கலாச்சார அரங்கில் கட்சியின் கடமைகள்
எம். ஏ. பேபி
(அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)
1. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, 2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ‘கலாச்சார அரங்கில் நமது கடமைகள்’ என்ற ஆவணம் நிறைவேற்றப்பட்டது.
2. இந்த ஆவணத்தைப் புரிந்து கொண்டு உள்வாங்கவும், பல்வேறு மாநிலங்களில் அதைச் செயல்படுத்தவுமான முயற்சிகள் தொடர்கின்றன. மற்ற இந்திய மொழிகளோடு கூடவே, இந்தியிலும் இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மட்டங்களில், இந்த ஆவணம் குறித்து, செயல்பாட்டாளர்களிடையே எடுத்துக் கூறும் பணி, முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இது விரைவில் சரிசெய்யப்பட வேண்டும்.
3. மத்தியக் குழு ஆவணத்தின் அடிப்படையில் மாநிலத்தின் பிரத்தியேகமான கலாச்சார பணிகள் குறித்த ஆவணங்களை உருவாக்குவது முக்கியமானதாகும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார, மொழி மற்றும் சமூகத்தின் பன்முகத்தன்மையை கருத்தில் கொள்ளும்போது இது மிகவும் பொருத்தமானதாகும். இனியும் தாமதிக்காமல் இதை முன்னெடுக்க வேண்டும். இத்துறையில் நமது கடமைகள் குறித்த அகில இந்திய ஆவணத்தின் அடிப்படையில், கேரளாவில் இது செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம் பல்வேறு மட்டங்களிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
4. இந்தக் கடமைகளுக்கான ஆவணத்தின் முதல் பிரிவு, கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த தத்துவார்த்த அணுகுமுறையை மேற்கொள்கிறது. “கலாச்சாரம் என்பது மனிதர்களின் அனைத்து வெளிப்பாடுகளையும் அவர்களது சமூக வாழ்க்கையில் ஒட்டுமொத்தத்தில் உள்ளடக்கிய களமாகும். இசை, நடனம், ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு வடிவங்களின் மூலம் வெளிப்படும் கலை வெளிப்பாடுகளுக்கு மட்டுமேயானதாக அது மட்டுப்படுவதல்ல.”
5. “சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் வர்க்க சக்திகளின் சமநிலையின் தற்போதைய சந்திப்பு, அரசியல் ரீதியான வலதுசாரி திசையை நோக்கி நகர்ந்துள்ளது” என்பது குறித்தும் அது விவாதித்தது.
6. தீவிரமான முதலாளித்துவ சுரண்டலுக்கான ஒரு மாற்றுப் பெயராக விளங்கும் நவ தாராளமயம், லாபத்தை அதிகரிப்பதற்கான சுதந்திரத்தை கார்ப்பரேட்களுக்கு வழங்குகிறது.
- இந்த மக்கள் விரோதக் கொள்கைகள்/சிக்கன நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் அதிருப்தியை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தியல்-கலாச்சார கட்டமைப்பையும் உள்ளடக்கத்தையும் அது கட்டமைக்கிறது.
- எனவே, ஆளும் வர்க்கங்கள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இனம், மதம், சாதி, நிறம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் கசப்புணர்வைப் பரப்பி, இனவெறியையும், ‘மற்றவர்’களிடமிருந்து வரும் அச்சுறுத்தலையும் பரப்புகின்றன. இது மக்களை அணிதிரட்டுவதை சீர்குலைப்பதோடு, ஒற்றுமையின்மையையும் உறுதிப்படுத்துகிறது.
7. பாசிச ஆர் எஸ் எஸ்/பாஜக- வகுப்புவாத- பெரும்பான்மைவாத தலைமையினால் இந்திய அரசு கட்டுப்படுத்தப்படுவதென்பது இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது. நவ தாராளமய பொருளாதாரக் கொள்கைகளும், தீவிர வகுப்புவாத துருவ முனைப்பும் ஒன்றிணைந்து நிற்பது அனைத்து வகையான தாக்குதலை நோக்கமாகக் கொண்டதாகும்.
8. இந்தியாவின் செழிப்புமிக்க நல்லிணக்க நாகரீக வரலாற்றை, இந்துப் புராணங்களாலும், இந்திய தத்துவ மரபுகளுக்குப் பதிலாக இந்து இறையியலாலும் மாற்றுவதே ஆர் எஸ் எஸ்ஸின் ‘கலாச்சார தேசியவாத’த்தின் நோக்கமாகும். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நவீன,மதசார்பற்ற, ஜனநாயக இந்தியா என்ற கருத்தை மறுதலிப்பதும் இதன் நோக்கமாகும்.
9. இந்தச் செயல்முறையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற ஒளிமிகுந்த பாரம்பரியமும் புறக்கணிக்கப்படுகிறது. நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பங்கு மற்றும் தியாகம் துடைத்தெறியப்படுகிறது.
10. இந்தியச் சூழலில், வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கலாச்சார அரங்கில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களும் அதனோடு ஒருங்கிணைந்தவையாகும். மதசார்பற்ற, ஜனநாயக இந்தியாவை, இந்துத்துவ – வகுப்புவாத – மதவாத – பாசிச இந்தியாவாக மாற்றும் ஆர் எஸ் எஸ்/ பாஜக வின் திட்டம் ‘கலாச்சார தேசியவாதம்’ என்ற போர்வையில் முன்வைக்கப்படுவதால், இது மிகவும் முக்கியமானதாகும். ஹிட்லரின் ‘தேசிய சோஷலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி’ என்ற கட்சியின் பெயரையும் அவரது பிரச்சார முழக்கத்தையும் இங்கு நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறுதான் அவர் தன் உண்மையான நோக்கங்களை ஒருங்கிணைத்தார்.
11. ஆர் எஸ் எஸ்/ பாஜகவின் இந்த எதிர்ப்புரட்சி திட்டத்தை எதிர்கொள்ள, கலாச்சாரம் குறித்த முழுமையான புரிதலின் ஒரு பகுதியாக, ‘கோட்பாடு மற்றும் அறிவியல்’ ஆகிய இரண்டையும் நாம் திறம்பட வளர்த்தெடுக்க வேண்டும். இதுபற்றி லெனின் குறிப்பிட்டார்: “தத்துவத்தின் பணி, அறிவியலின் நோக்கம், இங்கே ஒடுக்கப்பட்டுள்ள வர்க்கத்திற்கு, அதன் உண்மையான போராட்டத்தில் உதவுவதாக வரையறுக்கப்படுகிறது என்பது உண்மையல்லவா?” (லெனின், தொகுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 1, பக். 327-8)
12. ‘ஜெர்மானிய தத்துவம்’ என்ற நூலில் மார்க்ஸும் எங்கெல்ஸும் விளக்கியது போல, ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் ஆளும் சிந்தனைகளாக மாறுகின்றன என்ற சரியான கோட்பாட்டினை இன்றைய இந்தியாவிலும் காணலாம்.
13. ஆளும் வர்க்கங்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கென கலாச்சார நிறுவனங்கள் உள்பட பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கும் தந்திரோபாயங்களை அந்தோனியோ கிராம்சி விளக்கினார்.
14. குடும்பம், சமூகம், வழிபாட்டுத் தலங்கள், சாதி, மதம் போன்றவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆளும் வர்க்கக் கருத்துக்கள் ‘பொது அறிவாக’ மக்களிடம் கடத்தப்படுகின்றன. மக்களின் ஒப்புதலை உருவாக்குதலே அதன் இலக்காகும். லூயி அல்தூசர், முதலாளித்துவ வர்க்கம் அடக்குமுறை அரசு எந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் பராமரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால், பாட்டாளி வர்க்கத்திடையே போலியானதொரு உணர்வை உருவாக்குவதன் மூலமும் அரசு எந்திரத்தின் மூலமும் பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.
15. ஜனநாயக ரீதியான கலாச்சார இயக்கங்களின் எதிர் மேலாதிக்கத்தை உருவாக்குவதே நமது தற்போதைய கடமையாகும். இதற்கான நமது முயற்சிகள் பயனுள்ளதாகவும், வெற்றிகரமானதாகவும் மாறும்போது, இத்தகைய சிந்தனைகள் மகத்தான தாக்கத்தை சமூகத்தின்மீது ஏற்படுத்தும். ஒருமுறை மார்க்ஸ் மிக அழகாகக் கூறியிருந்தார்: “… எனினும் கோட்பாடானது மக்களைப் பற்றிக் கொண்டவுடன் அது ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது. ஒரு தத்துவமானது ஒரு தனிநபரை சுட்டுவதாக மாறும் தன் தன்மையை நிரூபித்த உடனேயே, அது மக்களைப் பற்றிக் கொள்ளும் தன்மையுடையதாக மாறுகிறது. அது இருப்புநிலையை மாற்றும் உந்துதலாக மாறியவுடனேயே, தனிநபரைச் சுட்டும் தன் தன்மையை நிரூபிக்கிறது. இத்தகைய உந்துதல் என்பது விஷயத்தின் ஆணிவேரைப் புரிந்து கொள்வதே ஆகும். எனினும், மனிதனைப் பொறுத்தவரையில் மனிதனுக்கு வேராக இருப்பதும் அவனேதான்.”
16. ஆக்கபூர்வமான அறிவுஜீவிகளின் வளர்ச்சியும் எதிர் மேலாதிக்கமும் ஜனநாயக ரீதியான கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கும், பாசிச சக்திகளின் ‘கலாச்சார தேசியத்திற்கு’ எதிரான நடவடிக்கைகளுக்கும் உதவுவதாக இருக்கும்.
17. மார்க்ஸ் எழுதினார்: “உற்பத்தி என்பது தேவைக்கான ஒரு பொருளை வழங்குவது மட்டுமல்ல; மாறாக, அது மூலப்பொருளுக்கான தேவையையும் வழங்குகிறது….” பொருளின் தயாரிப்பிற்கு இருப்பது போலவே அறிவுசார் மற்றும் கலாச்சார ரீதியான தயாரிப்புகளுக்கும் இது பொருந்தும்.
18. சமத்துவம், சக மனிதர்கள் மீதான அக்கறை போன்றவை நவீன சமூகத்தில் கலாச்சாரத்தின் வரையறையாகக் கருதப்படுகின்றன. நிலப்பிரபுத்துவத்தில் இது சாத்தியமில்லை. அப்போது அங்கு குடிமகன் என்ற எவரும் இல்லை. ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கீழ்ப்பட்டவர்களும் மட்டுமே இருந்தனர். ஈரானிய அறிவுஜீவிகள் மேற்கத்திய மயமாக்கலுக்கு எதிராக மேற்கத்திய நச்சுமயமாக்கல் என்ற சொற்றொடரை உருவாக்கினர். இது செல்வச் செழிப்பினை எடுத்துக் கூறும் தனித்துவம் மிக்க ஃபேஷன் ஆடைகள் மற்றும் மிகவும் முன்னேறிய கருவிகளை பிரதிபலிப்பதாகும்.
இதை இந்தியச் சூழலுக்கு ஏற்ப நவீனத்துவம் எதிர் நவீன நச்சு என்று மாற்றி அமைக்கலாம். பெரும்பாலான நவீன நுகர்வு சாதனங்கள் மற்றும் திருமண விளம்பரங்கள் மூலம் சாதி அடிப்படையிலான திருமணம், சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறை, ஆணாதிக்க சமூக ஒழுங்கு, காப் பஞ்சாயத்துகள், மதச் சிறுபான்மையினரை சமத்துவமற்ற வகையில் நடத்துதல் போன்றவை. பெண்களை சமமானவர்களாக நடத்தாமல் அவர்களை காட்சிப் படுத்தவும், உடைமையாக்கவும், சுரண்டுவதற்குமான ஒரு பொருளாக நடத்துவது இந்த உண்மையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
19. செய்தி, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு ஆகியவற்றின் சங்கமம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பொருட்களின் உலகளாவிய உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகியவற்றின் பெரும்பகுதியை கார்ப்பரேஷன்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. இது உலகை ஒரே வகையான கலாச்சார சந்தைக்கான இடமாக மாற்றுகிறது. இதற்காக, பொதுவான ரசனையை ஒருமைப்படுத்தும் முயற்சியும் கோரப்பட்டு, அது உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மக்கள் தங்கள் அன்றாட யதார்த்த வாழ்க்கையிலிருந்து அந்நியமாக்கப்படுகின்றனர். “நமது கலாச்சாரத்தின் பெரும்பகுதி இப்போது ‘வெகுஜன கலாச்சாரம்’, ‘அனைவருக்கும் பிடித்தமான கலாச்சாரம்’, ‘ஊடக கலாச்சாரம்’ என்றும் கூட அது மிகப் பொருத்தமாகவே குறிப்பிடப்படுகிறது. இவை பெரும்பாலும் மிகப்பெரும் நிறுவனங்களால் சொந்தமாக்கப்பட்டு, இயக்கப்படுகின்றன. செல்வத்தைக் குவிப்பதும், அவற்றின் (இந்த நிறுவனங்களின்) உரிமையாளர்களுக்கு உலகத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதுமே அவற்றிற்கு உடன்பாடான ஒரு விஷயமாகும். இதன் குறிக்கோள், மதிப்பைப் பயன்படுத்துவதை விட, பரிமாற்ற மதிப்பு, சமூக ரீதியான படைப்பாற்றலை விட சமூகத்தைக் கட்டுப்படுத்துவது ஆகும். இந்த வெகுஜன கலாச்சாரத்தின் பெரும்பகுதி பெருமளவு யதார்த்தங்களைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதிலிருந்து நம்மை திசைதிருப்பும் வகையிலேயே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு கலாச்சாரத்தின் ஆடம்பரமானது அவசரமான, ஊட்டமளிக்கக் கூடிய விஷயங்களை நம் கண்களிலிருந்து மறைக்கிறது. தரம் தாழ்ந்த உணர்வுகளுக்கு தொடர்ச்சியாகத் தீனி போடுவதன் மூலம் இந்தப் பரபரப்பான வெகுஜன கலாச்சாரத்தை மேலும் தரம் தாழ்த்தும்படி செய்கிறது. கலாச்சார ரீதியான குப்பை, பெரும் மிகைப்படுத்தல், தரம் தாழ்ந்த, பளபளப்பான, உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுகின்ற, காட்டுத்தனமான வன்முறை மிக்க, மூர்க்கத்தனமான, மேலோட்டமான அர்ப்பணிப்புகளுக்கு இரையாகும் வகையில் பொது ரசனையை பெருமளவிற்கு மாற்றியமைக்கின்றன.”
“இத்தகைய விஷயங்கள் அனைத்துமே பெரும்பாலும் உண்மையான தத்துவார்த்த உள்ளடக்கத்தைக் கொண்டவையே ஆகும். பொழுதுபோக்கு கலாச்சாரம் என்பது அதன் நோக்கத்தில் அரசியல் அற்றதாகக் கூறப்பட்டாலும் கூட, அதன் தாக்கத்தில் அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறது. பெரும்பாலும் அப்பட்டமான, பாலியல் சார்ந்த, இனவாத, நுகர்வு வாத, எதேச்சாதிகார, ராணுவ வாத, மற்றும் ஏகாதிபத்திய வாத பிம்பங்களையும் மதிப்புகளையுமே அது பிரச்சாரம் செய்கிறது.” (மன்த்லி ரிவ்யூ இதழின் கட்டுரையிலிருந்து (பிப்ரவரி 1999) மைக்கேல் பேரண்ட்டியின் மேற்கோள்.)
சமீபத்தில் வெளிவந்த ரஜினிகாந்த் படமான ‘ஜெயிலர்’ இந்த தன்மைக்கு மிகவும் உண்மையானதொரு உதாரணமாகும். இதுபோன்ற படங்கள் பலவும் கண்காணிப்பு நீதியை முன்வைத்தே பிரச்சாரம் செய்கின்றன.
20. இவ்வகையில் நவீன தாராள மயமும், வகுப்புவாதமும், உலகிலும், ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்களின் ரசனையை ஒருமைப்படுத்த முயல்கின்றன. ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்..’ என்ற முழக்கங்களின் மூலம், இந்தியாவின் செழிப்பான கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மறுதலிக்கவும், ஆர்.எஸ்.எஸ். தனது ‘இந்து ராஷ்ட்ரத்தை’ முன்வைக்கிறது. இது மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
21. எனவே, உழைக்கும் வர்க்கமும், உழைக்கும் மக்களும், மக்களின் பரந்து கிடக்கும் உண்மையான பிரச்சனைகளை கலாச்சார நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டுவருவதில் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். ஜனநாயக சக்திகளின் எதிர் மேலாதிக்கத்தை வளர்த்தெடுப்பதற்கான இயக்கங்களையும் போராட்டங்களையும் தொடங்க வேண்டும்.
22. இந்தியாவின் கலாச்சார வரலாறானது ஆன்மீக மரபுகள், லோகாயுத சிந்தனை போன்ற பொருள்முதல்வாத மரபுகள் போன்ற பன்முகத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வரலாற்றுரீதியான உண்மையை ஆர்.எஸ்.எஸ். அங்கீகரிக்கவில்லை. மாறாக, அவர்கள் ‘மனுவாதத்தை’ போற்றிப் புகழ்கின்றனர். நமது விடுதலைக்கான போராட்டம் இந்திய கலாச்சார நல்லிணக்கத்தை வரையறுத்தது. ஆர் எஸ் எஸ்-ஐப் பொறுத்தவரை, ‘தேசியவாதம்’ என்பது அவர்களின் ‘கலாச்சார’ மற்றும் ‘சித்தாந்த’ விதிமுறைகளிலிருந்து ‘விலகும்’ எவரையும் தாக்கும் ஒரு கைத்தடியாக மட்டுமே பயன்படுகிறது.
23. ஆர் எஸ் எஸ்ஸின் இந்த ஓரின மயமாக்கல் திட்டமானது ‘உள்ளூர்’, ‘மக்கள் தர்ம’,’உள்நாட்டு மரபுகளையும் அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. போட்டித் தன்மை கொண்ட வகுப்புவாதம், பல்வேறு வகையான பெரும்பான்மைவாத, சிறுபான்மைவாத வகுப்புவாதங்களுக்குத் தீனி போடுவதாகவே இருக்கிறது!
24. சீர்திருத்தவாதிகளும், புரட்சிகர சிந்தனையாளர்களும் ஜனநாயக ரீதியான கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்களிப்பினை செய்து வந்துள்ளனர். புத்தர், பசவண்ணா, அக்காமாதேவி, பக்தி மற்றும் சுஃபி கவிஞர்கள், சீக்கிய குருக்கள், கபீர், லாலன், பிர்சா முண்டா, அய்யா வைகுண்டசாமி, ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் புலே, நாராயண குரு, பெரியார், ராம் மோகன் ராய், ரவீந்திரநாத் தாகூர், முன்ஷி பிரேம்சந்த், வல்லத்தோள், பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற பலரும் இந்த எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப் பாரம்பரியத்திற்குப் பங்களித்துள்ளனர்.
25. ‘இந்து’, ‘முஸ்லீம்’, ‘பிரிட்டிஷ்’ காலகட்டம் என காலனிய வரலாற்றியலால் இந்திய வரலாறு திரிக்கப்பட்டிருப்பதை அறிவியல்ரீதியாக அம்பலப்படுத்தி அது சரிசெய்யப்பட வேண்டும். பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கண்ணோட்டத்துடன் வகுப்புவாதப் பிளவுகளை உருவாக்கவே ஏகாதிபத்தியவாதிகள் இதைச் செய்தனர்.
26. ‘ஆரிய இனம்’ இந்தியாவில் தோன்றியது என்ற ஆர் எஸ் எஸ்ஸின் வாதம் முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பானது. நவீன அறிவியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை பற்றிய வரலாறுகளை பூசி மெழுகாமல் அல்லது சிதைக்காமல், இந்திய வரலாற்றில் பகுத்தறிவு, அறிவியல், மதசார்பற்ற, மக்கள் சார்பு அணுகுமுறையை வலியுறுத்துவது கலாச்சார அரங்கில் நமது பணியின் முக்கியமானதொரு பகுதியாகும். கடந்த காலத்திற்கான போர் என்பது எதிர்காலத்திற்கான போரின் ஒரு பகுதியே ஆகும்.
27. 1936ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக சங்கம் ஆகியவற்றின் எழுச்சிமிகு பாரம்பரியம் நமது புகழ்பெற்ற பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். (அதற்கான தனிவகுப்பு மற்றும் வகுப்புக் குறிப்பு இந்தப் பட்டறையின் ஒரு பகுதியாக விளங்கும்)
28. நமது கலாச்சாரமானது பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, ஆய்வு மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை நமது பொதுக் கல்விப் புலத்திலிருந்து ஒழிப்பதற்கான முயற்சிகள் ஆர் எஸ் எஸ்/பாஜக ஆட்சியில் மத்திய அரசிலும், பல மாநில அரசுகளிலும் மிகவும் வலுவாகவும் திட்டமிட்ட வகையிலும் நடக்கின்றன. பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்று அறிவியல், பகுத்தறிவு, கேள்வி கேட்கும் உணர்வு ஆகியவற்றின் பக்கம் நிற்பவர்கள் தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனர். இந்தப் பின்னணியில், சங் பரிவார் மற்றும் பல்வேறு வகுப்புவாத, தீவிரவாத சக்திகளால் நிகழ்த்தப்படும் படுகொலைகள் மற்றும் கலவரக் கலாச்சாரம் உறுதியோடு எதிர்க்கப்பட வேண்டும்; அம்பலப்படுத்தப்பட வேண்டும்; மக்களிடையே விளக்கப்பட வேண்டும்.
29. இந்தியாவில் நிலவி வரும் கலாச்சார வடிவங்கள் மற்றும் செயல்முறைகள் மிக நீண்ட, செறிவான பாரம்பரியம் உடையவை. அதன் பன்முகத் தன்மை, உருமாற்றங்கள், செவ்வியல், நாட்டுப்புறவியல், மக்கள் கதைகள், சடங்குகள், பழங்குடி செயல்முறைகள் ஆகியவற்றின் மிகுந்த கவனமும் அழுத்தமும் நமக்குத் தேவைப்படுகிறது.
30. முந்தைய சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பா, சீன மக்கள் குடியரசு, வியட்நாம், கியூபா மற்றும் ஜனநாயக பரிசோதனைகளை மேற்கொண்ட பிற நாடுகள் பல்வேறு வகையான, முற்போக்கான, ஜனநாயகரீதியான கலாச்சார வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளை உருவாக்கி வளர்தெடுத்துள்ளன. இவை மிகவும் மதிப்பிற்குரிய கலாச்சார சொத்தாகும். அவர்களின் தவறுகளிலிருந்தும் நாம் பாடம் கற்க முடியும்.
31. வெகுஜன அமைப்புகளுக்கும் கட்சிக்கும் இடையிலான உறவு பற்றிய கட்சியின் புரிதல்: ஒப்பீட்டளவிலான சுயாட்சி மற்றும் சுதந்திரம் வழங்கப்படுவதன் அவசியம் குறித்து கட்சியின் பல்வேறு ஆவணங்களிலும் ஒவ்வொரு கட்சியின் பரிசீலனையிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் மீறல்களை – பெரும்பாலும் கட்சித் தலைவர்களிடமிருந்தே – மேலிருந்து கீழ் வரை காண முடிகிறது. இது உறுதியாகத் திருத்தப்பட வேண்டும். கலாச்சார அரங்கில் இது மிகவும் அவசியமானதும் முக்கியமானதும் ஆகும். கலாச்சார அரங்கின் பரந்த ஜனநாயகத் தன்மையை வார்த்தைகளில் வலியுறுத்துவதை விட, நமது செயல்களின் மூலமாகவே வலியுறுத்த வேண்டும்.
32. புகழ்பெற்ற கட்சி சாராத கலாச்சார செயல்பாட்டாளர்களை கலாச்சார அரங்கினுள் கொண்டு வருவதற்கும், அவர்களை முக்கியமான தலைமை பொறுப்புகளுக்கு உயர்த்துவதற்கும், உணர்வுபூர்வமான முயற்சிகள் மிகவும் முக்கியமானதாகும்.
33. கலாச்சார அரங்கில் உள்ள நமது தோழர்களுக்கும், வேறு பல்வேறு விஷயங்களில் முன்னணியில் உள்ள கட்சி சாராத செயல்பாட்டாளர்களுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் (சிறியதாகவோ அல்லது முக்கியமானதாகவோ) குறிப்பிட்ட வகையிலான வேறுபாடுகள் இருக்கக் கூடும். அவை பொறுமையாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். சில பிரச்சனைகள் தீர்வு காணாமல் நீடிக்கவும் செய்யலாம். ஒரு சில வேறுபாடுகளை களைவதற்கு அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. அவை, கலாச்சார அரங்கின் கூட்டு நடவடிக்கைகளை உடனடியாகப் பாதிக்காது. சுருக்கமாகச் சொல்வதெனில், மிகுந்த ஜனநாயக முறையிலான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.
34. பெண்கள், தலித், பழங்குடிப் பிரிவினர், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களிலிருந்து கலாச்சாரத் துறையில் ஆர்வம் உள்ளவர்களை, செயல்பாட்டாளர்களை, நமது கலாச்சார அரங்கில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதில் உடனடியாக, தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.
35. நமது கலாச்சார அமைப்புகள் மேலும் முறையான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அதேநேரத்தில், பிற வெகுஜன அமைப்புகள், ஊழியர் சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள் போன்ற அமைப்புகளிலும் அவர்களுக்கே ஆன கலாச்சார பிரிவுகளை வளர்த்தெடுக்க வேண்டும். நமது கலாச்சார அமைப்புகள் இத்தகைய கலாச்சார பிரிவுகளுக்கு உதவ வேண்டும்; பயிற்சி அளிக்க வேண்டும். இத்தகைய முயற்சிகள் நமது கலாச்சார அரங்கின் செயல்திறனையும் வீச்சையும் அதிகரிக்க பெருமளவிற்கு உதவும்.
36. பொதுவான, ஒன்றுபட்ட திட்டங்களின் அடிப்படையில், ஒருமித்த எண்ணம் கொண்ட கலாச்சார அமைப்புகளின் ஒருங்கிணைந்த கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
37. சுயேச்சையாகவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரிவுகளுக்காகவும், தீவிரமான சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் கலாச்சார ரீதியான தயாரிப்புகளை மேற்கொள்ளும் குழுக்கள் ஆகியவற்றில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் நமது பலவீனம் மிகவும் தீவிரமான ஒன்றாகவே உள்ளது. சமூக வலைத்தளங்களில் வகுப்புவாத சக்திகள் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறம்படவும் செயல்படுகின்றன.
38. கலை மற்றும் விளையாட்டுக் கழகங்கள், நூலகங்கள், வாசிப்பறைகள் ஆகியவற்றை இணைப்பது, நமது பணிகளில் நல்லதொரு பணியாக அமையும். இந்த அமைப்புகளை பொதுவெளியில் பயன்படுத்துவதில், மிகவும் விவேகமான முயற்சிகள் தேவைப்படுகின்றன. வகுப்புவாத சக்திகள், இங்கு ஊடுருவதற்கு எடுக்கும் முயற்சிகளை எதிர்த்தும் நாம் உறுதியோடு செயல்பட வேண்டும்.
39. சக்திமிக்கதொரு ஜனநாயக ரீதியான கலாச்சார இயக்கத்தை வலுப்படுத்த, கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் உள்ள அடிப்படை வர்க்கங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் திறம்படச் செயல்படுவதற்கு ஏற்ற வகையில், சுய ஆய்வு மற்றும் சுய விமர்சனத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
40. கலாச்சாரத்தை நாம் வெறுமனே ‘கலையாக’ப் பார்க்காமல், மக்களின் ‘வாழ்ந்த வாழ்க்கை’யாக முழுமையான வகையில் பார்க்க வேண்டும். நமது பேச்சின் தொனி, நமது உணவின் சுவைகள், நமது ஆடைகளின் வண்ணங்கள் மற்றும் அவற்றின் வடிவமைப்பு போன்ற பலவற்றை உள்ளடக்கிய, எனினும் அவற்றால் மட்டுப்படாத. மக்களின் சாதாரண, அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அவை வடிவமைக்கின்றன. எனவே, நமது கவனத்தை ‘கலாச்சார ரீதியான தலையீடு’ என்பதிலிருந்து, ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக, கலையையும் கலாச்சாரத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்துவது என்பதிலிருந்து, ‘கலாச்சாரத்தில் தலையீடு’ என்பதாக மாற்ற வேண்டும். அதாவது, அன்றாட வாழ்க்கையின் கட்டமைப்பில், அன்றாட வாழ்க்கை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதில், முற்போக்கான, மதசார்பற்ற, ஜனநாயகரீதியான சிந்தனைகளை சமூகத்தில், அமைப்பில், குடும்பத்தில், உட்செலுத்த வேண்டும்.
41. மதசார்பற்ற, ஜனநாயக ரீதியான கலாச்சாரத்தின் மரபுகளுக்கான சமூக வெளியை மீட்டெடுக்க, நம் நாட்டிலும் உலகிலும் உள்ள முற்போக்கான, ஜனநாயக ரீதியான படைப்பாற்றல் மற்றும் சிந்தனையின் பல்வேறு போக்குகளை நாம் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். இப்பணியை மேற்கொள்வதற்கு, நன்கு தயாரான தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட வேண்டும். நமது புதிய இணையவழி மடலான ‘ஹம் தேக்கேங்கே’ இதுபோன்ற விஷயங்களை வெளியிட முடியும்.
42. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மக்களின் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் தயாரிப்புகள் குறித்த ஓர் ஆவணக் காப்பகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். தோழர் சுதி பிரதான் தொகுத்த மூன்று தொகுதிகள் மிகவும் முக்கியமான, பெருமதிப்பு மிக்க ஓர் ஆதார வளமாகும். எனினும், இது 1960களின் நடுப்பகுதி வரையிலான அம்சங்களை மட்டுமே உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நமது கலாச்சார அமைப்புகள் இந்த இடைவெளியை நிரப்பவும், தற்காலம் வரையில் புதுப்பிக்கவும், உடனடியான பணியை மேற்கொள்ள வேண்டும்.
43. ‘கலாச்சார தேசியம்’, ‘மத உணர்வுகள்’ , ‘சாதிய மேன்மை’ மற்றும் இன, மொழி, பகுதியளவிலான பன்முகத்தன்மை அல்லது உணவு, உடை குறித்த விதிமுறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தூண்டி விடப்படும் சகிப்பின்மையை எதிர்க்க, ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வகுப்புவாத, பாசிச சக்திகளின் இத்தகைய குறுங்குழுவாத, பிளவுவாத சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில், தொடர்ச்சியாகவும், அத்தகைய குழப்பங்கள் தோன்றும்போதெல்லாம் கூட்டியக்கம் உருவாக்கப்பட வேண்டும்.
44. பழமைவாதம், மதவெறி, மூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை போன்றவற்றை எதிர்க்கவும், பொதுக்கல்வி மற்றும் அறிவியல்பூர்வமான கல்வி, கலாச்சார நிறுவனங்கள் ஆகியவற்றின் சுயேச்சையான செயல்பாடுகளைப் பாதுகாப்பது என்பது நமது நிலையான கலாச்சார கடமையாக கையிலெடுக்கப்பட வேண்டும்.
45. உள்ளூர் தெய்வங்கள் மற்றும் பல்வேறு இயற்கையை மீறிய விஷயங்களின் பெயரால் ‘ஆன்மீக வியாபாரம்’ செய்வதற்கு எதிராக நாம் மிகுந்த கவனத்தோடு தலையீடு செய்ய வேண்டும். இது மிகுந்த கவனம், சரியான மதிப்பீடு மற்றும் விவேகத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
46. வகுப்புவாத, மத தீவிரவாத சக்திகள் தங்களது தீய நோக்கங்களுக்காக, வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, தங்கள் ஏகபோக உரிமையாக ஆக்குவதையும், ஆயுதங்களைப் பதுக்கி வைப்பதையும், ஆயுதப்பயிற்சி அளிப்பதையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களை சமாளிக்க, நல்ல சில அமைப்பாளர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடைய சமூக, கலாச்சார விழாக்களை, வகுப்புவாத, மத தீவிரவாத சக்திகளிடம் விட்டுவிடக் கூடாது. தகுந்த முன்னேற்பாடுகளுடன் நாம் இவற்றில் தலையிட வேண்டும். சில மாநிலங்களில் உள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய உறவில் மிகவும் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
47. பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் வகுப்புவாதத்தை அம்பலப்படுத்தும் அதேநேரத்தில், நமது வாதங்கள் தெளிவானதாகவும், நம்பத் தகுந்தவையாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். வகுப்புவாதத்தை நாம் அம்பலப்படுத்துவது என்பது மதம் முழுவதையும் தாக்குகின்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்ற நியாயமான விமர்சனத்திற்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளும் உள்ளன. மத நம்பிக்கையும், அதைத் திரிப்பதும், வகுப்புவாதமாக அதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதும் வேறுவேறானவை. மதரீதியான தீவிரவாதம், மதவெறி, பகைமை உணர்வு, மதவாதம் ஆகியவற்றையே நாம் எதிர்க்கிறோம். அனைத்து வகையான வகுப்புவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதிலும், மதச்சார்பின்மையை பாதுகாப்பதிலும், பல்வேறு மதங்களில் நம்பிக்கை கொண்டவர்களை நாம் உணர்வுபூர்வமாகவும், கவனமாகவும் அணிதிரட்டி, செயல்படச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இல்லை எனில், வகுப்புவாதப் பிளவுகளுக்கு எதிரான ஐக்கிய முன்னணியில் நாம் நமது சமூகத்தின் பெரும்பகுதியை இழந்து நிற்போம். மத நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரையும் நாம் வகுப்புவாத சக்திகளிடம் இரையாக விட்டுவிடக் கூடாது. அவ்வாறு விட்டுவிடவும் முடியாது. நமது ஜனநாயகரீதியான கலாச்சாரப் போராட்டத்தில் நாம் விடாமுயற்சியுடன் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான, அறிவியல்ரீதியான புரிதல் இது.
48. கலாச்சாரப் போராட்டங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கான சரியான அணுகுமுறை என்பது, அது பொருளாதார சமத்துவத்திற்கு மட்டுமின்றி, சமூக நீதிக்காகவும் போராடுகிறது என்பதை உணர்ந்திருப்பதுதான்.
49. உழைக்கும் மக்களின் பாரம்பரியமான கலைவடிவங்கள் மற்றும் அவர்கள் தங்களது கலைவடிவங்களின் கண்ணியத்திற்காகவும் அங்கீகாரத்திற்காகவும் உழைத்து வருபவர்கள் என பொம்மலாட்டக்காரர்கள், துணிச்சுருளில் கதைகூறும் ஓவியங்களை வரைபவர்கள், கிராமப்புற, நகர்ப்புற தெருக்கூத்துக்கலைஞர்கள், கிராமப்புற கழைக்கூத்தாடிகள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்தப் பிரிவினரை அணிதிரட்டுவதில் நாம் தீவிரமான கவனம் செலுத்த வேண்டும்.
50. சற்றும் சிந்தனையற்ற நுகர்வு வாதம், உணர்ச்சிகளைத் தூண்டும் கலைகள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட கலாச்சார விழுமியங்களின் பண்டமயமாக்கலை எதிர்க்கவும், அவற்றை அம்பலப்படுத்தவும், தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
51. தொழில்நுட்பரீதியாக முன்னேறிய அச்சு மற்றும் ஒலி-ஒளி ஊடகங்களுக்குள் மக்களுக்கும் ஜனநாயக இயக்கங்களுக்குமான இடத்தை மீண்டும் பெறுவதற்கான போராட்டம் அவசியமானது. ‘கைரளி’ மலையாள தொலைக்காட்சி சேனல் மற்றும் சமூக ஊடக தளங்கள் ஆகியவை இவ்வகையில் நாம் சோதனை மேற்கொண்டுள்ள மாற்று சாத்தியங்களாக அமைகின்றன. இந்தப் பகுதியில் மேலும் முயற்சிகள் அவசியமாகும். இப்போது குறும்படங்கள்/ திரைப்படங்களை உருவாக்க கைபேசி கேமராவையே பயன்படுத்த முடியும் என்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
52. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், பாலின மாற்றினத்தவர் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகிய பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பது நமது ஜனநாயக ரீதியான கலாச்சார இயக்கத்தின் முக்கியமான கடமையாகவும் விளங்குகிறது.
53. பல்வேறு குறுங்குழுவாத/பயங்கரவாத/ தீவிரவாத சக்திகளின் இருப்பும் பரவலும், சர்வாதிகாரப் போக்கினை நிர்வாகத்தின் அதிகாரத்தில் குவிக்கவும், எதேச்சாதிகாரத்தை சட்டபூர்வமாக்கவும் வல்லரசுகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, சுரண்டப்படுகின்றன. இதற்கென அரசு சிறப்பு அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில், சாதாரண மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்; அல்லது அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தள்ளப்படுகின்றனர். மக்களுக்கு எதிராக ராணுவம், துணைராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம். உவாபா போன்ற கொடூரமான, மனிதாபிமானமற்ற சட்டங்களையும் எதிர்க்கிறோம்.
54. கலாச்சார அரங்கில் நமது கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலில், கட்சி இந்த அரங்கு குறித்து விவாதிக்க வேண்டும். பின்னர் கலாச்சாரத் தளத்தில் பணியைத் தொடங்குவதற்கு பல்வேறு மட்டங்களில் தகுதிவாய்ந்த ஊழியர்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிட, குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுஆய்வு செய்வதும் அவசியமாகும்.
55. ஆசிரியர்கள், ஊழியர்கள், திட்டப்பணியாளர்கள் போன்ற பிரிவினரின் வெகுஜன அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளில் பாடல் குழுக்கள், வீதி நாடகக் குழுக்கள் போன்ற கலைப்பிரிவுகளை உருவாக்க ஊக்கமளிக்க வேண்டும்.
56. கலாச்சார செயல்பாட்டாளர்கள், பிற அமைப்புகளின் உதவியுடன், ‘பாலர் சங்கத்தில்’ குழந்தைகளை ஒருங்கிணைப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும். இதன்மூலம் புதிய தலைமுறையினர் கலாச்சார ரீதியான சிந்தனைப்போக்கை உருவாக்கிக் கொள்ள உதவ முடியும்.
57. இப்போது கலாச்சார அரங்கம் செயல்படாத அல்லது இல்லாத மாநிலங்களில், கட்சியின் மாநிலக்குழு, மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ள தோழர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இத்துறையில் இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
58. நமது தோழர்கள் தற்போது கலாச்சாரப் பணிகளை மேற்கொள்ளும் மாநிலங்களில், எழுத்துமூலமான பரிசீலனை அறிக்கையின் அடிப்படையில், தற்போதைய செயல்பாடுகளின் நிலை பரிசீலிக்கப்பட்டு, எதிர்கால வேலைத்திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
