கொலையாளி வெப்ப அலையா? முதலாளித்துவமா?
ஆர். எஸ். செண்பகம்
ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பூமி வெப்பமாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. இந்தியா மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறது. பல நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை விட அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் வெப்ப அலையின் காரணமாக, மார்ச் மாதத்திற்கும் ஜுன் மாதத்திற்கும் இடையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்ப பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம்தான் இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில், டெல்லி, பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. வெப்ப அலையின் தாக்கத்தில் நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயுள்ளனர். தில்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட்’ அலர்ட் விடுத்து, “பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தீவிர கவனிப்பு” தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், காலநிலை மாற்றத்தால் 2030ஆம் ஆண்டில் இந்தியா 340 லட்சத்திற்கும் அதிகமான முழுநேர வேலைகளை இழக்கும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வறிக்கை கூறுகிறது.
வெப்ப அலையால் உடல் நிலையில் ஏற்படும் கோளாறுகள்
வெப்ப அலையின் தாக்கம் உயிரிழப்பிற்குக் கொண்டு செல்லும் அளவிற்கு அபாயமானது. உடம்பில் நீர்ச்சத்துக் குறைபாடு முதற்கொண்டு வெப்பம் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படும். நோய்க்கான அறிகுறிகள் ஒவ்வொன்றும் பிரத்தியேகமானவையாக இருக்கின்றன. வெப்பச் சுளுக்கு எனப்படும் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. பல நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் உடலின் பல பாகங்களில் வீக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் மயக்கமடைந்து விழுகின்றனர். இலேசானது முதல் மிக அதிகமான டிகிரியில் காய்ச்சல் ஏற்படுகிறது. வெப்பச் சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு மற்றும் அதிக வியர்வை மூலம் நீரிழப்பு போன்றவை ஏற்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதற்கென ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, அனைத்து சுகாதார நிலையங்களிலிருந்தும் இதற்கான தரவுகளை தினசரி சமர்ப்பிக்கவும், மருத்துவ அதிகாரிகளால் சந்தேகத்திற்கிடமான வெப்பம் தொடர்பான இறப்புகளை விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். வெப்ப அலை வீச்சின் தாக்கம் குறித்த (இறப்புகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்த) அதிகாரப்பூர்வ தரவு எதுவும் இல்லாத நிலையில் இந்த வழிகாட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை தினமும் மாலை 4 மணிக்குப் பிறகு வெப்ப அலைகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளை வெளியிடும். இதனை அடுத்த நான்கு நாட்களுக்கு முன்னறிவிப்புடன் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதோடு, மத்திய அரசு மருத்துவமனைகளில் வெப்பச் சலனம் காரணமாக நோய்வாய்ப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வெப்ப அலை பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
நட்டாவின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் மாநில சுகாதாரத் துறைக்கு ‘வெப்ப அலை சீசன் 2024’ குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையை அணுகும்போது, ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். சந்தேகத்திற்கிடமான வெப்பம் தொடர்பான நோய் மற்றும் இறப்பு குறித்து மாநிலங்கள் விசாரிக்க வேண்டும் என்று அது ஆலோசனை கூறியுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் முன்பே பல உடல்நலக் கோளாறுகள் இருக்கும் மக்களிடையே ஆய்வுகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய செயல்திட்டத்தை (HRI) அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்புவதை உறுதிசெய்யவும், HRIக்கான சுகாதார அமைப்புகளின் தயார்நிலையை வலுப்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடுமையான HRI தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான சுகாதார வசதிகளை தயார்படுத்துதல் மற்றும் போதுமான அளவு ஓஆர்எஸ் பாக்கெட்டுகள், அத்தியாவசிய மருந்துகள், ஐவி திரவங்கள், ஐஸ் பைகள் மற்றும் உபகரணங்களை வாங்குதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளைத் தொடர்ந்து மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது. தீ தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல்; மற்றும் தீ பாதுகாப்பு நெறிமுறைகள், மக்களை வெளியேற்றும் நடைமுறைகள் மற்றும் தீயணைக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஸ்மோக் அலாரங்கள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தெளிப்பான்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யவும் மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் தொடர்பான நோய்களுக்கான அவசர குளிரூட்டல் பற்றிய வழிகாட்டுதல்கள் மற்றும் வெப்பம் தொடர்பான இறப்புகளில் பிரேத பரிசோதனை கண்டுபிடிப்புகள் பற்றிய வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து AIIMS மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை அனைத்துமே வெறும் வழிகாட்டுதல்களாகவும் அறிவுறுத்தல்களாகவும் உள்ளன. இதற்கான திட்டங்களும், திட்டமிடல்களும், நிதி ஒதுக்கீடுகளும் போதுமான அளவில் செய்யப்படவில்லை என்பதுதான் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.
புரிந்துகொள்வதும், அளவுகோல்களும்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி இந்தியாவில், ஒரு இடத்தின் அதிகபட்ச வெப்பநிலை சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ், கடலேரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸை அடையும்போது அல்லது அதற்கு மேல் இருந்தால் வெப்ப அலை வீச்சின் தாக்கம் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், இத்தகைய வரையறை பல காரணங்களுக்காக திருப்திகரமாக இல்லை. ஏனென்றால், அதீத வெப்பம் என்பது ஒரு வானிலை நிகழ்வு மட்டுமல்ல; மனிதர்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற உயிர்களால் தங்கள் வழக்கமான அனுபவத்திலிருந்து மாறுதலாக உடல் ரீதியாக உணரப்பட்டுகிறது. மேலும், இந்த அதிகாரப்பூர்வ வரையறை உயிர்களின் மீது அதிக வெப்பநிலையின் காரணமாக ஏற்படுத்தும் தாக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக, இரவு நேர வெப்பத்தின் அதிகரிப்பு அதிகபட்ச இறப்புக்கான காரணம் என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. “குளிர்ச்சியான இரவு வெப்பநிலை உள்ள நாட்களை விட வெப்பமான இரவுகளில் இறப்பு ஆபத்து 50 சதவீதம் அதிகமாக இருக்கும்” என்று கண்டறிந்துள்ளது. காரணம், வெப்பம் தூக்கத்தை பாதிக்கிறது, உடல் தன்னை சரிசெய்து கொள்வதை தூக்கமின்மை அனுமதிக்காது. இரண்டாவதாக, ஆவியாதல் என்பது நம் உடலை குளிர்விக்கும் முறையாகும் என்பதை நாம் அறிவோம். ஆனால் உடலின் ஈரப்பதம் 75 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் போது இது பயனற்றதாகிவிடும் – இது ஈரமான பல்பு நிகழ்வு என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது சுமார் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை மனித உயிர்வாழ்வதற்கான கோட்பாட்டு வரம்பு என்றாலும், நடைமுறையில், 88 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை இளம், ஆரோக்கியமான மக்களுக்கு கூட ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. வெட்-பல்ப் வெப்பநிலை என்பது தற்போதைய சுற்றுப்புற சூழ்நிலையில் நீரின் ஆவியாதல் மூலம் மட்டுமே அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலையாகும். எனவே வெப்ப அசௌகரியம் என்பது வெளி வெப்பநிலை மட்டுமல்ல, உடல் சார்ந்த தாக்கம் பற்றியது என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
”தந்தூரி” அடுப்பில் இருப்பது போல், ’’நரகத்தில் வாழ்கிறோம்” என மக்கள் அலறும் விதத்தில் அனல் காற்றின் வீச்சு இந்தியாவின் பல பகுதிகளை தாக்கிக் கொண்டிருக்கிறது. குடிநீர் பற்றாக்குறை, மின் தடைகள் என பல்வேறு விளைவுகளை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம் (IIED)-ன் மனிதக் குடியேற்றக் குழுவின் முதன்மை ஆய்வாளர் அன்னா வால்னிக்கி, ”காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் ஏற்படும் கடுமையான வெப்ப நிகழ்வுகளின் அபாயகரமான அதிகரிப்பு – அனைவரின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும், உற்பத்தித்திறனையும் கணிசமாக பாதிக்கிறது. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட முறைசாரா தொழிலாளர்களின் குடும்பங்கள், குறைந்த அளவு தண்ணீருடன், மின்சாரப் பற்றாக்குறையுடன் கடுமையான வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கூடுதலாக, அவர்களின் வீடுகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் பெரும்பாலும் மோசமான காற்றோட்டம் உள்ளதாக, மிகச் சிறிய இடத்துடன் இருப்பதால் வெப்ப அலை மிக மோசமாக அவர்களை தாக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் மிகப் பெரும்பான்மையான இந்திய மக்களின் உண்மை நிலை.
“மானுடத் தாக்க காலநிலை மாற்றங்கள்”
புதைபடிவ எரிபொருளான நிலக்கரி, நிலக்கரி சார் பொருட்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் புதுப்பிக்க முடியாத கழிவுகள் போன்ற புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களை தொடர்ச்சியாக எரித்ததால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இத்தகைய நடைமுறைகளால், உலகளாவிய வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய சராசரி வெப்ப நிலையை விட 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு, பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தில் வெப்பநிலை உயரக் காரணமாகியுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபையின் கூற்றுப்படி, தொழிற்புரட்சிக்குப் பிறகு மனித நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. புவி வெப்பமடைதலில் 25 சதவீதம் மீத்தேன் மூலம் மட்டுமே ஏற்படுகிறது. ஐ.நா. அறிக்கையின்படி, பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்குத் தேவையான உமிழ்வு வெட்டுக்களில் 15 சதவீதத்தை எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையால் குறைக்க முடியும். கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைப்பதற்கும், நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும், வளர்ந்த நாடுகளும் ஏகாதிபத்தியமும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. அதேபோன்று, தொழிற்சாலைகளின் உமிழ்வுகள், அதிக வாகனப் பயன்பாடுகள் எனப் பலவும் காலநிலை மாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதைத்தான் “மானுடத்தாக்க (Anthropogenic) காலநிலை மாற்றங்கள்” அதாவது மனிதனால் கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்கிறார்கள். நாம் வாழும் பூமியின் தலைவிதியும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வும் இன்று நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் துபாயில் நடந்த COP28ல், பல விவாதங்கள் இருந்தன; சில உறுதிமொழிகள் இருந்தன. ஆனால், புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு குறித்த ஒப்பந்தங்கள் குறித்த பரிசீலனையை அது செய்யத் தவறிவிட்டது. டிகார்பனைசேஷன், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி விரைவாக நகர்வது மற்றும் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான காலநிலை செயல் திட்டங்களை உருவாக்குவது போன்றவை அவசர அவசியத் தேவையாகும்.
விற்பனை சரக்குகளாகும் விஞ்ஞான ஆராய்ச்சிகளும், அது குறித்தத் தகவல் பரிமாற்றங்களும்
காலநிலை மாற்ற தகவல் தொடர்பு (Climate communication or climate change communication) என்பது சுற்றுச்சூழல் தொடர்பு மற்றும் அறிவியல் தகவல்தொடர்புகளின் ஒரு துறையாகும். மேலும், “மானுடத்தாக்க காலநிலை மாற்றங்கள்” பற்றியும் அது கவனம் செலுத்தும். இந்தத் துறை காலநிலை மாற்றம் குறித்த முக்கியமான பிரச்சனையை பற்றி கற்றறிந்து கொண்டு, தகவல்களை சேகரிக்கும். எச்சரிக்கை செய்யும் குறிப்புகளை அறிவுறுத்தும். தீர்விற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டுதலை கொடுக்கும். இப்படிப்பட்ட காலநிலை மாற்ற தகவல் தொடர்பு ஆராய்ச்சிகள் பொதுக் கொள்கை உருவாக்கத்திற்கு பயன்பட வேண்டும். ஆனால், சமீப காலமாக, விஞ்ஞான ஆராய்ச்சியும், அதன் தகவல் பரிமாற்றங்களும் ”பண்டமாக்கப்பட்டு” விற்பனை சரக்குகளாக்கப்படுகின்றன. ‘வெப்ப அலை’ குறித்த காலநிலை அறிவியல் விவாதங்களும், ஊடகப் பிரச்சாரங்களும் தனியார் காப்பீட்டு திட்டங்கள், குளிர்ச்சியான கூரைகள், தள ஓடுகள், மலிவான ஏசி என்று வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, 2022இல் வெளியான உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கை, குளிர் சாதன வசதிக்கான கிராக்கி வருங்காலங்களில் அதிகரிக்கும் என்றும், அதற்கான மின் சக்தி பயன்பாடு அதிகரிக்கும்; கூடவே அதனால் ஏற்படும் மாசுபாடும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தது நினைவிற்கு வரலாம். வெப்ப அலை குறித்த தகவல் தொடர்புகள் சந்தைப்படுத்தப்பட்டு வணிகமயமாக்கப்படும்போது பண்டமாக்குதலும் பணமாக்குதலும் நடக்கிறது.
வர்க்கப் பிரிவினையும், காலநிலை இடர்ப்பாடுகளும்
பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் சான்றிதழின்படி, இறந்தவர்களில் பெரும்பான்மையினர் இந்நாட்டின் ஏழை எளிய தொழிலாளர்கள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்ட வறிய மக்கள். வெப்ப அலை வீச்சில் இந்தியாவில் இப்படிப்பட்ட மரணங்கள் இது முதல் முறை அல்ல. 1998இல் ஒடிசாவில், 2003இல் ஆந்திரப் பிரதேசத்தில், 2010இல் அகமதாபாத்தில் என ஆயிரக்கணக்கான மரணங்கள் அப்போதும் ஏற்பட்டுள்ளன. அதன் பிறகும் கூட ஆண்டுதோறும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெப்ப அலை வீச்சிற்கு மனித உயிர்கள் பலியாவது நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களை கொல்லும் கொலையாளியாக வெப்ப அலை வீச்சு மாறுவதற்கு அரசின் அக்கறையின்மையும் மிக முக்கிய காரணமாகும்.
இத்தகைய நிகழ்வுகள் ஏழைகளை எவ்வாறு வர்க்கரீதியாக பாதிக்கின்றன என்பது மிக முக்கியமான கவனத்திற்குரிய பிரச்சினையாகும். பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs), சிறுபான்மையினர், பெண்கள், முதியவர்கள் மற்றும் பிற குறைந்த வருமானம் கொண்ட பின்தங்கிய பிரிவினர் பெரும்பாலும் மருத்துவ வசதிகள் மற்றும் சேவைகளுக்கு மிகக் குறைவான அணுகலையே கொண்டிருக்கின்றனர். ஒரு தனிநபரின் பாதிப்புக்கு பொருளாதார நிலை முதன்மையான பாத்திரம் வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. செல்வந்தர்கள் பொதுவாக குளிரூட்டும் தொழில்நுட்பங்களை எளிதில் பெற முடிகிறது; கடுமையான வெப்பத்தின்போது வீட்டிற்குள் இருக்க முடிகிறது; அல்லது தற்காலிகமாக குளிர்ச்சியான இடங்களுக்கு இடம் பெயர்ந்து, அவற்றின் ஆபத்தை குறைத்துக் கொள்ள முடிகிறது. மாறாக, ஏழைகளின் பொருளாதார நிலை இதற்கு எந்த வகையிலும் உதவாது. அவர்கள் வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து தப்ப முடிவதில்லை. அவர்களின் வேலைவாய்ப்பின் முறைசாரா தன்மை என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பணயம் வைக்காமல் ஓய்வு எடுக்கவோ அல்லது மருத்துவ உதவியை நாடவோ முடியாது. மேலும், சுகாதாரப் பாதுகாப்பு அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வு உடனடி வெப்ப அலை விளைவுகளை அதிகப்படுத்துகிறது. மேலும் நீண்டகால சுகாதார ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாகிறது. ஏழை மக்களிடையே வெப்பம் தொடர்பான நோய்கள் மற்றும் இறப்புகள் அதிக விகிதங்களில் நிகழ்வதன் காரணம் இதுவே. வர்க்கப் பிரிவினையின் ஏற்றத்தாழ்வு இதில் மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது.
உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் கூடுதல் சவால்கள்
வெப்ப அலைகள் போன்ற கடுமையான இயற்கை சீதோஷ்ண நிலை மாற்றங்கள் ஏற்கனவே இந்திய சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பாலின ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துகிறது. உழைக்கும் பெண்களுக்கு பிரத்தியேகமான சவால்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, தில்லியில் உள்ள குப்பைக் கிடங்கில் கழிவுகளை சேகரிக்கும் பெண்கள், கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க, காலை அல்லது மாலை போன்ற நேரடி வெப்ப வீச்சில்லா நேரங்களுக்கு தங்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆனாலும், இந்த வேலை நேர மாற்றம் அவர்களின் வருவாயை கணிசமாக பாதிக்கிறது. கூடுதலாக, ஆண்களைப் போலல்லாமல், கழிவுகளை சேகரிக்கும் பெண்கள் பெரும்பாலும் வீட்டில் கூடுதல் பராமரிப்புப் பொறுப்புகளை உள்ளவர்கள். இதில் சமையல், பாத்திரங்களை கழுவுதல், வீட்டிற்குத் தேவையான தண்ணீர் சேகரிப்பு உள்ளிட்டவை அடங்கும். இது கடுமையான வெப்ப அலை வீச்சில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பலவற்றால் இன்னும் கூடுதல் சுமையாக மாறுகிறது. இதன் விளைவாக, அவர்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கவே போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களின் ஒட்டுமொத்த வருமானம் பாதிக்கப்படுகிறது.
இது ஒரு புறம் என்றால், நகர்ப்புறங்களில் இன்றைக்கு அதிகரித்து வரும் பாலியல் வன்முறை, முறைசாரா வேலைகளில் உள்ள பெண்களுக்கு குறிப்பிடத்தக்கதொரு கவலையாக உள்ளது. பணி நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அவர்கள் வழக்கமான நேரங்களில் அல்லாமல் இரவு மற்றும் அதிகாலையில் பொது இடங்களுக்குச் செல்லும்போது, அவர்கள் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு ஆளாக நேரிடும். பல பகுதிகளில் போதிய வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது இந்த அபாயங்களை மேலும் கூட்டுகிறது.
சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் நிலை
அதேபோல, பொது நிதியுதவி பெறும் நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வியை வெப்ப அலை வீச்சும் பிற சீதோஷ்ண நிலை மாற்றங்களும் ஆழமாக பாதிக்கிறது. பொதுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கடுமையான வெப்பத்தின்போது ஒரு உகந்த கற்றல் சூழலை வழங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்புகள் இல்லாதவையாக உள்ளன. போதுமான காற்றோட்டம் இல்லாமல், வகுப்பறைகள் தாங்க முடியாத அளவுக்கு வெப்பமாகி, மாணவர்களின் கவனத்தை குவிக்கும் மற்றும் தகவல்களை உள்வாங்கும் திறனை தடுக்கிறது. இந்த நிலை, பொதுக் கல்வி வசதிகளை நம்பியிருக்கும் தாழ்ந்த சமூக-பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களை மிக மோசமாக பாதிக்கிறது. தேர்வுக் காலங்களில் இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமாகிறது. அதிக வெப்பநிலையின்போது தேர்வுக்கு அமர்வதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல் அசௌகரியம் குறைந்த மதிப்பெண்கள் மற்றும் தோல்வி விகிதங்களை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது பின்தங்கிய பகுதியினரின் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு நீடித்து நிலைக்கக் காரணமாகிறது. எனவே, அனைவருக்கும் சமத்துவமான காலநிலைக் கொள்கைகளை உருவாக்குவதற்கு பல்வேறு சமூகப் பிரிவுகளின் மீது வெப்ப அலை வீச்சின் மாறுபட்ட தாக்கங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
”தனிமனித சுமை”யாக்கும் முதலாளித்துவ வர்க்கப் பாசம்
முதலாளித்துவம் வடிவமைக்கும் சமீபத்திய அறிக்கைகளில், உழைப்பின் பாத்திரம் எப்படி வரையறைக்கப்படுகிறது என்பதும், உற்பத்தியில் அதனுடைய பங்களிப்பு குறித்த பார்வை எவ்விதமாக இருக்கிறது என்பதும் முக்கிய கவனம் பெறுகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) என்ற ஐக்கிய நாடுகளின் அமைப்பு தன்னுடைய 6-வது மதிப்பீட்டு அறிக்கையில் வெப்ப அலை வீச்சு வெளிப்புறத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை குறைக்கிறது என்று குறிப்பிடுவதும், அவர்களை உள்ளரங்கத்தில் பணிபுரியும் விதமாக மாற்றிவிடும்போது அவர்களது உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்று குறிப்பிடுவதும், உழைப்பின் பங்கினை விவசாயத்திலிருந்தும், கட்டுமானத்திலிருந்தும் ”சேவைத் துறை”யினை நோக்கித் திருப்பிவிடலாம் என்ற ஆலோசனையை முன்வைப்பதும் எல்லாமே முதலாளித்துவத்தின் வர்க்கப் பாசத்தினை வெளிப்படுத்துபவையே. இப்படிக் குறிப்பிடுவதன் மூலம், தேசியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றத்திற்கு அது வக்காலத்து வாங்குகிறது. ஒரு கூரையின் கீழ் வேலை பார்ப்பவர்கள், கூரையற்ற வெளியில் வேலைபார்ப்பவர்கள் என்று வெப்ப அலை கொள்கையில் தொழிலாளர்களை வகைப்படுத்துவது என்பது ஒரு விரிவடைந்த சமூகப் பாதுகாப்பினை அளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசின் பொறுப்பினை குறைப்பதற்கு உதவுகிறது.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தீவிர விளைவுகளை சந்திக்கும் வகையில், அரசு அனைத்துத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவடைந்த சமூகப் பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பினை குறுக்குவதற்கு இத்தகைய பகுப்பு உதவுகிறது. உழைக்கும் மக்களுக்கு – புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் உயிர் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கி பரப்பப்படும் காலநிலை குறித்த எச்சரிக்கைகள் வெப்ப அலை வீச்சினை எதிர்கொள்வதென்பது ஒரு தனிமனிதனின் பொறுப்பு என்பது போல மாற்றிவிடுகிறது. தனி மனித அபாயமாக சித்தரிக்கப்படுவதால், தனிமனித சுமையாக அது மாற்றப்படுகிறது. அரசாங்கத்தின் பொதுப் பொறுப்பினைக் குறைத்து, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கான பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்குகிறது. சமீபத்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பருவகால புலம்பெயர்ந்தோரில் தலித்துகள் 30.57 சதவீதமும், ஆதிவாசிகள் 12.63 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.94 சதவீதமும் உள்ளனர். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம் மற்றும் அபாயகரமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்ற பிற சிக்கல்களுடன் அவர்களது சமூக ஒடுக்குமுறையும் உள்ளது. வெப்ப அலை வீச்சு தற்போதுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கிறது.
2013ஆம் ஆண்டிலேயே, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இயற்கை பேரிடரில் ஒன்றாக வெப்ப அலை தாக்குதலை இணைக்கக் கோரியது. ஆனால், அதை முடிவு செய்வதற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட அமைச்சகக் குழு இதற்கான எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசிடம் வெப்ப அலை வீச்சினை எதிர்கொள்ளவோ, தடுக்கவோ, வீச்சிலிருந்து பாதுகாக்கவோ எந்த ஒருங்கிணைந்த திட்டங்களும் இல்லை. மாறாக, ”வீட்டிற்குள்ளேயே இருங்கள், ஏராளமாய் தண்ணீரும், நீர் மோரும் குடியுங்கள், பருத்தி ஆடை மட்டுமே அணியுங்கள்” என்று இலவச ஆலோசனையை மட்டும் அரசு தரப்பில் இருந்து செய்வது, தினக் கூலிகளையும், குளிர்சாதன வசதியற்ற வாகன ஓட்டிகளையும், அதிக வெப்ப வீச்சுள்ள ஆலைகளில் வேலை செய்பவர்களையும், வீடற்றவர்களையும், ஆதரவற்ற வீதியோர மக்களையும் ஏளனம் செய்வதாகாதா? வெப்ப அலை தாக்கத்திலிருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்கும் விதத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், மருத்துவ சிகிச்சை அளிப்பதும், சுகாதார வசதிகளை அளிப்பதும், அரசு முகைமைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் செய்யப்பட வேண்டியது அரசின் மிக முக்கியமான கடமை.
வெப்ப அலையினால் குறையும் ”உழைப்பு”– பறி போகும் ”உபரி” – முதலாளிகளின் கவலை
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையின்படி, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் விளைவாக, 2030ஆம் ஆண்டில் இந்தியா தனது ஒட்டுமொத்த உழைப்பு நேரத்தில் தோராயமாக 5.8 சதத்தை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், வெப்ப அலை பாதிப்பில் இந்தியா 167.2 பில்லியன் தொழிலாளர் உழைப்பு நேரத்தை இழந்தது எனும்போது, ஏற்பட்ட வருமான இழப்புகள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 5.4 சதவீதத்திற்கு சமமானதாக இருந்தது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உழைப்பு நேரத்தின் இந்தச் சரிவு இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க சவால்களை முன்நிறுத்துகிறது என்றும், குறிப்பாக, 90% பணியாளர்கள் முறைசாராத் துறையில் செயல்படுவதால், பலர் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால், உழைப்பு நேரச் சரிவு என்பது தனிமனிதப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல; வர்த்தக, வணிக நஷ்டங்கள் என தேசத்தின் பொருளாதாரத்திலேயே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், விவசாயம், வனம் சார்ந்த தொழில்கள் மற்றும் மீன்பிடி போன்ற அவற்றைச் சார்ந்திருக்கும் 1.2 பில்லியன் பேரின் தொழில்களையும் பாதிக்கிறது எனவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (2019: 17) மற்றும் (2019:19) (ILO )அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் இல்லாத இந்தத் தொழிலாளர்களுக்கு வெப்ப அலைகள் கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் இந்த ஆண்டு வெப்ப அலைகள் குறித்த அறிக்கை (UNDRR 2022: 24), இத்தகைய பாதிக்கப்படக்கூடிய பகுதியினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க, செலவு குறைந்த ‘சென்டினல் கண்காணிப்பு அமைப்புகளை’ உருவாக்க வேண்டும் என்றும், ’வேலை இடைவேளை’, ‘குடிநீர்’, ‘வெப்ப அபாயத்தைக் கண்டறிவதற்கான பயிற்சி’, ‘அதிக வெப்பம் அல்லது ஈரப்பதத்தில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல்’, ‘பொருத்தமான ஆடை அணிதல்’ மற்றும் ‘தகவல் மற்றும் செய்தி அனுப்புதல் ((UNDRR 2022: 32)’ என செலவு குறைவான நடவடிக்கைகளை எடுக்கப் பரிந்துரைக்கிறது.
வெப்ப அலை வீச்சின் பின்னணியில், ஒரு தொழிலாளியின் உற்பத்தித்திறன் என்பது வெப்பத்தின் தாக்கத்தால் குறைக்கப்படும் வேலை திறன் மற்றும் வேலை நேர இழப்பால் வரையறுக்கப்படுகிறது (2019: 19). மேலும், ‘வேலையை மெதுவாக்குதல்’, ‘அடிக்கடி மற்றும் நீண்ட இடைவெளிகளை எடுத்தல்’, ‘வேலை நேரங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல்’ போன்ற ‘இயற்கை பாதுகாப்பு முறையைப்’ பயன்படுத்தும்போது, உற்பத்தித்திறன் குறைகிறது. கடுமையான வெப்பத் தாக்கத்திற்கு ஆளாகும் தொழிலாளர்கள் நோய் மற்றும் இறப்புக்கு மட்டும் ஆளாக நேரிடவில்லை; அவர்கள் திறமையற்றவர்களாகவும், உற்பத்தித் திறன் குறைந்தவர்களாகவும் மாற்றப்படுகின்றனர் என்று விளக்கமளிக்கிறது. IPCC ஐந்தாவது அறிக்கை வெப்ப அழுத்தத்தின் முக்கிய விளைவாகக் குறிப்பிடுவது, உற்பத்திக் குறைவின் காரணமாக ஏற்படும் உற்பத்தி இழப்பு, உற்பத்தி இழப்பின் மூலம் ஏற்படும் பொருளாதார செலவுகள் போன்றவையே ஆகும். எனவே, வெப்ப அதிகரிப்பு என்பது, சமீபத்திய முதலாளித்துவ நலன் சார்ந்த அறிக்கைகளில் தொழிலாளர்களுக்குக் கேடு விளைவிப்பதாக விவரிக்கப்படுகிறது.
எப்படி கொரோனா தொற்றின்போது தொழிலாளர்கள் முதலாளித்துவக் கட்டமைப்பினால் கைவிடப்பட்டனரோ, அதே போன்று தற்போதும் தொழிலாளர்கள் குறித்துப் போதுமான அக்கறையை எடுக்கவில்லை. மாறாக, வேலைநாள் வரையறுப்பிலும், உற்பத்தித் திறன் குறைவது குறித்த கவலையிலும்தான் முதலாளித்துவ அமைப்பு கவனம் செலுத்துகிறது.
வெப்ப அலை வீச்சும் ஒரு தொழில்சார் ஆபத்து தான்
வெப்பம் தொடர்பான நோய் பல தசாப்தங்களாக ஒரு தொழில்சார் அபாயமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1. அதிக வெப்ப நிலையின் காரணமாக தீக்காயங்கள் அல்லது தலைச்சுற்றலில் விழுதல் போன்ற தொழில் காயங்கள்; ஆஸ்துமா, சிறுநீரக நோய், அல்லது இதய நோய் போன்று ஏற்கனவே இருக்கும் நோய் நிலைமைகள் தீவிரமடைதல், மற்றும் மரணம் போன்ற நிலைமைகளுக்கு தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தள்ளப்படுகின்றனர். 2. இந்த மருத்துவ சுகாதார விளைவுகளின் காரணமாக, தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைகிறது மற்றும் சுகாதாரச் செலவுகள் அதிகரிக்கிறது. மேலும் தொழிலாளர் இழப்பீடு கோரிக்கைகள் மற்றும் விடுபட்ட வேலையினால் தொழிலாளர்களின் நிதி நிலைத் தன்மைக்கு அச்சுறுத்தல்கள் உட்பட பொருளாதார தாக்கங்களையும் அதிகரிக்கிறது. 3. காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் வெப்ப அலைகள் அடிக்கடி, நீண்ட காலம் நீடிக்கும் தன்மையுடன் மிகவும் தீவிரமானதாக மாறுவதால் இந்த அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெப்ப அலை வீச்சு தொழில் சார் அபாயமாகப் பார்க்கப்பட வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்கள் முதலாளிகளின் வீடுகள், சந்தைகள், தெருக்கள், கட்டுமான தளங்கள், கழிவுகளை கொட்டும் தளங்கள், நிலப்பரப்புகள் மற்றும் பிற பொது இடங்கள் என முறைசாரா தளங்களில் வேலை செய்கிறார்கள். எனவே, பொதுவாகவே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். தரமான வீட்டுவசதிக்கான போதுமான அணுகல் இன்மை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதியின்மை போன்றவற்றால் அவர்களின் உடல்நலம், வாழ்வு, வேலை மற்றும் வருமானம் நேரடியாக பாதிப்பிற்குள்ளாகிறது. மேலும், முறைசாரா தொழிலாளர்கள் பொதுவாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களின் பொருளாதாரச் சுமை அவர்களது குடும்பங்களுக்கும் பேரழிவை உண்டாக்குகிறது. மேலும் மேலும் அவர்களை வறுமையில் தள்ளுகிறது. எனவே, வெப்ப அலை வீச்சு என்பது தொழில்சார் அபாயமாக அறிவிக்கப்படுவதும், அதற்கான செயல்திட்டங்கள் உடனடியாக எடுக்கப்படுவதும் இன்றைய அவசர அவசியத் தேவையாகிறது.
இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தின் நகர்ப்புற சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் அவிகல் சோம்வன்ஷி, ”கடந்த 20 ஆண்டுகளில் மின்னலுக்குப் பிறகு, இயற்கையின் சக்திகளால் ஏற்படும் இறப்புகளுக்கு வெப்ப வீச்சே பொதுவான காரணமாக உள்ளது என்று மத்திய அரசின் தரவு காட்டுகிறது, இந்த இறப்புகளில் பெரும்பாலானவை 30 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்களிடையே நிகழ்கின்றன. இவர்கள் உடலால் உழைக்கும் வர்க்க ஆண்களாக, கடுமையான வெப்பத்தில் வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர்” என்று கூறுகிறார். சில மத்திய-கிழக்கு நாடுகளைப் போலல்லாமல், வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது வெளிப்புறச் செயல்பாடுகளைத் தடுக்கும் சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
’’வேறு வழியில்லை’’: கொடூரமான வெப்ப அலைக்கு மத்தியில் போராடும் ஏழைத் தொழிலாளர்கள்
நாம் அனைவரும் ஒரே மாதிரியான வெப்பநிலையில் வாழ்ந்தாலும், வெப்பத்தின் தாக்கம் ஒவ்வொரு தொழிலாளியையும் ஒவ்வொரு விதிமாகப் பாதிக்கிறது. வெப்பத்தின் சுமை சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. வெவ்வேறு தொழில்களில், தனித்தனி பணியிடங்களில் வேலை செய்யும் போது, வெப்ப அலைகள் வெளிப்புற தொழிலாளர்களை கிக் தொழிலாளர்கள் அல்லது கட்டுமானத் தொழிலாளர்கள் அல்லது அதிக உடல் உழைப்பைச் செய்யும் விவசாயத் தொழிலாளர்கள், அல்லது ஆட்டோரிக்க்ஷா ஓட்டுநர்கள் அல்லது தெருவோர வியாபாரிகள் போன்றவர்களை அல்லது செங்கல் சூளையில் வேலை செய்பவர்களை வித்தியாசமாகப் பாதிக்கின்றன. அவரது வேலை நேரத்தில் நேரடியாக சூரியனின் தாக்கம் உள்ளது. இரண்டாவது ஒரு தொழிற்சாலையில் அல்லது வேலை செய்கிறவர் மற்றும் மூன்றாவது அவரது சொந்த வீட்டில் இருந்து தையல் வேலை செய்கிறவர் என எடுத்துக் கொண்டால், ஒரு பொதுவான காரணியாக அவர்களின் பணியிடங்களில் கடுமையான வெப்பம் மூன்றுக்கும் தவிர்க்க முடியாத வகையில் அவர்களை பிணைக்கிறது. செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்கள், செங்கற்கள் சுடப்படும் சூளைகளில் இருந்து தீவிர சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் தீவிர கதிர்வீச்சு வெப்பம் ஆகிய இரண்டிற்கும் உட்படுத்தப்படுகின்றனர். செங்கல் தயாரிக்கும் போது பெரும்பாலான மணிநேரங்கள் குந்தியிருத்தல் என்ற முறையில் உட்கார்ந்திருக்க வேண்டும். இதனால் முழங்கால் வலி மற்றும் கீழ் மூட்டுகளில் இரத்த ஓட்டம் குறைந்து வலி ஏற்படும்.
நிதி (NITI) ஆயோக்கின் அறிக்கையின்படி, இந்தியாவில் 7.7 மில்லியன் கிக் தொழிலாளர்கள் உள்ளனர் – இது 2029-30க்குள் 23.5 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீடித்த வேலை நேரம், டெலிவரி இலக்குகளை அடைவதற்கான அழுத்தம், அதிக சுமைகளைச் சுமந்து செல்வது, ஒழுங்கற்ற வருமானம் மற்றும் சுகாதாரக் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு இல்லாமை போன்றவை கிக் தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலனை எதிர்மறையாக பாதிக்கின்றன என்று தில்லியை தளமாகக் கொண்ட ஜான்பஹாலின் 2024 அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில், முறைசாரா வேலைவாய்ப்புகளின் பரவலானது. தொழிலாளர் சக்தியில் 92% பெண்களும் 90% ஆண்களும் முறைசாரா தொழிலில் உள்ளனர். முறைசாரா தொழிலாளர்கள் குறைந்தபட்ச வேலைப் பாதுகாப்புடன் ஆபத்தான வேலை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் ஒழுங்கற்ற வருமானம், வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் இல்லாதது மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களால் பாதிப்பு ஏற்படும். கூடுதலாக, சமூக பாதுகாப்பு வழிமுறைகளின் பற்றாக்குறை முறைசாரா தொழிலாளர்களை நிதி அபாயங்கள் மற்றும் காலநிலை நெருக்கடிகளுக்கு அதிகம் ஆட்படுத்துகிறது.
ஏழை மக்கள் தங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை சமாளிக்க, பாரம்பரிய அறிவு மற்றும் குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த உத்திகள் பெரும்பாலும் அடிமட்ட அளவில் எடுக்கப்படும் முன்முயற்சிகள், உள்ளூர் அறிவு மற்றும் சமூக வலைப்பின்னல்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்கின்றன. எவ்வாறாயினும், இந்த உத்திகளின் செலவுகள் எப்பொழுதும் அவர்களாலேயே ஏற்கப்பட வேண்டியதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்ப செயல் திட்டங்களும் (HAP) செய்யப்பட வேண்டியவையும்
கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட, செயல் திட்டம், பள்ளி நேரத்தை மாற்றுவது, அத்தியாவசியமற்ற நீர் பயன்பாட்டை நிறுத்தி வைப்பது மற்றும் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க மருத்துவ சுகாதார வசதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது பற்றி பேசுகிறது. நிறுவனங்களுக்கு, தொழிலாளர்களின் ஷிப்டை மாற்றவும், பணியிடத்தில் போதுமான அளவில், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும், பணியிடத்தில் குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகள் கிடைப்பதை உறுதி செய்யவும், சரியான காற்றோட்டம் வழங்கவும் சுற்றறிக்கை விடப்பட்டது. மேலும், எந்தத் தொழிலாளியும் நேரடியாக சூரிய ஒளி படும் வகையில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்றும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பீக் ஹவர்ஸை தவிர்க்கும் வகையில் பணி மாற்றத்தை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதுகூட இந்த ஆண்டு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வெப்ப செயல் திட்டத்தில் (HAP) முறைசாரா தொழிலாளர்களை அடையாளம் காண்பதுடன், தீவிர வெப்பத்தின் போது அவர்களின் குறிப்பிட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மற்றும் அதற்குப் பொறுப்பான அரசு முகமைகளை கோடிட்டுக் காட்டுவது மிகவும் முக்கியமானது. காலநிலை மாற்றத்திற்கேற்ப நகரங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டமிடல்கள், நிதி மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் அவசியம். உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் உள்ள அரசு முகமைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இதற்குத் தேவைப்படுகிறது. இவர்களையெல்லாம் உள்ளடக்கிய செயல்திட்டங்கள் எதுவும் முறையாக, முழு அக்கறையுடன், போதுமான நிதி ஒதுக்கீட்டுடன், தேவையான கட்டமைப்புகளுடன், அரசால் செய்யப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உயர் வெப்பத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. வேலை நேரத்தை மாற்றியமைத்தல், குடிநீர் வசதிகளை உறுதி செய்தல் மற்றும் அவசரகால ஐஸ் பேக்குகள் மற்றும் வெப்ப நோய் தடுப்பு பொருட்களுக்கான ஏற்பாடுகளை நிறுவுதல் ஆகிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்தது. சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் அடிவைப்பாக இது இருந்தாலும், வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் போன்றவை மாநிலங்களையும் முதலாளிகளையும் கட்டுப்படுத்தாது. இதன் விளைவாக, முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளின் தயவில் வாழ வேண்டியவர்களாகவே விடப்படுகிறார்கள்.
பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள பொதுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதும், கடுமையான வெப்பத்தின் போது கற்றல் சூழல்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்வதும், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க பள்ளிகளில் வெப்ப செயல் திட்டங்களை செயல்படுத்துவதும் அவசியமாகிறது.
நடமாடும் மருத்துவ சுகாதார நிலையங்களை அதாவது மொபைல் ஹெல்த் கிளினிக்குகளை உருவாக்குதல், மற்றும் ஏழை தொழிலாளர்களுக்கு சுகாதார செலவுகளுக்கு மானியம் வழங்குதல், வெப்ப அலைகளின்போது, குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் விரைவான உதவியை வழங்குவதற்காக அவசரகால நிவாரண அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்றவை குறித்து மத்திய – மாநில அரசுகளின் சிறப்புக் கவனமும், போதுமான நிதி ஒதுக்கீடும், திட்டங்களும், திட்டமிடல்களும், நிர்வாக ஏற்பாடுகளும் உடனடியாகத் தேவைப்படுகிறது.
வெப்பத்தின் விளைவைத் தணிக்க, பசுமையான உறைவிடங்களை உருவாக்குதல் மற்றும் சுற்றுப்புறங்களில் மரங்களின் அடர்வினை அதிகரித்தல் அவசியமாகிறது. வேலையின்மைக்கான காப்பீடு, உடல்நலக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை உறுதிப்படுத்துவதோடு, முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை விரிவுபடுத்துவதும், காலநிலை தொடர்பான இடையூறுகளின்போது பாதுகாப்பு வலையை உருவாக்கி வழங்குவதும் அவசியமாகிறது.
வெளிப்புறத் தொழிலாளர்களை கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் இழந்த வேலை நேரத்திற்கு மணிநேர அடிப்படையில் முதலாளிகள் இழப்பீடு வழங்கவும் கூடிய வகையிலான கொள்கைகள் இந்தியாவுக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது.
தீவிர வெப்ப நிலைகளின் கீழ் நிவாரணம் மற்றும் வசதிகளை வரையறுக்கும் வகையிலான ஒரு கட்டமைப்புடன் முதலாளிகளை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு நிர்வாக ஏற்பாட்டினை உடனடியாக செய்ய வேண்டிய அவசரத் தேவையும் உள்ளது.
ஒரு முக்கிய முன்முயற்சியாக, குளிரூட்டும் மையங்கள் மற்றும் தங்குமிடங்களாக இருக்கலாம்; இது தீவிர வெப்ப நிலைகளில் தற்காலிக நிவாரணம் அளிக்கும். இருப்பினும், கோவில்கள் மற்றும் மால்களில் குளிரூட்டும் மையங்கள் இருந்தால் முறைசாரா தொழிலாளர்கள் பாகுபாடு காரணமாக எளிதில் அணுக முடியாது. வெப்ப அலைகள் நீடிக்கும் மற்றும் எதிர்காலத்தில் வலுப்பெறும் என்பதால், நிரந்தர குளிரூட்டும் மையங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
கேரள அரசு மாநிலம் முழுவதும் குளிரூட்டப்பட்ட, நிரந்தர குளிரூட்டும் மையங்களை அமைத்துள்ளது. முறைசாரா தொழிலாளர்கள் பயன்பெற, குளிரூட்டும் மையங்கள் சரியான கிளஸ்டர் மண்டலங்களில் இருப்பது முக்கியம்.
தெலுங்கானா அரசாங்கத்தால் முன்னோடி நடவடிக்கையாகக் கொண்டுவரப்பட்ட குளிர் கூரை முறையையும் இந்த நிரந்தர குளிரூட்டும் தீர்வுகளில் இணைத்துக்கொண்டால், அது மிகவும் நிலையான மற்றும் செலவு குறைந்த நடவடிக்கையாக இருக்கும்.
குளிர் கூரை எளிமையானது மற்றும் ஏழை மக்கள் வெப்பத்தை சமாளிக்க உதவும். இது மின் நுகர்வையும் குறைக்கும். குளிர் கூரைகள், அதிகபட்ச உட்புற வெப்பநிலையை 1.2-3.3 டிகிரி செல்சியஸ் குறைக்க உதவுகிறது. மின் நுகர்வு தேவையில்லாமல் கட்டிடங்களின் வெப்பநிலையைக் குறைக்கும். குறைந்த செலவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கேற்ற வகையில் நிலையான ஏற்பாடாக இருக்கும்.
சுற்றுச்சூழல் அமைப்பில் செயல்படும் தன்னார்வ அமைப்புகளுடன், காலநிலை மாற்றத்தினை சமாளிக்கக் கூடிய உள்கட்டமைப்பை உருவாக்க, அரசாங்கம் கூட்டு முயற்சிகளை செய்யலாம். உள்கட்டமைப்பு தலையீட்டு முயற்சிகள் வெறும் குளிர்விக்கும் மையங்களுக்கு மட்டும் இல்லாமல், ஏழை எளிய மக்களின் வீடுகளை குளிர்விக்கும் வகையில், தட்பவெப்பநிலையை தாங்கக்கூடிய வீடுகள் இருக்க வேண்டும்.
சி பேலன்ஸ் போன்ற நிறுவனங்கள், ஏழைகளின் தகர-கூரையுடைய வீட்டின் கட்டமைப்புகளை, கூரை காப்பு, கூரை நிழல், கூரை கதிர்வீச்சு தடைகள், இரவு-வான கதிர்வீச்சு, ஆவியாதல் மற்றும் வெப்ப நிறை போன்ற செயலற்ற குளிரூட்டும் தீர்வுகளுடன் மீண்டும் பொருத்தி சோதனை செய்து வருகின்றன.
குறைந்த செலவிலான தீர்வுகளில் ஒன்றாக, தண்ணீர் நிரப்பப்பட்ட PET பாட்டில்கள் தொழில்நுட்பமாக பயன்படுத்தப்படுகின்றன, அவை வெப்பநிலையைக் குறைக்க கூரையின் மேல் வைக்கப்படுகின்றன. மற்றொரு அணுகுமுறை கூரைத் தோட்டங்கள் மூலம் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஐஸ்பாக்ஸ் ஏசிகள், செலவு குறைந்ததாகவும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் வெப்பத்தை சமாளிக்க உதவும்.
கதிரியக்க தடைகளை நிறுவுவது மற்றொரு தீர்வாகும். இதில் அலுஃபோயில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வெப்பத்தை உறிஞ்சுவதற்கு பதிலாக பிரதிபலிக்கும் ஒரு உயர் பிரதிபலிப்பு பொருளாகும். இதனால் உட்புற வெப்பநிலை குறைகிறது. அலுஃபோயில் கூரையின் கீழ் பகலில் மூடப்பட்டிருக்கும். சூரியனில் இருந்து கூரையைப் பாதுகாக்கிறது மற்றும் இரவில் திறக்கும் போது இரவு-வான கதிர்வீச்சு மூலம் குளிர்ச்சியை தரும் முறை.
மற்றொரு முறையானது வெப்ப காப்பு முறையாகும், இது வெப்ப பரிமாற்றத்தை குறைக்க உதவும். கூரையின் கீழ் அமைக்கப்படும் போது உட்புற வெப்பநிலையை குறைக்கிறது. பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மரக் கம்பளி பேனல், சுற்றுச்சூழலுக்கு உகந்த, மரச் சுருள்கள், சிமெண்ட் மற்றும் தண்ணீரால் செய்யப்பட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளாகும். இது கூரையிலிருந்து வரும் வெப்பத்தை மாற்றாமல் வீட்டை காக்கிறது.
மாற்று வேலை நேரத்தை வழங்குவது உதவியாக இருக்கும். அதன் மூலம் வேலை நேரத்தை குறைக்காமல் இருக்க முடியும். ஏனென்றால் இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். தொழிலாளர்கள் ஊதியத்தை இழக்காமல் இருப்பதை மாநிலங்களும் தனியார் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும். ஆண் தொழிலாளர்கள் இரவு நேரம் வேலை செய்து இழப்பினை ஈடுசெய்ய முயலலாம். ஆனால் பெண்களால் அவ்வாறு செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறுதியாக…
முறைசாரா வேலையில் உள்ளவர்கள் உட்பட, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மட்டும்தான் மாறிவரும் காலநிலையால் ஏற்படும் சவால்களைத் தாங்கும் திறன் கொண்ட, மிகவும் நியாயமான மற்றும் நெகிழ்வான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும். தொழிற்சங்கங்கள், முற்போக்கு வெகுஜன அமைப்புகள், மக்கள் அறிவியல் இயக்கங்கள், மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலான செயல்திட்டத்தை அரசு வரையறுத்து அமல்படுத்தவும், போதிய நிதி ஒதுக்கீட்டினை ஒதுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
