திசை மாற்றத்திற்கான அத்தியாவசியக் கொள்கை
பேரா. சி.டி. குரியன்
கருத்தியல் ரீதியான தர்க்கப் பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்தும் இன்றைய வகுப்பறைப் பொருளியலைப் போலன்றி, நிஜவாழ்வுப் பொருளியல் (Real Life Economy -RLE) பொருளியலைக் கற்க நம் எல்லோரின் அனுபவபூர்வ யதார்த்தமான சில துப்புக்களாகும். பொருளியல் ஒரு அனுபவபூர்வ யதார்த்தம் என்பதால், அது வரலாற்றுரீதியாக, புவியியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, நம்மோடு தொடர்புடையது. எனினும் எந்தப் பொருளாதாரத்தின் குறிப்பான அம்சங்களையும் நாம் தர்க்கரீதியாக அறிந்து, ஆராய முடியும்.
ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத்தை தர்க்க ரீதியாக ஆராயும் திறனைப் பெற, கீழ்கண்ட காட்டல்களைப் பயன்படுத்தலாம்:
அ) மனிதர்களின் உயிர் வாழும் ஆசைதான் உற்பத்தியை அடிப்படை நடவடிக்கையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குகிறது. காலப்போக்கில் பரிவர்த்தனை போன்ற மற்ற நடவடிக்கைகள் வர, லாபம் பெறவேண்டும் என்ற சிலரின் ஆசை பொருளாதார நடவடிக்கைகளைச் செலுத்தும் முக்கிய சக்தியாகிறது. காலப்போக்கில், இது பொருளாதார சமூக உறவுகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
ஆ) இயல்பான உறவுகள் இருந்த குடும்பங்களைத் தாண்டி நாம் நகரும்போது, உடைமையுரிமை வளங்களின் மீதான ஆதிக்கம் ஆகியவை இந்த உறவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாகின்றன. உடைமையுரிமை பொருளாதார உறவுகளின் அடிப்படையாகும்போது, யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்? யாருக்கு எது கிடைக்கிறது? என்ற மூன்று கேள்விகளின் மூலம் நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம். இந்த ஒவ்வொரு கேள்வியிலும், ‘யார்’ ‘எது’ என்பது அந்தந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இல்லாவிட்டால், இக்கேள்விகளால் பயனில்லை. அப்படிப் பொருத்தமாக இருக்கும்போது, அவை அருமையான ஆய்வுக் கருவிகளாக மாறும்.
இ) பொருளாதாரம் நிறுவன மையப்பட்ட இடைச்செயலாற்றல்களின் சிக்கலான வலைப்பின்னல். அது பரிவர்த்தனையில் ஆரம்பித்து சந்தையாக அல்லது சந்தைகளின் பல வடிவங்களாக மாறுகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளும் இணைந்து சிக்கலை அதிகரிக்கின்றன.
ஈ) தகவல் சமச்சீரின்மை, பரிவர்த்தனைக்கான பொதுவான ஊடகம், அதைத் தொடரச் செய்வதற்கான அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்து இடைச்செயலாற்றல் அமையும்.
உ) பொருளாதாரம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட பல்லடுக்கு நிறுவனம். எனவே அதை பல கோணங்களில் பார்க்கவேண்டும். பல மட்டங்களில் ஆராய வேண்டும்.
ஊ) செல்வம் சேர்க்க லாபத்தைத் துரத்தும் முடிவற்ற ஆசைதான் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சம். செல்வம் தனது பருப்பொருள் ரீதியான தன்மைகளை இழந்துவிட்டது. இப்போது அது மதிப்பு உயர்வாகவே கருதப்படுகிறது. வங்கிகள், நிதி போன்றவற்றின் சந்தை இடைச்செயலாற்றல்களால், மதிப்பு என்பது அனைத்தையும் பணரீதியாக மாற்றுகிறது. லாபம், செல்வத்திற்கான வேட்கையானது, மனிதர்களை இயற்கையின் கொடைகளை பலியிடுவதற்கு இட்டுச் சென்றுவிட்டது. எனவே வேகமாகப் பரவி வரும் முதலாளித்துவம் என்பது சமூகத்தின் நியாயமான, அமைதியான நியதிகளை மறுப்பதாகும். அது கொண்டுவரும் ‘வளர்ச்சி’ செயற்கையானது; அநியாயமானது. அது பொருளாதார அமைப்பில் ஏற்றத்தாழ்வை அதிகரித்து, சிலருக்கு அதிகரிக்கும் செல்வத்தையும், பலருக்கு அதிகரிக்கும் சீரழிவையும் தருகிறது. இப்படிப்பட்ட அமைப்பு, குறிப்பாக அதன் நடவடிக்கைகள், பகுத்தறிவிற்குப் புறம்பான ஆர்வமிக்கதாக இருக்கும்போது, அதனுள் இச்சமூகத்தைச் சீரழிக்கும் உள்ளார்ந்த மனச் சார்பு கொண்டதாக இருக்கிறது.
பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி
இதுவரை நாம் பார்த்த பிரச்சனைகளின் சாரம்தான் மேலே (ஊ) வில் சொல்லப்பட்ட கருத்து. அதை இன்னும் சற்று விரிவுபடுத்துவோம். பொருளாதாரம் வரலாற்று ரீதியாக பரிணமிக்கும் ஒரு அமைப்பு. எனவே, அதன் பரிணாம வளர்ச்சியை வரலாற்று ரீதியாக அணுக வேண்டும். அப்பொழுதுதான் மாறிவரும் அதன் நிறுவனச் சூழலை புரிந்துகொள்ள முடியும்.
வரலாற்று ரீதியான பரிணாமத்தை, நாம் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது, உயிர் பிழைக்கும் பிரச்சனைகளில் கவனம் செலுத்திய பல்வேறு உள்ளூர் சமூகங்களின் காலம். இதுதான் மனித வரலாற்றில் நீண்ட நெடிய காலம். இரண்டாவது கட்டம் என்பது நிலையான வேளாண்மை, ஓரளவு பொதுவான நிலமையாக மாறிய காலம். இதனால் நிலம் அடிப்படையான வளமானது. அதன் மீதான அதிகாரம் முக்கியமான பொருளாதாரப் பிரச்சனையானது. இக்கட்டத்தில், உலகின் பல பாகங்களிலும், பலவிதமான நடைமுறைகள் இருந்தாலும், இதற்கு ‘நிலப்பிரபுத்துவம்’ என்ற பெயர் பரவலாக வழங்கப்பட்டது. நிலப்பிரபுத்துவம், பல படிநிலைகளைக் கொண்ட அமைப்பு. இந்தப் படிநிலையில், மேலும் கீழும் இருப்போரிடையே, ஓரளவு நேரடியான உறவுகள் இருக்கும். இவ்வகையில், இந்த அமைப்பில் அதிகமான இடைச்செயலாற்றல் கிடையாது. உயிர்வாழத் தேவையான அளவிற்கு மேல் உபரி உருவானதும், நிலத்தை ஆதிக்கம் செலுத்தியவர்கள், இதைப் பயன்படுத்தியதும், நிலப்பிரபுத்துவத்தின் முக்கிய அம்சம். அதை அவர்கள் வசதியான வாழ்விற்கும், போர்களுக்கும் பயன்படுத்தினார்கள். கண்ணுக்குப் புலப்படும் சொத்துக்களாக மாற்றினார்கள். எனினும், இந்த அமைப்பு அடிமட்டத்தில் இருப்பவர்களும் உயிர் பிழைப்பதை உறுதி செய்தது. ஏனெனில் அவர்களது வாழ்வை, உழைப்பைத்தான் இந்த அமைப்பு நம்பியிருந்தது. நிலப்பிரபுத்துவ காலத்தில்தான் ஒரு புதிய வர்க்கமாக வர்த்தகர்கள் உருவானார்கள். வர்த்தகம் செல்வத்தைச் சேர்க்கும் புதிய வழிமுறையானது, வர்த்தகர்களின் செல்வம் சேர்க்கும் நடவடிக்கைகள். சமூகத்தை ஒருபுறம் பணக்காரர்கள், மறுபுறம் ஏழைகள் நடுவே, வயிறுப்பாட்டிற்காக நிலத்தில் இன்னும் உழைத்துக் கொண்டிருப்போர் என்பதாகப் பிரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தது.
இவ்வகையான சமூகப்பொருளாதார அமைப்பிலிருந்துதான், முதலாளித்துவம் என்று அழைக்கப்படும் மூன்றாவது பொருளாதார காலகட்டம் உருவானது. இது சேர்த்து வைக்கப்பட்ட உபரிகளைத் திரட்டி பெரிய அளவிலான உற்பத்தியை, அக்காலகட்டத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உழைப்பைத் தவிர, விற்க எதுவுமில்லாத உழைப்பாளர்கள் துணையோடு ஆரம்பித்தது. தொழிலாளர்கள் உருவாக்கிய உபரி அனைத்தையும், தமது உடைமையுரிமையின் பங்காக முதலாளிகள் எடுத்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இந்த உபரியை, உற்பத்தியைப் பெருக்கப் பயன்படுத்தினார்கள். இதனால், பல்வேறு வகையான பொருட்களின் உற்பத்தி படிப்படியாக வளர்ந்தது. சந்தை எல்லாவற்றையும் வருமானமாக மதிப்பிட்டது. சிறிதுகாலம் முக்கியத்துவம் வர்த்தகத்திலிருந்து உற்பத்திக்கு மாறியது. ஆனால் உற்பத்தியான அனைத்தையும் விற்றாக வேண்டிய கட்டாயத்தால் முதலாளித்துவ தொழிலதிபர்கள் வர்த்தகத்தோடான இணைப்பை மீண்டும் நிறுவியது மட்டுமின்றி, பொருளாதாரத்தில் அதனை முன்னெடுத்துச் செல்லும் பங்கையும் மீண்டும் கொண்டு வந்தார்கள். தொழில் முதலாளித்துவமும், வர்த்தக முதலாளித்துவமும் பிரிக்க முடியாதவையாகிவிட்டன. இவர்களின் இணைப்பு வங்கிகளால் நடந்தது. அவை ஆங்காங்கே உள்ள உபரிகளைத் திரட்டி, ஒரு சிலரது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. இவ்வாறாக, முதலாளித்துவம் இடைச்செயலாற்றல் நடவடிக்கைகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் பொருளாதார அமைப்பாக மாறியது.
தொழில் மற்றும் வர்த்தக முதலாளித்துவத்தின் ஒன்றிணைந்த
பொருளாதார பலம் எல்லா புவியியல் தேச எல்லைகளையும் கடந்து
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின்
ஆரம்பத்திலும், உலகெங்கும் பரவியது. முதலாளித்துவத்தின் பாதை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்வதாக இல்லை. அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இக்காலகட்டம், முதலாளித்துவ உலக சக்திகளின் ஒரு போருடன் முடிவிற்கு வந்தது. அதுவே இரண்டாம் உலகப்போர்.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், உலகம் பல முக்கிய அரசியல் மாற்றங்களாகச் சந்தித்ததுடன், அமெரிக்காவின் தலைமையிலான முதலாளித்துவ முகாம், அந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாளித்துவப் பாதையிலிருந்து விலகி, பல்வேறு வகை சோஷலிஸ நாடுகளாக, சோவியத் ஒன்றிய கிழக்கு ஐரோப்பாவில் அதன் நேச நாடுகள் இணைந்த சோஷலிச முகாம் என உலகம் இரண்டாகப் பிரிந்தது. எனினும் அந்த நூற்றாண்டின் இறுதியில் இந்த முகாம்கள் சிதறின.
இதனிடையே, தொழில் – வர்த்தக முதலாளித்துவம் நிறம் மாறி, நிதியாக உருவானது. இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே வளர்ந்து வந்து, 1980 களில் முதலாளித்துவ சக்தியின் பலமிக்க வெளிப்பாடாக மாறியது. இந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், அதை உலகளாவியதாக மாற்றியது. அந்தப் பத்தாண்டிலிருந்து நிதி முதலாளித்துவம் உலகளாவிய ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார வடிவமாக மாறி, இன்னும் சோஷலிஸ்ட் என்று சொல்லிக் கொண்ட நாடுகளையும் தன் ஆதிக்கத்தின் கீழ் இழுத்தது.
பொருளாதார நடவடிக்கைகளின் உற்பத்தி வர்த்தகம், ஊகம் அனைத்து அம்சங்களையும் நிதி முதலாளித்துவம் ஆக்ரமித்தது. இன்று முதலாளித்துவத்தின் நோக்கத்தைச் செலுத்துவதான உடனடி லாபத்திற்கு மூன்றாவது அம்சம்தான் நிச்சயமான வழி என்பதால், அதன் ஆதிக்கம், பெருமளவிற்கு தேசியப் பொருளாதாரங்களுக்கு குறுகிய கால வளத்தை உருவாக்குவதில் அது வெற்றி பெற்றது. ஆனால், இந்த மேலோட்டமான முன்னேற்றத்தைத் தொடர்ந்து, நீண்ட காலத்திற்கு பொருளாதாரச் செயல்பாடு மந்தமாக இருந்ததால். உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கான மக்களை அது மோசமாகத் தாக்கியது. ஆனாலும் இன்றுவரை அது எதிர்க்கப்படாமல்தான் இருக்கிறது. காரணம், பரந்து விரிந்துள்ள மோசமான நிலைமைகள், வசதிபடைத்த பணக்காரர்களுக்கு தம் செல்வத்தை அதிகரித்துக் கொள்ள, அவை வாய்ப்புகளைத் தந்துள்ளன. எனவே, உலகின் எல்லா பகுதிகளிலும் வளர்ந்த வளரும் நாடுகளிலும், நிதி மூலதனம் அதிக எண்ணிக்கையில் பில்லியனர்களை உற்பத்தி செய்கிறது. மேலும் அதிகமான மக்களை மோசமான பொருளாதார பாதிப்புக்களுக்கு எளிதில் இரையாகும்படித் தள்ளுகின்றன. வேகமாகப் பரவும் முதலாளித்துவம், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இடைச்செயல்பாட்டாளர்களை உருவாக்குகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள், தகவல் சமச்சீரின்மை பன்மடங்கு அதிகரிக்கத் தேவையான நிலமைகளை உருவாக்குகின்றன. இது நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடைச்செயல்பாட்டாளர்களுக்கு உதவுகிறது.
முதலாளித்துவ பொருளாதார முறையை நியாயப்படுத்தி, பரப்பும். பெரும்பான்மை பொருளியல் கோட்பாடுகள், இன்னமும் பொருளாதார நடவடிக்கைகளில் இடைச்செயலாற்றலின் பங்கை உணராதது பெரிய முரண்.
ஆரம்ப காலங்களில், முதலாளித்துவம் ஒரு விடுதலை தரும் சக்தியாக இருந்தது. அதற்கு முந்தைய உற்பத்தி முறையின் கீழ் இருந்த தேக்க நிலையை மாற்றி, உற்பத்தியை, குறிப்பாக தொழிற்சாலை உற்பத்தியை, கணிசமாக அதிகரித்தது. முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டம் பற்றிய இந்த வாசகங்களைப் பாருங்கள்: “எகிப்திய பிரமிடுகள், ரோமானிய நீர்வழிகள், கோதிக் கதீட்ரல்கள் போன்றவற்றை விஞ்சும் அதிசயங்களை அது நிகழ்த்தியது. பஞ்சம் நிறைந்த நூறு ஆண்டுகளில், அதன் ஆட்சியில், அது தனக்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் உற்பத்தி செய்ததைவிட, அதிகமாக உற்பத்தி செய்தது. இயற்கையின் சக்தியை மனிதனுக்கு அடிபணிய வைத்தது. இயந்திரங்கள், தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்திற்கும் வேதியியலைப் பயன்படுத்தியது. நீராவிக் கப்பல், ரயில்வே, மின்சாரம், தந்தி, முழுக் கண்டங்களையும் விவசாயத்திற்காக, பண்படுத்தியது; நதிகளில் கால்வாய்கள் வெட்டியது; சமூகத்தின் மடியில் இத்தனை உற்பத்தி சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறது என்று பழைய நூற்றாண்டுகளில் யாராவது நினைத்தாவது பார்த்திருப்பீர்களா?” 1848இல் இதை எழுதியவர் முதலாளித்துவத்தின் பரம எதிரி என்று கருதப்படும் கார்ல் மார்க்ஸ் தான் (எங்கெல்சுடன் இணைந்து) இந்த வரிகளை எழுதியவர் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம். ஆனால் பெரிய அளவில் உற்பத்தி என்ற அதன் அமைப்பிற்கு ஆங்காங்கே சிதறியிருந்த உபரிகளை பெரிய அளவில் திரட்டுவதும் அவசியமானது. கூட்டுப் பங்கு நிறுவனங்கள், வங்கிகள் என்ற புதிய இடைச்செயலாற்றும் நிறுவனங்கள் மூலம், இந்த உபரி தொழிற்சாலைகளின் முன்னோடிகள் சிலருக்குக் கிடைத்தது. நிறுவன ஏற்பாடுகள், இந்த சிலரை உற்பத்தி மூலம் கிடைத்த உபரிக்கும் சொந்தக்காரர்களாக்கின. இது ஒரு சிலர் கையில் செல்வம் குவிவதற்கு இட்டுச் சென்றது. உழைப்பாளர்களால் உருவான உபரி உரிமையாளர் கைக்குப் போகும் இந்த உள்ளார்ந்த செயல்முறை, முதலாளித்துவம் பற்றி எழுதிய ஆரம்ப கால, அறிஞர்கள் பலரும், உற்பத்தியை அதிகரிக்கும் அதன் தன்மையை மட்டும் பார்த்தபோது, மார்க்ஸ் ஒருவர்தான், இந்தத் தன்மையைப் பாராட்டியதோடு, அதன் நேர் கோடில்லாத இயங்குவியலையும், அதன் உள் முரண்பாடுகளையும் பார்த்தார். முதலாளித்துவத்தின் இந்த இயங்குவியல், ஒருசிலரின் கையில் மிக அதிகமான வளங்களையும், அதிகாரத்தையும், குவியச் செய்து உற்பத்தியையே சிக்கலாக்கிவிடும் என்று கணித்த அவரது மேதமை போற்றுதலுக்குரியது.
இப்படியாக நிதிமூலதனம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்டது. ஆனால், இந்த அமைப்பால் லாபமடைந்தோர், அந்த அமைப்பைச் செலுத்தும் சக்திகளை வலுப்படுத்துவதில் மேலும் உறுதியாக இருந்தனர். நாம் எல்லோரும் இந்த அமைப்பிற்குள்தான் இருக்கிறோம். பல வழிகளில் அதனால் லாபமும் அடைந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதனால்தான் நம்மால் அதன் பல சோர்வூட்டும் அம்சங்களைப் பார்க்க முடியவில்லை; அல்லது பார்க்க விரும்பவில்லை. பெரிய முரண்பாடாக, இந்த அமைப்பால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாலும், அதை நிராகரிக்க முடியாது. காரணம், அவர்களது அன்றாட வாழ்வு அதை மிகவும் நம்பியிருக்கிறது. அதனுள் இருக்கும் அனைவரையும் இப்படி வெளியே தெரியாமல் மனிதத்தன்மை நீக்கம் செய்வது முதலாளித்துவத்தின் ஒரு குணாம்சம்.
மாற்று?
இப்படி அனைத்திலும் பரவக்கூடிய ஒரு பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று நினைத்துப்பார்ப்பதே கடினமாக இருக்கிறது. மாற்று ஏதாவது இருக்கிறதா? மார்க்சின் வழியில் சிந்தித்தால், தனியார் சொத்துரிமையின் அடிப்படையில் இல்லாத ஒரு புதிய சமூகபொருளாதார அமைப்புதான் முதலாளித்துவத்திற்கு மாற்றாக இருக்க முடியும். இது நியாயமாகவே தெரிகிறது. முதலாளித்துவத்திற்கு வரக்கூடிய மாற்றுக்கான கொள்கைகளை வரையறுப்பதும், இங்கிருந்து அதற்கு எப்படிச் செல்வது என்று வழிகாட்டுவதும்தான் பிரச்சனை. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, இருபதாம் நூற்றாண்டில் புரட்சி செய்து, தொழிலாளர்களின் கட்சி ஆட்சியைப் பிடித்து, சோவியத் யூனியனை உருவாக்கியது. தொடர்ந்து, இத்திசையில் சில பரிசோதனைகள் நடந்துள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சோஷலிஸம் என்ற புதிய பொருளாதார அரசியல் அமைப்பின் கீழ் வந்தன. போன நூற்றாண்டின் மத்தியில், பழைய ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, சீனா சோஷலிச முகாமில் இணைந்தது. அடுத்தடுத்து வேறு சில நாடுகளும் இதில் சேர்ந்ததால், 1980 களின் ஆரம்பத்தில், உலகின் மூன்றில் ஒரு பகுதி முதலாளித்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளாதார அமைப்பின்கீழ் வந்தன. ஆனால், பத்தாண்டுகளுக்குள் அவற்றில் பல சிதைந்தன. சோவியத் யூனியனே முதலாளித்துவ முறைக்குத் திரும்பியது. சீனா, இன்றளவும் ஒரு திருப்திகரமான மாற்று ஏற்பாட்டிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.
சோஷலிஸம் ஏன் தோற்றது என்று விரிவாக ஆராயாமலேயே இரு தொடர்புடைய காரணங்களைக் கண்டுபிடிக்க நம்மால் முடியும். முதலாவது, தனியார் சொத்துரிமை நீக்கப்பட்டபோது, அதன் இடத்திற்கு அரசு சொத்துரிமை வந்துவிட்டது. புதிய சமூக பொருளாதார அமைப்பு செயல்படுத்துவதற்கு, அரசு உதிர்ந்து போக வேண்டும் என்பதில் மார்க்ஸ் தெளிவாக இருந்தார். முதல் காரணத்திற்கு நெருங்கிய தொடர்புடைய, இரண்டாவது காரணம் என்னவென்றால், பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளின் அரசுகளைவிட சோஷலிச சமூகங்களில் இருந்த அரசுகள் மிகவும் பலம் பொருந்தியதாக உருவாகிவிட்டன. இந்தப் பலம், பெரும்பாலான மக்கள் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தப் பயன்பட்டாலும், கூடவே மக்கள் உரிமைகளை – குறிப்பாக பேச்சுரிமையை, மாற்றுக் கருத்துக் கொள்வதற்கான உரிமையை நசுக்கிவிட்டன. இவ்வாறாக, அரசு எனப்பட்ட பலம் பொருந்திய சிலரின் குழு, உதிர்ந்து போவதற்குப் பதிலாக சர்வாதிகாரமாக மாற்றிவிட்டது. இறுதியில் மக்கள் இவற்றைத் தூக்கியெறிய நேரிட்டது.
இந்த ஆரம்ப காலப் பரிசோதனைகளின் தோல்வியால், முதலாளித்துவத்திற்கான எல்லா மாற்று வழிகளும் அழிந்துவிட்டன என்று அர்த்தமல்ல. இந்தப் பரிசோதனைகள் எல்லாம் விண்வெளிப் பயணத்திற்கான ஆரம்ப காலப் பரிசோதனைகள் போன்றவை. ஒரு புதிய பரிமாணத்திற்கான ஆரம்ப கட்ட திடீர் முயற்சி, சோஷலிசத்தில் நடந்த இந்த பரிசோதனைகளை, வரலாற்று ரீதியாக பரிணமித்து வரும் ஒன்றிற்கு மாறாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொருளாதார முறை சாத்தியம் என்பதைக் காட்டியிருக்கின்றன. அதன் தோல்விகளிலிருந்தும் பாடம் கற்பது மிகவும் முக்கியம்.
முதலாளித்துவம் போன்ற ஒரு சக்திமிக்க, விரைந்து பரவும் ஒரு பொருளாதார அமைப்பு, அதிகார மாற்றம், சொத்து அமைப்பில் மாற்றம் ஆகியவற்றை மட்டும் ஏற்படுத்தவில்லை. மாறாக, பல மட்டங்களிலும், சமூக அமைப்பில் பெரிய மாற்றங்கள் உருவாக்கும் என்பது ஒரு முக்கியமான பாடம். இந்த மாற்றம், தனி நபர்கள், சமூகங்கள், அதிகார அமைப்புகள் என்று எல்லா மட்டங்களையும் உள்ளடக்கியது. தனியார் சொத்துரிமையை ரத்து செய்தல், அரசு உதிர்ந்து போதல் என்பது போன்றது. முதலாளித்துவத்தின் நச்சுத் தன்மைகளைக் கழித்துவிடுவதுதான், முதலாளித்துவத்திற்கான மாற்று என்பதால் பெரும்பாலும் கருதப்படுகிறது. எனினும் தேவைப்படுவது, முதலாளித்துவத்தை நிராகரிப்பதல்ல; அதைக் கடந்து செல்வது.
இப்படிப்பட்ட மாற்று சாத்தியமல்லவா? மனித அறிவால், மனித சக்தியால் இதை அடைய முடியுமா? ‘ஆம், நம்மால் முடியும்’, என்பதே என் பதில். ஆனால் அதற்கு முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பலவீனங்களை வெளிக்கொனர்வதோடு, உறுதிமிக்க, தொடர்ந்த முயற்சியும் தேவை.
என்ன செய்ய வேண்டும்?
மனிதர்களின் துயரைப் பெருமளவு குறைக்கும்படியாக, புதிய சமூகப் பொருளாதார அமைப்பிற்கு வழிகோலுவதாக, ஏதாவது செய்ய முடியுமா? செய்யலாம் என்று நான் நினைக்கிறேன். வேறுபாடுகளை அங்கீகரித்து, மதிக்கும் அதேவேளையில், தனி மனிதர்களின் உரிமை, சமூக நீதி ஆகிய கொள்கைகளையும் அங்கீகரித்து, அனைவரையும் உள்ளடக்குவதாக உள்ள ஒரு ஜனநாயகபூர்வமான அரசியலமைப்புச் சட்டம் நம்மிடம் உள்ளது. இந்த அரசியலமைப்பு, அரசை (அதாவது நம்மை) என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ, அதைச் செய்தால் போதும்.
அ) குடிமக்களுக்கு – ஆண்களுக்கும் பெண்களுக்கும் – வாழ்வதற்குப் போதுமானவற்றிற்கான உரிமை சமமாக இருக்க வேண்டும்.
ஆ) பொது நலனுக்கு உதவும் வகையில் உடைமையுரிமையும், சமூகத்தின் வளங்களும் பகிரப்பட வேண்டும்.
இ) பொருளாதாரச் செயல்பாடு என்பது, பொது நலனுக்குப் பாதகமாக, உற்பத்திவழிமுறைகளும், செல்வமும் குவிவதில் முடியக்கூடாது.
ஈ) ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவேலைக்கு சமஊதியம் இருக்க வேண்டும்.
உ) ஆண், பெண் தொழிலாளர்களின் குழந்தைகளின் ஆரோக்கியமும் உடல்வலிமையும் பாதிக்கக்கூடாது. பொருளாதாரத் தேவைகளுக்காக அவர்களது வயது, உடல் வலிமைக்குப் பொருத்தமில்லாத வேலைகளைச் செய்ய நேரும் நிர்ப்பந்தம் இருக்கக்கூடாது.
ஊ) சுரண்டலிலிருந்தும் பொருள் ரீதியான, ஒழுக்க ரீதியான கைவிடல்களிலிருந்தும், குழந்தைப்பருவமும், இளமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட விரிவான, உன்னதமான பொருளாதாரத் திட்டம் எந்த நாட்டிடமாவது இருக்குமா என்பது சந்தேகமே. மேலே குறிப்பிடப்பட்டவை எல்லாம் அரசியலமைப்பின் அரசுக் கொள்கைக்கான வழிகாட்டல்களில் வருபவை என்பதால், அவை உத்திரவாதப்படுத்தப்பட்ட உரிமைகள் அல்ல. மாறாக, மக்களாகிய நாம், அரசியலமைப்பு ஏற்கப்பட்டபோது அரசுக்கு அளித்த வழிகாட்டுதல்கள். ஆனால் இந்த வழிகாட்டல்களை, அரசு நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக அரசின் கொள்கைகள் முக்கியமான வழிகாட்டல்களாகிய அ, ஆ, இ ஆகியவற்றிற்கு நேரெதிராகச் சென்று கொண்டிருக்கின்றன என்பது தெளிவு. அக்கறையற்ற அரசிற்கு இவற்றைச் சுட்டிக்காட்டி, அதன் பொருளாதார முன்னேற்றக் கொள்கைகளில் உடனடியான திசைமாற்றம் வேண்டும் என்று கோரும் உரிமையும் கடமையும் மக்களாகிய நமக்கு இருக்கிறது. 1970களின் ஆரம்பத்தில் நான் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன். “இந்தியாவின் வளர்ச்சி செயல்முறை இன்றளவும் ஒரு மக்கள் இயக்கமாக மாறாதவரை வளர்ச்சிச் செயல்முறை பலனளிக்காது.” நாற்பதாண்டுகளுக்கு முன் அது எங்கோ ஒரு மூலையில் ஒலித்த குரலாக, அதற்கான காலம் வராத ஒரு கருத்தாக இருந்தாலும், இப்போதும் நான் அதையே சொல்கிறேன். இன்று, மனநிலையும், வாய்ப்புகளும், மிக அதிகமாக சாதகமாகவே உள்ளன.
கடந்த முப்பதாண்டுகளில், குறிப்பாக 1991 இன் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, கிராக்கியால் உந்தப்பட்ட வளர்ச்சி முறை, பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களின் வாழ்வின்மீது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று நிரூபிக்க ஏராளமான ஆவணங்கள் உள்ளன. அதேபோல் செல்வங்கள் மேல்மட்டத்தில் ஒரு சிறு குழுவிடம் குவிந்துள்ளன.
உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உயிர்வாழ சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் உறுதிப்படுத்தப்படுவதுதான் திசை மாற்றத்திற்கான அத்தியாவசியக் கொள்கை. “அதன் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஏழைகளாகத் துன்புறும்போது, எந்த ஒரு சமூகமும், மகிழ்ச்சியாக, செழிப்படைவதாக, கண்டிப்பாக இருக்க முடியாது. தவிரவும், மனித சமூகம் முழுமைக்கும் உண்ணவும், உடுத்தவும், இருக்க இடமும் கொடுக்கும் மக்கள், தாமும் ஓரளவு உண்டு, உடுத்து, ஓரிடத்தில் வாழும் வகையில், தம் சொந்த உழைப்பின் உற்பத்தியில் ஒரு பங்கினைப் பெறுவதுதான் நியாயமானதும் கூட.” இவை முதலாளித்துவத்தின் ஆதரவாளர் என்று பலரும் கருதும் ஆடம் ஸ்மித்தின் வார்த்தைகள்!
உற்பத்தியில் ஈடுபடும் குறைந்த வாழ்க்கைத்தரம் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் இருப்பதால், வளர்ச்சி நடவடிக்கையின் கவனம் கிராமப்புறம் பக்கமாகத் திரும்பவேண்டும். கிராமப்புறங்களில் எளிதில் அபாயங்களில் மாட்டிக் கொள்வோர் யார் என்பதை கடந்த அத்தியாயத்தில் நாம் சுட்டினோம். சிறு விவசாயிகள், நிலமற்ற விவசாயக்கூலிகள், சுயதொழில் செய்வோர் ஆகிய அவர்கள் மிக மோசமான நிலையில் வாழ்கிறார்கள். அவர்களை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அவர்கள், உற்பத்தித் திறனை அதிகரிக்க, நவீன தொழில்நுட்ப அறிவு, கருவிகளின் உதவியோடு அவர்களது பாராம்பரிய அறிவையும், திறமையையும் வெளிக் கொணர்வது அவசியம். அந்தந்தப் பகுதியின் தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி நடவடிக்கைகளை உருவாக்கவது மிகவும் முக்கியமானது.
வாரிசுரிமை வரிகள்
வரிக் கொள்கைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். உயர் வருமானம் உள்ளவர்கள்தான் நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்குக் காரணம் என்ற தவறான அநுமானத்தின் பேரில், பணக்காரத் தனிநபர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவங்களுக்கும் வரிச்சலுகை தருவது, 1980 களிலிருந்து ஒரு முக்கியமான கொள்கையாக இருக்கிறது. வருமானவரி, நிறுவன வரிகளை பெரிதும் குறைத்த ராஜீவ் காந்தியின் 1987-88 பட்ஜெட்டும், 1998 இன் கனவு பட்ஜெட்டும் இதற்கு உதாரணங்கள். ஆனால் பணக்காரர்கள் உற்பத்தி முறையை தமக்கு சாதகமாக மாற்றி, ஏணியின் அடித்தட்டில் உள்ளவர்களுக்கு, எளிய வாழ்விற்கான வழிகளையும் மறுக்கிறார்கள். என்பது தெரியவரும் போது, வரிக்கொள்கைகளை மாற்றித்தான் ஆக வேண்டும். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, வரியும் அதிகரிப்பதுதான் இன்றைய தேவை.
சமீபத்திய வளர்ச்சிக் கொள்கைகளும், அவற்றிற்கேற்ப வடிவமைக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளும்தான் செல்வக்குவியல் அதிகரிப்பதன் காரணம். எனவே, எளிதாக செல்வம் குவிவதைத் தடுக்கும் கடும் நடவடிக்கைகள் தேவை. இப்போது செல்வ அதிகரிப்பு என்பது உற்பத்தி அதிகரிப்பாலோ அல்லது வருமான அதிகரிப்பாலோ ஏற்படுவதில்லை. ஏற்கனவே உள்ள செல்வத்தின் மதிப்பு அதிகரிப்பாலும், புதிதாய் உருவாகியுள்ள பலவகைப்பட்ட பதிலி செல்வங்களாலும்தான் செல்வக்குவியல் ஏற்படுகிறது. ஏற்கனவே சுட்டிக் காட்டியதுபோல், செல்வம் தொடர்பான வரிச்சலுகைகளுடன் இது தொடர்புடையது. எனவே இச்சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட செல்வக்குவியலைக் குறைக்கும் வண்ணம், நேரடிச் சேவை மூலமாக ஈட்டப்படாத வருமானத்திற்கு, கடுமையான வரி விதிக்கப்படவேண்டும்.
நமது சூழலில், பெருமளவு செல்வம், குறிப்பாக நிலம், பரம்பரைச் சொத்தாக வந்து தலைமுறை தலைமுறையாகச் செல்வத்தை அதிகரிக்கிறது. இதில் எவ்வித நியாயமும் இல்லை. எனவே, பொருத்தமான வாரிசுரிமை வரிகள் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இத்தாலிய தத்துவஞானி பொருளியல் அறிஞர் யுஜினோ ரிக்னானோ (Evgenio Rignano) கூறிய புரட்சிகரமான வாரிசுரிமை வரி ஆங்கிலம்பேசும் உலகில் கூட பரவலாக விவாதிக்கப்பட்டது. ரிக்னானோ முன்மொழிவு என்று சொல்லப்பட்ட இதன்படி, வாரிசுரிமைவரி, மாறுதல்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாறும். முதல் தலைமுறைக்கு மாறும்போது வரிவிகிதம் கடுமையாக உயர்ந்துகொண்டே செல்லும். இது அரசு வருவாய்க்கு நல்ல ஆதாரம் தருவதோடு, பரம்பரைச் சொத்து என்பதைக் குறைக்கவும், இறுதியில் நீங்கவும் செய்யும். ரிக்னானோ, சொத்து என்று முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திச் சொத்துக்களான இயந்திரம் போன்றவற்றைக் குறிப்பிட்டார். நிலமும் அதிக செல்வத்தை உருவாக்குவதால், நாம் இந்தக் கொள்கையை நிலத்திற்கும் பயன்படுத்தலாம்.
“பரிசுத்தமான, தர்க்கரீதியான சிந்தனை, அனுபவ உலகம் பற்றிய எந்த அறிவையும் நமக்குத்தராது: யதார்த்தத்தின் அத்தனை அறிவும் அனுபவத்தில் ஆரம்பிக்கிறது. அதற்குள்ளேயே முடிகிறது” என்று ஐன்ஸ்டீன் இதைத்தான் சொன்னார்.
(”செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்” (தமிழில் – ச.சுப்பாராவ்) என்கிற பேரா. சி.டி. குரியன் அவர்களுடைய நூலின் இறுதிப்பகுதியின் சுருக்கப்பட்ட வடிவமே இக்கட்டுரை)
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
