர், கொய்சாளர்-துவாரசமுத்திரம், காகத்தியர்-வாரங்கல்) படையெடுப்புகள் எனத் தொடர் அச்சுறுத்தல்களின் போது, எதிரிகளின் பக்கம் சேர்ந்து, அரசியல் குழப்பத்தை விளைவிக்க முடிந்தது. பாண்டியர்கள் முழுமையாகத் தோற்கடிக்கப்படவில்லை. சேர மன்னர்களுடன் அவர்கள் இணைந்து, சோழர்களுக்குத் தொடர்ந்து பதற்றத்தைக் கொடுத்து வந்தனர்.
சோழர்களின் இந்தியாவின் தெற்கு, கிழக்கு நோக்கிய படையெடுப்புகள், இலங்கை, மலாக்கா, ஸ்ரீ விஜயா ஆகிய வெளிநாடுகளின் படையெடுப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே நடந்தன. அனுராதபுரத்தில் பௌத்த விகாரங்கள் தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அது பௌத்த மதத்தின் தலைமையிடம் என்பதால், செல்வம் அங்குக் குவிந்திருந்தது. அங்கிருந்துதான், இதர பௌத்த விகாரங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டது.
சோழர் ஆதிக்கம் இலங்கையில் அகற்றப்பட்டதால், சோழ பேரரசுக்கு வந்த வருமானம் நின்றது. மாபெரும் இராணுவத்தைப் பராமரிப்பது சிக்கலானது. அதனால், ஏற்கனவே பலவீனமடைந்திருந்த அரசைத் தக்க வைக்க முடியாததாயிற்று. சோழப் பேரரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், சோழ மன்னர் மூன்றாம் ராஜேந்திரனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை (1279) மீட்டார்.
14. சோழப் பேரரசு குறித்த பெருமிதம் இன்றைய அரசியல்-பண்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அதன் பின்னணி என்ன?
இந்தியாவில் பல பேரரசுகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அவை எல்லாம் மக்கள் நினைவில் நிற்பதில்லை. ஆனால் சோழ மன்னர்கள் உருவாக்கிய கோவில்களையும் நீர்த்தேக்கங்களையும், இன்றும் மக்கள் கண்கூடாகப் பார்க்க முடிகின்ற வகையில், அவர்களின் ஆட்சியின் நினைவாக விட்டுச் சென்றிருக்கின்றனர். அவர்கள் காலத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி, அதற்கு முன் இல்லாத அளவிற்கு இருந்திருக்கிறது. திராவிட கட்டிடக்கலை, பல்லவர் காலத்தில் தொடங்கியிருந்தாலும், சோழர் காலத்தில் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. கடல் கடந்த பன்னாட்டு வர்த்தகம் பெருகியிருக்கிறது. இதனால் பலன் அடைந்தவர்களுக்கு அது பொற்காலம். ஆனால் ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் மேற்கூறிய தகவல்களின்படி, மூன்று வருணத்திற்கு வெளியே இருந்த மிகப் பெரும்பான்மையினருக்கு அது வேதனையான காலமாகும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply