மார்க்ஸ்: ‘வேலை நாளும்’ வர்க்கப் போராட்டமும்
சஞ்சய் ராய்
மூலதனம் முதல் தொகுதியில் மார்க்ஸ் விளக்குவது போல, வேலைநாளை வரையறுப்பதற்கான போராட்டமென்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் நிகழ்ந்த, நீண்ட, மறைநிலைப் போராகும். மூலதனத்தைப் பொறுத்தவரை, உழைப்பிலிருந்து உழைப்பாற்றலை நுகர்வதற்குக் காலத்தடைகள் ஏதும் இருக்கக் கூடாது. மாறா மூலதனம் அல்லது இயந்திரம் என்பது எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களிடமிருந்து உபரி மதிப்பைப் பிழிந்தெடுப்பதற்கான வாய்ப்பு அமையும். ஆகவே, மூலதனத்தின் சுதந்திரம் என்பது அடிமைத்தனமாகவும் தொழிலாளர்களைச் சாகும் வரை வேலைவாங்குவதாகவும் இருக்க, வேலை நேரத்தைக் குறைப்பதென்பது அறமற்றதாகவும் வேலையிலிருந்து தப்பிடும் வகையிலும் பார்க்கப்பட்டது. ”மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும்; அது உதிரமாகாளியைப் போல, உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது; எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக வாழ்கிறது. தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது, முதலாளி அவரிடமிருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும். தொழிலாளி கொடுக்கத் தக்கதாயுள்ள தனது நேரத்தைத் தனக்காகவே நுகர்ந்தால் அவர் முதலாளியைக் கொள்ளையிடுகிறவராம்” (ப. 317) என்று மார்க்ஸ் எழுதுகிறார்.
இங்கிலாந்தில் நகர நீதிபதிகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் ஆகியோரின் அறிக்கைகளிலிருந்து தொழிலாளர்களின் நிலைமை குறித்து பெறப்பட்ட விளக்கக் குறிப்புகளில், குழந்தைகளும், பெண்களும், பணியாற்றும் வயதைச் சேர்ந்த ஆண்களும், நாளுக்குப் பதினைந்து-பதினாறு மணிநேரம் வரை உழைக்க வேண்டியிருந்ததையும், ஒரு சில தொழில்களில் குறிப்பிட்ட காலங்களில் இருபது மணிநேரம் கூட வேலை செய்ய வேண்டியிருந்ததையும் மார்க்ஸ் விளக்கினார். மட்பாண்டங்கள் செய்தல், ஜவுளி அச்சிடல், சுவரட்டைத் தொழில், கொல்லர் தொழில், அடுமனை ஆகியவற்றைச் சேர்ந்த தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற வேலைச் சூழ்நிலைக்கு ஆளாக்கி, அலுப்புக்கும், தீவிர சோர்வுக்கும், உடல்நலச் சீர்கேடுகளுக்கும், அகால இறப்புகளுக்கும் ஆட்படுத்தியது. பதினான்காம் நூற்றாண்டு மத்தியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் இறுதி வரை சட்டத் தடைகள் ஏதுமில்லாமல் வரம்பற்ற வேலை நேரத்தைத் திணித்தது முதலாளி வர்க்கம். தொழிலாளர்களின் வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தியிருந்ததும், இயன்ற அளவுக்கு உபரி மதிப்பைப் பிழிந்தெடுக்க முடிந்திருந்ததும், ஒரு வகையான ‘வெள்ளையர் அடிமைத்தனத்தை’ இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியது. 1833ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்தின் மூலமாகவே, 13 முதல் 18 வயதினருக்கான வேலைநாள் என்பது சட்டப்படி 15 மணிநேரத்தை மிகாது என்று குறிப்பிடப்பட்டது; 18 வயதைத் தாண்டியவர்கள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அதைக் கடந்தும், அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக, குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் குறிப்பிட்ட மணிநேரத்திற்கு மிகாமல் பணியமர்த்த வேண்டும் என்று சொன்ன தொழிற்சாலைச் சட்டங்கத்தின் பிற்கால வடிவங்களை விட்டு நழுவியும், விதிமுறைகளிலிருந்து தப்பித்தும் வந்ததென்பது, முதலாளிகள் தொழிலாளர்களுக்கு இழைத்த வர்க்கத் தாக்குதல்களாகும்.
தொழிலாளர்கள் இந்த நகர்வை எதிர்த்ததும், பல கட்ட போராட்டங்களும், 1844-47 ஆண்டுகளில் வேலைநாளை ஏறக்குறைய 12 மணிநேரமாக நிலைநிறுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் உலகப் போரையொட்டிய காலம் வரை, ஐரோப்பிய நாடுகளில் பத்து மணி நேர வேலைநாள் என்பது நிறுவப்பட்டுவிட்டது; அமெரிக்காவிலும் நியூசிலாந்திலும் 48 மணிநேர வேலை வாரம் அமலாக்கப்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, தொழிலாளர் இயக்கமும் அமெரிக்க உள்நாட்டுப் போரும் ஒன்றிணைந்ததும், அந்நாட்டின் எட்டு மணிநேர வேலைநாள் கிளர்ச்சியும், 1866இல் பால்டிமோரில் தொழிலாளர் பொதுக் காங்கிரஸில் எடுக்கப்பட்ட தீர்மான அறிக்கையும் இதற்கு வழிகோலின.
முழுநிலை உபரி மதிப்பை வரையறுத்தல்
வேலைநாள் பற்றிய சட்ட வரையறைகள் முழுநிலை உபரி மதிப்பின் உற்பத்திக்கும் பறிப்பிற்கும் வரம்புகளை விதித்தது. வேலைநாளின் ஒரு பகுதியில் தொழிலாளர் தம் பிழைத்தலுக்கு வேண்டிய அளவுக்கு ஈடான மதிப்பினை உற்பத்தி செய்கிறார்; மீதமுள்ள வேலைநாளில் அவர் உற்பத்தி செய்யும் மதிப்பினை உபரி மதிப்பு என்னும் வடிவில் முதலாளி பறித்துக் கொள்கிறார். எனவே, பிழைப்பிற்கு வேண்டிய மதிப்பினை உற்பத்தி செய்ய தேவைப்படும் நேரத்தை என்பதை – தேவைக்குரிய வேலை நேரத்தை –மாறிலியாக வைத்துக்கொண்டால், வேலைநேரத்தை அதிகரிக்கும் நிலையில் உபரி மதிப்பு எடுத்தலும் அதிகரிக்கும். எனவே, வேலைநேரத்தைக் குறிப்பிட்ட மணிநேரக் கணக்காக வரையறுப்பதென்பது முழுநிலை உபரி மதிப்பை அறுவடைசெய்ய முனையும் மூலதனத்தின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும். உலக முதலாளிகள் இந்தச் சட்ட விதிக்குப் பல்வேறு விதங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். பிழைப்பிற்குத் தேவையான மதிப்பை உற்பத்தி செய்யத் தேவைப்படும் வேலைநேரத்தைக் குறைக்கும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன்வழி உபரி வேலைநேரத்தையும் உபரி மதிப்பினையும் வேலைநாளை நீட்டுவிக்காமலே அதிகரிப்பது ஒரு வழிமுறை. வேலையின் தீவிரத்தை அதிகரிப்பதன் வழியாகவும் இதனைச் செய்யலாம். மார்க்ஸ் சொன்ன ஒப்புநிலை உபரி மதிப்பினை அதிகரிக்கும் வழிமுறைகள் இவை.
குறிப்பிட்ட தொழில்களைச் சட்டத்தின் வரம்புகளிலிருந்து ஒதுக்குவதென்பது, நீண்ட வேலைநாளினைத் தொடரச் செய்வதற்கு ஒரு வழியாகும்; இப்படியாக உபரி மதிப்புப் பறிப்பு பழைய வடிவங்களிலே தொடர்ந்து நிகழும். உலக அளவில் தொழிற்படையில் முறைசாராமையும், ஆவணமற்ற தொழிலாளர்களும் புலம்பெயர் தொழிலாளர்களுமே பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் சட்ட-முறைமைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் இவர்களைச் சுரண்டுவது மிகவும் எளிதாகிறது. நீண்ட வேலைநேரம் என்பது அக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறி, சட்ட வடிவிலான கூட்டுத் தலையீடென்பது கோரிக்கையானது. இதற்குக் காரணம், முதலாளித்துவத்தில் உடல் வலு படைத்த தொழிலாளர்கள் தொடர்ந்து கிடைப்பது மூலதனக் குவிப்பு நிகழ்முறையினைத் தொடர்ந்து மேற்கொள்ள அவசியம் என்பதே ஆகும். இது தனி முதலாளிக்குரிய பிரச்சினையாக இல்லாவிட்டாலும், முதலாளி வர்க்கத்திற்கான பொதுப் பிரச்சினையாகும்; உபரிப்பொருள் உற்பத்தியினைத் தொடர்ந்து மேற்கொள்ள தொழிலாளர்களின் வழங்கலையும் மறு உற்பத்தியையும் சீராக வைப்பது அவசியம். எனவே, பெண்களையும் குழந்தைகளையும் அதீத வேலையில் ஈடுபடுத்துவதற்கெதிரான விமர்சனங்கள், தொழிலாளர் வர்க்கத்தைச் சேராத அரங்கங்களிலும் கூட எழுந்தன. அகால மரணங்களும் ஆரோக்கியமில்லாத் தொழிலாளர்களும் உழைப்பாற்றலைப் புதுப்பித்திட தேவைப்படும் செலவினை அதிகரித்து விடுவதால், ஒரு கட்டத்திற்கு மேல் முதலாளி அரசு வேலைநேரத்தை வரையறுத்திட இடங்கொடுத்தது. வேறு விதமாகச் சொன்னால், ஓய்வு என்பது ஒரு சமூக உரிமை என்பதோடு ‘ஆக்கப்பூர்வ’மானதாகவும் கருதப்பட்டது.
விதிமீறல்கள் வழக்கமாகின
நாளொன்றுக்கு எட்டு மணிநேரமும், வாரத்திற்கு 48 மணிநேரமுமாக ‘வேலைநாள்’ 1919ஆம் ஆண்டு தொழில்சார் உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்டு, 1930ஆம் ஆண்டு (வணிக மற்றும் அலுவலக) வேலை நேர உடன்படிக்கையில் விவசாயத் தொழிலாளர்கள் நீங்கலாகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொருந்துவதாகப் பொதுப்படுத்தப்பட்டது. 1920களுக்குள்ளாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் 40 மணிநேர வேலை வாரம் என்பது வழக்கமாக நிறுவப்பட்டுவிட்டது. உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், கூட்டுப்பேர அமைப்புகள் உட்பட தொழிலாளர்களின் உரிமைகளும், வேலைநேர வரம்புகளும் பொது ஒப்புதலைப் பெற்றிருந்தன. 70களில் மூலதனமானது ஆதாய நெருக்கடியை மீண்டும் எதிர்கொண்டதன் காரணமாக, தொழிலாளர்களின் உரிமைகளை நீக்கி, உலகத் தொழிலாளர்களின் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்து அச்சிக்கலைத் தீர்க்க முயன்றது. இதில் குறிப்பிட வேண்டியதென்னவென்றால், முதலாளி வர்க்கம் தன் வர்க்க நலனுக்குரிய தேவைகளை, தத்தம் நாடுகளில் தொழிலின் ஆக்கத்திறனுக்கும், உற்பத்தித் திறனுக்கும், போட்டித்திறனுக்கும் உகந்ததாகக் காட்டிக்கொள்வதில் வெற்றியடைந்தது. ஒத்துழைப்புக்கும் கூட்டுப் பிரச்சினைகளுக்கும் குரலெழுப்பிவந்த அமைப்புகள் அனைத்தையும் நீக்குவதன் வழியாக, சந்தைசார் சமூகத்தை உருவாக்குவதற்காகப் புது தாராளவாத அரசு துடிப்பாகத் தலையிட்டது.
இதன் விளைவுகள் உலக அளவில் தென்பட்டன; தொழிலாளர்களின் ஆக்கத்திறன் மிக விரைவில் அதிகரித்த நிலையில், அவர்கள் பெற்றுவந்த மெய் கூலி அவர்களின் ஆக்கத்திறனின் வளர்ச்சியைக் காட்டிலும் மெதுவாக வளர்ந்தது; நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களுக்குக் கிடைத்த பங்கு சரிந்திட இது வழிவகுத்தது. போட்டித்திறனை அதிகரிக்குமானால், தொழிலாளர்களை மனிதாமானமற்ற வேலைச் சூழ்நிலைகளில் நீண்ட நேரம் பணிபுரியும் நிலைக்குத் தள்ளிடும் சமூக விதிமுறையை உருவாக்கும் வேலை அறத்தைக் கொண்ட அரசியல், பண்பாட்டுச் சூழல் இதனோடு ஒத்துப்போனது. பல துறைகளில், வேலை நேரமும் வாழ்க்கைநேரமும் ஒன்றிப்போய் ‘வேலை நாள்’ என்ற எண்ணமே மறைந்து, மூலதனமானது, முழுநிலை உபரி மதிப்பையும், ஒப்புநிலை உபரிமதிப்பையும் பெருக்கிக்கொள்ள வழியமைத்துக் கொடுத்தது.
காலத்திற்கேற்ப வேலை முறைகள் மாறுமென்பதும், நேரத்தைப் பொறுத்தவரை நெகிழ்ச்சி முக்கியமென்பதும், உண்மையே; குறிப்பாக, பெண் தொழிலாளர்களுக்கு வேலைநேரம், குடும்ப நேரம் ஆகியவற்றுக்கு இடையிலும், வேலைக்கும் கல்விக்கும் இடையிலும் போட்டியிருக்கும் நிலையில், பகுதிநேர வேலையும், பணிவீத வேலையும் முக்கியமாகின்றன. வேலையில் நெகிழ்வென்பது அதிகச் சுதந்திரத்தைத் தரும் என்பது இல்லை; பகுதிநேர வேலையும் ஊதியமற்ற குடும்ப வேலையும் சேர்ந்து பெண்களுக்கான வேலைப்பளுவை அதிகரித்துள்ளதென்பதைப் பல ஆய்வுகள் கூறியிருக்கின்றன. மேலும், மாற்றநிலை ஒப்பந்தங்களின் அடிப்படையிலும், உடனடி ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் பணியாற்றும் தொழிலாளர்கள், அதிகப்படியான நிரந்தரமின்மையும், குறைவான ஊதியமும் பெறும் நிலையும், அதனால் தம் பிழைப்பிற்காக அவர்கள் அதிக நேரம் உழைக்கும் நிலையும் ஏற்படுகிறது.
வேலைநாள், குறைந்தபட்சக் கூலி, கூட்டுப்பேரம் ஆகிய விதிமுறைகள், அறம் சார்ந்தோ நாகரிக நீதி கருதியோ முதலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இந்த விதிகளை மீறும் நிலையிலும், அத்தகைய வேலைச் சூழ்நிலைகளில் மனித உரிமை மீறல்கள் ஏற்படும் நிலையிலும், முதலாளிகளின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவற்றுக்கெதிராகக் குரல் எழுப்பபடுவதும் மிக அரிதாகவே உள்ளது. இது அப்பட்டமான, எளிதான ஒரு விஷயமாகும். முதலாளித்துவச் சமூகத்தில் வேலைநாள் வரம்பு உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை வர்க்கப் போராட்டமே தீர்மானிக்கிறது. உடைமைகள் படைத்த தொழிலாளர் அல்லாதோர் உடைமைகளற்ற தொழிலாளர்களைச் சுரண்டி உபரிப் பொருளைப் பெருக்கிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டும், அறமும் மனிதமும் சார்ந்த நோக்கங்கள் மூலதனக் குவியல் என்கிற முதற்பெரும் விதிக்குக் கட்டுப்பட்டதாக இருப்பதுமாகிய சமுதாயமே முதலாளித்துவத்தின் இன்றியமையா விதிமுறை. மூலதனம் நூலின் முதல் தொகுதியில் மார்க்ஸ் சொன்னது போல், “முதலாளி என்ற முறையில் அவர் மூலதனத்தின் அவதாரமே. அவரது ஆன்மா மூலதனத்தின் ஆன்மாவே. ஆனால் மூலதனத்துக்கு உயிர் மூச்சாய் இருப்பது மதிப்பையும் உபரி-மதிப்பையும் படைக்க வேண்டுமென்ற ஆவலே; அதன் மாறாக் காரணியான உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு முடிந்த வரை அதிக அளவு உபரி-உழைப்பை உறிஞ்ச வெண்டுமென்ற ஆவலே.” (ப. 316).
தமிழில்: அஷ்வத்
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

அருமையான பதிவு
பயனுள்ளதாக இருந்தது.
நன்றி தோழர்.