ஈஎம்எஸ்.: மார்க்சிய வழிகாட்டி
பிரகாஷ் காரத்
தமிழாக்கம்: சேலம் சோபனா
(ஆங்கில தத்துவார்த்த ஏடு மார்க்சிஸ்ட் 2009 ஜூலை-செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை )
மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிய அறிவுஜீவியுமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஈஎம்எஸ். என உலகளவில் அறியப்பட்ட அவர், ஜூன் 13, 1909இல் பிறந்து, மே 12, 1998இல் மறைந்தார். ஈஎம்எஸ். ஒரு கட்டுப்பெட்டியான நம்பூதிரி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் மாணவராக இருந்தபோது, பொதுவாழ்வில் அவரது முதல் நடவடிக்கை நம்பூதிரி சமூகத்தினுள் நிலவி வந்த பிற்போக்கான பழக்கவழக்கங்களுக்கு எதிராக, சமூக சீர்திருத்தங்களுக்காக நடத்தியப் போராட்டங்களே ஆகும். அதன் பின்னர் அவர், சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார். சோசலிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஈஎம்எஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மார்க்சியம் அவரை கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டுவந்து சேர்த்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களுள் ஈ.எம்.எஸ். ஒருவராவார். 1957ஆம் ஆண்டு கேரளாவில், நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசின் மாநில முதலமைச்சராக இருந்தார். ஈ.எம்.எஸ். இரண்டாவது முறையாக 1967 முதல் 1970 வரை ஐக்கிய முன்னணி அரசிற்குத் தலைமைதாங்கி மீண்டும் முதலமைச்சராக இருந்தார். 1963இல் ஈஎம்எஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சி.பி.ஐ.(எம்) உருவானதும், ஈஎம்எஸ் அதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரானார். 1977 முதல் 1992 வரை கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். ‘பிரபாதம்’ என்ற சோசலிச பத்திரிகையின் ஆசிரியராக 1930களின் நடுவில் பொறுப்பேற்றதிலிருந்து தனது வாழ்நாளின் இறுதிவரை, ஈஎம்எஸ் பல கம்யூனிஸ்ட் செய்தித்தாள்களிலும் இதழ்களிலும், ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், முத்திரை பதிக்கும் வகையில் பங்களித்தார். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய அளவுக்கு இந்தியாவில் வேறு எந்த கம்யூனிஸ்ட் தலைவரும் எழுதியதில்லை. மலையாளத்தில் ஈஎம்எஸ் படைப்புகள் நூறு புத்தகங்களாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
ஈஎம்எஸ்ஸின் அரசியல் செயல்பாடுகள் குறித்து இங்கு தரப்பட்டுள்ள மிக சுருக்கமான வரைபடம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம், தத்துவம், அரசியல், இந்தியக் கலாச்சாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய வளம் மிக்க பன்முகத்தன்மைகொண்ட பங்கிற்கு நியாயம் வழங்க இயலாது .
ஒரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் பணிகள் மார்க்சிய தத்துவம் மற்றும் நடைமுறையுடன் இணைக்கப்பட்டால், எவ்வாறு மிகப்பெரிய தாக்கத்தைப் பெறுகிறது என்பதற்கு ஈஎம்எஸ் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு. ஈஎம்எஸ் போன்ற அலாதியான அறிவுத்திறன் மற்றும் ஆழமான பார்வை கொண்டவரின் ஆக்கபூர்வ நடைமுறை ஒரு வலுவான இயக்கத்தை உருவாக்குகிறது. தன் சொந்தப் படைப்பாற்றலுடன் நடைமுறைப்படுத்தும் ஈ.எம்.எஸ். போன்றவர் கைகளில், அது ஒரு துடிப்பான சக்திவாய்ந்த இயக்கமாக உருவாகிறது. ஈஎம்எஸ்ஸின் ஆக்கபூர்வமான சிந்தனையும் செயல்பாடுகளும் மக்களை இயக்கியது. வேறு யாரும் செய்யாத வகையில் இருபதாம் நூற்றாண்டில் கேரளாவின் வரலாற்றை மாற்றியது. கேரளா மற்றும் இந்தியாவின் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தைப் பயன்படுத்துவதில், அவரது சமகாலத்தவர்களை விட அவர் முந்தியிருந்தது, ஈஎம்எஸ்ஸை ஒரு தலைசிறந்த தலைவராக்கியது. அவரது இரண்டாவது தன்னிகரற்ற திறன், தனது கருத்துகளையும் தனது கட்சியின் கருத்துகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதில் அவருக்கிருந்த இயல்பான திறமை, அரசியல் நடவடிக்கைகளில் மக்களைக் கூட்டாகப் பங்குபெறச் செய்தது.
பாட்டாளிவர்க்கக் கட்சியின் கொள்கைகளை, தத்துவ அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதில் ஈஎம்எஸ் ஈடுஇணையற்ற பங்களிப்பைச் செய்தார். தற்கால சமூகத்தைப் பகுப்பாய்வு செய்வதில் ஈஎம்எஸ்ஸிடம் மலர்ந்த திறமைகள், அவர் மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படைக் கூறுகளை துவக்க நிலையில் அறிந்திருந்த காலத்திலிருந்தே தெரிகிறது. 1934இல் மலபாரின் இளம் தீவிர காங்கிரஸ்காரர்களுக்கு, சோசலிசக் கொள்கைகளைக் கடைப்பிடித்த ஜெயப்பிரகாஷ் நாராயணின் “ஏன் சோசலிசம்” என்ற புத்தகம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, சோசலிச சிந்தனைகளுக்கான சாளரத்தைத் திறந்து வைத்தது. அதற்குப் பிறகு, ஈஎம்எஸ் மற்றும் அவரது சமகாலத்தவர்களான பி.கிருஷ்ண பிள்ளை, ஏ.கே.கோபாலன், கே.தாமோதரன் மற்றும் பலர், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் (சி.எஸ்.பி.) இணைந்தனர்.
சி.எஸ்.பி. மூலம் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்புகள் மற்றும் 1937இல் கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் குழுவின் உருவாக்கம் ஆகியவற்றால் மார்க்சியம் பற்றிய சில புத்தகங்கள் ஈஎம்எஸ்ஸிற்குக் கிடைத்தன. அதிலிருந்து மார்க்சிய தத்துவத்தை படிக்கும் முயற்சிகள் தொடங்கி, அதை கேரள சமூகத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப பயன்படுத்தியதன் மூலம், பின்னர் அது புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு விரிவுபடுத்தப்பட்டது. 1945 வரையிலான ஆரம்ப ஆண்டுகளில், நம்பிக்கைக்குரிய தொடக்கங்களை நாம் காண்கிறோம். மலபார் விவசாய சமூகத்தின் பகுப்பாய்வு, கேரள சமூகத்தின் வரலாற்று வளர்ச்சி மற்றும் மலையாள மொழிவாரி-தேசிய இனப் பிரச்சினை அனைத்தும் இடதுசாரி இயக்கத்தை வடிவமைக்கப் பயன்பட்டன.
ஈஎம்எஸ்ஸின் அரசியல் சிந்தனையின் ஆக்கபூர்வமான உயிர்சக்தி, அவர் வாழ்க்கையின் இளம்பருவத்தில் அதைச் செயல்படுத்தத் தொடங்கிய முறையிலிருந்து உருவானது. அவர் திட்டவட்டமான சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் சமூகத்தில் உள்ள பல்வேறு வர்க்கங்களின் மீதான அவற்றின் தாக்கம் ஆகியவற்றை உற்றுநோக்கி, இந்தப் பகுப்பாய்விலிருந்து தனது செயல்திட்டத்திற்கு வழிகாட்டும் தத்துவார்த்த முடிவுகளை எடுப்பார்.
விவசாயப் புரட்சியின் தத்துவவாதி
மலபாரில் விவசாய சமூக உறவுகளைக் கையாள்வதில் அவர் முதன்முதலில் கடைப்பிடித்த முறை இதுதான். அதன் விளைவாக, 1939இல் அன்றைய மதராஸ் சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட மலபார் குத்தகைமுறை விசாரணைக் குழுவின் அறிக்கையை மறுதலிக்கும் வகையில் ஒரு குறிப்பை அளித்தார். ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த ஆவணம் மலபாரில் உள்ள ஜென்மி-நிலப்பிரபு முறையின் தன்மையையும், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் மீதான அதன் தீயவிளைவுகள் குறித்தும் அவரது தீர்க்க தரிசனத்தையும், நுண்ணறிவையும் இன்றும் வெளிப்படுத்துகிறது. இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், மலபார் மாகாணத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக வளர்ந்து வந்த விவசாயிகள் இயக்கத்திற்கு ஈ.எம்.எஸ். நடைமுறை வழிகாட்டுதலை வழங்கினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்வரை நீடித்த, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள், மலபாரை நாட்டின் விவசாய சங்கங்களின் வலுவான கிளைகளில் ஒன்றாக மாற்றியது.
கேரளாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் ஈட்டிமுனையாக விளங்கிய இந்த சக்திவாய்ந்த இயக்கத்தின் அனுபவத்தின் அடிப்படையில்தான், அகில இந்திய விவசாய சங்கத்தில் இணைச்செயலாளராக ஈஎம்எஸ் தனது பங்களிப்பைச் செய்தார். 1953 இறுதியில் அவர் டெல்லியில் கட்சி மையத்தில் சேர்ந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் விவசாய முன்னணியும் ஒன்று. “விவசாயிகள் மத்தியில் நமது பணிகள்” என்ற, 1954ஆம் ஆண்டின் மத்தியக்கமிட்டித் தீர்மானம், இம்முன்னணியில் வேலை செய்வதற்கான பரந்த சரியான வழிகாட்டுதலை அளித்தது; இந்த ஆவணத்தை உருவாக்குவதில் ஈ.எம்.எஸ். முக்கிய பங்கு வகித்தார்.
நவீன கேரளத்தின் அடித்தளம்
தேசிய இயக்கத்தின் முதலாளித்துவ மேலாதிக்கத் தலைமையால் முன்வைக்கப்பட்ட ஒற்றைத் தேசம், ஒற்றைக் கலாச்சார மாதிரிக்கு மாறாக, இந்தியாவில் மொழியியல் – தேசிய இனப் பிரச்சினை குறித்த ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகளே. மலையாளம் பேசும் மக்களின் மொழிவாரி-தேசியஇன வளர்ச்சியை கண்டறியும் பணியை மேற்கொண்டு, ஒருங்கிணைந்த கேரள மாநிலத்தை உருவாக்குவதற்கான தத்துவார்த்த அடிப்படையை ஈஎம்எஸ் வழங்கினார். 1945ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒன்றே கால் கோடி மலையாளிகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பிரசுரம், பின்னர் திருத்தப்பட்டு, முழு அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 1952ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் கேரளாவில் தேசியப் பிரச்சனை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
இந்தியாவிற்குள் தேசியஇனப் பிரச்சினைக்கான மார்க்சீய லெனினிய அணுகுமுறையை, ஒரு குறிப்பிட்ட தேசிய இனப்பிரச்சினையை திட்டவட்டமாக அறிந்து கொள்ள பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகும். ஐக்கிய கேரளத்திற்கான அவரது வாதம், பி.சுந்தரய்யாவின் விசாலாந்திரா உருவாக்கம் மற்றும் பவானி சென்னின் நதுன் பங்ளா உருவாக்கம் பற்றிய படைப்புகளைப் போலவே இருந்தது. ஆனால், அதன் முக்கியத்துவம் என்னவெனில், கேரளாவில், காலனித்துவம் வரை, சமூக-பொருளாதாரக் கட்டமைப்பு பல்வேறு நிலைகளில் எவ்வாறு வளர்ந்தது என்ற ஆழமான வரலாற்றுப் பார்வை, ஈஎம்எஸ்ஸின் எழுத்தில் இருந்தது. இது, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் ஆகிய பகுதிகளை இணைத்து ஒரு மொழிவாரி மாநிலமாகக் கேரளாவை உருவாக்குவதற்கும், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திலிருந்து மக்களை விடுவிப்பதற்குத் தேவையான பழமையான சமூகப் பொருளாதார உறவுகளை விட்டொழிப்பதற்கும், உற்பத்தி மீதான தளைகளை உடைப்பதற்கும், அடிப்படையாக அமைந்தது.
சாதி தொடர்பான வர்க்கப் பகுப்பாய்வு
இந்தியாவில் சாதிப் பிரச்சினையை ஈ.எம்.எஸ். கையாண்டவிதத்திலும் இதே அணுகுமுறையைக் காணலாம். ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் காலனித்துவப்படுத்திய காலம் வரையிலான பண்டைய கேரள சமூகத்தில், சாதியின் பங்கு பற்றிய வரலாற்றுப்பூர்வ ஆய்வுக்குப் பிறகு, கேரள நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை ஜாதி-ஜென்மி-நடுவழி மேதாவித்வம் (உயர் சாதி- நிலப்பிரபு-படித்த மேல்நடுத்தர-வர்க்க) ஆதிக்கம் கொண்டதாக இருந்தது என்று ஈஎம்எஸ் முடிவுக்கு வந்தார். சாதி எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களில் தீவிரப் பங்கேற்பாளராக இருந்து, பின்னர் வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்ப முன்னோக்கி நகர்ந்ததால், ஈ.எம்.எஸ்., தனது நுண்ணறிவினால், இந்த ஆரம்ப அனுபவத்தை ஒருங்கிணைத்து, வர்க்க – சாதி உறவுகள் குறித்த சரியான நிலைப்பாட்டை உருவாக்க முடிந்தது. பாட்டாளி வர்க்க இயக்கம், எந்த அடிப்படையில் சாதிப் பிரச்சினையைக் கையிலெடுக்க வேண்டும் என்ற அவரது வாதம், சமூகத்தில் சாதிப் பிளவுகள் கடுமையாக இருக்கும் இன்றைய காலகட்டத்திலும் மாறாத பொருத்தப்பாடுடையதாக உள்ளது.
சாதி மற்றும் வர்க்கத்திற்கான மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையை ஈஎம்எஸ் விளக்கினார். பாட்டாளி வர்க்க இயக்கம் மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளின், குறிப்பாக தலித்துகளின், ஆழமான விருப்பங்களை அடையாளம் கண்டு, சமூக விடுதலை மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டங்களில் இணைத்திட வேண்டும் என்று அவர் விரும்பினார். 1940களில், கேரள சமூகத்தை உற்று நோக்கி, அவர் சாதி, வர்க்கம் மற்றும் சொத்துடமை உறவுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டினார்; ஜனநாயக மற்றும் விவசாயப் புரட்சிக்கு சாதி எதிர்ப்புக் கிளர்ச்சிகளைப் பயன்படுத்துவதன் அதிமுக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அவ்வாறு செய்யும்போது, வர்க்க அமைப்புகளைக் கட்டியெழுப்பவும், அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமைக்காகவும் அவர் உறுதியுடன் பாடுபட்டார். உயர்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட சாதி அமைப்புகளின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்துகொண்டு, கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் முன்னுரிமை அளித்தனர்.
ஈஎம்எஸ் இருமுனைப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தைப் பேசினார்:
“நாங்கள் அப்போதும் இருமுனைப் போரை நடத்த வேண்டியிருந்தது; இப்போதும் நடத்தவேண்டியிருக்கிறது. எங்களுக்கு எதிராகக் களமிறங்குபவர்கள், ஒருபுறம் நாங்கள் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் நலனுக்காக ‘குறுங்குழு வாதத்தை’ ஆதரிக்கிறோம் என்று கூறி ‘தேசிய, சோசலிசக் கொள்கைகளில் இருந்து விலகிச்செல்வதாக’ குற்றம் சாட்டுகிறார்கள். இன்னொரு சாரார், ஒடுக்கப்பட்ட சாதி மக்களைக் காக்கிறோம் என்ற பெயரில், சாதி, சமூகம், இன்னும் பல வேறுபாடுகள் கடந்த உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் என்ற மைய நீரோட்டத்திலிருந்து உண்மையில் அவர்களைத் தனிமைப்படுத்துகிறார்கள்.” (மீண்டும் சாதிகள் மற்றும் வர்க்கங்கள் பற்றி,தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி – 1, ப.184)
ஈ.எம்.எஸ். எப்போதும் முன்வைத்த நிலைபாடு
“எங்கள் கட்சியும் அதன் செயல்பாட்டாளர்களில் ஒருவரான நானும், வர்க்கப் போராட்டம் என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் உறுதியாக நின்று, ஒவ்வொருவரும் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக சுரண்டப்படுபவர்களை ஒன்றிணைக்கும் தேவைகளுக்கு, சாதி ஒடுக்குமுறைப் பிரச்சனையை உட்படுத்துகிறோம்.” (அதே நூல், பக்.190)
முதலாளித்துவத்தின் வளர்ச்சி மற்றும் பழைய சமூக அமைப்பின் முறிவு ஆகியவற்றால், சொத்து உடமையாளர்களாக இருந்த உயர் சாதியினரில் சில பகுதியினர் பரமஏழைகளாக்கப்பட்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தின் வரிசையில் சேர்ந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். பின் ஒரு கட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சில பிரிவினர் (அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சமூக-பொருளாதார மாற்றங்களால் பயனடைந்து, கல்வி, வேலை வாய்ப்புகள் அல்லது மேம்பட்ட பொருளாதார நிலைமைகள் மூலம் சமூக ஏணியில் மேலேறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 1957இல் கேரள முதலமைச்சராக இருந்தபோது ஈஎம்எஸ் தலைமை தாங்கிய நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் அறிக்கையில், முதன்முதலில் இந்தப் புரிதலைத்தான் அவர் முன்வைத்தார். இந்த அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தொடரவும், இவர்களில் உயரடுக்குப் பிரிவினரை இட ஒதுக்கீட்டின் பலனில் இருந்து விலக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. “கிரீமி லேயர்” என்ற கருத்துரு ஒரு விவாதப்பொருளாக மாறுவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஈஎம்எஸ் அத்தகைய அணுகுமுறையை வகுத்திருந்தார். 1989இல் மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடஒதுக்கீடு குறித்து ஈஎம்எஸ் விரிவுபடுத்திய நிலைப்பாடு, உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவுகளின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மேற்கூறிய வர்க்கப் புரிதலின் அடிப்படையில் அமைந்தது. ஆனால் இந்த உழைக்கும் மக்கள் திரளுக்குள், வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சாதிய அமைப்பால் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சில பிரிவுகளும் இருப்பதை மார்க்சிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும். பல பத்தாண்டுகளாக நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் அரசியல் சுதந்திரத்திற்குப் பிறகும் இந்த ஒடுக்குமுறை ஒழிக்கப்படவில்லை. இந்த மக்கள் திரளைப் பொது இயக்கத்திற்குள் கொண்டுவந்து, இறுதியில் சாதியத் தடைகளைத் தகர்ப்பதற்காகத்தான், மார்க்சியவாதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்ட நோக்கங்களோடு கூடிய இடஒதுக்கீட்டை ஒரு கருத்தாக ஆதரித்தனர். இடஒதுக்கீட்டை எதிர்க்கும் உயர்சாதி ஆதிக்கவாதிகளை ஈஎம்எஸ் உறுதியாக எதிர்த்ததுடன், ‘பின்தங்கிய’ சமூகங்களுக்குள் வளரும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கூறுகளின் தொங்கு சதையாக நாமும் மாறிவிட அனுமதிக்கக் கூடாது” என்றும் பாட்டாளி வர்க்கக் கட்சியை எச்சரித்தார்.
பெண்கள் இயக்கம்: விடுதலைக்கான தொலைநோக்குப் பார்வை
ஜனநாயகப் பெண்கள் இயக்கத்திற்கான சரியான கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதில் ஈஎம்எஸ் பிரத்யேக, புதிய பங்களிப்பைச் செய்தார். நம்பூதிரி சமூகத்தின் குறுகிய பழமைவாதத்துக்கு எதிரான அவரது முதல் சமூக நடவடிக்கையில், முக்கிய பிரச்சினையாகக் கையிலெடுத்தது நம்பூதிரிப் பெண்களின் சமூகநிலையையே. சமூகச் சீர்திருத்த இயக்கத்தில் பங்கேற்ற இளம் ஈஎம்எஸ் திருமண உரிமையைக்கூட இழந்து, பர்தாவின் ஒருவிதமான வடிவத்தை – முக்காடு போடும் பழக்கத்தை – கடைப்பிடிக்க வேண்டியிருந்த நம்பூதிரிப் பெண்கள் மீதான அடக்குமுறை குறித்து கவனம் செலுத்தினார். நிலப்பிரபுத்துவ அமைப்பில், பாலின ஒடுக்குமுறையிலிருந்து நம்பூதிரிப் பெண்களின் விடுதலை என்பது, அவரது ஆரம்பகால எழுத்துக்கள் மற்றும் யோகக்ஷேம சபையில் ஈ.எம்.எஸ். மற்றும் அவரது நண்பர்களால் தயாரிக்கப்பட்ட நாடகங்களின் கருப்பொருளாக இருந்தது.
பின்னர் மலபாரில், ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களின் வளர்ச்சியில், ஈ.எம்.எஸ்., ஜனநாயக இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தினார். இந்த அம்சத்தைப் பற்றி 1942இல் எழுதுகையில், பாரம்பரிய கேரள சமூகத்தில், பெரும்பாலான சமூகங்களில் பெண்களுக்கு மற்ற பகுதிகளில் அறியப்படாத உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று குறிப்பிட்டார். சமூக மாற்றத்திற்கான பணிகளில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பங்கேற்க உதவும் வகையில், இந்தப் பாரம்பரியம் நவீன சூழலுக்கேற்பப் புதுப்பிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முதன்முதலாக, 1954-56 காலகட்டத்தில் கட்சி மையத்தில் அவர் பணியாற்றியபோது, பெண்கள் முன்னேற்றத்திற்கான பணிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பு ஈ.எம்.எஸ். வசம் இருந்தது. அப்போது, மாதர் அமைப்பின் தன்மைகள் பற்றிய விரிவான வரையறைகளை அவர் வகுத்தார். அதில், வெவ்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த அனைத்துப் பிரிவுப் பெண்களையும் உள்ளடக்கியதாக அது இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் அனைவரும் பொதுவான பாலின ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகின்றனர்; அதே நேரத்தில், தொழிலாளர் மற்றும் விவசாய வர்க்கத்திலிருந்து வரும் பெண்கள், வர்க்க அடக்குமுறை மற்றும் சமூக அடக்குமுறை என இரட்டை அடக்குமுறையால் பாதிக்கப்படுவதால், உறுப்பினர்களின் பெரும்பகுதி இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், சி.பி.ஐ.(எம்.)-இன் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, இந்த அனுபவத்திலிருந்து, சக்திவாய்ந்த ஜனநாயக மாதர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை முன்வைத்தார். கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று அம்சங்களை அவர் சுட்டிக்காட்டினார். முதலாவதாக, முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில், பாலின ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் பெண்களின் வர்க்க நிலையைப் பொருட்படுத்தாமல் பெண்களைப் பெண்களாகப் பார்க்கவேண்டும்; இரண்டாவதாக, விவசாயி அல்லது தொழிலாளி என்ற அவர்களின் நிலையிலிருந்து, வர்க்கச் சுரண்டலினால் பாதிக்கப்படும் பெண்களாக, மூன்றாவதாக, ஜனநாயக உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சமத்துவ சமூகத்திற்காக ஆண்களுடன் சேர்ந்து போராடவேண்டிய குடிமக்களாக பெண்கள். இந்த மூன்று அம்சங்களும் ஒன்றிணைந்து, பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டத்திலும் வர்க்க மற்றும் பாலின சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திலும் அனைத்துப் பிரிவுப் பெண்களையும் ஈர்க்க சரியான பார்வையை வழங்குகிறது.
நாடாளுமன்ற/சட்டமன்ற நடவடிக்கை பற்றிய கண்ணோட்டம்
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட் பங்கேற்பைப் பொறுத்தவரையில் ஈஎம்எஸ் ஒரு தனித்துவமான இடம்பெற்றவர். 1957-இல் நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அமைச்சகத்தின் தலைவராக இருந்த அவர், மாநில அதிகாரமானது, உண்மையில் மாநில அரசுகளிடம் இல்லாமல் மத்திய அரசிடம் இருக்கும் அரசியலமைப்பின் சட்டகத்திற்குள் பணிபுரிந்த நேரடி அனுபவம் பெற்றவர்.
கேரளாவில், ஈஎம்எஸ் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அமைச்சகத்தின் 28 மாதங்களில், நீண்டகாலத் தாக்கம் செலுத்திய தொலைநோக்குப் பார்வையுடனான கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. பொறுப்பேற்றுக் கொண்டதும், அரசு முதலாவதாக குத்தகைதாரர்களை வெளியேற்றுவதைத் தடைசெய்யும் அவசர சட்டத்தை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, விவசாய நில உறவுகள் மசோதா, குத்தகைக் காலத்தை நிர்ணயம் செய்தல், குறைந்த வாடகை மற்றும் நிலத்தை வாங்கும் உரிமை ஆகியவற்றை வழங்கியது; மேலும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு, வீட்டு மனையில் குடியிருப்பு உரிமைப் பாதுகாப்பு மற்றும் உபரி நிலம் பகிர்ந்தளிக்க முன்மொழியப்பட்டது.
நிலச்சீர்திருத்தச் சட்டம் மற்றும் கல்வி மசோதா ஆகியவை நன்கு அறியப்பட்டவை. பெரும் நிலச்சுவான்தார்கள் மற்றும் பிற்போக்குச் சக்திகள் கைகோர்த்து அரசாங்கத்தை கவிழ்க்க இவை காரணமாக இருந்தன. இதற்குச் சமமான மற்றொரு கொள்கை நடவடிக்கையும் குறிப்பிடத்தக்கது. அது ஈ.எம்.எஸ். அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட காவல்துறைக் கொள்கையாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், முதலாவதாக ஓர் அரசு, ஜனநாயகப் பூர்வமான காவல்துறைக் கொள்கையை முன்மொழிந்தது. தொழிற்தகராறுகள் அல்லது நிலப்பிரபுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான பிரச்சனைகளில், காவல்துறைக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதுதான் அந்தக் கொள்கையின் சாராம்சம். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை உடைக்க, காவல்துறையானது முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் ஒரு கருவி அல்ல. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே காவல்துறையின் தலையீடு இருக்கவேண்டும்; எந்தத் தரப்பினர் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு பிரச்சனையில் ஈடுபட்டாலும், காவல்துறை தலையிடவேண்டும். இந்தக் கொள்கையை விளக்கி, ஈ.எம்.எஸ். எழுதியது:
“அக் கொள்கையின் முக்கிய அம்சம் என்னவென்றால், எந்தவொரு தொழிற்சங்கம், விவசாயிகள் மற்றும் பிற வெகுஜன அமைப்புகளின் வெகுஜன நடவடிக்கைகளை நசுக்குவது அல்லது எந்தவொரு அரசியல் கட்சி நடத்தும் அரசியல் போராட்டத்தை ஒடுக்குவது காவல்துறையின் வேலை அல்ல; சாதாரண குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதே காவல்துறையின் வேலை.” (கேரளாவில் இருபத்தெட்டு மாதங்கள், ப.134, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தொகுதி-2)
முதல் ஈ.எம்.எஸ். அரசாங்கத்தால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல்போன இந்தக் கொள்கையானது, 1967-70 காலகட்டத்தில், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய முன்னணி அரசுகள் பதவியேற்றபோது சி.பி.ஐ.(எம்.)-ஆல் மேலும் செழுமைப்படுத்தப்பட்டது.
1964ஆம் ஆண்டு கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு முன்பே, கேரளாவில் தேர்தல் கள முன்னேற்றம் குறித்த திருத்தல்வாதப் பார்வையால் பரிந்துரைக்கப்பட்ட “கேரள வழி” ஈ.எம்.எஸ்.-ஆல் மறுக்கப்பட்டது. நேரு தலைமையிலான காங்கிரஸ், ஆளும் வர்க்க நலன்களை விடாப்பிடியாகப் பாதுகாப்பதைக் கண்ட அவர், கம்யூனிஸ்ட் அதிகாரத்திற்கான எந்தவொரு நாடாளுமன்றப் தேர்தல் பாதையும் திறக்கப்பட்டதாக நம்பவில்லை. மத்தியில் ஆட்சிக்கு இட்டுச் செல்லும் கேரள மாதிரியிலான தேர்தல் வெற்றிகள் அடுத்தடுத்து இருக்காது; மாறாக, கம்யூனிஸ்டுகள் தேர்தல் வெற்றியை அதிகரிப்பதன் விளைவாக வர்க்கப் போராட்டத்தை மேலும் தீவிரமடையும் என முன்னறிவித்தார்.
முதல் கம்யூனிஸ்ட் அமைச்சகத்தின் அனுபவத்தை ஈ.எம்.எஸ். பின்வருமாறு விளக்கினார்:
“கேரளாவில் நடத்தப்பட்ட ‘பரிசோதனை’ எதையாவது காட்டுமானால், அது இதுதான்: பெரும்பான்மை கிடைத்தால் மாநிலங்களில் அரசு அமைப்பது உட்பட, நாடாளுமன்ற/சட்டமன்ற அரங்கில் நாம் நடத்தும் போராட்டம் என்பது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமாகும். இதில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயான போராட்டத்துடன் நாடாளுமன்ற அரங்கில் நடத்தப்படும் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டாலும், அது வெளியே நடத்தப்படும் போராட்டத்திற்குக் கட்டுப்பட்டே இருக்கவேண்டும்.” (ஒரு இந்திய கம்யூனிஸ்ட்டின் நினைவுகள், ப.177)
இந்த அனுபவம்தான், ஒரு நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ அமைப்பிற்குள் மாநில அரசுகளில் பங்கேற்பது தொடர்பான நடைமுறைத் தந்திரங்களை உருவாக்க சி.பி.ஐ.(எம்.)-க்குப் பின்னர் உதவியது.
1964இல் கட்சித்திட்டம் உருவாக்கப்பட்டபோது, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சுட்டிக்காட்டியபடி, ஈஎம்எஸ் அவர்கள் தந்த தெளிவின் அடிப்படையில், மாநில அரசுகளில் பங்கேற்பு குறித்து வரையறுக்கும் ஒரு பத்தி சேர்க்கப்பட்டது. இதையடுத்து, மத்தியக் கமிட்டி அதன் “புதிய சூழ்நிலை மற்றும் பணிகள்” (1967) ஆவணத்தில், 1967இல், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில், சி.பி.ஐ.(எம்.) தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுகளின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளில், இந்தப் பங்கேற்பின் தன்மை குறித்து விரிவாகக் கூறியது.
மீண்டும் கேரள முதலமைச்சராக 1967இல் பதவியேற்ற பிறகு, மாநில அரசில் பங்கேற்கும் அதே சமயத்தில், நிர்வாகம் மற்றும் போராட்டத்தில் நடைமுறைத் தந்திரங்களை வகுக்க ஈஎம்எஸ் காரணமாக இருந்தார்.
மாநில அரசில் பங்கேற்பது என்பது, வெகுஜன இயக்கங்கள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளைத் தொடங்கவும், செயல்படுத்தவும் அரசாங்கம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கவேண்டும் என்பதே அவரது யோசனை. அந்த சமயத்தில் இந்த முழக்கத்தை சி.பி.ஐ. எதிர்த்தது. இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசை போராட்டக் கருவியாக பயன்படுத்துவது என்ற கருத்தைப் பாதுகாத்ததன் மூலம், ஈ.எம்.எஸ் இதை எதிர்கொண்டார்.
இருப்பினும் நாடாளுமன்ற/சட்டமன்ற அரங்கில் பங்கேற்பது பற்றிய ஈ.எம்.எஸ்.-இன் புரிதலை இந்தப் பொறுப்பிற்கு மட்டுமானதாகக் குறுக்கிப் புரிந்துகொள்வது தவறாகும். நாடாளுமன்ற அமைப்பில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு செயல்படவேண்டும் என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் அவருக்கு இருந்தது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் பங்கேற்பதில் கட்சியின் பங்கை வரையறுத்துத் தெளிவுபடுத்தி, அதேவேளையில், உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களை வளர்ப்பதில் பிரதான கவனம் செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சட்டமன்றமோ அல்லது சமூகத்தின் மற்ற ஜனநாயக அமைப்புகளோ எதுவாயினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் அனைத்து மட்டங்களிலும் கட்சியின் பணி, ஜனநாயக இயக்கத்தை வளர்ப்பதற்கான ஒட்டுமொத்த நீண்ட கால திட்டம் மற்றும் நடைமுறைத் தந்திரங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
வகுப்புவாதத்தை எதிர்த்த போராட்டத் தந்திரங்கள்
அரசியல் நடைமுறைத் தந்திரங்களில் ஈ.எம்.எஸ்.-இன் ஆளுமை, அப்போதைய சூழ்நிலை மற்றும் நீண்ட கால உத்தி ஆகிய இரண்டிலும் நிகழும் மாற்றங்களின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளும் அவரது குறிப்பிடத்தக்க திறனின் விளைவாகும். ஓர் அரசியல் நிகழ்வு நடந்ததும், அதன் வளர்ச்சிப் போக்கைக் கணிப்பதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை; மேலும் அவர், அதை வர்க்க அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார். அவர் ஒரு நடைமுறைத் தந்திரத்தின் அடுத்த கட்டத்தை வகுக்கும்போதோ, அல்லது ஏற்கனவே உள்ள நடைமுறைத் தந்திரங்களில் மாற்றத்தைக் கொண்டுவரும்போதோ, இது மீண்டும் மீண்டும் நிரூபணமானது. அடிக்கடி, கட்சிக்கும் அவரது சக தோழர்களுக்கும், அவரது மாறிவரும் புரிதலுக்கு வந்துசேர சிறிது காலம் பிடித்தது. 1982இல், 11வது காங்கிரசில், கட்சியால் உருவாக்கப்பட்ட வகுப்புவாத மற்றும் பிளவுவாத சக்திகளின் வளர்ந்து வரும் ஆபத்து பற்றிய புரிதலை, ஈஎம்எஸ் எவ்வாறு கேரளாவின் நடப்பு சூழ்நிலைக்குப் பொருத்தினார் என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அவர், அதுவரை கட்சி கடைப்பிடித்து வந்த, ஐக்கிய முன்னணி அரசியலின் ஒரு பகுதியாக இருந்த, வகுப்புவாதக் கட்சிகளுடனான தொடர்பை முறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். கேரளாவில் வகுப்புவாத அடிப்படையிலான எந்த கட்சிக்கும் சலுகை அளித்தால், பெரும்பான்மை வகுப்புவாதம் மற்றும் பிற பிளவு சக்திகளுக்கு எதிரான அகில இந்தியப் போராட்டத்தில் பலவீனம் ஏற்படும் என்று ஈ.எம்.எஸ். புரிந்துகொண்டார்; அவர் தொடங்கிய உறுதியான போராட்டத்தின் விளைவாக, 1985ஆம் ஆண்டு ஏ.ஐ.எம்.எல். (முஸ்லீம் லீக்கின் பிளவுக் குழு)-உடன் முறிவு ஏற்பட்டது. 1987 சட்டமன்றத் தேர்தலில் ஈஎம்எஸ் சாதி மற்றும் வகுப்புவாத அரசியல் பழங்கதையாக மாறவேண்டும்; காலத்திற்கு ஒவ்வாத அதற்கு நவீன ஜனநாயக கேரள சமூகத்தில் இடமில்லை என்ற அடிப்படைக் கருத்தை கேரள மக்கள் முன் வைத்து தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்தத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் கட்சியின் நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி, ஈ.எம்.எஸ்.-இன் அரசியல் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகும்.
வகுப்புவாதம் குறித்த பிரச்சனையில், ஈஎம்எஸ் மற்றொரு முக்கிய பங்களிப்புச் செய்தார். எண்பதுகளின் பிற்பகுதியில், அவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, பெரும்பான்மை வகுப்புவாதத்தின் ஆபத்து தேசிய அளவில் வேகமாக வளர்ந்தது. அயோத்தியில் பாபர் மசூதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட ராமஜென்மபூமி இயக்கத்தின் எழுச்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளால் செய்யப்பட்ட மத கலவரங்கள் மற்றும் இந்துத்துவா சக்திகளின் வளர்ந்து வரும் தாக்குதல்கள் ஆகியவை மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு ஏற்படுத்திய புதிய அச்சுறுத்தல் குறித்து ஈஎம்எஸ் நன்கு உணர்ந்தார்.
மதச்சார்பற்ற முகாமில் இருந்த அவரது சமகாலத்தவர்கள் பலருக்கும் முன்பே ஈஎம்எஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தின் மரபுகளுக்கும் நோக்கங்களுக்கும் நேர் எதிரான, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சித்தாந்தத்திற்கு ஆதரவான பாஜக உறுதியாக வளர்ந்துவருவதையும் கண்டறிந்தார். சுதந்திரத்திற்கு முன் இருந்த வகுப்புவாத அச்சுறுத்தலும், சுதந்திரத்திற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிந்தைய இந்தியாவில் மீண்டும் பெரிய அளவில் அதன் மறுமலர்ச்சியும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பின் வர்க்கத்தன்மையுடன் தொடர்புடையது என்பதை சுட்டிக்காட்டினார். வகுப்புவாத சித்தாந்தத்தை நிலைநிறுத்தும் சக்திகளுடன் சமரசம் செய்துகொள்வது முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் இயல்பாகும். எனவே, ஈஎம்எஸ் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டு ஒரு வகுப்புவாத சக்தியாக மட்டுமல்லாது, வர்க்க ரீதியாகவும் இந்தியாவில் பிற்போக்கான வலதுசாரி சக்திகளின் பிரதிநிதிகளாக இருப்பதை கண்டார்.
இந்தத் தெளிவான புரிதல்தான் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவிற்கும், மத்தியக் குழுவிற்கும் இருவழிக் கொள்கையைத் தொடர உறுதியாகத் தலைமையேற்க ஈஎம்எஸ்ஸுக்கு உதவியது. முதலாவதாக, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ள பாஜக–ஆர்எஸ்எஸ்-விஹெச்பி கூட்டணியைக் குறிவைத்து, அதனைத் தனிமைப்படுத்த செயல்பட வேண்டும்; இரண்டாவதாக, ராஜீவ் காந்தி அரசை எதிர்த்துப் போராடவும், அதே நேரத்தில் காங்கிரசுக்கு எதிரான போராட்டத்தில் தலையிட்டு இணைய முயன்ற பா.ஜ.க.வை குறிவைத்துத் தனிமைப்படுத்தவும், மற்ற இடதுசாரிகளுடன் ஒன்றிணைந்து அனைத்து மதச்சார்பற்ற எதிர்ப்புச் சக்திகளையும் ஒன்று திரட்டுவதற்குப் பாடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வெகுஜன அதிருப்தியை வைத்து பாஜகவையும் உள்ளடக்கிய “அனைத்து எதிர்க்கட்சி ஒற்றுமையை” கட்டியெழுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்கான கட்சியின் போராட்டத்தை ஈ.எம்.எஸ். உறுதியாக தலைமையேற்று வழிநடத்தினார்.
தேசிய முன்னணி உருவாகிய போது, ஆரம்பத்தில் சில முதலாளித்துவக் கட்சிகள் பாஜகவை சேர்க்க விரும்பின. ராஜீவ் காந்திக்கு எதிராக கியானி ஜெயில் சிங்கிற்கு ஆதரவு போன்ற சில விஷயங்களில் பாஜகவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் ஈஎம்எஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கட்சியின் அரசியல் நிலைப்பாடும் தலையீடும், தேசிய முன்னணியை பாஜகவில் இருந்து பிரித்து தேசிய முன்னணிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான அடித்தளத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றியது.
பாட்டாளி வர்க்க மேலாதிக்கத்திற்காக
ஈ.எம்.எஸ். தனித்துவமான பங்களிப்பைச் செய்த மற்றொரு தளம், இந்திய அரசியலில் இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க சக்தி என்றவகையில் ஆற்றிய பங்கை, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அதன் வேர்களைக் கண்டறிந்து, வலுவாக முன்வைத்ததாகும். இடதுசாரிகளின் பங்கை வெளிப்படுத்தியதாகும். தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் தீவிர காங்கிரஸ் உறுப்பினராக இருந்து, பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகவும், இறுதியில் கம்யூனிஸ்ட் தலைவராகவும் இருந்த ஈஎம்எஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் முழு அனுபவத்தையும் முறையாக விவரித்தார்; இதனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இடதுசாரிகளின் பங்கை தெளிவாக வரையறுக்க முடிந்தது. 1935இல் நேரு தலைவரான லக்னோ அமர்விலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் தேர்தலில் வெற்றி பெற்ற திரிபுரி அமர்வு வரை, காங்கிரசுக்குள் வலது மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே நடந்த போராட்டம்; வளர்ந்து வந்த அன்றைய சிறிய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு; அக்டோபர் புரட்சி மற்றும் பின்னர் நடந்த பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் தாக்கம்; ஏ.ஐ.டி.யூ.சி., பிற வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் உருவாக்கம் — ஆகிய நிகழ்வுகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, முதலாளித்துவ மேலாதிக்க இயக்கத்திற்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்க / இடது நீரோட்டம் எவ்வாறு வளர்ந்தது என்பதற்கான முழுமையான சித்திரத்தை அளித்தது.
இதில், இயந்திரத்தனமான பகுப்பாய்வோ எளிமைப்படுத்தலோ இல்லை. மகாத்மா காந்தியின் தலைமையை, வர்க்க அடிப்படையில் முதலாளித்துவம் என்று வகைப்படுத்தும் அதே வேளையில், தேசிய இயக்கத்தில் காந்தி ஆற்றிய பங்கைப் பற்றிய நுட்பமான, ஆழ்ந்த பகுப்பாய்வை ஈ.எம்.எஸ். செய்தார். 1958இல் நூலாக வெளியிடப்பட்ட ‘மகாத்மாவும் அவரது இசமும்’ நூல், 1955-56 காலகட்டத்தில் ‘நியூ ஏஜ்’ மாத இதழில் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பாகும். இது, காங்கிரஸ் தலைமையிலான சுதந்திரத்திற்கான வெகுஜன இயக்கத்தை வளர்ப்பதில் காந்தி ஆற்றிய முக்கிய பங்கை பகுப்பாய்வு செய்வதில், ஒரு மார்க்சியவாதியின் முதல் தீவிர முயற்சியாகும்.
காந்தியின் பாராட்டத்தக்க பாத்திரம் மற்றும் அதன் தீவிர பலவீனங்கள் இரண்டுமே தனித்து பார்க்கப்படவில்லை. மாறாக, தேசிய முதலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த நலன்கள் என்ற சட்டகத்தில் வைத்து ஆராயப்பட்டது. தனிநபர் சத்தியாக்கிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் போன்ற காந்தி பின்பற்றிய தனித்துவமான தந்திரங்கள் இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்ளப்பட்டன. காந்தியின் மகத்துவத்தையும், அவரது பங்களிப்பையும், அங்கீகரிக்கும் அதே வேளையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பணிகள் தொடர்பாக கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸின் முதலாளித்துவத் தலைமைக்கும் இருந்த மாறுபட்ட அணுகுமுறைகளையும் புத்தகம் விளக்குகிறது.
ஈஎம்எஸ் அவர்களே தனது முக்கிய படைப்புகளில் ஒன்றாக அங்கீகரித்த இந்த ஆழமான படைப்பின் அடிப்படையில் பின்னர் ஒன்றுபட்ட சுதந்திரப் போராட்டத்திற்குள் முதலாளி வர்க்க நீரோட்டம், மற்றும் பாட்டாளி வர்க்க நீரோட்டம் என்ற இரு நீரோட்டங்கள் வேறுபடுத்தப்பட்டன. இவை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒட்டுமொத்த இயக்கத்தில் இணைந்திருந்தாலும் வர்க்க நலன்களில் வேறுபட்டவை என்பது தெளிவானது. முதலாளித்துவ அரசியல் சக்திகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க சவாலை கட்டியெழுப்புவதற்கான பயணம் இவ்வாறு தொடங்கியது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் இடதுசாரிகளின் பாரம்பரியத்தைக் கண்டறிந்து, காங்கிரஸ் தலைமையின் முதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவப் போக்குகளில் இருந்து வேறுபடுத்தி, ஆளும் வர்க்கங்களின் சித்தாந்த மேலாதிக்கத்தை எதிர்க்கும் முழுப் பிரச்சனையிலும் ஈ.எம்.எஸ். மிகுந்த கவனம் செலுத்தினார்.
பொருளாதாரப் போராட்டங்கள் மற்றும் அரசியல் முழக்கங்களால் மட்டும் ஆளும் வர்க்க ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாது. ஈஎம்எஸ் தனது புரட்சிகர வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, மாற்று இடதுசாரிக் கண்ணோட்டத்தை முன்வைப்பதில் ஊடகம், பண்பாடு மற்றும் அறிவுசார் பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். ஊடகங்கள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளுடனான அவரது பயன்மிகு வாழ்நாள் தொடர்பு, பாட்டாளி வர்க்க இயக்கம் பற்றிய இந்த விசாலமான புரிதலால் வளர்த்தெடுக்கப்பட்டதாகும்.
சோசலிச சர்வதேசியம்
சி.பி.ஐ.(எம்.) தலைமையுடன் கூட்டாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஈஎம்எஸ் அவர்களின் சர்வதேசியக் கண்ணோட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசவேண்டிய அவசியமில்லை. மார்க்சிசம்-லெனினிசத்தின் சர்வதேசப் புரிதல் மற்றும் நடைமுறையை உருவாக்குவதில் சிபிஐ யிலிருந்து வேறுபட்ட இந்தக் கண்ணோட்டத்தின் ஒரு சிறப்பியல்பு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைக் கடைபிடிப்பதாகும். இது குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இக்கண்ணோட்டம் , சோசலிச சோவியத் ஒன்றியமாக இருந்தாலும், சோசலிச சீனாவாக இருந்தாலும் சரி, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களில் இருந்து சோசலிசத்தைப் பாதுகாக்கும். ஈஎம்எஸ் ஒரு அங்கமாக இருந்த சி.பி.ஐ.(எம்.) தலைமை, ஏகாதிபத்தியத்தை இடையறாது எதிர்த்த சோசலிசத்திற்கு ஆதரவான சர்வதேசியத்தின் பக்கம் உறுதியாக நின்றது. இருப்பினும், இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சித்திட்டம் மற்றும் நடைமுறைத் தந்திரங்களை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்பதற்கான எவ்விதமான ஆணை அல்லது வழிகாட்டுதலை ஏற்க சிபிஐ(எம்) மறுத்தது. சகதோழர்களில் பெரும்பாலோர் சிறையில் இருந்தபோது – 1962இல் இந்திய-சீன எல்லை மோதலின் போதும், 1965இல் இந்திய-பாகிஸ்தான் போரின் போதும் – கொள்கை ரீதியான கம்யூனிச நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டிய கடினமான பணி ஈஎம்எஸ் அவர்களால் செய்யப்பட்டது. இரு அண்டை நாடுகளுடனான சச்சரவுகளுக்கு அமைதியான தீர்வை வலியுறுத்திய, தேசியப் பேரினவாதத்தை எதிர்த்த, கட்சி நிலைப்பாட்டின் செய்தித் தொடர்பாளராக அவர் இருந்தார்.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுகளுக்குப் பிந்தைய காலகட்டத்திலும், சோவியத் யூனியனுக்குப் பிந்தைய காலத்திலும், சோசலிச நாடுகள் மற்றும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கம் பற்றிய அவரது புரிதல் இரண்டு அம்சங்களை கொண்டிருந்தது. முதலாவதாக, கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாத மற்றும் குறுங்குழுவாத வெளிப்பாடுகளை எதிர்த்தார். அதே வேளையில், ஒவ்வொரு நாடும், அங்குள்ள புரட்சிகரக் கட்சியும், சோசலிசத்திற்கான தன் சொந்தப் பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதை மார்க்சியம்-லெனினியம் அல்லது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற பெயரில் எந்த ஒரு “புரட்சிக்கான முன்மாதிரி”க்குள்ளேயும் குறுக்கி அடைத்துவிட முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார். அவர், சீனப் புரட்சியின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார்; மறுபுறம், மார்க்சிசத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறையில் மாவோ சேதுங்கின் பங்களிப்பை மிகவும் தீவிரமான ஆய்வுக்குட்படுத்த வலியுறுத்தினார்; அதே நேரத்தில், அவற்றை இயந்திரத்தனமாக இந்திய நிலைமைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் உறுதியாக எதிர்த்தார். இந்த உறுதியான அணுகுமுறை அறுபதுகளின் பிற்பகுதியிலும், எழுபதுகளின் தொடக்கத்திலும், இந்தியாவில் நக்சலைட் இயக்க மற்றும் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதிகள் அவரை தாக்குதலுக்கு இலக்காக்கியதன் பின் உள்ளது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, சோசலிச சமுதாயத்தின் உருவாக்கத்திற்கான இந்த முதல் பரிசோதனையைப் பற்றி சில ஆழமான புரிதலுக்கு வருவதற்காக சோவியத் யூனியனைக் கட்டியெழுப்பிய முழு அனுபவத்தையும் ஆய்ந்து பார்க்கும் செயல்முறையைத் தொடங்கினார். சோவியத் மாதிரியில் வறட்டுத்தனம் மற்றும் திருத்தல்வாதத்தின் வேர்களைக் கண்டறிய, பல கட்டுரைகளில் அவர் லெனின் நடைமுறைப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கைகளின் காலத்துக்குச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். சோவியத் யூனியனில் ஏற்பட்ட தவறுகளைத் தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தம் செய்யும் சீன முயற்சிகளுக்கு இந்தப் பின்னணியிலேயே அவர் அனுதாபம் காட்டினார். அவர், டெங் சியோ பிங்கால் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்கள் சீனாவில் சோசலிசத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானவை என்ற கருத்துடன் உடன்படவில்லை.
ஈ.எம்.எஸ். தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில், சோவியத் யூனியனில் சோசலிசத்தை கட்டியெழுப்பியதன் அனுபவம் மற்றும் அதன் வீழ்ச்சிக்கான காரணங்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்சியை வலியுறுத்தினார். இந்த பரிசீலனையின் முடிவுகளை சோசலிசத்திற்கான போராட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்கான இயக்கத்துடன் சமகால மற்றும் விரிவான அணுகுமுறையில் நின்று ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சியை வலியுறுத்தினார்.
ஈ.எம்.எஸ்.ஸின் தனிப்பட்ட வாழ்க்கையும் போற்றத்தக்கது. அவர் தன்னகங்காரமற்ற ஒரு மனிதராக இருந்தார்; மகத்தான புத்திக்கூர்மை அவரிடம் இருந்தபோதிலும், அவர் மிகுந்த தன்னடக்கத்தை வெளிப்படுத்தினார். 1940களில் தனது பூர்வீக சொத்தைக் கட்சிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார். மார்க்சியவாதியாக மாறிய பிறகும், “காந்தியத்தின் கூறுகள் பெருமளவில் எனது வாழ்க்கைமுறையில் இயல்பாகவே பொருந்தியிருந்தன” என்று அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு ஜனநாயக முறையிலான செயல்பாடுகளை எப்பொழுதும் கொண்டிருந்த தலைவர். அவரது மகத்தான வாழ்வும் பண்புகளும் கட்சி ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவேண்டும் என்ற பெரும் தார்மீக தாக்கத்தை ஏற்படுத்தின.
மக்களுடனான உரையாடல்
ஈஎம்எஸ் மக்கள் திரளுக்குக் கருத்துகளைப் புரிய வைப்பதிலும், நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்குவதிலும் நிகரற்ற ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கினார். இது அடிப்படையில் கேரளாவில் மட்டுமே நடந்த ஒரு தனித்துவமான நிகழ்வாகும். அங்கு ஈஎம்எஸ் தனது மக்களுடனான உரையாடலுக்கும், எதிர்அரசியல் வட்டாரங்களுடனான விவாதங்களுக்கும் கட்சியின் வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்தினார். அவர் டெல்லியில் இருந்தபோதும் கேரளாவில் அனல்பறக்கும் அரசியல் விவாதங்களில் தனது பத்திகள் மற்றும் கட்டுரைகள் மூலம் தலையிடுவார்.
தினசரிக் கட்டுரைகள், வாராந்திரப் பத்திகள், தலையங்கங்கள், நூல் விமர்சனங்கள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் கேரளத்தின் பொது வாழ்வில் ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய, அவரது வாழ்நாளின் இறுதி வரை நீடித்த இந்த அற்புதமான வெளிப்பாடு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் தனித்துவமானதாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் வேறு எந்த அரசியல் சிந்தனையாளரும், ஈ.எம்.எஸ்.சுக்கு இருந்த இந்த இடத்தை அடையவும் மக்களை அணுகவும் முடியவில்லை. அவரது அரசியல் சிந்தனை மற்றும் செயல்முறை, மார்க்சியத் தத்துவம் மற்றும் நடைமுறையின் சிறந்த இணைவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதால்தான் இது சாத்தியமானது.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
