அண்மைக்கால சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குகள்
உ. வாசுகி
உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி, அதன் விளைவாக வளர்ச்சி விகிதம் மந்தம், பணவீக்கம், விலை உயர்வு, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், உண்மை ஊதிய வீழ்ச்சி போன்றவை தொடர்கின்றன. இதனால் ஏற்படும் சுமை, உழைக்கும் மக்களின் தோள்கள் மீது ஏற்றப்படுவதும் தொடர்கிறது. அவர்களின் மீதான சுரண்டல் அதிகரித்து, கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு சர்வதேச முகமைகள் கணித்ததை விட வளர்ச்சி விகிதம் குறைந்தே உள்ளது.
உழைப்பு சுரண்டலும் லாப வேட்டையும்:
நவீன தாராளமயம் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு எவ்வித தீர்வையும் அளிக்க இயலவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம், லாப வேட்டை அதிகரிப்பு என்கிற அதன் நோக்கத்தில் முன்னேறிக் கொண்டுதான் வருகிறது. இதன் பொருள், உழைப்பு சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்பதுதான். 23வது கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானம், “சர்வதேச நிதி மூலதனம் வழி நடத்தும் நவீன தாராளமய பாதை, வருமான மற்றும் செல்வ சமத்துவமின்மை விரிவடைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, லாப வேட்டை என்ற நவீன தாராளமயத்தின் நோக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22வது கட்சி காங்கிரஸ் சுட்டிக் காட்டியபடி, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறையை முன்வைப்பதில், நவீன தாராளமயம் திவால் நிலையை அடைந்துள்ளது. சொல்லப் போனால், நவீன தாராளமயத்தின் கொள்கைகளும் வழிமுறைகளும்தான் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. லாப வேட்டையையே பிரதான குறிக்கோளாக அது கொண்டுள்ளது என்பது நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது” என விளக்குவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக உலக அளவில் சராசரி ஊதியத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதில் இது பிரதிபலிக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, 2022இன் முதல் பாதியில், மாதாந்திர உண்மை ஊதியம் மைனஸ் 0.9 விழுக்காடு அளவிற்கு சரிந்திருக்கிறது. இது 2008க்கு பின்னர் ஏற்பட்டுள்ள, முதல் எதிர்மறை வளர்ச்சி ஆகும். சீனாவின் உயர் ஊதிய வளர்ச்சியை விலக்கி வைத்து பார்த்தால், உண்மை ஊதியம் 1.9 விழுக்காடு வீழ்ந்திருக்கிறது. இன்னும் திட்ட வட்டமாக சொல்ல வேண்டுமென்றால், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் அறிக்கையின்படி, அதன் 34 உறுப்பு நாடுகளில் 31இல் உண்மை ஊதியம் சராசரியாக 3.8 விழுக்காடு வீழ்ச்சி அடைந்து, எதிர்மறை வளர்ச்சியாக ஆகி உள்ளது. ஜி 20இல் உள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட, உண்மை ஊதியத்தில் எதிர்மறை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் பாலின அசமத்துவமும் உண்டு. அதாவது, உலக அளவில் ஆண்கள் பெறும் ஊதியத்தில் 82% மட்டுமே பெண்கள் சராசரியாக ஈட்டுகிறார்கள்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு, நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தி கூட குறைந்து இருப்பதையும், பல கோடி தொழிலாளிகள் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தோடு மிக மோசமான நிலையில் உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. அதிகரித்து வரும் வறுமையை கட்டுப்படுத்த, பொருத்தமான கொள்கைகள் அவசர அவசிய தேவை என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரும் சவாலாக எழுந்துள்ள பண வீக்கத்தை எதிர்கொள்ள, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, கடன்களின் மீதான வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளது. பல்வேறு நாடுகளிலும் மத்திய வங்கிகள் இவ்வாறு கடன்களின் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வேலை வாய்ப்புகள் மேலும் சுருங்கும்.
சீன பொருளாதாரம்:
மக்கள் சீனத்தைப் பொறுத்தவரை, 2023இல் அதன் பொருளாதாரம் 5.2 விழுக்காடு விகிதத்தில் வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதி நிறுவனம் கணித்திருக்கிறது. கடந்த ஜூலையில், அரையாண்டு பொருளாதார நிலைமையை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு ஆய்வு செய்ததில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்கிறது என்ற போதிலும், புதிய சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு கிராக்கி போதுமான அளவிற்கு இல்லை என்பது ஒரு முக்கிய காரணியாக முன்னுக்கு வந்துள்ள சூழலில், அறிவியல் தொழில்நுட்ப முனைப்புகள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஆகியவற்றுக்கான ஆதரவு நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு கிராக்கியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல நடவடிக்கைகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்யாவையும் சீனாவையும் தனிமைப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்தில், சர்வதேச அளவில் முன்னுக்கு வருகிற முக்கிய போக்குகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று, உலகப் பொருளாதார நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கிறது என்பது. மற்றொன்று, சீனாவினுடைய வளர்ச்சி மற்றும் அதனை மட்டுப்படுத்தி, தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கும் முயற்சிகள் என்பது முன்வைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசியல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை நடந்தேறி வருகின்றன.
சீனாவை குறி வைத்து:
சீனாவின் வளர்ச்சியும், உலகளாவிய செல்வாக்கும் அதிகரித்து வருவது, தனது மேலாதிக்கத்தை அச்சுறுத்துவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் கருதுகிறது. சென்ற மத்திய குழு அறிக்கையில் சீனாவின் செல்வாக்கு பல்வேறு நாடுகள் மத்தியில் வளர்ந்து வருவது குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சீனா உலக அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. 2021லேயே தீவிர வறுமையை ஒழித்து விட்டது. உலக அளவில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் 70 சதவிகிதம் சீனாவில் மட்டும் நடந்ததாக உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியில் 150 நாடுகள் இணைந்துள்ளன. எனவே சோஷலிச சீனா, சித்தாந்த ரீதியாக தமது கேந்திர எதிரி என்ற அடிப்படையில் அதனைத் தனிமைப்படுத்துவது, அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது என்கிற நோக்கத்தோடு பல முனைகளில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. சீனாவுக்கு எதிராக பொருளாதார மற்றும் வணிக தடை விதிப்பது அதில் ஒன்று. மற்றொரு நடவடிக்கையாக, தம் தலைமையிலான நேட்டோ, (வட அட்லாண்டிக் நாடுகளின் கூட்டணி) என்ற நிலையை மாற்றி உலக அளவிலான ராணுவ கூட்டணியாக, குறிப்பாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தை குறிவைத்து மாற்ற வேண்டும் என அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. G7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சீனாவுக்கு எதிராக பயன்படுத்துகிறது. அதாவது, சீனாவை தனிமைப்படுத்துவதற்கான மேலாதிக்க சூழ்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை மீறல் பிரச்சனைகளில் சீனாவுக்கு எதிர் நிலை எடுக்கிறதே தவிர, பொருளாதார மற்றும் வணிக தடை விதிப்பதில் முழுமையாக அமெரிக்கா பக்கம் நிற்பதாக கூற முடியாது. இருப்பினும், அமெரிக்காவின் முனைப்புகள் தொடர்கின்றன. மறுபக்கம் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் என்கிற பெயரில், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு வருகிறது.
இந்த அரசியல் நோக்கத்தோடுதான் நேட்டோ உச்சி மாநாடு முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த லித்துவேனியாவில் நடத்தப்பட்டது. நேட்டோவின் உறுப்பு நாடுகளாக இல்லாத போதிலும், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டன. சீன எதிர்ப்பு உத்தியின் ஒரு பகுதியே இது. மேலும் தைவானுக்கு ராணுவ உதவி தொகுப்பாக, சுமார் 345 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பில்லியன் டாலர் வரை தைவானுக்கு உதவி செய்வதற்கு, ஏற்கனவே அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது, பட்ஜெட்டிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 19 பில்லியன் டாலர் மதிப்புள்ள போர் விமானங்களும், இதர நவீன ஆயுதங்களும் தைவானுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சீன ஊடுருவலில் இருந்து தைவான் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, இத்தகைய உதவி செய்யப்படுவதாக அமெரிக்கா ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. ஆனால் 1972இல் வெளியிடப்பட்ட அமெரிக்க சீன கூட்டறிக்கையில், தைவான் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி, அதையும் சேர்த்து ஒரே சீனா தான் என்பது தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அந்த நிலையில் இருந்து பின்வாங்குவதாக அமெரிக்கா அறிவிக்கவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தைவானோடு ஒரு நெருக்கத்தை பராமரித்து வருகிறது. 1949 சீனப் புரட்சியின் போது சியாங் கய் ஷெக் உள்ளிட்ட எதிர்ப்புரட்சியாளர்கள் தப்பி ஓடியது தைவானுக்குத்தான். அன்றிலிருந்து சோசலிச சீனாவுக்கு எதிராக தைவானோடு அமெரிக்காவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் உறவு இருந்து வருகிறது. தற்போதைய சூழலில், சீனாவின் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியில் செமிகண்டக்டர் சிப்ஸ் (chips) உள்ளிட்ட பாகங்கள், பிரதானமாக தைவான் மூலம் கிடைத்து வருகின்றன. அதில் தடங்கலை ஏற்படுத்தினால், சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகுலையும் என அமெரிக்கா கணக்கு போடுகிறது. ஏற்கனவே, சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சீன பொருட்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் வாங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகும். இச்சவாலை எதிர்கொள்ள, உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் சிப்ஸ் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் சீன எதிர்ப்பு நிலையிலிருந்து வேறுபட்டு, சீனாவோடு சுமுகமான உறவைப் பராமரித்து வருகின்றன. விதிவிலக்காக இந்தியா, தென்கொரியா, ஜப்பான் போன்றவற்றை சொல்லலாம். குறிப்பாக இந்தியா, குவாட் (QUAD) என்கிற அமெரிக்காவின் நாற்கர கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது. அண்மையில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இந்த நான்கு நாடுகளின் கப்பல் படைகள் பயிற்சி செய்தன. இதன் மூலம் அமெரிக்காவின் இந்திய பசிபிக் பிராந்திய சீன எதிர்ப்பு கொள்கையுடன் இந்தியா உடன்படுகிறது. அமெரிக்க நலனுக்கான புவி அரசியல் கொள்கையில் இந்தியா ஒருங்கிணைவது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும்.
அமெரிக்க நேட்டோ டிசைன்:
ரஷ்யா – உக்ரேன் போர் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. லித்துவேனியாவில் நடந்த நேட்டோ உச்சி மாநாடு, நவீன ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் உட்பட அனைத்து உதவிகளையும் உக்ரேனுக்கு செய்வது என தீர்மானித்துள்ளது. சமீபத்தில் பின்லாந்து, நேட்டோவில் உறுப்பினராக இணைந்துள்ளது. ஸ்வீடன் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரஷ்ய எல்லையோடு நேட்டோ நாடுகள் எல்லை பகிர்வு கடந்த காலத்தை விட தற்போது இருமடங்காகி உள்ளது. ஏற்கனவே நார்வே, லாட்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா, போலந்து நாடுகளின் எல்லை ரஷ்யா உடன் 754 மைல் தூரத்தை பகிர்ந்து கொண்டு இருந்தன. பின்லாந்து இணைப்புக்கு பிறகு அது 1584 மைலாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி போக்கு, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கூடுதல் அச்சுறுத்தலை உருவாக்குகிறது. எனவே ரஷ்யா தனது துருப்புகளை இப்பகுதியில் அதிகரிக்க போவதாக கூறி உள்ளது. ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டி காட்டி வருவது போல், நடக்கின்ற போர் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலானது என பார்க்கக் கூடாது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் மோதலின் வெளிப்பாடுதான் இப்போர் என்பது மேற்கூறிய நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக நிலைபாடு எடுத்து, ராணுவ ரீதியாக உதவினாலும், மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள், ரஷ்யாவோடு நட்புறவில் உள்ளன. இந்தியாவும் கூட, பல்வேறு காரணங்களுக்காக எதிர்ப்பு நிலையை எடுக்கவில்லை. எக்கானமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்டின் ஆய்வறிக்கையின்படி, ரஷ்யா மீது மேலை நாடுகள் விதித்த பொருளாதார தடை சம்பந்தப்பட்ட அணுகுமுறை, ஐநா சபையில் வாக்களிக்கும் தன்மை, அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியீடு, அரசியல், பொருளாதார, ராணுவ, வரலாற்று ரீதியான உறவுகள் இவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தால், ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை நடந்த ஓராண்டில் 29இலிருந்து 35ஆக உயர்ந்துள்ளது. உலக மக்கள் தொகையில் இந்நாடுகள் 33 சதவீதம். நடுநிலை வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 31லிருந்து 35ஆக அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகையில் இந்நாடுகள் 31 சதவீதம். கொலம்பியா, துருக்கி, கத்தார் போன்றவை மேற்கத்திய நாடுகளை ஆதரித்த நிலையை மாற்றிக் கொண்டு, தற்போது நடுநிலை நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவை, நடுநிலை நாடுகள் பட்டியலில் இந்த ஆய்வறிக்கை வைக்கிறது. உக்ரேன் போரில் ரஷ்யாவை கண்டித்த நாடுகளின் எண்ணிக்கை 131லிருந்து 122ஆக குறைந்துள்ளது. உலக மக்கள் தொகையில் இவை 36 சதவீதம். பொதுவாக பல்வேறு நாடுகளில் ராணுவ தலையீடு செய்யும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு, இந்த போரில் ரஷ்யாவை விமர்சிப்பதற்கான தகுதி இல்லை என்ற வாதம் ரஷ்யா மற்றும் சீனாவால் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
இந்த வளர்ச்சிப் போக்குகளை தனிமைப்படுத்தி பார்க்க இயலாது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலகளாவிய மேலாதிக்க சூழ்ச்சி நடவடிக்கைகளின் காரணமாக, உலகத்தை புதியதொரு பனிப்போர் நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. இது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். அதே சமயம் உலகில் பல பாகங்களில் பல் துருவ வளர்ச்சி போக்குகள் காணப்படுவது, அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்த்துகிறது
.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
