சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட மார்க்சியப் பார்வை
நர்மதா தேவி
பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை துல்லியமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கணித்திடவும், தனது கடமைகளையும், உத்திகளையும் வகுத்திட மார்க்சிய லெனினிய தத்துவம் அடிப்படையாகும்.
1917-இல் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தொழிலாளர் அரசு, சுரண்டலை ஒழித்திடவும், சமத்துவத்தை மலரச் செய்திடவும் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களை மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்த்தன. இந்திய நாடு, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சோஷலிச இந்தியாவாக பரிணமித்திட வேண்டும் என்ற பற்றுறுதி கொண்டவர்களாக, இந்தியக் கம்யூனிஸ்டுகள் தங்களை வார்த்தெடுத்துக் கொண்டார்கள்.
பிரிட்டிஷ் அரசாங்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் மீது தொடுத்த சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்றச் செய்த, தொடக்ககால கம்யூனிஸ்டுகளின் புரட்சிகரப் பணிகள், இன்றைக்கும் ஸ்தாபனத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு அரிச்சுவடிகளாகத் திகழ்கின்றன.
இந்தத் தலைவர்கள், மார்க்சிய லெனினிய தத்துவத்தை துல்லியமாகக் கற்றறிந்த கம்யூனிஸ்டுகளாக, இந்திய சமுதாயத்தின் பல்வேறு கூறுகளையும், சிக்கல்களையும் ஆராய்ந்தனர்; கோட்பாட்டை, கள-எதார்த்த நிலைகளில் பொறுத்தி, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் கடமைகளை, திறம்பட நிறைவேற்றினார்கள். அத்தகைய முன்னோடி கம்யூனிஸ்ட் வீரர்களில் ஒருவர்தான் தோழர் பி.ஆர். என்று நம்மால் தோழமையோடு அழைக்கப்படும் தோழர் பி.ராமமூர்த்தி.
தமிழ்நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தோற்றுவித்து, வலுப்படுத்திய ஆளுமைகளில் முக்கியமானவர். தோழர் பி.ராமமூர்த்தியின் பணிகள் குறித்த ஆவணங்களும், படைப்புகளும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான தத்துவார்த்த கல்விக்கு மிகவும் அவசியமாகும்.
தோழர் பி.ஆர் ன் மார்க்சிய சிந்தனை எவ்வளவு ஆழமானதாக இருந்தது என்பதை காலக் கண்ணாடி போல நமக்கு பிரதிபலித்துக் காட்டும் தொகுப்பாக ‘மனித உயிர்களா? சொத்துடைமையா?’ – தோழர் பி.ராமமூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள் தொகுப்பு நூல் உள்ளது.
ஒரு பூர்ஷுவா அரசு இயந்திரத்தின் சட்டமியற்றும் அவையில், சுரண்டல் இல்லாத சமூகத்தை படைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கம் கொண்ட ஒரு கம்யூனிஸ்ட் ஆற்றிய சட்டமன்ற உரைகள் எப்படி இருக்கும் என்பதைத் திறம்படப் பறைசாற்றியவர் என்ற பெருமைக்கு உரியவர் தோழர் பி.ஆர்.
‘இன்று பசி பட்டினியிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வாடி வதங்கி வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் புனிதமானதா? அல்லது ஒரு சில ஜமீன்தார்கள் வருடம்தோறும் ரூ.75 லட்சம் நஷ்டஈடு பெறும் உரிமை புனிதமானதா?’ – இவ்வாறு சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1953-54 பட்ஜெட் மீதான விவாதத்தில் தோழர் பி.ராமூர்த்தி கேட்ட கேள்வியைத் தழுவி ‘மனித உயிர்களா? சொத்துடைமையா?’ என்ற தலைப்பு இந்தத் தொகுப்பிற்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள 11 உரைகளில், முதல் பத்து உரைகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத்தில் தோழர் பி.ஆர் ஆற்றிய உரைவீச்சுகள். ஆளுநர் உரை மீதான விவாதம் (1952), ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் (1952), பட்ஜெட் மீதான விவாதம் (1954), நில வருவாய், தொழிலாளர் நலம், ஹரிஜன மக்கள் மேம்பாடு, காவல்துறை உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், தஞ்சாவூர் குத்தகைதாரர் மற்றும் பண்ணையாள் பாதுகாப்பு மசோதா (1952) மற்றும் நிலச்சீர்திருத்த மசோதா கோரும் தீர்மானம் (1954) குறித்த விவாதங்களில் பங்குகொண்டு தோழர் பி. ஆர் ஆற்றிய உரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பின் 11-ஆவது உரையாக, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அலுவலக மொழிகள் தொடர்பான திருத்தச் சட்டத்தின் மீது தோழர் பி.ஆர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை இடம்பெற்றுள்ளது.
இந்த 11 உரைகளுக்கு முன்னதாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட அரசியல் பின்னணி குறித்த ஆய்வுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. பொதுத்தேர்தல் நடந்தபோது நிலவிய அரசியல், பொருளாதார, சமூகச் சூழல், தேர்தல் நடத்தப்பட்ட முறை, பல்வேறு கட்சிகள் பெற்ற இடங்கள், அறுதிப்பெரும்பான்மை பெறாத காங்கிரஸ் கட்சி, அரசியலில் இருந்தே ஓய்வுபெறுவதாக அறிவித்த ராஜாஜியை அழைத்துவந்து, குதிரைபேரங்கள் நடத்தி, ஆட்சி அமைத்தது; காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்த பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்து, ஜனநாயக விரோதமான முறையில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையை உருவாக்க முனைந்த ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவையும், ராஜாஜியையும் எதிர்த்து தோழர் பி. ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு; இந்த வழக்கில் தானே நேரில் ஆஜராகி தோழர் பி. ராமமூர்த்தி முன்வைத்த ஆழமான வாதங்கள் உள்ளிட்ட வரலாற்றை, இந்த அறிமுக ஆய்வுக்கட்டுரை பதிவுசெய்கிறது.
ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கூர்வாளாக கம்யூனிஸ்ட் கட்சியே திகழ்கிறது. இந்திய அரசின் வர்க்கத் தன்மையை மாற்றி, தொழிலாளர் அரசை தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள். எனவே, கம்யூனிஸ்டுகள் முக்கியப் பாத்திரம் வகிக்கக்கூடிய ஒரு அரசங்கத்தை உருவாக்கி விடவே கூடாது என்ற ஆளும் வர்க்கத்தின் விருப்பங்களை, காங்கிரஸ் அன்று அமல்படுத்தியது. மிகத் தீவிரமான கம்யூனிஸ்ட் எதிப்பாளரான ராஜாஜி தலைமையில், அமைச்சரவையை உருவாக்கி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
நிலப்பிரச்சனையைத் தீர்ப்பதில், நிலச்சீர்திருத்தம் கொண்டுவருவதில், காங்கிரஸ் கட்சிக்கு துளியும் அக்கறை இல்லை. குத்தகை விவசாயிகள், விளைச்சலில் 80 சதவிகிதம் வரை பெருநிலக்கிழார்களுக்குப் படியளந்து கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் பெருமுதலாளிகள் தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். கோவை மில் தொழிலாளர்கள் 11,000 பேர் ஒரே நாளில் வேலை நீக்கம் செய்யப்படும் அளவிற்கு, தொழிலாளி வர்க்கம் ஒடுக்குமுறைகளைச் சந்தித்தது. இந்தப் பின்னணியில். தோழர் பி.ஆர் சட்டமன்றத்தில் இந்திய அரசின், காங்கிரஸ் கட்சியின் வர்க்கத் தன்மையை எப்படி தோலுரித்து அம்பலப்படுத்தினார் என்பதை இந்த தொகுப்பில் அடங்கியுள்ள உரைகள் விவரிக்கின்றன.
ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், சட்டசபை உறுப்பினர்களின் நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டுவந்தபோது, தோழர் பி.ஆர் ஆற்றிய உரை மிகவும் பிரபலமானது. ராஜாஜி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் சி.சுப்ரமணியம். இவர் ராஜாஜியை மந்திரிசபை அமைப்பதற்காக தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்த காங்கிரஸ் கோஷ்டியில் முக்கியமானவரும்கூட. இவர் பிற்காலத்தில் தன்னுடைய சுயசரிதை (Hand of Destiny) நூலில், எதிர்கட்சித் தரப்பில் ஆற்றப்பட்ட உரைகளிலேயே மிகச் சிறப்பான உரையென குறிப்பிட்டு, தோழர் பி.ஆரின் உரையை பெருமளவிற்கு அந்நூலில் எடுத்துக் காட்டியிருந்தார்.
“எதிர் தரப்பில் உள்ள நாங்கள், ஜனநாயகம் என்ற இத்தகைய கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பங்கேற்க வேண்டியவர்கள், அதற்குத் தேவையான கட்டமைப்பினைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், அத்தகைய அமைப்பு இல்லாதவரை, மக்கள் அதற்காகப் போராடுவார்கள் என்பதையும் நாங்கள் பார்க்கிறோம். இது நியாயமானதொரு போராட்டம். அதற்காகவே நாங்கள் போராடுகிறோம். நீங்கள் அதைக் குழப்பம் என்று கூட அழைக்கலாம். ஆனால், மக்கள் இந்த வார்த்தையைக் கண்டு பயந்துவிட மாட்டார்கள். ஏனெனில், இந்தக் குழப்பத்தை உருவாக்கியது யார் என்று அவர்களுக்குத் தெரியும்.” – என்று தோழர் பி.ஆர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பூர்ஷுவா அரசுடைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில்தான் இருக்கும்; இந்த அமைப்பில் தொழிலாளர்களுக்குத் தீர்வு கிடையாது என்பதை தனது உரைகளில் அம்பலப்படுத்துகிறார். தொழிற்சாலை சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிராவே தொடர்ந்து அமல்படுத்தப்படும் விதம், தொழிற்தகராறு வழக்குகளில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்புகள், அத்திபூத்தாற் போல் வந்தாலும், அவற்றை தொழிலாளர் நலத்துறை அமல்படுத்தாமல் மெத்தனம் காட்டுவது, ஜனநாயகத்தை நிலைநாட்டும் தொழிற்சங்கங்களின் கடமையில் அரசின் தலையீடு, கூட்டுபேர உரிமையை அங்கீகரிக்காத அரசின் போக்கு – இவை குறித்த தோழர் பி.ஆரின் வாதங்களை இந்த தொகுப்பில் இடம்பெற்ற உரைகளில் காணலாம். இந்த வாதங்கள், தமிழ்நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை ஸ்தாபித்த இடதுசாரித் தலைவராக அவருடைய ஆழமான அனுபவத்தை நமக்குப் பாடங்களாக போதிக்கின்றன.
தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் முன்னேற்றத்துக்கான மானியக் கோரிக்கையில் (ஹரிஜன மக்கள் மேம்பாட்டிற்கான மானியக் கோரிக்கை), “சமுதாயத்திலுள்ள முக்கியமான தொழில்களில் எல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும்போது, இந்தப் பிரச்சனையை அணுகும்போது, ஏன் மனித அபிமான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். நாட்டின் பொருளாதார அஸ்திவாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் ஒரு சமுதாயத்தார், ஏன் இப்படி மற்ற சமுதாயத்தாரிடம், தங்கள் சமுதாயத்தின் மீது கருணை செலுத்த வேண்டுமென்று பிச்சை கேட்பது போல கெஞ்ச வேண்டுமென்று நான் கேட்கிறேன்” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் குத்தகைதாரர் மற்றும் பண்ணையாள் பாதுகாப்பு மசோதா மற்றும் நிலச்சீர்திருத்தம் குறித்த சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.வி.ராமசாமி முன்மொழிந்த தீர்மானத்தின் மீது தோழர் பி. ஆர் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவை. நிலச்சீர்திருத்தம் கொண்டுவருவதற்காகவும், நிலப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும் கம்யூனிஸ்டுகள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பதைப் பதிவுசெய்கிற வரலாற்று ஆவணங்களாக இந்த உரைகள் திகழ்கின்றன.
“நிலச்சீர்திருத்த சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து நீங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குத்தகை விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்; அதன்பின் உங்கள் மசோதாவால் என்ன பயன்? எனவே, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நீடித்த நன்மை பயக்கும் வகையில் சட்டத்தைக் கொண்டுவர, நீங்கள் உண்மையாகவும் தீவிரமாகவும் விரும்பினால், இந்த வெளியேற்றங்களை தடுத்து நிறுத்துவதும், நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்த விவசாயிகள் அனைவரும் உடனடியாக தங்கள் நிலங்களில் மீண்டும் அமர்த்தப்படுவதை உறுதி செய்வதும்தான், இந்த அரசாங்கத்தின் முதன்மையான, உடனடியான பணியாகும்”
‘நிலவெளியேற்றத்தை தடைசெய்யும் அவசரச் சட்டத்தை ஏன் நீங்கள் கொண்டுவரவில்லை’ என்று தோழர் பி.ஆர் 1952ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 1957இல் கேரளத்தில் ஆட்சியமைத்த கம்யூனிஸ்ட் கட்சி, ஏழாவது நாளிலேயே, குத்தகைதாரர்களின் நிலவெளியேற்றத்தை தடுக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர் நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு 1,90,723 ஏக்கர் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பொருள், சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில், இன்றைக்கு வரையில் நில உச்சவரம்பு சட்டம் உரிய முறையில் அமலாக்கப்படவில்லை என்பதே. 1979ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில மாநாடு, 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தது. அதைக் கையகப்படுத்த, பல போராட்டங்களை விவசாய சங்கம் முயற்சி எடுத்தும், இன்றுவரை நிலச்சீர்திருத்த சட்டங்களில் தொடரும் ஓட்டைகள் காரணமாக, உழைக்கும் மக்களுக்கு நிலம் உறுதி செய்யப்படவில்லை. சாதிய ஒடுக்குமுறையின் ஆணிவேர் அடங்கிய நில உறவுகள் இன்றைக்கும் அப்படியே தொடர்கின்றன.
“நிலத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, நிலத்திற்கு எந்தவித சேவையும் செய்யாதவர்களைக் கொண்ட ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், நிலத்தின் மீதான உரிமையைப் பெறுகிறார்கள். அந்த உரிமை மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வியர்வையால் விளைந்த விளைபொருட்களின் பெரும்பகுதியைப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை அளிக்கிறது”
“நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பது ‘நில உரிமையாளர்’ என்ற அமைப்பின் இருப்புதான். நமது தொழிற்துறை பொருட்களுக்கான சந்தையின் பெரும்பகுதியை உருவாக்கும் சாதாரண விவசாயிகளும் பல லட்சக்கணக்கான மக்களும் மிகவும் தேவையான வாங்கும் சக்தியை இழக்கும் சூழ்நிலைக்கு இது வழிவகுக்கிறது” – இப்படி ஆழமான மார்க்சிய வாதங்களை முன்வைத்து தோழர் பி.ஆர் நடைமுறையில் உள்ள உற்பத்தி முறை எப்படி தவறாக இருக்கிறது என்பதை சட்டமன்றத்தில் விளக்கி இருக்கிறார்.
மாநில அரசுகளுக்கு உரிய நிதி ஆதாரங்களையும், அதிகாரங்களையும் மறுத்திடும் வகையில், மத்திய அரசுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிசெய்கிற அதிகாரங்களை கடுமையாக விமர்சித்தவர் அவர். மொழிகள், தேசிய இனங்களின் உரிமைகள் குறித்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாரபட்சமான அம்சங்களை நாடாளுமன்றத்தில் மிக ஆழமாக விமர்சித்திருக்கிறார்.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அலுவலக மொழிகள் திருத்தச் சட்டம் மீதான மக்களவை விவாதத்தில் தோழர் பி.ஆர் ஆற்றிய உரை முக்கியமானது. மொழிகள் குறித்த மார்க்சிஸ்டுகளின் நிலையை அறிந்திட விரும்புவர்களுக்கான ஆவணம் இது.
“நம் நாட்டின் மொழிகளுக்கு சம அந்தஸ்து அளித்தோமா? இந்த நாட்டு அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து உண்டு என்பதை அங்கீகரித்தார்களா? எல்லா மொழிகளுக்கும் சமத்துவ உரிமை உண்டு என்பது அங்கீகரிக்கப்பட்டதா? இதுதான் இன்றைய அடிப்படையான கேள்வி. நம் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த சம உரிமையை அங்கீகரிக்கவில்லை என்பது என் கருத்து.” – என்று தோழர் பி.ஆர் இந்திய அரசின் மொழிகள் குறித்த பாரபட்சமான அணுகுமுறை மீதான மார்க்சிஸ்ட் கட்சியின் விமர்சனத்தை முன்வைக்கிறார்.
“இந்தி மொழியை வளர்ப்பதென்பது மத்திய அரசின் பிரத்யேகமான பொறுப்பு’ என்று அரசியல் சட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றது. மத்திய அரசாங்கம் என்பது இந்தி பேசும் மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும், குஜராத்தி பேசும் மக்களுக்கும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் பொதுவானது. இங்கு பேசப்படும் எல்லா மொழிகளையும் வளர்ப்பதுதான் மத்திய அரசின் பொறுப்பு என்று ஏன் குறிப்பிடவில்லை? அப்பொழுதுதானே நாட்டிலுள்ள எல்லா மொழிகளுக்கும் அரசியல் சட்டத்தில் சம அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிய முடியும்?” என்று தீப்பொறி பறக்கும் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார்.
தோழர்கள் வழக்கறிஞர் வைகை, நர்மதா தேவி உரைகளைத் தொகுத்துள்ளனர். தோழர்கள் வீ.பா.கணேசன், கி.ரமேஷ் உரைகளை மிகச் சரளமாக வாசிக்கும் நடையில் மொழிபெயர்த்துள்ளார்கள். பாரதி புத்தகாலயம் இத்தொகுப்பை வெளியிட்டுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
