
சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்
சுதீப் தத்தா
இந்தியா, தனது நவதாராளமய காலகட்டத்தின் 22வது பொது வேலைநிறுத்தத்தை சமீபத்தில் கண்டது. எனினும், இந்த வேலைநிறுத்தங்கள், ‘பொது’ என்ற முன்னொட்டைத் தாங்கினாலும், தொழிலாளர்களுக்கு மட்டுமேயான சமகால பொருளாதாரப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும், அந்த பிரபலமான கருத்து ஒரு சமூக-உளவியல் வரம்பையும் உருவாக்குகிறது – இது பொது வேலைநிறுத்தங்களின் உண்மையான அரசியல் திறனைப் புரிந்து கொள்வதைத் தடுக்கிறது. இது முதலாளித்துவ அரசுக்கும் ஒட்டுமொத்த அமைப்புக்கும் எதிரான ஆயுதங்களாக வேலைநிறுத்தங்களை மாற்றுவதற்கான இயலாமையை உருவாக்குகிறது. எனவே, முதலாளித்துவத்தின் வளர்ச்சி நிலைகளையும், வழிகளையும், அதன் மிக முக்கிய படைப்பான நவீன தொழிலாளர் வர்க்கத்தையும் புரிந்துகொள்வதற்கு, வேலைநிறுத்தப் போராட்டத்தின் அளவு, தரம் ஆகியவற்றை பற்றிய ஆய்வு அனைத்து தொழிலாளர் வர்க்கக் கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
முதலாளித்துவ விமர்சகர்களும், அதன் ஊதுகுழல்களாக இருப்பவர்களும், எப்போதும் பொது வேலைநிறுத்தங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களை பரப்புவதன் மூலம், அதன் பார்வையை நீர்த்துப்போகச் செய்ய முயன்றுள்ளனர்; அவர்களில் பாதி பேர் அதன் வெற்றி குறித்து கேள்விகளை எழுப்புகையில், மீதமுள்ளவர்கள், அதனால் “பாதிக்கப்பட்ட” ஏழை மக்களின் பொருளாதாரம், வாழ்வாதார இழப்பு ஆகியவை குறித்து புலம்புகின்றனர். அவர்களின் பாசாங்குத்தனத்திற்கும் கோபத்திற்குமான ஒரே பதிலாக அமைவது, வர்க்க உணர்வின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் மூலம் வர்க்கத்தின் பலத்தை வெளிப்படுத்துவதேயாகும். இந்த செயல்பாட்டில், வேலைநிறுத்தம் செய்பவர்கள் தெருவில் தங்கள் எண்ணிக்கையை மதிப்பிடுகிறார்கள்; மேலும் சமூகமானது, தன் உண்மையான உந்து சக்தியாக விளங்கும் உழைக்கும் மக்களின் இருப்பை அங்கீகரிக்கிறது.
எனவே, வேலைநிறுத்த நடவடிக்கை என்பது, பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்போரின் வேலைநிறுத்த சக்தி, அமைப்புத் திறன், வீச்சு ஆகியவை குறித்த ஒரு சுய மதிப்பீடாகும். அதேநேரத்தில், பொது வேலைநிறுத்த நடவடிக்கையானது அரசியல் உணர்வின் அளவை, அதாவது வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு உள்ளே வேலைநிறுத்தம் குறித்த அரசியலின் ஊடுருவல் அளவை சரியாக மதிப்பிடுவதற்கும் இது முக்கியமானது.
சந்தேகத்திற்கு இடமின்றி, பொது வேலைநிறுத்தத்திற்கு ஒரு பெரிய பொருளாதார முக்கியத்துவம் உள்ளது. அது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் சுழற்சியில் ஒரு பிளவை உருவாக்குகிறது – இந்தப் பிளவு ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல், மதிப்பு சங்கிலிகளின் பரந்த வலைப்பின்னல் மற்றும் மதிப்பு குவிப்பின் வெவ்வேறு நிலைகளிலும் உருவாகிறது. உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் அடிப்படையில் மூன்று உழைப்பு செயல்முறைகளின் ஒருங்கிணைப்பாகும்: அ) உழைப்பு, உற்பத்தி சாதனங்கள் மற்றும் மூலப்பொருட்களை ஒன்றிணைக்கும் சேவை, அதாவது உற்பத்திக்கான நிலைமைகளைத் தயாரித்தல்; ஆ) உயிருள்ள உழைப்பை உருவாக்கி, அதை ஒரு புதிய பொருளாக மாற்றும் உற்பத்தி செயல்முறை; மற்றும் இ) புதிய பொருளின் சுழற்சி தொடர்பான சேவை செயல்முறைகள் – போக்குவரத்து, சேமிப்பு மற்றும் பரிமாற்றம் – அதாவது மதிப்பு உணரப்படுதல்.
முதலாளித்துவ உற்பத்தியின் ஒரே நோக்கம் லாபமே ஆகும். மேற்கண்ட அனைத்து செயல்முறைகளும் உபரி மதிப்பை பிரித்தெடுத்தல் மற்றும் உணர்தல் மூலம் லாபத்தை உறுதி செய்வதற்காகவே உள்ளன. பொது வேலைநிறுத்தம் நான்கு வர்க்க செயல்முறைகளில் பிளவுகளை உருவாக்குகிறது – உபரி மதிப்புகளின் உற்பத்தி, கைப்பற்றுதல், விநியோகம் மற்றும் பெறுதல். இந்த நான்கு வர்க்க செயல்முறைகள் மீதான ஒரே நேர தாக்குதல்கள், கடுமையான வர்க்க விரோதத்தை வெளிப்படுத்துகின்றன. அது அரசின் வர்க்க தன்மையை வெளிப்படையாக காட்டுகின்றது. இதனால் ஒரு அடக்குமுறை அரசின் இயக்கி (முதலாளி வர்க்கம்) மற்றும் பொருள் (தொழிலாளி வர்க்கம்) என்ற இரண்டு முகாம்களுக்கு இடையிலான வேறுபாட்டை வெளிப்படையாக்குகின்றன.
ஆனால் பொதுவாகவே இது ஒரு தன்னிச்சையான செயல்முறை அல்ல; இது பொருளாதாரத் தாக்குதலில் இருந்து தானாகவே வெளிப்படுவதில்லை; மாறாக, வேலைநிறுத்தம் செய்பவர்கள் தங்கள் போராட்டம் மற்றும் அனுபவத்தின் மூலம், அரசின் தன்மையை அடையாளம் காண முடிந்தால், பொது வேலைநிறுத்தம் ஒரு அரசியல் வேலைநிறுத்தமாக மாறுகிறது.
இருப்பினும், இந்தியாவின் தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு வியக்கத்தக்க நிகழ்வு தோன்றுகிறது. இதை புரிந்துகொள்ள, இந்தியாவின் சமீபத்திய வேலைநிறுத்தங்களை, அதன் வரலாற்று அனுபவங்கள் மற்றும் பார்வையுடன் நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். மத்திய அரசு ஆண்டுதோறும் “இந்தியாவில் தொழில்துறை தகராறுகள், மூடல்கள், ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் குறித்த புள்ளிவிவரங்கள்” என்ற அறிக்கையை வெளியிடுகிறது – இருப்பினும் பொதுத்தளத்தில் நமக்குக் கடைசியாக கிடைக்கும் அறிக்கை 2023இல் வெளியிடப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களின் அறிக்கைகளின் ஆய்வு, இந்த காலகட்டத்தில் தொழில்துறை வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை, வேலைநிறுத்தம் செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மனித வேலை நாட்கள் இழப்பு ஆகியவை வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது. அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில் பொது வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடப்பவையாகவும், பரந்துபட்ட பங்கேற்பு கொண்டதாகவும், போர்க்குணம் மிக்கதாகவும் மாறிவிட்டன. முதல் பார்வையில், இது தொழில்துறை மற்றும் பொது (பொருளாதார மற்றும் அரசியல்) வேலைநிறுத்தங்களுக்கு இடையிலான உறவு குறித்த நமது பாரம்பரிய புரிதலில் இருந்து ஒரு விலகலாகத் தெரியலாம்.
தோழர் லெனின் 1912ஆம் ஆண்டு எழுதிய “பொருளாதார மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்கள்” என்ற கட்டுரையில், இவ்வாறு எழுதியிருந்தார்: “உதாரணமாக, 1905ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வேலைநிறுத்தங்கள், அரசியல் வேலைநிறுத்தங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கி இருந்தன… இருப்பினும், 1905ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், இந்த விகிதம் தலைகீழாக மாறியது… ஆனால் எல்லா நேரத்திலும் பொருளாதார மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்களுக்கு இடையே ஒரு தொடர்பு இருந்தது.” தற்போதைய இந்திய சூழ்நிலையில், கள நிலைமை நிச்சயமாக வேறுபட்டதாகத் தெரிகிறது. உற்பத்தி செயல்முறையிலும் வேலைவாய்ப்பு உறவிலும் ஏற்பட்ட மாற்றங்கள், மொத்த சமூக உற்பத்தி-மீளுருவாக்க சூழலும் உபரியை சுரண்டுவதற்கான ஒரு பிரம்மாண்டமான முதலாளித்துவ இயந்திரமாக கட்டமைக்கப்பட்டு உள்ளதில் இதற்கான காரணம் அடங்கி உள்ளது.
போக்குவரத்து, தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு செயல்பாடுகளின் விளைவாக, வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டுள்ள நவீன முதலாளித்துவத்தில், தொழில்துறை உற்பத்தி செயல்முறையானது பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கல் மற்றும் அதன் காரணமாக உருவான வெவ்வேறு பொருளாதார மண்டலங்கள், மூலதனத்தின் சேவைக்கு மலிவான உழைப்பு மற்றும் மூலப்பொருட்களை வழங்குவதன் மூலம் இந்த செயல்முறையை எளிதாக்குகிறது. ஒரு வாகன தயாரிப்பு OEM (அசல் உபகரண உற்பத்தியாளர்) தொழிற்சாலையிடம் 200-300 அடுக்கு-1 சப்ளையர்கள் இருக்கலாம்; அவர்கள் என்ஜின்கள், டிரான்ஸ்மிஷன்கள், பிரேக்குகள் மற்றும் மின் அமைப்புகள் போன்ற முக்கிய பாகங்கள், கூறுகள் மற்றும் அமைப்புகளை வழங்குகிறார்கள்; 1,500-2,000 அடுக்கு-2 சப்ளையர்கள் துணை கூறுகள் மற்றும் மூலப்பொருட்களை வழங்குகிறார்கள்; மற்றும் ஆயிரக்கணக்கான அடுக்கு-3 சப்ளையர்கள், அடுக்கு-2 சப்ளையர்களுக்கு மூலப்பொருட்கள், பொருட்கள் மற்றும் அடிப்படை கூறுகளை வழங்குகிறார்கள். அனைத்து அடுக்குகளிலும் மொத்த சப்ளையர்கள் 5,000 க்கும் அதிகமாக உள்ளனர். வேலை செயல்முறையின் இந்த துண்டு துண்டாகப் பிரித்தல், பெரிய, ஒரே கூரையின் கீழ் உற்பத்தி நடக்கும் பழைய ஃபோர்டிஸ கருத்தை (உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் நிறுவனம் ஒரே கூரையின்கீழ் வாகன உற்பத்தியை விரைவாக மேற்கொள்ள முடியும் என்பதை முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனமாகும்) தகர்த்துள்ளது. இந்த பெரிய நிறுவனங்களின் உபரியை சுரண்டும் விகிதம், பெரும்பாலும் அதன் விநியோக சங்கிலியில் உள்ள முதலாளிகளை, அதாவது சப்ளையர்கள் மீது அழுத்தம் தருவதன் மூலம் தொழிலாளர்களை மேலும் சுரண்டும் திறனைப் பொறுத்ததாகும். ஒற்றை நிறுவனத்தில் குறைந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, மதிப்பு சங்கிலியில் கீழே உள்ள முதலாளிகளின் குறைந்த லாப விகிதம், குறைவான மற்றும் நிச்சயமற்ற வேலைவாய்ப்பு, மற்றும் உற்பத்தி சங்கிலி உலகம் முழுவதும் பரவியிருப்பது ஆகிய காரணங்களால், அந்த விநியோக சங்கிலி நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு, ஒருங்கிணைந்த, வலுவான, தீர்க்கமான, தொழில்துறை போராட்டத்தை தங்கள் முதலாளிகளுக்கு எதிராக நடத்த மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது.
இரண்டாவது அம்சம், வேலைவாய்ப்பு செயல்முறையில் நிலவும் ஒழுங்கற்ற தன்மை. மூலோபாய பொதுத்துறை நிறுவனங்களில், ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை மொத்த தொழிலாளர்களில் 70% அல்லது அதற்கு அதிகமாக வந்துள்ளது – தனியார் துறைகளில் இது எவ்வளவு மோசமாக இருக்கும்! குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படும் ஒப்பந்த, குறிப்பிட்ட கால வேலை, அல்லது பயிற்சியாளர் போன்ற நிலையிலுள்ள ஒரு தொழிலாளி, தனது வேலையின் பலவீனமான நிலை காரணமாக இயற்கையாகவே பயப்படுவார். அவர்களுக்கு மாறாக வேலை செய்ய, ஒரு பெரிய வேலையற்ற இளைஞர் படை தொழிற்சாலை வாயிலில் காத்திருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இந்த பிரச்சினைகளுக்கு மேலாக, இன்னபிற சமூக-பாதுகாப்பின்மைகளும் உள்ளன. அவர்களுக்கு வலுவான, குறிப்பிட்ட தொழிற்சாலை அடிப்படையிலான தொழில்துறை நடவடிக்கையை மேற்கொள்ள மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன.
மூன்றாவது முக்கியமான காரணி, நவீன முதலாளித்துவ கருவிகள், இந்திய சமூகத்தின் தொலைதூரத்திலுள்ள, ஆழமான இடங்களுக்கும், உழைக்கும் மக்களின் அனைத்து அடுக்குகளுக்கும் இடையே விரிவடைந்துள்ளன. இது சந்தை, நிதி மற்றும் அரசின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி உள்ளது. இதன் மூலம் கண்ணுக்கு தெரியாத வகையில் உபரியைச் சுரண்டும் ஒரு முறையை நிறுவியுள்ளது. இது, பெரும்பான்மையான மக்களின் மனிதநேயமற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும், தற்காலிகமான, பாதுகாப்பற்ற தொழில்களில் அவர்களை கட்டாயப்படுத்தி இணைப்பதற்கும், அவர்களின் உபரியை கார்ப்பரேட் எஜமானர்களின் கைகளுக்கு மாற்றுவதற்குமாகச் செயல்படுகிறது. சுயதொழில் செய்பவர்கள், சிறு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் – அனைவரும் சந்தை மற்றும் அரசின் கட்டளைகளுக்கு இரையாகிறார்கள். இந்த சுரண்டல் கட்டமைப்பு, பெருமுதலாளிகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தால் நடத்தப்படுகிறது. இந்திய மக்களில் பெரும்பான்மையோர் மனிதநேயமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அவர்கள் தற்போதுள்ள சமூக-அரசியல் அமைப்பின் மீது விரக்தியுடனும் கோபத்துடனும் உள்ளனர்.
எனவே, ஒரு பொது வேலைநிறுத்தம், இந்த “கூட்டுத் தொழிலாளர்களின்” வெவ்வேறு கூறுகள் அனைத்திற்கும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது; இது, ஒரே சீரானதாக இல்லாவிட்டாலும், அவர்களின் வேதனையான இருப்பு மற்றும் கடினமான யதார்த்தத்தின் வலுவான ஒரு சின்னமாகும். மூலோபாய மற்றும் உற்பத்தித் துறைகளில் பணிபுரியும் தொழில்துறை தொழிலாளர்கள், இந்த கூட்டு நடவடிக்கையின் முன்னோடியாக இருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதன் பரவலோ, உழைக்கும் மக்களில் ஒரு பெரிய பகுதியினரிடம் சென்றடைகிறது.
உற்பத்தி செயல்முறையை துண்டு துண்டாகப் பிரிப்பதன் காரணமாக, இறுதிப் பொருள் உற்பத்தியானது, பல்வேறு சேவை-உற்பத்தி கலவையின் நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, மதிப்பு சங்கிலியின் ஒரு பிரிவில், எந்தவொரு அடுக்கிலும், உற்பத்தி அல்லது போக்குவரத்து அல்லது வர்த்தகம் போன்ற சேவைகள் நிறுத்தப்பட்டால், அது முழு மதிப்புச் சங்கிலியையும் பாதிக்கிறது. மேலும் இந்தப் பிளவு வெவ்வேறு புள்ளிகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்டால், அதன் தாக்கம் மேலும் அதிகரிக்கிறது. விநியோக முறையில் ஏற்படும் எதிர்பாராத இடையூறுகளைத் தவிர்க்க, பல சந்தர்ப்பங்களில் முதலாளிகள் கூட பொது வேலைநிறுத்த நாளில் தங்கள் நிறுவனத்தை தானாக முன்வந்து மூடுவதைத் தேர்வு செய்கிறார்கள். நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தத்தின் வலுவான தாக்கத்திற்கான பொருளியல் காரணம் இங்கேதான் அடங்கி உள்ளது.
இதன் மூலம், மாற்றத்திற்கான அரசியல் சக்திகளுக்கு புதிய கடமைகள் எழுகின்றன. பொது வேலைநிறுத்தங்களை ஒரு அரசியல் வேலைநிறுத்தமாக மாற்றுவதற்கான களம் தயாராக உள்ளது – முதலாளித்துவம், தன்னை, பிரம்மாண்டமான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, ஒரு அமைப்பாக நிறுவிக் கொண்டுள்ளது. மேலும் உயிரோட்டமான உழைப்பு அதன் அனைத்து முனைகளிலும் உட்பொதியப்பட்டுள்ளது. எந்த பலவீனமான இணைப்பிலும் வேலைநிறுத்தம் ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தலாம். ஆனால் வேலைநிறுத்தத்தின் தன்மை இன்னும் தற்காப்பு நிலையில்தான் உள்ளது – தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, அவர்களின் வாழ்க்கை மற்றும் வேலைநிலைமைகளை மோசமாக்குகிற மாற்றங்களை எதிர்க்க முயற்சிக்கிறார்கள் (உதாரணமாக, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யக் கோருவது போன்றவை). சரியாக மதிப்பிடப்பட்டு, தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டால், நமது காலத்தின் வேலைநிறுத்த நடவடிக்கைகள் மிகவும் ஆக்ரோஷமான ஆயுதமாக உருவாகும். இது, தற்காப்பான ஒன்றாக மட்டுமல்லாமல், தற்போதுள்ள கள நிலைமையை மாற்றியமைப்பதாகவும் இருக்கும்.
நிச்சயமாக, நெருக்கடியான ஒரு காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து போர்குணமிக்க நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்; ஆனால் அது மட்டும் போதாது. பொது வேலைநிறுத்தத்திற்கு ஒரு உண்மையான அரசியல் தன்மையைக் கொடுக்க, மாற்றத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து பிரபலப்படுத்துவது தேவையாகும்; ஆளும் அரசையும் அமைப்பையும் அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், மாற்றமடைந்த எதிர்கால சமூகத்தின் ஒரு சித்திரத்தை நம்முன் உருவாக்கும் கோரிக்கைகள் தேவைப்படுகின்றன. உறுதியான, நிதர்சனமான மாற்றுகளை முன்வைத்த ஒரு பிரச்சாரம் மட்டுமே, இந்திய சமூகத்தின் இந்தப் பெரிய, சிதறிக் கிடக்கும் உற்பத்தி சக்திக்கு ஒரு நம்பிக்கை ஒளியைக் காட்ட முடியும். அது பொது வேலைநிறுத்தத்தால் ஒன்றிணைக்கப்பட்டு, தன் இருப்பு மற்றும் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. எதிரிகள் சொல்வது போல் – ஒவ்வொரு வேலைநிறுத்தத்தின் பின்னாலும் புரட்சி என்ற அரக்கன் பதுங்கியிருக்கிறான்; எனவே, அடி மேல் அடி கொடுத்து (முதலாளித்துவ) கோட்டையை அசைப்பதே நம் முன்னால் உள்ள கடமையாக அமைகிறது.
தமிழில்: அபிநவ் சூர்யா
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
