திமுக 75: திராவிட அரசியலின் சமூக நீதியும், சாதியச் சவால்களும்
பேரா. கா. அ. மணிக்குமார்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமான மறைந்த கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கட்சியினரின் மகிழ்ச்சி பொங்க சில மாதங்களுக்கு முன்பு நடந்து நிறைவடைந்தது. தமிழ்மொழிப் புலமைக்காகவும், அரசியல் அறிவுக்கூர்மைக்காகவும், துணிச்சலுக்காகவும் அறியப்பட்ட கலைஞர், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவர் தலைமையேற்ற காலத்தில், திமுகவில் மூன்று பெரிய பிளவுகளை சந்தித்தபோதிலும், தனது மறைவுக்காலம் வரை கட்சியை ஒற்றுமையாக, கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
கருணாநிதியின் மறைவினால், ஒரு தலைசிறந்த தலைவரை இழந்துவிட்ட அக்கட்சியால், உட்கட்சிப் பிளவுகளைச் சமாளிக்க முடியுமா என்று பலரும் கேள்வியெழுப்பினர். ஆனால், அதன் அரசியல் போட்டியாளரான பிளவுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் (அ.இ.அ.திமுக) போல அல்லாமல், திமுக முன்னெப்போதைக் காட்டிலும் வலுவாக எழுந்துள்ளது. கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக வலிமை பொருந்திய அரசியல் சக்தியாக நீடிக்கிறது.
1949ஆம் ஆண்டில், தேர்தல் அரசியலில் பங்கேற்பது குறித்த பிரச்சினையில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவிட்ட பின்னர், சி.என். அண்ணாதுரையும் (அறிஞர் அண்ணா) கருத்தியல் ரீதியில் அரசியலில் அவரது வாரிசான கருணாநிதியும் திமுக மூலம் தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். திரைக்கதை ஆசிரியர்களாக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி ஆகிய இருவராலும் கட்சியின் சித்தாந்தத்தை தமிழ் சினிமாவின் வழியாக பிரச்சாரம் செய்ய முடிந்தது. இருவருமே மேடைப் பேச்சுகளில் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள்.
1960களில் நன்கு வேரூன்றியிருந்த காங்கிரஸ் கட்சிக்கு சவாலானதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதில், அவர்களின் பேச்சாற்றல் பெரும் உதவியாக அமைந்தது. ராஜாஜி முன்னெடுத்த கல்வித் திட்டம், திமுகவால் குலக்கல்வித் திட்டம் என்று குற்றம் சாற்றப்பட்டது; மாநிலத்தில் உணவு தானியங்களின் விலை உயர்வுக்கு எதிராகப் போராடியபோது, திமுக தொண்டர்கள் மீது காங்கிரஸ் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட அரசியல் அடக்குமுறை; இந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது (1965) போன்ற காங்கிரஸ் கட்சியின் தவறுகள் திமுக அரசியலின் வெற்றிக்கான வாய்ப்புகளை வலுப்படுத்தின. ஆனால், உற்று ஆராய்ந்தால் இந்தக் காரணிகளால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வரவில்லை என்பது புரியும்.
சமூகநீதி, நல்வாழ்விற்கான தொலைநோக்கு
தமிழ்நாட்டில் கடுமையான உணவு தானியப் பற்றாக்குறை நிலவிக் கொண்டிருந்த நேரத்தில் அண்ணாதுரை தயாரித்திருந்த தேர்தல் அறிக்கையானது பரந்த மக்கள் பிரிவினரை குறிவைத்து தயாரிக்கப்பட்டிருந்தது. 1952ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் தங்களுடைய உண்மையான போட்டியாளர் என்பதைச் சரியாக உணர்ந்து கொண்ட அண்ணாதுரையும், கருணாநிதியும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளாக இருந்த நில உச்சவரம்பு மற்றும் போக்குவரத்து சேவைகளை தேசியமயமாக்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தனர். 1962ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் மீது சட்டமன்றத்தில் பேசிய கருணாநிதி, தனியார் பேருந்து நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டுமென்ற வலுவான வாதத்தை முன்வைத்தார். முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் அவர் மேற்கொண்ட முதல் நிர்வாக நடவடிக்கைகளில் ஒன்றாக, அதனை 1972ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தினார்.
1969ஆம் ஆண்டில் அண்ணாவின் எதிர்பாராத மரணத்தை தொடர்ந்து, உள்கட்சியின் ஏற்பட்ட பூசல்கள் அனைத்தையும் தாண்டி, தொண்டர்களிடம் ஆதரவு கொண்டிருந்த கருணாநிதி, கட்சியின் தலைமையை கைப்பற்றினார். மக்கள்நல அரசை உருவாக்குவதில் அவரின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள் பெரும் அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக் கொடுத்தது. அவர் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். அரசால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவிசய பொருட்களை வழங்குவதன் மூலம் பொது விநியோக முறையினை வலுப்படுத்தினார். குடிசையில் குடியிருந்தவர்களுக்கு வீட்டு வசதி, பட்டா, நிலமற்ற தலித் மக்களுக்கு இலவச நிலம், சமூகத்தின் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும் உயர்கல்வியை சாத்தியமாக்குதல் போன்ற நலத்திட்டங்களையும் அவர் அமுல்படுத்தினார். .
ஈ.வே.ரா பெரியார் விரும்பிய பல முற்போக்கான சீர்திருத்தங்களை, அவருடைய அரசு சமூகச் சட்டங்களாக நிறைவேற்றியது. பெண்களுக்கு சமமான சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம், சுயமரியாதை திருமணங்களுக்கு நிறுவன ஏற்பாடு, பட்டியல் சாதியினரை கோயில் பூசாரிகளாக நியமித்தல் போன்ற சீர்திருத்தங்களும் அவற்றில் அடங்கும். கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டினை உறுதிப்படுத்துவதாக சம்புகம் துரைராசன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினைத் தொடர்ந்து, சமூகநீதி நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்கும் விதத்தில் கருணாநிதி தீர்க்கமாக செயல்பட்டார்.
ஏ. என். சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப் படையில் அவருடைய அரசாங்கம்: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவீதமும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு 18 சதவீதமும் என இட ஒதுக்கீட்டை நிர்ணயித்தது. 1990ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்று பழங்குடியினருக்கு 1 சதவீத இட ஒதுக்கீட்டை கருணாநிதி அறிமுகப்படுத்தினார். வன்னியர்கள் மற்றும் முக்குலத்தோர் போன்ற ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குவதில் அவரின் சமூக நீதிப்பார்வை முக்கியப் பங்கு வகித்தது. பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) டாக்டர் ராமதாஸ் தலைமையில் முன்னெடுத்த பரவலான போராட்டங்களுக்குப் பிறகு, அவரது அரசாங்கம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) மற்றும் சீர்மரபினருக்கு (டிஎன்சி) 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது.
திமுகவிற்கும் அதிலிருந்து பிரிந்து உருவான கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையிலான கடுமையான தேர்தல் அரசியல் போட்டியின் காரணமாக, இறுதியில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 சதவீத சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு சாத்தியமாகியது. கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையால் முஸ்லிம்களுக்கும், அருந்ததியர்களுக்கும் முறையே 3.5 சதவீதம், 3 சதவீதம் – பிற்படுத்தப்பட்டோருக்குள் முஸ்லிம்களுக்கும், பட்டியல் சாதிக்குள் அருந்ததியர்களுக்கும் என – உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் “நிலப்பிரபுத்துவம்”
எனினும், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் திராவிடக் கட்சிகள் எவ்வாறு செயல்பட்டுள்ளன? என்பது ஒரு கேள்வியாகும். பெரியாரின் திராவிடர் கழகமும், கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கமும் மேற்கொண்ட நில சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவம் வீழ்ச்சியடைந்தது என்று திராவிட சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர். இது காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகும்.
உண்மையில், 1930களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெரு மந்தநிலையின் காரணமாக உருவாகிய விவசாய நெருக்கடியின் பின்னணியில்தான் குடிநில சீர்திருத்தக் கோரிக்கை முதன்முதலில் எழத் தொடங்கியது. விவசாய விளைபொருட்களின் விலை 50 சதவீதம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து நிலப்பிரபுக்களும் பெரும் நில உடைமையாளர்களும் சட்ட மேலவையில் வரிச் சலுகைகளுக்காகப் போராடிய அதே நேரத்தில் குத்தகை விவசாயிகளும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும், தங்கள் கோரிக்கைகளுக்காக, தெருக்களில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
குத்தகைப் பாக்கியைச் செலுத்தத் தவறும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், ஜமீந்தார்கள் பலவந்தமாக குத்தகை வசூலிக்கத் தொடங்கினார்கள். இதனை குத்தகை விவசாயிகள் எதிர்த்தார்கள். தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டங்களின் பல இடங்களில் குத்தகை வசூலுக்கு வந்த ஜமீன் அதிகாரிகளின் மீது தாக்குதல்கள் நடந்தன. நியாயமான குத்தகை நிர்ணயம், குத்தகைதாரர் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை காலனி அரசாங்கம் அலட்சியப்படுத்தியதால் ஜமீன் பகுதிகளில் குத்தகைதாரர் போராட்டங்களை வழிநடத்திய சில காங்கிரஸ்காரர்கள் ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரினார்கள். இந்தக் கோரிக்கை இறுதியில் சுதந்திரத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
பொருளாதார மந்தநிலை நிலவிய காலகட்டத்தில், விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பல கிராமங்களில், பண்ணையாட்களிடமிருந்து (கொத்தடிமைகள்) வேலை வாங்க முடியவில்லை என்று மிராசுதார்கள் புகார் கூறினர். உதாரணமாக, நன்னிலம் வட்டம், பாளையம் கிராமத்தில் (தஞ்சாவூர் மாவட்டம்), குத்தகைதாரர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் மிரட்டுவதற்காக அடியாட்களை ஏவிய மிராசுதாருக்கு எதிராக கிளர்ச்சி உருவானது (1939). மிராசுதாரின் வற்புறுத்தலின் பேரில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்களுடன் தலித் குடியிருப்புகளுக்குச் சென்றபோது அங்கு குடியிருந்தோர் காவலர்களை சிறைப்பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், தேவர் (குத்தகைதாரர்கள்), தேவேந்திரகுல வேளாளர்கள் (நிலமற்ற தொழிலாளர்கள்) ஆகிய இரு வேளாண் சாதிகளுக்கும் இடையிலான மோதல் கலவரத்திற்கு வழிவகுத்தது.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீனிவாச ராவ், மணலி கந்தசாமி ஆகியோர் 1939ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் விவாசய தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1930களில் குத்தகை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இணைந்து போராடும் பாரம்பரியம் இருந்தது. பல தாலுகாக்களில் அகில இந்திய கிசான் சபா கிளைகள் நிறுவப்பட்டபோது (1943) கூட இந்த பாரம்பரியம் தொடர்ந்ததாக சமூகவியலாளர் சரஸ்வதி மேனன் சான்றளிக்கிறார். எண்ணற்ற குத்தகைதாரர்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் பண்ணையாட்களின் பரிதாபகரமான நிலையைப் போலவே இருந்தன என்று மேனன் குறிப்பிடுகிறார்.
உலகப்போருக்கு பிந்தைய பணவீக்கத்தினால் உண்மை ஊதியத்தில் ஏற்பட்ட சரிவு, குத்தகைத் தொகையில் ஏற்பட்ட உயர்வு ஆகிய இரண்டையும் எதிர்த்த விவசாய இயக்கத்தின் போராட்டங்கள் போர்க்குணத்துடன் நடந்தன. 1946ஆம் ஆண்டு முதல் தெலங்கானாவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் விரிவடைந்து சென்றதால் எச்சரிக்கையடைந்த காங்கிரஸ் அரசாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் விவசாய சங்கங்களையும் சட்டரீதியாக தடை செய்தது.
தஞ்சாவூரில் விவசாயத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களப்பால் குப்புசாமிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் இறந்ததைத் தொடர்ந்து, கிழக்கு தஞ்சாவூரின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வன்முறையை அடக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் (ஏப்ரல் 1948). இந்த நிகழ்ச்சிப் போக்குகளில், தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான நடேசன் கொல்லப்பட்டார்.
எவ்வாறாயினும், குத்தகைவிவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நீண்ட நெடிய போராட்டங்கள், 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் நாள், வரலாற்று சிறப்புமிக்க மாயவரம் ஒப்பந்தம் கையெழுத்தாக வழிவகுத்தன. மானுடவியலாளர் கேத்லீன் கோவின் கூற்றுப்படி, “இந்த ஒப்பந்தம், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் திருப்திகரமாக இருந்தது”. இந்த உடன்பாடுதான் 1952ஆம் ஆண்டு தஞ்சாவூர் குத்தகைதாரர்கள் மற்றும் பண்ணையர்கள் அவசரச் சட்டத்திற்கு வழிவகுத்தது. இந்த சட்டமானது பயிரிடும் குத்தகைதாரரின் குத்தகையை விளைச்சலில் ஐந்தில் மூன்று பங்காக நிர்ணயித்ததுடன், விவசாய கூலியை மூன்றில் இரண்டு பங்கு உயர்த்தியது. கேத்லின் கோ 1951-53 ஆண்டுகளிலும் அதன் பின்னர் 1976ஆம் ஆண்டிலும் தஞ்சாவூர் கிராமங்களில் (கும்பாப்பேட்டை மற்றும் கிரிப்பூர்) கள ஆய்வு மேற்கொண்டார்.
நிலமற்ற விவசாயிகள் என்ற வகையில் தலித்துகள் கம்யூனிஸ்டு தலைமையின் கீழ் எத்தகைய ஆதாயங்களைப் பெற்றார்கள் என்பதை கேத்லின் கோ பின்வருமாறு விவரிக்கிறார்:
விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டபோது (1939) 200 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இந்த உறுப்பினர் எண்ணிக்கை 1973 ஆம் ஆண்டுல் 45,000 ஆக அதிகரித்திருந்தது. 1951 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட அனைத்து தலித் குழந்தைகளும் குழந்தைத் தொழிலாளர்களாக வயல்களில் வேலை செய்தனர். ஆனால், கேத்லின் கோ அப்பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தபோது குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியையும், ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளியில் சேர்க்கப்பட்ட தலித் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் அவர் கவனித்தார். 1970களின் முற்பகுதியில் கிழக்கு தஞ்சாவூரிலேதான் மிக உயர்ந்த ஊதியம் நிலவியதாக கருதப்பட்டது. எனவே, விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்தபோது, அது, இப்பகுதியை, குழுவின் வரம்பிலிருந்து விலக்கியது.
1952ஆம் ஆண்டில் பல கிராமங்களில் பண்ணையாட்களை தவறு செய்ததாகக்கூறி சவுக்கால் அடிப்பது வழக்கம். ஆனால் 1976ஆம் ஆண்டு வாக்கில் ஒருவர் பண்ணையாளை அடிப்பதைப் பார்ப்பது அரிதாகியிருந்தது. 1952ஆம் ஆண்டில், கீழ்ப்படியாத பண்ணையாட்கள் மாட்டுச் சாணக் கரைசலை (சாணிப்பால்) குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். 1976வாக்கில், இந்த வெறுக்கத்தக்க நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது. பண்ணை அடிமைமுறை படிப்படியாக இல்லாமல் ஆகியது.
1952 முதல் தலித் குடியிருப்புகளில் கிடைத்த பொதுவசதிகள் மேம்பட்டிருந்தன. பெரும்பாலான பகுதிகளில் நன்கு கட்டப்பட்ட சாலைகள், மின்சார தெரு விளக்குகள் மற்றும் குடிநீர், குளங்களுக்கு பதிலாக புதிதாக தோண்டப்பட்ட கிணறுகள் இருந்தன. தலித் தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட சாதியக் கட்டுப்பாடுகள் “கணிசமாகக் குறைந்துள்ளன” என கேத்லின் கோ எழுதுகிறார். அவர்கள் தெருக்களில் சுதந்திரமாக நடக்கலாம் என்பதுடன், சட்டையும், கணுக்கால் நீள ஆடைகளும் அணியலாம் (முழங்கால் வரையே ஆடை ஆணிய முடியும் என்று முன்பிருந்த நிலை மாறியிருந்தது ).
கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை ஏற்று நடத்திய தலித் மக்களின் போராட்டங்கள் சமூக ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர உதவின. 1961ஆம் ஆண்டில் 30 நிலையான ஏக்கர் என்ற அளவில் தொடங்கி, 1972 ஆம் ஆண்டில் 15 நிலையான ஏக்கர் என்ற அளவு நிர்ணயிப்புடன், நிலவுடைமைக்கு விதிக்கப்பட்ட உச்சவரம்புக்கு, தலித் விவசாயத் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்களே காரணம் என்று கோ கூறினார்.
ஆனால் 1961,1972ஆம் ஆண்டுகளில் குத்தகைச் சட்டமும், நில உச்சவரம்பு சட்டமும் அரசாங்கத்தால் மிக மோசமாக செயல்படுத்தப்பட்டதால், அதிகார வர்க்கத்தை உடந்தையாக்கிக் கொண்டு, நிலஉரிமையாளர்கள் பெரிய அளவில் பினாமி பரிவர்த்தனைகள் மூலம் இச்சட்டங்களை தவிர்க்க முடிந்தது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு மறுவிநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட சொற்ப உபரி நிலம் கூட சாகுபடிக்கு ஏற்றதாக இல்லை. மேலும் சில நிலவுடமையாளர்கள் தங்கள் நிலத்தை குத்தகைதாரர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றதின் மூலம் சட்ட வரம்பிலிருந்து தப்பித்தார்கள். எனவே, நிலச்சீர்திருத்தத்தின் பயனாளிகளாகிய குத்தகைதாரர்கள், தஞ்சாவூரில் கள்ளர்கள், தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர், வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் எனலாம். தலித் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில், சக்திவாய்ந்த சாதீயக் குழுக்களோடு கூட்டணி வைத்துக் கொண்டதாலேயே தேர்தல் அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் சாத்தியமாகியுள்ளது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நில உடைமையில், பிராமணர்களின் ஆதிக்கம் தஞ்சாவூரில் நிலவியதை மறுக்க முடியாதது. ஆனால் முதலியார், மூப்பனார், வெள்ளாளர், நாயுடு, உடையார், கள்ளர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த நிலக்கிழார்களும் கணிசமாக இருந்தனர். நில உச்சவரம்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் செலுத்திய மாவட்டத்தின் மத்திய பகுதியில், பிராமண நிலப்பிரபுக்கள் 1,200 முதல் 2,000 ஏக்கர் வரை நிலம் வைத்திருந்தனர், அதே நேரத்தில் பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் 15,000 ஏக்கர் அளவுக்கு நிலம் வைத்திருந்தனர்.
சமூகவியலாளர் ஆந்த்ரே பித்தே 1962ஆம் ஆண்டில் தனது ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமமான ஸ்ரீபுரத்திற்கு (தஞ்சாவூர் மாவட்டம்) விஜயம் செய்தபோது, ஒரு காலத்தில் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்கள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள், பிராமணரல்லாத, நிலவுடைமை கொண்ட உயர் குடியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் கண்டார். ஸ்ரீபுரத்தில், உள்ளூர் கிராம பஞ்சாயத்தின் தலைவராக ஒரு கள்ளர் சாதியைச் சேர்ந்த தலைவர் செயல்படுவதை பித்தே கவனித்தார். வெள்ளாளர்களும் கள்ளர்களும் சம எண்ணிக்கையில் இருந்தபோதிலும், அருகிலுள்ள கிராமங்களில் அவர்களுடைய சாதியினரின் எண்ணிக்கை வலிமை காரணமாக கிராம அரசியலில் கள்ளர்களே ஆதிக்கம் செலுத்தினர் என்று பித்தே குறிப்பிடுகிறார்.
1976ஆம் ஆண்டில், நிலச் சீர்திருத்தங்கள் இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்பட்ட பிறகும், பல குடும்பங்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை வைத்திருப்பதை கேத்லின் கோ கண்டார். 3,000 ஏக்கருக்கும் அதிகமான அளவு கொண்ட மூன்று குடும்ப எஸ்டேட்களையும், சுமார் 500 ஏக்கர் கொண்ட பல எஸ்டேட்களையும் அவர் கண்டார். இந்த நில உரிமையாளர்கள், பினாமி பரிவர்த்தனைகள் மூலம், தங்கள் குத்தகைதாரர்கள் அல்லது தொழிலாளர்களின் பெயரில் நிலங்களை பதிவு செய்திருந்தனர்.
சாதி மற்றும் “மோதல்” அரசியல்
காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, திராவிடக் கட்சிகளின் ஆட்சியாக இருந்தாலும் சரி, வர்க்க ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ நடைபெறுகின்ற போராட்டங்களை சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாகவே அரசுகள் தொடர்ந்து கையாண்டு வந்தன. 1995இல் அ.இ.அ.திமுகவைப் போலவே, 1997இல் தென் தமிழகத்தில் வெடித்த சாதிக் கலவரத்தால் திமுக நிலைகுலைந்தது. இதைச் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகவே கருதிய கருணாநிதி, மதுரையில் தென்னக ஐ.ஜி. அலுவலகத்தை அமைத்தார். எங்கெல்லாம் மக்கள் அநீதியான சமூக சூழல்களில் வாழ்கிறார்களோ, எங்கெல்லாம் தங்கள் முழுத்திறனை உணரும் வாய்ப்பை இழக்கிறார்களோ, அங்கெல்லாம் சமூக வன்முறை தவிர்க்க முடியாதது என்பதை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி தன்னை பிராமணரல்லாதார் கட்சியாக அறிவித்துக் கொண்டது. பிராமணரல்லாதோர் என்பவர்கள் ஒரு சமூகப் பிரிவினர் அல்ல. தமிழ்நாட்டின் சூழலில், நீதிக்கட்சி அரசியலில் முன்னணியில் இருந்தவர்கள், முதலியார்கள், செட்டியர்கள், வேளாளர்கள் போன்ற சமூகங்களைச் சேர்ந்த, பிராமணரல்லாத உயர் வர்க்கத்தை சேர்ந்த உயர் சாதியினரே என்பது வெளிப்படை. இக்கட்சி வன்னியர்கள், நாடார்கள், முக்குலத்தோர் (தேவர்கள்) போன்ற பெரிய சமூகப் பிரிவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, திராவிடக் கட்சிகள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்ற, 1921 மற்றும் 1922 ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணைகள், சிறு எண்ணிக்கையிலான பிராமணரல்லாத, உயர் சாதியினருக்கு மட்டுமே உதவியாக இருந்தன.
1969ஆம் ஆண்டில், இடஒதுக்கீட்டுக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு, கருணாநிதி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஏ. என். சட்டநாதன் ஆணையம், “படையாச்சி, கள்ளர், மறவர் போன்ற வேளாண் சாதிகளின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம்…. கைகோளார் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், நாவிதர்கள் மற்றும் சலவையாளர்கள் உள்ளிட்ட சிறிய சாதிகள், மோசமான இழிவான நிலைமைகளில் வாழ்கின்றனர்; சுதந்திரத்திற்கு முன்பு பட்டியல் சாதிகளிடையே நிலவிய அவல நிலைமைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முடியாத நிலைமைகளில் வாழ்கின்றனர்” என்றது.
மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அம்பாசங்கர் ஆணையமானது தனது அறிக்கையில் (1983) தொழிற்கல்வி படிப்புகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களில், நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர் குறைந்த எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (222 பேரில் 34 பேர்) என்று சுட்டிக்காட்டியது.
டாக்டர் ராமதாசின் தலைமையில் பா.ம.க நடத்திய வன்னியர்களின் போராட்டத்தையொட்டி மிகவும் பிற்படுத்தப்பட்ட-சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை கருணாநிதி அறிமுகப்படுத்தினார். அண்மையில் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியின்படி, எம்.பி.பி.எஸ் படிப்பில் பெரும்பான்மையான இடங்களை வன்னியர்கள் கைப்பற்றியுள்ளனர். ஏராளமான சாதி உட்பிரிவினர்கள் இன்னும் புறக்கணிக்கப்பட்ட உணர்வுடனே உள்ளனர் – அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந் தாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி. ஏனெனில் மாநிலத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கையானது, அதனால் கிடைக்கும் பயன்களை சீரற்ற விதத்திலேயே விநியோகித்துள்ளது.
சாதி அடிப்படையிலான அணிதிரட்டலில் டாக்டர் ராமதாசிற்கு கிடைத்த வெற்றியின் விளைவாக, முக்கிய சாதிபிரிவினர்கள் அரசியல் அமைப்புகளை உருவாக்கத் தூண்டப்பட்டுள்ளனர். புதிய நீதிக்கட்சி (முதலியார்), கொங்குநாடு மக்கள் கட்சி (கவுண்டர்), புதிய மக்கள் தேசக் கட்சி (யாதவர்கள்), சமத்துவ மக்கள் கட்சி (நாடார்) ஆகியவை குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் ஆகும். தேசிய அரசியல் நீரோட்டத்தில் பிரதான கட்சிகளால் நோகடிக்கப்பட்ட தலித் மக்கள், தலித் சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம், ஆதித்தமிழர் பேரவை போன்ற கட்சிகளின் கீழ் தங்கள் சாதித் தலைவர்களின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.
சமூகரீதியில் பின்தங்கிய சமூகங்களுக்கு, ஆட்சி அதிகாரத்தில் குறைவான பிரதிநிதித்துவமே இருப்பதாலும், அரசு ஆதரவினை சமமாக பெறும் உரிமை மறுக்கப்படுவதாலும், தலித் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளிடம் சங்கடப்பட வேண்டியுள்ளது . இடைநிலைச் சாதியினரால் தலித்துகள் மீதான சாதிய வன்கொடுமைகள் தொடர்வதனால் அவர்களின் விரக்தி உணர்வுகள் மேலும் அதிகப்படுகின்றன. நிறுவனரீதியான சமமான அதிகாரப் பகிர்வு கோருவதால், சாதிகளுக்கிடையே எழக்கூடிய பகைமைகள் தமிழ்நாட்டில் “மோதல் அரசியலை” தீவிரப்படுத்தியுள்ளன, இது, விரைவில் மாநிலத்தை நிர்வகிப்பதில் சிக்கலை உருவாக்கி, அரசை நெருக்கடியில் தள்ளக்கூடும்.
ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் சமூக நீதி நிர்வாகத்தின் முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டுமென்று விரும்பும் பின்னணியில், இந்த அமைப்புரீதியான சவால்களை எதிர்கொள்ள முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டியிருக்கிறது..
நன்றி: பிரண்ட்லைன் (அக்டோபர் 4, 2024 இதழ்)
கா. அ. மணிக்குமார் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
