குருப்ஸ்காயா – அசாதாரணபெண்மணி
பேரா. சந்திரா
“மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும் முற்றிலும் கற்று, முதலாளித்துவ சமுதாயத்தை மிகச் சரியாகவும், விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்ததன் அடிப்படையில்தான் அவர் இவற்றை நிரூபித்தார் என்பது மிக மிக முக்கியமானது.” [லெனின்]
குருப்ஸ்காயா ஒரு தலைசிறந்த கம்யூனிஸ்டாக திகழ்ந்ததற்கு அடிப்படையாக அமைந்தது, மார்க்சியத்தை நன்கு கற்று, அதை உள்வாங்கிக் கொண்டு, தனது அனுபவங்களுடன் பொருத்தி, செயல்பட்டவிதம் என்றால் அது மிகையாகாது. 1869இல் பிறந்த அவரின் தாய் ஒரு அநாதை. அவரின் தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். தனது தந்தையை பற்றி கூறுகையில், அவர் மிகவும் நேர்மையான மனிதர் என்று குறிப்பிடுகிறார். குருப்ஸ்காயாவிற்கு 14 வயது ஆகும் பொழுது அவருடைய தந்தை இறந்துவிட்டார். தாய், குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணியை செய்துவந்தார். சிறுவயது முதலே குருப்ஸ்காயா அடக்குமுறையை எதிர்த்தார். ரஷியர்கள் யூதர்கள்/போலிஷ் மக்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை ஆழமாக உணர்ந்தார். ஜார் மன்னர் ஆட்சியின் கொடுமைகளை சிறுமியாக இருந்த பொழுதிலேயே எதிர்த்தார். அவருக்கு அவருடைய தாய்தான் அனைத்து விஷயங்களையும் கற்பித்தார். குருப்ஸ்காயாவின் தாய், கட்சி தோழர்களுடன் நெருங்கி பழகியதால், இயல்பாகவே அவருக்கு முற்போக்கான சிந்தனைகள் ஏற்பட்டன. சிறு வயது முதல் புத்தகங்களை நேசித்தார். எப்பொழுதும் வாசிக்க விரும்பினார். லேவ் டால்ஸ்தாயின் நூல்கள் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது நூல்களில் பணக்கார/சோம்பேறிகளை எதிர்த்து விவசாயிகளும்/தொழிலாளிகளும் நடத்திய போராட்டங்கள் அவர் மனதில் நிறைய கேள்விகளை எழுப்பின. குருப்ஸ்காயா சிறந்த மாணவியாக திகழ்ந்தார். ஒரு ஆசிரியையாக பணி புரிய வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.
குருப்ஸ்காயா தனது வாசிப்பு பழக்கத்தை விடவே இல்லை. சற்று பெரியவளான பின்னர், வாசிப்பு குழுவில் இணைந்தார். அக்குழுவின் செயல்பாடு அவர் கண்களை திறந்தது எனலாம். மார்க்ஸின் நூல்களை அதிகம் வாசிக்க ஆரம்பித்தார். மார்க்ஸின் “மூலதனம்” நூலை புரிந்து கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது என அவர் கூறுகிறார். மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்து கொண்டார். [இன்றும் மூலதனம் நூலை, வாசிப்புக் குழு மூலம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து விவாதிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. ஏற்கனவே நன்கு கற்ற ஒருவர் வழிகாட்டுதலுடன் வாசிப்பது அந்த நூலை நன்கு புரிந்து கொள்ள உதவும்] அத்துடன் தொழிலாளர்களின் போராட்டங்களை புரிந்துகொண்டு, அவற்றின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார். இதைப் பற்றி அவர் கூறுகையில், “ஒருநாள் மாலை நேரத்தில் வீட்டு முற்றத்தில் அமர்ந்து ‘முதலாளித்துவத்தின் சாவுமணி ஒலிக்கிறது. பறிமுதல் செய்பவர்கள் தாமே பறிமுதல் செய்யப்படுகிறார்கள் ‘ என்ற வரிகளை படித்தேன். என் நெஞ்சு துடிதுடிப்பது நன்றாகக் கேட்டது. முற்றிலும் சிந்தனையில் மூழ்கி போயிருந்த நான், என்னருகே அந்த வீட்டுக்காரரின் குழந்தையை பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்த சிறுமி எதைப் பற்றி உளறிக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளவில்லை…. என் வாழ்நாளிலேயே அதை காண்பேன் என்ற எண்ணம் எனக்கு அப்பொழுது தோன்றவில்ல.. குறிக்கோளும் அதற்கான பாதையும் எனக்கு தெளிவாக தெரிந்தது. அதுவே எனக்கு போதும்… .. சோவியத்துகளின் இரண்டாம் மாநாட்டின் போதும் இது பற்றி சிந்தித்தேன். இன்னும் எவ்வளவு படிகளை தாண்டியாக வேண்டும்? கடைசி படியை காண நான் உயிர் வாழ்வேனா? அது எனக்கு தெரியாது. அது நடைபெறும் என்பது திண்ணம்” என தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். 5 ஆண்டுகள் மார்க்சின் நூல்கள் அனைத்தையும் நன்கு கற்றார். யாவரும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து மார்க்சின் பெயரை சொல்லாமல், மார்க்சீயத்தை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். ”தொழிலாளி வர்க்கத்தினருடன் என்றும் பிரிக்க முடியாதபடி நான் பிணைக்கப்பட்டேன்” என்று கூறுகிறார். அதன்பின்னர் குருப்ஸ்காயா சிறையில் அடைக்கப்பட்டார்.
ரஷ்யாவில் தீவிர மார்க்சியக் குழு ஒன்று உருவாகியது. ஜெர்மன் தொழிலாளர் கட்சியை மாதிரியாகக் கொண்டு அது சோஷியல்-டெமாக்ரட்டிக் குழு என அழைக்கப்பட்டது. 1894இல் லெனின் பீட்டர்ஸ்பர்க் வந்ததும், அக்குழு வலுப்பெற்றது. லெனினுடன் இணைந்து பணியாற்றிய குருப்ஸ்காயா அவருடைய நெருங்கிய தோழியானாள். இருவரும் கைது செய்யப்பட்டனர். சைபீரியாவுக்கு நாடுகடத்தும் முன்பு இருவரின் திருமணம் நடைபெற்றது. இருவரும் இணைந்து சமூக மாற்றத்திற்கான பணியில் முழுமையாக ஈடுபட்டனர். லெனின் விவசாயிகளின் கஷ்டங்களை நேரில் கண்டவர். லெனினின் தாயும் அடக்குமுறைக்கு எதிராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. லெனின் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகிவிட்டார். “ஒருவர் நல்ல தோழராக இருக்க வேண்டும் என்றால், அனைத்து விஷயங்களையும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.. மார்க்சியம் பற்றி படித்தால் மட்டும் போதாது. பூர்ஷ்வாக்களின் எழுத்துக்களையும் வாசிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் பற்றி அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை வாசிக்க வேண்டும்“ என்று லெனின் கூறுவதை குறிப்பிடுகிறார். மார்க்சிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் எளிமையான முறைகளை லெனின் கண்டுபிடித்தார். லெனின் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்தை குருப்ஸ்காயாவும் வலியுறுத்துகிறார். “ஒரு பொருளை உண்மையாக ஆராய வேண்டுமெனில், அதை பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அதை நாம் முற்றிலும் தீரவு செய்ய முடியாது. ஆயினும் இவ்வாறு ஆழ்ந்து ஆராய்வதால் பெரும் தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உணர்ச்சியற்று செயல்படுவதை தடுத்துக் கொள்ளலாம்.”
ஒரு சிறந்த மார்க்சியவாதியாக, கம்யூனிஸ்டாக குருப்ஸ்காயா எப்படி செயல்பட்டார்? கல்வி, சிறுவர்கள்/ இளைஞர்களை கம்யூனிசத்தின்பால் ஈர்க்க வைத்து, ஒருங்கிணைப்பது, பெண் விடுதலை,சர்வதேச மாதர் இயக்கம் ஆகிய மூன்று விஷயங்கள் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தினார். கல்விக்கு முன்னுரிமை அளித்தார். விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் கல்வி கற்க வேண்டும். புரட்சி திடீரென வெடிக்காது. மக்களை பயிற்றுவிக்க வேண்டும். லெனின் கூறியது போல, “புரட்சிகர சித்தாந்தம் இல்லாமல், புரட்சி இயக்கம் இருக்க முடியாது. சந்தர்ப்பவாதத்தின் நாகரீக உபதேசமும், நடைமுறை செயல்களை மிகவும் குறுகிய விதத்தில் செய்வதற்கான கவர்ச்சியும் ஒன்றையொன்று தழுவி நிற்கும் இந்நேரத்தில் இக்கருத்தை எந்த அளவுக்கு வற்புறுத்தினாலும் தகும். [1902 “என்ன செய்வது?”லெனின்] நாம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளை புரிந்துகொள்ள இதை நாம் பொருத்திபார்க்க வேண்டும்.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது என்ன , பொது மக்களை எப்படி அணுகுவது அவர்களிடம் கம்யூனிச கருத்துக்களை எப்படி கொண்டு செல்வது போன்றவற்றை லெனின் எவ்வாறு செயல்படுத்தினார், எப்படி மற்ற தோழர்களை செயல்பட வைத்தார் என்பதை அடிக்கடி தனது உரைகள் மற்றும் எழுத்துக்களில் குருப்ஸ்காயா தெளிவுபடுத்துகிறார்.
குருப்ஸ்காயா எழுதிய கட்டுரைகள் பலவும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில், கல்விக்கு பிரதான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் கல்வி துறை தலைவராக அவர் பணியாற்றி உள்ளார். வயோதிகர்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அவர், அதற்கென பிரத்தியேகமான பாடதிட்டங்களை தயாரித்தார். விவசாயிகளை எப்படி பயிற்றுவிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருந்தது. கல்வியின்மை பிற்போக்குதனத்திற்கு காரணம் என்பதை அவர் உறுதியாக நம்பினார். கற்றுக் கொள்பவர்கள் முழுமையான பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதில் அவர் மற்ற பல தோழர்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டாலும், தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார். கல்விதான் மாற்றத்தை ஏற்படுத்தும். கேள்வி கேட்க துணிவைக் கொடுக்கும். “தோழர்களே பயப்படாதீர்கள். உங்கள் எதிர்காலத்தை, உங்கள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக் கொள்ள கல்வி அவசியம்” என திரும்பத் திரும்ப எடுத்துரைத்தார். வயது வந்தவருக்கு கல்வி அளிக்க தனித் திட்டம் உருவாக்கியது போலவே, இளைஞர்களுக்கு அரசியல் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். எழுத்தறிவின்மையை ஒழிப்பது, அதிகார வர்க்க மனப்பான்மையை எதிர்த்து போராடுவது, நாட்டை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள் அனைத்திலும் அரசியல் கல்வி அளிக்கும் தோழர்கள் அக்கறை கொள்ளவேண்டும். தொழிலாளர்களும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டவேண்டும். தொழில்நுட்ப அறிவை வளர்க்க வேண்டும். இதை பற்றி அவர் கூறுகையில், “அறிவியல் அகாதமியின் ஒவ்வொரு அமர்வும் தொழிலாளர்களிடையே விளக்கும் வேலையை செய்ய வேண்டும். அகாதமியின் கோஷம் “விஞஞானமும், அறிவும், தொழில் நுட்பமும் மக்களுக்காகவே” இது அகாதமிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கல்வி நிலையமும், தொழில் கல்லூரியும், பல்கலைக்கழகமும் இதை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதை அறிவுஜீவிகள் மட்டும் பின்பற்றினால் போதாது. கம்யூனிச வாலிபர் சங்கம், தொழிற்சங்கம் ஆகியவை, ஜனரஞ்சகமான மொழியில் எப்படி பேசுவது, எழுதுவது, தனது அறிவை பிறருக்கு பகிர்ந்தளிப்பது என்பதை ஒவ்வொரு தொழில் கல்லூரியின், விவசாய கல்லூரியின், பல்கலைக்கழகத்தின் மாணவனும் அறியவேண்டும். கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கம் இதுபற்றி கவனமாக இருக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளார். அது மட்டுமல்ல. கம்யூனிச வாலிபர் சங்கம் தயாரிக்கும் கல்வி திட்டத்தில் இடம் பெற வேண்டிய விஷயங்களை பற்றியும் தெளிவு படுத்தி உள்ளார்.” பரந்த கலாச்சார நடவடிக்கை, கலாச்சார நடவடிக்கைகளை தொழில் நோக்கங்களுடன் இணைத்தல், தொழில் பற்றிய பிரச்சாரத்தை மக்களின் பல தொழில் நுட்ப கல்வி கண்ணோட்ட விஸ்தரிப்புடன் இணைத்தல், அரசியல் கல்வி நடைமுறை வேளைகளில் மார்க்சீய-லெனினிய கருத்துக்களை புகுத்துதல், ஆசிரியர்களிடயே வேலை செய்தல், சோவியத் நிபுணர்களை இவ்வேலைக்காக சேகரித்தல், கல்வி நிலையங்களை அரசியல் கல்வி வேலையின் மையங்களாக மாற்றுதல் ஆகியவை ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தவை” என வழிகாட்டியுள்ளார். அரசியல் கல்வி தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் நமது கட்சி கல்வி பணிகளை செய்ய உதவும் என்பதில் ஐயமில்லை.
குழந்தைகள் பற்றி குருப்ஸ்காயா:
“எனக்கென்று சொந்தமாக குழந்தைகள் இல்லை என்று நான் இப்பொழுது வருந்தவில்லை. ஏனென்றால் எனக்கு அநேக குழந்தைகள் உள்ளனர்.-கம்சோமோலியர்கள் [கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள்], இளம் பயனீர்கள், அவர்கள் அனைவரும் லெனினிஸ்டுகள். அவர்கள் வேண்டுகோளின் பெயரில்தான் நான் சுயசரிதை எழுதினேன். அவர்களுக்கு, எனது அருமை பிள்ளைகளுக்கு நான் இதை அர்ப்பணிக்கிறேன்” என தனது சுயசரிதையின் முடிவுரையில் குறிப்பட்டுள்ளார். 1923இல் ‘பிராவ்தா’வில் அவர் எழுதிய கட்டுரையின் சில முக்கிய அம்சங்கள் இங்கே குறிப்பிடத்தக்கவை ஆகும்.
“குழந்தைகள் இயக்கத்திற்கும், குழந்தைகள் ஸ்தாபனத்திற்கும், என்ன அவசியம்? என தோழர்கள் கேட்கலாம். அவர்கள் வளராட்டும். மேலும் முதிர்ச்சி அடையட்டும். அவர்கள் பிறகு கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தில் சேர்வார்கள் என்று சொல்லலாம். இப்பொழுது என்ன புரியும்? அவர்கள் விளையாடட்டும். பள்ளிக்கு செல்லட்டும் என்று சொல்வார்கள்” என்று கூறிவிட்டு, தனது கருத்தை பதிவிடுகிறார். “10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களையும், சிறுமிகளையும் உட்கொண்ட சிறுவர் கம்யூனிஸ்ட் இயக்கமே இளம் பயனீர் கழகமாகும். இக்கழகம் அதன் உறுப்பினார்களுக்கு கூட்டுணர்ச்சியை புகட்டுகிறது. இன்பத்தையும், துன்பத்தையும் கூட்டத்துடன் பகிர்ந்து கொள்ள பழக்குகிறது. கூட்டத்தின் நலனே தங்களின் நலன் என போதிக்கிறது. கூட்டாக வேலை செய்யும் திறமை, இயங்கும் திறமையை வளர்க்கிறது. தாங்கள் மனிதகுலத்தின் மலர்ச்சிக்காக போராடும் தொழிலாளி வர்க்கத்தின் உறுப்பினர்கள், சர்வதேச பாட்டாளி வர்க்கம் என்ற மாபெரும் சேனையின் உறுப்பினர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, குழந்தைகளின் கம்யூனிஸ்ட் மனவுணர்வை வளர்க்கிறது. “விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். விளையாட்டு அவர்களின் நுண்ணறிவு, சமயோசித புத்தி, முன்முயற்சி ஆகியவற்றை வளர்க்கிறது. குழந்தைகளை பயிற்றுவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் கீழ்க்கண்ட வரிகளில் சுட்டிக்காட்டுகிறார். “சோஷலிச கட்டுமானம் என்பது ஒரு புதிய பொருளாதார அடிப்படையை தோற்றுவிப்பது மட்டுமல்ல; சோவியத் ஆட்சியை அமைத்து, அதை நிலை நிறுத்துவது மட்டுமல்ல; கம்யூனிஸ்டுகளை போல, சோஷலிஸ்டுகளை போல ஒவ்வொரு பிரச்னையையும் ஒரு புதிய வழியில் தகர்க்கும் ஒரு புதிய தலைமுறையை வளர்க்க வேண்டும். இத்தலைமுறையின் பழக்கங்களும், பிற மக்களிடம் காட்டும் மனப்போக்கும் முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாய் இருக்க வேண்டும். தோழமை உணர்வை வளர்ப்பது, நிலையுறுத்துவது இளம் பயனீர்கள் கழகத்தின் முக்கிய பணிகளாகும். இக்குழந்தைகள் சமுதாய ஊழியர்களாக இருக்க வேண்டும்” அமெரிக்கா சென்று ரஷியா திரும்பிய ஒரு ஆசிரியரிடம் குருப்ஸ்காயா பேசிய பொழுது “ரஷ்யாவில் நிகழ்ந்துள்ள மாறுதல்களில் எது சிறந்தது என கருதுகிறீர்கள் என்று கேட்ட பொழுது, மக்கள் இப்போது அடிக்கடி “நான்” என்று கூறாமல், “நாம்” என்று கூறுகிறார்கள் என்றார் என சுட்டிக்காட்டி, இளம் பருவத்திலேயே, எந்த வேறுபாடுமின்றி வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். சோஷலிச அமைப்பில் குழந்தை வளர்ப்புமுறையில் ஒவ்வொரு குழந்தையின் திறமை, செயல்வன்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அவர் வலியுறுத்தினார். வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, கூட்டாக கற்கும் முறையை அமுல்படுத்த வேண்டும். அவசியமான சர்வதேசியவாத கருத்தை குழந்தைகளுக்கு ஊட்டக் கூடிய புத்தகங்களின் தேவை பற்றியும், இருந்த பாசிச சக்திகளை எதிர்த்து போராடுபவர்களை மதிக்க கற்று தரவேண்டும் என்றும் கூறும் அவர், “புத்தகங்கள் எந்த விதத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. மாறாக, அவற்றின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதே முக்கியம்” என்று கூறியுள்ளார்.
இளைஞர்கள் பற்றி குருப்ஸ்காயா:
1917இல் ‘பிராவ்தா’வில் இளம் தொழிலாளர்களுக்கான போராட்டம் பற்றிய கட்டுரையில், வாலிபர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எப்படி செயல்பட வேண்டும் என ஏராளமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் கூறுகிறார்: ”தோழர்களே, நீங்கள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை, அரசியலில் ஈடுபடவும், ஏதோ ஒரு போக்கை சார்ந்து நிற்கவும் உங்களுக்கு வயது போதாது. நீங்கள் முதலில் படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பூர்ஷவாக்கள் அடிக்கடி கூறுவார்கள். அதன் அர்த்தம் என்ன? என்னையும், எனது கட்சியையும் தவிர எவரையும் உன்னிடம் செல்வாக்கு செலுத்த விடாதே என்பதாகும். ஒரு கம்யூனிஸ்ட் வாலிபர் எப்படி இருக்க வேண்டும்? கூர்மையான கம்யூனிஸ்ட் நோக்கு தேவை. அரசியல் கல்வியின் அடிபடையை கற்றுக் கொள்ளலாம். ஆனால், அநேக சமயங்களில், அரசியல் கல்வி என்பது ஒன்று. வாழ்க்கை என்பது வேறொன்று. சிறந்த கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், வாழ்க்கையில் அரசியல் கல்வியை எப்படி பயன்படுததுவது, இவை இரண்டும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பது தெரிவதில்லை” இதை விளக்க, ஆலை தொழிலாளி வாலிபரின் வாழ்க்கையை அவர் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டுகிறார். வேலையை கெடுக்கும் தாறுமாறான விமர்சனங்களை வாலிபர்கள் தவிர்க்க வேண்டும். தோழமையுடனும், ஒற்றுமையுடனும் வாலிபர் சங்கம் செயல்பட வேண்டும் என்றும், வாலிபர் சங்கத்தின் முக்கிய கடமைகளையும் வரிசைபடுத்துகிறார். [1935 ‘இளம் கம்யூனிஸ்ட் சஞ்சிகை’ இதழ் 8].
பெண்கள் மற்றும் மாதர் இயக்கம் பற்றி குருப்ஸ்காயா:
கம்யூனிச இயக்கத்தில் இணைந்தது முதல் பெண் விடுதலைக்காக அழுத்தமாக குரல் கொடுத்தவர் குருப்ஸ்காயா. தனது தாயின் செயல்பாடுகளை கவனித்த அவர், பெண்களின் ஆற்றலைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார். தான் பேசும் கூட்டங்களில் பெண் விடுதலை பற்றி நிறைய பேசினார். சோஷலிசம் மற்றும் பெண் விடுதலை பற்றி நிறைய எழுதினார். சோஷலிச சமுதாயம் அமைந்த உடனேயே, பெண் விடுதலை சாத்தியமாகி விடுவதில்லை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தார். வாலிபர் சங்கத்திற்கு முன் உள்ள கடமைகளில், பெண்கள் முழுமையாக விடுதலையுற வழி செய்ய வேண்டுமென்கிறார்” நமது சங்கத்தில் சுறுசுறுப்புடன் இயங்கும் சிறந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், இளம் பெண்களை முழுமையாக நோக்கினால், அவர்கள் பழங்காலத்தின் மிச்ச மீதங்களின் ஆதிக்கத்தில் இருந்து வருவதை காணலாம். இதற்கு நாம் நன்கு விளக்கியும், ஒழுங்கமைத்தும் பெரும் அளவுக்கு பாடுபட வேண்டும். தினசரி பாடுபடவேண்டும். .. இதற்கு பொறுமையும், உறுதியும் தேவை. வாலிபர்கள் தினந்தோறும் இந்த வேலையை செய்ய வேண்டும். பெண்கள் கலாச்சாரத் துறையில் பின் தங்கியுள்ளனர். இது பெண்களின் சமூக பணிகளுக்கு தடையாக இருக்கிறது. பெண் கல்விக்கு முன்னுரிமை தரவேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமின்றி, மூத்த சகோதரிகளும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். வெறும் எழுத்தறிவு போதாது. “ஒவ்வொரு சமையல்காரியும் அரசாளும் திறமை பெற வேண்டும்” என்ற லெனினின் வாரத்தைகள் நமது பெண்களுக்கு தெரியும். ஆனால், அதை செய்ய ஏராளமாக படிக்க வேண்டும். ஏராளமாக தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் குருப்ஸ்காயா. குடும்ப வளர்ப்பையும், சமூக வளர்ப்பையும் இணைத்தல் பற்றிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
சோவியத் யூனியனில், சோஷலிச அமைப்பை நிறுவிய உடனேயே பெண்கள் விடுதலை பெறவில்லை. அவர்களை வீட்டிற்கு வெளியே வர வைப்பதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. குருப்ஸ்காயாவின் பணி அளப்பரியது. சோவியத் யூனியனில் இருந்த மத்திய ஆசிய பகுதிகளில், பெண்கள் வீட்டைவிட்டு வெளியேவர தயங்கினார்கள். வீடு, வீடாக சென்று, அப்பெண்களிடம் தினமும், பேசி பேசி, பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். வீடுகளின் கதவை கூட சில பெண்கள் திறக்க மாட்டார்கள். ஜன்னல் அருகில் நின்று, குருப்ஸ்காயா அப்பெண்களிடம் பேசுவார். கல்வியின் முக்கியத்துவம், சமூக உற்பத்தியில் பெண்கள் பங்கு பற்றி அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேசுவார். பெண் விடுதலை அவ்வளவு சுலபமாக கிடைப்பதல்ல. சுய கல்வியின் தேவை பற்றி உணர்த்துவார். பழங்காலத்தில், பெண்கள் எப்படி அடிமைகளாக இருந்தனர் என்பதை பற்றி விளக்கி, பெண்கள் மீதான கொடுமைகளை பற்றி எடுத்துக் கூறி, சோவியத் யூனியனின் நிர்மாணத்தில் பெண்கள் எப்படி சிறப்பான பங்கை செலுத்த முடியும் என்று அசராமல் கூறுவார். வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்களுக்கு சங்கம் தேவை என்பதையும், அவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் அழுத்தமாக விளக்கி உள்ளார். அது மட்டுமல்ல; திருமணம், சுயநலம், கணவன் மனைவியிடையே நேர்மையற்ற போலி உறவுகள், கருச்சிதைவுகள், திருமண வாழ்வில் உள்ள குட்டி பூர்ஷவா அணுகுமுறை எப்படி தொழிலாளர் குடும்பங்களில் கூட தொற்றிக் கொள்கிறது என்பது போன்ற குடும்பம் தொடர்பான விஷயங்களை பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். ஒரு கம்யூனிஸ்ட், பெண் விடுதலைக்கு செய்ய வேண்டியவை என்ன என்பதை பற்றி நிறைய எழுதியுள்ளார்.
ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தனது கருத்துக்களை நன்கு பதிவு செய்துள்ளார். “கட்சியின் உறுப்பினராக இருக்க, கட்சி சீட்டை பெற்றிருப்பது, சோஷலிச பத்திரிகைக்கு சந்தா செலுத்துவது, கூட்டங்களுக்கு செல்வது ஆகியவை மட்டும் போதாது, சொந்த வாழ்வு சமூக வாழ்விலிருந்து வேறுபட்டு நிற்க முடியாது என்பதை தெளிவாக உணரும் சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். .. போராட்டத்துடன், கம்யூனிச கட்டுமானத்துடன் நமது சொந்த வாழ்க்கையை இணைக்க முயல வேண்டும். நிச்சயமாக, இதனால் சொந்த வாழ்க்கையை ஒதுக்கிவிட வேண்டும் என்பதல்ல. கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சமயப் பிரிவல்ல. சந்தர்ப்பவாதிகள் லட்சியத்தை மறந்து, அடிப்படையானவற்றை விட்டுக்கொடுக்கிறார்கள். இதில்தான் சந்தர்ப்பவாதிகள் புரட்சியாளர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சுயகல்வியை தொடர்வது மிக மிக அவசியம்.
கல்வி, குழந்தைகள், வாலிபர்கள், மாதர்கள் என மக்கள் அனைவரும், எந்த வேறுபாடுமின்றி, கம்யூனிச சித்தாந்த பிடிப்புடன் வாழ வேண்டும் என பேசியதுடன், எழுதியதுடன் மட்டும் குருப்ஸ்காயா நிற்கவில்லை. லெனின் என்ற மாபெரும் தலைவனின், தோழியாக, துணைவியாக, ஒரு மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்கட்டாக விளங்கினார். ஆயிரக்கணக்கான நூலகங்களை நிறுவிய பெருமை அவரை சேரும். கிராமப்புறங்களில் படிக்கும் கிளப்களை, படிக்கும் அறைகளை உருவாக்கினார். இஸ்க்ரா பத்திரிக்கையின் செயலராக சிறப்பாக பணியாற்றியவர். பெண் தொழிலாளர்களுக்கென “வுமன் வொர்க்கர்” என்ற பத்திரிக்கை நடத்தினார். அவர் பிப்ரவரி 27, 1939இல் மறைந்ததும் வெளிவந்த செய்தியில் ஒரு அசாதாரண பெண்மணி மறைந்தார் என குறிப்பிடப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
