
பாரீஸ் கம்யூன்: உழைக்கும் வர்க்கத்தின் தியாகத் தீப்பிழம்பு
மே 28 பாரீஸ் கம்யூன் நினைவுநாள்
வீ. பா. கணேசன்
‘இழப்பதற்கு அடிமைச்சங்கிலிகளைத் தவிர வேறில்லை; ஆனால் வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது’ என்று பாட்டாளி வர்க்கத்தை நோக்கி மார்க்ஸும் எங்கெல்ஸும் 1848ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கையில் அறைகூவல் விடுத்தனர்.
சரியாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸின் பாட்டாளி வர்க்கம் அத்தகையதொரு பொன்னுலகைப் படைக்க எடுத்த முயற்சியே பாரீஸ் கம்யூன். 1871 மார்ச் 18 முதல் மே 28 வரையிலான 72 நாட்களுக்கு மட்டுமே நீடித்த பாரீஸ் கம்யூன்வாதிகளின் ஆட்சி, மார்க்ஸ்-எங்கெல்ஸுக்கு மட்டுமின்றி, அவர்களுக்குப் பின்னால் வந்த லெனின் போன்ற பாட்டாளி வர்க்கத் தலைவர்களுக்கும் வலுவான தத்துவார்த்தப் படிப்பினைகளை வழங்கியது.
எவ்வித பாலின வேறுபாடுமின்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை உயிர்துறக்கச் செய்த இந்த எழுச்சியே பாட்டாளி வர்க்கம் எவ்வகையிலும் பழைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசமைப்பை கையிலெடுத்துச் செயல்படாமல், தனக்கேயுரிய புதியதொரு அரசமைப்பை உருவாக்கிக் கொள்வது அவசியம் என்ற கருத்தாக்கத்தை அவர்கள் ஆழமாக வலியுறுத்த வழிவகுத்தது.
பாரீஸ் நகரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தி பிரதிநிதிகளை தேர்வு செய்து ஆட்சி நடத்திய இந்த எழுச்சியாளர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் அன்றைய வரலாற்றில் தனித்துவம் பெற்றவை. கம்யூன் ஆட்சி முற்போக்கான, மத எதிர்ப்புக் கொள்கைகளை ஊக்குவித்தது. மதத்தையும் அரசையும் பிரிப்பது; சுய காவல் முறை; வாடகை பாக்கிகளை தள்ளுபடி செய்தல்; பிரஷ்ய நாட்டு முற்றுகை காலத்தில் தொழிலாளர்கள் அடகு வைத்த பொருட்களை திரும்பப் பெறுதல்; குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்; இரவு நேரங்களில் பேக்கரி செயல்படுவதற்குத் தடை; உரிமையாளர்களால் கைவிடப்பட்ட எந்தவொரு தொழில்நிறுவனத்தையும் (உரிய நஷ்ட ஈட்டுடன்) அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களே கூட்டுறவு முறையில் நிர்வகிக்க அனுமதியளித்தல் போன்றவை அவற்றில் ஒரு சில.
கம்யூன் வீழ்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சர்வதேச உழைப்பாளர் கழகத்தில் பாரீஸ் கம்யூன் குறித்து உரையாற்றிய கார்ல் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘அடிப்படையில், அது ஒரு தொழிலாளி வர்க்க அரசே ஆகும். உழைப்பை அபகரிக்கும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தின் விளைவே ஆகும். அது, உழைப்பாளர்களின் பொருளாதாரரீதியான விடுதலைக்கு வழிவகுக்கும் வகையில் ஒருவழியாக அவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஓர் அரசியல் வடிவமே ஆகும்.’ என்று கூறிய அவர், ‘தொழிலாளி வர்க்கம் ஏற்கனவே இருக்கும் அரசின் சட்டகத்தை தனது நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது’ என்றும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார்.
1891ஆம் ஆண்டில் சர்வதேச உழைப்பாளர் கழகத்தில் பாரீஸ் கம்யூன் பற்றி மார்க்ஸ் ஆற்றிய மூன்று உரைகளையும் தொகுத்து ஒரு பிரசுரமாக (பிரான்சில் உள்நாட்டுப் போர்) வெளியிட்ட எங்கெல்ஸ், அதன் முன்னுரையில் இந்த அம்சம் குறித்து மேலும் கூர்மையாக விளக்கினார்: “ஒரு புறத்தில், தனக்கு எதிராக முன்பு பயன்படுத்தப்பட்ட அனைத்து பழைய ஒடுக்குமுறை இயந்திரங்களையும் தொழிலாளி வர்க்கம் அகற்ற வேண்டும், மறுபுறத்தில், தன் சொந்த பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புகார் வருமானால், அவர்கள் அனைவரையும் எந்த நேரத்திலும் திரும்பப் பெறுவதற்கு உட்பட்டவர்களாக அறிவித்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.” இறுதியில் அந்த ஆட்சியின் தத்துவார்த்த அடித்தளத்தையும் அவர் விளக்கினார்: “எவ்வாறிருப்பினும், உண்மையில், அரசு என்பது ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கம் ஒடுக்குவதற்கான ஓர் இயந்திரத்தைத் தவிர வேறொன்றுமில்லை; உண்மையில், ஒரு ஜனநாயகக் குடியரசில், முடியாட்சியைப் போலவே அடக்குமுறைக்குச் சற்றும் குறைவில்லை.”
எங்கெல்ஸின் இந்த விளக்கம் வெளியாகி இருபதாண்டுகளுக்குப் பிறகு, 1917ஆம் ஆண்டுப் புரட்சிக்கு இடையே, கம்யூன் குறித்த மார்க்ஸின் உரையை மீண்டும் நினைவூட்டிய லெனின் பாரம்பரியமான அரசின் ஆபத்துகளை சுட்டிக் காட்டினார். “நாடாளுமன்ற அமைப்பு மட்டுமல்ல; பழைய அரசு அமைப்புகள் அனைத்தும் தகர்த்து நொறுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பாட்டாளி வர்க்க நிர்வாகத்தின் புதிய வடிவங்களை இட்டு நிரப்ப வேண்டியுள்ளது.”
முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சமூக அம்சங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதைப் போலவே, பாட்டாளி வர்க்கமும் புதிய சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற பாடத்தை உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குப் புகட்டிய பாரீஸ் கம்யூன் எழுச்சியை என்றும் நினைவு கூர்வது உழைப்பாளர்களாகிய நமது கடமையாகும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply