நவீன தாராளவாதத்திற்கும் பாசிச எதேச்சதிகாரத்திற்கும் எதிராக தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவோம்
ஆர். எஸ். செண்பகம்
உலகெங்கிலும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி தொடர்கிறது. நவீனதாராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தியே, இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். தொழிலாளர்கள், தங்களுடைய வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தின் மீது அதிருப்தி உடையவர்களாக இருப்பதுடன், தங்கள் வேலை குறித்து வாயைக் கூட திறக்க முடியாதச் சூழல் நிலவுவதால், ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை இழந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவு, வலதுசாரி சக்திகளின் பிறள் பிரச்சாரங்களுக்கு ஆளாகிப் பலியாகின்றனர். அதேநேரத்தில், இடதுசாரி சக்திகளும், தொழிற்சங்கங்களும் வலுவாக உள்ள இடங்களில், அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான அதிருப்தியை, தேர்தல் காலங்களில், அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. மாறாக, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளில் பிளவு ஏற்படும்போது, தொழிற்சங்க இயக்கங்கள் பலவீனமாக உள்ளபோது, அந்த இடங்களை எல்லாம் வலதுசாரி சக்திகள் தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. வலதுசாரி சக்திகள் பல நேரங்களில் தொழிலாளர்களின் குரலாகவே ஓங்கி ஒலிக்கின்றனர். அதே நேரத்தில், வர்க்கப் போராட்டத்தில் அவர்களை முறையாக வழிநடத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு தொழிலாளர்களிடத்தில் இருக்கும் செல்வாக்கை, பிரித்தாளும் அரசியலை நோக்கி தொழிலாளர்களை திசைதிருப்பப் பயன்படுத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தொடர் தாக்குதல்கள்
2024 ஏப்ரலில் வெளியான ஐஎம்எஃப்-இன் உலகப் பொருளாதார அறிக்கையும், 2024 ஜுனில் வெளியான, உலக வங்கியின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் பற்றிய அறிக்கையும், உலகப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், வேலையின்மை மற்றும் பாதுகாப்பற்ற வேலைவாய்ப்பு போன்ற தொடர் தாக்குதல்களை சந்தித்து வரும் தொழிலாளி வர்க்கம், கூடுதல் சுமைகளை சுமக்க வேண்டி வரும். ILO அமைப்பு 2024 மற்றும் 2025இல் வேலை செய்யும் வயதில் உள்ள தொழிலாளர்களில், பணியிலிருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களின் விகிதாச்சாரம் குறையும் என்று கூறுகிறது.
உலகில் 58 சதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், முறைசாரா வேலையில் இருக்கின்றனர். ஒரு சில பணக்கார நாடுகளில் உள்ள, மிகப் பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமாக உள்ள, ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி முறை, ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனித அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மக்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் பணிச் சுமை குறைப்பிற்கும் பயன்படுத்தப்படாமல், தொழிலாளர்களுக்குப் பதிலாக அவர்கள் வேலையை காலி செய்யவும், மேலும் கடினமான பணிச்சூழலுக்கு அவர்களை தள்ளவுமே பயன்படுத்தப்படுகிறது.
வருமான மற்றும் செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொழிலாளி வர்க்கத்தாலும், பிற உழைப்பாளி மக்களாலும் உற்பத்தி செய்யப்படும் செல்வம், ஒரு சிலரின் கைகளில் குவிவதும், பெரும்பகுதி மக்கள் மிகக் கொடுமையான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவதும் தொடர்கிறது. ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில், உலகின் மேல்தட்டில் உள்ள 1 சதவீதம் பேர் தங்கள் சொத்து மதிப்பை 42 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தியுள்ளனர் என்கிறது. ஒரு டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி; 42 டிரில்லியன் என்பது 42 லட்சம் கோடிகள், இன்றைய மதிப்பில் 1 டாலர் என்பது ரூ. 83.97. உலகெங்கிலும் உள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளில் 0.5 சதத்துக்கும் குறைவான வரி விகிதத்தையே செலுத்துகின்றனர் என்கிறது.
முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த நெருக்கடி
உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, மதிப்பிழந்து போன நவீன தாராளமயம் வேறு எந்த மாற்றையும் கண்டுபிடிக்க இயலாமல், நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்களின் மீது தள்ளுகிறது. தொழிலாளர்களின் ஊதியம், சலுகைகள், வேலை நிலைமைகள் மற்றும் வேலைநிறுத்த உரிமை மற்றும் கூட்டு பேரம் பேசும் உரிமை உட்பட கடினமாக வென்றெடுத்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இடதுசாரிகளைத் தடுக்க ஆளும் வர்க்கங்கள் வலதுசாரிக் கட்சிகளை ஊக்குவிக்கின்றன.
கடந்த பத்தாண்டுகளில், உலக அளவில், தொழிலாளர்களின் உயிர் உரிமையான வேலை நிறுத்தம் செய்யும் உரிமையின்மீது முதலாளிகள் இடைவிடாத தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உள்ளிட்டு சங்கம் சேரும் உரிமை மற்றும் அணி சேரும் உரிமையை உத்தரவாதம் செய்யக்கூடிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானம் எண் 87ஐ அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.
49 சதவீத நாடுகளில் தொழிற்சங்க உறுப்பினர்கள் உரிய காரணமின்றி கைது செய்யப்படுகின்றனர்; தொழிற்சங்கங்களில் சேருவதைத் தடுப்பதற்காக காவலில் வைக்கப்படுகின்றனர் என்றும், தற்போது மொத்தமுள்ள 151இல் 65 நாடுகளில், பேசுவதற்கான உரிமையும், கூட்டம் சேர்வதற்கான உரிமையும் மறுக்கப்படுகிறது. அதே நேரம் உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களும் அதிகரித்துவருகிறது.
நமது நாட்டில்
2024இல் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில், தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்களின் அறிவிப்பு, அதன் முன்னுரிமை நிகழ்ச்சி நிரலை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. தேசிய கருவூலத்தில் இருந்து பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை உட்பட பொருளாதார ஊக்குவிப்பு, தொலைத்தொடர்பு, சுரங்கங்கள், ரயில்வே, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் கப்பல்துறை போன்ற உள்கட்டமைப்புத் துறையில் தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் தனியார்மயமாக்கலின் புதிய வடிவத்தை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் ஏற்கனவே வேகப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் மூலதனச் செலவில் பெரும்பகுதி இந்தத் துறைகளுக்குத் திருப்பிவிடப்படுகிறது.
வேலை உறவுகளில், விரைவான, வக்கிரமான மறுசீரமைப்பு இடைவிடாமல் நடைபெறுகிறது. எனவே, வரும் காலத்தில் சவால்கள் மிகக் கடுமையாக இருக்கும். கார்ப்பரேட்-வகுப்புவாத கள்ளக் கூட்டுறவுக்கும் இந்திய மக்களுக்கும் இடையே, வரும் நாட்களில் முரண்பாடுகள் கூர்மையடையும். மேலும் முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி ஆழமடையும்போது, தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமையின் மீதான தாக்குதலானது, தொழிற்சங்கம் அமைப்பதையே கேள்விக்குள்ளாக்குகிறது. கார்ப்பரேட்டுகள் தொழிலாளர்களை கொள்ளையடிக்கும் கட்டுப்பாடற்ற உரிமையை அடைய விரும்புகிறார்கள்.
அரசு முதலீடு யாருக்காக?
உள்கட்டமைப்புத் துறைகளில் அரசு முதலீடுகளை அதிகப்படுத்துகிறது. இது தனியார் கார்ப்பரேட்டுகள் ஒப்பந்தம் பெற்று அதிக லாபம் குவிக்கவே உதவுகிறது. உற்பத்தித் துறையில், அரசின் முதலீட்டினை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்புப் பெருகும். உற்பத்தித் துறையில் அரசு முதலீடு இல்லாததால், வேலைவாய்ப்பும், வாங்கும் சக்தியும், வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. நிலையான, முறையான வேலைவாய்ப்பு தொழிலாளர் சந்தையில் குறைகிறது. கிக் தொழிலாளர்கள் நியமனம், பயிற்சியாளர் அல்லது பழகுநர் அல்லது குறிப்பிட்ட கால வேலை என பணி உறவுகள் மாறுகின்றன. கூடவே அவுட்சோர்சிங் முறையும் காண்ட்ராக்ட் மயமும் அதிகரித்து, வேலைவாய்ப்பின் தரம் சீர்குலைகிறது. இதனால் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதலின் புதிய வடிவங்களில் மையமானது வேலைவாய்ப்பினை முறைசாராமயமாக்கல்:
இன்றைய தொழிலாளர் இயக்கத்தின் முன் உள்ள மிக முக்கியமான சவால் இது. பல்வேறு புதுமையான வடிவங்களில் வேலைவாய்ப்பு உறவுகளில் விரைவான மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
1. ஒப்பந்த முறை பணி நியமனம் உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் சேவைத் துறைகளில் வழக்கமாக உள்ள முறைகள் அல்லாத வகைகளில் தற்காலிக மயமாக்கல், ஒப்பந்த முறை பணி நியமனம், குறுகிய காலத்திற்கு மட்டுமல்லாது உற்பத்தியின் முழு நீண்ட காலமும் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துதல் பின்பற்றப்படுகிறது. புதிய தொழிலாளர் கொள்கைகள், ஆட்டோமேஷன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டினால், உற்பத்தித் துறையில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. மறுபுறம், இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கென சொந்தத் தொழிற்சங்கங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லாததால், நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இவர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பொதுத்துறையில் உள்ள, உற்பத்தி மற்றும் பொறியியல் தொழிற்சாலைகளில், மொத்தத் தொழிலாளர்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு, ஏற்கனவே 50 முதல் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. பெட்ரோலியம், பிஹெச்இஎல், பவர்கிரிட், என்டிபிசி, என்ஹெச்பிசி போன்ற சில துறைகளில், சராசரியாக 70 முதல் 75 சதவீதத்தை அல்லது அதற்கு மேலும் எட்டியுள்ளது.
2. தொழிற்பயிற்சி பெறுபவர்கள்/ பழகுநர்கள் என்ற வடிவில்
அரசு கஜானாவில் (மக்கள் பணம்) இருந்து செய்யப்படும் நிதியுதவியுடன் கூடிய பல்வேறு அரசு நிதியுதவி திட்டங்கள் மூலம் தொழிற்பயிற்சி பெறுபவர்கள்/ பழகுநர்கள் என்ற வடிவில் புதிய மிகவும் பலவீனமான தொழிலாளர் படை உருவாக்கப்பட்டு வருகிறது. தொழில்ரீதியாகப் படித்த, ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய அதிநவீன அறிவையும், வேகமாகக் கற்கும் திறமையையும் கொண்ட தொழிலாளி வர்க்கப் பிரிவினர் இவர்கள். நிரந்தரத் தொழிலாளர்கள் முக்கியமற்ற இருப்புக்குக் குறைக்கப்படுகிறார்கள்; சில தொழில்களில் மொத்த பணியாளர்களில் 10%க்கும் குறைவாகவே உள்ளனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பு மசோதாக்கள், குறித்த கால வேலையை சட்டப்பூர்வமாக்கப் போகிறது. இதனால் தொழிலாளர்கள் மீது மேலும் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தொழிற்சங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்பை இதன் மூலம் குறைக்கிறது.
3. ஆட்டோமேஷன் மற்றும் புதிய தொழிலாளர் செயல்முறைகள்: தொழிற்சங்கத்திற்கான மற்றொரு மிக முக்கியமான பணி, ரோபோ மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வருகையுடன் புதிதாக வளரும் தொழிலாளர் செயல்முறைகளைப் புரிந்துகொள்வது. அதிகரித்து வரும் ஆட்டோமேஷனால், உடல் உழைப்பு அதிக அளவு இடம் பெயர்க்கப்பட்டு, அதிக மன கவனம் தேவைப்படுகிற மாதிரியான வேலைகள், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அதிக உபரியைப் பிழிந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த மாற்றப்பட்ட – மாறுபட்டச் சூழலில், நமது வேலைகளைப் பாதுகாப்பதற்கும், உற்பத்தித்திறன் வலுவான அதிகரிப்புக்குட்படுத்தப்பட்ட ஆலையில், நமது மொத்த ஊதியப் பங்கை அதிகரிப்பதற்கும், பொருத்தமான உத்தியை உருவாக்க வேண்டும்.
வேலை நாளில் கார்ப்பரேட் நாடகம் – புதிய போக்கு
மற்றொரு புதிய போக்கு என்னவென்றால், நிறுவனங்கள் நீட்டிக்கப்பட்ட வேலை நேரம் மட்டுமல்லாது, பிற சந்தேகத்திற்குரிய வகையிலான நிர்வாக மாற்றங்களுடன், வாரத்தில் 5 நாட்கள் வேலை என்று பிரபலப்படுத்த முயல்கின்றன. 8 மணிநேரத்திற்கு அப்பால் வேலை நேரத்தை நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்குவது, செயல்பாட்டுச் செலவைக் குறைப்பது மற்றும் நிலையான மூலதனத்தின் உகந்த பயன்பாட்டை உறுதிசெய்வதற்காக, மாறும் மூலதனத்தின் பயன்பாட்டை மிகவும் நெகிழ்வானதாக மாற்றுவது போன்றவைதான் இதன் பின்னால் உள்ள நோக்கமாகும். பிளாக் மூடல் அதாவது ஒரு நிறுவனம் குறுகிய காலத்திற்கு உற்பத்தியை நிறுத்தும் போது, நிறுவனத்தின் மற்ற சில பகுதிகள் தொடர்ந்து செயல்படும் என்பது போன்ற புதிய உத்திகளைக் கொண்டு வருகிறார்கள். உற்பத்தியின் தேவைக்கேற்ப ஒரு மொத்த பிளாக்கிற்கும் விடுமுறை அளிக்கப்படும் உபாயமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த அனைத்து செயல்முறைகளும், தொழிற்சாலையின் ஒரு பகுதியை, நீண்ட நெடிய வேலை நேர உழைப்புடன் மூலதனத்தின் அதிக நெகிழ்வுத்தன்மையை அடையும் வகையில் நிர்வகிப்பதற்கானதாகும்.
இது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்ட ஐரோப்பிய தொழிற்சாலைகளை விட மோசமான நிலையில் உள்ளது. உடல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மேலும் சிலிகோசிஸ் உள்ளிட்ட தொழிலாளர்களிடையே ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய தொழில்சார் நோய்களின் தீவிரம் மற்றும் நோய்களின் தீவிரம் உள்ள தொழில்துறை பகுதிகளில் பிரத்தியேகக் கவனம் செலுத்தப்படுவதுடன், அந்தத் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளைச் சுற்றி பிரச்சாரம் மற்றும் இயக்கத்தை உருவாக்குவதில் கவனம் இருக்க வேண்டும்.
வேறு சில முக்கிய பிரச்சினைகள்:
ESI மற்றும் EPF இன் சட்டப்பூர்வ உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் மிகவும் முக்கியமானதாகி வருகிறது. அதிகமான தொழிலாளர்களை கவரேஜின் கீழ் கொண்டு வர, போனஸ் உச்சவரம்புடன் இந்த இரண்டின் கவரேஜ் உச்சவரம்பையும் நீட்டிக்கத் தொடர்ச்சியான கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 20 மற்றும் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் முறையே சட்டப்பூர்வமாக EPF மற்றும் ESI கவரேஜ் வழங்கப்பட வேண்டும் என்றிருந்த பிறகும் கூட, இன்றைய நிலை என்னவெனில், ஒழுங்கமைக்கப்பட்ட துறை நிறுவனங்களில் கூட, EPF மற்றும் ESI உரிமை பெற்ற அறுபது சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு EPF மற்றும் ESI இன் கவரேஜ் இல்லை. இதனை முறையாக அமலாக்க வேண்டிய அரசு இயந்திரம் முதலாளி வர்க்கத்துடன் ஒத்துழைக்கிறது.
பீடி, நிலக்கரி அல்லாத சுரங்கங்கள் போன்ற துறைகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பு, நடைமுறையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் கீழ் E-Shram போர்ட்டலில், சுமார் 29 கோடி அமைப்புசாரா துறைகளை பதிவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால், அவர்களுக்கு உறுதியான சமூக நலன்/பாதுகாப்பு எதுவும் வரவில்லை. சமீபத்தில் ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள், கிக் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்துள்ளன. இருப்பினும், அவை தொழிலாளர் சட்டங்களின் வரம்பிற்குள் அவர்களைக் கொண்டுவரத் தயாராக இல்லை. நிலுவையில் உள்ள குறைந்தபட்ச ஊதிய திருத்தம், பல மாநிலங்களில் பிரச்சினையாக மாறியுள்ளது. பழைய பென்சன் திட்டம் வேண்டுமென்ற கோரிக்கை, ஏற்கனவே அரசியல் பிரச்சனையாகிவிட்டது. வரும் நாட்களில், இப்பிரச்சினைகளில் உழைக்கும் மக்களின் பெரும் பகுதியினரை நாம் அணிதிரட்ட வேண்டியுள்ளது.
உழைப்பின் மீது செயற்கை நுண்ணறிவின் தாக்கம்
கோல்டுமேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர்கள் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய சீரழிவினை ஏற்படுத்தும் என்று கணிக்கின்றனர். பிரதான நாடுகளில் 30 கோடி முழு நேர தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், செயற்கை நுண்ணறிவு, உலகளவில் ஐந்தில் ஒரு பங்கு வேலையை பறிக்கும் என்றும், நிலையற்ற வேலையால் அசமத்துவம் மேலும் அதிகமாகும் எனவும், சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. அதேபோல, நிர்வாகத் தரப்பில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்போது, தொழிலாளர்களை நிர்வாகம் கூடுதல் கண்காணிப்பிற்குட்படுத்த முடியும். உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பெருமளவில் மனித இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டால், பல லட்சம் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். உதாரணத்திற்கு, உலகின் இரண்டாவது பெரிய தனியார் நிறுவனம் அமேசான் 7.5 லட்சம் மனித எந்திரங்களை பணிக்கமர்த்தியுள்ளது. ஒரு லட்சம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
பெண் தொழிலாளர்கள்
பெண் தொழிலாளர்கள் பல்வகையான தொழில்களில் கூடுதலான எண்ணிக்கையில் பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் Ernst &Young(EY) புனேவில் வேலை பார்த்த 26 வயதான பெண் ஊழியர் இரவிலும், விடுமுறை நாட்களிலும் கூட, ஓய்வின்றி உழைத்ததன் காரணமாக, அதிக பணிச்சுமையின் மன அழுத்தம் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி வந்தது. அதனைத் தொடர்ந்து, லக்னோவில் HDFC வங்கி ஊழியர், பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் இறப்பு என்ற செய்தி வந்தது. குறைந்த சம்பளத்தில், கூடுதலான நேரம் அவர்கள் வேலை செய்கிறார்கள். பெண் தொழிலாளர்களுக்கென்று பிரத்தியேகமான கோரிக்கைகள் பல உள்ளன. அவை, பொதுவான கோரிக்கைகளாக மாற்றப்பட வேண்டும்.
அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற இடங்களில்கூட பெண்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை. சட்டக் கொள்கைக்கான விதி மையத்தின் (Vidhi Centre for Legal Policy ) 2019 கணக்கெடுப்பின் படி 665 மாவட்ட நீதிமன்ற வளாகங்களில், 100இல் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை. கழிவறைகளைக் கொண்ட 585 வளாகங்களில் (88 சதவீதம்) கூட, 60 சதவீதம் முழுமையாக செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், பெண்கள், தொழிலாளர்களாக, பாலின ரீதியாக, சந்திக்கும் சவால்கள் ஏராளம். சம வேலைக்கு சம ஊதியம், போதுமான சமூக பாதுகாப்புப் பயன்கள், பாதுகாப்பான பணிச் சூழல், பாதுகாப்பான பணியிடம், வரையறுக்கப்பட்ட வேலை நேரம் உள்ளிட்டு, பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பது மட்டுமல்லாமல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும், அத்துமீறல்களையும் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். இவற்றின் வீச்சு, துறை சார்ந்து பல்வேறு டிகிரிகளில் இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. விவசாயத் துறையில், உற்பத்தித் துறையில், மற்றும் கட்டுமான வேலைகள் உள்ளிட்ட முறைசாரா தொழில்களில் 90 சதமான பெண்கள் பணி புரிகின்றனர். ஆனால், அவர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு அடிப்படை கழிவறை வசதிகூட இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரையில் IT, ITeS, ஊடகம், தொலைத்தொடர்பு, மருந்து, சுகாதாரம் மற்றும் தொழில்துறைகளில் முறையான மாதாந்திர ஊதியம் பெறும் பெண் தொழிலாளர்கள் சுமார் 20 லட்சம் பேர் உள்ளனர். பெண் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கென பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால், எந்தவொரு கண்காணிப்புப் பொறிமுறையும் இல்லாத நிலையில், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் தோல்வியடைகின்றன. உள் குழு (IC) 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனம், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கும் ஒரு உள் குழுவை அமைக்க வேண்டும் என்பது சட்டம். பல நேரங்களில் அவை இருந்தாலும், பெரும்பாலும் சுயாதீனமாக செயல்படுவது இல்லை. தனிநபர்களின் உரிமைகளை விட நிறுவனத்தின் மரியாதையைப் பாதுகாப்பதில்தான், அவை அதிக ஆர்வம் காட்டுகின்றன. புகார்களைத் தீர்ப்பதில் நிலுவையில் வைக்கப்படுவதென்பது அதிகரித்து வருகிறது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைப்பான டெல்லியை தளமாகக் கொண்ட உதய்தி அறக்கட்டளையின் ஆய்வு, இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 67 சதவீதம் உயர்ந்து 2023ஆம் நிதியாண்டில் 260லிருந்து 2024ஆம் நிதியாண்டில் 435 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கிறது.
இந்தச் சமூகப் பொருளாதாரச் சூழலில்தான் வரும் நாட்களில் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கான திசை வழியை அமைக்க வேண்டும்.
1. பல்வேறு கூட்டியக்கங்களை கட்டியமைப்பதின் மூலம் மட்டுமே மக்களை கூட்டு நடவடிக்கைகளுக்குக் கொண்டு வர முடியும். இதற்குப் புதிய, புதிய வடிவங்களுடன் கூடிய போராட்ட முறையும், உறுதியான போர்க்குணமும், பொதுவான நோக்கமும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
2. நவ-தாராளவாத தாக்குதலுக்கு எதிராக, பல்வேறு உள்ளூர் அளவிலான சமூக அமைப்புகளை ஒரு நோக்கத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்க முடிந்தால், வெற்றிக்கான சாத்தியம் உள்ளது என்பதை விவசாயிகளின் போராட்ட அனுபவம் நமக்குத் தருகிறது. எனவே, இன்றைக்கு தொழிலாளி வர்க்கத்தின் சுற்றுப்புறங்களில் (குடியிருப்பு கிராமங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள், தொழிலாளி வர்க்கத்தின் வேலைத்தளங்கள், சுரங்கப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் போன்ற அனைத்திலும்) ஒருங்கிணைக்க முடிந்தால் மற்றும் அணிதிரட்டப்பட்டால், தொழிலாளி வர்க்க எதிர்ப்பில் சமூக அடிப்படையிலான அணுகுமுறையை உருவாக்க முடியும்.
3. அதே போன்று, நீண்டகால அடிப்படையில் சமூகக் கலாச்சாரப் பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
4. தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவை அணிதிரட்டுவது மிக முக்கியம். உதாரணமாக, வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக 2018க்கும் 2024க்கும் இடையில் வேலையில்லாத இளைஞர்களின் தற்கொலை விகிதம் 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று என்.சி.ஆர்.பி. தரவுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டில் இரண்டு மணி நேரத்திற்கு மூன்று என்றிருந்த தற்கொலை விகிதம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டாக அதிகரித்துள்ளது. நமது மக்கள் தொகையில், இளைஞர்களின் மக்கள் தொகைப் பங்கினை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல், அரசாங்கத்தின் கொள்கைகள் அவர்களை தற்கொலைக்குத் தள்ளுகின்றன. இளம் தொழிலாளர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்குள் அடக்கவைக்கப்பட்டுள்ள கோபமும் விரக்தியும் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.
5. நவீன தாராளவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும், வகுப்புவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொள்வதிலும், சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எடுக்கும் கட்சிகளை, தொழிலாளி வர்க்கம் சார்ந்திருக்க முடியாது. எரியும் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், வகுப்புவாத பிளவுபடுத்தும் சக்திகள் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதன் மூலமும் மட்டுமே, தொழிலாளர் விரோத மக்கள் விரோதக் கொள்கைகளை தோற்கடிக்க முடியும். வேறு எந்த குறுக்கு வழியும்இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டு, சுயேச்சையான இயக்கங்களை அதிகப்படுத்துவதுடன், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றுபட்ட போராட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
6. விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடனான கூட்டு நடவடிக்கையானது, வெறுமனே நல்லிணக்க ஒருமைப்பாட்டு ஒற்றுமையுடன் மட்டும் நின்றுவிடாமல், குறிப்பிட்ட உள்ளூர் பிரச்சனைகளில் ஸ்தல மட்டம் வரையில் உண்மையான ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
7. மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதுடன், இடதுசாரிகளை வலுப்படுத்துவதே, நெருக்கடி காலகட்டத்தில் மக்களின் அவல நிலையிலிருந்து அவர்களை வெளிக்கொணரவும், மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தில் அவர்களை அணிதிரட்டவும் உதவும் ஒரே வழியாகும்.
8. அதேசமயம், ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் நச்சுத்தன்மையுள்ள வகுப்புவாத பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளுக்கு எதிராக இடைவிடாத கூட்டுத் தலையீடுகளும் பிரச்சாரங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் பல தொழில் துறைகளில், மற்றும் நகர்ப்புறங்களில் பாஜக செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது மிகவும் கவலைக்குரியது. மக்களின் விழிப்புணர்வை உயர்த்துவதும், வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளைத் தனிமைப்படுத்துவதும் நமது மிக முக்கியமான பணியாகும்.
9. சமூக மாற்றம் என்ற உயர்ந்த உணர்வை நோக்கிய மாற்று அரசியலுடன், அனைத்து நடவடிக்கைகளையும் இணைப்பதற்கான முயற்சி இருக்க வேண்டும்.
10. நம் முன்னால் உள்ள உடனடி கடமை என்னவென்றால், நவீனதாராளவாதக் கொள்கைகள் மற்றும் பாசிச எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாடு முழுவதும் அணிதிரட்டல்களை தீவிரப்படுத்துவதும் எதிர்ப்பை அதிகரிப்பதுமே ஆகும். இது துறைவாரியாகவும் சங்க மட்டத்திலும் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
