பொது உடமை உலகம் நோக்கிய மானுட பயணம் தொடரும், வெல்லும்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
உண்மையில், மானுட வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு நொடிப்பொழுதை விடக் குறைவு. அதேநேரத்தில், மானுட வரலாறு வழி நெடுகிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை என்பதும் உண்மை. சோசலிச புரட்சிக்காக உழைத்துவரும் நம்மில் பலர், புரட்சியின் பயணம் இன்னும் மிக வேகமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு ‘நேரம்’ என்பதும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது பாலபாடம்.
நாம் வாழ்ந்துவரும் காலம், மானுடம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை வீழ்த்தி, சோசலிச உற்பத்தி அமைப்பை அமைத்து வலுப்படுத்தி, உன்னதமான பொது உடமை சமூகம் என்ற இலக்கை நோக்கி தனது நெடிய பயணத்தை முன்னெடுத்துச்செல்லும் காலம். 1990களின் துவக்க ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத் தில் 74 ஆண்டுகள் ஆட்சி நடத்திய சோசலிச அமைப்பு அழிக்கப்பட்டு, சோவியத் ஒன்றியமும் தகர்க்கப்பட்டதை முதலில் கொண்டாடி கொக்கரித்த முதலாளித்துவ அறிவுஜீவிகளே, அவர்கள் கண்முன்னால் முதலாளித்துவ உலகம், மீள இயலாத பெரும் நெருக்கடி புதைகுழியில் சிக்கியுள்ளதை இன்று காண்கிறார்கள். சமகால உலகம், முதலாளித்துவ அமைப்பு முட்டுச்சந்தில் சிக்கியிருப்பதை அதன் சமகால பன்முக நெருக்கடி அன்றாடம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. தோழர் லெனின் மறைந்த 100 ஆவது ஆண்டில் அவரது மிக முக்கிய கூற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்: ஏகாதிபத்திய காலகட்டம் பாட்டாளிவர்க்க புரட்சியின் நுழைவாயில் ஆகும். 20ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள், சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சோசலிச ஆட்சிகள் வீழ்த்தப்பட்ட ஆண்டுகளாக இருந்தன என்றால், 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி உலகெங்கும் முதலாளித்துவம் நெருக்கடியிலும் தேக்கத்திலும் சிக்கியிருப்பதை உரக்கச் சொல்கிறது. உலகமே அழிந்துவிடுமோ என்று அச்சப்படுகின்ற வகையில், போர் மேகங்கள் உலகை சூழ்ந்திருப்பதையும், போரும் இனப்படுகொலையும் நிகழ்ந்து கொண்டிருப்பதையும், கொடிய வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார துயரங்கள், மக்கள் வாழ்வை சீரழித்து வருவதையும், முதலாளித்துவ லாப வெறியால் தீவிரமாகிய கால நிலை மாற்ற நெருக்கடி, மானுட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதையும் மானுடம் காண்கிறது. இந்த அவலச்சூழலில் மக்கள் சீனம், சோசலிச வியத்நாம் உள்ளிட்ட சோசலிச நாடுகள் சோசலிச உற்பத்தி உறவுகளைக் கொண்டு, ஏகாதிபத்திய அமைப்பு ஏற்படுத்தும் தடைகளை எதிர்கொண்டு, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியையும் மக்கள் வாழ்வில் தொடர் மேம்பாட்டையும் சாதித்து வருகின்றன. சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட முன்னாள் சோசலிச நாடுகளை தனது கைப்பாவைகளாக மாற்றிவிட முடியும் என்ற ஏகாதிபத்திய கனவும் தகர்ந்து வருகிறது.
மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சி 1917
1917 அக்டோபரில் ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் சோசலிச புரட்சி நிகழ்ந்து ஆட்சி அதிகாரம் தொழிலாளி வர்க்கத்திடம் வந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு, மானுட வரலாற்று வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை அறிவித்தது. உலகளாவிய முதலாளித்துவ லாபவேட்டையும், ஏகாதிபத்திய முரண்பாடுகளும், இரண்டு கொடிய போர்கள் (1914-18, 1939-45) மூலம், பல கோடி மக்களை கொன்று குவித்தது. இந்த இரு போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பத்தாண்டுகள் (1929-39) நீடித்த உலக முதலாளித்துவ பெரும் வீழ்ச்சியும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத வேலையின்மையும், தன் பங்கிற்கு முதலாளித்துவ நாடுகளின் மக்களை வாட்டி வதைத்தன.
மிகவும் பின்தங்கிய நாடான ஜார்கால ரஷ்யாவில் வெற்றிபெற்ற சோசலிச புரட்சி, துவக்கத்தில் இருந்தே பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அக்டோபர் 1917இல் நிகழ்ந்த ரஷ்ய புரட்சியை அழிக்க, ஆறே மாதங்களில் எதிர் புரட்சி சக்திகளும், அவற்றிற்கு ஆதரவாக 14 ஏகாதிபத்திய நாடுகளும் ராணுவ தாக்குதல்கள் மூலம் முயன்றனர். இரண்டாண்டுகள் நடைபெற்ற இப்போரில், பெரும் இழப்புகளை சந்தித்தாலும் செம்படை வென்றது. புரட்சியின் எதிரிகள் திணித்த உள்நாட்டுப் போரால் ஏற்பட்டிருந்த பொருளாதார சிரமங்களை சரி செய்து, வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு, அடுத்த மூன்று ஆண்டுகள் அன்றைய ரஷ்ய சமூகத்தின் வரக்கத்தன்மையை கணக்கில் கொண்டு, விவசாயிகள், சிறு குறு முதலாளிகள் உள்ளிட்ட ஏகபோகம் அல்லாத உற்பத்தியாளர்களுக்கு லெனின் முன்வைத்த “புதிய பொருளாதாரக் கொள்கை” மூலம் ஊக்கம் அளித்து, போல்ஷெவிக் கட்சி ரஷ்யாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றது. அரசு அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கையில் இருந்ததால், ஒரு எல்லைக்கு உட்பட்டு நாட்டு வளர்ச்சிக்கு முதலாளித்துவ உறவுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை, அன்றைய சோவியத் அனுபவம் காட்டியது. அன்றைய ஆட்சியின் தன்மையை லெனின் மிகச்சரியாகவே தொழிலாளிகளும் விவசாயிகளும் இணைந்து நடத்தும் ஜனநாயக தன்மை கொண்ட சர்வாதிகார ஆட்சி (Democratic Dictatorship of the proletariat and the peasantry) என்று வர்ணித்தார்.
ஜனவரி 21, 1924இல் தோழர் லெனின் மறைந்தார். இளம் சோசலிச குடியரசிற்கு தொடர்ந்து ஏகாதிபத்தியம் எதிர்வினை செய்தது. லெனின் தலைமையில் சோசலிச புரட்சி ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றிய பொழுது, விரைவில் ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த இதர ஐரோப்பிய நாடுகளிலும், சோசலிச புரட்சிகள் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதனால் மிகவும் பின்தங்கிய நாட்டில் ஒருபுறம் உலக வல்லரசுகளை எதிர்கொண்டும், மறுபுறம் சோசலிச நிர்மாணப்பணிகளை மேற்கொண்டும், ரஷ்ய புரட்சி பயணிக்க வேண்டி வந்தது. இத்தகைய இக்கட்டான சூழலில், லெனினின் மறைவுக்குப்பின், போல்ஷெவிக் கட்சிக்குள் கடுமையான தத்துவார்த்த போராட்டங்கள் நடந்தன. இறுதியில் 1927இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 1917 புரட்சிக்கு முன்பே முதல் உலகப்போர் ரஷ்ய பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி இருந்தது, 1928இல் தான் ஒரு வழியாக சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யப் பகுதி தனது 1913 உற்பத்தி நிலையை அடைய முடிந்தது. ஆனால் சோசலிச பாதையில் பயணித்து, அடுத்த 12 ஆண்டுகளில் – 1940 இல் – அமெரிக்க வல்லரசுக்கு அடுத்தபடி, தொழில் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தை சோவியத் சோசலிச உற்பத்தி அமைப்பு பிடித்தது. இது எவ்வளவு பெரிய சாதனை என்பதை உணரவேண்டும். மிகவும் பின்தங்கி இருந்த ரஷ்ய நாட்டில் சோசலிச சக்திகள் ஆட்சிக்கு வந்தன. சோவியத் ஒன்றியத்தை சுற்றிலும் உலகம் எங்கும் ஏகாதிபத்தியம் கோலோச்சியது. சோவியத் ஒன்றியத்திற்கு சந்தைகளை மறுத்தது. தொழில் நுட்பங்களை மறுத்தது. தீவிர யுத்த முஸ்தீபுகளை மேற்கொண்டு, சோவியத் ஒன்றியத்தை ஏகாதிபத்திய நாடுகள் அச்சுறுத்தியதால், சோவியத் ஒன்றியம் கணிசமான வளங்களை தற்காப்புக்கு செலவிட வேண்டி வந்தது. மேலை முதலாளித்துவம், தனது தொழிலாளி வர்க்கத்தையும் காலனிகளையும் பெரும் சுரண்டலுக்கு உட்படுத்தியது. சோவியத் வளர்ச்சியில் இவை அறவே கிடையாது. ஆனால் அது ஒரு சோசலிச அமைப்பு என்பதால், பிரமிக்கத்தக்க வளர்ச்சியை திட்டமிட்டு சாதித்தது. இந்த வளர்ச்சியும், இதனால் சோவியத் மக்கள் முழுமையாக சோவியத் அரசுடன் ஒருமைப்பாடும் பற்றும் கொண்டிருந்ததும், பாசிச எதிர்ப்பு போரில், மேலை முதலாளித்துவம் நிலை குலைந்து நின்ற பொழுது, பாசிசத்தை வீழ்த்தி, உலகில் ஜனநாயகம் காக்கும் பணியில், சோசலிச சோவியத் ஒன்றியத்திற்கு பெரும் பலமாக இருந்தன. சோவியத் ஒன்றியத்தின் இரண்டு கோடி சோவியத் மக்கள் தம் இன்னுயிர்களை ஈந்து உலகை காப்பாற்றினர். இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில் உலகெங்கும் சோசலிசத்தின் வலிமை உணரப்பட்டது. சோவியத் அனுபவத்தில் இருந்து பல பொருளாதார படிப்பினைகளை முன்னணி முதலாளித்துவ நாடுகள் கற்றுக்கொண்டன. வளரும் நாடுகளுக்கு வழிகாட்டி யாகவும் கலங்கரை விளக்காகவும் சோவியத் சோசலிசம் திகழ்ந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நாம் கடந்துள்ள ஏறத்தாழ 80 ஆண்டுகளில், முதல் 40 ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேறிய சோவியத் ஒன்றியம் பின்னர் கடும் பின்னடைவை சந்தித்தது. 1991இல் சோசலிச ஆட்சி வீழ்த்தப்பட்டு, முன்பிருந்த சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ ஆட்சிக்கு இரையாயின. இதன் காரணங்களுக்குள் போவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இங்கு நாம் குறிப்பிட விரும்புவது இந்நிகழ்வுகளை சோசலிச தத்துவத்தின் தோல்வி என்றோ, மார்க்சீய-லெனினிய தத்துவத்தின் தோல்வி என்றோ பார்ப்பது, சரியான புரிதல் அல்ல என்பதுதான். இந்த வீழ்ச்சிக்குப்பின் ஏகாதிபத்தியத்தின் பங்கும் உலக முதலாளித்துவத்தின் பங்கும் உள்ளன. மேலும் மாரக்சீயத்தை மிகச்சிக்கலான சூழலில், மிகவும் பின்தங்கிய நாடுகளில், அமலாக்குவதில் சோவியத் மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்த தவறுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது பற்றி 1992இல் சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய “சில தத்துவார்த்தப் பிரச்சினைகள் குறித்து” என்ற ஆவணம் வெளிச்சம் அளிக்கிறது. மேலும் 2012இல் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 20ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்தப்பிரச்சினைகள் குறித்த ஆவணமும், இப்பிரச்சினைகளை ஆழமாக விவாதித்து விளக்குகின்றது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ஆவணங்களும் தமிழில் வெளியாகியுள்ளன. தோழர்கள் அவசியம் படித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.
நடந்துள்ள அனைத்து சோசலிச புரட்சிகளும், மார்க்சும் எங்கெல்சும் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த உலகில் பின்தங்கிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன என்பதையும், நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சமகால உலகில் முதலாளித்துவத்தின் நெருக்கடி
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சோவியத் சோசலிச ஆட்சி வீழ்த்தப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், தனது தலைமையில் தனக்கு அடிபணிந்து உலகம் இருக்கும் என்ற ஏகாதிபத்திய கனவு நிறைவேறவில்லை. இன்றும் மக்கள் சீனம், வியத்நாம், லாவோஸ், வட கொரியா, கியூபா உள்ளிட்ட நாடுகள், அவர்களது பிரத்யேக சூழல்களை கணக்கில் கொண்டு, சோசலிச பயணத்தை தொடர்கின்றனர். மத்திய, தென் அமெரிக்க நாடுகளிலும், உலகின் மற்ற பகுதிகளிலும், சோசலிச கனவு இன்றும் மக்களை ஈர்க்கவே செய்கிறது. சோசலிச சமூகம் என்ற இலக்கின் பக்கம் நிற்கும் சக்திகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடு தொடர்கிறது; அவ்வப்பொழுது தீவிரமடைகிறது. காலநிலை மாற்றம், வறுமை, வேலையின்மை உள்ளிட்ட மானுடம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க, மானுடம் காக்க, மானுடத்தின் எதிர்காலம் தழைத்திட, சோசலிசமே தீர்வு என்ற முழக்கம் உலகெங்கும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டங்கள், அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் தொடர்கின்றன. வளரும் நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடு நீடிக்கிறது. 2008இல் உலக முதலாளித்துவத்தில் வெடித்த உலகளாவிய நிதி நெருக்கடிக்குப்பின் முதலாளித்துவ வளர்ச்சி மிகவும் மந்தநிலையில்தான் உள்ளது. அமெரிக்க வல்லரசின் தலைமையில் ஒருதுருவ உலகம் அமையும் என்ற ஏகாதிபத்தியக் கனவு தகர்க்கப்பட்டு, பலதுருவ உலகை நோக்கி மானுடம் பயணித்து வருகிறது. உக்ரைன்-ரஷ்யா போர், அதனையொட்டி, மேலை நாடுகள் ரஷ்யாவை அழிக்க உக்ரைனுக்கு பேரழிவு ஆயுதங்களை கொடுப்பதுடன், ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார மற்றும் இதர தடைகள், உலகப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளன. ஆனால் இவை ரஷ்யாவை வலுவிழக்கச் செய்யவில்லை. மாறாக, உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகள் மத்தியில், மேலை நாடுகளை சார்ந்திருப்பதில் உள்ள அபாயங்களை உணர வைத்துள்ளது. அமெரிக்க ஆதரவுடன், பயங்கரவாத இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன மக்கள் மீது நடத்திவரும் இனப்படுகொலையும், விரிவடைந்துவரும் மேற்கு ஆசிய போர்க்களமும், உலக முதலாளித்துவத்தை அன்றாடம் அம்பலப்படுத்திவருகின்றன. சிக்கலாகிவரும் முதலாளித்துவ உலகின் நெருக்கடி நிகழ்வுகள், மேலை ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை அவ்வப்பொழுது நினைவு படுத்துகின்றன. இந்த முரண்பாடு, தற்சமயம் தீவிரமாக இல்லாவிட்டாலும் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை.
மகத்தான மக்கள் சீன புரட்சி
20ஆம் நூற்றாண்டின் முதல் புரட்சி பேரிகை ரஷ்யாவில் ஒலித்தது. ஏகாதிபத்திய உலகை கதிகலங்க வைத்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்து, வலுவான சோவியத் முகாமை எப்படி அடக்குவது என்று ஏகாதிபத்தியம் தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருந்த நேரத்தில், 1949 அக்டோபர் 1 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன சோசலிச புரட்சி வெற்றிபெற்றது. மிகப்பெரிய, அன்றைய தேதியில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், செங்கொடி ஆட்சி அமைவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகிற்கு அறிவித்தது. 1921ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மாவோ தலைமையில் எண்ணற்ற சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. 1920களின் பிற்பகுதியில் கம்யூனிச விரோதி சியாங்கே ஷேக் தனது துருப்புக்களை கொண்டு அச்சமயம் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஒழிக்க முயன்றபொழுது, சாதுரியமாக தப்பித்து நீண்ட பயணம் என்று வரலாற்று ஏடுகளில் புகழ் பெற்றுள்ள கடினமான, பல ஆண்டு பயணத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. தொடர்ந்து மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, அவர்களின் அரணாக உயர்ந்தது. மக்களின் முழு நம்பிக்கையை தனது நேர்மையான பணிகள் மூலமும், தனது சிறப்பான தத்துவார்த்த பிரச்சாரத்தினாலும் வென்றது. இறுதியில், இரண்டாம் உலகப்போர் காலத்தில், சீனா மீது படையெடுத்து ஆக்கிரமித்த ஜப்பானிய படைகளை, கம்யூனிஸ்டுகள் தலைமையிலான சீனா தோற்கடித்தது. இக்காலத்தில் மக்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்திருந்த சியாங்கே ஷேக் கும்பல், அமரிக்க வல்லரசின் ஆதரவுடன், தைவான் தீவுக்கு ஓடியது. அங்கு அமெரிக்க வல்லரசின் உதவியுடன், கம்யூனிச விரோத, ஏகாதிபத்திய ஆதரவு அரசை அது அமைத்தது. அமெரிக்க வல்லரசு மற்றும் இதர மேலை வல்லரசுகளின் ஆதரவுடன், ஐக்கிய நாடுகள் அவையில் தைவான்தான் நீண்ட காலம் சீனாவின் இடத்தில் அமர்ந்திருந்த கூத்தும் நடந்தது!
ரஷ்ய புரட்சி 1917 அக்டோபரில் ஆட்சியை கைப்பற்றிய பொழுது, அதற்கு ஆதரவாக உலகில் எந்த வல்லரசும் இல்லை. ஆனால், முதல் சோசலிச நாடாக பெரும் சவால்களை சந்தித்து, உலக வல்லரசுகளின் அனைத்து தாக்குதல்களையும் சமாளித்து, 74 ஆண்டுகள் அனைத்து துறைகளிலும் பெரும் சாதனைகள் படைத்து, உழைப்பாளி மக்களின் அதிகாரத்தை நிலை நாட்டி, உலக உழைப்பாளி மக்கள் அனைவருக்குமே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சோவியத் ஒன்றியம், மக்கள் சீனத்திற்கு அனைத்து வகையிலும் பெரும் ஆதரவு அளித்தது.
நிலச்சீர்திருத்தம்
தனது முதல் முப்பது ஆண்டுகளில் (1949-79) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான சோசலிச புரட்சி பல சாதனைகளை செய்தது. 1950களில் நடந்த முழுமையான நில சீர்திருத்தம், காலம் காலமாக சீனாவின் கிராமங்களில் நிலவிய, கொடிய நிலபிரபுத்துவ ஆதிக்கத்தை முற்றிலும் அழித்தொழித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில், மக்கள் இயக்கமாக நடத்தப்பட்ட நிலச்சீர்திருத்த இயக்கம், அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் சாகுபடிக்கு நிலம் கிடப்பதை உறுதி செய்தது. நிலபிரபுக்களின் நில உடமையை மட்டும் அது முடிவுக்கு கொண்டுவரவில்லை. சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பல பல நூற்றாண்டுகளாக நிலப்ரபுக்கள் செலுத்திய ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து, ஏழை விவசாயிகளுக்கு, கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு, பெண்களுக்கு, பெரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களது கூட்டு வல்லமையை உணரச்செய்தது. அடிமை முறைகளை முற்றிலுமாக ஒழித்தது. பின்னர், சோசலிச சீன அரசு, கூட்டுறவு தன்மையிலான சாகுபடி ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி, அவற்றில் விவசாயிகளை ஈர்த்து, இணைத்தது. இவையெல்லாம் ஒரே நேர்கோட்டில் பிரச்சினைகளே இன்றி நடக்கவில்லை. பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தந்த வேளாண் பகுதிக்கு பொருத்தமான ஏற்பாடுகள் கண்டறியப்பட்டன. மக்கள் இயக்கமாக நடத்தப்பட்ட மாபெரும் நிலச்சீர்திருத்தமும், கூட்டுறவு முனைவுகளும் தொடர்ந்து, சாகுபடி இல்லாத காலங்களில், கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு பணி தரும் முனைவாகவும், திட்டமிட்ட அடிப்படையில் பாசனம் உள்ளிட்ட கிராமப்புற/வேளாண் கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியாகவும், பல நடவடிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில், கிராம மக்கள் மேற்கொண்டனர். பல தவறுகளும் நிகழ்ந்தன. கட்சியின் தொடர் பரிசீலனைகள் மூலம் அவை சரிசெய்யப்பட்டதும் நிகழ்ந்தது!
திட்டமிட்ட பொருளாதாரமும் தொழில் வளர்ச்சியும்
சோசலிச சீன அரசு, சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன், நவீன தொழில் உற்பத்தியிலும் திட்டமிட்ட அடிப்படையில் வேகமாக தனது முதல் 30 ஆண்டுகளில் முன்னேறியது. கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகிய அம்சங்களின் மீதும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், சீன – சோவியத் உறவுகளில் 1960களில் ஏற்பட்ட விரிசல், சீனாவின் தொழில் வளர்ச்சியின் தொடர் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் முன்னேற்றம் தொடர்ந்தது. சீனா சோசலிச குடியரசின் முதல் முப்பது ஆண்டுகளில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், வேளாண் மற்றும் தொழில் துறைகள் இரண்டுமே புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வேகமாக வளர்ந்தன, அறிவியல் தொழில்நுட்ப சுயசார்பிலும், வளர்ச்சியிலும், சோசலிச சீனம் மிகுந்த கவனம் செலுத்தியது.
இந்தியா 1947இல் விடுதலை பெற்று 1950இல் குடியரசாக தனது நவீன வளர்ச்சி பயணத்தை துவக்கியது. மக்கள் சீனம் தன் வளர்ச்சிபயணத்தை 1949இல் துவக்கியது. கிட்டத்தட்ட ஒரே காலத்தில் தங்கள் வளர்ச்சி பயணத்தை இவ்விரு நாடுகளும் துவக்கின. அன்று பல துறைகளில், ஒப்பீட்டளவில், இந்தியா, சீனாவைவிட முன்னேறியிருந்தது. முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையில் இந்தியா பயணித்தது. சோசலிச வளர்ச்சிப் பாதையில் பயணித்தது மக்கள் சீனம். அடுத்த 30 ஆண்டுகளில் அநேக தொழில் துறைகளில் இந்தியாவை விட மக்கள் சீனம் மிக வேகமாக முன்னேறியது. மிக முக்கியமாக, சீனாவில் அமலாக்கப்பட்ட முழுமையான புரட்சிகர நிலச்சீர்திருத்தம், உள்நாட்டு சந்தையை பெரிதும் விரிவுபடுத்தியது. வளங்களை திரட்டி, திட்டமிட்ட அடிப்படையில் சீன சோசலிச அரசு, தொழில் துறையிலும், கட்டமைப்புகளிலும், கல்வி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, உயர் ஆராய்ச்சி, நவீன தொழில்நுட்பம் ஆகிய நடவடிக்கைகளிலும் பொருத்தமான முதலீடுகளை மேற்கொண்டது. தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சியின் பயன்கள் மக்களை சென்று அடைந்தன. இந்தியாவில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியில் அரசின் பங்கு இருந்தபோதிலும், இந்த வளர்ச்சியின் பயன்கள் பெரும்பாலும் பெரு முதலாளி குடும்பங்களுக்கும் நிலபிரபுக்களுக்கும் சென்றது. இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் காஷ்மீரிலும், இடதுசாரிகள் வலுவாக இருந்த மாநிலங்களில் மட்டும் நடந்தது. இதில் விவாதிக்க இன்னும் நிறையவே இருந்தாலும், அது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல!
மாறிய உலகும் மக்கள் சீனமும்
1949-79 காலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனாவின் வளர்ச்சிப்பாதை பற்றியும் பன்னாட்டு நிலைமைகள் குறித்தும், அவ்வப்பொழுது கருத்துமோதல்களும் முரண்பாடுகளும் மேலோங்கி வந்தாலும் பெரும்பாலும் உட்கட்சி போராட்டங்கள் மூலமாக அவை தீர்க்கப்பட்டன. 1964-65இல் துவங்கி, கிட்டத்தட்ட 1975-76 வரை நீடித்த “கலாச்சாரப் புரட்சி” அது களத்தில் நிகழ்ந்த காலத்தில், தீவிரமாக விவாதிக்கப்பட்டாலும் நீண்டகால பார்வையில் அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்வது எளிதல்ல. எனினும், பொதுவாக, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, உட்கட்சி ஜனநாயகத்தை கறாராக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை, கலாச்சார புரட்சியின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது என்று கூறலாம். எது எப்படி இருந்தாலும், மக்கள் சீனத்தின் வளர்ச்சிப் பாதை முதல் முப்பது ஆண்டுகளுக்குப்பின் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1980களில் இருந்து நிகழ்ந்துவரும் உலக அளவிலான நிதி மூலதன ஆதிக்கமும், பாய்ச்சல் வேகத்தில் தொடரும் அறிவியல்-தொழில் நுட்ப புரட்சியும், முதலாளித்துவ உலகை பெருமளவிற்கு மாற்றியுள்ளது போலவே, சோசலிச உலகின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனுடன், சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் வீழ்த்தப்பட்டிருப்பதும், சோசலிச மக்கள் சீனத்திற்கு பெரும் சவாலாக முன்வந்துள்ளது. கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில், சோசலிச மக்கள் சீனம் இவற்றை எவ்வாறு எதிர்கொண்டது என்பதை மார்க்சிஸ்ட் மாத இதழில் தொடர்ந்து பேசுவோம்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
