ஏகபோகங்களின் – நாசகர முதலாளித்துவ முற்றுகைக்குள் இந்தியா
ஆர். கருமலையான்
இந்தியாவில், சொத்து ஒரு சிலரின் கைகளில் குவிவதும், திரள்வதும் வேகமெடுத்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை உயர்வதும், சொத்தின் அளவு உயர்வதையும் பூர்ஷூவா ஊடகங்கள், சாதாரண மக்களிடம், ‘தேசத்தின் பெருமை’ போல சித்தரிக்கின்றன, மக்களின் வருமானமும் நுகர்வு மட்டங்களும் மிகுந்த வேகத்தில் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அருவருப்பான நிகழ்வு,பொருளாதார வளர்ச்சி என்று மோடியாலும் அவரது கூட்டத்தினராலும் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அதிகரித்துக் கொண்டிருக்கும் துயரங்களை, வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ‘தேவைப்படும் தியாகம்’ என சித்தரிக்கப்படுகிறது.
சமீப காலங்களில், நமது நாட்டில் (அமெரிக்க டாலர்) பில்லியனர் (சுமார் 8500 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பவர்கள்) எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. 2024ஆம் ஆண்டில் ஒவ்வொரு 5 நாளுக்கும் ஒரு புதிய பில்லியனரை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 2024இல் இந்தியாவில் 185 பில்லியனர்கள் உள்ளனர். பில்லியனர் எண்ணிக்கையில் உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இந்திய பில்லியனர்களின் நிகர மதிப்பு 42.1 சதவீதம் உயர்ந்து, 905.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து வங்கி வெளியிட்ட சமீபத்திய பில்லியனர்களின் லட்சியம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த 185 பில்லியனர்களின் சொத்து மதிப்பு, கிட்டதட்ட 2024ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட் தொகைக்கு சமமாகும். இந்த ஆய்வறிக்கை, தற்போது 10வது ஆண்டாக வெளியிட்டப்பட்டுள்ளது, அதன் கணிப்பின்படி, அடுத்த பத்தாண்டுகளில், இந்தியா, அதன் பில்லியனர் தொழில் முனைவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த உயர்வைப் பெறும் என தெரிவித்துள்ளது. எனவே, இந்தியா, நவீன பூர்ஷூவாக்களால் தலைமை தாங்கப்படும் “பில்லியனர் ராஜ்யம்”; அது காலனிய சக்திகளால் தலைமை தாங்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வருமான ஏற்றத்தாழ்வு அதிகம் கொண்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியை வரையறுக்கும் அம்சமாக தற்போது இருப்பதென்பது, நாட்டின் மிகப்பெரிய ஏகபோகங்களின் சொத்து மிகுந்த வேகத்துடன் குவிகிறது என்பதாகும். மற்றொரு அம்சம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உண்மை ஊதியத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியும், அவர்களின் வாழ்வாதாரங்கள் மிகுந்த பாதுக்காப்பற்ற நிலைக்கும் தள்ளப்பட்டு தான் இந்த சாதனை அடையப்பட்டது. மிகப்பெரிய எண்ணிக்கையிலான சிறு குறு தொழில்கள், லட்சக்கணக்கான சுயதொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் ஆகியோரது அழிவில் இந்த சாதனை அடையப்பட்டது. இந்தப் பாதையில் முதலாளித்துவம் சிறு உற்பத்திக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் முனைவர் விரல் ஆச்சார்யா, இந்தியாவின் ஐந்து மிகப்பெரிய குழுமங்கள்- முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், கௌதம் அதானியின் அதானி குழுமம், டாடா குழுமம், ஆதித்யா குழுமம், மிட்டல் பாரதி தொலை தொடர்பு ஆகியவை சிமெண்ட் உள்ளிட்டு, 40 துறைகளில் ஏகபோக நிலையை கட்டமைப்பதை நிரூபித்துள்ளார். மேலும் அவர், “இந்த வளர்ந்து வரும் ஏகபோகநிகழ்வுகள்- இந்தியாவின் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும், மிக கூடுதலாக பணவீக்கத்திற்கும் தொடர்பு உண்டு” என்று தெரிவிக்கிறார். 2015இல் சாதாரண மக்கள் பொருட்களை வாங்க 100 ரூபாய் செலவழித்தால், அந்த வணிகத்தின் உடைமையாளருக்கு 18 ரூபாய் லாபமாக சென்றடையும். அதே 2021இல் உடைமையாளருக்கு லாபமாக கிடைப்பது 36 ரூபாய்.
முனைவர் ஆச்சார்யா, இந்தியாவின் முதல் ஐந்து தனியார் வணிக குழுமங்களே தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் பணவீக்கத்திற்கு காரணம் என்று வாதிடுகிறார். பொருளாதாரத்தில் அவர்களின் ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஐந்து குழுமங்களும் சொத்துக்களை வாரி சுருட்டிக் கொண்டுள்ளன, நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் நிதியல்லா சொத்துகளில் அவர்களின் பங்கை இரட்டிப்பாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் 2011க்கு பிறகு இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (Merger and acquisition) ஆகியவற்றில் தங்களது பங்கை இரட்டிப்பாக்கியுள்ளனர். அவர்களின் பொருளாதார விரிவாக்கம், பொருளாதாரத்தில் அவர்கள் மிக ஆழமாகவும் பரந்துபட்டும் இருக்கும் இரண்டின் வாயிலாகவும் வெளிப்படுகிறது. அவர்களின் உயர்வு, அடுத்த ஐந்து பெரிய நிறுவனங்களின் (இந்தியாவின் 6 முதல் 10 பெரிய குழுமங்கள்) பங்கின் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியோடு ஒத்துபோகிறது.
மார்சிலஸ் என்ற செல்வ மேலாண்மை நிறுவனத்தின் அறிக்கை, முதல் 20 லாபமீட்டுபவர்கள், கார்ப்பரேட்களின் ஒட்டுமொத்த லாபத்தில் 80 சதவீதத்தை ஈட்டுகின்றனர் என்கிறது. இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன் இருந்த அவர்களின் பங்கைப் போல் இருமடங்காகும், இது லாபங்கள் ஒரு சிலரிடத்தில் குவிவதை பிரதிபலிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், பங்குச் சந்தையின் செல்வ மதிப்பு அதிகரிப்பதை நிப்டி குறியீட்டின் மூலம் அளவிட்டால், அதில் 80%-ஐ வெறும் 20 நிறுவனங்களே கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் தெளிவாகத் தெரிவது சந்தையின் அதிகாரம் ஓரிடத்தில் குவிகிறது என்பதே. இதன் விளைவாக அது விலைவைக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. சந்தையில் தேவை அதிகரிக்கும் போது, இந்த ஏகபோகங்கள் விலைகளை ஏற்றி மக்களை பிழிந்தெடுக்கிறார்கள். நாட்டில் இந்த குவிப்பு மற்றும் ஏகமயமாக்கும் வேகம் கூடியிருப்பதற்கான சாட்சியாக இருப்பது, 1992-93 ஆண்டில் இந்தியாவின் முதல் 20 நிறுவனங்கள் ஒட்டு மொத்த லாபத்தில் 15% பெற்றிருந்தனர் என்பதிலிருந்து தெளிவாகிறது.
தற்போது ஒவ்வொரு துறையிலும், உச்சத்தில் உள்ள இரண்டு நிறுவனங்கள் அந்த துறையின் 85சதவீத லாபத்தை அள்ளிவிடுகின்றன. குழந்தை உணவு சந்தையில் நெஸ்லே 85சதவீதம் உள்ளது. சிகரெட் சந்தையில் ஐடிசி 77 சதவீதமும், பசை சந்தையில் பிடிலைட் 70 சதவீதமும், சிகை எண்ணையில் பஜாஜ் நிறுவனம் 60 சதவீதமும், பெயின்ட் சந்தையில் ஏசியன் பெயிண்ட் 40 சதவீதமும் கொண்டுள்ளன.
மொபைல் டேட்டா மற்றும் தொலைபேசி துறையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய ஏகபோகங்களின் பாதகமான விளைவுகளை இந்த நாட்டின் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதைப் போன்றதொரு ஏகபோகம் சில்லறை மற்றும் வங்கியல்லா நிதித்துறையில் உதயமாகிக் கொண்டிருக்கிறது.
அதானியால் கையாளப்படும் விமான நிலையங்கள் இந்தியாவின் மொத்த விமான போக்குவரத்தில் 25 சதவீதத்தை கையாள்கிறது. இந்த குழுமம், நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் சொந்தமாகக் கொண்டுள்ளது, இந்தியாவின் மொத்த உணவு கையிருப்பில் 30 சதவீதம் அதானியின் கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது இந்த ஏகபோகமாக்கும் போக்கு இது நாள் வரை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்தையில் அதிக பங்கையும் லாபத்தையும் கொண்டிருந்த பல்வேறுசிறு துறைகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. 2016இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், 2017இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதும், ஏராளமான சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மூடுதலுக்கு இட்டு சென்றதால், மேலே குறிப்பிட்ட போக்கு வேகம் பிடிக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும், ஏகபோகங்கள் இந்தியா முழுவதுமுள்ள தங்கள் வலைபின்னல் போன்ற விநியோக வலைப்பின்னல் மூலம் இந்த துறைகளில் தங்களின் பங்கையும், லாபத்தையும் அதிகரிக்கின்றனர்.
முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு, நிதிக்கடன் – அது ஒரு காலத்தில் பிராந்திய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது- தற்போது அங்கு காணக்கிடைப்பது, மிகப்பெரிய தேசிய ஏகபோகங்களின் உதயம், உதாரணமாக ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி, இந்த இரண்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தத் துறையில் முதல் இருபது லாபமீட்டும் பட்டியலில் உள்ளன.
ஏகபோகங்களுக்கு மிகவும் மலிவான கடன்களுக்கான வாய்ப்புகள் உள்ளதால் அவை போட்டியாளர்களை நொறுக்கிவிடுகின்றன, அதன் மூலம் தங்கள் கைகளில் மூலதனத்தை மேலும் குவிக்கின்றனர். ஏகபோகம் எந்தளவிற்கு பெரியதாக உள்ளதோ அந்தளவிற்கு அவர்களின் மூலதனச் செலவு குறைவாக இருக்கும். உலகமயமாக்கல் அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ள நாடுகளிலிருந்து நிதி திரட்ட வாய்ப்பளித்துள்ளது. அதானி குழுமத்தை எடுத்துக் கொண்டால், அவர்களின் மொத்த கடனான 2 லட்சம் கோடி ரூபாயில் நான்கிலொரு பங்கு வெளிநாட்டுக் கடன்கள்.
இந்தியாவின் லாபமீட்டுவதில் (வரிகளுக்கு பிந்தைய லாபம்) முதல் 20 நிறுவனங்களை இரண்டு பரந்துபட்ட பிரிவுகளுக்குள் வகைப்படுத்தலாம். தனியார் துறை ஏகபோகங்கள். இவற்றிற்கு உலகம் முழுவதிலிருந்தும் மிகவும் மலிவான மூலதனம் பெறும் வாய்ப்புகள் கொண்டிருப்பவை உதாரணமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், டாடா, அதானி, ஹெச்டிஎப்சி போன்றவை. இரண்டாவது வகை, மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள், இவற்றிற்கும் மலிவான மூலதனத்திற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் அவற்றிற்கு மறைமுகமாக அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ளது.
சிறிய கம்பெனிகளுக்கு இந்த இரண்டு வழிகளிலும் மூலதனம் திரட்ட வாய்ப்பில்லை. இது நடைமுறையில் அவற்றை இந்த மிகப்பெரிய ஏகபோகங்களுடனான போட்டியிலிருந்து வெளியேற்றிவிடுவதால், ஏகபோகங்களே மிக அதிகமான துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன,
மலிவான மூலதனத்திற்கான வாய்ப்பு ஏகபோகங்கள் இதர பெரிய மற்றும் நடுத்தர முதலாளிகளைவிட மிக அதிக விகிதத்தில் வளர்வதற்கு வாய்ப்பளிக்கிறது. அவை தனியார் மற்றும் பொதுத் துறை ஆகிய இரண்டு துறைகளிலும் உள்ள கிட்டதட்ட அனைத்து வளர்ச்சி வாய்ப்புகளையும் அபகரித்துவிடுகின்றனர். பொருளாதாரத்தின் கழுத்தை நெருக்கும் அவர்களின் பிடி மேலும் இறுகுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஏகபோக கார்ப்பரேட் குழுமங்கள், அடுத்த பத்தாண்டுகளில் பிரம்மாண்டமான முதலீட்டு திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு 800 பில்லியன் அமெரிக்க டாலர்களைவிட அதிகம் (சுமார் 67,236,000 கோடி ரூபாய்) என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) தெரிவிக்கிறது. பேரார்வத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த முதலீட்டு திட்டம், கடந்த பத்தாண்டுகளில் இந்த மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்த செலவுகளைப் போன்று மூன்று மடங்காகும். இது அவற்றின் வலுவான விரிவாக்கம் மற்றும் பல புதிய துறைகளில் நுழைவது ஆகிய வலுவான நோக்கங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுவதாக எஸ்அண்ட் பி குளோபல் ரேட்டிங் தெரிவிக்கிறது. இவற்றில் 40 சதவீதமான செலவுகள் புதிய மற்றும் உதயமாகிக் கொண்டிருக்கும் துறைகளான பசுமை ஹைட்டிரஜன், சுத்தமான எரிசக்தி துறை, விமானத்துறை, குறை கடத்திகள் (செமி கண்டக்டர்ஸ்), மின் வாகனங்கள் மற்றும் தரவு (டேட்டா) மையங்கள். இவற்றில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் வேதாந்தா, டாடா, அதானி, ரிலையன்ஸ், மற்றும் ஜேஎஸ்டபிள்யு ஆகிய இந்த நிறுவனங்கள் மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவுள்ளன. இதன் மூலம் தெளிவாவது என்னவெனில், வரும் ஆண்டுகளில் ஆகப்பெரிய ஏகபோகங்கள் தங்களின் ஏகபோக மற்றும் ஆதிக்க நிலையை மேலும் திடப்படுத்திக் கொள்ள இந்த புதிய பரப்புகளில் முதலீடு செய்ய தயாராகி வருகின்றனர்.
மூலதனக் குவிப்பு மற்றும் சந்தைகள் ஏகபோகமாதல் ஆகியவற்றிற்கு தனியார்மய நடவடிக்கை உதவிடுகிறது. அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம், துத்தநாக உற்பத்தியில் ஏகபோகமாக மாறியதற்கு 2001-02 ஆண்டில் ஹிந்துஸ்தான் துத்தநாகக் கம்பெனி தனியார் மயமாக்கப்பட்டதே காரணம். அதே குழுமம் அலுமினியம் உற்பத்தியிலும் ஆதிக்க நிலையைப் பெற்றதற்கு அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் அலுமினியம் (பால்கோ)-ஐ அந்த நிறுவனத்திற்கு விற்றதே காரணம். இந்தியன் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடட் (ஐபிசிஎல்) நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றது, பெட்ரோகெமிக்கல் துறையில் அதன் ஏகபோகத்தை வலுப்படுத்தியது. தனியார் மயத்தின் மூலம் ஏகபோகத்தை உருவாக்குவதில் சமீபத்திய உதாரணம் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திற்கு விற்றது.
அதானி, டாடா, ஜிண்டால், டாரண்ட் ஆகியன மின் துறையிலும், அம்பானி, பாரதி மிட்டல், பிர்லா ஆகியோர் தொலைத் தொடர்பு துறையிலும் ஏகபோகங்களாவதற்கு இந்தத் துறைகளை தனியாருக்கு திறந்து விட்டதே காரணம். விமான நிலையத் துறையை திறந்து விட்டதே அதானி குழுமத்தின் ஏகபோகத்திற்கு இட்டு சென்றுள்ளது.
ஐபிசி (Insolvency and Bankruptcy Code-IPC) சட்டம் வங்கிகள் மிகப்பெரிய முதலாளிகளின் திருப்பி கொடுக்காத கடனை வசூலிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஐபிசி அதற்கு பதிலாக உதவியது, சில மிகப்பெரிய ஏகபோகங்களின் ஆதிக்கம் வலுப்பெற அவை சொத்துகளை சல்லிசாக வாங்கவும், வங்கிகளை மிகப்பெரிய அளவிற்கு கடன் தொகையில் ‘வெட்டுக்களை’ ஏற்றுக் கொள்ளவும் வற்புறுத்துகிறது (வெட்டு என்றால் வங்கிக்கு வர வேண்டிய வாராக் கடனில் பெரும்பகுதியை விட்டு கொடுக்க வலியுறுத்துவது). டாடா எஃகு நிறுவனம் எஃகு துறையில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ள பூஷன் எஃகு நிறுவனத்தை ஐபிசி ஏலம் வழியாக வாங்கி இணைத்துக் கொண்டது. உலக எஃகு உற்பத்தியில் மிகப்பெரிய ஏகபோகமான ஆர்சிலர் மிட்டல், எஸ்ஸார் எஃகு நிறுவனத்தை ஐபிசி வழிமுறையில் கையகப்படுத்திக் கொண்டது.
பிரம்மாண்ட அளவில் வரி ஏய்ப்புகள், பொது பணத்தை கடன் என்ற பெயரில் சுருட்டுவது போன்ற செயல்களில் கார்ப்பரேட்கள் ஈடுபடும் போதிலும், இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் பட்ஜெட் என்ற கருவியைப் பயன்படுத்தி, வரி சலுகைகள் போன்றவை மூலம் மிக அதிகமான உபரிகளை பிழிந்தெடுக்கிறார்கள். தற்போதுள்ள 2024-25 ஆண்டிற்கான பட்ஜெட் நிறுவுவது, அரசாங்கத்தின் வருவாய் வருமான வரியிலிருந்து (தனிநபர் வருமான வரி) 19 சதவீதம், இது கார்ப்பரேட்கள் செலுத்தும் வரி வருவாயான 17 சதவீதம் என்பதைவிட அதிகமானதாகும். மோடி தலைமையிலான முதலாவது ஐந்தாண்டு காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த மொத்த வரிவிலக்குகள் வியக்க வைக்கும் 4.32 லட்சம் கோடி ருபாய் என்கிறது பட்ஜெட் புள்ளிவிவரங்கள். சலுகைகளின் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது, 2014-15 ஆண்டில் 65,067 கோடி ரூபாய் என்பதிலிருந்து அந்த முதல் ஐந்தாண்டின் கடைசி ஆண்டான 2018-19ல் 1.09 லட்சம் கோடியாக உயர்ந்தது. சராசரியாக இந்த சலுகைகள் ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் 7.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதைப் போன்று அள்ளிக் கொடுப்பது மோடியின் இரண்டாம் ஐந்தாண்டிலும் தொடர்ந்தது. கடைசி ஐந்தாண்டுகளில், அனைத்து சலுகைகளையும் கணக்கிலெடுக்காமல், உத்தேசமாக விட்டு கொடுக்கப்பட்ட மொத்த வருவாய் விண்ணைத் தொடும் அளவான 8.7 லட்சம் கோடி ரூபாய்.
மேலும் மேலும் மூலதனக் குவிப்பு, உற்பத்தி மற்றும் பகிர்மான சாதனங்கள் ஒரு சில பில்லியனர்களே கட்டுபடுத்துவதற்கு இட்டு செல்கிறது. அது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துகிறது, அவர்களின் உழைப்பே செல்வத்தை உருவாக்குகிறது. தற்போது வெளிவந்துள்ள அறிக்கையின்படி நமது மக்கள் தொகையில் (பொருளாதார ரீதியில்) கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதம் பேர் நமது நாட்டின் சொத்தில் வெறும் 3 சதவீதத்தை மட்டும் பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. 135 கோடி மக்களின் தலைவிதி ஒரு சிறு எண்ணிக்கையிலான லாப வெறியுடன் அலையும் முதலாளிகளால் தீர்மானிக்கப்படுகிறது, அந்த முதலாளிகளோ உலகப் பணக்காரர்களுடன் (ஒருவரை ஒருவர் முந்தும்) போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
மூலதனக் குவியல், சந்தைகள் மற்றும் கச்சாப் பொருட்களின் ஆதாரங்கள் ஏகபோகமாக மாறுவது, முதலாளித்துவத்தின் இயற்கையான விளைவுகள். மார்க்ஸ் மற்றும் லெனின் கண்டறிந்தது போல், முதலாளித்துவம் தவிர்க்க இயலாமல் செல்வ குவிப்பிற்கும் ஏகபோகத்திற்குமே இட்டு செல்லும். முதலாளித்துவம் அதன் தொடக்கத்தில் போட்டிக் கட்டத்தில் இருந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது அதன் உச்சபட்ச கட்டமான ஏகபோக முதலாளித்துவ கட்டத்தை அடைந்தது. இத்தகைய செல்வக்குவிப்பு மற்றும் ஏகபோகம் போன்றவற்றின் வீரியம் தற்போது ஒட்டுண்ணியாக மாறிப் பேரழிவு ஏற்படுத்தும் கட்டத்தை அடைந்துள்ளது.
அசுரத் தனமாக வளர்ந்துள்ள ஏகபோகங்கள் தற்போது சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் கட்டுபடுத்துகின்றன. அவர்கள் அரசை கட்டுபடுத்துகின்றனர். அது அவர்கள் நலனுக்கு மட்டுமே கட்டாயம் செயல்பட வேண்டும். பூர்ஷூவாக்களின் பிரச்சாரமான, பொருளாதாரத்தை கட்டுபடுத்துவதன் மூலம் “சுதந்திரமான போட்டி” ஊக்குவிக்கப்படும் என்பது மாயையே! அதைப் போன்றே ஊழலற்ற, சார்பற்ற (குரோனி) முதலாளித்துவம் என்ற வாக்குறுதியும். ஏகபோக முதலாளித்துவம் என்பது ஒட்டுண்ணி முதலாளித்துவம். மேலும் அது சமூக முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கும். அது ஒரு சமூக விரோத சக்தி.
ஏகபோக முதலாளித்துவத்தின் கீழ், ஒரு போக்கு நிலவுகிறது. அது தொழிலாளர்களின் உற்பத்தி திறன் உயர்வுக்கு ஏற்ற முறையில் உண்மை ஊதியத்தை உயர்த்துவதில்லை. ஏகபோகம் உற்பத்தி திறனை விரைவான மற்றும் தொடர்ச்சியான தானியங்கி நடைமுறை மூலம் உயர்த்திவிடுகிறது நிச்சயமாக அது மூலதனம்-வேலைவாய்ப்பு விகிதத்தை குறைக்கிறது. மேலும், ஒரு தனிநபர் சரக்கு-(அதன்) தொழிலாளர் செலவு விகிதத்தையும் சரியச் செய்கிறது. ஆகவே, அது குறைவான வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊதியத்தின் வீழ்ச்சிக்குமான ஒரு போக்கின் தொடக்கமாகவும் உள்ளது. இது ஒட்டு மொத்தமாக அனைத்து தரப்பு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு-ஊதிய தரத்தை பாதிக்கிறது. அது கூட்டு பேர திறனை பாதிக்கிறது. ஆகவே, ஏகபோகமாக்கல் அனைத்து தரப்பிலுள்ள உழைக்கும் மக்களின் ஊதியத்தின் மீது எதிர்மறையான(வீழ்ச்சி) தாக்கத்தை உண்டாக்குகிறது.
உயர் வளர்ச்சி அனைவரின் நல்வாழ்வுக்கு இட்டு செல்லும் என்ற கூற்றும் பொய். அது முன்வைக்கப்படுவதே முதலாளித்துவத்திற்கு ஆதரவு திரட்டவே. பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்திற்கு சார்ந்திராமல், முதலாளித்துவ வளர்ச்சி தவிர்க்க இயலாதபடி, ஒரு துருவத்தில் ஒரு சிலரிடம் செல்வத்தை குவிக்கும், மறுபுறத்தில் பெரும்பான்மை மக்கள் இருக்கும் மறு துருவத்திலோ ஏழ்மையை வளர்க்கும்.
முதலாளித்துவத்தை கடந்து, சோசலிச மாற்றம் மட்டுமே பெரும்பான்மை மக்களின் துயர்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கும். தற்போதுள்ள பூர்ஷூவா அரசில் எந்த மாற்றமும், அது உண்மையில் முதலாளித்துவத்தை நிர்வகிக்கும் ஓர் அமைப்பு, பரந்துபட்ட பெரும்பான்மை உழைப்பாளி மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றத்தை கொண்டுவராது. அல்லது அவர்களை ஒடுக்குவதையோ அல்லது சுரண்டுவதையோ குறைக்காது.
உற்பத்தி சாதனங்களை சமூக உடமையாக்குவது என்பதே சமூக உற்பத்திக்கு தவிர்க்க முடியாத முன்நிபந்தனை. அதுவே ஏகபோக முதலாளித்துவத்தின் பேராசையை பூர்த்தி செய்வது என்பதற்கு பதிலாக, மனிதகுலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இட்டு செல்லும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
