சீத்தாராம் யெச்சூரி: சமூக மாற்றத்திற்காக உள்ளிருந்து போராடிய நவீன கம்யூனிஸ்ட்
பேரா. பிரபாத் பட்நாயக்
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், செப்டெம்பர் 28 அன்று புதுதில்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஆற்றிய உரை)
இந்த அஞ்சலிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் தோழர் பிரகாஷ் காரத் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே,
சீத்தா என்று நாம் எல்லோரும் அன்புடன் அழைக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி வெறும் தோழர், நண்பர் மட்டுமல்ல; 1973ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தனது எம்.ஏ. படிப்பை அவர் தொடங்கியபோது, அவர் என் மாணவரும் கூட. சீத்தாவும், மிகவும் புத்திக்கூர்மைமிக்க மாணவர்கள் குழுவும் அந்த எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தனர். அப்போது 20களின் பிற்பகுதி அல்லது 30களின் முற்பகுதியில் இருந்த நாங்கள் ஆறுபேர், அந்தத் துறையில் ஆசிரியர்களாக இருந்து, சீத்தாராமுக்கும் மற்ற மாணவர்களுக்கும் கற்பித்தோம். அவர் ஒரு மிகுந்த புத்திக்கூர்மை மிக்க மாணவர். மிகவும் கண்டிப்பான, அதிகமாக வேலைவாங்கக் கூடிய, மிகவும் நுணுக்கமாக எதிர்பார்க்கும் ஆசிரியர்களிடமிருந்தும் கூட அனைத்து தேர்வுகளிலும் முதல் தகுதியைப் பெற்ற ஒரு மாணவராகவும் இருந்தார்.
அவர் தனது ஆராய்ச்சிப் படிப்பிற்காக உலகின் வேறெந்த புகழ்பெற்ற கல்வி நிலையத்திற்கும் சென்றிருக்க முடியும். அத்தகைய புகழ்பெற்ற நிறுவனத்தில் படிப்பதற்காக, தனது கல்விக்குத் தேவையான உதவித் தொகையையும் கூட அவரால் எளிதாகப் பெற்றிருக்க முடியும். அவருக்கு மிக மிக எளிதாக கல்வி உதவித்தொகை கிடைத்திருக்கும். என்றாலும், தனது குழுவில் உள்ள மற்ற மாணவர்களோடு சேர்ந்து, ஜே.என்.யுவில் இருந்து, எங்கள் துறையிலேயே முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்வது என்று அவர் முடிவு செய்தார்.
கல்வித் துறையில் எனக்குள்ள நீண்ட அனுபவத்திலிருந்து என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியாவில் கற்றலுக்கான ஒரு மையம்; ஒரு பல்கலைக்கழகம் இருக்குமெனில், அதன் வெற்றியை, நீங்கள் நல்லதொரு எம்.ஏ. படிப்பை வைத்திருக்கிறீர்களா? அல்லது நல்லதொரு பி.ஏ. படிப்பை வைத்திருக்கிறீர்களா? என்பதை வைத்து வரையறுக்க முடியாது. மாறாக, உங்களிடம் நல்லதொரு ஆய்வுக்கான கட்டமைப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை வைத்துத்தான் வரையறுக்க முடியும். அவ்வாறு இல்லையெனில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செல்லும் மாணவர்களைத் தயார் செய்யும் வெறும் பள்ளிகளாக மட்டுமே அது இருக்கும்.
சீத்தாராம் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த புத்திக் கூர்மைமிக்க மாணவர்கள் பலரும், தங்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொள்ள ஜே.என்.யுவில் தங்கி, தங்கள் ஆராய்ச்சியை முடித்தனர் என்பதுதான் ஜே.என்.யுவை மிகச் சிறந்ததொரு கல்வி நிறுவனமாக மாற்றுவதற்குப் பெரும் பங்களித்த ஒன்றாகும். சீத்தா தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடிக்கவில்லை என்பது உண்மைதான். எங்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்த துறையின் ஆசிரியர் குழுவிற்கும், அது துயரத்தை ஏற்படுத்தியது. உண்மையில், அவர் தன் ஆராய்ச்சியை கைவிட்டுவிட்டு, கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார்.
அவரது நட்புணர்வு, எவ்வித இறுமாப்பும் இல்லாத தன்மை, மென்மையான நடத்தை, அடக்கம், எளிமை ஆகிய அனைத்துமே நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனினும், இவை அனைத்திற்கும் மேலாக, வாழ்க்கையை போற்றிப் பாராட்டி வாழ்ந்ததுதான் அவரது தனித்துவமாக இருந்தது. மார்க்சிய தத்துவ அறிஞரான ஜார்ஜ் லூகாக்ஸ், கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், இரண்டு வகையான புரட்சியாளர்களை குறிப்பிட்டார். இதற்கான முதல் உதாரணமாக, அவர் யூஜின் லெவின் – ஐ குறிப்பிட்டார். 1918ஆம் ஆண்டில் அன்றைய ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பவேரியா பகுதியில் ம்யூனிச் நகரில் சோவியத் ஆட்சியை உருவாக்கிய தலைவர்; அந்த நடவடிக்கைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர் அவர். மிகவும் எளிமையான கம்யூனிஸ்ட் ஆகவும் அவர் இருந்தார். ஒருமுறை அவர் குறிப்பிடுகையில், ‘கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், விடுமுறையில் வந்துள்ள பிணங்கள்’ என்று கூறினார். அதாவது, வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், மற்றவர்களைப் போல வாழ்க்கை என்ற ஒன்று கம்யூனிஸ்டுகளுக்குக் கிடையாது என்பதை அவர் நம்பினார் என்றுதான் அதற்குப் பொருள்.
இதற்கு முற்றிலும் மாறாக, லூகாக்ஸ் மற்றொரு உதாரணத்தைக் குறிப்பிட்டார். அவர்தான் லெனின். நிச்சயமாக , யூஜின் லெவினுக்கு நேரெதிரான ஒருவராக, வாழ்வின் இன்பத்தில் நம்பிக்கை கொண்டவராக லெனின் இருந்தார். நிச்சயமாக, மற்றொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு கம்யூனிஸ்டிடம் பெரும்பாலும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பதற்கான பணமோ, வளங்களோ இருப்பதில்லை. இருந்தபோதிலும், இது ஒருவகையான பண்பாட்டுக் கூறு என்றே கூற வேண்டும். சீத்தாராம், முழுமையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும், மிகத் தெளிவான வகையிலும், புரட்சியாளர்கள் குறித்து லூகாக்ஸ் இரண்டாவதாகக் குறிப்பிட்ட பண்பாட்டுக் கூறினைக் கொண்டவராக இருந்தார்.
அவர் குறிப்பிட்டதொரு சமூகத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இந்தியா அணி போன்ற முயற்சிகளில் அவரது பங்களிப்பு பற்றி மேடையில் உள்ள பலரும் இங்கு குறிப்பிட்டனர். எனினும், இந்த முயற்சிகள் மீதான அவரது நிலைப்பாடும் கூட, நிகழ்காலத்தின் தனித்துவமான தன்மை பற்றிய, கோட்பாட்டு ரீதியான அவரது புரிதலின் அடிப்படையில் அமைந்ததே ஆகும். இந்தத் தனித்துவமான தன்மை குறித்து, நான் அவருடன் பலமுறை விவாதித்திருக்கிறேன். அவருடன் நான் விவாதித்தது இதுதான்: தொடக்கத்தில் எல்லாப் புரட்சியாளர்களுமே, எல்லா கம்யூனிஸ்டுகளுமே, அறிவார்ந்த ரீதியாக, அப்போது நிலவும் சமூகத்திற்கு வெளியேதான் இருந்தார்கள். இயற்கையாகவே, நீங்கள் இந்தச் சமூகத்தை மாற்ற விரும்புவதால், இந்தச் சமூகத்திற்கு வெளியே இருந்தபடி, இந்தச் சமூகத்திற்கு வெளியே உள்ள கருத்துக்களை அதன்மீது திணிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் முன்பிருந்த கம்யூனிஸ்டுகள், அதற்கான காரணங்கள் என்னவாக இருப்பினும், – வரலாற்று ரீதியான காரணங்களாகவும் கூட இருக்கலாம் – ஏறக்குறைய அன்றைய பொதுசமூகத்திற்கு வெளியேதான் வாழ்ந்தனர். அவர்கள் சமூகத்தில் நேரடியாகப் பங்குகொள்ளவில்லை. போல்ஷ்விக் புரட்சியைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பெரும்பாலான ரஷ்யப் புரட்சியாளர்கள் புரட்சியில் பங்கேற்க, நாட்டிற்கு வெளியேயிருந்து, மூடித்திரையிடப்பட்ட ரயிலில்தான் வர வேண்டியிருந்தது. சீனப்புரட்சியைப் பார்த்தோமெனில், உண்மையான புரட்சியாளர்கள் யேனானில்தான் இருந்தனர். உண்மையில் சொல்லப்போனால், ஒருவகையில் பெரும்பகுதி சீனாவிலிருந்து, அவர்கள் யேனானுக்கு இடம்பெயர்ந்தனர். கியூபப் புரட்சியைப் பாருங்கள். அதிலும் கூட புரட்சியாளர்கள் சியர்ரா மாஸ்த்ரா மலைகளில் இருந்துதான் செயல்பட்டார்கள்.
ஆகவே, தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள், அறிவார்ந்த வகையிலும், உடல்ரீதியாகவும், சமூகத்திற்கு வெளியேதான் இருந்தனர் என்பதுதான் இங்குள்ள விஷயம். ஆனால் நாம் இப்போது வேறு வகையான ஓர் உலகில் வாழ்கிறோம். இந்த உலகத்தில், கம்யூனிஸ்டுகள் அறிவார்ந்த வகையில் சமூகத்திற்கு வெளியே இருக்க வேண்டியுள்ளது; அதே நேரத்தில், உடல்ரீதியாக அவர்கள் சமூகத்திற்கு உள்ளேயும் இருக்க வேண்டியுள்ளது. இத்தகையதொரு தருணத்தில், அடிப்படை உத்திகள், நடைமுறைத் தந்திரங்கள், மற்றவர்களோடு ஊடாடும் வழிமுறைகள், பிற அரசியல் மற்றும் சமூக சக்திகளை கையாள்வதற்கான வழிகள் ஆகிய அனைத்துமே, மற்றவர்களிடமிருந்து அவசியமாகவே வேறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.
சீத்தாவின் சிந்தனையில் ஆக்கிரமித்திருந்த விஷயம் இதுதான். உடல்ரீதியாக சமூகத்திற்குள் இருக்கும் அதேநேரத்தில், தன் சிந்தனையை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது; இந்த சமூகத்தில், அறிவார்ந்த பார்வையை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது; அதை எப்படி இந்த சமூகத்திற்குள் விதைப்பது என்ற சிந்தனைதான் அவரை ஆக்கிரமித்திருந்தது. இதுதான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் போராடி வந்த ஒரு சவாலாகவும் இருந்தது. அந்த வகையில், உண்மையிலேயே அவர் ஒரு நவீன கம்யூனிஸ்ட். இத்தகைய ஒரு கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, அவரது இழப்பு நம் அனைவரையும் ஏழைகளாக ஆக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
