இடது ஜனநாயக முன்னணியும் இன்றைய அரசியல் நடைமுறை உத்தியும்
சீத்தாராம் யெச்சூரி
மத்திய பாடக்குறிப்பு
மக்கள் ஜனநாயகப்புரட்சியை வென்றெடுப்பது: இந்தியப் புரட்சிக் கட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகபோக மூலதன எதிர்ப்பு ஆகிய கடமைகளை நிறைவேற்றி, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும்படியான ஜனநாயக ரீதியிலான ஒரு புரட்சிகரக் கட்டம் என மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுக்கிறது. நிலப்பிரபுக்கள் அல்லாத விவசாயிகள், இந்திய முதலாளிகளில் ஏகபோகம் அல்லாத பிரிவினர், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரை உள்ளடக்கி, தொழிலாளி வர்க்கத்தினால் வழிநடத்தப்படும் மக்கள் ஜனநாயக முன்னணியே, இந்த மக்கள் ஜனநாயகப் புரட்சியை வழிநடத்திச் செல்லும் வர்க்கக் கூட்டணி ஆகும்.
இந்தக் கூட்டணியில் பல்வேறு வர்க்கங்கள் இடம்பெறும் என்ற போதிலும், அந்தப் பல்வேறு வர்க்கங்களின் பங்கு என்பது ஒரே மாதிரியானதாக இருக்காது. அது, முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கீழுள்ள உற்பத்திச் செயல்முறையில் இந்த வர்க்கங்கள் ஒவ்வொன்றும் பெற்றுள்ள இடத்தைப் பொறுத்ததே ஆகும். மக்கள் ஜனநாயக முன்னணியை உருவாக்குவது, அதை வலுப்படுத்துவது ஆகியவற்றின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், தொழிலாளி வர்க்கம், விவசாயத் தொழிலாளிகள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆகிய நமது சமூகத்தில் மிக மோசமான வகையில் சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையே ஆகும்.
புரட்சிகர இயக்கமானது முன்னேறுகையில், இதர ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஏகபோகத்திற்கு எதிரான, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான வர்க்கங்களும் அணிதிரண்டு, பெருமுதலாளிகளின் தலைமையிலான தற்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களை தூக்கியெறிவதற்கான ஒரு வர்க்கரீதியான மாற்றினை உருவாக்கும் மையமாக இது அமையும். இது குறித்து கட்சித் திட்டம் மிகத் தெளிவாக இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளது:
“மக்கள் ஜனநாயக முன்னணியின் மையமாகவும் அடித்தளமாகவும் இருப்பது தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கம் ஆகியவற்றின் உறுதியான கூட்டணியே ஆகும். நாட்டின் விடுதலையை பாதுகாப்பதிலும், ஜனநாயகரீதியாக ஆழமான மாற்றங்களை கொண்டுவருவதிலும், அனைத்துவகையிலும் சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதிலும் மிக முக்கியமான சக்தியாக இந்தக் கூட்டணியே இருந்து வந்துள்ளது. புரட்சியை செயல்படுத்துவதில் மற்ற வர்க்கங்களின் பங்கு என்பது தொழிலாளி-விவசாயிகளின் கூட்டணியின் வலிமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றையே பெரிதும் சார்ந்ததாகும்.”
சி.பி.ஐ(எம் கட்சி திட்டம்
இந்தப் பணியை நிறைவேற்றுவது என்பது, இந்திய மக்களிடையே உள்ள சக்திகளின் பலாபலனை மிகப்பெரிய அளவில் நமக்குச் சாதகமாக மாற்றுவதைப் பொறுத்ததே ஆகும். வெகுஜனப் போராட்டங்களை கட்டவிழ்த்து விடவும், வர்க்கப் போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்தவும் மக்களில் விரிவான பிரிவினரை அணிதிரட்டும் வகையில் கட்சியின் சுயேச்சையான சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதையே இது அடிப்படையில் கோருகிறது.
நடைமுறை உத்திகள்
அவ்வப்போது நாம் கையாளும் நடைமுறை உத்திகள் போர்த்தந்திர ரீதியான நமது இலக்கினை நோக்கி முன்னெடுத்துச் செல்வதை இணைப்பதாகவே எப்போதும் இருக்க வேண்டியது அவசியம். கட்சியின் சுயேச்சையான வலிமை மற்றும் அரசியல் ரீதியாக அது தலையிடுவதற்கான திறமை ஆகியவற்றுக்கு உதவுவதாகவும், விரிவுபடுத்துவதாகவும் அவை இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
“தொழிலாளி-விவசாயிகளின் கூட்டணியை தனது மையமாகக் கொண்டு, நாட்டுப்பற்றுமிக்க, ஜனநாயக எண்ணங்கொண்ட சக்திகள் அனைத்தின் புரட்சிகரமான ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் நோக்கங்களை வென்றெடுப்பதற்கான போராட்டமானது மிகவும் சிக்கலானதும், நீடித்த ஒன்றும் ஆகும். பல்வேறுபட்ட நிலைமைகளின், பல்வேறுபட்ட கட்டங்களின் ஊடாக இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டியுள்ளது. புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கின் இத்தகைய பல்வேறுபட்ட கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், அதைப் போன்றே ஒரே வர்க்கத்திற்குள் உள்ள பல்வேறு பிரிவினரும் வெவ்வேறு வகையான நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தனது போர்த்தந்திர இலக்கை வென்றடைவதற்காக வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுக்கின்ற, பொருத்தமான ஐக்கியமுன்னணி உத்திகளை பயன்படுத்துகின்ற வலுவானதொரு கம்யூனிஸ்ட் கட்சியால்தான் இந்த வேறுபட்ட நிலைபாடுகளை பயன்படுத்திக் கொண்டு, இந்தப் பிரிவினரை தனது அணிக்குள் கவர்ந்திழுக்க முடியும். ஊக்கம்மிக்க, தியாக உணர்வு மிக்க புரட்சியாளர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்க முடிகின்ற ஒரு கட்சியால் மட்டுமே புரட்சிகர இயக்கத்தின் போக்கில் உருவாகும் பல்வேறு வகையான திருப்பங்கள், மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் பெருந்திரளான மக்களுக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியும்” (பாரா 7.16) என்று கட்சித் திட்டம் வலியுறுத்துகிறது.
கட்சியின் சுயேச்சையான வலிமை மற்றும் அரசியல் ரீதியாகத் தலையிடும் திறன் ஆகியவையே நமது புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தைத் தீர்மானிப்பதாக அமையும் என்பது மிகத் தெளிவான ஒன்றாகும். ‘நாட்டுப்பற்றுமிக்க, ஜனநாயக எண்ணங்கொண்ட சக்திகள் அனைத்தின் புரட்சிகர ஒற்றுமையை’ வென்றடைய பொருத்தமான நடைமுறை உத்திகளை மேற்கொள்வதற்கான நமது திறனையும் இது பொருத்ததாகும்.
இடது ஜனநாயக சக்திகள்
நமது கட்சி கடந்த பல ஆண்டுகளாகவே இடது ஜனநாயக சக்திகளைக் கொண்ட வலுவானதொரு முன்னணியை வளர்த்தெடுக்க முயற்சித்து வந்துள்ளது. மக்களில் பெரும்பிரிவினர் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அணிகளுக்கிடையே பிளவுண்டு கிடக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இடதுசாரி – ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவதற்கான நமது முயற்சிகள் தொடக்கத்தில் கொஞ்சம் வேகமாகவே இருந்தது. எனினும் 1972ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கட்சியின் 9வது காங்கிரஸ் தனது அரசியல் தீர்மானத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
“பாரம்பரியமான இடதுசாரி – ஜனநாயக எதிர்க்கட்சிகளும் குழுக்களும் ஒருபுறத்தில் கூர்மையாகிவரும் வர்க்கப்போராட்டத்தையும் மறுபுறத்தில் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களின் அரசியல்ரீதியான, தத்துவார்த்த ரீதியான நெருக்கடி அதிகரித்து வருவதையும் கண்டு அச்சமடைந்து, அப்போது உருப்பெற்றிருந்த காங்கிரஸ் எதிர்ப்பு ஜனநாயக முன்னணியிலிருந்து 1969ஆம் ஆண்டிலிருந்து பின்வாங்கத் தொடங்கின. இடதுசாரி – ஜனநாயக கட்சிகள் அனைத்தும் (இதில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி மட்டுமே விதிவிலக்கு- அது சிண்டிகேட் குழுவுடன் இணைந்து கொண்டது) புதிய காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு, அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதற்கு நெருக்கமான கட்சிகளுக்கு எதிராகவும் தீவிரமாகப் போராடத் தொடங்கின.
இவ்வகையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, பங்க்ளா காங்கிரஸ், ஃபார்வார்ட் ப்ளாக், கேரள மாநிலத்தின் ஆர் எஸ் பி மற்றும் இதரவை காங்கிரஸிற்கு எதிரான ஜனநாயக முன்னணிகளை உடைத்து நொறுக்குவதிலும், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அது தலைமை தாங்கி நடத்தி வந்த வீரமிக்க தொழிலாளர் – விவசாயிகள் இயக்கங்களின் மீது தாக்குதல் தொடுப்பதிலும் பல்வேறு அளவுகளிலும் பல்வேறு கட்டங்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு உதவியாக இருந்தன.” (பாரா 103)
இடது ஜனநாயக முன்னணி
இந்திரா காந்தியின் உள்நாட்டு அவசர நிலைக்கு எதிரான இந்திய மக்களின் வீரமிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் இறுதியில் அதை தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்ட பிறகு, 1978ஆம் ஆண்டில் ஜலந்தர் நகரில் நடைபெற்ற கட்சியின் 10வது காங்கிரஸில்தான் கட்சி இடது ஜனநாயக முன்னணி என்ற முழக்கத்தை முதன்முதலாக முன்வைத்தது.
இத்தகைய ஒரு முன்னணியின் நோக்கத்தை 10வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் இவ்வாறு விளக்கியிருந்தது: “சக்திகளின் பலாபலனில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவும், இரண்டு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கிடையேதான் மக்கள் தங்கள் தேர்வை மேற்கொள்ள வேண்டிய, அதன் விளைவாக தற்போதைய சமூக அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளேயே கட்டுண்டு கிடக்க வேண்டிய நிலைக்கு ஒரு முடிவு கட்டுவதற்குமான, நமது முயற்சியின் ஒரு பகுதியே இந்த முன்னணியை வளர்த்தெடுப்பதாகும். மேலும் முன்னேறிச் செல்வதற்காக அனைத்து இடதுசாரி – ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயகத்திற்கான கூட்டணியை உருவாக்குவதில் பங்கேற்கவிருக்கும் இந்த சக்திகளை வலுப்படுத்துவதற்கான ஒரு தொடக்கத்தை கட்சி மேற்கொண்டுள்ளது. இந்த இடது ஜனநாயக முன்னணியை தேர்தலுக்கான அல்லது அமைச்சரவைக்கான ஒரு கூட்டணி மட்டுமே என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மாறாக, அது பொருளாதார ரீதியான, அரசியல்ரீதியிலான பிரச்சனைகளில் உடனடியான முன்னேற்றத்திற்காகவும், பொருளாதாரத்தை தங்கள் பிடியில் வைத்துள்ள பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்தவுமான சக்திகளின் போராட்டக் கூட்டணியே ஆகும்.”
அது மேலும் கூறியது: “முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளின் மேடை மற்றும் செயல்களுக்கு முற்றிலும் மாறான, முற்றிலும் வேறுபட்டதொரு அரசியல் மற்றும் பொருளாதாரத் திட்டத்தை முன்வைப்பதன் மூலமும், அதனை வென்றெடுப்பதற்காக பெருந்திரளான மக்களுக்குத் தலைமை தாங்குவதன் மூலமும் தான் இடதுசாரி ஜனநாயக சக்திகள் அவர்களை முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளிடமிருந்து விடுவிக்கவும், மாற்றுத் தலைமையை நோக்கி அவர்களை அதிகமான அளவில் அணிதிரட்டவும் இயலும்.”
அந்த அரசியல் தீர்மானம் மேலும் கூறியதாவது: “இந்த முன்னணியை வளர்த்தெடுப்பதற்கான முயற்சி என்பதற்கு அந்த முன்னணியில் அடங்கியுள்ள பல்வேறு அமைப்புகளுடன் தத்துவார்த்த ரீதியான சமரசம் என்று பொருளல்ல. அது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என்பதோடு, கட்சியை அந்த முன்னணியோடு இணைத்து விடுவதாகவும் பொருளாகிவிடும். அதன் வழியாக தொழிலாளி வர்க்கத்தை இதர வர்க்கங்களின் தத்துவங்களுக்கு இடம் கொடுக்க அதன் தத்துவத்தில் இருந்து விலக்கி விடுவதாகவும் ஆகிவிடும்.”
இந்தக் கொள்கைகளையும் தத்துவங்களையும் வர்க்கவேர்களோடும், வர்க்க கண்ணோட்டத்தோடும் தொடர்புபடுத்திப் பார்க்காமலும், ஒவ்வொரு முறையும் மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையிலான ஒரு பாதையின் சரியான தன்மையை உறுதிப்படுத்தாமலும், தொழிலாளி வர்க்கத்திற்கு பயிற்சி அளிக்க முடியாது. அதன் விளைவாக இடதுசாரிகள் புரட்சிகரமான போராளிகளாக வளரவோ, மார்க்சிஸ்ட் கட்சி தனது முன்னணிப் பாத்திரத்தை வகிக்கவோ இயலாது.”
இடது ஜனநாயக சக்திகளின் திட்டமாக எவை இருக்கும் என்பது குறித்து அரசியல் தீர்மானம் 20 விரிவான பகுதிகளை அடையாளப்படுத்தியது. எனினும், 1988ஆம் ஆண்டில் நடைபெற்ற நமது கட்சியின் 13வது காங்கிரஸில்தான் இடது ஜனநாயக முன்னணிக்கான ஒரு திட்டத்தை நாம் வடிவமைத்தோம். அதில் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கான உடனடி கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இது மக்கள் ஜனநாயக முன்னணியின் திட்டத்திலிருந்து மாறுபட்டதாகும். எனவே, இடது ஜனநாயக முன்னணி என்பது தேர்தலுக்கான ஒரு முன்னணி அல்ல. அது வலுவான மக்கள் போராட்டங்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் கட்டப்பட வேண்டிய ஒரு முன்னணியாகும். 10வது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானமும் இந்த அம்சத்தை வலியுறுத்திக் கூறியிருந்தது:
“இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை வளர்த்தெடுப்பதில் ஒன்றுபட்ட வெகுஜன நடவடிக்கைகள் உயிரோட்டமானதொரு கருவி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் லட்சக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி, அவர்களிடையே ஒருமைப்பாட்டினை, உணர்வை, தீவிரத் தன்மையை வளர்த்தெடுப்பதாகவும் அமையும். இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்கான போராட்டத்தில், இடது ஜனநாயக கட்சிகளின் அல்லது அவர்களால் தலைமை தாங்கப்படும் வெகுஜன அமைப்புகளின் தலைமையின் கீழ் நடைபெறும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.”
10வது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானம்
இடது ஜனநாயக முன்னணியின் கட்டமைப்பு
இடது ஜனநாயக முன்னணியை நிறுவுவதற்கு மிக முக்கியமான அம்சமாக அமைவது நமது கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் சுயேச்சையான வலிமையே ஆகும்.
அதேபோன்ற முக்கியத்துவமுள்ளது இடதுசாரி கட்சிகள் மற்றும் அவற்றின் வெகுஜன அமைப்புகள் ஆகியவற்றின் ஒற்றுமையாகும். அதைப் போலவே மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு மக்கள் இயக்கங்கள் ஆகியவை ஆகும்.
ஜனநாயக பூர்வமான சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்கின்ற, ஆர் எஸ் எஸ் ஸின் பிற்போக்கு தத்துவத்தை எதிர்க்கின்ற, மதச்சார்பின்மை மிக்க ஜனநாயக பூர்வமான கண்ணோட்டத்தை உயர்த்திப் பிடிக்கின்ற இதர முதலாளித்துவ கட்சிகளும் அவற்றின் வெகுஜன அமைப்புகளும் இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெறும்.
மாநில கட்சிகள்
அந்தந்த மாநிலங்களில் உள்ள முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த மாநிலக் கட்சிகளின் தன்மை பெருமளவிற்கு பெருமுதலாளிகள் மற்றும் நவதாராளவாதம் ஆகியவற்றை பின்பற்றுவதாக மாறி வருவதை 16வது காங்கிரஸ் (கல்கத்தா – 1998) மற்றும் 17வது காங்கிரஸ் (ஹைதராபாத் – 2002) ஆகியவற்றில் கட்சி சுட்டிக் காட்டியிருந்தது. 21வது காங்கிரஸில் (2015) நிறைவேற்றப்பட்ட அரசியல் – நடைமுறை உத்திக்கான நிலைபாடு குறித்த பரிசீலனை அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “உலக மயமாக்கலின் தாக்கத்தினால், நவதாராளவாத கொள்கைகள் செயல்படுத்தப்படும் இக்காலப்பகுதியில் மாநில முதலாளிகளில் சில பிரிவினர் பெருமுதலாளிகளின் அணியில் சேர்ந்து கொண்டுள்ளனர்.”
மேலும், பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பதும் வலுவிழந்து விட்டது. இதன் விளைவாக, மாநில முதலாளித்துவ கட்சிகள் நவ தாராளவாத க் கொள்கைகளை எப்படி ஏற்றுக் கொள்கின்றன என்பதையும் நாம் பார்த்தோம். சமீப ஆண்டுகளில் இந்தக் கட்சிகள் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு கூட்டு மேடையிலும் பங்கேற்பதற்கு தயாராக இருப்பதில்லை என்பதையும் நாம் பார்த்தோம். மேலும் கிராமப்புற பணக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்பவை என்ற வகையில் ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகிய பிரிவினரின் பிரச்சனைகள் குறித்த இந்தக் கட்சிகளின் கண்ணோட்டம் என்பது மாறுபட்டதாகவே உள்ளது.
அவர்களின் வசதிக்கேற்ப பாஜகவுடனோ அல்லது காங்கிரசுடனோ கூட்டு சேருவதன் மூலம் இந்தக் கட்சிகள் தொடர்ச்சியான சந்தர்ப்பவாதத்தையும் வெளிப்படுத்தி வந்துள்ளன. இவ்வாறு இருந்தபோதிலும், தேசிய அளவில் ஒரு மாற்றுக் கொள்கைக்காக அவர்களை அணிதிரட்டும் பாதையையும் நாம் பின்பற்றி வந்துள்ளோம். இது நடைமுறைக்கு உதவாது; தவறானது என்பதும் நிரூபணமாகியுள்ளது.”
இந்தப் பரிசீலனையில் நாம் மேலும் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தோம்: “கட்சியின் 7வது காங்கிரஸிலிருந்தே ஒன்றுபட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். வர்க்க, வெகுஜன அமைப்புகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மற்றும் கட்சி அளவில் கூட்டு இயக்கங்களை வளர்த்தெடுப்பது ஆகியவை முதலாளித்துவ கட்சிகளின் செல்வாக்கின் கீழுள்ள மக்கள் திரளை அணுகுவதற்கு நமக்கு வாய்ப்பளித்துள்ளன. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் குறிப்பிட்ட பிரச்சனைகளின் மீது மாநிலக் கட்சிகளுடன் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயங்கலாகாது. இந்த விஷயம் வலியுறுத்தப்பட வேண்டியதாகும். கட்சியின் சுயேச்சையான பங்கு மற்றும் வலிமை ஆகியவற்றின் வளர்ச்சியோடு இது நேரடித் தொடர்புடையதாகும்.”
எனினும், மதசார்பற்ற முதலாளித்துவ கட்சிகளின் அணுகுமுறையின் காரணமாக, இந்த ஐக்கிய முன்னணி தந்திரத்தை செயல்படுத்துவதென்பது தேர்தல் களத்தோடு நின்றுவிடுகிறது. நமது சீரிய முயற்சிகளுக்குப் பிறகும் கூட, மக்களின் பிரச்சனைகளின் மீது கூட்டுப் போராட்டங்கள் அல்லது ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கு வர மாநில முதலாளித்துவக் கட்சிகள் தயாராக இருப்பதில்லை. தேர்தல் நேரத்தின்போது மட்டுமே, தேர்தல் கூட்டணி வரவிருக்கிறது என்ற நிலையில்தான் ஒரு சில கூட்டு பிரச்சாரங்கள் அல்லது கூட்டங்களுக்கு அவர்கள் வரத் தயாராக இருக்கின்றனர்.”
இடைக்கால முழக்கங்கள்
நமது கட்சித் திட்டம் முன்னுணர்ந்தே இவ்வாறு கூறியிருந்தது:
“வேகமாக மாறிக் கொண்டேயிருக்கும் அரசியல் சூழலின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு இடைக்கால முழக்கங்களை கட்சி உருவாக்க வேண்டியிருக்கும். தற்போதுள்ள ஆளும் வர்க்கங்களை அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் உறுதியான கூட்டணியின் அடிப்படையில் புதியதொரு ஜனநாயக பூர்வமான அரசு மற்றும் அரசாங்கத்தை நிறுவுவது என்ற கடமையை மக்கள் முன்னால் வைக்கும் அதே நேரத்தில், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலான ஒரு திட்டத்தை நிறைவேற்ற உறுதியளிக்கும் அரசுகளை ஆட்சிக்குக் கொண்டுவரவும், இருக்கும் வரையறைகளுக்குள் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தவும், அமலாக்கவும் கட்சி முயற்சிக்கும்.
இத்தகைய அரசாங்கங்களின் உருவாக்கம் உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கங்களை வலுப்படுத்தி, மக்கள் ஜனநாயக முன்னணியை வளர்த்தெடுக்கும் செயல்பாட்டிற்கும் உதவும். எனினும், நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் எந்தவொரு அடிப்படையான வகையிலும் அது தீர்த்து வைக்காது. எனவே, மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ இத்தகைய அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்; அவ்வகையில் வெகுஜன இயக்கத்தையும் வலுப்படுத்தும். அதே நேரத்தில் தற்போதுள்ள பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசை மாற்றுவதன் அவசியத்தை பெருந்திரளான மக்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கூறிவரும்.
கட்சி திட்டம், 7.17
தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே வென்றெடுக்க வேண்டிய மக்கள் ஜனநாயக முன்னணியை நோக்கி மக்களை அணிதிரட்ட, பல்வேறு கட்டங்களிலும் மாறிக் கொண்டே வரும் முழக்கங்களையும் மேடைகளையும் வரையறுக்க வேண்டியுள்ளஹ்டு. இந்தப் புரிதலின் அடிப்படையில், ஸ்தூலமான நிலைமைகளின் அடிப்படையிலும் பல்வேறு தருணங்களிலும் நிலவும் அரசியல் நிலைமைகளின் தேவைகளுக்கு ஏற்பவும் கட்சி இடைக்கால முழக்கங்களை எழுப்பி வருகிறது.
இடது ஜனநாயக முன்னணி என்ற முழக்கத்தை எழுப்பிய அதேநேரத்தில் கட்சியின் 10வது காங்கிரஸ் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கென விரிவானதொரு மேடையை உருவாக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. கட்சியின் 13வது காங்கிரஸ் இடது ஜனநாயக முன்னணியின் திட்டத்தை வகுத்த அதேநேரத்தில் அதிகரித்துக் கொண்டே வரும் வகுப்புவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இடதுசாரி மற்றும் மதசார்பற்ற சக்திகளின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. பின்னர் மூன்றாவது மாற்றுக்கான முழக்கமும் எழுந்தது.
உடனடி கடமைகள் குறித்த கவனம்
எனினும், கட்சியின் 17வது காங்கிரஸ் (2002) மேற்கொண்ட அரசியல் நடைமுறை உத்தி குறித்த வழியின் மீதான பரிசீலனை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “நடைமுறையில் உடனடி கடமை என்பதே முக்கியமான கவனம் பெறுவதாக இருந்தது. இதன் விளைவாக கட்சியின் சுயேச்சையான நடவடிக்கையை வளர்த்தெடுப்பது, இடது ஜனநாயக சக்திகளின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்ற அரசியல் நடைமுறை உத்தியில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான மற்றும் அடிப்படையான கடமைகளிலிருந்தும், நிலைமையின் தற்போதைய தேவைகளிலிருந்து உருப்பெறும் உடனடி அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான கடமைகளிலிருந்து பிரித்துப் பார்ப்பது என்ற நிலைக்குக் கொண்டு சென்றது.
அரசியல் நடைமுறை உத்தியின் அமலாக்கம் குறித்து நமது கட்சியின் 21வது காங்கிரஸ் (2015) விமர்சனரீதியாகப் பரிசீலித்து கீழ்க்கண்ட முடிவிற்கு வந்தது: “கட்சியின் 15வது காங்கிரஸிலிருந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியானது தேர்தல் கால நடைமுறை உத்திகள் மற்றும் நாடாளுமன்ற செயல்முறைகள் ஆகியவற்றை இறுதிப்படுத்த உதவியுள்ளதோடு, தற்போதைய நிலையை எதிர்கொள்ளவும், உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் உதவியுள்ளது. எனினும் இந்த உடனடிக் கடமைகளில் கவனம் செலுத்தியதானது கட்சியின் சுயேச்சையான வலிமையை முன்னேற்றுவதற்கு எவ்வகையிலும் உதவவில்லை. அத்தகைய சுயேச்சையான வலிமையில்லாமல் அரசியல் சக்திகளின் பலாபலனில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. சக்திகளின் பலாபலன் காங்கிரஸ் – பாஜக என்ற இரண்டு முக்கிய ஆளும் வர்க்கக் கட்சிகளைச் சுற்றியே தொடர்ந்து நீடித்து வந்தன.” இந்த பரிசீலனைகள் இடது ஜனநாயக முன்னணியை வளர்த்தெடுப்பது என்பதற்கு முக்கியத்துவம் தருவதை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரின.
எனினும், இந்தப் பரிசீலனை சுட்டிக் காட்டியது: “ தேர்தல்கள் வரும்போது, மத்தியக் குழு வரையறுத்துள்ள அரசியல் – நடைமுறை உத்தி என்ற கட்டமைப்பிற்குள் நின்று, மாநில கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளவும், எங்கெல்லாம் முடியுமோ கட்சியின் நலனை முன்னிட்டும், இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கான நலன்களை கருதியும் மாநிலங்களில் பொருத்தமான தேர்தல் நடைமுறை உத்திகளை கட்சி மேற்கொள்ள முடியும்.”
இடது ஜனநாயக முன்னணியை வளர்த்தெடுப்பதில் நமது முக்கிய கவனம் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பரிசீலனை சுட்டிக் காட்டிய அதே நேரத்தில் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் இலகுவான நடைமுறை உத்தி உருவாக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியது. அது கூறியது: “அரசியல் சூழலில் மிக வேகமான மாற்றங்கள் இருக்கக் கூடும். முதலாளித்துவக் கட்சிகளிடையேயும், அவற்றுக்கு உள்ளாகவும் புதிய முரண்பாடுகள் எழக் கூடும். பிளவுகள் மூலமாகவோ அல்லது ஒன்றாகச் சேர்ந்து புதியதொரு கட்சியை உருவாக்குவதன் மூலமாகவோ அரசியல் கட்சிகள் மாற்றங்களை எதிர்கொள்ள நேரலாம். இத்தகைய சூழலில் இலகுவான நடைமுறை உத்திகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கான நமது முயற்சியில் பல்வேறு சமூக இயக்கங்கள், மக்கள் அணிதிரட்டல்கள் மற்றும் பிரச்சனைகளின் அடிப்படையிலான இயக்கங்கள் ஆகியவற்றோடு கூட்டு மேடைகள் உருவாக்கப்பட வேண்டியிருக்கும்.”
கட்சியின் சுயேச்சையான வலிமை
மக்களிடையே நமக்குச் சாதகமான வகையில் சக்திகளின் பலாபலனை மாற்றியமைப்பதில் நமது வெற்றி என்பது நமது சுயேச்சையான வலிமை மற்றும் மக்களுடனான தொடர்புகள் ஆகியவற்றைப் பொறுத்ததே ஆகும்.
17வது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானம் சுட்டிக் காட்டியிருந்தது: “மார்க்சிஸ்ட் கட்சி முன்னேறாமல், தனது அகில இந்திய அளவிலான வலிமையை அதிகரித்துக் கொள்ளாமல், இடது ஜனநாயக முன்னணியை வளர்த்தெடுப்பதை நோக்கிச் செல்வது இயலாத ஒன்றாகும்.”
எனினும், 18வது காங்கிரஸின் அரசியல் -ஸ்தாபன அறிக்கையில் நாம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தோம்: இக்காலப்பகுதியில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை, வெகுஜன முன்னணியின் உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவற்றின் வளர்ச்சியானது கட்சியின், வெகுஜன அமைப்புகளின் அணிதிரட்டும் வலிமையை, கட்சியின் தேர்தல் ரீதியான வலிமையை எடுத்துக் காட்டுவதாக அமையவில்லை. ஒட்டுமொத்த நிலைமை என்னவெனில், கட்சி வலுவான மாநிலங்களில் தனது வலிமையை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பலவீனமான மாநிலங்களிலும் பகுதிகளிலும் அதன் வலிமை மெதுவாக சரிந்து கொண்டே போகிறது என்பதே ஆகும்.”
இதைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமானது. 23வது காங்கிரஸின் (2022) அரசியல் தீர்மானம் குறிப்பிட்டது:
“மேற்கு வங்கத்தில் நமது வெகுஜன செல்வாக்கு மிக மோசமான வகையில் அரித்துப் போயுள்ளது. திரிபுராவிலும் கூட இத்தகைய அரிப்பு நடைபெற்று வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரையில் பெற்றதிலேயே மிகக் குறைவான வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம். 16வது கட்சி காங்கிரசில் இருந்தே கட்சியின் சுயேச்சையான வலிமையையும் செல்வாக்கையும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து நம் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம்.” (2.164)
இந்தச் சரிவை தடுத்து நிறுத்தி நிலைமையை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும். இதைச் செய்யாமல் நமது புரட்சிகர கடமைகளில் வெற்றியடைய நம்மால் முன்னேற இயலாது. கீழ்க்கண்ட விஷயங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியமாகும்:
- அரசியல் ரீதியான, தத்துவார்த்த ரீதியான, ஸ்தாபன ரீதியான வேலைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். மக்களுடன் உயிரோட்டமான தொடர்புகளை உருவாக்கவும், நீடித்த வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை உருவாக்கவும், அவற்றை ஒருங்கிணைத்து நமது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தவும், அனைத்து முனை ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் எழுத்தறிவு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தல்; நூலகங்களை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக உள்ளூர் பகுதிகளில் போராட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய போராட்டங்கள் வெறும் அடையாளபூர்வமாக இருக்கக்கூடாது. உறுதியான பயன்களை பெறும் வரை இவற்றை நீடித்து நடத்த வேண்டும்.
- தீவிரமான வெகுஜன நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதில் கொரோனா பெருந்தொற்றும் அதனோடு தொடர்ந்த பொதுமுடக்கம் மற்றும் ஒழுங்கு முறைகள் ஆகியவை இயற்கையாக தடைகளை ஏற்படுத்தின. முறையான திட்டமிடலின் மூலமும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான வாழ்நிலை பிரச்சனைகளின் மீது போராட்டங்களை நடத்துவதன் மூலம் இந்த தொய்வை வென்றெடுக்க வேண்டியது அவசியமாகும்.
- சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் இந்துத்துவா சக்திகளின் சவாலை கட்சி தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். பிளவுபடுத்தும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையும், மதச்சார்பற்ற விழுமியங்களின் அழிவையும் எதிர்க்க வேண்டும்; சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் போராட வேண்டும்; அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற உணர்வை வலுப்படுத்தும் இந்திய தேசியவாதத்தை கையிலெடுத்து இந்துத்துவா தேசியவாதத்தினை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.
- சமூக ரீதியான ஒதுக்கல், சாதிய ஒடுக்குமுறை, பாலின அடிப்படையிலான ஒதுக்கல் ஆகிய பிரச்சனைகளின் மீது கட்சி போராட்டங்களை நடத்த வேண்டும். சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க முனையும் அடையாள அரசியலுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
- ஸ்தாபனம் குறித்த கல்கத்தா பிளீனத்தின் முடிவுகள் சரியான முனைப்போடு உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். கட்சி அமைப்புகள் ப்ளீன வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். (2.167)
இடது ஜனநாயக முன்னணியின் முக்கியத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டுக
இடது ஜனநாயக முன்னணியை வளர்த்தெடுப்பதற்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென குறிப்பிட்டு 23வது கட்சி காங்கிரஸின் அரசியல் தீர்மானம் இவ்வாறு முடிவெடுத்திருந்தது:
2.159 இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இதன் முக்கியத்துவத்தை 21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தீர்மானம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
“இத்திசைவழியில் எடுத்து வைக்கவேண்டிய அடிவைப்பு என்பது பொதுவானதொரு கோரிக்கை சாசனத்துடன் பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கிய பொதுவான மேடை ஒன்றை உருவாக்குவதே ஆகும். தொழிலாளர்கள்- விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்களுக்கு சிறப்பான அழுத்தம் தரப்பட வேண்டும்.”
(21வது காங்கிரசின் அரசியல் தீர்மானம் பாரா 2.87)
“தற்போது, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணிக்குள் இழுக்கப்படக்கூடிய சக்திகளின் மையக்கருவாக இருப்பது இடதுசாரி கட்சிகளும் அவற்றின் வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள், இடது குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள்; மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்குள் பல்வேறு கட்சிகளிலும் ஜனநாயகப் பிரிவுகளிலும் சிதறி கிடக்கும் சோசலிஸ்டுகள்; ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளை எடுத்துச் செல்லும் சமூக இயக்கங்கள். முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான மற்றும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடைக்குக் கவர்ந்திழுப்பதன் மூலம் மட்டுமே இடது ஜனநாயக முன்னணியை நோக்கிய இயக்கம் ஒரு உறுதியான வடிவத்தை எடுக்க முடியும்”.
(22வது காங்கிரஸின் அரசியல் தீர்மானம் பாரா 2.110)
2.160 இந்தப் புரிதலை முன்னெடுத்துச் சென்று, இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் கூட்டுத் தளத்தை – ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன் (JEJAA) – உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பல்வேறு காரணங்களால் திட்டமிடப்பட்ட முறையில் இது செயல்பட முடியவில்லை. சிறப்பான முறையில் செயல்படும் கூட்டு மேடைகளை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
2.161 வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டுப் போராட்டங்கள் உருவாக்கப் பட்டன. தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் வலுவான ஒற்றுமையுடன் நடந்த கூட்டுப் போராட்டங்கள் சிறப்பான முன்னுதாரணமாகும். விவசாய அமைப்புகளின் பரந்த ஒற்றுமை என்பது ஆழமடைந்து வரும் விவசாய துயரத்திலிருந்து வெளிப்படும் பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில் உருவானது ஆகும்.அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) நாடுதழுவிய ஒரு பிரச்சாரத்தை தொடங்கியதோடு, 500 விவசாய அமைப்புகளைக் கொண்டு ஒரு தேசிய மாநாட்டையும் நடத்தியது. இந்த மாநாட்டில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) உருவானது.
2.162 வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விவசாயிகள் போராட்டத்துடன் பல்வேறு வெகுஜன அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் அறிவுஜீவிகள் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வு உறுதி படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய சக்திகளை அடையாளம் காண்பது கணிசமான அளவில் செய்யப்படவில்லை. இது தொடரப்பட வேண்டும் என்பதோடு உடனடியாகச் செய்யப்படவும் வேண்டும். இந்த அடிப்படையில், முதலாளித்துவ- நிலப் பிரபுத்துவக் கொள்கைகளுக்கு ஒரே உண்மையான மாற்றாக இடது ஜனநாயக வேலைத் திட்டமே உள்ளது என்பதை முன்னிறுத்தும் வகையில் போராட்டங்களில் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும்.
23வது கட்சிக்காங்கிரஸின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தங்களது மாநிலங்களில் மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம்பெறத்தக்க சக்திகளை இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணுமாறு அனைத்து மாநிலக் குழுக்களையும் மத்தியக் குழு கேட்டுக் கொண்டுள்ளஹ்டு. இதன் அடிப்படையில் இந்த இலக்கை அடைய உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
தற்போதைய நடைமுறை உத்திக்கான பாதை
பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிப்பது: கட்சியின் முன்னால் உள்ள முக்கிய கடமை என்பது பாஜகவை தனிமைப்படுத்துவது; தோற்கடிப்பது என்பதில் 23வது கட்சிக் காங்கிரஸ் உறுதியோடிருந்தது. மக்களிடையே அரசியல் ரீதியான, தத்துவார்த்த ரீதியான பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் பாஜகவை தனிமப்படுத்த வேண்டும். தேர்தல் ரீதியாக அதை தோற்கடிக்க வேண்டும். எனவே இந்த இரண்டு இலக்குகளையும் வென்றடைய சரியான நடைமுறை உத்தியை கட்சிக் காங்கிரஸ் வரையறுத்துத் தந்தது.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, நடைமுறை உத்தி என்பது போர்த்தந்திர (நீண்ட கால நோக்கங்களை) உத்தியை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். எனவே, பொருத்தமான நடைமுறை உத்திகளை வரையறுக்கும் நோக்கத்துடன் நமது போர்த்தந்திர உத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசு அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வரும் வகுப்புவாத சக்திகள் தடையாக இருக்கும் அபாயம் குறித்து கட்சித் திட்டம் மேற்கொண்ட வரையறுப்புகளை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கட்சித் திட்டம் இவ்வாறு கூறியிருந்தது:
வகுப்புவாத, பாசிச தன்மை கொண்ட ஆர் எஸ் எஸ் தலைமையிலான கூட்டணியின் எழுச்சியும், மத்தியில் அது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதும் மதச்சார்பின்மையின் அடித்தளங்களுக்கு எதிரான அச்சுறுத்தலை மேலும் மோசமானதாக ஆக்கியுள்ளது. அரசு நிறுவனங்களை, நிர்வாகத்தை, கல்விப் புலத்தை, ஊடகத்தை வகுப்புவாத மயமாக்க திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பான்மை வகுப்புவாதத்தின் வளர்ச்சி என்பது சிறுபான்மை வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்துவதோடு, நாட்டின் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பெருமுதலாளிகளில் சில பிரிவினரின் பாஜக மற்றும் அதன் வகுப்புவாத மேடைக்கான ஆதரவு என்பது நாட்டில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். (பாரா 5.7)
நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில் மதத்தின் அனைத்து வகையான குறுக்கீடுகளுக்கு எதிராகவும் கட்சி போராடுவதோடு, பண்பாடு, கல்வி, சமூகம் ஆகிய துறைகளில் மதச்சார்பற்ற, ஜனநாயகபூர்வமான மதிப்பீடுகளை முன்னெடுக்கவும் வேண்டும். மதரீதியான வகுப்புவாதத்தின் அடிப்படையிலான பாசிஸ போக்குகளின் அபாயம் அதிகரித்துக் கொண்டே வருவதை அனைத்து மட்டங்களிலும் உறுதியோடு எதிர்த்துப் போராட வேண்டும். (பாரா 5.8)
பொருளாதாரத் துறையிலும் சமூகத் துறையிலும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என்பதோடு, அவர்களுக்கு எதிரான பாகுபாடும் நிலவி வருகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாத கலவரங்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் ஆகியவை நிரந்தர அம்சமாக மாறிவிட்டன. சிறுபான்மையினருக்கு எதிராக ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் அனைத்தும் தொடர்ச்சியாக வெறுப்புணர்வை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றன. மேலும் அவை கிறித்துவ சிறுபான்மையினரையும் குறிபார்க்கின்றனர். (பாரா 5.9)
பாரதிய ஜனதா கட்சி பிளவுவாத, வகுப்புவாத மேடையில் இருந்து செயல்படும் ஒரு பிற்போக்குத்தனமான கட்சியாகும். அதன் பிற்போக்குத்தனமான உள்ளடக்கம் என்பது இதர மதங்களுக்கு எதிரான வெறுப்பு, சகிப்பின்மை, தீவிர தேசியவாத வெறித்தனம் ஆகியவற்றின் அடிப்படையிலானது. பாஜக என்பது ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சியல்ல; பாசிஸத்தன்மை கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் அதற்கு வழிகாட்டுவதோடு, அதன் மீது மேலாதிக்கமும் செலுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் இருக்கும்போது அரசு அதிகாரம் மற்றும் அரசு இயந்திரம் ஆகியவற்றை எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்குக் கிடைக்கிறது.
இந்துத்துவ தத்துவமானது மீட்சிவாதத்தை முன்வைக்கிறது; மேலும் இந்து ராஷ்ட்ராவை நிறுவுவது என்ற குறிக்கோளுடன் அது இந்தியாவின் ஒன்றிணைந்த கலாச்சாரத்தை மறுதலிக்கிறது. இத்தகையதொரு வகுப்புவாத கண்ணோட்டத்தின் பரவலானது சிறுபான்மை அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. இத்தகைய நிலையானது சமூகத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இடதுசாரி ஜனநாயக இயக்கத்திற்கும் மிக மோசமானதொரு அச்சுறுத்தலாகவும் விளங்குகிறது. மேலும் பெருவணிகர்கள் மற்றும் நிலப்பிரபுக்களில் கணிசமான பிரிவினர் மற்றும் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியம் ஆகியோர் பாஜகவிற்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றனர். (7.14)
23 வது கட்சிக் காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானத்தில் நாம் கீழ்க்கண்ட முடிவுக்கு வந்தோம்:
22வது காங்கிரசிற்குப் பிந்தைய காலப்பகுதியில் பாஜக தன்னை மேலும் நிலைநிறுத்துக் கொண்டதையும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் பாசிஸ ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவ வகுப்புவாத நிகழ்ச்சிநிரலை மிகத் தீவிரமாக பின்பற்றி வருவதையும் காண முடிந்தது. நவதாராளவாத சீர்திருத்தங்களை வெறித்தனமாகப் பின்பற்றுவதன் மூலம் வகுப்புவாத- கார்ப்பரேட் கூட்டணியை வலுப்படுத்துவது; நாட்டின் சொத்துக்களை சூறையாடுவது; தனக்கு நெருக்கமான முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்துவது; அரசியல் ரீதியான ஊழலை சட்டபூர்வமான ஒன்றாக மாற்றியமைப்பது; எதேச்சாதிகாரத்தை முழுமையான வகையில் திணிப்பது என பல்வேறு வகையான தாக்குதல்களை அது மக்களின் மீது தொடுத்து வருகிறது. (பாரா 0.1)
2019 மக்களவை தேர்தலுக்குப் பிறகு மேலும் அதிகமான இடங்களை வென்று, அதிக வாக்குவிகிதத்துடன் பாஜக வகுப்புவாத, தேசியவாத வெறித்தனத்தை ஊட்டி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் வகுப்புவாதத் திரட்டலைத் தீவிரப்படுத்தியும், நமது மதச்சார்ப்பற்ற ஜனநாயக அரசியலைப்புச் சட்டத்தைப் புறந்தள்ளியும், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-க்களை நீக்கி ஜம்மு-காஷ்மீர் அரசைக் கலைத்தது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றியது. அயோத்தியாவில் (ராமர்) கோயில் கட்டுமானத்தைத் தொடங்கியது.கொடூரமான தடுப்புக் காவல் சட்டங்களை முற்றிலும் தவறான வகையில் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மீது இரக்கமேதுமின்றித் தாக்குதல் தொடுத்தது.அரசமைப்புச் சட்ட ரீதியான இந்திய குடியரசின் தன்மையையே மாற்றியமைக்கத் தொடர்ச்சியான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. (பாரா 0.2)
இந்தக் காலப்பகுதியில் உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரிடமிருந்து மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையும் காண முடிந்தது. தொழிலாளர்களுக்கான புதிய விதிமுறைகள், தனியார் மயமாக்கல் முயற்சிகள் ஆகியவற்றுக்கு துறைவாரியாகவும் பொதுவாகவும் தொழிலாளி வர்க்கம் வேலை நிறுத்தங்களின் மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. அரசமைப்புச் சட்டம், குடியுரிமை ஆகியவற்றைச் சீர்குலைப்பதற்கு எதிரான பெருந்திரளான மக்களின் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கம் வலுப்பெற்றது. விவசாயிகளின் மிகப்பெரிய, நீண்ட காலத்திற்கு நீடித்த போராட்டமானது மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு வெற்றியில் நிறைவடைந்தது. (பாரா 0.3)
கடந்த நான்காண்டு காலத்தில் பாஜக அரசு அமெரிக்காவின் யுத்த தந்திர ரீதியான, அரசியல் ரீதியான, பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் அனைத்திற்கும் சரணடைந்து, ரஷ்ய-உக்ரைன் போரில் அதன் நிலைபாடு வேறுபட்டதாக இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்ப்படிதலுள்ள, உறுதியான கூட்டாளியாக உருவெடுத் துள்ளது. இது நமது அண்டை நாடுகளுடனான உறவுகளிலும், சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இன்றைய நிலைமைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான உலகளாவிய நிகழ்வுகளின் பின்னணியிலேயே இத்தகையதொரு சூழல் உருவாகியுள்ளது. (பாரா 0.4)
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, மக்கள் ஜனநாயக முன்னணியின் உருவாக்கம் மற்றும் அதை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு அத்தியாவசியமாக அமைவது நமது சமூகத்தில் மிக அதிகமான அளவில் சுரண்டப்படும் வர்க்கங்களான தொழிலாளி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கல் மற்றும் ஏழை விவசாயிகள் ஆகிய வர்க்கங்களின் (வர்க்கத்திற்கு உள்ளான, அதே நேரத்தில் இவற்றுக்கு இடையிலான) ஒற்றுமையே ஆகும். இவையே இந்த முன்னணியின் மையமாகும். புரட்சிகர இயக்கம் முன்னேறிச் செல்லும்போது, இதர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட, ஏகபோக மூலதன எதிர்ப்புணர்வு கொண்ட, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புணர்வு கொண்ட வர்க்கங்கள் பெருமுதலாளித்துவத்தின் தலைமையிலான தற்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களுக்கு வர்க்க மாற்றாக அணிதிரண்டுவரும்.
இத்தகைய ஒற்றுமையைத்தான் சுரண்டப்படும் வர்க்கங்களிடையே நாம் வலுப்படுத்த விரும்புகின்றோம். இந்த ஒற்றுமையைத்தான் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் வகுப்புவாத விஷம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றைப் பரப்புவதன் மூலம் சீர்குலைக்கின்றன. எனவே, தற்போதைய நிலையில் நமது நடைமுறை உத்தியின் முக்கியமான அம்சம் என்பது இந்துத்துவ வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவது; அதைத் தனிமைப்படுத்துவது; தோற்கடிப்பது என்பதே ஆகும்.
இந்தப் பின்னணியில், ‘அனைவரையும் உள்ளடக்கிய இந்துத்துவ அடையாளம்’ ஒன்றை நிறுவுவதன் மூலம் தங்களது செல்வாக்கை இந்துத்துவ சக்திகள் எவ்வாறு விரிவுபடுத்துகின்றன என்பதிலும், அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதிலும் குறிப்பான கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிகப்பெரும் வெகுஜனப் போராட்டங்கள் – இதில் விவசாயிகளின் போராட்டம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது – நடைபெற்று வந்துள்ள போதிலும், பாஜக தொடர்ந்து தேர்தல்களில் ஆதரவை பெற முடிந்துள்ளது என்பதை நாம் உணரும்போதுதான் இது முக்கியமானதாக இருக்கும். வெறுப்பு மற்றும் தீவிரவாதம் குறித்த கூடுதலான பிரச்சாரம் ஆகியவை, தாங்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டங்கள் மற்றும் அவர்களது அன்றாட அனுபவங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்துத்துவாவின் தேர்தல் ரீதியான வெற்றிக்கு சாதகமாக நடந்து கொள்ள மக்களை உந்தித் தள்ளுகிறது.
கட்சியை வலுப்படுத்துவது என்பதே இந்துத்துவ சக்திகளை தனிமைப்படுத்துவதற்கான அடிப்படை முன்நிபந்தனையாக உள்ளது. இந்துத்துவாவையும் அதன் பல்வேறு வகையான வகுப்புவாத அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதென்பதை அரசியல், தத்துவம், கலாச்சாரம் மற்றும் சமூகத் தளங்களில் நீடித்த வகையில் மேற்கொள்ள வேண்டும். இந்துத்துவ வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். (2.168)
கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் கீழ்க்கண்ட வகையில் இந்த நீடித்த போராட்டத்தை நடத்த வேண்டும்:
- இதற்கென உருவாக்கப்பட்ட குழுக்களால் தத்துவார்த்த ரீதியான, அரசியல் ரீதியான பிரசுரங்களை தொடர்ச்சியாக தயாரிப்பது. இந்துத்துவா மற்றும் வகுப்புவாத சக்திகளின் பிற்போக்குத்தனமான உள்ளடகத்தை அம்பலப்படுத்தும் வகையில் பெருந் திரளான மக்களை சென்றடையும் வகையில் எளிய நடையில் இவை உருவாக்கப்பட வேண்டும்.
- மற்றும் பயங்கரவாதம் மற்றும் குறிப்பாக மத சிறுபான்மையினர் மீது பாசிச தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் இந்துத்துவா குழுக்களின் தாக்குதலை தீவிரமாக எதிர்கொள்வது. உள்ளூர் அளவிலும் மற்றும் நாடு தழுவிய அளவிலும் பொது இடங்களை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகளை எதிர்க்க மிகுந்த விழிப்புணர்வை பராமரிக்க வேண்டும்.
- கொண்டே வரும் பழமைவாதம், மூட நம்பிக்கை, பகுத்தறிவற்ற தன்மை, கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்துப்போராடும் வகையில் மதசார்பற்ற, அறிவியல்பூர்வமான, பகுத்தறிவின் அடிப்படையிலான சிந்தனைப் போக்கினை வளர்த்தெடுக்க சமூக, கலாச்சார நடவடிக்கைகள், வெகுஜன அறிவியல் இயக்கங்கள் ஆகியவற்றுக்கான அமைப்புகளை வளர்த்தெடுப்பது. இந்துத்துவா கும்பல்களால் பரப்பப்பட்டு வரும் பகுத்தறிவற்ற தன்மை மற்றும் தர்க்க மறுப்பு சிந்தனை ஆகியவற்றை எதிர்த்துப் போராட இது அவசியமாகும்.
- ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சினைகளை முன்னிறுத்துதல். இந்துத்துவா பெண்களுக்கு சம உரிமைகளை மறுக்கிறது; மேலும் பாலின ரீதியான அடிமைத்தனத்தை நியாயப்படுத்துவதன் மூலம் கொடூரமான தாக்குதல்களை நடத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குகிறது.
- மற்றும் ஆதிவாசிகள் மத்தியில் கேடுகெட்ட இந்துத்துவா சாதிய மற்றும் பழமைவாத விழுமியங்களை பரப்புவதை எதிர்த்து போராடுதல். இந்திய சமூகத்தின் பன்மை கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
- சேவை நடவடிக்கைகளை ஊக்குவித்தல். கோவிட் தொற்று காலத்தில் செய்யப்பட்ட பணிகள் சுகாதார மையங்கள் மூலம் தொடர வேண்டும். நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள், கல்வி பயிற்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்றவற்றை அமைப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- துறையில் ஆர்எஸ்எஸ்-ஸூம் இதர இந்துத்துவ வகுப்புவாத சக்திகளும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கல்வியில் மதச்சார்பற்ற, ஜனநாயகபூர்வமான, ஒன்றிணைப்பு நிரம்பிய அறிவியல்பூர்வமான உணர்வை வளர்த்தெடுக்கின்ற உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பும் வகையில் கல்வித் தளத்தில் தலையீடுகளை மேற்கொள்ள நாம் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். (2.169)
இத்தகைய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாது போனால், சமூக, இன ரீதியான வேறுபாடுகளை எல்லாம் பெருமளவிற்குக் கடந்த பாரதூரமான ‘இந்துத்துவ அடையாளத்தை’ மேலும் வலுப்படுத்துவதில் ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் வகுப்புவாத அமைப்புகள் வெற்றி பெற்றுவிடும். இதில் மிகவும் முக்கியமானது பகுத்தறிவற்ற தன்மையை பகுத்தறிவைக் கொண்டும், உண்மையற்ற தன்மையை உண்மையைக் கொண்டும் போராட வேண்டியதாகும். (2.170)
அரசியல் நிலைபாடு
தற்போதைய நடைமுறை உத்தி குறித்த நிலைபாட்டை கட்சியின் 23வது காங்கிரஸ் கீழ்கண்டவாறு வகுத்திருந்தது:
- எட்டாண்டு கால பாஜக அரசில் வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணி எதேச்சாதிகார தாக்குதல்களை தொடுப்பது மேலும் வலுப்பட்டு வருவதைக் கண்டது. 2019ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு பாசிச ஆர்எஸ்எஸ்-ஸின் இந்து ராஷ்ட்ர நிகழ்ச்சி நிரலை மிகத் தீவிரமாக அது முன்னெடுத்து வருகிறது. இதனோடு கூடவே நவதாராளவாத கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் எதேச்சாதிகார நிர்வாகம் ஆகியவற்றையும் அது பின்பற்றி வருகிறது. ஆர்எஸ்எஸ் முன்னெடுத்து வரும் இந்து ராஷ்ட்ரா நிகழ்ச்சி நிரலானது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பினை அரித்துப் போகச் செய்வதோடு, இந்திய குடியரசின் மதசார்பற்ற, ஜனநாயகபூர்வமான குணாம்சத்தையும் சீர்குலைக்கிறது.
- நமது முக்கிய கடமை என்பது பாஜகவை தனிமைப்படுத்தி, தோற்கடிப்பதே ஆகும். இதற்கு வர்க்க மற்றும் வெகுஜன போராட்டங்களை வலுவாகவும் தீவிரமாகவும் நடத்தும் வகையில் மக்களை அணிதிரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளின் சுயேச்சையான வலிமையின் வளர்ச்சி தேவைப்படுகிறது.
- வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் வகுப்புவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க கட்சியையும் இடதுசாரி சக்திகளையும் வலுப்படுத்துவது அவசியமாகும். இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டுவதற்கும் கட்சி பாடுபட வேண்டும்.
- கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றுவது; நமது நாட்டின் சொத்துக்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிப்பது; பொதுத்துறையையும், பொது பயன்பாட்டிற்கு உரியனவற்றையும், கனிம வள ஆதாரங்களையும் பெருமளவிற்கு தனியார் மயமாக்கு வது ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் விரிவான பகுதியினரை அணிதிரட்டுவதில் கட்சி முன்னணியில் இருக்க வேண்டியது அவசியமாகும். சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைப் போன்று, வர்க்க, வெகுஜன போராட்டங்களை, விரிவான அளவில் மக்களை அணிதிரட்டி மேலும் தீவிரப்படுத்துவதன் மூலமும் கார்ப்பரேட்-வகுப்புவாத கூட்டணி ஆட்சிக்கு எதிராக மதசார்பற்ற எதிர்க்கட்சி சக்திகளை அணிதிரட்டுவதன் மூலமுமே இதை நிறைவேற்ற முடியும்.
- கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் வெற்றிக்கு இந்துத்துவ வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
- விவகாரங்களில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் நாடாளுமன்றத்திற்குள் கட்சி ஒத்துழைக்கும். பாராளுமன்றத்திற்கு வெளியே வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டவும் கட்சி பாடுபடும். கட்சியும் இடதுசாரிகளும் இதர ஜனநாயக சக்திகளுடன் சுயேச்சையாகவும், ஒன்றுபட்டும், பிரச்சினையின் அடிப்படையிலும், நவ தாராளமயத்தின் தாக்குதல்கள், ஜன நாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரத் தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள், கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்ப்பை அடக்குதல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.
- மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கான கூட்டுத் மேடைகளை கட்சி ஆதரிக்கும். தொழிலாளி-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி ஆதரிக்கும்.
- ஒற்றுமையை வலுப்படுத்தவுமான முயற்சிகளோடு கூடவே கட்சியின் சுயேச்சையான வலிமையை வளர்த்தெடுக்கவும் முன்னுரிமை வழங்கப்படும். இடதுசாரிகளின் ஒன்றுபட்ட பிரச்சாரங்கள், இயக்கங்கள் ஆகியவை முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும்.
- அமைப்புகள், சமூக இயக்கங்கள் உள்ளிட்டு அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட நீடித்த வகையில் கட்சி செயல்பட வேண்டும். ஒரு மாற்று கொள்கையாக இடது ஜனநாயக திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலான கூட்டுப் போராட்டங்களையும் இயக்கங்களையும் இடது ஜனநாயக மேடை நடத்த வேண்டும்.
- நடைபெறும் போது, மேற்குறித்த அரசியல் நிலைபாட்டின் அடிப்படையில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை அதிகபட்சமாக ஒன்றுதிரட்டும் வகையிலான பொருத்தமான தேர்தல் உத்திகள் மேற்கொள்ளப்படும். (2.171)
கடமைகள்
இந்த நடைமுறை உத்தி குறித்த புரிதலை அமலாக்க கீழ்கண்ட கடமைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வர்க்க, வெகுஜன போராட்டங்களின் மூலம் தனது சுயேச்சையான பங்கினை வலுப்படுத்தவும், செல்வாக்கை விரிவுபடுத்தவும், அரசியல் ரீதியான தலையிடும் திறன்களை விரிவுபடுத்தவும் கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளின் மீது தொடர்ச்சியான கவனத்துடன் உள்ளூர் அளவிலான போராட்டங்களை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
- பிரச்சனைகளின் மீதான போராட்டங்களில் நவதாராளமயக் கொள்கைகளால் தீவிரமான பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகியுள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும். இவ்வாறு உருவாகின்ற அனைத்து தன்னெழுச்சியான போராட்டங்களிலும் அவற்றை வலுப்படுத்தவும், தீவிரமாகத் தலையீடு செய்யவும் கட்சி அவற்றில் இணைய வேண்டும்.
- வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கட்சி முன்னிலையில் இருக்க வேண்டியது அவசியம். பல்வேறு மட்டங்களிலும் இந்தப் போராட்டமானது நீடித்த வகையில் நடத்தப்பட வேண்டும். இந்துத்துவா சக்திகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட குடிமக்கள், அமைப்புகள், சமூக இயக்கங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் பரந்து விரிந்த ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
- நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் கட்சி முன்கையெடுக்க வேண்டியது அவசியமாகும். மேலும் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், குடியுரிமைகள், படைப்பு சுதந்திரம், தன்னாட்சி மிக்க கல்விப் புலம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், அரசியல் அமைப்புச் சட்ட அமைப்பின் ஜனநாயகபூர்வமான, மதசார்பற்ற உள்ளடக்கத்தை சீர்குலைக்கின்ற இந்துத்துவா வகுப்புவாதத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கூட்டுப் போராட்டங்களை உருவாக்க கட்சி முன்கையெடுத்து அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்பினையும் கோர வேண்டும்.
- நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்கவும், பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடிகள் ஆகியோரின் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சனைகளை கையிலெடுக்கவும் கட்சி தனது முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
- வகுப்புவாதத்தின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு எதிராக சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
- மூட நம்பிக்கை, பகுத்தறிவற்ற தன்மை, கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு எதிராக தத்துவார்த்த, சமூக ரீதியான போராட்டங்களை கட்சி வலுப்படுத்த வேண்டும். அறிவியல்பூர்வமான கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கான பிரச்சாரங்களில் கட்சி முன்னணியில் இருக்க வேண்டும். பகுத்தறிவு, உண்மை நிலை ஆகியவற்றுக்கு ஆதரவான பொது உரையாடல்களை வலுப்படுத்தி, பகுத்தறிவற்ற தன்மை, உண்மையற்ற நிலை ஆகியவற்றுக்கு எதிராக அவற்றை முன்னெடுக்க வேண்டும். அறிவியல்பூர்வமான உணர்வுக்கு ஆதரவாகவும், மீட்சிவாதத்திற்கு எதிராகவும் விரிந்து பரந்த அணிதிரட்டலை உருவாக்க வேண்டும்.
- தேசிய, பொருளாதார இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்திய மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை கட்சி தட்டியெழுப்ப வேண்டும். முதலாளித்துவத்திற்கு உண்மையான மாற்று சோஷலிசமே என்பதை வலியுறுத்தும் வகையில் பிரச்சாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
- அரசு அமெரிக்க ஏகாபத்தியத்திடம் சரணாகதி அடைந்துள்ளதற்கு எதிரான வெகுஜன கருத்தை கட்சி அணிதிரட்ட வேண்டும். இந்தியாவின் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்வதோடு, அதன் மக்கள் சார்பு மாற்றுக் கொள்கைகளை பரவலாக முன்னிறுத்த வேண்டும். அதேபோன்று கட்சிக்கு எதிராக, குறிப்பாக மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் நடைபெற்று வரும் பாசிஸத்தன்மை வாய்ந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களை கட்சி வலுப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். (2.172)
இந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனில், நாடு முழுவதிலும் வலுவானதொரு கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பது அவசியமாகும். ஸ்தாபனம் குறித்து கல்கத்தா ப்ளீனம் மேற்கொண்ட முடிவுகளை உண்மையாக அமலாக்குவதன் மூலம் மட்டுமே மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் அமைந்த வெகுஜன அடித்தளத்துடன் கூடிய வலுவானதொரு கட்சியை நம்மால் கட்டியெழுப்ப முடியும்.
23வது கட்சிக் காங்கிரஸ் கட்டளையிட்டுள்ள நான்கு அடிப்படைக் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
- சுயேச்சையான வலிமையை பெருமளவிற்கு அதிகரிப்பது.
- கட்சிகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது.
- ஜனநாயக முன்னணியை வென்றெடுக்கவும் வலுப்படுத்தவும் தீவிரமாகச் செயல்படுவது.
- வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராட மதசார்பற்ற சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்டலை மேற்கொள்வது.
***
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
