
ஃபிடல்: கியூபப் புரட்சி கட்டமைப்பும் பாதுகாத்தலும்
பாப்லோ மெரிகுவெட்
மார்க்சிய, பொதுவுடைமைப் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்கியுள்ளது. 1959இல் கியூபப் புரட்சி வெற்றிகண்ட பிறகு அவர்தம் அரசியல் வாழ்வைப் பற்றி அலசுவோம்.
1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளன்று கியூப புரட்சி வெற்றிகண்டபின், ஒருமாதம் கழித்து ஃபிப்ரவரி 16ஆம் நாள் ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதம அமைச்சரானார்; மீண்டும் சில மாதங்களுக்குப் பின் அவரே கியூப அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாடிஸ்டா படையெடுப்புக்கு எதிரான போரின் புரட்சிகர வேகத்தைக் காத்திட வேண்டியும், புரட்சிகரப் போராட்டத்தைத் தீவிரம் குன்றிய தடத்தில் பிறழச்செய்ய முனைந்த சீர்திருத்தவாத முயற்சிகளிலிருந்து அந்நாட்டைப் பாதுகாக்கும் நோக்கிலுமே அவர் விரைந்து அரசின் தலைமைக்கு நியமிக்கப்பட்டார்.
ஃபிடலின் தலையாய குறிக்கோள்கள்
வெகுமக்களிடையே தோன்றிய உண்மையான வேளாண் சீர்திருத்தத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிப்பதை உறுதிசெய்ய ஃபிடல் முனைந்தார். கூட்டுறவுகளின் வழியே விவசாயிகளின் கூட்டமைப்பினை ஊக்குவித்த இச்சீர்திருத்தம், மே 17, 1959 அன்று ஏற்கப்பட்டது. புரட்சிக்கு முன் சிறந்த நிலங்களில் 80% ஒருசில வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் இருந்தன; 46% பயிர்நிலங்கள் 1.5% நில உரிமையாளர்கள் கைகளில் இருந்தன. வேளாண் சீர்திருத்தத்திற்குப் பிறகு, இந்நிலங்கள் பெரும்பாலும் சோஷலிச நிறுவன வடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட விவசாயிகளின் உற்பத்தி அமைப்பாக மாற்றப்பட்டது. இதன் வாயிலாக பெரும் நிலஉடைமைகள் நீங்கி 1,00,000 கியூப விவசாயக் குடும்பங்கள் பயனடைந்தன. வேளாண்மையை நவீனப்படுத்தும் செயல்முறையும் இதன்மூலம் தொடங்கியது. நாட்டில் தொழிற்பெருக்கத்தை முடுக்கிவிடும் முதல் முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது இச்செயல்; ஆனால் பொருளாதாரத் தடைகளின் காரணமாகத் தொழிற்பெருக்கக் குறிக்கோளை முழுமையாக அடைய முடியாமல் போனது (இதுகுறித்து பின்னர் பேசுவோம்).
அனைத்து கியூப மக்களுக்கும் எதிரான இனவெறி (இன அடிப்படையிலான பிரிவினை உட்பட) செயல்களை முழுதாக நீக்குதல் என்பது, ஃபிடலின் முந்தையகால அரசியல் குறிக்கோள்களில் ஒன்றாக விளங்கியது; அத்தகைய செயல்கள் புரட்சிக்கு எதிரானதாகவும், சட்டப்படி தண்டிக்கத்தக்கதாகவும் கருதப்பட்டன. எனவே, கியூபாவுக்கு வெளியே நடைபெற்ற இனவெறிக்கு எதிரான போராட்டங்களிலும் நாட்டம் கொண்டிருந்தார் ஃபிடல். இந்த வகையில், “கருப்பினத்தவர் சமூகத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உலகப் பிரச்சினைகள் குறித்து அவருக்கு உயரிய விழிப்புணர்வு இருக்கும் என்றே கருதத் தோன்றுகிறது” என்றார் ஃபிடல்.
கியூபாவில் குற்றத்தொழிலில் ஈடுபடும் குழுக்கள் மீது விரைந்து குறிவைத்தது அவரது அரசு. எனவேதான், கியூபப் புரட்சி தன்னைச் சீர்ழித்துவிட்டதாக, குற்றத்தொழில் மன்னராக விளங்கிய மெயர் லன்ஸ்கி கூறினார்.
தேசிய எழுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு ஃபிடல் அளித்த முன்னுரிமையை இங்கு சுட்டிக்காட்டுவது முக்கியம். எழுத்தறிவின்மையினை முழுதாக ஒழித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாகக் கியூபாவை உருவெடுக்கச் செய்தது இப்பிரச்சாரம். அதே வகையில், நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் நாடெங்கும் உருவாக்க ஊக்குவித்தார். தொடக்கம் முதலே இலவசச் சமூக மேம்பாட்டு மையங்களாக இவை நிறுவப் பெற்றன (ஃபிடலின் கியூபாவில் தனியார் கல்வியும் தனியார் மருத்துவமும் தடைசெய்யப்பட்டிருந்தன). இந்நாள் வரை தரத்திற்கும், அறிவியல் ஆய்வுத்திறனுக்கும், புதுமைகளுக்கும் கியூப மருத்துவத்துறை சிறந்ததாக அறியப்படுகிறது.
புரட்சிக்குப் பின் அரசின் கொள்கைகளின் காரணமாகப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வீதம் வானளவு உயர்ந்தது. மக்கள்தொகைக்கு இணையான மருத்துவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் நாடாகக் கியூபாவை இது உயர்த்தியது. அதே போல, அதன் வரலாற்றில் அதிகப்படியான ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற நாடு என்கிற அளவுகோலில், 12 மில்லியன் மக்கள்தொகையைத் தாண்டாத நாடான கியூபா, விளையாட்டுத்துறையைப் பொறுத்தவரையில் அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு (USA) அடுத்த இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கியூப நாடு பண்பாட்டு, கலை ஆகிய துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சொல்லவேண்டியதே இல்லை; இசைக்கலைஞர் சில்வியோ ரோட்ரிகஸ், நடனக் கலைஞர் அலிசியா அலோன்சோ, எழுத்தாளர் அலெஜோ கார்ப்பெண்டியர், கவிஞர் நிகோலஸ் குயில்லன், திரைத்துறை படைப்பாளர் டோமஸ் குட்டியரெஸ், முதலிய கலைஞர்கள் உருவெடுத்துள்ளனர்; புகழ்பெற்ற கியூப தேசிய பாலேவும் அந்நாட்டில் தோன்றியுள்ளது.
லத்தீன் அமெரிக்காவிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் ஃபிடலின் தாக்கம்
லத்தீன் அமெரிக்காவிலும், ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலும் கியூபப் புரட்சியின் தாக்கம் அலாதியானது. அமெரிக்கக் கண்டத்தில் கொரில்லா போர்முறையைப் பின்பற்றிய புரட்சிகர இயக்கங்கள் பல தோன்றின; சோஷலிசத்திற்கு முன்னதாக முதலாளித்துவத் தேசியப் புரட்சி கட்டாயமாகத் தோன்றியிருக்க வேண்டும் என்ற செவ்வியல் இடதுசாரி விளக்கங்களை அவை கேள்விக்குள்ளாகின.
20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சில காலனிய எதிர்ப்பு மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களில் கியூப வீரர்கள் பங்கேற்றனர் (அல்ஜீரியா, சிரியா, காங்கோ, அங்கோலா, எத்தியோபியா, வியட்நாம், மேலும் பல). உலகெங்கிலும் பல்வேறு புரட்சியாளர்கள் கரீபியன் தீவிலிருந்து நேரடி ஆதரவைப் பெற்றார்கள்.
அதுபோல, அமெரிக்க, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் புரட்சிகர, காலனிய எதிர்ப்பு இயக்கங்களில் ஃபிடல் கொண்டிருந்த உறுதித்தன்மையும், அத்தகைய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளையும் மிரட்டல்களையும் பொருட்படுத்தாததும் அவர்தம் சர்வதேசிய நிலைப்பாட்டிற்குச் சான்றாக விளங்கியது.
மேலும், சிலியில் சால்வடார் அலெண்டே தலைமையிலும், வெனுசுவெலாவில் ஹூகோ சாவெஸ் தலைமையிலும், ஆயுதப் போராட்டத் தன்மையற்ற, கம்யூனிஸ்ட் சாராத அரசியல் இயக்கங்களையும் ஃபிடல் தனிப்பட்ட முறையில் ஆதரித்தார்.
இந்த வகையில், ஃபிடலின் ராணுவ நெறிநுட்பத் திறனின் பேரில் மட்டுமல்லாமல், செறிவான புவியரசியலை உணர்ந்து நிர்வகிக்கும் ஆற்றல் படைத்த அரசுத் தலைமைப் பண்பாளர் என்கிற முறையிலும், அவர் லத்தீன் அமெரிக்க புரட்சிகர இடதுசாரி இயக்கத்தின் மிகமுக்கிய பாத்திரமாகவும் சின்னமாகவும் உருவானார். மேலும், பொருளாதார ஆற்றலின் காரணமாக அல்லாமல், பன்னாட்டுப் புரட்சிகர இயக்கங்களின் மீது கியூபாவின் அரசியல் செல்வாக்கினாலும் நேரடித் தாக்கத்தினாலுமே உலகில் புவிஅரசியல் ரீதியாக மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாகக் கியூபாவை உருவாக்கினார் ஃபிடல்.
இதுகுறித்து ஃபிடல் கூறுகையில்: “சர்வதேசியமும், மக்களிடையிலான ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களுமே மார்க்சிஸம் -லெனினிசத்தின் மிகவும் அழகிய கூறுகளாகும். சர்வதேசியமில்லாமல் கியூபப் புரட்சி இல்லை. சர்வதேசியவாதியாக இருப்பது மனிதநேயத்துடனான நம் கடனைத் தீர்த்துக்கொள்வதே ஆகும்.”
ஃபிடல்: ஏகாதிபத்தியத்தின் எதிரி
தோன்றி முழுவடிவம் எய்தாத நிலையிலிருந்த புரட்சிக்கு எதிராக வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளவும், அத்தாக்குதல்களுக்கு நிதியளிக்கவும், எதிர்ப்புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவு தரவும் வேண்டி அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத் துறையும் மத்திய உளவு முகமையும் (CIA) குடியரசுத் தலைவர் ட்வைட் ஐசனோவரிடம் (பின்னர் வந்த ஏனைய அமெரிக்க ஒன்றிய குடியரசுத் தலைவர்களுக்கும் கூட) பரிந்துரை செய்தன. பல்லாண்டு காலமாக ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல நூற்றுக்கணக்கான திட்டங்களைத் தீட்டின அமெரிக்க நாட்டின் உளவு அமைப்புகள்.
மார்ச் 4, 1960 அன்று அத்தீவிற்கு ஆயுதம் தாங்கி வந்திருந்த “லெ குப்ரே” என்கிற பிரஞ்சுக் கப்பல் வெடி ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஃபிடல், இத்தாக்குதலை எதிர்கொண்டு பின்வருமாறு உறுதிப்படக் கூறினார்: “எவ்வித வன்முறைத் தாக்குதலையும் எதிர்த்து நிற்பது மட்டுமல்ல: அவற்றை எப்படி முறியடிப்பது என்பதையும் தெரிந்துகொள்வோம்; இந்தப் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கியபோது இருந்த அதே வழிகள் தான் இப்போதும் நம்முன்னே உள்ளன: விடுதலை அல்லது வீரமரணம். இப்போது விடுதலைக்கு ஒரு புதுப்பெரும் பொருள் உள்ளது: விடுதலை என்பது தாய்நாடு. “தாய்நாடு அல்லது மரணம்” இதுவே இனி நம் இருவழிகள்.”
இத்தாக்குதலுக்கு அமெரிக்காவை நேரடியாகக் குற்றம் சாட்டிய கியூபா, சோவியத் ஒன்றியத்துடன் தூதரக உறவுகளை மீட்டுப் புதுப்பித்துக்கொண்டது. அமெரிக்காவின் தொடர்ச்சியான வரம்புமீறல்களை எதிர்கொண்டிருந்த ஃபிடல் ஒருபோதும் பின்வாங்கவில்லை; அதற்கு மாறாகத் திமிறியெழுந்தார். இச்செயல், சே குவேராவின் சொற்களில் சொல்லவேண்டுமென்றால், ஃபிடலை ஒரு “உண்மைப் புரட்சியாளர்” ஆக்கியது. ஜூன் 1960இல் ஷெல் அண்ட் எஸ்ஸோ என்கிற டெக்சஸ் எண்ணெய் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலைகள் சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்த எண்ணெயை சுத்திர்கரிக்க மறுத்ததால் அவற்றைப் பறிமுதல் செய்தது கியூப அரசு. கியூபாவிலிருந்து வாங்கிய சர்க்கரையின் அளவைக் குறைத்தது அமெரிக்கா. இந்நிலையில், பல அமெரிக்க நிறுவனங்களைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்க ஆணை பிறப்பித்தார் ஃபிடல்.
செப்டெம்பர் 2, 1960 அன்று ஹவானாவின் முதல் பிரகடனம் வெளியானது. கியூபா சோவியத் ஒன்றியத்துடனும் சீனத்துடனும் உறவைப் புதுப்பித்துக்கொண்டதன் பின்விளைவாக, அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு கியூபாவைப் பண்ணுறவாண்மை ரீதியாகத் தனிமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்வினையாக அமைந்தது அந்த ஆவணம். அந்த ஆவணத்தை முன்வைத்தபோது, ஃபிடல், ”முழு இறையாண்மை என்கிற தேசங்களின் உரிமை” என்னும் கோரிக்கையை முன்மொழிந்தார். “மக்கள் தம் ராணுவக் கோட்டைகளைப் பள்ளிக்கூடங்களாக்கிக் கொள்ளவும், தம் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிஞர்கள், கருப்பினத்தவர், இந்திய இனத்தவர், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், என ஒடுக்கப்பட்ட, சுரண்டலுக்கு ஆளான அனைவரும் தன் உரிமைகளையும் இலக்குகளையும் தாமாகவே பாதுகாத்துக்கொள்ள வேண்டி, அவர்கள் கையில் ஆயுதங்களை வழங்கும் உரிமையை” ஃபிடல் கோரினார்.
மேலும், 1961இல் மத்திய உளவு முகமையும் (CIA) ஜான் எஃப். கென்னடியின் அரசும் 1500 வீரர்களை ஆயுதத்துடன் இறக்கிய நிகழ்வான பிக்ஸ் விரிகுடா படையெடுப்பினை வீழ்த்தியபோது, தன் நிலத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைக் கியூபப் புரட்சி எதிர்கொண்டது; அன்று ஃபிடலும் போர்க்களத்தில் நின்றிருந்தார். இத்தகைய தாக்குதல்களுக்கும், பன்னாட்டு அழுத்தத்திற்கும் பிறகு, ஃபிடலின் அரசியல் கருத்தியல் என்ன என்கிற “புதிர்” விலகியது: அவர் தன்னை ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் என்று அறிவித்துக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து 1962ஆம் ஆண்டு ஆயுத நெருக்கடி நிகழ்ந்தது. இதற்கு முன்னதாக கரீபியன் தீவில் படையெடுக்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் வாக்கு பெற்றிருந்தது சோவியத் ஒன்றியம். எனினும், கியூபப் புரட்சி அமெரிக்காவிடம் முன்வைத்திருந்த ஐந்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றும்படி கோரினார் ஃபிடல். கடல்வழித் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வது, கறைபடிந்த இந்தப் போரை நிறுத்துவது, சீர்குலைக்கும் திட்டங்களைக் கைவிடுவது, குவாண்டனாமோ கடற்படைத் தளத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவது ஆகியவையே அக்கோரிக்கைகள் .
ஆனாலும், இன்று வரை தொடரும் பொருளாதாரத் தடையைத் திணித்துக் கியூபப் புரட்சியை பொருளாதார ரீதியாகத் திணறடிக்க முயன்றது அமெரிக்கா. 1959இல் 73% கியூப ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்குச் சென்றன; கியூபாவின் 70% இறக்குமதி அங்கிருந்து வந்தவை. கியூபப் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்துள்ளது. பொருளாதார, சமூக மேம்பாட்டில் சில தளங்களில் கியூபா முன்னேறும் ஆற்றலை இது வெகுவாகப் பாதித்தது. 2021இல் “பயங்கரவாதத்திற்குக் கொடையளிக்கும் அரசுகள்” பட்டியலில் டொனால்ட் ட்ரம்ப் கியூபாவைச் சேர்த்ததென்பது, இந்தத் தடையை மேலும் நெருக்கடியானதாக ஆக்கியது.
வரலாற்றில் நெடுங்காலம் நிலைத்த பொருளாதாரத் தடையாக இது இருந்தபோதிலும் (கியூபா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதார உருவளவுகளை ஒப்பிடுகையில், இத்தடையானது மிகவும் தீவிரமானதாக இருந்துள்ளது), ஃபிடலின் தலைமையில் விளையாட்டு, பண்பாடு, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி முதலிய துறைகளில் செயல்திட்டங்களை உயர்நிலைக்கு எடுத்துச்சென்று, விளையாட்டுத்துறை வெற்றிகளையும், கலைத்துறையிலும், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வீதத்திலும், உலகெங்கிலும் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் (மருத்துவத்துறையில் குறிப்பாக) அந்தத் தீவுத்தேசத்தை உயர்த்தியது கியூபா.
“ஏகாதிபத்திய வாதிகள் நம்மை மன்னிக்கமாட்டார்கள்; ஏனென்றால் நாம் அவர்களுக்கு எட்டும் தொலைவில் இருந்துகொண்டு – அமெரிக்காவிற்கு எட்டும் தொலைவில் இருந்துகொண்டு, ஒரு சோஷலிசப் புரட்சியை உண்டாக்கியுள்ளோம்!” என்று புரட்சியின் தொடக்கத்தில் ஏப்ரல் 16, 1961 அன்று ஃபிடல் சொன்னது இதனால்தான் போலும்.
சுருக்கமாகச் சொன்னால், அயராத நடைமுறை உறுதியும், புரட்சிகர அடங்கமறுத்தலுமே ஃபிடலின் வரலாற்றுப் பாத்திரத்தின் தன்மைகள். தன் ஆதரவாளர்களின் பார்வையிலும் எதிரிகளின் பார்வையிலும், ஃபிடலை 20ஆம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கிய வரலாற்றுப் பாத்திரமாகச் சந்தேகத்திற்கு இடமின்றி ஆக்குவதும் இதுவே ஆகும்.
தமிழில்: அஸ்வத்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
