
காஷ்மீீீர் மக்கள் இந்திய மக்களின் ஒரு பகுதியினரே! – தாரிகாமி
முகமது யூசுஃப் தாரிகாமி
(பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை அறியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தாரிகாமியுடன் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலின் தொகுப்பினை கீழே தருகிறோம் – ஆசிரியர் குழு)
கேள்வி: பஹால்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நிலைமை எப்படி இருக்கிறது? அமைதி திரும்பவேண்டும் என்று விரும்புகிற காஷ்மீர் மக்கள், இந்த நிலைமையை எப்படிப் பார்க்கிறார்கள்?
தோழர் தாரிகாமி: இது பெருந்துயரமான, அதிர்ச்சியளிக்கும் சம்பவம். நெடுங்காலமாக பயங்கரவாத சக்திகள் இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிற போதிலும், நம்மில் பலர் இப்படியொரு கொடூரமான சம்பவம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. எல்லா இடங்களிலும் அதிர்ச்சி அலை இருந்தது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இப்படியான வன்முறை சுழற்சிகளால் காஷ்மீர் மக்கள் வெகுகாலமாக பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்- அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், அரசியல் போராளிகள், பத்திரிகையாளர்கள், சாதாரண மக்கள் – எனப் பலர், (தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையிலான) மோதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக, இங்கு பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தியிருக்கிறோம்; மோசமான கொந்தளிப்பு காலங்களைவிட தற்போது நிலைமை பாதுகாப்பாக இருக்கிறது என்று இந்திய அரசு சமீபகாலமாக ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரக்கச் சொல்லி வந்தது.
ஆனால், போதிய தயார்நிலை உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, இது சுற்றுலா பருவம் என்பதால், நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை நாம் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். பஹால்காம் மிகவும் புகழ்பெற்ற இடம். அதுவும் குறிப்பாக, அப்பாவி குடிமக்கள், சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்ற அந்த இடத்தில் போதிய எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்திருந்தால், இந்தச் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்றே நம்மில் பலரும் கருதுகிறோம்.
தமிழ்நாட்டுத் தோழர்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு முன்னர் நாங்கள் நிறைய துன்பங்களை அனுபவித்திருக்கிறோம். அந்த சம்பவங்களுக்கு எதிராக, உள்ளூர் மக்களிடமிருந்து ஆங்காங்கே சில தனித்த அளவிலான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் முதன்முறையாக, இந்த பஹால்காம் சம்பவம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, பல்வேறு சமூகத் தடைகள், அரசியல் பிளவுகள், மதப் பிளவுகள் அனைத்தையும் கடந்து, மக்கள் சமூகத்திடமிருந்து ஒரு மிகப்பெரிய கண்டனத்தை உருவாக்கியது. இது முதல்முறையாக நடப்பதை நான் கண்டேன். இந்தப் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் கிடையாது. மாறாக, இந்த கண்டனங்களும், போராட்டங்களும், மக்களுடைய கோபத்தின், கவலையின் ஆழமான வெளிப்பாடாக இருந்தது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு மக்கள் இப்படித்தான் எதிர்வினையாற்றினர்.
முன்னதாக, அரசு தவறு நடந்ததை ஏற்கவேயில்லை. ஆனால், டெல்லியில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில், சில தவறுகள் நடந்ததாக ஒப்புக்கொள்ளப்பட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போதும், அரசு பின்தங்கியிருப்பது எதில் என்றால், முழுசூழ்நிலையையும் – இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது? இதைத் தவிர்த்திருக்க முடியுமா? என்று – முழுமையாக பகுப்பாய்வு செய்யவில்லை. இந்தக் கேள்வி குற்றம் கண்டுபிடிப்பதற்காக எழுப்பப்படவில்லை. ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது, ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இத்தகைய கொடூரமான குற்றத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில், இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, எச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிசெய்யவும் நாம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதனால்தான், பல அரசியல் கட்சிகளும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. மேலும் சிபிஐ(எம்) நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துவதில் முன்னணியில் நிற்கிறது. அவர்கள் ஒரு சிறப்பு அமர்வை கூட்டியிருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைக்கு ஒரு பொதுவான, விரிவான அணுகுமுறையை உருவாக்க அவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியிருக்க வேண்டும்.
கே: மத்திய பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத ஆதரவாளர்களை கைது செய்கிறோம் என்ற போர்வையில், மக்களைக் கைது செய்வது, அச்சுறுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வருகின்றன. தற்போது நிலைமை எப்படி இருக்கிறது?
தாரிகாமி: தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களுக்கு நான் முதலில் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம், கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரிவு 370 என்ற மிக முக்கியமான அரசியலமைப்பு உரிமையை ரத்துசெய்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரமிறக்கியது. அவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த நாட்டிலும் அவர்கள் உண்மைகளைத் திரித்து, கருத்தைத் திரித்து பிரச்சாரம் செய்து, மக்களைத் தவறாக வழிநடத்த முயன்றார்கள். உண்மை என்னவெனில், பிரிவு 370 என்பது, அரசியலமைப்புசட்ட நிர்ணயசபையின் விவாதங்களால் உருவான ஒரு பாலமாக இருந்தது; இரு நாட்டுக்கொள்கையை நிராகரித்து, மதச்சார்பற்ற இந்தியாவோடு இணைந்த முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதிக்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஒரு உறவை அது ஏற்படுத்தியது. எனவே, ஓர் உறவுப் பிணைப்பை துண்டிப்பதாகவே 370-வது பிரிவின் ரத்து என்பது அமைந்தது. 370-வது பிரிவு அரசியலமைப்பு ஒழுங்கிற்குப் புறம்பானதாக ஒருபோதும் இருந்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே அரசியலமைப்பு ஒழுங்கின் ஒரு பகுதியாகவே அது உருவாக்கப்பட்டது.
இருப்பினும், பாஜக, பிரிவு 370 ஐ பாதுகாப்பதற்குப் பதிலாக, அதை ஒருதலைப்பட்சமாக நீக்கி, ‘பிரிவு 370 பயங்கரவாதத்தை ஊக்குவித்தது; பயங்கரவாதத்தை உருவாக்கியது; 370வது பிரிவை நீக்கியதால் பயங்கரவாதத்தின் ஆதாரம் ஒழிக்கப்பட்டது; இனி அமைதி நிலவும்; பயங்கரவாதம் இருக்காது’ என நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஒட்டுமொத்த பாஜக அமைப்பும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், இந்தச் செயலுக்கான தங்களுடைய விளக்கத்தை பரப்பிட முழு முயற்சியையும் மேற்கொண்டன.
இந்தக் கூற்றுகள் அமைதியை உருவாக்கவில்லை என்பது கசப்பான ஏப்ரல் பஹால்காம் சம்பவத்தில் நிரூபிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எதுவும் ஜம்மு காஷ்மீர் என்கிற சிக்கலான பகுதியில் அமைதியை மீட்டெடுக்க உதவவில்லை என்று இந்த அனுபவம் நமக்கு சொல்கிறது. இது முதல் விஷயம். இரண்டாவது, நான் அவர்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் சொல்ல வேண்டும்; நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். உங்களைப் போலவே ஒரு நல்ல வாழ்க்கையை, ஒரு கண்ணியமான வாழ்க்கையை நாங்கள் வாழ விரும்புகிறோம். எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். நாங்கள் விருப்பத்தோடு தானாக முன்வந்து இந்திய மைய நீரோட்டத்தில் இணைந்தவர்கள். நாங்கள் (பாகிஸ்தானோடு இணைவதற்கு) வற்புறுத்தப்பட்ட போதிலும் எங்கள் முன்னோர்கள், எங்கள் தலைவர்கள், எங்கள் மக்கள், ‘ஒற்றுமைக்கு மதம் அடிப்படையாக இருக்கும்’ என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, மதச்சார்பற்ற நெறிமுறைகளும், பன்முகத்தன்மையில் ஒற்றுமையும்தான் வாழ்க்கையை அழகாகவும், பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது என்று அவர்கள் கூறினர். அதுதான் காஷ்மீர் மக்களின் கூற்றாக, செய்தியாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த வாதம், தங்களை தேசபக்தி மிக்கவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுடைய ஆட்சியால் அவமதிக்கப்பட்டது.
நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக என் சொந்த மக்களுக்கு முன் வெளிப்படுத்த விரும்புகிறேன். காஷ்மீரிகளைப் பொறுத்தவரை பயங்கரவாதம் ஒரு வாழ்க்கை முறை அல்ல. நாட்டின் பிற பகுதிகளில் 1947 பிரிவினையின் போது வகுப்புவாத மோதல்கள் நடந்தபோது, ஒரு வகுப்புவாத சம்பவம்கூட காஷ்மீரில் நடக்கவில்லை. ஐக்கிய பஞ்சாப், லாகூர் மற்றும் எங்கள் பகுதியில் ஜம்மு கூட ரத்தம் சிந்தியது. ஆனால், காஷ்மீரில் ஒரே ஒரு வன்முறை சம்பவம் கூட நடக்கவில்லை. அங்கு இந்திய ராணுவம் இல்லை. போலீஸ் இல்லை. இது வெவ்வேறு சமூகங்களுக்கு இடையேயான உறவின் பிணைப்பு அது. காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் முஸ்லிம்கள், காஷ்மீர் சீக்கியர்கள், காஷ்மீர் ஜெயின்கள், காஷ்மீர் பௌத்தர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தனர். அது காஷ்மீர் மக்களின் விருப்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முன்மாதிரியான சூழ்நிலை.
இன்னொரு முக்கியமான செய்தி. அவர்கள் ஒருங்கிணைப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். உண்மைதான். ஒருங்கிணைப்பு என்பது தேவைப்படுகிறது. ஆனால் பிராந்திய ஒருங்கிணைப்பு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவெனில், மக்களுடைய மனங்களின் ஒருங்கிணைப்புதான். எங்கள் அனுபவத்தைப் பொறுத்தவரை, அரசியல்சட்ட நிர்ணய சபையின் கூற்றுகள்படி, அதுதான் மிக முக்கியமானது. அதைத்தான் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை சொல்கிறது. ’இந்திய மக்களாகிய நாம்’ என்றே அது குறிப்பிடுகிறது. ‘இந்திய மக்களாகிய நாம்’ என்பதற்கு, ’இந்துக்களாகிய நாங்கள், முஸ்லீம்களாகிய நாங்கள், சீக்கியர்களாகிய நாங்கள், பௌத்தர்களாகிய நாங்கள், உயர்சாதிகள், தாழ்ந்த சாதிகளாகிய நாங்கள்’ என்பது பொருள் அல்ல; ‘இந்திய மக்களாகிய நாம்’ என்பதே அது.
இப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? காஷ்மீர் துயரச் சம்பவம்கூட குறுகிய அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. சில தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, நம்முடைய அணுகுமுறையில் திருத்தங்களைச் செய்வதற்குப் பதிலாக, அரசும், தலைமையும், மக்களுக்கு இடையில் மேன்மேலும் பிளவுகளை உருவாக்க தீவிர முயற்சி செய்கின்றன. அதனால்தான், வெவ்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படித்து வந்த காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டனர். மேலும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, பிழைப்பிற்காக பல்வேறு இடங்களுக்குச் சென்ற கூலித் தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டனர். எங்கள் மூதாதையர்கள், காஷ்மீர் மக்களாகிய நாங்கள் (இந்தியாவின்) ஒரு பகுதியாக இருக்கவே விரும்புகிறோம். பலவந்தத்தால் அல்ல. காஷ்மீர் மக்கள் அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் இருக்க விரும்புகிறார்கள். அதை மீண்டும் மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம் என்பதை இப்போதும் உறுதிப்படுத்துகிறோம். ஆனால், ஒற்றுமை என்பது நம்முடைய இதயங்களுக்கு இடையிலான, மனங்களுக்கு இடையிலான உறவு. அது தவறான பிரச்சாரம் அல்ல; உண்மைகளை சிதைப்பது அல்ல. எங்கள் வரலாறு, எங்கள் எண்ணங்களை சிதைப்பது அல்ல.
எனவே, காஷ்மீர் மக்கள் நிச்சயமாக நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே ஒரு சிறந்த, கண்ணியமான வாழ்க்கைக்கு தகுதியானவர்கள்; சிறந்த வாழ்வாதாரத்துக்கும், துன்புறுத்தல் இல்லாத வாழ்க்கைக்கும் தகுதியானவர்கள் என்பதைப் பதிவுசெய்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட விரும்பினால், நீங்கள் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை நீங்கள் தனிமைப்படுத்த வேண்டும். அப்பாவி மக்களை கைது செய்வதன் மூலம், அதைச் செய்ய முடியாது. சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் அதைச் செய்ய முடியாது. என் அனுபவப்படி, சட்டவிரோத நடவடிக்கைகளை, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகத்தான் எதிர்த்துப் போராட முடியும். ஆம். சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டவிரோத நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த முடியாது. அப்பாவி மக்களை துன்புறுத்துவது, எந்த விசாரணையும் இல்லாமல் மக்களை காவலில் வைப்பது எல்லாம், வன்முறையை ஆதரிப்பவர்களை தனிமைப்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள வழி அல்ல.
கே: மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப் பட்டுள்ளது என்று கூறி வந்தது. அதன் காரணமாக சுற்றுலாத் துறை செயல்படத் தொடங்கியது. இந்த குறிப்பிட்ட பஹால்காம் தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலா மற்றும் பிராந்தியத்தின் பரந்த பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது?
தாரிகாமி: நிச்சயமாக, இது சுற்றுலாவுக்கு ஒரு பின்னடைவு. நிச்சயமாக, சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் இடத்திற்குத்தான் வர விரும்புவார்கள், எங்கு வாழ்க்கையை அனுபவிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளனவோ அங்குதான் வர விரும்புவார்கள். அதனால்தான், இது காஷ்மீர் மக்களின் நலன்களுக்கு ஒரு மிகப் பெரிய, பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முதலில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுடைய துக்கத்தையும், சோகத்தையும் நம்மால் மதிப்பிடவே முடியாது. நம்முடைய உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த முடியும். நிச்சயமாக இது ஒரு பெரிய அதிர்ச்சிதான். ஆனால் மக்கள் மீண்டும் வருவார்கள் என்று என்னால் சொல்ல முடியும். எங்களுடைய நாட்டு மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இங்கு அனைத்து தடைகளையும் மீறி வாழ்கிறோம். நாங்கள் நீண்ட காலமாக இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறோம். இது மேம்படும். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கைகள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவாது என்பதை மக்கள் உணர்கிறார்கள். மேலும், காஷ்மீர் மக்கள் இத்தகைய தாக்குதலுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய விதம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. அந்த நம்பிக்கை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
காஷ்மீர் மக்கள் வன்முறை தொடர்வதை விரும்பவில்லை. காஷ்மீர் மக்கள் தங்களுடைய பொருளாதாரம் சிதைக்கப்படுவதை விரும்பவில்லை. வெவ்வேறு காரணங்களுக்காக இங்கு வரும் அனைவருக்கும் – சுற்றுலாப் பயணிகள், யாத்திரைக்கு வருபவர்கள் – இங்கு வாழ்க்கையை அனுபவிக்க நல்ல வாய்ப்புகள் தேவை என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் அவர்களுக்கு விருந்தினர்களாக இருக்க விரும்புகிறோம். அவர்களின் பாதுகாப்புக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். மேலும் இந்திய அரசு, நிர்வாகம், இந்த இடத்திற்கு யார் வந்தாலும், யாத்திரைக்காகவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ வந்தாலும், அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். இதில்தான் காஷ்மீர் மக்களின் நலன் அடங்கியிருக்கிறது. அதில்தான் நாட்டின் நலன் அடங்கியிருக்கிறது.
கே: நீங்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்காகவும், காஷ்மீர் மக்களின் ஜனநாயக, அரசியலமைப்பு உரிமைகளுக்காகவும் முன்னணியில் இருந்து போராடி வருகிறீர்கள். குறிப்பாக, ஆயுதமேந்திய ஊடுருவல் குழுக்கள் ஆரம்பத்தில் எவ்வாறு செயல்படத் தொடங்கின? அந்த சூழ்நிலைக்கு மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றினர்?
தாரிகாமி: சி.பி.ஐ(எம்) ஒரு சிறிய கட்சி என்றாலும், நாங்கள் நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறோம். இந்த தொடர்ச்சியான வன்முறையால் நிறைய செயல்வீரர்களை இழந்தோம். இங்கே ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் துயரங்களை சந்தித்துள்ளன. அமைச்சர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1989 டிசம்பரில் முதன்முதலாக நான் அச்சுறுத்தப்பட்டேன். 89-க்குப் பிறகு காஷ்மீரி பண்டிட்டுகள் அச்சுறுத்தப்பட்டார்கள். அச்சுறுத்தலாலும், நிச்சயமற்ற தன்மையினாலும், தங்களுடைய இல்லங்களை விட்டு வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. இதில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அவர்களுக்கு சில நிவாரணத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் இருந்தன. ஜம்முவில் சில தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் 2014இல் இந்த அரசு வந்ததிலிருந்து, அவர்களுடைய துயரத்தை வாக்குகளுக்காக சந்தைப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் நடந்ததை நான் பார்க்கவில்லை. அவர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக, துயரத்தை அனுபவித்தவர்களுக்காக, எதுவும் செய்யவில்லை. எனவே என் கருத்து என்னவென்றால், துன்பங்கள் நம்மை ஒன்றிணைக்க வேண்டும். புறக்கணிப்பு நம்மை ஒன்றிணைக்க வேண்டும்.
மேலும், அனைத்து மக்களும் துன்பப்படுகிறார்கள். நாட்டின் மற்ற பகுதிகளிலும் பொது மக்கள், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள், விவசாயிகள், மற்ற பிரிவினர், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள், சமூகத்தின் பலவீனமான பிரிவினர், தலித்துகள் போன்ற – அனைவருமே துயரங்களை அனுபவிக்கிறார்கள். இந்த அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறது. மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிப்பதையே இந்த அரசு நம்பியுள்ளது. இத்தகைய சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும், இது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல.
2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி அரசியலமைப்பிற்கு விரோதமாக நீக்கப்பட்ட உரிமைகளை நாங்கள் மீட்டெடுக்க விரும்புகிறோம். இந்தப் போராட்டத்தில் சி.பி.ஐ(எம்), மற்ற இடதுசாரி கட்சிகளுடன் தேசிய அளவில் முன்னணியில் நிற்கிறது. இதை காஷ்மீர் மக்கள் உணர்ந்துள்ளார்கள். நாட்டின் மற்ற பகுதிகளிலும் நண்பர்கள் உள்ளனர், அவர்கள் காஷ்மீர் மக்களின் எதிர்காலம் மற்றும் பிராந்தியத்தில் அமைதி குறித்து அக்கறை கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காஷ்மீர் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்காமல், அவர்களின் இதயங்களையும் மனங்களையும் வென்றெடுக்காமல், அங்கு ஸ்திரத்தன்மையையும், அமைதியையும் மீட்டெடுக்க முடியாது. அமைதியை மீட்டெடுக்க, காஷ்மீர் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
நிலத்தைப் பாதுகாக்கும் உரிமைகள், வேலைவாய்ப்புகளைக் பாதுகாக்கும் உரிமைகள் என்பது எல்லா இடங்களிலும் அத்தியாவசியமானவை. குமரி முதல் காஷ்மீர் வரை இந்த உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக ஒரு ஐக்கிய இயக்கம் தேவை. மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒற்றுமையை, நாட்டின் ஒற்றுமையை, அரசியலமைப்பு ஒழுங்கை, நாட்டின் ஜனநாயக ஒழுங்கைப் பாதுகாக்க, மக்கள் ஒன்றிணைய வேண்டும். இது காஷ்மீரிலிருந்து வரும் செய்தி. இது நிச்சயமாக எங்கள் ஒற்றுமையை, பயங்கரவாதம், மதவாதம் அல்லது பிளவுபடுத்தும் அரசியல் ஆகியவற்றை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்த விரும்புபவர்களை தனிமைப்படுத்த எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் ஒரு செய்தி என்று நான் நினைக்கிறேன்.
கே: பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகள் வந்துள்ளதா?
தாரிகாமி: முன்னதாக முதலீடு இல்லை; இப்போது முதலீடு வரும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கேளுங்கள்; நாடாளுமன்றத்தில் அவர்களைப் பேசச் சொல்லுங்கள். இந்த நீக்கத்திற்குப் பிறகு எவ்வளவு முதலீடு நடந்துள்ளது என்று நாட்டு மக்களுக்கு சுருக்கமாகவாவது கூறுங்கள் என்று அவர்களைக் கேளுங்கள். பாஜக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். அந்த 2 கோடி வேலைவாய்ப்பு தொகுப்பில், ஜம்மு காஷ்மீர் மக்களின் எண்ணிக்கை என்ன என்று சொல்லச் சொல்லுங்கள். இவை அனைத்தும் வெறும் கூற்றுகள்.
இந்திய அரசு பெருநிறுவனங்களின் லாபத்தை அதிகப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டுள்ளது. சாதாரண இந்தியர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, வெவ்வேறு துறைகளில் தினசரி கூலி அடிப்படையில் வேலை செய்யும் அனைவருக்கும், கிராமப்புறங்கள் உட்பட அனைவருக்கும் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. வாழ்க்கை பரிதாபகரமாகி வருகிறது. ஒருபுறம் பணவீக்கம் இருக்கிறது – ஒரு சிலருக்கு லாபம் அதிகரித்து வருகிறது. ஒரு புறம் ஒவ்வொரு வளமும் அவர்களுக்கு லாபத்தை அதிகப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. மறுபுறம் மக்களுக்கு எதுவும் இல்லை. ஜிங்கோயிசமும் – சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களும்- நாட்டின் மக்களுக்கு சேவை செய்யுமா? இவை நம் நாட்டு மக்களின் கனவாக இருக்குமா? அதனால்தான் சி.பி.ஐ(எம்) மற்றும் இடதுசாரிகள், இதர மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து, எங்கள் அரசியலமைப்பை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். நாம் பிளவுபட முடியாது. நாம் கைகோர்க்காமல் இருக்கவே முடியாது. ஒவ்வொரு மட்டத்திலும் ஓர் ஐக்கிய முயற்சி தேவை. மேலும் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டும். எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில், மதச்சார்பின்மை, சோசலிசக் கனவு, சமூக நீதி போன்றவற்றைப் பாதுகாப்பதில் நாம் ஒன்றிணைய வேண்டும். இதுதான் நம் நாட்டின் எதிர்காலம். இது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பிடிக்காத மதிப்பீடுகள். அதனால்தான் அவர்கள் இதையெல்லாம் நீக்கக் கோருகிறார்கள்.
கே: ஆர்.எஸ்.எஸ். தலைமை அரசியலமைப்பு சட்ட முகவுரையில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகள், அவசரநிலையின்போது எந்தவித விவாதமும் இன்றி சேர்க்கப்பட்டன என்பதால் அவை நீக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. ஆனால் காஷ்மீரைப் பொறுத்தவரை, எந்தவித விவாதமும் இன்றி பிரிவு 370 நீக்கப்பட்டது. 370வது பிரிவைத் திரும்பக்கொண்டு வரும் குப்கார் கூட்டணியில் நீங்கள் முக்கிய பங்காற்றுகிறீர்கள். இந்தப் பிரிவு மீட்டெடுக்கப்படும் அறிகுறிகள் ஏதேனும் தெரிகிறதா?
தாரிகாமி: இந்த அவசரநிலைக் காலம் பற்றி விவாதத்தைப் பொறுத்தவரை, நானும் என்னுடைய நண்பர்களுடன் அந்த நாட்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டேன், சிறையில் சில காலம் கழித்தேன். மேலும் அந்தக் காலத்தில் ஒரு சிறிய வேறுபாடுகூட இருந்தது. எதற்காக நாங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றோம் என்று சில காரணங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது அப்படி இல்லை. இது அவசரகாலம் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு முதல் நாள், ஆகஸ்ட் 4 ஆம் தேதி கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் டாக்டர் ஃபாரூக் அப்துல்லா தலைமையில் நாங்கள் ஒன்றாக சந்தித்தோம். குப்கர் பிரகடனம் என்று அழைக்கப்படும் ஒரு தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். பிரிவு 370 நீக்கப்படும், மாநிலம் பிரிக்கப்படும் என்று வதந்திகள் வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு இந்தியப் பிரதமரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். இந்த வதந்திகள் நடந்தால், அது நாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். அரசியல் கட்சிகளான எங்களுக்கு செவிசாய்க்க ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஜம்மு காஷ்மீர் மக்களின் நலன்களுக்கும், நாட்டின் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளித்திடுங்கள் என்று கோரி, நாங்கள் அனைத்து தலைவர்களும் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினோம். பின்னர் திரும்பி வந்தோம், நள்ளிரவில் 12:00 மணி அல்லது அதற்கு முன்பே, தொலைபேசிகள் ஒலிப்பதை நிறுத்திவிட்டன. லேண்ட்லைன்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் காலையில் எனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட வீரர்கள், நீங்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை; யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறினர். எந்த காரணமும், எந்த உத்தரவும் காட்டப்படவில்லையே என்று நான் கேட்டேன். அவர்கள் எங்களுக்குத் தெரியாது; இதுதான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று கூறினர்.
பின்னர் பிரிவு 370, மக்களை காவலில் வைப்பதன் மூலம், அனைத்து தகவல்தொடர்பு வழிகளையும் துண்டிப்பதன் மூலம் நீக்கப்பட்டது என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். இணையம் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் தொலைபேசி தொடர்பு இல்லை. ஒரு நோயாளிக்கு மருத்துவருடன் தொடர்புகொள்ள வழியில்லை. காஷ்மீரில் உள்ள ஒருவர், வெளியே படிக்கும் ஒருவர், வெளியே வேலை செய்யும் ஒருவர் யாராலும் தொடர்புகொள்ள முடியாது. கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவை விதிப்பதன் மூலம், ஒவ்வொரு வகையான தகவல்தொடர்புகளையும் பறிப்பதன் மூலம், இங்குள்ள மக்களின் தலைவிதியை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.
அருமை மக்களே, இத்தகைய சூழ்நிலை வேறு எங்காவது ஏற்பட்டால், அந்த மக்கள் பிரிவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று சிந்தித்தீர்களா? நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்? பின்னர், நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து தலைவர்கள் இங்கு வர முயற்சித்தனர் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் பொதுச் செயலாளர், எங்கள் அன்புக்குரிய தலைவர் சீத்தாராம் யெச்சூரி ஒரு முயற்சி செய்தார். அவர் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அதன்பின்னர் மட்டுமே நாங்கள் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒன்றாக சந்திக்க அனுமதிக்கப்பட்டோம். எனவே இதுதான் நிலைமை. இது முன்னெப்போதும் இல்லாதது, ஏனென்றால் இது அவசரகாலத்தைவிட மோசமானது. நாங்கள் அந்த அவசரகாலத்தை எதிர்கொண்டோம். நாங்கள் சிறையில் இருந்தோம் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அப்போது தடுப்புக்காவல் காரணங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இப்போது தரப்படவில்லை. நாங்கள் சிறையில் வைக்கப்பட்டோம். ஃபாரூக் அப்துல்லாகூட அவரது இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ஃபாரூக் அப்துல்லா ஏன் இங்கு இல்லை என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டபோது, இந்திய உள்துறை அமைச்சர் அவர் வர விரும்பவில்லை என்று கூறினார். பின்னர் ஃபாரூக் அப்துல்லா தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே குதித்து, நான் இங்கு இருக்கிறேன். நான் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூச்சல் போட்டார். இது ஒரு சிறைச்சாலை போன்றது; அதைவிட மோசமான ஒரு சூழ்நிலை இங்கே நிலவுகிறது. மதச்சார்பற்ற இந்தியாவில் தானாக முன்வந்து இணைந்த குடிமக்களின் எதிர்காலத்தைப் பற்றி இப்படித்தான் தீர்மானிக்கப்பட்டது. இந்த வெகுமதிதான் எங்களுக்கு அளிக்கப்பட்டது. எனவே இது ஒரு பெரிய அரசியல் தவறு. இது இந்த பாஜக ஆட்சியால் செய்யப்பட்டது. மேலும் இது எங்கள் பார்வையில் ஒரு தாக்குதல் மட்டுமல்ல. இது அரசியலமைப்பு ஒழுங்கின் மீதான ஒரு தாக்குதல்.
இப்போது நாம் நாடாளுமன்றத்தை எப்படிப் பார்க்கிறோம்? இவ்வளவு பெரிய விஷயம், இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கிடையே ஆயுத மோதல்கள் நடந்துள்ளன. பின்னர் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு வெளியே அனுப்பி (பிற நாடுகளுக்கு) விளக்கமளிக்கிறீர்கள். ஆனால் நாட்டின் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட, இதற்கு என்ன அர்த்தம் என்று நாட்டு மக்களுக்குச் சொல்ல, நீங்கள் நாடாளுமன்ற அமர்வை ஒரு சிறப்பு அமர்வை நடத்தவில்லை. இதை மாற்ற முடியுமா? இத்தகைய மோசமான அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யப்படவில்லை.
கே: சி.பி.ஐ(எம்) களத்தில் எப்படி செயல்படுகிறது?
தாரிகாமி: நாங்கள் வேலை செய்கிறோம். அதனால்தான் அனைத்து தடைகளையும் மீறி நாங்கள் ஓர் இடத்தைப் பெற்றோம். மேலும் ஜமாத் இஸ்லாமி போன்ற புதிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம், முன்னதாக, அவர்கள் பயங்கரவாத அமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தனர். இப்போது அனைவரும் மிகவும் தேசபக்தி மிக்கவர்களாகிவிட்டனர். மேலும், பாஜக அவர்களை ஊக்குவிக்க முயற்சித்தது. எங்களுக்கு எதிராக அவர்களை நிறுத்தியது. ஆனால், மக்களின் விருப்பம் அவர்களின் அளவைவிடப் பெரியது. அதனால்தான் சி.பி.ஐ(எம்) ஆல் இந்த சவாலான சூழ்நிலையில் மீண்டும் அந்த இடத்தைப் பெற முடிந்தது. மேலும் தேசிய மாநாடு, காங்கிரஸ் போன்ற பிற மதச்சார்பற்ற கட்சிகளும் கணிசமான எண்ணிக்கையிலான இடங்களைப் பெற முடிந்தது. இந்த தீர்ப்பு டெல்லியில் உள்ள பாஜகவுக்கு ஏற்கத்தக்கதாக இல்லை. மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்த கூற்றுகள், உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதிகள், நாடாளுமன்றத்திலும் வேறு இடங்களிலும் உறுதிமொழிகள் கொடுத்தபோதிலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போதும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இது நாங்கள் கோருவது அல்ல. இந்த ஆட்சியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அவர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது, ஏனென்றால், காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் மக்கள் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை. அங்கு தேர்தல்கள் நடந்து, மக்கள் அவர்களுக்குத் தெளிவாக ஒரு செய்தியை அனுப்பினர். எங்களுக்கு என்ன செய்யப்பட்டாலும் அது நாட்டிற்கு நல்லதல்ல; மக்களுக்கு நல்லதல்ல என்று கூறிவிட்டார்கள்.
இங்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. மக்கள் உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பல பகுதிகளிலும் நடக்கிறது, ஆனால் காஷ்மீர் என்று அழைக்கப்படும் நாட்டின் இந்த துரதிர்ஷ்டவசமான பகுதியில், இது அதிகமாக நடக்கிறது. எனவே, அனைத்து தடைகளையும் மீறி, எங்கள் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம், எங்கள் கைகளில் சிவப்பு கொடியுடன் நாங்கள் உங்களுடன் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக, முழு நாட்டின் மக்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக, தொடர்ந்து முன்னேறுவோம். மிக்க நன்றி.
நேர்காணல்: இரா. சிந்தன்
தமிழில்: நர்மதா தேவி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
