
கம்யூனிசக் கோட்பாடுகள்
பிரடெரிக் எங்கெல்ஸ்
தமிழில் : மு. சிவலிங்கம்
கேள்வி 5: பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது?
உழைப்பு என்பது ஏனைய சரக்குகளைப் போலவே ஒரு சரக்காகும். எனவே, அதன் விலையும் பிற சரக்குகளின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாய் ஒரு சரக்கின் விலை எப்போதும் அந்தச் சரக்கின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாய் இருக்கிறது. எனவே, உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாய் இருக்கிறது.
உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப் போவதில்லை. வேறுவகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவினதாய் இருக்கும்.
என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தம்முடைய சரக்குகளுக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே, தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால், தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும், மோசமான நிலைமையிலும் தம்முடைய சரக்குகளுக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவருடைய குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை.
உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெருவீதத் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ, அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது.
கேள்வி 6: தொழில் புரட்சிக்கு முன்னால் நிலவிய தொழிலாளி வர்க்கங்கள் எவை?
தொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை வர்க்கங்களுடனும் ஆளும் வர்க்கங்களுடனும் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன.
பல பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்க நாட்டின் தென்பகுதியில் இப்போதும்கூட இருந்து வருவதைப்போலப் பண்டைக் காலத்தில் தொழிலாளர்கள் உடைமையாளர்களிடம் அடிமைகளாய் இருந்தனர்.
ஹங்கேரி, போலந்து, ருஷ்யா ஆகிய நாடுகளில் இப்போதும் இருந்து வருவதைப்போல, மத்திய காலங்களில் இவர்கள் நிலவுடைமைப் பிரபுக்களின் பண்ணை அடிமைகளாய் இருந்தனர். இவர்கள் தவிர, மத்திய காலங்களில், சொல்லப்போனால் தொழில் புரட்சி காலம் வரையிலும்கூட, நகரங்களில் குட்டி முதலாளித்துவ எஜமானர்களின் சேவையில் வேலை செய்துவந்த கைவினைத் தொழிலாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
கேள்வி 7: பாட்டாளிகள், அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?
அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட ஓர் அடிமையானவன், ஓர் எஜமானனின் சொத்து ஆவான். அந்த எஜமானனின் நலன் கருதியே, அது எவ்வளவு கேவலமானதாக இருந்தபோதிலும், அடிமைக்கென ஒரு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனிப்பட்ட ஒவ்வொரு பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான். பாட்டாளியின் உழைப்பை, அது யாரேனும் ஒரு முதலாளிக்குத் தேவைப்படும்போது மட்டுமே, முதலாளித்துவ வர்க்கம் விலைக்கு வாங்குகிறது. எனவே, தனிப்பட்ட ஒரு பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏதுமில்லை. [பாட்டாளி] வர்க்கம் முழுமைக்குமாகத்தான் அத்தகைய வாழ்க்கை உத்திரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடிமை, போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளியோ, அதனுள்ளேயே நிற்கிறான்; போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.
அடிமை ஒரு பண்டமாகவே கருதப்படுகிறான், சமுதாயத்தின் ஓர் உறுப்பினனாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை, பாட்டாளியானவன் சமூக வளர்ச்சியின் உயர்ந்ததொரு கட்டத்துக்கு உரியவனாகவும், அடிமையைக் காட்டிலும் உயர்ந்ததொரு சமூக அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருக்கின்ற போதிலும், அடிமையானவன் பாட்டாளியைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும்.
அடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்துக்குள்ளும் அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான்; அதன்மூலம் ஒரு பாட்டாளியாகப் பரிணமிக்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.
(தொடரும்)
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply