இந்திய விடுதலையும் வரலாறும்
இ.எம். எஸ். நம்பூதிரிபாட்
நாட்டு விடுதலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 1970களின் துவக்கத்தில் நடைபெற்றபோது ஏராளமான நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் தனி நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. இவற்றில் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் முக்கிய இடம் பெற்றன. இந்த ஆய்வுகள் நம்முடைய வரலாற்றியலை மெய்யாகவே வளப்படுத்தியுள்ளன. எனினும் பெரும்பாலான அறிஞர்கள், பின்வருவன போன்ற பல கேள்விகளுக்கு, பகுத்தறிவுக்குப் பொருத்தமான விடைகளை அளிக்கத் தவறிவிட்டனர்.
- 1857-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் நடைபெற்ற கலகங்கள் ஏன் வெற்றியடையவில்லை? அவை ஏன் ஒடுக்கப்பட்டன?
- 1857-ஆம் ஆண்டு எழுச்சி ஒடுக்கப்பட்ட பிறகு உருவான தேச விடுதலை இயக்கம் ஏன் மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்ட வடிவத்திலிருந்து விலகியிருந்தது? அந்த இயக்கம் பொதுமக்களைச் சென்றடைந்த பின்னரும், ‘அஹிம்சைப் போராட்டமே’ அந்த இயக்கத்தின் மையமான முழக்கமாக இருந்தது ஏன்? அன்னிய ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம் ஆயுதந்தாங்கிய மக்கள் போராட்டம் என்ற அபாயத்தை அந்த இயக்கத்தின் தலைவர்கள் ஏன் தவிர்த்தார்கள்?
- விடுதலைப் போராட்டம் துவங்கிய காலத்திலிருந்தே, சமய, சாதிய தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த, குறுங்குழுவாத அரசியலானது, தேசியவாதிகளின் பயணத்தில் முட்டுக்கட்டையாக இருந்தது எப்படி? இந்த வகை அரசியலைப் பயன்படுத்திக் கொண்ட அன்னிய ஆட்சியாளர்களால், விடுதலை இயக்கத்துக்குள்ளேயே பிளவுகளை வளர்க்க முடிந்தது எப்படி? விடுதலைப் போராட்ட காலம் முழுமையும், ஒரே அரசியல் அமைப்பாக இருந்த இந்தியா (இந்திய ஒன்றியம் – பாகிஸ்தான் என்று) பிளவுபட்டது எவ்வாறு? விடுதலைக்குப் பிறகு இவையிரண்டும் தங்களுக்குள் ஓயாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பது ஏன்?
4. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒரு புதிய சகாப்தம் பிறந்தது குறித்து, நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், அந்த விடுதலைப் போராட்டத்திற்கு, ஒரு தலைமுறைக் காலம் முழுவதும் தலைமை தாங்கிய மகாத்மா காந்திக்கு, விடுதலை நாள் மகிழ்ச்சி அளிக்கத் தவறியது ஏன்? காந்திஜியின் சீடர்களில் ஒரு பிரிவினர் புதிய ஆட்சியாளர்களாக மாறியபோது, சீடர்களில் மற்றொரு பிரிவினர், ஆட்சியாளர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு இருப்பது கண்டு ஏமாற்றமடைந்தது ஏன்? விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில், காந்தியவாதிகளில் ஒரு பெரும் பிரிவினர், ஏதாவது ஒரு வகையில் புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்?
சுருக்கமாகச் சொன்னால், 1857-ஆம் ஆண்டு எழுச்சியுடன் முடிவடைந்த தேசிய இயக்கத்தை அன்னிய ஆட்சியாளர்கள் வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்கி விட்டனர். 1885-ஆம் ஆண்டை ஒட்டி உருவான புதிய தேசிய விடுதலை இயக்கம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது போலத் தோன்றினாலும், அதனால் மக்களின் முன் வைக்கப்பட்ட லட்சியங்களையும் குறிக்கோள்களையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதுடன் பல புதிய பிரச்சனைகளையும் அது தோற்றுவித்தது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினமானதல்ல.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் சில பகுதிகளின் ஆட்சியாளர்களாக மாறினார்கள். இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு ஒரு நூற்றாண்டுக் காலம் தேவைப்பட்டது. மற்றொரு நூற்றாண்டு கழிவதற்குள், 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது.
இக்காலம் முழுமையும், அன்னிய ஆதிக்கத்திற்கு எதிரான கடுமையான போராட்டங்கள் பலவற்றை இந்திய மக்கள் நடத்தினார்கள். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இப்போராட்டங்களின் வெற்றிக்காகப் பல்லாயிரவர் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தனர். எண்ணற்ற குடும்பங்கள் நிராதரவான நிலையை எட்டின. மக்கள் மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்கொண்டனர். இப்போராட்டங்களின் போது மக்கள் வெளிப்படுத்திய உறுதிப்பாடு, துணிச்சல், ஒன்றுதிரட்டும் ஆற்றல் ஆகியவைதான் உண்மையில் பிரிட்டிஷ்காரர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது.
(தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்ற நூலில் இருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: கி. இலக்குவன்)
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
