
சங் பரிவார் பொய்மைப்படுத்தும் வரலாறு!
அமர் ஃபரூக்கி
இந்திய நாட்டை மறுவரையறை செய்வதற்கான சங் பரிவாரின் அரசியல் திட்டம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. வரலாற்றைப் பொய்மைப்படுத்துவது என்பது இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே ஆகும். சங் சித்தாந்தவாதிகள் தேசத்தைப் பற்றிய பிரத்தியேகமான ஒரு கருத்தை ஊக்குவிக்க, வரலாற்றைத் தொடர்ந்து திரித்து வருகின்றனர். இத்தகைய திட்டத்தின் இன்றியமையாத கூறு என்னவெனில், இத்தேசமானது, முதலாவதாக, இந்த நிலத்தின் உண்மையான குடியிருப்பாளர்களின் வழிவந்தவர்களுக்கே சொந்தமானது என்பதை வலியுறுத்துவதாகும். இத்தகைய மூதாதையர்களின் பொதுவான தொகுப்பு இந்த துணைக்கண்டத்தின் உண்மையான குடியிருப்பாளர்களாக கருதப்படும் ‘ஆரிய’ரோடு ஒப்பிடப்படுகிறது.
பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியாவின் வரலாற்றை காலவரிசைப்படுத்த, மத அடையாள முத்திரைகளைப் பயன்படுத்துவது; இந்த வரலாற்றை ‘இந்து காலம்’, ‘முஸ்லீம் காலம்’ என்று பிரிப்பது ஆகியவை 19ஆம் நூற்றாண்டின் காலனிய வரலாற்றியலின் விளைவாக உருவானதே ஆகும். இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரையில், இந்தியாவைப் பற்றிய வரலாறு எழுதுவதென்பது காலனிய ஆட்சியாளர்களின் தனித்துவமான உரிமையாகவே இருந்துவந்தது என்பதையும், இங்கு அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். இவர்களில் சிலர் தொழில்முறை அல்லாத வரலாற்று ஆசிரியர்களாக இருந்தனர். இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய கதையாடல்கள், இந்தக் கடந்த காலத்தை கற்பனை செய்யும் வழிகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பிடத்தக்க வகையில், காலனிய வரலாற்றியல் வகுப்புவாத வரலாற்றியலுக்கு பல அடித்தளத் தொகுப்புகளை வழங்கியது.
வரலாற்றின் வகைப்பாடுகள்
வரலாறு குறித்த வகுப்புவாத எழுத்துக்களில், ‘புராதன இந்தியா’ என்பது ‘இந்து நாகரீகத்துக்கு’ இணையாக கருதப்பட்டது. அதைப் போன்றே, ‘மத்திய கால இந்தியா’ என்பது முஸ்லீம்களின் வெற்றி அல்லது படையெடுப்புகள் நிரம்பிய காலப்பகுதியாகவும், இந்தியா முஸ்லீம்களுக்கு அடிமைப்பட்ட காலப்பகுதியாகவும் சித்தரிக்கப்பட்டன. இந்தியாவின் ‘புராதன’ ‘இந்து நாகரீகம்’ சீர்குலைந்த இருண்டகாலமாகவும் இது சித்தரிக்கப்பட்டது. மேலும் இந்த வகைப்பாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து எவ்விதமான விமர்சனமும் இல்லை. இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்/ ஆட்சியாளர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டன. (முகலாயர்களைப் பொறுத்தவரையில், சீக்கியர்களும் கூட) இத்தகைய கதையாடலில் காலனிய எதிர்ப்புக்கு எந்த இடமும் இல்லை.
வகுப்புவாத வரலாற்றியலில் இத்தகைய கருத்துக்களே தொடர்ந்து மையமான விஷயமாக இருந்து வந்துள்ளன. “கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஏதோவொரு வடிவத்தில் இந்தியா அந்நிய ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது” என்று 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிரதமர் நிகழ்த்திய ஓர் உரையில் குறிப்பிட்டது இத்தகைய புரிதலை மீண்டும் வலியுறுத்தவே ஆகும். அதாவது, முஸ்லீம் ஆட்சியாளர்கள் அந்நிய ஆட்சியாளர்கள் என்பதை குறிப்பதாகவே இது அமைகிறது.
இலக்கெல்லாம் ‘ஆரியர்’களே
‘ஆரியர்கள்’ இந்திய துணைக்கண்டத்தின் உண்மையான குடியிருப்பாளர்கள்; இந்த நாடு முதன்மையாக அவர்களின் சந்ததியினருக்கு சொந்தமானது என்ற கருத்தே சங் பரிவாரின் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கருத்தாக்கத்தின் மையமாக அமைகிறது. அதை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் இறுதி இலக்காகும். பாஜக மத்திய அரசிலும், மாநிலங்களில் எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ, அந்த காலப்பகுதி முழுவதிலுமே இந்த நோக்கத்தை நிறைவேற்றவே பாடுபட்டு வந்துள்ளது.
இந்தியா ‘ஆரியர்களின்’ உண்மையான தாயகம் என்றும், அதன் பண்டைய நாகரீகமான ஹரப்பா நாகரீகம் (முன்பு சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்பட்டது) என்றும் ஆன புனைகதையைப் பரப்புவதற்காக, இந்திய துணைக் கண்டத்தின் நாகரீகம் மற்றும் நகரமயமாக்கலின் தொடக்கத்தின் காலவரிசை ஆகியவற்றை பொய்மைப்படுத்த வேண்டும். ஆரியர்களின் புலம்பெயர்வு பற்றி நன்கு அறியப்பட்ட வரலாறு இத்தகைய கூற்றால் தலைகீழாக மாறுகிறது. ஹரப்பா நாகரீகம் திடீரென முடிவுக்கு வந்த நேரத்தில்தான் ஆரியர்களின் புலம்பெயர்வு வேகம் பெற்றது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பொதுவாக ஒப்புக் கொள்கின்றனர்.
மரபணு ஆராய்ச்சி உலகின் சமீபத்திய முன்னேற்றங்கள், இந்திய துணைக்கண்டம் எவ்வாறு மக்களால் நிறைந்தது என்பதைப் பற்றிய நமது புரிதலை மேலும் ஆழப்படுத்தியுள்ளன. தொல்பொருளியல், புதைபடிவ இயல், மொழியியல் ஆகியவை இந்த இடப்பெயர்வின் அடிப்படையான காலவரிசையை வழங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு தசாப்தத்தில் குவிந்துள்ள டிஎன்ஏ ஆய்வின் சான்றுகள் இந்திய கண்டத்தில் குறைந்தபட்சம் மூன்று முக்கிய இடப்பெயர்வுகள் பண்டைய காலத்தில் இருந்தன என்பதை நிறுவியுள்ளன.
சான்றளிக்கும் இடப்பெயர்வுகள்
இதன் தொடக்கமாக, சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்த ஆப்பிரிக்காவிற்கு வெளியேயான இடப்பெயர்வு இருந்தது. இது தொல்பொருள் சான்றுகளாலும், மரபணு ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கி.மு. 7000ஆம் ஆண்டில் தோன்றிய விவசாய செயல்பாட்டின் தொடக்கத்துடன் ஒத்துப்போன இதர இடப்பெயர்வுகளும் இருந்தன. மற்றொரு முக்கியமான இடப்பெயர்வு என்பது ஹரப்பா நாகரீகத்தின் முதிர்ச்சியடைந்த கட்டத்தின் முடிவுடன் (கி.மு. 2600-1900) ஒத்துப்போனது.
4000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த இடப்பெயர்வுகள், அத்தகைய இடப்பெயர்வுகள் எதுவும் நடக்கவில்லை என்று வலியுறுத்துவோரால் மறுக்கப்படுகிறது. ஆரியர்கள் இடம்பெயர்ந்து வந்து இந்திய துணைக்கண்டத்திற்கு வந்து குடியேறவில்லை என்ற வாதத்தை உறுதிசெய்யும்பொருட்டு, ரிக் வேதம் இயற்றப்பட்ட தேதியை மேலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளி, அது ஹரப்பா நாகரீகத்திற்கும் முந்தையது என்பதைக் காட்டுவதற்கு சந்தேகத்திற்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேநேரத்தில், ரிக் வேதத்தில் மிகவும் போற்றப்படும் நதியான சரஸ்வதி நதி ஹரியானாவிற்கு இடம் மாற்றப்பட்டு, அதை காக்கருடன் அடையாளம் காணப்படுகிறது.
பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றின்படி, ஹரப்பா நாகரீகத்தின் முடிவு, நகர மையங்கள் மறைந்து போனதன் மூலம் குறிக்கப்படுகின்றன. அதைப் போலவே, உதாரணமாக, தர வரிசைப் படுத்தப்பட்ட செங்கற்களின் பயன்பாடு போன்றவையும் இந்த நாகரீகத்தின் இதர பல முக்கியமான அம்சங்களாக அமைந்திருந்தன. அதைத் தொடர்ந்து துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் மற்றொரு வரலாற்றுக் கட்டம் தொடங்கியது.
வேதம் கூறும் வரலாறு
இதற்கான சான்றுகள் ரிக் வேதம், தொல்பொருள் ஆராய்ச்சி ஆகிய இரண்டிலிருந்தும் கிடைக்கின்றன. இந்தக் காலகட்டம் தொடக்க கால வேத யுகம் (கி.மு. 1500 முதல் 1000 வரையிலான காலம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் நகர்ப்புறம் அல்லாத சமூகமாகவே இருந்தது. ஓரளவு விவசாயத்துடன் மேய்ச்சலை மேற்கொண்டதாகவும் இருந்தது. மொழிரீதியாகப் பார்க்கும்போது, இது ரிக் வேதத்தின் மொழியான வேத சமஸ்கிருதம் பேசும் மக்களின் சமூகமாக இருந்தது. இருப்பினும், அது இதர மொழிகள் பேசும் மக்கள் சமூகங்களை உள்ளடக்கியதாகவும் இருந்திருக்கலாம்.
ரிக் வேதத்தில் தொடர்ந்து குறிப்பிடப்படும் குதிரையானது வேத சமஸ்கிருதம் பேசும் சமூகங்களின் தனித்துவமான விலங்காகும். ஹரப்பா நாகரீகத்தின்போது குதிரை வளர்ப்பு இருந்திருப்பதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. குதிரையைப் பற்றி வேதங்களில் காணப்படும் குறிப்புகளைத் தவிர, தொல்பொருள் ஆராய்ச்சிப் பதிவுகளும் கூட பழக்கப்பட்ட குதிரை என்பது இந்தியாவில் ஹரப்பா நாகரீகத்திற்குப் பிந்தையது என்பதையே காட்டுகின்றன.
இந்திய துணைக்கண்டத்தின் தொடக்க கால வரலாற்றை சிதைக்க முயல்வோருக்கு இது மிகப்பெரும் தடைக்கல்லாக விளங்குகிறது. ஹரப்பா நாகரீகத் தளமான சினௌலியில் (பாக்பத் மாவட்டம், உத்திரப் பிரதேசம்) நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் ஒரு வண்டியின் எச்சங்கள் கிடைத்துள்ளன. இது குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர் என்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரீக காலத்தில் குதிரை இருந்தது என்பதற்கான சான்றாக இது மிகவும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நிபுணர்கள் அத்தகைய விளக்கத்தை மறுதலித்துள்ளனர். குறிப்பாக, சினௌலியிலோ அல்லது வேறு எந்த ஹரப்பா தளத்திலோ குதிரை வளர்ப்பின் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பொய்யாக்கப்படும் வரலாறு
ஆரியர்கள் குறித்த பிரச்சனை, ஹரப்பா நாகரீகத்தின் காலம், சரஸ்வதி நதியின் அமைவிடம் ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. வரலாற்று விவரங்களை பொய்யாக்குவதன் மூலம் இந்தியாவின் புராதன கடந்த காலத்தை மீண்டும் கூற முடியும். இதன் மூலம் ஆரியர்கள் இந்தியாவின் ‘அசலான’ மக்கள் என்ற புரட்டைப் பரப்பவும், இந்த வம்சாவளியிலிருந்து வராதவர்கள் ‘அந்நியர்’ என்ற கருத்தை மேம்படுத்தவும் முடியும்.
புராதன சரஸ்வதியை ஹரியானாவில் கொண்டுவந்து வைப்பதன்மூலம் ஹரப்பா நாகரீகத்தின் பெயரை ‘சரஸ்வதி சப்யாதா (பண்பாடு’ என்று மாற்ற முடியும். இதன் மூலம் இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் மையம் கொண்டுள்ள (இந்த இடங்களில் பலவும் இன்றைய பாகிஸ்தானில் அமைந்துள்ளன) நாகரீகத்தின் கருவை வட இந்தியாவிற்கு மாற்ற முடியும். இதன் மூலம் ‘சரஸ்வதி நாகரீகம்’ என்று அழைக்கப்படுவதன் மையத்தை நம் நாட்டின் எல்லைகளுக்குள் அடக்கி வைக்க முடியும்.
ரிக் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள காகர் வலிமைமிக்கதொரு நதி அல்ல. ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள (காகர்) நதி ஆப்கானிஸ்தான் வழியாகப் பாய்ந்து காபூலுக்கு அருகிலுள்ள மலைத்தொடர்களில் அதே போன்ற தோற்றத்தைக் கொண்ட ஹெல்மண்ட் உடன் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஏராளமான சான்றுகள் (எழுத்துபூர்வமான சான்றுகள், செயற்கைக் கோள் படங்களிலிருந்து பெறப்படும் சான்றுகள், தற்போதைய புவியியல் நிலைமைகள் குறித்த ஆய்விலிருந்து பெறப்படும் சான்றுகள்) உள்ளன. வேத சமஸ்கிருதம் பேசும் ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போது, அவர்கள் ரிக் வேதம் இயற்றப்பட்ட வடமேற்கு இந்தியாவிலும், பஞ்சாபிலும் அந்த கம்பீரமான நதியின் நினைவுகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
துணைக்கண்டத்தின் மையம்
இந்திய வரலாற்றைப் பற்றிய தரமான பாடநூல்கள், ‘இந்தி மையப்பகுதி’ என்று அழைக்கப்படும் கங்கை-யமுனை நதிகள் சங்கமிக்கும் பகுதியில் உருவான நிலப்பகுதியே இந்திய துணைக்கண்டத்தின் மையமாக உள்ளது என்று கருதுகின்றன. இந்த அனுமானம் சங் பரிவார் சித்தாந்தவாதிகளாலும் ஆர் எஸ் எஸ் ஸின் பிரச்சாரத்தாலும் தொடர்ந்து வலுவூட்டப்பட்டு வருகிறது. எனினும் தென் இந்தியாவின் பெரும்பகுதியான சமூக அமைப்புகள் தனித்துவமான ஒரு வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளன. ஹரப்பா நாகரீகம் குறித்த விவாதங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அல்லது தெலுங்கானாவிற்குப் பொருந்தக் கூடியவை அல்ல.
வட இந்தியாவின் வரலாற்றுக்குத் தரப்படும் அழுத்தம் இந்தப் பகுதிகளுக்குத் தேவையான ஆதார வளங்கள், வரலாற்று ஆய்விற்கான ஆதரவை இழக்கச் செய்துள்ளது. மேலும் இந்தப் பகுதிகளின் வரலாறு குறித்து நம் அறிவில் காணப்படும் இடைவெளியின் விளைவாக, இப்போது வரலாற்றை ஓர் ஒழுங்கு என்ற வகையில் அழிக்க வேண்டும் என்ற பாஜக அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலை கருத்தில் கொண்டு பார்க்கையில் இது மேலும் தெளிவாகிவிடும்.
பொய்யைப் பொசுக்கும் கீழடி
கீழடி போன்ற தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் ஆய்வுத் தளங்களில் வெளிச்சத்திற்கு வந்து வரலாற்று ஆதாரங்களை நசுக்குவதற்கான முயற்சிகள், இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய சங் பரிவாரின் கூற்றுக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வரலாற்று ஆய்வுகளை தடுக்க மத்திய அரசு தன் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கும் விதத்திற்கு தெளிவான ஓர் உதாரணமாகும். மதுரைக்கு அருகே அமைந்துள்ள கீழடியில் 2014ஆம் ஆண்டு முதல் தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் இயக்கத்தின் இயக்குநராக இருந்த கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் அகழாய்வு மேற்கொண்டனர்.
இந்த அகழ்வாய்வுகள் சங்க காலத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) செழித்தோங்கிய, மிகவும் வளர்ச்சியடைந்த நகர்ப்புற நாகரீகத்தை கண்டுபிடிக்க வழிவகுத்தன. இந்த ஆய்வுத் தளத்தில், சுவர்கள், வடிகால் அமைப்புகள், கிணறுகள் போன்றவை முறையான நகர்ப்புற திட்டமிடலை சுட்டிக் காட்டுகின்றன. அதற்கும் மேலாக, அது கல்வியறிவு பெற்ற ஒரு சமூகமாகவும் இருந்துள்ளது. வட இந்தியாவில் மௌரியர் காலத்திய பிராமி எழுத்துக்களுக்கு முந்தியதாக இருக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
அசோகர் காலத்திய கல்வெட்டுக்களின் பிராமி எழுத்து இந்திய துணைக் கண்டத்தில் நமக்கு முதன்முதலாகத் தெரிந்த எழுத்து வடிவமாகும். ஹரப்பா நாகரீக காலத்து எழுத்து மேலும் பழமையானது. எனினும் அது இன்னும் புரிந்து கொள்ளப்படாமல் உள்ளது. மேலும் பல அறிஞர்கள் இப்போது அதை முழு அளவிலான ஓர் எழுத்து வடிவமாக கருத முடியுமா என்று சந்தேகிக்கின்றனர். கீழடி கண்டுபிடிப்புகள் இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை ஹரப்பாவுடன் தொடர்புடைய நாகரீகத்தின் தொடக்கத்திற்கான காலவரிசையை மறுசீரமைக்க அறிஞர்களை கட்டாயப்படுத்தியுள்ளது.
கீழடி கண்டுபிடிப்புகளின் தாக்கத்தால் மத்திய அரசு மிகவும் வருத்தமடைந்துள்ளது என்பது வெளிப்படை. அகழ்வாராய்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அமர்நாத் ராமகிருஷ்ணா தமிழகத்திற்கு வெளியே மாற்றப்பட்டார். கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்த தனது அறிக்கையை திருத்துமாறு அவருக்கு அழுத்தம் தரப்பட்டது. (அவர் முன்வைக்கும் கால அளவு ‘மிகவும் முந்தையதாக இருப்பதாக’ கருதப்பட்டன.) எனினும் அவர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்.
வரலாற்றை முன்நகர்த்தும் இரும்பு
2019ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு, அந்த இடத்தில் ஆய்வுப் பணிகளைத் தொடர உத்தரவிட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அது கூறியது. வரலாற்று ஆசிரியர்களுக்கு மேலும் வியப்பூட்டும் ஒரு விஷயம் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட ஓர் இரும்புப் பொருளின் காலம் கி.மு. 3200 என உறுதியானது ஆகும்.
இந்த காலத்தை மூன்று வெவ்வேறு ஆய்வகங்கள் மட்டுமின்றி, இரண்டு புகழ்பெற்ற இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களான கே. ராஜன், கே. பாடய்யா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.மு. 1000ஆம் ஆண்டில் வட இந்தியாவில் தொடங்கியதாக கருதப்பட்ட இந்தியாவின் இரும்புப் பயன்பாடு குறித்த தேதியை இது முற்றிலுமாக மாற்றுகிறது. இந்த அகழ்வாராய்ச்சிகள் குறித்து சங் பரிவாரத்திற்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் வியப்பான ஒன்றல்ல. இந்தக் கண்டுபிடிப்புகள் இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று மத்திய கலாச்சார அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய சங் பரிவாரின் வரலாற்று ரீதியற்ற கூற்றுக்கள் மாற்று ‘விளக்கங்கள்’ என்று கூறுவது தவறாகும். வரலாற்றை முன்வைக்கும் அவர்களது சித்தாந்த வாதிகள் வரலாற்று ரீதியான ஒரு விவாதத்தில் ஈடுபடவில்லை. எப்படியிருப்பினும், தங்களது பகுதிகளில் அல்லது பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களிடையே இதுகுறித்து ஆழமான விவாதங்கள் நடைபெறுகின்றன. கல்வி நிறுவனங்கள், தொழில்முறை நிறுவனங்கள், ஆராய்ச்சி இதழ்கள் போன்றவை இந்த விவாதங்களுக்கான மேடைகளை வழங்குகின்றன.
மிக முக்கியமாகக் கூற வேண்டியது என்னவெனில், சங் பரிவாரின் இந்தக் கூற்றுகள் அச்சுறுத்தும்படியான, சில நேரங்களில் வன்முறைக்கு வித்திடும்படியான ஒரு மொழியில் கூறப்படுகின்றன என்பதே ஆகும். அரசின் ஆதரவுடன் வரலாற்றின் மீது தொடுக்கப்படும் இத்தகைய பிரம்மாண்டமான தாக்குதலை அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் மூலமாகவே எதிர்க்க முடியும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
