
கம்யூனிஸ்டுகளும் தேர்தல் அரசியலும்
என். குணசேகரன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்குப் பின்னணியாக உள்ள காரணங்களை பல தரப்பினர் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயின் திரைப் பிம்பம், இரு பெரும் திராவிடக் கட்சிகளின் மீதான மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமின்மை, கடந்த திமுக அரசின் நவ தாராளமயக் கொள்கைகள் வாழ்வாதாரங்களைப் பறித்ததால் மக்களின் அடிமனதில் பதிவாகியிருந்த அதிருப்தி, புதிய வழிமுறைகளில் மக்கள் வாக்குகளைத் திரட்டுவதற்கு சமூக ஊடகக் கருவிகளை தவெகவினர் திறம்பட பயன்படுத்தியது என பல தளங்களில் தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை ஆராய வேண்டியுள்ளது.
கேரளத்தில் மார்க்சிஸ்ட்கள் பெற்ற தோல்வி குறித்தும் விவாதம் நடைபெறுகிறது. இனி இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லை என்ற வழக்கமான பல்லவியும், இடதுசாரிகள் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களுடைய அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என பல விதமானக் கருத்துக்களை பல தரப்பினர் முன்வைத்து வருகின்றனர். இடதுசாரி வளர்ச்சியில் அக்கறை கொண்டோரும், இடதுசாரிகள் வீழ்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோரும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் முதலாளித்துவ அமைப்பில் நடைபெறும் தேர்தல்கள், தேர்தல்களில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு பற்றிய மார்க்சியப் புரிதல் தேவை. இதன் அடிப்படையில், புதிய சூழலில் செயல்படுவதற்கான திட்டங்களையும் வியூகங்களையும் வகுக்க வேண்டிய அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது.
தேர்தல்களும் சோசலிச ஜனநாயகமும்
பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழ்ந்த பிறகு, அமைகிற சோசலிச அமைப்பில் நடைபெறும் தேர்தல்கள் உண்மையான ஜனநாயகத்தின் வெளிப்பாடாக அமைந்திடும். ஏனெனில் சோசலிச அரசு பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அதிகாரமாக உள்ளது. அதில் அரசு நிர்வாகத்தை வழிநடத்தும் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வகையில் சோசலிச ஜனநாயகம் சோசலிச நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அன்றைய சோவியத் நாட்டிலும் இன்றுள்ள சீனா போன்ற சோசலிச நாடுகளிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதில் ஜனநாயகம், சமத்துவக் கோட்பாடுகள் அடிப்படையாக அமைந்துள்ளன.
சோசலிச ஜனநாயகத்தின் கீழ் நடத்தப்படும் தேர்தல்களில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பின்பற்றப்பட்டு, ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நலனுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படவில்லை என்றால், அவர்கள் பதவி பறிக்கப்பட்டு திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் நடைபெறும் தேர்தல்கள், சோசலிச ஜனநாயகத்திற்கு நேர்மாறானது. இதில் ஜனநாயகம் முழுமையானதாக இல்லாமல் ஒரு எல்லைக்குட்பட்டதாக இருக்கும். 35 சதம் வாக்குகள் பெறுகிற ஒரு கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு. சுமார் 65 சதம் வாக்காளர்கள் அந்தக் கட்சியை நிராகரித்தாலும் அவர்களது வாக்குகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பில்லை. தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக பெற்ற வாக்கு சதம் 34.92%. பெற்ற இடங்கள் 108 மட்டுமே. மற்ற கட்சிகளை விட அதிக இடங்களைப் பெறுகிற கட்சி ஆட்சி அமைக்கும் என்கிற இந்த நடைமுறையில் இயல்பாகவே ஜனநாயகம் அடிபடுகிறது.
சில முதலாளித்துவ நாடுகளில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கிற வாக்குகளைப் பொறுத்து சட்டமன்ற நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கடைபிடிக்கப்படுகிறது. இருந்தாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு ஆட்சி அமைப்பினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மக்களுக்கு இல்லை. இருக்கிற கட்சிகள் பெரும்பாலும் முதலாளித்துவக் கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சிகளாக உள்ள நிலையில் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் தேர்வுதான் வாக்காளர்கள் முன் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை சுரண்டுகிற கட்சிக்கு மக்கள் தரும் லைசன்ஸ் ஆக தேர்தல்கள் அமைக்கின்றன.
உண்மைக்கு மாறான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மூளைச் சலவையும் கருத்துத் திணிப்பும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் முதலாளித்துவத்தில் உண்டு. அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இனவாதக் கொள்கைகளையும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ‘அமெரிக்காவே முதன்மை’ என்ற பொய்யான பெருமிதம் சார்ந்த கொள்கைகளையும் முன்வைத்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெள்ளை நிறவெறிக் கொள்கைகளும், மக்கள் நலனுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளும் அமெரிக்கர்களின் நலனைக் காக்கும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிற பிரம்மாண்டமான ஊடகப் பிரச்சாரம் அமெரிக்காவில் நடந்தது. இப்படி கருத்துக்களைத் திணிக்கிற நயவஞ்சகமான பிரச்சாரம் முதலாளித்துவ அமைப்பில் நடைபெறுவதால் தேர்தல் வழியாக அடித்தட்டு, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன் காக்கும் ஒரு ஆட்சி அமைவதில்லை.
கம்யூனிஸ்டுகள் தேர்தலில் பங்கேற்கலாமா?
இப்படிப்பட்ட குறைபாடுகள் கொண்ட முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் நடைபெறும் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்கலாமா என்கிற விவாதம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடைபெற்றுள்ளது. மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் காலத்திலேயே இது பற்றிய சிந்தனைகள் எழுந்துள்ளன.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், அவர்களுக்குப் பிறகு லெனினும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் நடைபெறும் தேர்தல்களை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் முதலாளித்துவக் கட்சிகள், முதலாளித்துவ வேட்பாளர்கள் பின்பற்றும் நடைமுறைகளில் இருந்து மிகவும் வேறுபட்ட செயல்பாடுகளை கம்யூனிஸ்டுகள் தேர்தலில் கடைபிடிக்க வேண்டும்.
தேர்தல்களில் பங்கேற்பதற்கு முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஒரு நோக்கம் உண்டு. பதவியைக் கைப்பற்றி முதலாளிததுவ அமைப்பை இயக்குகிற மூலதன சக்திகளையும், கார்ப்பரேட் பெரு மூலதனத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்பது அவர்களது பொதுவான நோக்கம். பல கட்சிகள் போட்டியிட்டாலும், அவர்களிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பை மாற்றிடாமல் அதன் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்தக் கட்சிகளின் நோக்கம்.
இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நோக்கம் கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்டுகளின் தொலைநோக்கு இலக்கு தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் அல்ல; தேர்தலுடன் கம்யூனிஸ்ட்களின் கடமை முடிவடைவதில்லை. காலம் காலமாக அடிமைப்பட்டு, சுரண்டலுக்கு ஆளான அடித்தட்டு, விளிம்புநிலை, உழைக்கும் வர்க்கங்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி தங்களுக்கான அரசினை நிறுவிட வேண்டும். இந்தப் புரட்சிகரமான மாற்றத்திற்காக கம்யூனிஸ்டுகள் போராடுகின்றனர்.
இந்தத் தொலைநோக்குப் பயணத்தில் இடை இடையே வருகிற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை புரட்சிகர இலக்கை நோக்கிய பயணத்தில் முன்னேறுவதற்கு கம்யூனிஸ்டுகள் பயன்படுத்த முனைகின்றனர். இந்தப் பார்வையுடன் தேர்தல் நிலைபாடு மேற்கொள்கின்றனர். உழைக்கும் வர்க்க அதிகாரம் நிறுவிட தற்போது தடையாக இருப்பது மூலதன சுரண்டலுக்கு வழிவகுக்கும் நவ தாராளமயக் கொள்கைகள் என்பதையும், வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதற்கு தடையாக உள்ள மதவாதம் போன்றவற்றையும் எதிர்த்து, மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மாற்றுக் கொள்கைகளை முன் நிறுத்தி தேர்தல் அணுகுமுறைகள், அணிசேர்க்கைகளை கம்யூனிஸ்ட்கள் உருவாக்குகின்றனர்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அவ்வப்போது நிலவுகிற நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டு கம்யூனிஸ்டுகள் நிலை எடுக்கின்றனர். வாழ்வாதாரப் பறிப்பு, வகுப்புவாதம் போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கிற நோக்கத்துடன் பொருத்தமான அரசியல் சக்திகளோடு கூட்டு சேர்ந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலை சந்திக்கின்றனர்.
தேர்தல் மீதான மாயை
கடந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது “ஒருவிரல் புரட்சி” என்று அமர்க்களமாகப் பேசினர். அதேபோன்று பிரபலமானவர்கள் வாக்களிக்கும்போது தங்களது “ஜனநாயக கடமையை” ஆற்றினார்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இப்படிப்பட்ட சொல்லாடல்கள் வழியாக அனைத்தையும் தேர்தல்கள் மூலமாக சாதிக்க இயலும் என்றும், அதுவே முதல் கடமையும் முடிவான கடமையும் என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர். முதலாளித்துவ தேர்தல்கள் பற்றிய இந்த மாயையை கம்யூனிஸ்டுகள் உடைத்தெறிய வேண்டும். தேர்தல்களால் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை தேர்தலில் பங்கேற்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
உண்மையில், முதலாளித்துவ அமைப்பில் அரசு அதிகாரம் முதலாளித்துவ வர்க்க ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, அந்நிய மூலதன சக்திகள் அதிகார பீடத்தில் இருக்கும் வரை, அடித்தட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கான விடுதலை சாத்தியமாகாது. இந்த சக்திகள், ஆளும் அதிகார சக்திகளாக இருப்பதால் உண்மையான ஜனநாயகம் என்பது மக்களுக்குக் கிட்டாது. அதனால்தான் லெனின் ஜனநாயகம் என்று பேசும்போது ‘அது யாருக்கானது?’ என்பதையும் இணைத்துப் பேச வேண்டும் என்கிறார்.
மேற்கண்ட ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை பாராளுமன்ற, சட்டமன்றங்களில் சில இடங்களை கம்யூனிஸ்டுகள் பெறுவதன் மூலம் அடிப்படை மாற்றம் எதையும் செய்திட முடியாது. எனவே தேர்தல்தான் ஒரே நோக்கம் என்கிற பார்வையுடன் செயல்படுவது மிகவும் தவறானது. தற்போதைய முதலாளித்துவ அரசை அகற்றி, சோசலிசத்தை அமைப்பதே எட்டவேண்டிய இலக்கு. இதில் அசையாத நம்பிக்கையும் உறுதிப்பாடும் அவசியம். இதற்கு,வலுவான வெகுமக்களை அணிசேர்க்கும் புரட்சிகரக் கட்சியைக் கட்டுவது மிக முக்கியமானது.
எனினும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் நடத்தப்படும் தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் முக்கியப் பங்காற்ற வேண்டும். கம்யூனிஸ்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் உரிமைகளைக் காத்து, அவர்களது தேவைகளை எதிரொலிக்கவும், அவற்றுக்காக சட்டமன்ற நாடாளுமன்றங்களில் வலுவான குரலெழுப்பிப் போராடுகிற பிரதிநிதிகளாகவும் செயல்பட வேண்டும்.
தேர்தல்களில் இருந்து ஒதுங்கி இருப்பதை மார்க்சியம் ஏற்பதில்லை. தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ளும் பிரச்சாரம் மக்களின் உணர்வை மேலும் வளர்த்தெடுத்து சமூகத்தினை மாற்ற வேண்டும் என்கிற உயரத்திற்கு கொண்டு செல்வதாக அமைய வேண்டும். பொருத்தமான சூழல் இருந்தால் கம்யூனிஸ்டுகள் அரசு அதிகாரத்தையும் முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் கைப்பற்றுவதற்கு தயங்க கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் இதனைக் குறிப்பிடுகிறது.
இன்றைய நிலையில் ஆளும் வர்க்கங்களால் தற்போதுள்ள எல்லைக்குட்பட்ட ஜனநாயகத்திற்கும் ஆபத்து உள்ளது. அதனைப் பாதுகாப்பதற்கு ஏற்ற சக்திகளுடன் தேர்தல்களின் போதும், தேர்தல் அல்லாத காலங்களிலும் கம்யூனிஸ்ட்கள் இணைந்து செயல்படுவது அவசியம். தேர்தல்கள் பணநாயகமாகவும் முறைகேடுகள் நிறைந்ததாகவும் மாறியுள்ளதையும் கம்யூனிஸ்ட்கள் கடுமையாக அம்பலப்படுத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்த வேண்டும்.
மக்களை அரசியல்படுத்தும் கடமை
மக்களை அரசியல்படுத்துவதற்கான ஒரு தருணமாக கம்யூனிஸ்டுகள் தேர்தல்களை பயன்படுத்துகின்றனர். மக்கள் விரோதப் பாதையில் செல்லுகிற ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை அம்பலப்படுத்துகிற வாய்ப்பாக தேர்தல்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளும் கம்யூனிஸ்டுகளுக்கு பயன்படுகின்றன. அத்துடன் ஒரு மாற்று நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதற்கான வாய்ப்பாகவும் கம்யூனிஸ்டுகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
தேர்தல் செயல்பாடுகள் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பல்வகை செயல்பாடுகளில் ஒரு முக்கிய செயல்பாடாக அமைகிறது. இதனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. மார்க்சும் எங்கெல்சும் பல்வேறு புரட்சிகர செயல்பாடுகளில் ஒன்றாக தேர்தல்களைக் கண்டனர். மக்களை புரட்சிகர அரசியல் நோக்கி திருப்புவதற்கான செயல்பாடுகளில் முக்கியமான நடைமுறையாக தேர்தல் அமைந்துள்ளது. விரிந்து பரந்த மக்களோடு மேலும் தொடர்புகளை வலுப்படுத்தும் வாய்ப்பு தேர்தலில் பங்கேற்கும் போது விரிவடைகிறது. மக்களோடு உயிரோட்டமான தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
உழைக்கும் வர்க்கங்களை அரசியல்படுத்துவது, வர்க்கப் போராட்டங்களை மக்கள் பங்கேற்புடன் முன்னெடுப்பது போன்றவற்றுக்காக தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றைத் தவிர்த்துவிட்டு, தேர்தல்களும், அவற்றில் வெற்றி பெற்று பதவிகள் பெறுவதும்தான் ஒரே இலக்காகக் கருதுவது மோசமான சீர்திருத்தவாதமாகும். இந்தப் பாராளுமன்ற சந்தர்ப்பவதத்திற்கு இடமளிக்கக் கூடாது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்கு இலட்சியங்களும், அணுகுமுறைகளும் உள்ளாட்சி மன்றத் தேர்தல் பங்கேற்பின்போதும் இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாட்டிலும் அது நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்.
மார்க்சிய முன்னோடிகளின் வழிகாட்டுதல்கள்
ரஷ்யப் புரட்சியின் வரலாற்றைப் பயில்கிறபோது லெனின் தலைமையில் அன்றைய போல்ஷ்விக் கட்சி தேர்தலை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை அறியமுடியும். மக்களின் ஆளும் வர்க்க எதிர்ப்பு என்கிற வெப்பத்தின் கொதிநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிற ஒரு வாய்ப்பாக தேர்தலை அவர்கள் பயன்படுத்தினார்கள். மக்களின் உணர்வு மட்டத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் தங்களுடைய நடைமுறை உத்திகளை தகவமைத்து, புரட்சியை நோக்கி முன்னேறினார்கள்.மக்களின் அரசியல் உணர்வை மேம்படுத்தி புரட்சிகர செயல்திட்டத்திற்கு ஆதரவாக மக்களை வென்றெடுப்பதற்கு அவர்கள் தேர்தலை பயன்படுத்தினார்கள்.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதிப்பகுதியில் மார்க்ஸ் பல நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளோடு உறவு கொள்வதைப் பற்றி பேசுகிறார். அதில் பிரான்சில் அன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய நிலை பற்றி ஒரு வழிகாட்டுதலை அவர் அளிக்கின்றார். அன்று பிரான்சில் இயங்கி வந்த பிற்போக்கு, பழமைவாதிகள், தீவிரவாத முதலாளித்துவவாதிகள் போன்றவர்களுக்கு எதிராக பிரெஞ்சு சமூக ஜனநாயகவாதிகளுடன் அணி சேர வேண்டுமென மார்க்ஸ் வலியுறுத்துகிறார்.
அதே சமயத்தில் ஒரு எச்சரிக்கையையும் அவர் அழுத்தமாக எடுத்துரைக்கின்றார். பல்வேறு பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டுகள் விமர்சன நிலைபாடுகளை மேற்கொள்கிற உரிமையை விட்டுத்தரக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார். “…..பாரம்பரியமாகப் பெறப்பட்டு வந்துள்ள சொற்கோவைகள், பிரமைகள் குறித்து ஒரு விமர்சன நிலைபாட்டை மேற்கொள்ளும் உரிமையை விட்டுவிடாமல் தம் (கம்யூனிஸ்டுகள்) கையில் வைத்துள்ளனர்.” என்பது அவரது பொன்னான வரிகள்! (அத்தியாயம்-4-தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு).
இந்த அறிவுரை இன்றளவும் பொருத்தமானது. இதர கட்சிகளோடு கூட்டு சேருகிறபோது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அணுகுமுறை.
முதலாளித்துவக் கட்சிகள் பல தங்கள் தலைமையில் அணிகள் உருவாக்கி, தேர்தல் போட்டி நடக்கிற நிலையில் அனைத்து அணிகளுமே எதிர்காலத்தில் வானத்தை வில்லாக வளைக்கும் வாக்குறுதிகளை வழங்குவதுண்டு. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட குறைந்தபட்ச நோக்கங்களுக்காக ஒரு கட்சியோடு உடன்பாடு கொண்டுள்ள கம்யூனிஸ்டுகள் இந்த சொற்போரில் வழங்கப்படும் வாக்குறுதிகளால் மக்களிடையே உருவாகும் மாயையை கவனிக்கத் தவறக்கூடாது. தேர்தலின்போது ஒரு அணிசேர்க்கையில் உடன்பாட்டு கண்டு இயங்கி வருகிற போதே மாற்றத்திற்கான பாட்டாளி வர்க்க நலன் என்கிற நோக்கில் மாற்று நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, கம்யூனிஸ்டுகள் தங்களது தனித்த பார்வையை பிரச்சாரத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
உக்கிரமான தேர்தல் பிரச்சாரத்தில் தனது அணிசார்ந்த கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தும் வாய்ப்பு குறைவு என்றாலும் கூட தேர்தல் முடிந்த பிறகாவது தங்களது பார்வையை விளக்கி, மக்கள் அடிப்படை மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என்கிற பிரச்சாரத்தை கம்யூனிஸ்ட்கள் அவசியம் கொண்டு செல்ல வேண்டும். விமர்சன நிலைப்பாடுகளை கம்யூனிஸ்ட்கள் கைவிடக் கூடாது என்பதே மார்க்ஸ் எங்கெல்ஸின் வழிகாட்டுதல்.
மறறொன்றையும் கம்யூனிஸ்டுகள் மனதில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பிட்ட நோக்கத்திற்காக அணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும் முதலாளித்துவக் கட்சி அணியின் தலைமையில் இருக்கிறபோது அவர்கள் கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சியை விரும்புவதில்லை; கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவே அவர்கள் முனைந்திடுவார்கள்; அவர்களது வர்க்கத் தன்மை காரணமாக, கம்யூனிஸ்டுகளின் புரட்சிகர பார்வை மக்கள் மத்தியில் பரவுவதை எக்காலத்திலும் முதலாளித்துவ சக்திகள் அனுமதிப்பதில்லை; இந்த அம்சத்தையும் கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி இதர கட்சிகளோடு சேர்ந்து கொள்கை அடிப்படையில் தேர்தல் போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதர கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் கூட தோழர்கள் கடுமையான பணியை மேற்கொள்வதுண்டு. கடந்த காலங்களில் வெற்றி பெற்ற இடங்களிலும் தோல்வியடைந்த இடங்களிலும் கட்சி தனது அமைப்பு பலத்தை வலுப்படுத்திக் கொண்ட அனுபவங்கள் உண்டு. வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் தொகுதியில் இருக்கிற பெருவாரியான உழைக்கும் மக்களை புரட்சிகர லட்சியத்திற்கு அணி சேர்க்க வேண்டிய கடமையையும் மனதில் வைத்து மார்க்சிஸ்டுகள் செயலாற்றுவார்கள்.
லெனினது போராட்டம்
1912ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலைப் பற்றி லெனின் எழுதுகிறபோது தெளிவாகக் குறிப்பிடுகின்றார். “ நவீன அடிமை எஜமானர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் வரை எந்த சீர்திருத்தமும் ஏமாற்று வேலைதான்” என்கிறார் லெனின்.
அதனால்தான் 1917 பிப்ரவரியில் ரஷியாவில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியோடு லெனின் புரட்சிகர செயல்பாடுகளை நிறுத்திடவில்லை. அடுத்து சோசலிசப் புரட்சியை நோக்கிப் பயணித்து 1917 நவம்பரில் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை லெனின் தலைமையில் கம்யூனிஸ்ட்கள் நிறுவினார்கள். எனவே தேர்தலின் போது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு அணி சேர்க்கையில் கம்யூனிஸ்டுகள் இருந்தாலும் தங்களது இறுதி இலக்கை கைவிடக்கூடாது. அந்த இறுதி இலட்சியத்தை நோக்கி வர்க்கங்களை திரட்டும் பணியும், வர்க்கங்களை உணர்வு ரீதியாக அரசியல்படுத்தும் பணியும் மிக முக்கியமானது.
லெனின் முதலாளித்துவ தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென வாதிட்டு, தேர்தல்களில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை மறுத்து வந்த பிரிவினரின் கருத்துக்களை ஒரு புறத்தில் எதிர்த்துப் போராடினார்; மறுபுறத்தில், தேர்தல் வெற்றி, தோல்வி பற்றிய அதீத முக்கியத்துவம் அளிக்கிற கருத்தோட்டங்களையும், சீர்திருத்தவாத நிலைபாடுகளையும் எதிர்த்துப் போராடினார். “இடதுசாரி கம்யூனிசம்;இளம்பருவக் கோளாறு”,”சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” போன்ற நூல்கள் மற்றும் பல கடிதங்கள், குறிப்புகளில் அவர் மார்க்சிய நிலைப்பாட்டை விளக்கினார். லெனினது பொதுவான அந்த வழிகாட்டுதல்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இன்றளவுக்கும் வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.
வர்க்கப் போராட்டம், வர்க்கங்களை அரசியல் படுத்துவது உள்ளிட்ட அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தேர்தல் மட்டுமே முன்னுரிமைக் கடமையாக கருதுகிற பார்வையை லெனின் கடுமையாக கண்டித்தார். இது முதலாளித்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்தார். தேர்தலே பிரதானம் என்ற சந்தர்ப்பவாத மனோபாவத்திற்கு ஆளானவர்கள், ஓட்டுக்கு பணம் உள்ளிட்ட பல நடைமுறைகளை பின்பற்றும் நிலையை இன்று காண்கிறோம். இது மக்களை அடிப்படை மாற்றம் நோக்கிய அரசியலுக்கு கொண்டு செல்லாமல் அரசியலற்ற உணர்வுக்குப் பின்தள்ளிவிடும்.
சோசலிச மாற்று நிகழ்ச்சிநிரலுக்கான கருத்துக்களை பிரச்சாரத்தில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்பது லெனின் அறிவுரை; பெருந்திரளான மக்களை இந்த தேர்தல் திருவிழா ஈர்க்கிற காரணத்தினால், கம்யூனிஸ்டுகள் தங்களது பார்வையை பெருந்திரளான மக்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்று லெனின் கருதினார். ஆனால் முதலாளித்துவ ஜனநாயகத்தில் வாக்களிப்பது என்பது மக்களிடம் உள்ள மிகப் பெரிய ‘அதிகாரம்’ என்கிற மாயைகளை தகர்க்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். முதலாளித்துவத்தில் முதலாளிகளிடம் அரசு அதிகாரம் இருக்கும் வரை வாக்களிப்பது என்பது ஒரு குறைந்தபட்ச ஜனநாயக வாய்ப்புதானே தவிர, அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் கருத்தோட்டத்திலிருந்து மக்களையும் விடுவிக்க வேண்டும்.
கடந்த காலங்களை விட மக்கள் மத்தியில் பொய்மைகளை கட்டவிழ்த்துவிடும் திறன் முதலாளித்துவ கட்சிகளுக்கு அதிகரித்துள்ளது. சாதிய, மத பிடிமானங்களை கிளறிவிட்டு வாக்குகளை பெறுகிற நடைமுறைகளும் அதிகரித்துள்ளன. பெரும் கார்ப்பரேட்களின் பணம், ஊழல் பணம் அனைத்தும் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள் தேர்தல் பணிகளை தங்களது மக்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து வழுவாமல் தேர்தலில் பங்கேற்று செயலாற்ற வேண்டும். தேர்தல் அல்லாத காலங்களில் மேற்கொள்ளும் பணிகள் முக்கியமானவை. குறிப்பாக சமூக அரசியல் பொருளாதார பிரச்னைகளை வர்க்க நலன், வர்க்கப்புரட்சி நோக்கிலிருந்து இடையறாமல் பிரச்சாரம் செய்வதும், இந்தப் பிரச்சாரத்தை மக்களின் உள்ளூர் வாழ்தளத்தில் மேற்கொள்வதற்கு இலட்சக்கணக்கான மார்க்சிய ஊழியர், இளைஞர் பட்டாளத்தை உருவாக்குவதும் அவசிய அவசர கடமைகளாக முன்னிற்கின்றன.
ஏங்கெல்ஸ் வழிகாட்டுதல்
ஜெர்மனியில் சோசலிச சக்திகள் மீதான ஒடுக்குமுறை நிலவி வந்த சூழலிலும் 1884-இல் 5 லட்சம் வாக்குகளைப் ஜெர்மன் தொழிலாளர் கட்சி பெற்றிருந்தது. அதன் செல்வாக்கு 1890-இல் இரண்டு மடங்கானது. அது மீண்டும் 1898-இல் மேலும் இரண்டு மடங்காக உயர்ந்தது. 1912-இல் அக்கட்சி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது. இந்தப் பின்னணியில் ஏங்கெல்ஸ் “பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்” என்ற மார்க்சின் நூலுக்கு 1895-ல் முன்னுரை எழுதினார். ஜெர்மன் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார்:
“அனைவருக்குமான வாக்குரிமை என்பது வேறெந்த பயனையும் அளிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் நமது ஆதரவாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. தொடர்ச்சியாகவும் துரிதமாகவும் நமக்கு அதிகரித்து வரும் ஆதரவு என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில், நம் எதிரிகளுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அவ்வகையில் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகவும் அது மாறுகிறது.”
“நமது சொந்த வலிமையையும், நம்மை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளின் வலிமையையும் அது நமக்கு உணர்த்துவதோடு நம்மை விட்டு விலகி நிற்கும் விரிவான பகுதி மக்களிடையே தேர்தல் நேரத்தில் சென்று நமது கருத்துக்களை பரப்புவதற்கான வாய்ப்பையும் இவை நமக்கு வழங்குகின்றன. நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளைப் பேசுவது போலவே, நமக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும் மக்களிடையே உரக்கப் பேச முடிகிறது. நமது பொதுக்கூட்டங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக மக்களிடம் நாம் பேசுவதை விட மேலும் அதிகமான சுதந்திரத்துடன் நம்மால் பேச முடிகிறது… .”
தேர்தல் உள்ளிட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இயக்க செயல்பாடுகளிலும் முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டம்தான் உயிர்நாடியாக இருக்க வேண்டும். இதுவே நவீன சமூகப் புரட்சியின் மிகப்பெரும் உந்து சக்தி. தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே தனது வர்க்கத்தின் விடுதலையை வென்றடைய முடியும் என்பது மார்க்சியம். இந்த மார்க்சிய இலட்சியப் பாதையிலிருந்து விலகிடாத வகையில் நமது தேர்தல் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.
You may also like
2 comments
Leave a ReplyCancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

எல்லாம் ஓகே தோழர்… நீண்டதொரு தத்துவார்த்த விளக்கம். சிறப்பு. ஒருமுறைதான் படித்தேன். இன்னும் ஓரிரு படிக்க வேண்டும்.
ஆனால் என சந்தேகமும் கேள்வியும் வெரி சிம்பிள். வர்க்க பலாபலனில் ஆகபெரும் சக்தி மாறும்போது ஆட்சியில் பங்கேற்போம் என்றது மேற்காணும் மேதைகளின் காலத்தில் சரியாக இருந்திருக்கும்.
இன்றைய ஏஐ வலைத்தளக்காலத்திலும் அப்படியே பொறுத்தமுடியுமா? உம்… அமைச்சர் வன்னி அரசு செயல்பாடுகளை பாருங்கள். மக்கள் மத்தியிலும் ஊழியர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கையை பாருங்கள்.
திமுக அதிமுக கட்சிகளோடு ஆட்சியை பகிர்ந்து கொள்வது வேறு. அதில் பண்ணயார் தனம் இருக்கும். அதைமீறி செயல்பட இயலாது.
இதில் அப்படியில்லை. சுதந்தரமாக செயல்படலாம்போல இருக்கு! அதை ஏன் பயன்படுத்தக்கூடாது. தவெக மாநில முதலாளிய கட்சி என்றாலும், அதை ஒரு ஜனநாயக சக்தியாக மதிப்பிடுகிறோம்.
தேர்தலில் சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் அடித்து நொறுக்கி உள்ளார்கள். ஆம், அது விஜய் என்ற உச்சத்திற்குதான். என்றாலும், உள்ளாட்சிகளில் பொறுப்பு ஏற்பதைப்போல், மாநிலங்களில் வாய்ப்புகளை பயன்படுத்திடலாம்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு ஸ்தரமற்ற அரசு அமையும்போது, நம்மை நம்பி அந்த அரசு இருக்கும்போது, அதிகாரத்தையும் பகிர்ந்து உழைப்பாளிகளுக்கு நன்மை செய்ய முடியுமா? என்ன வெள்ளோட்டம் பார்க்கலாம்.
அதில் வரும் அனுபவங்களையும் பார்ப்போம். ஏன் அதை கண்டு மிரண்டுபோய் இருக்க வேண்டும்.
இது எனது கருத்து. அவ்வளவே.
1905 சோவியத் புரட்சியில் கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்